Wednesday, October 9, 2024
முகப்புவாழ்க்கைஅனுபவம்டேய், யாராவது பக்கத்துல உட்காருங்கடா!

டேய், யாராவது பக்கத்துல உட்காருங்கடா!

-

நகரப் பேருந்து நிலையம். டவுன் பஸ்ஸுக்காகக் காத்திருக்கும் வெகுநேரம் சோர்வளித்தது. சுற்றியுள்ள காட்சிகளில் கண்கள் நேரம் மறந்தன. சிவந்து உப்பிய பஜ்ஜியை தினத்தந்தி பேப்பரில் ஒரு அப்பு அப்பி பிழிந்து எடுத்தவர், ஏதோ மவுத் ஆர்கன் வாசிப்பது போல அதை விதவிதமாக வாயில் வைத்து ஊதி ஊதிக் கடித்துத் தீர்த்தார். தின்று முடித்தவுடன் அந்தப் பெரியவர் கை நிறைந்து காணப்பட்ட எண்ணைய்ப் பசையை முழங்காலுக்குக் கீழே முழுவதும் தடவிக் கொண்டார். ஆயில் மசாஜ் போல கால் விரல்களின் இடுக்கு வரை எண்ணெய்க் கைகளை தேய்த்தார்.

பக்கத்தில் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த எனது வியப்பைப் புரிந்து கொண்டவர் போல, ”தம்பி! என்ன பாக்குறீங்க, இந்த எண்ணைய இப்படி ஒரு தடவு தடவுனாத்தான் இந்த பஸ்ஸ்டாண்டு கொசுக் கடிக்கு நமக்கு பாதுகாப்பு! இந்த எண்ணெ வாசத்துக்கு கொசு நம்ம பக்கமே தல வெச்சுப் படுக்காது பாருங்க.. ஹி..ஹி..”  .

அவர் சிரிப்பும், அனுபவ அறிவும் எனக்குப் புதுமையாகப் பட்டது. இன்னொரு பக்கம் தட்டு முறுக்கை தஞ்சாவூர் கோபுரம் போல அடுக்கி வைத்திருந்த பெட்டிக் கடைக்காரரின் செய் நேர்த்தி என்னைப் பிரமிப்பில் ஆழ்த்தியது. தேவைக்கு வெளியூர் போய் வரும் ஒரு பெரிய கிராமத்துக் குடும்பம் சில்வர் வாளி, ஒயர் பேக்குகளை நடுவில் வைத்து சுற்றிலும் பாதுகாப்பு அரணாக அமர்ந்திருந்தார்கள்.

ஓரிரு குட்டிப்பையன்கள் அவர்களைச் சுற்றி வருவதும், திடீரென அவர்கள் கழுத்தைக் கட்டிக் கொண்டு சிரிப்பதுமாகப் பொழுதைக் கழித்தனர். பெண்டு பிள்ளைகளுக்குத் துணையாக நிற்கும் ஆண்களின் முகத்தில் பஸ் வந்தால் ஒரே ஓட்டமாக ஓடிப்போய் சீட்டப் பிடிக்கணும் என்ற முடிவு குறிப்பாகத் தெரிந்தது.

”நேரத்துக்குள்ள பஸ்ஸு வந்து தொலைச்சா இராச்சோற வீட்டுல போயி திங்கலாம்.” என்று அதிலொருவர் தனது பொருளாதார நிலைமைக்கேற்ப பேசிக் கொண்டிருந்தார். பிளாஸ்டிக் ஊதல் விற்கும் சிறுவன் வேண்டுமென்றே குழந்தைகளைப் பார்த்து ”பீப்பி..” என ஊத ”… டே போடா! நீ வேற புள்ளைங்கள கௌப்பி விட்றாத! ஆளுக்கு ஒண்ணு கேட்டுத் தொலைக்குங்க. போடா அந்தப் பக்கம்” என்று நகர்த்தி விட்டனர். பெரிய பொதிகள் முதுகுத் தண்டை வளைக்க, பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளும் திடீரென பேருந்து நிலையமெங்கும் செடி, கொடிகளாய் முளைத்தனர்.

”டே, ராசப்பா… டேய்..” வளைந்து குலுங்கிய டவுண் பஸ்ஸின் படியில் தொற்றிக் கொண்டு நுழைவாயிலிலேயே ஏறிக் கொண்டவன் செம்மண் புழுதியைக் கிழித்துக் கொண்டு கத்தினான். ”டேய் சீக்கிரம் வா.. சீட்டு போயிடும் ஆமா..” கத்திக் கொண்டே  படிக்கட்டிலிருந்து உள்ளே தலையைக் கொடுத்து முண்டினான். போக்கு காட்டி ஒரு வழியாக பஸ்ஸை நிறுத்திய டிரைவர் படிக்கட்டின் வழி இறங்க முடியாமல், டிரைவர் சீட்டின் வழியாகக் குதித்தார். ”இறங்க வுடுதுங்களா பாரு, சனியனுங்க.. பொம்பளய போட்டு இந்த இடி இடிக்கிறானுவ.. ” கண்ட கண்ட வார்த்தையில் திட்டியபடி பாட்டி ஒன்று கமறி உமிழ்ந்தபடியே இறங்கினார்.

”ஆசயப் பாரு, உன்ன இடிக்கதான் ஏர்றாங்களாக்கும், சீக்கிரம் எறங்கு.” ”எறங்குறண்டா மவனுங்களா..” என்று காலம் புரியாமல் கத்திக் கொண்டே போனார் பாட்டி. பிதுங்கி நுழைந்து சீட்டைப் பிடித்த வேகத்தில் சிலர் சட்டைப் பட்டன்கள் காணாமல் தேட ஆரம்பித்தனர். பள்ளிப் பிள்ளைகளின் நிலைமையோ பரிதாபமாக இருந்தது. அவர்கள் படிக்கட்டில் காலை வைத்தால் போதும். மூட்டையோடு அப்படியே அலாக்காக அவர்களைத் தூக்கி உள்ளே நுழைத்தது கூட்டம். சீட்டுப் பிடித்த பின்பும் சண்டை சச்சரவும், சத்தமும் நீடித்தது.

தாராளமாக நிற்கும் நிலையிலும் பேருந்தில் ஒரு இருக்கையில் மட்டும் ஒருவருக்குப் பக்கத்தில் யாரும் அமராமல் வந்த வேகத்தில் உட்கார்ந்திருப்பவரை நோட்டம் பார்த்தவாறு நகர்ந்து போயினர். தொலைவிலிருந்து அந்த ஆளைப் பார்த்தால் மிடுக்கான டீசர்ட், பேண்டுடன் தடித்த உருவமாய்த் தெரிந்தார். தோரணையைப் பார்த்தால் குடிகாரனாகவோ, அருவருப்பூட்டும் தோல் வியாதிக்காரராகவோ தெரியவில்லை. சற்று நெருங்க அவர் போட்டிருந்த செண்ட் வாசனை கமகமத்தது. இருப்பினும் வேகமாக சீட் இருப்பதாய் நினைத்து வரும் யாரும் அவர் பக்கத்தில்  அமராமல் இடம் பெயர்ந்தனர்.

பிச்சைக்காரர் போல தோரணை உள்ள ஒருவர் வேகமாக வந்து இருக்கையைப் பார்க்க ”உட்காருய்யா, யாருமில்ல” என்று வாட்டசாட்டம் சொல்லிப் பார்க்க… ”தோ முன்னாடி” என்று நழுவிச் சென்றார். நின்று கொண்டிருந்த பலரும் காலியான இருக்கையில் தன் பக்கத்தில் உட்காராத நிலைமை வாட்டசாட்டமானவரை தனிமைப்படுத்தியதுடன், ஒரு கேவலத்தையும் ஏற்படுத்தியது. சுற்றும் முற்றும் அவசரமாக நோட்டமிட்டவர் சாதாரணமாக அழைத்தாலும் யாரும் வராத  சூழ்நிலையில் ஒரு பள்ளிச் சிறுவனை வெடுக்கென பிடித்து இழுத்து, ”டேய், இங்க உட்கார்றா..”  என்று அதட்டல் குரலில் அமர வைத்தார்.

அவனோ இருப்புக் கொள்ளாதவன் போல இடப்பக்கமாக நெளித்து உட்கார்ந்து கொண்டு, தன்னை பார்க்காத நேரம் அந்த ஆசாமியை முழுவதும் உற்றுப் பார்த்து விட்டு வெடுக்கெனத் திரும்பிக் கொண்டான். திடுமென எழுந்தவனைத் திரும்பவும் அந்த ஆள்.. ”உட்கார்றா..” என்று விரட்ட… ”ஏங்க! எறங்கனுங்க!” என்று ஓடினான்.

ஒட்டுமொத்தமாக யாருக்கும் பிடிக்காமல் போன அந்த ஆள் யார்தான்  என்று அவரது முகத்தை உற்றுப் பார்த்தேன். மப்டி போலீஸ் என்பது தெளிவாகப் பட்டது.

_____________________________________________

புதிய கலாச்சாரம், மார்ச் – 2012

___________________________________________________

வினவுடன் இணையுங்கள்

  1. திண்டுக்கல்லில் போலீஸாருக்கும் – ரௌடிகளுக்கும் மோதல். ரௌடியை சுட்டுக்கொன்றதாக இன்றைய தினமணி செய்தியில் வந்துள்ளது. நடந்த மோதலில் தோள்பட்டைக்கு கீழே போலீஸார் சுட்டனர் என்று. நெஞ்சில் சுட்டணர் என்று எழுதவில்லை இப்படி ஆதரவாக எழுதினால் மக்கள் பயப்படமல் என்ன செய்ய முடியும்.

  2. மப்டி போலீஸ் பக்கத்தில் உடகாரவே புடிக்கலையே! இது எப்படி? மக்களின் நண்பனாக இருக்கமுடியும்.

    __________________________________

  3. பாஸ்.. இதை ஒரு கதை என்ற ரீதியில் படித்து சிரிக்கலாம். ஆனால் உண்மையில் போலீசைப் பார்த்து இப்போது ஒருவரும் பயப்படுவதில்லை. போலீசாரும் கண்காணிப்பு பணியிலோ, தேடுதல் வேட்டையிலோ ஈடுபடாத போது பொதுமக்களுடன் சகஜமாகவே பழகுகின்றனர்.

    உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து கருத்து தெரிவிக்கலாம். கதைகளை அடிப்படையாகக் கொண்டு எப்படி விவாதிப்பது.

  4. போலீசைப் புறக்கணிக்கும் அளவுக்கு மக்களுக்கு விழிப்புண்ர்வோ சொரணையோ இருப்பதாகத் தெரியவில்லை. கட்டுரை பயனற்றது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க