privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபுதிய ஜனநாயகம்கம்யூனிசக் கல்விஇளமையின் கீதம் - சீனத் திரைப்படம், வீடியோ!

இளமையின் கீதம் – சீனத் திரைப்படம், வீடியோ!

-

இளமையின்-கீதம்

யாங் மோ
யாங் மோ

சீனப் புரட்சியின் பின்னணியில் ஒரு பிற்போக்கான குடும்பத்தை சேர்ந்த டாவொசிங் எனும் பெண் புரட்சியில் பங்கெடுக்கும் உணர்வுப்பூர்வமான புதினத்தை ‘இளமையின் கீதம்’ என்ற பெயரில் யாங் மோ எழுதினார். இப்புதினத்தைப் பற்றி ஏற்கெனவே புதிய கலச்சாரத்தில் ஒரு அறிமுகக் கட்டுரை வந்திருக்கிறது. இப்புதினம் சீனாவில் திரைப்படமாக எடுக்கபட்டிருக்கிறது. அந்தத் திரைப்படத்தின் பகிர்வே இப்பதிவு. இந்தப் படத்திற்கு யாங்மோ கச்சிதமான திரைக்கதையையும் எழுதியிருக்கிறார். புதினத்தின் மையக்கருத்தை சிதைக்காமல் டாவொசிங்கின் பாத்திரத்தை திரையில் உயிருடன் உலவ விட்டிருக்கிறார்கள். வடிவம் உள்ளடக்கம் என அனைத்திலும் சிறப்பானதொரு திரைப்படம்.

கதை:

மிகப் பிற்போக்கான சீனக் குடும்பத்தை சேர்ந்தவர் டாவொசிங் எனும் பெண். அவள் அம்மா சீன கோமிங்டாங் கட்சியில் போலிசாக பணிபுரியும் ஒருவருக்கு அவளை மணமுடிக்க முயற்சி செய்கிறார். அந்தத் திருமணத்தில் இருந்து தப்பிக்கும் டாவோசிங் தன் உறவினரைத் தேடி வேறு ஊருக்கு வருகிறாள். உறவினர் அந்த ஊரை விட்டே சென்று விட்ட நேரத்தில் கடலில் விழுந்து தற்கொலை செய்துகொள்ள முயற்சிக்கிறாள். அவளை அந்த ஊரைச் சேர்ந்த யுயுவாங் காப்பாற்றுகிறான். அவன் ஒரு பல்கலைக்கழக மாணவன்.

யுயுவாங்கிற்கும், டாவொசிங்கிற்கும் காதல் மலர்கிறது. யுவாங் படிப்பதற்கு நகரம் செல்ல டாவொசிங் அந்த ஊரிலேயே ஆசிரியராகப் பணிபுரிகிறாள்.

அந்த காலகட்டத்தில் ஜப்பான் சீனா மீது ஆக்கிரமிப்புப் போர் தொடுக்கிறது. அடிமையாக வாழ விருப்பமில்லாத டாவோ ‘சீனா எதிர்த்துப் போரிட வேண்டும், ஜப்பானை வீழ்த்த வேண்டும்’ என்று நினைக்கிறாள். அதைத் தன் மாணவர்களுக்கு பாடமாகவும் நடத்துகிறாள். ஆனால் ‘அரசியலை எல்லாம் மாணவர்களுக்கும் சொல்லிக் கொடுக்கக் கூடாது’ என்று தலைமையாசிரியரிடமிருந்து கணடனம் வர கோபமாக வேலையை விட்டு விட்டு, நகரத்தை நோக்கி செல்கிறாள். வழியில் சீன கம்யூனிஸ்ட் தோழர்கள் ‘ஜப்பானை எதிர்த்துப் போரிட வேண்டும். நாட்டிற்கு புரட்சி வேண்டும்’ என்று முழக்கமிடுவதைக் கண்டு மகிழ்கிறாள். நகரத்திற்கு செல்லும் டாவோ யுயுவாங்கைச் சந்தித்து அவனுடன் ஒன்றாக வாழ்கிறாள்.

ஒரு நாள் இரவு புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது நண்பர்கள் மத்தியில் சீன நாட்டின் அடிமைத்தனத்தைப் பற்றி கொந்தளிப்பான பேச்சு வருகின்றது. அந்த நேரத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவரான தோழர் லுஷூவை டாவொசிங் சந்திக்கிறாள். லுஷூ மாவோ, சூடே தலைமையிலான சிவப்பு ராணுவம் வீரத்துடன் சண்டையிட்டு ஜப்பானை வீழ்த்தி வருவதாகவும், விரைவில் அமெரிக்க அடிவருடி சாங்கேஷேக்கை விரட்டிவிட்டு சீனா ஒரு புரட்சிகரப் பாதையில் நடைபோடும் என்றும் கூறுகிறார். இதைக் கேட்டு டாவொசிங் மகிழ்ச்சி கொள்கிறாள். தானும் சீன கம்யூனிஸ்ட் கட்சியில் சேர வேண்டும் என விருப்பம் தெரிவிக்கிறாள். லுஷூ அவளை மார்க்ஸியம் பயிலச் சொல்கிறார்.

மார்க்ஸியத்தை படிக்க ஆரம்பிக்கிறாள் டாவோ. மார்ச் எட்டாம் தேதி நடக்கும் மகளிர் தினக்  கூட்டத்தின் போது போலிசு கலகம் விளைவித்து கம்யூனிஸ்டுகளைக் கைது செய்ய முயல்கிறது. கைதிலிருந்து முக்கிய கம்யூனிஸ்டுகள் தப்பித்தாலும். டயூ மாட்டிக் கொள்கிறான். மாட்டியவன் போலிசின் ஆட்காட்டியாகி விடுகிறான்.

லுஷு தலைமறைவாக இருக்கும் போது டாவொவை சந்தித்து ஒரு பொட்டலத்தைக் கொடுக்கிறார். அதை மறைத்து வைக்குமாறும், ஒரு வேளை மூன்று வாரங்களில் தான் வரவில்லை என்றாள் அதை எரித்து விடுமாறும் சொல்லுகிறார்.

டாவொசிங்கின் இந்த கம்யூனிச நட்பு யுயுவாங்கிற்கு பிடிக்கவில்லை. ஆனால் டாவொசிங் ‘வீட்டில் சுயநலமாய் வாழ்வதை விட நாட்டிற்காகப் போராட வேண்டும்’ என்கிறாள். கருத்து வேறுபாடு முற்றி இருவரும் பிரிகிறார்கள். மறுபுறம் லூஷு கைது செய்யப்படுகிறார்.

சிறையில் லுஷு சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்படுகிறார். மறுபுறம் அனைத்து தோழர்களும் தலைமறைவாகி விட, என்ன செய்வதென்று தெரியாத அவள் தோழர் லுஷூ கொடுத்த பொட்டலத்தைப் பிரிக்கிறாள். அதில் சிவப்பு வண்ணத்தில் எழுதிய முழக்கங்கள் இருக்கின்றன. இரவோடு இரவாக வீதி வீதியாகப் போய் அதை ஒட்டிவிட்டு வருகிறாள். அந்த நகரம் முழுவதும் பரபரப்படைகிறது. போலிசார் உஷார்ப்படுத்தப் படுகிறார்கள். விளைவு டாவோ போலிசு கண்காணிப்பில் வருகிறாள். அவள் யாரைத் திருமணம் செய்துகொள்ளக் கூடாது என்று முதலில் வீட்டைவிட்டு வந்தாளோ அவரே அவளைக் கண்காணிக்கும் போலிசு படையின் தலைவர்.

அங்கிருந்து தந்திரமாகத் தப்பி வேறு ஒரு கிராமத்திற்கு போய் அங்கே ஆசிரியராக அமர்கிறாள். அங்கு பழைய தோழர்களைச் சந்திக்கிறாள். அந்த கிராமத்தில் நடக்கும் கூலி விவசாயிகளின் போராட்டத்தில் பங்கெடுத்து அதனை வெற்றிகரமாக முன்னெடுத்து நடத்துகிறார்கள்.

அங்கிருந்து பெய்ஜிங் போகிறாள். ஆனால் பெய்ஜிங்கில் போலிசாரால் கைது செய்யப்படுகிறாள். சிறையில் முன்னர் சந்தித்த தோழர் சிங் எனும் பெண்மணியை மீண்டும் சந்திக்கிறாள். இருவரும் ஒரே சிறையில் அவதிப்படுகிறார்கள். கொடுமைகள், சித்திரவதைகள் எதற்கும் சிங் அஞ்சாததைக் கண்டு ஆச்சரியமடைகிறாள். அப்பொழுது சிங் ஒரு கம்யூனிஸ்ட் தோழரின் கதையைச் சொல்கிறாள். அந்தத் தோழர் கைது செய்யப்பட்டு சிறைக்கு வருகிறார். ஆனால் சிறையில் வழக்கம் போல் காலை எழுந்து உடற்பயிற்சி செய்கிறார்; மற்றவர்களுக்கு கம்யூனிசம் கற்றுக் கொடுக்கிறார்; காவலர்களுடன் நட்பாகப் பழகுகிறார்; மகிழ்ச்சியாக சிறை வேலைகளைச் செய்கிறார்.

அவருக்குத் தூக்குத்தண்டனை உறுதியாகிறது; ஆனால் அவர் வாழ்க்கையில் ஒரு சிறு மாற்றமுமில்லை. அதே உற்சாகத்துடன் தினமும் சிறையில் கழிக்கிறார். தண்டனை நாள் அன்று அனைவருக்கும் கைகுலுக்கி விடைபெற்று மைதானத்திற்குள் நுழையும் விளையாட்டு வீரனைப் போல மகிழ்ச்சியாகச் செல்கிறார்.

அவர் தோழர் சிங்கின் கணவர். அவரைப் பார்த்து வியப்படைந்த அனைத்துத் தோழர்களுக்கு சொல்லுவது ஒன்றேதான், ‘நான் மற்றவர்கள் மாதிரி வாழ்க்கையை வெட்டியாக வாழவில்லை, ஒரு கம்யூனிஸ்டாக அனைவருக்கும் பயனுள்ள வாழ்க்கையை நான் வாழ்கிறேன். சிறை, சமவெளி எங்கும் கம்யூனிஸ்டின் வாழ்க்கை மக்களுடன் உறவாடுவது தான்; அதை நான் செய்கிறேன், எனக்கு மரணத்தைப் பற்றி பயமில்லை’ என்கிறார். அந்தத் தோழரின் கதையை கேட்டு டாவோ உற்சாகம் அடைகிறாள். தன் சிறைப் பொழுதுகளையும் உபயோகமாகக் கழிக்கிறாள்.

மீண்டும்  பீஜிங் வருகிறாள். அங்கு சிவப்பு ராணுவமும், சீன கொமிண்டாங் அரசும் ஒருங்கிணைந்து முன்னனி ராணுவப்படையை ஜப்பானுக்கு எதிராக கட்டுகிறது. இறுதியில் இவ்வளவு போராட்டங்களுக்கு பின், சீன கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினராகிறாள். வாழ்வின் மிகவும் மகிழ்ச்சியான நாள் அதுதான் என்பதைப் புரிந்து கொள்கிறாள் டவோசிங்.

டாவொசிங் கட்சி உறுப்பினர் உறுதிமொழியேற்க, சர்வதேசிய கீதம் முழங்குகிறது. டாவோசிங் போராட்டங்களில் பங்கெடுக்கும் காட்சியுடன் படம் முடிவடைகிறது.

______________________________________________________

– ஆதவன்

________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: