பணி நிரந்தரம், சம வேலைக்குச் சம ஊதியம் உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்துத் தொடங்கிய நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன (என்.எல்.சி.) ஒப்பந்தத் தொழிலாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது. ஏ.ஐ.டி.யு.சி.யின் ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்கம் ஒருங்கிணைத்து நடத்தும் இவ்வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு, தொ.மு.ச., சி.ஐ.டி.யு., பா.ம.க., யு.டி.யு.சி., எல்.எல்.எஃப்., ஐ.என்.டி.யு.சி உள்ளிட்ட பிற தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.
விரிவாக்கப்பட்ட சுரங்கம் மற்றும் மின்உற்பத்தித் தேவைகளுக்கேற்ப, கடந்த 20 ஆண்டுகளில் படிப்படியாக 14,000 ஒப்பந்தத்தொழிலாளர்களைப் பணியமர்த்தியிருக்கிறது, என்.எல்.சி. நிறுவனம். இங்கு பணியாற்றும் 19,000 நிரந்தரத் தொழிலாளர்களுடன் சேர்த்து ஒப்பிட்டால், மொத்த தொழிலாளர்களுள் 40%க்கும் அதிகமான தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாகப் பணியாற்றுகின்றனர். ஆண்டொன்றுக்கு ஆயிரத்து ஐநூறு கோடி ரூபாய்க்கு மேல் இலாபத்தை ஈட்டக்கூடிய நிறுவனமாக, நவரத்னா தகுதியைப் பெற்றுள்ள நிறுவனமாக என்.எல்.சி. உயர்ந்திருக்கிறதென்றால், அதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு இவ்வொப்பந்தத் தொழிலாளர்களுடையது. ஆனால், இத்தொழிலாளர்களின் வாழ்க்கையோ இருள் கவ்வியதாகயிருக்கிறது.
குறைந்த கூலியில் தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டும் நோக்கத்திற்காகவே, சொசைட்டி தொழிலாளி, ஒப்பந்த தொழிலாளி, பி ஷெட்யூல், ஏ ஷெட்யூல், ஏ.எம்.சி. தொழிலாளி, “நான்ஏ.எம்.சி.” (Non-A.M.C.) தொழிலாளி என்று பல பிரிவுகளாக ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பிரித்துவைத்துள்ளது, என்.எல்.சி. நிர்வாகம். இதில் “நான்ஏம்.எம்.சி.” தொழிலாளியின் ஒரு ஷிப்டு சம்பளம் ரூ.180/ தான் என்பதிலிருந்தே, இந்தச் சுரண்டலின் கொடூரத்தைப் புரிந்து கொள்ளலாம்.
‘‘ஒரு தொழிற்சாலையின் மையமான மற்றும் தொடர்ச்சியாக நடக்கக்கூடிய உற்பத்திப் பணிகளில் ஒப்பந்தத் தொழிலாளர்களை ஈடுபடுத்தக் கூடாது” என்று கூறுகிறது, ஒப்பந்தத் தொழிலாளர்களை முறைப்படுத்துதல் மற்றும் ஒப்பந்தமுறை ஒழிப்புச் சட்டம் (1970). ஆனால், என்.எல்.சி.யின் மையமான பணியும் தொடர்ச்சியாக நடக்கக்கூடிய உற்பத்திப் பணியுமாகிய நிலக்கரி வெட்டுதல், கண்வேயர் பெல்ட் மூலம் நிலக்கரியை மின் உற்பத்தி நிலையம் கொண்டு செல்லுதல் மற்றும் கனரக இயந்திரங்களை இயக்குவது உள்ளிட்ட பணிகளைச் சட்டவிரோதமாக ஒப்பந்தத் தொழிலாளிகளைக் கொண்டே நிறைவேற்றி வருகிறது, என்.எல்.சி. நிர்வாகம்.
என்.எல்.சி. நிறுவனம், தனது மையமான பணிகளில் பெரும்பாலானவற்றை, ஒப்பந்ததாரர்களின் மூலமாகத்தான் மேற்கொண்டு வருகிறது. தலையில் தினத்தந்தி பேப்பரை கவிழ்த்துக்கொண்டு வெட்டவெளியில் நின்று கொண்டு பணிகளை மேற்பார்வையிடும் பொதுப்பணித்துறையின் ஒப்பந்ததாரர் போன்றவர்களல்ல இவர்கள். இவர்களுக்கு நிலக்கரிச் சுரங்கமும் தெரியாது, மின் உற்பத்தி நிலையமும் தெரியாது. மாத இறுதியில், இவ்வொப்பந்தத் தொழிலாளர்கள் நிறைவேற்றிய மொத்த வேலைக்குரிய தொகையை நிர்வாகத்திடமிருந்து காசோலையாகப் பெற்று அதன் பெரும்பகுதியைச் சுருட்டிக்கொண்டு, எஞ்சியதை ‘தலை’க் கணக்கில் தொழிலாளிக்கு ரொக்கமாகப் பிரித்துக் கொடுப்பதொன்றுதான் இந்த ஒப்பந்த தாரர்கள் மேற்கொள்ளும் ஒரே பணி. இத்தகைய, மாஃபியா கூட்டத்தின் எடுபிடியாகவே செயல்படுகிறது என்.எல்.சி. நிர்வாகம்.
‘‘சட்டப்படி ஒப்பந்தத் தொழிலாளிக்கு வழங்க வேண்டிய குறைந்தபட்ச கூலியைக் கொடு! பணிப்பாதுகாப்பு, பணி நிரந்தரம் உள்ளிட்ட சட்டப்படியான உரிமைகளை வழங்கு!” என்ற கோரிக்கையை முன்வைத்துத் தொழிலாளர்கள் ஆண்டுதோறும் போராட்டங்களை முன்னெடுப்பதும், இப்போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக நயவஞ்சகமான முறையில், சமரச ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வதாய் கையெழுத்திடும் என்.எல்.சி.நிர்வாகம், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சியை எள் முனையளவும் மேற்கொள்ளாமல், போராடிய தொழிலாளர்களைப் பழிவாங்கும் விதமாகவே இதுவரை செயல்பட்டு வந்திருக்கிறது. ஏ.ஐ.டி.யு.சி. சங்கத்தின் பொதுச்செயலாளரையும், பொருளாளரையும் வேலைநீக்கம் செய்தது; சங்க அலுவலகத்திற்கு மின் இணைப்பு, குடிநீர் குழாய் இணைப்பைத் துண்டித்து, அலுவலகத்தைப் பூட்டி சீல் வைத்தது எனச் சல்லித்தனமாகவும் நடந்து கொண்டுள்ளது, நிர்வாகம்.
2008ஆம் ஆண்டில் 16 நாட்கள் நடைபெற்ற தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தையடுத்து, என்.எல்.சி. நிர்வாகத்திற்கும் ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்திற்குமிடையே ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது. பணிமூப்பை அடிப்படையாகக் கொண்டு 5000 ஒப்பந்தத் தொழிலாளர்களை முதல்படியாக “இன்ட் கோ சர்வ்” பட்டியல் தொழிலாளர்களாக ஏற்றுக்கொண்டு, பின்னர் என்.எல்.சி. நிறுவன ஊழியராக முறைப்படுத்திக்கொள்ள வேண்டுமென்பது, அவ்வொப்பந்தத்தின் மையமான அம்சம்.
இவ்வொப்பந்தத்தை நடைமுறைப்படுத்த மறுத்தது என்.எல்.சி. நிர்வாகம். நிர்வாகத்திற்கெதிராகத் தொழிற்சங்கங்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன. 2008 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை என்.எல்.சி. நிர்வாகம் அமல்படுத்த வேண்டுமென உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது, நிர்வாகம். மேலும், “இன்ட் கோ சர்வ்” பிரிவின் கீழ் தொழிலாளர்களை நியமிப்பது தொடர்பாகத் தனது கைக்கூலி சங்கத்தைத் தூண்டிவிட்டு உச்ச நீதிமன்றத்தில் மற்றொரு வழக்கையும் போட வைத்தது.
2008ஆம் ஆண்டு போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தை நிறைவேற்றக் கோரி, 2010ஆம் ஆண்டில் 39 நாள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஒப்பந்தத் தொழிலாளர்கள் நடத்தினர். இதனைத் தொடர்ந்து அக்30, 2010 அன்று டெல்லியில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையின் முடிவில், “2 வருடத்தில், 480 நாட்கள் பணிமுடித்த அனைத்துத் தொழிலாளர்களையும் நிரந்தரப்படுத்த வேண்டும்; சம வேலைக்குச் சம ஊதியம்; ஒய்வு பெறும் வயதை 60ஆக உயர்த்துவது” உள்ளிட்ட கோரிக்கைகளை நடைமுறைப்படுத்துவதாக உறுதியளித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது, என்.எல்.சி. நிர்வாகம்.
இவ்வளவுக்குப் பிறகும், 2008 மற்றும் 2010இல் போட்டுக்கொண்ட ஒப்பந்தங்களின்படி பணிமூப்பு அடிப்படையிலான தொழிலாளர்களின் பெயர்ப்பட்டியலைக்கூட வெளியிடாமல் இழுத்தடித்தது நிர்வாகம். ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொண்டதை வழக்காக்கிவிட்டு, நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையிலிருப்பதால் ஒப்பந்த சரத்தை அமல்படுத்த முடியாது எனத் தெனாவெட்டாக அறிவிக்கவும் செய்தது. இந்நிலையில், 2011இல் உச்ச நீதிமன்றமும், பணி நிரந்தரம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பை அமல்படுத்த வேண்டுமென்று இரண்டு இடைக்காலத் தீர்ப்புகளை வழங்கியது. எத்தனை தீர்ப்புகள் வந்தபோதும், அவற்றை அமல்படுத்த தயாரில்லை எனத் திமிராகச் செயல்பட்டது, நிர்வாகம்.
2008 மற்றும் 2010ஆம் ஆண்டுகளில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் மற்றும் அவற்றையொட்டி வழங்கப்பட்டுள்ள தீர்ப்புகளின்படி என்.எல்.சி. நிர்வாகம் ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்யும் நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும் எனக் கோரித்தான் தற்பொழுது ஒப்பந்தத் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இக்கோரிக்கையினை ஏற்க மறுத்து வரும் நிர்வாகம், பழைய ஒப்பந்தங்களையொட்டித் தனது கைக்கூலி சங்கம் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கை காட்டி, இவ்வேலைநிறுத்தப் போராட்டத்தைச் சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
இப்பிரச்சினை தொடர்பாகத் தாமும் உச்ச நீதிமன்றமும் ஏற்கெனவே அளித்த தீர்ப்புகளை நடைமுறைப்படுத்த மறுத்துவரும் நிர்வாகத்தைக் கண்டித்துத்தான் சென்னை உயர் நீதிமன்றம் என்.எல்.சி. யின் வழக்கில் தீர்ப்பளித்திருக்க வேண்டும். இந்த நியாயத்திற்கு மாறாக, உச்ச நீதிமன்றத்தில் நிர்வாகம் வேண்டுமென்றே போட்டுவைத்துள்ள வழக்குகளைக் காட்டி, தற்பொழுது நடைபெற்று வரும் போராட்டத்தைச் சட்டவிரோதமானது என அறிவித்து, ஒரு அநீதியான தீர்ப்பை அளித்திருக்கிறது, சென்னை உயர் நீதிமன்றம்.
கடந்த 20 ஆண்டுகளாகவே நீருபூத்த நெருப்பாய் எந்நேரமும் கனன்று கொண்டேயிருக்கும் இத்தொழிலாளர்களின் போராட்டம் தீர்க்கமான எந்தவொரு முடிவையும் எட்ட முடியாமல், ஒப்பந்தம்நீதிமன்றம்சட்ட வரம்பிற்குட்பட்ட போராட்டம் எனத் திரும்பத் திரும்பச் செக்குமாட்டுச் சுழலில் சிக்கித் தவிக்கிறது.
தான் வகுத்துக்கொண்ட சட்டத்தை தானே மதிக்காமல் செயல்படக்கூடிய அரசுத்துறை நிறுவனத்தை எதிர்த்து, அரைநிர்வாணப் போராட்டம், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் என சட்டவரம்புகளுக்குட்பட்ட போராட்டங்களின் மூலமே இப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவந்து விடலாம் என தொழிற்சங்கங்கள் நம்புவதும், அவ்வாறே தொழிலாளர்களையும் நம்பிக்கை கொள்ள வைத்திருப்பதும், இப்போராட்டத்தின் மிகப்பெரும் பலவீனமாகும்.
என்.எல்.சி. யின் உற்பத்தியினை முடக்கச் செய்யுமளவிற்குப் போர்க்குணம் கொண்ட, சட்டவரம்புகளையும் மீறிய போராட்டங்களைக் கட்டியமைக்காமல், தொழிலாளி வர்க்க விரோத என்.எல்.சி. நிர்வாகத்தை அடிபணியச் செய்ய முடியாது என்பதைப் போராடும் தொழிலாளர்கள் உணர வேண்டிய தருணமிது. போராட்ட முறைகளையும், உத்திகளையும் மாற்றுவோம்! அடிப்படை உரிமைகளை வென்றெடுப்போம்!!
_______________________________________________
________________________________________________
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- கூகிள் +’ஸில் வினவை தொடர
- உங்கள் கேள்விகள் இங்கே…
தொடர்புடைய பதிவுகள்:
எல்லாத்தையுமே அரசு மயமாக்கிட்டாலும் தொழிலாளர் பிரச்சன தீராது போலருக்கு. என்னதான் செய்யறது!!!!!
இப்போது இருக்கின்ற அரசு எனப்படுவது தொழிலாளர்களின் பிரச்சனையை தீர்க்க முயலாத, அவர்களது உரிமைகளை அங்கீகரிக்க மறுக்கின்ற, அவர்களது நலனை ஒழித்துக்கட்டுகின்ற ஒரு போலிஜனநாயக அரசு ஆகும். இதனை அப்படியே வைத்துக்கொண்டே நீங்கள் கூறுகின்றதைபோல எல்லாத்தையும் அரசுமயமாக்கிவிட்டாலும் பிரச்சனை தீராது. இதற்கு மாறாக, தொழிலாளர்களின் பிரச்சனைகள் முற்றிலுமாக தீரவேண்டுமென்றால் தொழிலாளர்களது பிரச்சனையை தீர்க்க முயலுகின்ற, அவர்களது உரிமைகளை அங்கீகரிக்கின்ற, அவர்களது நலனை பேணுகின்ற ஒரு பதிய ஜனநாயக அரசு அமையவேண்டும். அவ்வாறான ஒரு அரசு நமது நாட்டில் இன்று இல்லை (நேற்றும் இருந்ததில்லை). இனி அப்படிப்பட்ட அரசு அமைய நாம் இன்று கரம் கோர்த்துப்போராடவேண்டும் . இதனைத் தவிர வேறு குறுக்கு வழியுமில்லை என்பதே நிதர்சன உண்மை.
எப்பொழுதுமே நக்சல்பாரி புரட்சி, கிளர்ச்சி, வெடிப்பு என பேசி கூடங்குளம் போராட்டத்தையும், என் எல்சி போன்ற போராட்டத்தையும் இன்னும் என்ன போராட்டங்கள் நடந்தாலும் அதற்கெல்லாம் வற்றாமல் கட்டளையிடும் ஆர்டர் போடும் (தூய்மையாய் விளங்கும்) வினவே ஏன் தாங்கள் மட்டும் எல்லை மீறாமல் மிகவும் பததிரமாக பாதுகாப்பாக இருந்துகொள்ளும் போராட்ட வடிவங்களையே கையிலெடுத்து தான் தான் நக்சல்பாரி வாரிசுகள் என தாங்களே மகுடம் சூட்டிக்கொள்ளும் ம.க.இ.க வே வெகுஜன மக்களின் போராட்டங்களை விமர்சிக்கும் முன் தங்களின் போராட்ட வழிமுறைகளை எத்தகையதாய் இருக்கிறது என்பதை மறுபரிசீலனை செய்ய தயாரா? அதனை அறிக்கையாக இந்த வினவில் அச்சிட தயாரா?
சும்மா வந்துடறது தனக்கு மட்டுமே உதித்துள்ள கருத்துபோல
What is revolution?
Who can bring revolution?
How to stop Re Tapism in Govt. departments.?
How to resolve the differences between Haves and Havenots?
What Vinavu has to say?
ஒப்பந்தத் தொழிலாளர்கள், சொசைட்டித் தொழிலாளர்கள், அப்ரண்டிஸ்கள் என பல்வேறு வழிகளில் தொழிலாளர்களைச் சுரண்டிக் கொள்ளை இலாபமடிப்பதில் தனியார் துறைகளுக்கு தாங்கள் சற்றும் சலைத்தவர்கள் அல்ல என்பதை அரசுத் துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் நிரூபித்து வருகின்றன. அதற்கு ஒரு எடுப்பான உதாரணம்தான் என்.எல்.சி நிறுவனம். முன்பு சேவைக்காக தொடங்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் இன்று இலாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படத் தொடங்கிவிட்டன. மேற்கண்ட தொழிலாளர்களை ஒட்டச் சுரண்டுவதால்தான் இத்தகைய நிறுவனங்கள் இலாபம் ஈட்ட முடிகிறது.
ஒருவன் அற்பக் கூலிக்கு உழைக்க அவனது உழைப்பைச் சுரண்டி மற்றொருவன் ஆயிரக்கணக்கில் ஊதியம் பெறுவது எந்த விதத்தில் நியாயம்? ஒரு ஆலை வளாக எல்லைக்குள் வேலை செய்யும் அனைவருமே நிரந்தரத் தொழிலாளியாகத்தான் இருக்க வேண்டும். அதற்கான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். நிரந்தரத் தொழிலாளர்களுக்காக சங்கம் கட்டியுள்ள தொழிற்சங்கங்களே அதற்கான முன்முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.
அவ்வாறு செய்யாதவர்களை சுரண்டல்காரர்கள் வரிசையில்தான் சேர்க்க வேண்டும்.