Wednesday, July 24, 2024
முகப்புவாழ்க்கைஅனுபவம்பேருந்தில் ஒரு மிருகம்! வேடிக்கைப் பார்த்த மௌனம்!!

பேருந்தில் ஒரு மிருகம்! வேடிக்கைப் பார்த்த மௌனம்!!

-

ஈவ்-டீசிங்

சென்னையிலதான் வாழணும்னு ஆனதக்கு பிறகு நிறையவே என்ன மாத்திக்கிட்டேன். ஆரம்பத்துல எங்க பாத்தாலும் அலமோதுர கூட்டத்தப் பாத்து கொஞ்சம் பயமா இருக்கும். ஷேர் ஆட்டோவுல, பஸ்ஸூல, கடையிலன்னு கூட்டம் இல்லாத இடமே இல்ல. ரோட்டுல ஓய்வில்லாம ஓடும் வண்டிங்கள பாத்தும் நிறைய பயந்திருக்கிறேன்.

என்னோட கிராமத்துல நூறடி நடத்தாக் கூட பத்துப்பதினைஞ்சு பேர் விசாரிப்பாங்க, தனியா இருக்கோம்கிற உணர்வே அங்க இல்லை. ஆனா இவ்வளவு கூட்டத்தோட இருந்தும் அது என்னமோ எப்பவும் தனியாக இருக்கிற மாதிரியே தோணுது. ஒரு பெண்ணா இருக்கிறதால இந்த பயம், அதுவே சென்னைங்கிறதுனாலே இன்னும் அதிகமா இருக்கு.

அன்னைக்கு பாத்து கொஞ்சம் உடம்பு சரியில்லாம இருந்துச்சு. அதுல மறைக்கிறதுக்கு என்ன இருக்கு. அந்த சரியில்லாமங்கிறதை பீரியட்ஸ்ன்னு வெளிப்படையா சொல்லுறேன். ஊருல இருக்கும்போது இந்த நாட்கள்ள எங்கேயும் வெளியே போகமாட்டோம். சென்னைக்கு வந்ததும் அதெல்லாம் மாறிப்போச்சு. அவசரமா ஒரு உறவினர் வீட்டுக்குப் போக வேண்டியிருந்துச்சு. சரின்னு கிளம்பினேன்.

கூட்டம் இருக்காதுன்னு நினைச்சு நடுப்பகல்ல பேருந்து ஏறுனேன். ஆனாலும் இப்பல்லாம் சென்னையில்ல கூட்டம் இல்லாத நேரம், இடம்ணு எதுவுமில்ல. பஸ்ஸூல பெண்கள் சைடுல உட்கார இடம் கிடைக்கல. வயிறு வேற வலிச்சிது. அப்ப ஆண்கள் பக்கம் ஒரு சீட்டு காலியாச்சு. என்னோட நிலையை புரிஞ்ச மாதிரி ஒரு தங்கச்சி “வாங்கக்கா அங்க உக்காருங்க”ன்னு அழைச்சாள். அதுக்குள்ள அந்த இடத்துல உக்கார ஒருத்தரு வந்தாரு. நாங்க வரதைப் பாத்த ஒரு பெரியவர் அவரை நிறுத்தி எங்களை உட்கார வைச்சார்.

நன்றியோட அவரைப் பாத்தேன். அவருக்கு ஒரு அறுபது வயசு இருக்கும். வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை போட்டு கையில் ஒரு பையுடன் அமைதியா இருந்தார். ஆளும் நல்ல செவப்பா இருந்தார். அவர் மட்டும் கொஞ்சம் கருப்பா இருந்தா எங்க பெரியப்பா மாதிரிதான்னும் சொல்லலாம். ஊரில் பெரியப்பாதான் என்னை தூக்கி வளத்து சீராட்டுனவர். அவரோட நினைவுகள்ள மூழ்க ஆரம்பிச்சேன். வயித்து வலியும் கொஞ்சம் கொறைஞ்ச மாதிரி தோணிச்சி.

உச்சி வெயில்ல பேருந்து கொஞ்சம் வேகமாக போன மாதிரி இருந்துச்சு. வெக்கை காரணமா உள்ளே ரொம்பவே அமைதியா இருந்துச்சு. தீடீர்னு என்னோட நினைவை நிறுத்தர மாதிரி உக்காந்திருந்த தோள் பக்கம் என்னமோ உரசிச்சு. அது அந்த பெரியவரோட கைன்னு நினைச்சுட்டு மறந்திட்டேன். பிறகு அந்த உரசல் அதிகமாவும், கொஞ்சம் மூர்க்கமாவும் இருந்துச்சு. தீடீர்னு திரும்பி தோள்பக்கம் பார்த்தேன்.

பக்கத்துல நின்னுகிட்டு இருந்த அந்த பெரியவர் வேட்டியை விலக்கிவிட்டு ஆண்குறியோட உரசுறதைப் பாத்தேன். ஜட்டி கூட போடாமல் அவ்வளவாக கூட்டமில்லாத இடத்தில் கூட இப்படி ஒரு கொடுமையான்னு உடைஞ்சு போனேன். ஆத்திரம், அருவெறுப்பு, கோபம் எல்லாம் கலந்து என்னை நிலைகுலைய வைச்சுது.

நான் ஒரு கிராமத்து பெண்ணா மட்டும் இருந்திருந்தா இதை எப்படி எதிர் கொண்டிருப்பேன்னு சொல்லத் தெரியல. ஆனா நானும் இப்ப ஒரு தோழர். இதே பேருந்துகள்ள புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் எல்லாம் பேசி வித்திருக்கேன். அப்பயும் சில பொறுக்கிகள் பார்வையாலும், நக்கலாலும் சீண்டுவாங்க. ஆரம்பத்தில பயம் இருந்துச்சு, பின்னாடி நானே அவங்களை எதிர்த்து சண்டை போடுவேன். ஆனா அது ரொம்பக் கம்மிதான். பொதுவா பேருந்து விற்பனையில மக்கள் நம்மள ரொம்ப மரியாதையாத்தான் நடத்துவாங்க. அந்த வேலையே எனக்கு ரொம்ப தன்னம்பிக்கையை கொடுத்துச்சுன்னு சொல்லலாம்.

அந்த அனுவபத்தாலோ என்னமோ நானும் எழுந்து அந்தக் கிழட்டு மிருகத்தை திட்டியவாறு சண்டை போட்டேன். “கம்னாட்டி நாயே, என்னடா பண்ணுற, அப்பா மாதிரி இருந்துட்டு பொறுக்கித்தனம் பண்ணுற, செருப்பால அடிப்பேன்டா நாயே” என்றவாறு ஆத்திரம் தீரும் மட்டும் பேசுனேன்.

அவனோ ஏதும் பேசாம வேட்டியை சரி செஞ்சுட்டு வாசல் பக்கமா போயிட்டான். கூடியிருந்த மக்கள் கிட்ட நியாயத்த கேட்டேன். கூட இருந்த அந்த தங்கச்சி மட்டும் விடுங்கக்கான்னு சமாதானப்படுத்தினாள். ஆனா வேறுயாரும் இதை கண்டுக்கவே இல்ல. நடத்துநர், ஆண்கள், ஏன் பெண்களும் கூட ஏதோ ஒரு சகிப்புத் தன்மையில அமைதியாவே இருந்தாங்க!

இதுக்குள்ள அடுத்த ஸ்டாப்புல அந்த பொறுக்கி இறங்கி போயிட்டான். அதற்கடுத்த ஸ்டாப்புல நானும் இறங்கினேன். அன்றைய பொழுது இப்படி முடிஞ்சிது.

தோழருங்ககிட்ட இத சொன்ன போது சண்டை போட்டதுக்கு வாழ்த்து தெரிவிச்சவங்க, அந்த பொறுக்கியை ஏன் அடிக்கலைன்னு கேட்டாங்க? அவன் வயசும், அதிலயும் என் பெரியப்பா மாதிரி இருந்ததினாலோ என்னவோ எனக்கு கை நீளவில்லை. கூடவே கொஞ்சம் பயமும் இருந்துச்சுங்கிறதும் உண்மைதான்.

தோழருங்க இத எழுதி அனுப்பச் சொன்னபோதும் ஒரு தயக்கம் இருந்துச்சு. எல்லா ஆம்பளங்களும் பொறுக்கி இல்லேன்னாலும், எல்லா பொம்பளங்களும் எதோ ஒரு விதத்துல இந்த பொறுக்கித்தனத்த அனுபவிச்சவங்களாவே இருப்பாங்க. நானே என் வாழ்க்கையில இத வேறு வேறு சந்தர்ப்பங்களில பாத்திருக்கேன். ஆரம்பத்தில இருந்த அதிர்ச்சி பிறகு இதெல்லாம் அவ்வப்போது எதிர் கொள்ளணும்னு உள்ளுக்குள்ள பழகிப் போச்சு. ஆனா இதுக்கு முன்னாடி எப்போதும் நான் சண்டை போட்டதில்ல.

அந்த மிருகம் அப்படி நடந்திச்சுங்கிறதை விட கூடி இருந்த மக்கள் யாரும் எனக்கு ஆதரவா ஏன் வரலைங்கிறதுதான் ஆத்திரமா இருந்துச்சு. பெண்கள் மேல இருக்குற பாலியல் வன்முறைகளை, போகப் போக இதெல்லாம் சகஜம்கிற மனநிலைக்கு சமூகம் வந்திருச்சோ? ஆம்பளங்கள விடுங்க, அந்த பஸ்ஸூல இருந்த ஒரு பொண்ணும் எனக்காக பேசலேங்கிறதுதான் ரொம்ப வருத்தமா இருந்துச்சு!

இனிமே மிருகங்களோட சண்டை போடுறதோட அத வேடிக்கை பாத்து ஒதுங்க நினைக்கிறவங்களோடும் சண்டை போடணும்னு நினைச்சுக்கிட்டேன். சண்டை போட்டதாலயும், அதப்பத்தி நானே பரிசீலிச்சு பாத்ததாலயும், இப்ப உங்க கூட பகிர்ந்துகிட்டதாலயும் அந்தக் கொடுமையை நான் கடந்து வந்துட்டேன். இல்லேன்னா ரொம்ப நாளைக்கு அந்த ஆண்குறி என்னோட கனவுல வந்து அச்சுறுத்திக் கிட்டே இருக்கும்!

என்னோட நிலைமையே இப்புடின்னா சிதம்பரம் பத்மினியெல்லாம் எப்படி கஷ்டப்பட்டு போராடியிருப்பாங்கன்னு நினைச்சு பாக்கிறேன். அப்படி பாத்தா அந்த பஸ்ஸூல அமைதியா இருந்த பெண்கள் கிட்டதான் ரொம்ப சண்டை போட்டிருக்கணும்னு தோணுது!

__________________________________________________

– வேணி.

__________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

 1. யேன் இந்த தொகுப்பு க்கு ஒரு கமென்ட் கூட வரல ! அப்படின்னா இதை படீத்த எல்லொரும் இந்த மாதிரி கொடுமைகலை(பெண்கள் மேலான பாலியல் வன்முறைகளை) சகஜம்கிற மனநிலைக்கு சமூகம் வந்திருச்சோ?

  • இந்தக் கட்டுரை வெளியிடப்பட்டு அரை மணி நேரம் கூடம் ஆகவில்லை. அதற்குள் எப்படி மறுமொழிகள் வரும்?

 2. இப்பொழுது இதைப் பகிர்வதனால் உங்கள் மனக்கஸ்டம் சிறிது இறங்கியிருக்கும் என நம்புகிறேன்…ஆனால் அவனை பார்த்தபொழுது உமது பெரியப்பாவின் சாயல் தெரிந்தது சரி, ஆனால் அவன் அவ்வாறு தகாத முறையில் நடத்து கொண்ட பின் குறைந்த பட்சம் செருப்பையாவது காட்டியிருக்கவேண்டாமா?

  //பெண்கள் மேல இருக்குற பாலியல் வன்முறைகளை, போகப் போக இதெல்லாம் சகஜம்கிற மனநிலைக்கு சமூகம் வந்திருச்சோ?//

  னிச்சயமாக இல்லை, அந்தப் பேருந்தில் யாராவது ஒரு சரியான ஆள் அதைப்பார்த்திருந்தால் தக்க பாடம் புகட்டியிருப்பான்..

  • Only one solution is to react immediately and violently,letting out your angst.Cant be waiting for society to fix it for you,society has given enough moral lessons.

   The only way is to give him a tight slap.

   Government can do better by giving more ladies only buses.

 3. என்னோட நிலைமையே இப்புடின்னா சிதம்பரம் பத்மினியெல்லாம் எப்படி கஷ்டப்பட்டு போராடியிருப்பாங்கன்னு நினைச்சு பாக்கிறேன். அப்படி பாத்தா அந்த பஸ்ஸூல அமைதியா இருந்த பெண்கள் கிட்டதான் ரொம்ப சண்டை போட்டிருக்கணும்னு தோணுது!உண்மையான வரிகள் தோழர்

 4. //னிச்சயமாக இல்லை, அந்தப் பேருந்தில் யாராவது ஒரு சரியான ஆள் அதைப்பார்த்திருந்தால் தக்க பாடம் புகட்டியிருப்பான்..//

  பஸ்ஸில் சுமாராக ஒரு 60 பேர் இருந்திருப்பார்களா. இந்த சமூகத்தில் சரியான ஆள் 1:60 என்ற விகிதத்தில்கூட இல்லை போலிருக்கிறது!! 🙁

  • ரிஷி,

   கூட்டத்தில் ஒரு பெருசு வேட்டியை விலக்கிவிட்டுக் கொண்டு விவகாரத்தில் இறங்கியிருப்பது மற்றவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. சொன்னாலும் நம்புவார்களா என்ற சூழ்நிலையில், கட்டுரை ஆசிரியர் தன் பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் தங்கச்சியிடம் விசயத்தைச் சொல்லிவிட்டு ஒரு ஊக்கால் (சேஃப்டி பின் )பலூனைப் பங்சராக்கி இருந்தால் அதன்பின் பெருசுக்கு ஒண்ணுக்கு போகும்போது மட்டுமே வேட்டியை விலக்கும் எண்ணம் வரும்.. (பெருசு சிவப்பாய் இருந்தார்னு படிக்கும்போதே நேக்கு திக்ன்னு ஆயிடுத்து, அடுத்து பூணூல் போட்டுருத்தார்னு சொல்லி வெள்ளிக்கிழமைக் கோட்டாவை நிரப்பியாச்சோன்னு ஒரு டவுட்டு வந்துடுத்து பாருங்கோ.. யாராயிருந்தா என்ன பங்ச்சர் பங்ச்ச்ர்தான்..அதில மாத்தமேயில்ல.. ஆமா)

   • அம்பி,
    //அந்த அனுவபத்தாலோ என்னமோ நானும் எழுந்து அந்தக் கிழட்டு மிருகத்தை திட்டியவாறு சண்டை போட்டேன். “கம்னாட்டி நாயே, என்னடா பண்ணுற, அப்பா மாதிரி இருந்துட்டு பொறுக்கித்தனம் பண்ணுற, செருப்பால அடிப்பேன்டா நாயே” என்றவாறு ஆத்திரம் தீரும் மட்டும் பேசுனேன்.

    அவனோ ஏதும் பேசாம வேட்டியை சரி செஞ்சுட்டு வாசல் பக்கமா போயிட்டான். கூடியிருந்த மக்கள் கிட்ட நியாயத்த கேட்டேன்.//

    மக்கள்கிட்ட அவங்க நியாயம் கேட்டிருக்காங்களே.. அவங்க வாயே திறக்கலியே!
    மத்தபடி உங்க ஐடியா செம! ஆயுதப் போராட்டம்தான் தீர்வுங்கிறத நீங்களே ஒத்துக்கிட்டீங்க பாருங்க. இடிச்சா ஃபங்க்ச்சர் ஆகும்னு தெரிஞ்சா எவனும் வாலாட்ட மாட்டான்.

    • மேல படிங்க ரிஷி..!

     //
     அவனோ ஏதும் பேசாம வேட்டியை சரி செஞ்சுட்டு வாசல் பக்கமா போயிட்டான். கூடியிருந்த மக்கள் கிட்ட நியாயத்த கேட்டேன். கூட இருந்த அந்த தங்கச்சி மட்டும் விடுங்கக்கான்னு சமாதானப்படுத்தினாள். ஆனா வேறுயாரும் இதை கண்டுக்கவே இல்ல. நடத்துநர், ஆண்கள், ஏன் பெண்களும் கூட ஏதோ ஒரு சகிப்புத் தன்மையில அமைதியாவே இருந்தாங்க! //

     மத்தவங்க பார்க்கமுடியாததால் இந்தப் பெருசா இப்படி செஞ்சுருக்கும்ன்னு டவுட்டுல எல்லாரும் இருந்திருப்பாங்க போலருக்கு..
     இதுபோன்ற சூழலில்தான் ஊக்குத் தாக்குதலில் இறங்கச் சொன்னேன்..

   • அம்பி எனக்கு ஒரு டவுட்டு,

    நம்ம பாஸோட பேசும்போது நாத்திகவாதி மாதிரி பேசிக்கிட்டு, மற்ற இடத்துல எல்லாம் பார்ப்பானர்களுக்கு அப்பீலே இல்லாம ஆஜராவுரீங்கலே என்ன காரணம். ஏதாச்சும் சம்திங் உண்டா?

    • உங்க பாஸு நான் என்ன சொன்னாலும் என்னை கடித்து வைத்து நாத்திகம் பேசவைக்கிறார்.. என்ன செய்வது, சந்தானம்..! நம்புங்கப்பா.. நான் கடவுளை நம்பும் ஆத்திகவாதிதான்.. சத்தியமா நானும் ஆத்திகவாதிதானுங்கோ..

     • // பார்ப்பானர்களுக்கு அப்பீலே இல்லாம ஆஜராவுரீங்கலே என்ன காரணம். ஏதாச்சும் சம்திங் உண்டா? //

      நீங்க எல்லாம் பார்ப்பானை ரவுண்டு கட்டிட் தாக்கும்போது அம்பி அப்பீலில்லாம ஆஜராகப்படாதா..?! என்னய்யா இது பாசிசமாயிருக்கு..!!!

 5. இந்த மாதிரி பொறுக்கி பயலுகள செருப்பால அடிச்சிரலாம், ஏன்னா அவனுங்களே ஒரு பயத்துல தான் இருப்பானுங்க !நாம் பயப்பட தேவையில்லை !நீங்க அவன அப்படி அடிச்சி இருந்தா உங்களுக்கு ஒரு சபாஷ் சொல்லிருப்பேன் !

 6. இது போன்ற நபர்கள் நம்மிடயே பலர் உள்ளனர்.இது ஒரு மன நோய்தான் என மன நல நிபுணர்கள் கூறுகின்றனர்.இந்த மன நோய்க்கு செருப்படிதான் சிறந்த மருந்து.ஆனால் அந்த வைத்தியத்தை கொடுக்க பெண்கள் தயாரில்லை எனும்போதுதான் இந்த மன நோயாளிகளுக்கு தயிரியம் அதிகமாகி விடுகிறது.

 7. நீங்கள் அவனை செருப்பால் அடித்திருந்தால் நிச்சயம் கூட்டத்தில் இருந்த யாரோ ஒருவர் ஆதரவு கிடைத்திருக்கும். அடிக்காததால்தான் இந்தபிரச்சினையை நீங்களே சமாளித்துவிடுவீர்கள் என்று அமைதிகாத்து இருந்துவிட்டார்கள். ஒருவர் எழுந்து கேட்க ஆரம்பித்தால் அப்புறம் பாருங்களேன், ஒரு பிரச்சினை என்று இருந்தால் யார் முன் வருவார்கள் கேட்பதற்கு என்று யோசிப்பார்கள், நீங்கள் இந்தபிரச்சினையில் தீயை மூட்டியிருக்க வேண்டும், அதை தவரிவிட்டிர்கள். தீயை மூட்டுவது என்பது கையில் கிடைத்த பொருளால் அவனை தாக்குவது என்பதாகும். இருந்தாலும் அமைதி கத்து போகாமல் குறைந்தபட்ச அளவாவது எதிர்கொண்ட உங்களுக்கு வீர வணக்கம்.

 8. ///அப்படி பாத்தா அந்த பஸ்ஸூல அமைதியா இருந்த பெண்கள் கிட்டதான் ரொம்ப சண்டை போட்டிருக்கணும்னு தோணுது!///

  yes, obsolutely correct.

 9. நீங்கள் செய்தது மிகவும் சரி..வாழ்த்துக்கள் ..ஆனால் இந்த நிலைமை சமூகத்துள் இன்று அல்ல …வெகுகாலமாகவே இருந்துதான் உள்ளது.15 வருடங்களுக்கு முன் திரை அரங்குள் இது மாதிரி ஒரு சூழ்நிலையில் ஒரு பெண் கையில் இருந்த ஊக்குத்தியை கொண்டு குத்தியது நியாபகம் வருகிறது.இந்த மாதிரி மிருகங்களை அவ்வாறு துன்புறுத்தினால் மட்டுமே..பயம் வரும்.இல்லாவிடில் இனிஒரு பாவம் பெண் அவனிடம் சிக்கிகொன்டுதான் இருப்பாள்…

 10. அவனை செருப்பால அடிச்சிருந்த செருப்புக்குத்தான் அசிங்கமுனு நினைச்சிருபாங்கானு நினைக்கிறேன்…

  (எதற்கெடுத்தாலும் ஏன் செருப்பு, நாய் என்று சொல்லுறீங்க? நிறைய மனிதர்களை விட இவையெல்லாம் எவ்வளவோ மேலானது)

 11. தோழி வேணி அவர்களே…
  நகரங்களில் யாரும் உதவுவதில்லை…
  ஊக்கே தீர்வு…

  • நகரங்களில்
   நமக்கு ஏன் வம்பு என்று அனைவரும்
   அமைதியாகவே சென்று விடுகிறார்கள்
   அவர்கள் குடும்பத்தில் ( மகளோ, தங்கையோ )
   யாருக்காவது நேர்திருந்தால் இப்படி
   அமைதியாக இருப்பார்களா

   மக்களே எல்லாத்தையும் சொல்லி குடுக்க முடியாது
   கொஞ்சமாது யோசிங்க…..
   மாற்றம் வேணும்னு பேச மட்டும் தான் செய்றாங்க
   ஆனா யாரும் செயல்ல காட்டல

   இப்படியே மௌனமாக இருந்தால் தோழி சொல்ற மாதிரி
   சகிப்பு தன்மை ஆகிடும்

 12. தோழர் வேணி,
  இந்த பொறுக்கி மூதிக எல்லா இடத்துலயும் சுத்தி வருதுக! இப்ப எதித்து நின்னு சண்டை போட்டிருக்கீக, நாளைக்கு நிச்சயம் அடிக்கவும் செய்வீக! உங்கள மாறி நம்ம பொண்ணுக சனம் தைரியமா போராண்டால்தான் விடுதலைங்கிறது வீட்டுல இருந்து நாடு வரைக்கும் வரும்!

 13. சில மாதம் முன்,
  பேருந்தில் பிரச்சாரம் செய்துவிட்டு திரும்பி வரும்போது பெண் தோழர் ஒருவரை மப்பிட்டியிலிருந்த போலீசார் சிலர் கிண்டல் செய்த போது அதில் ஒருவனை பளார் என மற்றொரு தோழர் அறைந்த சம்பவத்தை கூறியது எனக்கு இந்த கட்டுரையினை படிக்கும் போது நினைவுக்கு வருகிறது.

  கிழட்டு பொறுக்கியையும், போலீசு பொறுக்கியையும் எதிர்கொண்ட தோழர்களின் சரியான நடவடிக்கைகள்.

  • /போலீசார்சிலர் கிண்டல் செய்த போது அதில் ஒருவனை பளார் என மற்றொரு தோழர் அறைந்த சம்பவத்தை கூறியது/
   Super….

 14. தோழர் வேணி சொல்வது போல் படிக்கும் பொழுது பேருந்தில் செல்லும் பொழுது, நிறைய கேவலங்களை அனுபவத்திருக்கிறேன்.

  வீட்டில் அம்மாவிடமோ, அக்காவிடமோ சொல்லி அழத்தோன்றும் ஆனால் இந்த சமூக அமைப்பில் குடும்பத்தில் நம் பிரச்சனைகளை பகிர்ந்து கொள்ள முடிவதில்லை என்றே கருதுகிறேன்.. வெளிப்படையாக பேசி பிரச்சனைகளை தீர்க‌ கற்று தருவதில்லை.. நான் ஏன் சகித்து கொண்டேன், பல மன உளச்சலுக்கு ஆளனேன், இன்று தோழர் வேணி செய்தைப் போல நான்
  ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை? சக தோழிகளிடம் கூட நான் பகிர்ந்து கொண்ட தில்லை..

  பெண்கள் கூட கேட்கவில்லையே என்ற தோழரின் ஆதங்கம் புரிகிறது….

  அடித்தட்டு பெண்கள் உடனே கேட்பார்கள் நமக்கு வக்காலத்து வாங்குவார்கள்..

  காளமேகம் அண்ணாச்சி சொல்வதை வழிமொழிகிறேன்..

 15. பொதுஇடத்தில் தவரானநடத்தைஐ கன்டிப்பது,எதிர்ப்ப்பது,இன்ட்ரைய சூழலில் சாத்யமானதாக
  இல்லை என்பதெ யதார்தம்.

 16. தோழர்க்கு வாழ்த்துக்கள்!

  என் அனுபவத்தையும் சொல்கின்றேன்,

  பள்ளி பருவத்தில் சில கசப்பான அனுபவங்களால் பேருந்து பயணங்களை தவிர்த்து வீட்டிற்கு நடந்தே வருவேன்; எதிர்த்து சண்டை போடும் வயதல்ல அது; கல்லூரி நாட்களில் சென்னை பேருந்து பயணம் திவிர்க்க முடியாதது; ஒரு முறை பேருந்து நிலையத்தில் காத்துக்கொண்டிருந்தேன்; பேருந்து வந்தது; ஏறும்போது எவனோ தொடுவது போன்று தோன்றவே உடனே இறங்கி, அவனை பார்க்க; அவன் திரும்பி நடக்க எத்தனித்தான்; நான் முதுகிலும் கையிலும் மாறி மாறி அடிக்க, அவன் வேகமாக ஓடிவிட்டான்;இத்யம் படபடக்க சுற்றியுருந்தவர்களை பார்க்க அவர்களோ, ஒதுங்கி ஒதுங்கி சென்றார்கள்; நான் என்னவோ ரவுடி போலவும் அவர்கள் என்னவோ உத்தமர்கள் போலவும் என்னை பார்ப்பதாக இருந்தது; ( மந்தில் நினைத்தேன்… இதையெல்லாம் தாங்கிகிட்டு உங்க வீட்டு பொம்பளைங்க இருந்தா நீங்க நினைக்கிற மாதிரி அவங்க ஒண்ணும் “பத்தினி” இல்லை); அன்று முழுவதும் என்னால் நம்ப முடியவில்லை; “நான் அடித்தென்” என்பதை; அந்த செயல் திட்டமிடாதது; அதன் பிறகு பலமுறை அடிக்க வேண்டியதாக இருந்தது;எப்போதும் மக்கள் கூட்டம் மௌனம்;

  • //பள்ளி பருவத்தில் சில கசப்பான அனுபவங்களால் பேருந்து பயணங்களை தவிர்த்து வீட்டிற்கு நடந்தே வருவேன்; எதிர்த்து சண்டை போடும் வயதல்ல அது;//

   மனம் நடுங்கியது இதைப் படித்ததும்!

 17. தவறுகளை கண்டு ஒதுக்கும் போக்கும், தவறு நடநததைக்கூட எதிர்க்க துணிவின்றி அமைதி
  காப்பதும். இதுவும் தனியார்மயம்.தாராளமயத்தின் விளைவதான். இருந்தாலும் நம்ம மக்களுக்கு இவ்வளவு சகிப்பு தண்மை ஆகாது.

  • இதுக்குமாய்யா தனியார்மயம், தாராளமயம் காரணம். இதுக்கு முன்னாடி மட்டும் ரவுண்டு கட்டிட்டுதான் இருந்தாங்களா? அதுவல்ல காரணம் நமது மக்களுக்கு மிகவும் பிடித்த மொழி மவுன மொழி. வெளில வந்தா நாலு பேரு நாலு விதமாத்தான் இருப்பான் நாமதான் ஒதுங்கிகொல்ளனும் என்ற உபதேசம் நாலு பேர் இருக்கும் இடத்தில் சங்கோஜப்படுவதால் வரும் விளைவு. நாலு பேர் இருக்கும் இடத்தில் எதிர்த்து பேசும் துணிவின்மை. இது போன்ற செயல்களை கடும் உழைப்பாளிகளிடம் காண்பது அரிது.

   • ஆமாங்க இந்த முதலாளித்துவ ”தான்” எப்படியாவது வாழ்க்கையில் முன்னேறுனா போதும் என்று வளர்த்து விட்டிருக்கு,
    நமக்கென்னனு போனால் தான் முதலாளி வாழ முடியும்…

    பொதுவுடமையில் இப்படி வாழமுடியாது, உதாரணமா //
    பிழைப்புவாத சாக்கடைக்குள் முக்குளிக்க்கும் நமது சமூகத்தில் பக்கத்து வீட்டுக்காரனுக்கு பிரச்சனை என்றால் தன் வீட்டுக் கதவை சாத்திக் கொள்ள பயிற்றுவிக்கப்பட்டுள்ள மனிதனின் மனநிலைக்கும், சோவியத்தில் ஒரு கூட்டுப் பண்ணையின் நடுவே நிறுத்தப்பட்டிருந்த டிராக்டரில் பற்றிக் கொண்ட தீயினால் முழு பண்ணையும் எரிந்து நாசமாகி விடக்கூடாதே என்றெண்ணி அடுத்த நொடியே எரிந்து கொண்டிருந்த டிராக்டரில் ஏறி அதை வயலுக்கு வெளியில் ஓட்டிக் கொண்டுவந்து விட்டு விட்டு தனது உயிரையும் விட்ட, அப்போது தான் புதிதாக திருமணம் ஆன 28 வயது சோசலிச இளைஞனின் மனநிலைக்கும் உள்ள வேறுபாட்டை நாமும் அவனும் மனிதன் என்கிற வகையில் நாம் உரசிப் பார்த்துக்கொள்வதற்கும் இந்த உண்மைகள் நமக்கு உதவும்.//

    அதுவும் இந்தியா போன்ற கேடுகெட்ட நாட்டுல இருக்குற பார்ப்பினியம் இருக்கே….
    இன்னிக்கைவரை மக்களை பிரிச்சே வச்சிருக்கு……

    //……// Source:
    https://www.vinavu.com/2010/11/07/nov-7-3/

 18. பாண்டிசேரியில் இருந்து கடலூருக்கு பஸ்சில் செல்லும் போது கேவலமான ஒருவன் சீட்டில் உட்கார்ந்து கொண்டு பேண்டை அவிழ்த்து விட்டு ஆபாசமாக இருந்த போது பயணிகள் யாரும் கண்டு கொள்ளவில்லையாம், எனக்கு தெரிந்த ஒருவர் அந்த கேடு கெட்டவனை செருப்பால் அடித்து கண்டக்டரை திட்டி பஸ்சை விட்டு இறக்கி விட வைத்தாராம். இது போன்ற கேடு கெட்ட மிருங்களுக்கு அங்கேயே செருப்படி கொடுக்க வேண்டும்.

 19. ellorum solvathu seruppaala adippain…kadantha 50 varudamaga sayruppaala adipain…allathu sayruppaala adikireenrgal…neengal sayruppaala adikka mattum thaan seyreenganu seyveengannu avangalukku theyriyum….so wayra wali pannanum…….jenmathukkum entha maathiri pannum ella aatkalum thirunthuramathiri pannanum….neenga pengal oruthar yaaravathu oray oruthadawa konjam sariyaana badiladi koduthu ernthaa, …yennaiko entha eve teasing mudinchirukkum….pengal yaarum ethuvarai oruthar kooda muraiyaana badiladi kodukavillai so…etho ponra sambavam thodarathaan seyyum…..matha pengalai passengers sa kurai sollatheenga….paathikkappatta neenga thaan poraadanum….so athan moolama anaivarukkum vidivu kidaikanum…ungal poraatam antha maathiri erukkanum..

 20. இவ்வளவுதான் தமிழர்களின் சகமனிதன் பற்றி உணர்வு. ஒருவேளை அந்த மிருங்களும் தமிழ் இனமடா என நினைத்து விட்டுவிடுகிறார்களோ தெரியவில்லை..

  ஒருமுறை பாஸ்டன் நகரில் நடைபெற்ற சம்பவமிது… ஒரு ஆசாமி லோக்கல் ட்ரெனில் உட்கார்ந்து தமது ஆணுறுப்பை பெண் பயணிகளுக்கு காட்டிய போது அருகிலிருந்த இளைஞரொருவர் தனது ஸமார்ட்போனில் படமெடுத்து டுவிட்டரில் போட்டிருகிறார். இத்தகவல் போலிஸை அடைந்து ட்ரென் அடுத்த நிறுத்தத்தில் நின்ற போது அந்த ஆசாமி கைது செய்ப்பட்டுள்ளார்.

 21. மத்தவங்களசொல்லாதீங்க….நீங்க சரியான பதிலடி கொடுத்துஇருக்கனும்…மிஸ் பண்னிடீங்க…மத்தவங்கள கொற சொல்றீங்க….தவறு உங்களை போன்றொர் பக்கம் தான்…பெண்கள் இது போன்ற தவறை செய்யும் வரை இவனுக திருந்தமாட்டானுவ

 22. பெண்களிடம் சீண்டினா சுத்தியிருக்கிறவன் அடிப்பான்-கிற பயம் வரணும். குறைந்த பட்சம் கேள்வி கூட கேக்காமல் விட்ட அந்த சுயநலவாத சகபயணிகளை நினைத்தால் அருவருப்பாக இருக்கிறது.

  இது ஈவ்-டீசிங் மட்டுமல்ல, எல்லா சமூக பிரச்சினைக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். தனிப்பட்ட ஒரு பிரச்சினைக்கு செருப்படியோ, ‘ஊக்கு’ வைத்தியமோ உடனடி தண்டனையா இருக்கலாம். ஆனா மலைவாசிப் பெண்களைக் கொடுமைப் படுத்திய போலீஸ்களை ‘ஊக்கை’ வைத்து குத்த முடியுமா. சமூகம் தான் தட்டி கேக்கணும்.

 23. நாம் போகும் வேலை தடைப்பட்டுவிடுமோ என்று மக்கள் யாருமே இதை கேட்க்காமலிருந்ததால், கட்டுரையாளருக்கு அந்த மிருகத்தின் அருவருப்பான செயலால் மன உளச்சல் அடைவதுதான் மிச்சமாக இருந்திருக்கும்.

 24. இருபது வயது குமரன் முதல் அறுபது வயது கிழவன் வரை இது போன்ற இழி செயல்களைச் செய்யும் கயவர்கள் அன்றும் இருக்கத்தான் செய்தார்கள். கலாச்சார சீரழிவின் காரணமாக இன்று இது போன்ற கயவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பது வேதனைக்குரியது. இச்செயல்களில் ஈடுபடும் கயவர்களை பொது இடங்களில் அம்பலப்படுத்துவதும் அசிங்கப்படுத்துவதும் தண்டிப்பதும் (சட்டத்தை நீங்கள் எப்படி கையில் எடுக்கலாம் என சட்டவாதிகள் சிலர் முன்வரக்கூடும்) முதல் தேவையாக இருக்கும் அதே நேரத்தில் இத்தகைய கயவர்களை உருவாக்கும் சமூகக் காரணிகளை அகற்றுவதற்கான போராட்டங்களையும் முன்னெடுக்க வேண்டும்.

  தோழர் வேணியைப் போன்று எல்லோரும் முன் வந்துவிட முடியாது. தோழர் வேணிக்குப் பின்னால் புரட்சிகர அரசியலும் அமைப்பும் இருக்கிறது. அதுவே தோழரின் துணிச்சலுக்கு ஆதாரம். இதுவன்றி சில தனிப்பட்ட பெண்களும் இவ்வாறு எதிர்க்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அது பின்னாளில் சில சமயங்களில் அப்பெண்ணை பழிவாங்குவதாகவும் அமைந்துவிடுகிறது அல்லது சாதி மத மோதல்களாகவும் உருவெடுத்துவிடுகிறது.

  திருச்சியில் ஒரு சமயம் ம.க.இ.க கலைக்குழு பெண் தோழர்களை சில விடலைப் பையன்கள் கிண்டல் செய்ய பிறகு அவ்வாறு கிண்டல் செய்தவர்களை அவர்கள் வசிக்கும் தெருவுக்கே சென்று கண்டு பிடித்து “இனி பெண்களை கிண்டல் செய்ய மாட்டோம்” என அட்டையில் எழுதி அதை அவர்களது கழுத்தில் மாட்டி புத்தூரிலிருந்து உறையூர் வரை சாலையில் கயிறு கட்டி ஊர்வலமாக இழுத்து வந்த ம.க.இ.க தோழர்களின் துணிச்சலான போராட்டம் போல செய்தால் மட்டுமே இத்தகைய கயவர்கள் தவறு செய்ய அஞ்சுவார்கள்.

  சமூகத்தில் நடக்கும் இதுபோன்ற இழிசெயல்களை தட்டிக் கேட்க வேண்டுமானால் அதற்கு துணிவு வேண்டும். அத்தகைய துணிவை தரவல்லது புரட்சிகர அரசியலும் அதை எடுத்துச் செல்லும் அமைப்புகளும்தான். தனிநபர் பாதுகாப்புக்கே இன்று புரட்சிகர அமைப்புகள்தான் தேவைப்படுகிறது என்பதே இன்றைய எதார்த்தம். அதைத்தான் வேணியின் அனுபவமும் நமக்கு உணர்த்துகிறது.

 25. வெளியில் நடக்கும் அநியாயங்களை பார்த்து கேள்வி கேட்டால் “உனக்கேன் வம்பு” அப்படின்னு அட்வைசு. உனக்கு ரொம்ப கோபம் வருதுன்னு கமெண்ட். இதெல்லாம் சகஜம்னு ஒரு ஒபினியன் வேற.
  வீட்டில் இருக்குற மூட நம்பிக்கைய எதிர்த்து கேட்டா, கண்ட மேனிக்கி திட்டு, சாபம்.
  நான் அந்த பஸ்-ல இருந்த அந்த பொண்ணுக்கு ஆதரவா ஏதாவது பேசி இருப்பேன், ஆனாலும் அவன எதிர்த்து பேசி இருக்க மாட்டேன். அவ்வளவு தான் என் தைரியம்.
  முக்குக்கு மூல டாஸ்மாக் வேற. பொறுக்கிதனதுக்கு எதிரா பேசினா நம்ம வேஷ்டி கிளியும்னு தெரியும். நமக்கும் யாரும் வர மாட்டாங்க, பாதிக்கபட்டவங்களுக்கும் யாரும் வர மாட்டாங்க. சமாதானபடுத்த எல்லோரும் வருவாங்க. இன்டர்நெட்-ல உக்கார்ந்து வீரத்தனம் காமிக்கறதுல நம்மள அடிச்சிக்க முடியாது.

 26. என் அக்காவும் உபயோகித்தும் சிறு சேபிட்டி பின் தான். பண்றவன் கோழைன்றதுனால பயந்து ஓடுவான்.

 27. தோழருக்கு வாழ்த்துக்கள்,

  இன்று நகர்ப்புறங்களில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்ரியாகதான் உள்ளது. இது போன்ற சம்பவங்கள் ஒன்று இரண்டு தான் வெளியே தெரிகிறது, பலர் வெட்கப்பட்டு சகித்துக்கொண்டு வெளியே சொல்வதில்லை,

  ஒரு முறை எனது ரயில் பயணத்தின் போது இது போன்ற ஒரு சம்பவம் நடந்தது ஒரு பள்ளி மாணவியிடம் அறுவது வயது மதிக்க தக்க ஒரு கிழ நாய் இதே போன்ற வேலையை செய்துள்ளான், அந்த பெண் அதை உணர்ந்து தன வாயில் இருந்து வார்த்தை வராத அளவுக்கு பயந்து போனால் யாருக்கும் ஒன்றும் புரிய வில்லை, அனால் அந்த பெண் அந்த நாயை பார்த்து கைநீட்ட அந்த கிழம் பயந்து போய் அடுத்த நிலையத்தில் இறங்கிவிட்டது, அந்த பெண் பயம் தெளிந்த பிறகு நடந்ததை சொன்ன பிறகுதான் விஷயம் புரிந்தது, ஆனாலும் மற்ற ஜடங்கள் பொய் சொல்லதமா வயசானவரு அவர போய் சொல்றியே என்றனர், அந்த பெண்ணின் முகம் மாறிப்போனது, யாரும் நம்ப வில்லையே என்று.

  இந்த காலத்தில் இளைஞர்கள் தவறு செய்ய பயப்புடுகிரார்கள் மாட்டி கொண்டால் அடி வாங்க நேரமோ என்று, ஆனால் கிழடுகள் பயம் இன்றி இது போல நடந்து கொள்கிராகள், இவனுங்கள பத்தி சொன்னாலும் யாரும் நம்புரதிள்ள அந்த தயிரியத்தில் இவர்னுங்க இப்படி செய்ரானுங்க.

  ஒருமுறை பேருந்தில் செல்லும் போது முப்பது வயதுதக்க ஒருவன் ஒரு பெண்ணின் மீது தனது வைத்து உரசியப்படி வர அந்த பெண் தள்ளி தள்ளி போக நான் அதை கவனித்தேன் அந்த நாயிடம் தள்ளி நிற்க சொன்னேன் தள்ளி நின்றவன் மீண்டும் உரச ஆரம்பித்தான் அந்த பெண் வெளியே சொல்ல முடியாமல் தவிக்க மீண்டும் அவன் கிட்ட சென்றேன் திருடன் திருடன் என நான் சத்தம் பூட்டு பேருந்தை குரோம்பேட்டை காவல் நிலையத்தில் நிறுத்தி நடத்துனர் மூலம் புகார் கொடுத்து விட்டு வந்த பிறகு, அந்த பெண்ணின் முகத்தில் மகிழ்ச்சி வந்தாலும் அந்த நினைவிலிருந்து மீள முடியவில்லை என்பதை உணரமுடிந்தது, பிறகு பேருந்தில் ஏறியவுடன் அந்த பெண் நன்றியை செய்கையின் மூலம் சொன்னதும் ஒரு அண்ணன் தங்கைக்கு செய்த கடமையாக நினைத்து செய்கையின் மூலம் தலையை மட்டும் அசைத்து விட்டு பயணத்தை தொடர்ந்தேன்,

  இனி பெண்கள் இது போன்ற சமயங்களில் தைரியமாக இருந்து அந்த நாய்கள் மீது வேறு பழி போட்டு தண்டிக்கலமே?

  தோழருக்கு அந்த சமயத்தில் என்ன செய்வதென்று புரியாமல் அவனை அசிங்கம் மட்டும் செய்து மற்றவர்கள் மத்தியில் அவனை அம்பலபடுத்தி இருப்பது வாழ்த்துக்குரிய செயல்.

  இந்த மாதிரி ஆளுங்கல்ட்ட நயவஞ்சகமா பேசி தனியாக அழைத்து சென்று வாயில் பீயை கரைத்து ஊத்த வேண்டும், ஒரு பக்கம் மொட்டை அடித்து கையில் இருக்கும் காசல்லாம் புடுங்கி விட்டு நடுரோட்டில் விடவேண்டும்,

 28. இந்த மாதிரி நிறைய சம்பவங்கள் கேள்விப்பட்டதுண்டு.

  அந்த இடத்துலயே ‘அதை’ப் பிடிச்சு ஒரே திருகாத் திருகி விட்டிருந்தா அப்புறம் அடங்கிக் கிடப்பான் அந்தக் கிழவன்.

  • அந்த இடத்துலயே ‘அதை’ப் பிடிச்சு ஒரே திருகாத் திருகி விட்டிருந்தா அப்புறம் அடங்கிக் கிடப்பான் அந்தக் கிழவன்.

   அதுவும் அவனுககு சுகமாகத்தான் இருக்கும். ஊக்கு வைதியம் தான் சரி.

 29. மும்பையில் பெண்களுக்கு இருக்கும் ஆதரவு கூட நம் தமிழ்மண்ணில் இல்லை என்பது வேதனையாக இருக்கிறது. பொதுவாக மும்பை என்றாலே சிலரது கண்ணுக்கு சரியில்லாத நகரமாக தான் யோசிக்கிறார்கள், இதே சமயத்தில் இதுபோன்ற ஒரு சம்பவம் பேருந்திலோ அல்லது ரயிலிலோ இதுபோன்ற சம்பவம் நடந்திருந்தால் வாழ்க்கையில் மறக்க முடியாத அளவுக்கு ஏன் இனிமேல் அவன் இதுபோன்ற தவறு செய்யாத அளவுக்கு அவனை நையை புடைத்து இருப்பார்கள். இந்த மௌனம் இனி எத்துனை நாள்தான் நீடிக்க போகும்யை

 30. தோழருக்கு வாழ்த்துக்கள்…
  இன்னும் கூட ஒரு அடி முன்வைத்து ரெண்டுஅறை விட்டிருக்கலாம்…
  மற்றவர்களைத் துணைக்கு அழைத்து நியாயம் கேட்டால் எதுவுமே நடக்காது…
  நாமே முன்னெடுத்த போராட்டங்களில் வென்று இருக்கிறோம்
  ஜெயாவை நம்பின உதயகுமாரின் கூடங்குளம் ஒடுக்கப்பட்டது.
  இன்னும் கூட ஒரு அடி முன்வைத்து ரென்டு அறை விட்டிருக்கல்லாம்…

 31. தோழர் வேணிக்கு,

  முதலில் தைரியமாய் எதிர்த்துப் போராடியதற்கு எனது வாழ்த்துக்கள்.

  செருப்பால் அடித்திருக்கலாம் என பலரும் கருத்து சொல்கிறார்கள். அது தவறு செய்தவன் தண்டிக்கப்படவேண்டும் என்ற தங்களது ஆசையை வெளிப்படுத்துகிறார்கள் அல்லது அவர்கள் செய்ய தவறியதை நீங்கள் செய்து காட்ட ஆசைப்படுகிறார்கள்.

  பல இடங்களில் எதிர்த்து சண்டை போட்டிருக்கிறேன். இவ்வளவு காலம் சண்டை போட்டும் கூட, நான் ஒரு ஆணாய் இருந்தும் கூட, இப்பொழுதும் ஏதாவது ஒரு பிரச்சனை என்றால், உடம்பில் பதட்டம் எகிறிவிடுகிறது.

  பெண்கள் அனுதினமும் இந்த பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள். பெண்கள் மீது தொடர்ந்து சமூக, குடும்ப அரங்குகளில் ஒடுக்கப்படுவதால், ஒதுங்கி போவதும், சகித்து போவதும் தொடர்கிறது.

  தைரியமுள்ள பெண்கள், அரசியல், அமைப்பு அறிமுகம் உள்ளவர்கள் இது மாதிரி கொடுமைகளுக்கு எதிர்த்து போராட மக்களையும் துணைக்கழைத்துத்தான் போராட வேண்டும்.

  • தோழரே

   செருப்பைக் கழட்டுவதும் தயங்கி நிற்பதும் அவர்களுடைய பின்னணியை பொறுத்தது அதாவது அவர்களுடைய வர்க்கத்தை பொருத்தது. நடுத்தர வர்க்க பெண்கள் தயங்குவார்கள், உழைக்கும் வர்க்க பெண்களின் செருப்போ பிய்ந்துவிடும். இதை நீங்கள் பேருந்துகளிலும் பொது இடங்களிலும் காணலாம்.

   • அம்பேத்,
    இதைத்தான் நானும் சொல்கின்றேன் இதைவிடுத்து தனியார்மயம் தாராளமயம் என பெரிய பெரிய வார்த்தைகளையெல்லாம் காரணம் எனக் கூறிக்கொண்டிருக்கிறார்கள்.

    • சம்பந்தமேயில்லை என்று சொல்லிவிட முடியாதே, சந்தானம்..

     தாராளமயம் மேற்கத்திய கலாசரக் குப்பைகளையும் இங்கு கொண்டுவந்து கொட்டி காசாக்குகிறது. டி.வி. நிகழ்சிகளிலும், திரைப்படங்களிலும், திரை விழாக்களிலும் நாயக, நாயகி, எக்ஸ்ட்ரா நடிகை,நடிகர்கள், ஆண்,பெண்,சிறுசு, பெருசென்று எல்லா வீணாப்போனதுகளும் இடுப்பை முன்னும் பின்னும் தங்கள் முன் ஆட்டிக்காட்டுவதை, கைதட்டி ரசிக்க பழக்கப்படுத்தப்பட்ட கும்பலின் எண்ணிக்கை சமூகத்தில் அதிகரித்திருப்பது தாராளமயமாக்கத்தின் ’சேவைகளில்’ ஒன்று..

  • நண்பரே, பெரும்பாலானோர் கேட்பதில்லை தான். ஆனாலும், அமர்ந்திருந்தவனின் மண்டையில் கொட்டிச் சொன்னவர், பஸ்சில் பலர் முன் அறைந்தவர், வீட்டுக்குப் போய் சம்பந்தப்பட்டவரின் மனைவியிடம் சொல்லிவிட்டு வந்தவர் என்று எனக்கு நேரடியாகத் தெரிந்த உதாரணங்கள் உண்டு. சிறு பிள்ளையாயிருப்பின் பயந்து ஒன்றும் செய்யாமல் போய்விடலாம். வளர்ந்த ஒருவர் இப்படி தைரியமாக பதிலடி கொடுப்பது உண்மையில் அவரது மன உளைச்சலுக்கும் மருந்தாக இருக்கும்.

 32. ஊக்கு ஓகே-தான். பிளேடோ கத்தியோ இன்னும் சூப்பர்!! ‘நந்தா’ பட ஸ்டைலுல கட் பண்ணி தூர எரிஞ்சி இருக்கணும்…மவனே…இனிமே நெனைக்கக் கூட முடியாதபடி செஞ்சிருக்கும். அட்வைஸ் பண்றது ஈசி தான்…ஆனா செயல்படுத்துறதுக்கு தைரியம் வேணும். அது உங்க மாதிரி தோழர்களால்தான் முடியும்…

 33. தோழர் வேணி

  பெரும்பாண்மை பெண்கள் இதுபோன்ற நிகழ்வுகளை வெளியில் சொல்லுவதே இல்லை. அவ்வாறின்றி நீங்கள் இதை வெளிக்கொணர்ந்து அம்பலமாக்கியிருக்கிறீர்கள். அந்த வகையில் இது பாராட்டுக்குரிய செயல்.

  அத்துடன் இதுபோன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ளும் பெரும்பாலான பெண்களை போல் ஒதுங்கிப்போகாமல் துணிவுடன் எதிர்கொண்டு நின்றிருக்கிறீர்கள், எனினும் அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த பெண்களே வாயை மூடிக் கொண்டிருக்கிறார்களே என்றெண்ணும் போது சோர்வடைந்திருக்கிறீர்கள்.

  உங்களுடைய செருப்பை கழட்டி அந்த நாயின் கண்ணத்தில் நாலு இழு இழுத்திருந்தீர்களானால் அங்கிருந்த பெண்களில் பத்து பேராவது வாயைத்திறந்திருப்பார்கள்.

  இதுபோன்ற பிரச்சினைகளில் சற்றும் தயங்காமல் முதலில் செய்ய வேண்டிய வேலை செருப்பை கழட்டி நாலு சாத்து சாத்துவது தான். அது தான் சூழ்ந்திருக்கும் அமைதியை குலைக்கும்.

 34. இது போன்ற எண்ணற்ற மிருகங்கள் பேருந்து மட்டுமல்லாது அணைத்து போது இடங்களிலும் நிறைந்து உள்ளன.. கூட்ட நெரிசல் இவர்களுக்கு ஒரு சாதகமாகி விடுகிறது.

  கூட்டமாக இறங்கும் தருவாயில் பெண்களைப் பின்பக்கமாக கிள்ளிச் சென்று விடுவதும் நடக்கிறது. அந்த சமயங்களில் முகமறியாத எதிரியிடத்தில் எப்படி கோபத்தை வெளிப்படுத்துவது என்று பலரும் மெளனம் காக்கின்றனர். என்னைப் பொருத்தவரை நாம் கத்திக் கூச்சல் போடாமல் விடுவதுதான் இந்த நாய்களுக்கு அதிக துணிச்சலைத் தருகிறதாய் உணர்கிறேன்.

  ஒழுக்க விதிமுறைகளைப் பள்ளியில் போதித்துவிட்டு, கட்டற்ற பாலியல் வக்கிரங்களை அணைத்து ஊடகங்களிலும் கிடைக்கச் செய்வதில் எந்த மாற்றமும் நிகழ வாய்ப்பில்லை.

 35. ஒரு முறை நானும் என் தாயும் பேருந்தில் சென்றபோது நடந்த சம்பவம். ஒரு நடுத்தற வயது ஆண், எங்கள் பக்கவாட்டு இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு கல்லூரி பெண்ணுக்கு மிகவும் நெருக்கமாக நின்றுக்கொண்டிருந்தார். அதை கவனித்த என் தாய் சற்றே உரத்த குரலில் – “ஹலோ. கொஞ்சம் தள்ளி நில்லுங்க” என்று கூற எதோ சொல்லி சமாளிக்க முயன்ற அந்த ஆள், பின்னர் விலகி போய் விட்டான். அந்த பெண் என் தாய்க்கு நன்றிக் கூறி தனக்கு அவனை எதிர்கொள்ள பயமாக இருந்தது எனக் கூறினார். என் தாய் அந்த பெண்ணுக்குக் கூறியது – இது போன்ற ஆண்கள் முதலில் நெருக்கமாக நின்று பார்ப்பார்கள். நாம் எதிர்ப்பு தெரிவிக்காமல் ப்திலுக்கு பயத்தைக் காண்பித்தால் அடுத்தக் கட்டத்திற்கு போவார்கள். ஆகவே ‘தேவைக்கு அதிகமான’ நெருக்கத்தில் ஒருவர் இருப்பதாக தோன்றினால் அவரிடம் சற்று தள்ளி நில்லுங்கள் என்று மரியாதையாகவே சொல்லிவிடலாம். உண்மையில் தவறான எண்ணம் இல்லாதவர் மரியாதையுடன் கூறினால் விலகி நிற்பார். தவறான எண்ணம் கொண்டவன் திரும்ப நெருங்க தயங்குவான்.

  • தங்கள் தாயின் ஆளுமை, அந்த சூழ்நிலையை கையாண்ட விதம் போற்றப்படவேண்டும்.உன் செயல் எனக்கு ஏற்புடையதல்ல என்பதை ஆரம்பத்திலேயே சொல்லிவிடுவது பல அத்துமீறல்களை தடுத்துவிடும்.இந்தத்தெளிவு அனைத்துப் பெண்களுக்கும் வரவேண்டும்.பயப்படக்கூடாது.

 36. இம்மாதிரியான பாலியல் வன்கொடுமைக்கு சரியான அடி கொடுக்க நம் சமுகம் ஆணதிக்க நிலையில் இருந்து விடுபட வேண்டும்

 37. தோழர் உங்களுக்கு என் வாழ்த்துகள் !

  நீங்கள் அந்த தருணத்தில் எத்தனை மன உளைச்சலுக்கு ஆட்பட்டு இருந்த போதிலும், அவைகளை ஒதுக்கி தள்ளிவிட்டு, இந்த பதிவை பிறர் நலத்துக்காக எழுதியதற்கு நன்றி!

  அந்த கிழட்டு அளை போல அறுவருக்கதக்க செயலை, வாய்திறவாமல் மௌனம் சாதித்து செய்த வல்லவர்கள் உங்களுடன் அந்த பேருந்தில் பயணம் செய்தவர்கள். கண்டும் காணமல் இருந்துவிட்டால் நமக்கு நல்லது என்ற எண்ணம்.

  மற்றவரை போல் இல்லாமல் உறுதியோடு நீங்கள் போராடி இருப்பதை பார்த்தாவது அவர்கள் மாறினால் அவர்களுக்கு நல்லது.

 38. ஆணாதிக்க சமுதாயத்தின் இயல்பான, நேரடியான பிரச்சனைகளில் இதுவும் ஒனறு. இயல்பு என்பதற்காக அமைதி காக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதற்கெதிராக தொடர்ச்சியான போராட்டம் அவசியம். இங்கே பிரச்சினையாக இருப்பது சமூகத்தின் அமைதி. அந்த அமைதிக்குக் காரணம் பயம். அந்த பயத்திறகுக் காரணம் தைரியமின்மை. இந்த தைரியமின்மை ஏதோ பெண்களுக்கு மட்டும் இருக்கிறது என்பதல்ல. பெருமபான்மையான ஆண்களுக்கும் இருக்கிறது. இந்த தைரியமின்மைதான் விலை வாசி உயர்வை வெற்றுப் புலம்பலோடு ஏற்றுக்கொள்ளச் செய்கிறது. இந்தத் தைரியமின்மைதான் 8 மணி நேர மின் வெட்டை கேள்விக்கிடமற்ற முறையில் ஏற்றுக்கொளளச் செய்கிறது. ஆக இதற்கு வேண்டிய தைரியத்தை நாம் எங்கிருந்து பெறுவது? உழைக்கும் பாட்டாளி மக்களிடம் இது இயல்பிலேயே இருக்கிறது. மற்றவர்கள் இந்தத் தைரியத்தை புரடசிகர அரசியல் உணர்வின் மூலமே பெற முடியும். அந்தப் புரடசிகர உணர்வை அளிப்பதில் ம.க.இ.க போன்ற புரடசிகர இயக்கங்கள் பெரும்பங்காற்றுகின்றன. பல நேரங்களில் இவர்களின் சமரசமற்ற போராட்டஙகளைப் பார்த்து நான் வியந்திருக்கிறேன்.

 39. உன்னை மிகவும் பாராட்டுகிறேன் தோழி சிறு புழுவுக்கும் போராட தெரிகிறது நமது பெண்குலமோ மிகவும் மரத்துப் போய் உள்ளது இவரை போன்றவர்களுக்கு ஊசி வைத்தியம்தான் சரி நீ அதை முயற்ச்சித்திருக்கலாம்.

 40. அக்கா அந்த கிழடுக்கு ஊசியும், அவரை சுத்தி இருந்த நாதாரிகளுக்கு செருப்பாலையும் அபிஷேகம் செய்து இருக்கலாம். வாழ்த்துக்கள். உங்கள் தைரியம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு……..

 41. சேப்டி பின் -ஐ கொண்டு ஒரு நறுக் …திருடனுக்கு தேள் கொட்டியதைப்போல் திண்டாடிப்போயிருப்பான் .

 42. இது விவரம் தெரிந்த பெண்ணிற்கு நடந்த அருவருக்க தக்க செயல்… குழந்தைகளின் நிலை?? புரியுமா இந்த மிருகங்ளின் தேவை!!! பாதிக்கபடுவது அதிகம் குழந்தைகள் தான்… சமுதயாத்தை குற்றம் சொல்லி நமக்கு என்றும் மாலாது அம்மா.. அரைந்து இருக்க வேண்டிய தாமே.. வசவு தான் பாடி இருக்கின்றீர்.. பெண்ணிற்கு நமது சமூகம் தந்துள்ள இடம் மிக சொற்பம்.. காலின் மீது அசிங்கம் செய்த நாய் எனின்?? கல்லடி அல்லவா விழ வேண்டும்?? தோழர் உங்களுக்கே… அடிக்கும் தைரியம் வரவில்லை… அவர்கள் மந்தைகள் அம்மா… இனி நேர்ந்தால் செருப்பை ஆயுதமாக்கு… உனது அடி நிட்சயம் 1 பெண்ணையவாது பாதிக்கும்… அவளுக்கு இது போன்ற தருணங்களில் நீ குருவாகி போவாய்… மாற்றம் நிகழ வேண்டியது பெண்ணிடத்தே..

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க