privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்கறுப்புப் பணம்:அதிர்ச்சியூட்டும் உண்மைகள் ! பாகம் -2

கறுப்புப் பணம்:அதிர்ச்சியூட்டும் உண்மைகள் ! பாகம் -2

-

கறுப்புப்-பணம்-1

கறுப்புப் பணம் என்பது கட்டுக்கட்டாக சுவிஸ் வங்கியில் பூட்டி வைக்கப்பட்டிருப்பதைப் போலவும், அவற்றை அங்கிருந்து மீட்டு இந்தியாவுக்குக் கொண்டு வந்து, ஆளுக்கு ஒரு ஆயிரம் ரூபாய் கட்டைப் பிரித்துக் கொடுத்து வறுமையை ஒழித்து விடலாம் என்பது போலவும் ஊடகங்களால் ஒரு சித்திரம் தீட்டப்படுகிறது. கறுப்புப் பணம் பற்றி ஓயாமல் பேசப்பட்டு வருகிறது என்ற போதிலும், ஒரே ஒரு ரூபாய் கறுப்புப் பணத்தைக்கூட வெளிநாட்டு வங்கிகள் எதிலிருந்தும் இந்திய அரசு பறிமுதல் செய்ததில்லை.

வெளிநாட்டு வங்கிகளில் பணம் போட்டு வைத்திருப்பது யார்? “தெரியும், ஆனால் சொல்ல முடியாது” என்கிறார் பிரணாப் முகர்ஜி. தெரிந்தாலும் அந்தப் பணத்தைப் பறிமுதல் செய்ய முடியாது என்பதே உண்மை நிலைமை. அந்தப் பணம் இந்தியாவில் சம்பாதிக்கப்பட்டது என்றும், அதற்கு வரி கட்டவில்லை என்றும் அரசாங்கத்தால் ஒருவேளை நிரூபிக்க முடிந்தால், அதற்கான வரித்தொகையை மட்டும் வசூல் செய்யலாம். அவ்வளவுதான்.

கறுப்புப்பணம் என்பது உலக முதலாளி வர்க்கம் கணக்கில் காட்டாமல் கள்ளத்தனமாக மறைத்து வைத்திருக்கும் மூலதனம். இந்தக் கள்ளத்தனத்தைச் சட்டபூர்வமானதாக ஆக்குவதற்காகவும், கறுப்பை வெள்ளையாகக் காட்டுவதற்காகவும், பல சொர்க்கத்தீவுகளை உலக முதலாளி வர்க்கம் உருவாக்கி வைத்திருக்கிறது. இத்தீவுகளின் அரசுகள்,  உலக முதலாளித்துவ வர்க்கம், தனக்கென உருவாக்கி வைத்திருக்கும் முடியரசுகள்.

அத்தீவுகளிலிருந்து நம் நாட்டுக்குள்ளும் இங்கிருந்து அங்கும் தாவியபடி இருக்கும் மூலதனம் அங்கிருக்கும்போது கறுப்பாகச் சித்தரிக்கப்படுகிறது. இங்கே வரும்போது வெள்ளையாகத் தோற்றமளிக்கிறது  என்று இக்கட்டுரையின் முதற்பகுதியை முடித்திருந்தோம்.

வரியில்லா சொர்க்கங்களில் ஒன்றான கேமேன் தீவுகளில் பதிவு செய்யப்பட்ட ஹட்ச் டெலிகாம் நிறுவனத்தை வோடாபோன் நிறுவனம் வாங்கியது தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, எது கறுப்பு  எது வெள்ளை, எது வரி தவிர்ப்பு  எது வரி ஏய்ப்பு, எது இந்தியா  எது வெளிநாடு என்பன போன்ற  பல ‘தத்துவஞான‘ கேள்விகளுக்கான விடையைப் புரிந்து கொள்ளும் வாய்ப்பை வழங்கியிருக்கிறது.

“ஹட்ச்-எஸ்ஸார் லிமிடெட்” என்ற இந்திய டெலிகாம் நிறுவனத்தின்  67% பங்குகளை சொந்தமாகக் கொண்டிருந்த “ஹட்சின்சன் டெலிகாம் இன்டர்நேசனல்” என்ற பன்னாட்டு நிறுவனம், அவை அனைத்தையும் ரூ.52,300 கோடி ரூபாய்க்கு வோடாபோன் என்ற இன்னொரு பன்னாட்டு நிறுவனத்துக்கு 2007ஆம் ஆண்டில் விற்றது. இந்த விற்பனையின் தொடர்ச்சியாக இந்தியாவில் இயங்கிவந்த ‘ஹட்ச் தொலைபேசி’, வோடாபோன் என்று பெயர் மாற்றம் பெற்றது. ஹட்ச் நிறுவனத்தின் எல்லா இந்திய சொத்துகள் மீதான கட்டுப்பாடும் வோடாபோன் நிறுவனத்தின் கைக்கு மாறியது.

ஹட்ச் நிறுவனம் இந்தியாவில் இருக்கின்ற தனது சொத்துகளை வோடாபோன் நிறுவனத்திற்கு விற்று இலாபம் பார்த்திருப்பதால், அந்த விற்பனையின் மீது 11,000 கோடி ரூபாய் மூலதன ஆதாய வரியை (capital gains tax) விதித்தது வருவாய்த்துறை. மேற்கூறிய தொகையைப் பிடித்தம் செய்து தன்னிடம் ஒப்படைக்குமாறு வோடாபோன் நிறுவனத்துக்கும் உத்தரவிட்டது. வரியைக் கட்ட மறுத்த வோடபோன் நிறுவனம், இந்த சொத்து விற்பனை இந்தியாவுக்கு வெளியில் நடந்தது என்பதால், இதன் மீது வரி விதிக்க இந்திய வருவாய்த்துறைக்கு அதிகாரம் இல்லையென்று மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு செய்தது.

‘ஹட்சின்சன்எஸ்ஸார் என்ற இந்திய நிறுவனத்தின் 67% பங்குகளுக்கு உரிமையாளர், கேமேன் தீவுகள் என்ற நாட்டைச் சேர்ந்த சி.ஜி.பி. இன்வெஸ்ட்மென்ட்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம். அந்த சி.ஜி.பி நிறுவனம், ஹட்சின்சன் டெலிகாம் இன்டர்நேஷனல் (கேமேன்) ஹோல்டிங்ஸ் என்ற நிறுவனத்துக்குச் சொந்தமானது. அதுவும் கேமேன் தீவுகள் நாட்டைச் சேர்ந்தது. தற்போதைய விற்பனையில் கேமேன் தீவுகள் என்ற நாட்டைச் சேர்ந்த சி.ஜி.பி. நிறுவனத்தின் சொத்துகளான பங்குகள், வோடாபோனுக்கு விற்கப்பட்டிருக்கின்றன. இந்த பங்கு விற்பனைக்கும் இந்தியாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதன் மீது வரி விதிக்கும் அதிகாரம் இந்திய அரசுக்கு கிடையாது’ என்று வாதிட்டது வோடபோன் நிறுவனம்.

“பங்குகள் எந்த நாட்டின் நிறுவனத்துக்கு சொந்தமாக இருந்தாலும், இந்தப் பங்கு விற்பனையின் நோக்கம், மேற்படி நிறுவனத்துக்குச் சொந்தமான சொத்துக்களைக் கட்டுப்படுத்துவதுதான். இந்த விற்பனை மூலம் கட்டுப்படுத்தப்படும் சொத்துகளும், தொழிலும் இந்தியாவில்தான் இருக்கின்றன என்பதால், இங்கே வரியைக் கட்டத்தான் வேண்டும்” என்று செப். 2010இல் தீர்ப்பளித்தது மும்பை உயர் நீதிமன்றம்.

இத்தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது வோடபோன் நிறுவனம். காங்கிரசின் செய்தித் தொடர்பாளராக இருந்த அபிஷேக் மனு சிங்வி, ஹரிஷ் சால்வே போன்ற கார்ப்பரேட் வழக்குரைஞர்கள், இலண்டனிலிருந்து வந்து இறங்கியிருந்த சர்வதேச சட்ட வல்லுநர்கள் என்று ஒரு பெரும் கூட்டமே வோடபோன் நிறுவனத்துக்காக வேலை செய்தனர்.

ஜனவரி 20, 2012 அன்று தலைமை நீதிபதி கபாடியா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்சு,  மும்பை உயர் நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்து வோடபோனுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தது. ஹட்ச் நிறுவனத்துக்கும் வோடாபோனுக்கும் இடையிலான இந்தப் பரிவர்த்தனையின் நோக்கமே, இந்தியாவில் இருக்கும் ஹட்ச் டெலிகாமின் சொத்துகளையும் பங்குகளையும் அந்நிறுவனத்தின் மீதான கட்டுப்பாடு முழுவதையும் வோடாபோன் நிறுவனத்துக்கு மாற்றிக் கொடுப்பதுதான் என்பது தெளிவாகத் தெரிந்த போதிலும்,  இந்தியாவில் உள்ள சொத்துகள் கைமாறுவதற்கும் கேமேன் தீவுகளில் பங்குகள் கைமாறியதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றது உச்ச நீதிமன்றம்.

அது மட்டுமல்ல; கேமேன் தீவுகள் போன்ற வரியில்லா சொர்க்கங்களில் பன்னாட்டு நிறுவனங்கள் தமது ஹோல்டிங் நிறுவனங்களையும், லெட்டர் பேடு நிறுவனங்களையும் டஜன் கணக்கில் உருவாக்குவதன் நோக்கமே வரி ஏய்ப்புதான் என்ற போதிலும், அவ்வாறு லெட்டர் பேடு நிறுவனங்களை உருவாக்கி வரி ஏய்ப்பு செய்வதை, வரியைத் தவிர்க்கின்ற சட்டபூர்வ நடவடிக்கைதான் என்றும் கூறியது உச்ச நீதிமன்றத் தீர்ப்பு.

“இந்தியா போன்ற வளரும் பொருளாதாரங்களுக்கு அந்நிய நேரடி மூலதனம் தவிர்க்கவியலாமல் தேவைப்படுகிறது. இந்தியாவுக்குள் வருகின்ற அந்நிய மூலதனம் என்பது அநேகமாக வரியில்லா சொர்க்கங்களான தீவுகள் வழியாகவும், இந்திய அரசு இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் (Double taxation avoidance treaty) போட்டுக் கொண்டிருக்கின்ற நாடுகள் வழியாகவும்தான் வருகிறது. இவை இந்தியாவுக்குள் நுழையும் உலக வர்த்தகத்தின் முக்கியமான வழித்தடங்களாக அங்கீகரிக்கவும் பட்டிருக்கின்றன” என்று கூறியிருப்பதுடன், வோடாபோன் மீதான வரி விதிப்பை, ‘மூலதனத்தின் மீதான மரணதண்டனை’ என்றும் கண்டித்திருக்கிறார், மூன்று நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி ராதாகிருஷ்ணன்.

கறுப்புப்-பணம்ரூ.11,200 கோடி வரிப்பணத்தை அரசிடமிருந்து பறித்து வோடபோன் நிறுவனத்தின் கையில் ஒப்படைத்து விட்டது இந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு. இத்தீர்ப்பினை மேற்கோள் காட்டி, தாங்கள் ஏற்கெனவே வருமானவரித்துறைக்குக் கட்டியிருக்கும் சுமார் ரூ.40,000 கோடி வரிப்பணத்தை திருப்பித் தருமாறு கேட்டிருக்கின்றன பல பன்னாட்டு நிறுவனங்கள். இந்த தீர்ப்பு தோற்றுவித்திருக்கும் உடனடி நெருக்கடியை சமாளிக்கும் பொருட்டு, மீளாய்வு மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது மத்திய அரசு. அந்த மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

“இந்த தேசம் சூறையாடப்படுகிறது. சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து இதை நாங்களே விசாரிக்கப்போகிறோம்’ என்று கறுப்புப் பணம் தொடர்பான வழக்கில் குமுறி வெடித்தது உச்ச நீதிமன்றம். அரசாங்கமோ “இது எங்க ஏரியா, உள்ளே வராதே!” என்று நீதிமன்றத்தை எதிர்த்து மனு தாக்கல் செய்தது  அதெல்லாம் போன வருசம்! அவர்கள் வேறு நீதிபதிகள்!

இப்போது, “வரி தவிர்ப்பு என்பது மூலதனத்தின் அடிப்படை உரிமை என்றும், வரிவிதிப்பு என்பது மூலதனத்தின் மீதான மரணதண்டனை”  என்றும் (Capital Punishment on Capital Investment – Justice Radakrishnan)  வியாக்கியானம் செய்து வோடாபோனுக்கு வரிப்பணத்தைப் பிடுங்கிக் கொடுக்கிறது உச்ச நீதிமன்றம். “இந்தியா வரியில்லா சொர்க்கமல்ல, வருமான வரிச் சட்டத்தை முன்தேதியிட்டு திருத்தப்போகிறோம்” என்கிறது மத்திய அரசு  இது இந்த வருசம்! இவர்கள் வேறு நீதிபதிகள்!

ஆனால் அரசாங்கம் என்னவோ, அதே அரசாங்கம்தான். ஹட்ச், வோடாபோன் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் தமது வரி ஏய்ப்பு நடவடிக்கைகளை எப்படி நடத்தி வந்தனர் என்பது பற்றி இதுவரை ஒன்றுமே அறியாமல் இருந்துவிட்டு, இப்போதுதான் கண்டுபிடித்துள்ளதைப் போலப் பேசுகிறது மே 20ஆம் தேதியன்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி வெளியிட்டுள்ள கறுப்புப் பணம் தொடர்பான ‘வெள்ளை அறிக்கை’.

“மொரிசியஸ், கேமேன் தீவுகள், பிரிட்டிஷ் வர்ஜின் தீவுகள் ஆகியவற்றில் இருந்த பல லெட்டர் பேட் கம்பெனிகளைத் (Post Box Companies) தனது கிளை நிறுவனங்களாகக் காட்டி, அவை மூலம் 1992 முதல் 2006 வரை ஹட்சின்சன் குழுமம் இந்தியாவில் முதலீடு செய்தது. பின்னர் கேமேன் தீவுகளில் அந்நிறுவனம் வைத்திருந்த லெட்டர் பேட் கம்பெனி ஒன்றின் மூலமாக தனது இந்தியத் தொழில் முழுவதையும் வோடபோனுக்கு விற்றுவிட்டது” என்று கூறி கார்ப்பரேட் பித்தலாட்டத்தை அம்பலப்படுத்துவதைப் போல நாடகமாடுகிறது, பிரணாப் முகர்ஜியின் வெள்ளை அறிக்கை. எதற்காக இந்த நாடகம்?

தற்போதைய உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் விளைவாக அரசு இழந்திருக்கும் 11,200 கோடி ரூபாய் என்பது மிகப்பெரிய தொகை என்பதனாலும், வோடாபோன் வழக்கில் அரசு சந்தித்திருக்கும் இமாலயத் தோல்வி, கார்ப்பரேட் நிறுவனங்களுடன் இந்த அரசு வைத்திருக்கும் கள்ளக் கூட்டை அம்பலப்படுத்திவிடும் என்பதனாலும்தான் இந்த நீதிமன்றத் தீர்ப்பைக் கண்டு அதிர்ச்சி அடைந்திருப்பதைப் போல நடிக்கிறது அரசு.

“தங்கள் செயல்பாடுகளைக் கறுப்புப் பணத்துடன் தொடர்புபடுத்தி பேசியிருப்பது தங்கள் நிறுவனத்தையே கேவலப்படுத்துவதாக இருக்கிறது” என்று கூறியிருக்கிறார், வோடாபோன் நிறுவனத்தின் சி.இ.ஓ. விட்டோரியோ கொலாவ். வோடபோன் நிறுவனத்தின் வக்கீலான ஹரிஷ் சால்வே, மன்மோகன் சிங்கை சந்திக்கு இழுத்திருக்கிறார். “தீர்ப்பு உங்களுக்கு எதிராக அமைந்து விட்டால், முன் தேதியிட்டு சட்டத்திருத்தம் ஏதும் கொண்டுவருவீர்களா?” என்று மன்மோகன் சிங்கிடம் கேட்டாராம் அன்றைய பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுன். “நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பை அரசு அமல்படுத்தும்” என்று அவருக்கு வாக்கு கொடுத்திருந்தாராம் மன்மோகன் சிங். “கேவலம் 11,200 கோடி ரூபாய்க்காக ஒரு பிரதமர் தான் கொடுத்த வாக்கை மீறலாமா? நம்முடைய தேசத்தைப் பற்றி உலகம் என்ன நினைக்கும்?” என்று துடிக்கிறார் ‘தேசபக்தர்’ சால்வே.

வோடாபோனுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை முடக்கும் விதத்தில் முன்தேதியிட்ட  சட்டமொன்றைக் கொண்டு வர முயன்றால், இந்திய அரசின் மீது வழக்கு தொடுத்து சர்வதேச தீர்ப்பாயத்திற்கு இழுப்போம் என்று கூறியிருக்கிறது வோடபோன் நிறுவனம்.

கறுப்புப் பணத்தையும் கார்ப்பரேட் மோசடியையும் நியாயப்படுத்தும் விதத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிவிட்டதால், அதனைச் சரி செய்வதற்கு போராடிக் கொண்டிருப்பதைப் போன்றதொரு தோற்றத்தைக் காட்டி வருகிறது அரசு. அவ்வளவே!  வோடாபோன் தீர்ப்பை வழங்கிய மாண்புமிகு நீதிபதிகள், கார்ப்பரேட் கொள்ளையை நியாயப்படுத்திப் பேசுவதில் தங்களையே விஞ்சி விட்டது குறித்து அலுவாலியாவும் சிதம்பரமும் மகிழ்ந்திருப்பார்கள் என்பதே உண்மை.

அவ்வப்போது சில நீதிபதிகள், கார்ப்பரேட் கொள்ளையைக் கட்டுப்படுத்தும் விதத்திலான தீர்ப்புகளை வழங்கியிருக்கிறார்களெனினும், இந்தக் கொள்ளையை நியாயப்படுத்துவதற்கான வாய்ப்பைத்தான் சட்டங்கள் வழங்கியிருக்கின்றன. வரி ஏய்ப்பு உள்ளிட்ட கிரிமினல் நடவடிக்கைகள் அனைத்தையும் படிப்படியாகச் சட்டபூர்வமானவையாக்கி வருகின்றது  தாராளமயக் கொள்கை.

கறுப்புப்-பணம்

பிரணாப் முகர்ஜி வெளியிட்டிருக்கும் கறுப்புப் பணம் குறித்த வெள்ளையறிக்கை 2000 முதல் 2011 வரையிலான காலத்தில் இந்தியாவுக்குள் வந்துள்ள அந்நிய முதலீடுகளில் 41.80% மொரிசியஸிலிருந்தும், 9.17% சிங்கப்பூரிலிருந்தும் வந்திருக்கின்றன என்ற உண்மையை இப்போதுதான் கண்டுபிடித்ததைப் போல குறிப்பிட்டிருப்பதுடன், இது இந்திய முதலாளிகளின் கறுப்புப் பணம், ஞானஸ்நானம் பெற்று வெள்ளைப் பணமாகவும், அந்நிய மூலதனமாகவும் இந்தியாவுக்குள் நுழைவதற்கான ஒரு கொல்லைப்புற வழியாகவும் மாறிவிட்டதாகக் கூறுகிறது.

மொரிசியஸ், கேமேன் தீவுகள்  உள்ளிட்ட பல வரியில்லா சொர்க்கங்களுடன், இந்திய அரசு இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் செய்து கொண்டிருப்பதே, பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்வதற்கும், கறுப்பை வெள்ளையாக்குவதற்குமான வாய்ப்பை இந்தியத் தரகு முதலாளிகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் வழங்குவதற்காகத்தான்.

மொரிசியஸின் மக்கட்தொகை வெறும் 12 இலட்சம். இந்த சுண்டைக்காய் நாட்டில் இந்தியத் தரகு முதலாளிகள் முதலீடு செய்வதற்கோ, இலாபம் ஈட்டுவதற்கோ எதுவும் இல்லை. மேலும் அந்த நாடு, முதலீட்டு ஆதாய வரி உள்ளிட்ட வரிகள் ஏதும் இல்லாத வரியில்லா சொர்க்கம் என்பதால், அங்கே வரிவிலக்கு கோருவதற்கான தேவையும் இல்லை. ஆக, பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் இந்தியத் தரகு முதலாளிகளுக்கு இந்தியாவில் வரிவிலக்கு அளிக்கும் ஒரே நோக்கத்துக்காகத்தான் இந்த ஒப்பந்தமே உருவாக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ் மொரிசியஸ் தீவின் குடியிருப்போராக சான்றிதழ் பெற்று (Tax Residency Certificate), அதன் பின்னர் அங்கே ஒரு லெட்டர் பேடு கம்பெனியைத் தொடங்கி, அக்கம்பெனியின் பெயரில் இந்தியாவில் முதலீடு செய்து ஆண்டு தோறும் பல்லாயிரம் கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்து வந்தன பன்னாட்டு நிதி நிறுவனங்கள்.

கறுப்புப்-பணம்இந்த அநீதியைக் காணப் பொறுக்காத சில வருமான வரித்துறை அதிகாரிகள், மூலதன ஆதாய வரியையும், வரி செலுத்த தவறியதற்கான அபராதத்தையும் செலுத்துமாறு, 2000வது ஆண்டில் பன்னாட்டு நிதி நிறுவனங்களுக்குத் தாக்கீது அனுப்பினர். மறுகணமே மும்பை பங்குச் சந்தை கிடுகிடுக்கத் தொடங்கியது. இந்தியாவிலிருந்து வெளியேறப்போவதாக அந்நிய முதலீட்டாளர்கள் அரசை அச்சுறுத்தினர். உடனே, அன்றைய பா.ஜ.க. அரசின் நிதியமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்கா, “மொரிஷியஸில் பதிவு செய்த கம்பெனிகள் எவையும் இந்தியாவில் வரி செலுத்தத் தேவையில்லை” என்று நேர்முக வரிகளுக்கான மத்திய வாரியத்தின் (Central Board of Direct Taxes) சார்பில் சுற்றிக்கை அனுப்பி, வரி வசூல் நடவடிக்கைகளை நிறுத்தினார்.

இந்தச் சுற்றறிக்கையை எதிர்த்து ‘ஆசாதி பச்சாவோ ஆந்தோலன்’ என்ற அமைப்பு டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தொடுத்தது. மேற்கூறிய சுற்றறிக்கை, “இந்திய வருமான வரிச்சட்டத்துக்கு எதிரானது என்றும், இரட்டை வரி விதிப்பை தவிர்ப்பது என்ற பெயரில் வரி ஏய்ப்பை ஊக்குவிப்பது” என்றும் கூறி, அதனை ரத்து செய்தது டெல்லி உயர் நீதிமன்றம்.

உடனே, இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த பா.ஜ.க. அரசு, “அந்நிய முதலீடுகளை இந்தியாவுக்கு ஈர்க்க வேண்டுமானால் இத்தகைய சலுகைகளைக் கொடுத்தே  ஆகவேண்டும்” என்று வாதிட்டது. மேற்கூறிய இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தை வரி ஏய்ப்பாகக் கருத முடியாது என்றும், அது வரியைத் தவிர்க்கின்ற சட்டபூர்வமான நடவடிக்கைதான் என்றும் தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம்.

இதுவும் போதாதென்று, மார்ச் 2003 க்குப்பின் வாங்கி விற்கப்படும் பங்குகள், பத்திரங்கள் மீதான மூலதன ஆதாய வரியை ரத்து செய்வதாக 2003-04 பட்ஜெட்டில் அறிவித்தார் யஷ்வந்த் சின்கா. 2004இல் ஆட்சிக்கு வந்தது காங்கிரசு.  பங்குப் பத்திரங்கள் மீதான மூலதன ஆதாய வரியை முற்றிலுமாகவே ரத்து செய்வதாக அறிவித்தார், ப.சிதம்பரம்.

கார்ப்பரேட் முதலாளிகளுக்குச் சிறிய சிராய்ப்பு ஏற்படும் வகையில் ஒரு சிறிய நீதிமன்றத் தீர்ப்பு வந்தாலும், உடுக்கை இழந்தவன் கை போல, விரைந்து சென்று இடுக்கண் களைந்த காங்கிரசும் பா.ஜ.க.வும்தான் கறுப்புப் பணத்துக்கு எதிராகச் சண்டமாருதம் செய்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தரகு முதலாளிகளுக்கும் 4,5 இலட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வரித்தள்ளுபடிகளை வாரி வழங்கும் இந்த அரசுதான், வரியில்லா சொர்க்கங்களின் வழியாக நடத்தப்படும் மறைமுகமான வரி ஏய்ப்பு நடவடிக்கைகளைத் தடுப்பதற்கு சட்டமியற்றப் போவதாகவும் கறுப்புப் பணத்தை முடக்கப் போவதாகவும் கூறி வருகின்றது.

(தொடரும்)

_______________________________________________

புதிய ஜனநாயகம், ஜூன் – 2012

________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

 1. பத்து வருஷமா எவ்ளோன்னு கண்டுபுச்ட்டோம்….லிஸ்ட் வந்துர்ச்சு…மீட்ருவோம்ன்னு டுமீல் வுட்டுகுனே இர்ந்தா போட்டவன் எல்லாம் எப்பவோ எட்துர்ப்பானே இப்ப இன்னாத்த போய் எட்க போரான்வோ?ஒண்ணுமே ப்பிர்லபா

 2. People are coming up with more and more ingenious ways to give black money the stamp of respectability. For instance, dark pool trading.
  (http://en.wikipedia.org/wiki/Dark_liquidity#Dark_pools). Singapore is a hub for such trading.

  Investment banks also trade in billions of dollars every day, buying and selling foreign exchange for clients and converting all their black money into white.

  Many “IT” and “software” companies in Singapore are just fronts for Indian firms to launder their ill-gotten gains. These companies usually have a couple of staff but plenty of capital, and actively invest in real estate (helping create another bubble).

  Many companies have now started paying their top and middle level executives in cash outside India, so that it is not taxable. (This is why so many executives and managers fly out to all corners of the world to attend seminars, conferences, etc.) The govt has also made it easy for people to bring back dollars into the country without being asked any questions—it’s like legal hawala.

 3. இந்த அநியாயத்தை கேக்குறதுக்கு யாருமே இல்லையா…. அன்னைக்கும் நாம அடிமை பட்டுதான் இருந்தோம் இப்பவும் அதே நிலைமயா…. யார் சொத்தை யாருக்கு விற்பது.. நீ யாருடா .. எங்க நாட்டு சொத்தை வேற யாருக்கோ விற்பது அதுவும் எந்த ஒரு தடையும் இல்லாம … இன்னொரு போரரட்டம் தேவை….. உங்களுக்கு என்ட வேணும் ஏன் டா இப்படி சாகடிகிறீங்க …

 4. அப்ப கறுப்பு பணம் வராதா…கறுப்பு பணம் அம்புட்டும் வந்துடும், இந்தியா வல்லரசு ஆகிடும்னு நெனைச்சேன்.எளிமையான,கருத்தான கட்டுரை.வாழ்த்துக்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க