Sunday, December 1, 2024

ஐந்தாம் ஆண்டில் வினவு!

-

ஐந்தாம் ஆண்டில் வினவு

2008 ஜூலை 17-ல் ஆரம்பிக்கப்பட்ட வினவு தளம் இன்றிலிருந்து ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. நான்காண்டு அனுபவத்தை எடை போட்டு என்னவென்று எழுதுவது?

ஒரு பொருள் அல்லது நிகழ்வின் இயக்கத்தை, அந்த இயக்கம் தோற்றுவிக்கும் மாற்றத்தை அளவிடும், புரிந்து கொள்ளும் அளவுக்கு காலக்கணக்குத் தேவைப்படுகிறது. இதன்றி நாளும், கோளும், வருடப் பிறப்பும், பிறந்த நாள் கொண்டாட்டங்களும் என்ன செய்து விட முடியும்?

பொருளைப் பேசுவதற்கு முன்னர் புள்ளிவிவரங்களை பார்த்து விடலாம்.

பதிவுகள் – 1434
மறுமொழிகள் – 58,439
பார்வையாளர்கள் – 59 இலட்சம்
மின்னஞ்சல் சந்தாதாரர்கள் – 3507
பேஸ்புக்   5000
பேஸ்புக் பக்கம்  3718
ட்விட்டர் – 2848
கூகிள் பிளஸ் – 4106

இந்த நான்காண்டு பயணத்தில் வினவு அடைந்திருக்கும் இடத்தினை இந்த எண்ணிக்கைகள் தெரிவிக்கின்றன. என்றாலும் எண்ணிக்கைகள் மட்டும் உண்மையினை உரைப்பதில்லை. அந்த எண்கள் இணைந்து இசைக்கும் வரலாற்றுணர்வை மீட்டிப் பார்ப்பதற்கு கணக்கு மட்டும் போதுமானதல்ல.

சமூக மாற்றம், புரட்சி எனும் பேரியக்கத்தின் திசையில் நமது பௌதீக வெளிப்பாடு – அது எத்தனை சிறியதாக இருந்தாலும் எத்தனை அடி நகர்ந்திருக்கிறது, தடுமாறியிருக்கிறது, சோர்ந்திருக்கிறது, உற்சாகத்தைப் பெற்றிருக்கிறது என்பதை செயலூக்கமுள்ள நடைமுறையின் உதவியோடு அசை போட்டுப் பார்ப்பது முக்கியம். இத்தகைய ஆண்டு தினங்களில் சொந்த வாழ்க்கை அல்லது கட்சி வாழ்க்கை குறித்து தோழர்கள் இவ்வாறுதான் பரிசீலனை செய்வார்கள். ‘தீ.கம்யூனிஸ்டான’ வினவும் தனது பிறந்த நாளை அப்படி பகுத்துப் பார்க்கிறது.

கருணாநிதியின் குடும்ப ஆட்சி உச்சத்திலிருக்கும் போது நடத்தப்பட்ட மகுடாபிஷேகம் செம்மொழி மாநாடு. பேரரசனது தர்பாரை எதிர்க்கத் துப்பற்று முன்னாள் பேரரசியின் அ.தி.மு.க வினரெல்லாம் அறிக்கை எதிர்ப்போடு அடங்கிய நேரத்தில், தோழர்கள் கோவை உள்ளிட்டு தமிழகம் முழுவதும் சீறிப்பாய்ந்தார்கள். கைது, சிறை, வழக்கு பாய்ந்தன. அப்போது வினவில் வந்த கட்டுரைகள் குறித்து தொலைபேசியில் பேசிய வாசகர் ஒருவர் கேட்டார்,” இதுனால உங்களுக்கு ஏதும் ஆபத்தில்லையா?”.

பார் போற்றும் கண்ணியத்துக்குரிய பொருளாதார மேதை மன்மோகன் சிங்கை நிலக்கரித் திருடன் என்று கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்ட கட்டுரையை வாசித்திருப்பீர்கள். இந்திய அரசாங்கத்தின் பிரதமரையே இப்படி அழைப்பதை எப்படி விட்டு வைத்திருப்பார்கள் என்று கூட சிலருக்குத் தோன்றலாம். எனினும் முன்பை விட இந்தக் கோணத்தில் வினவை பார்ப்பவர்கள் தற்போது குறைவுதான். ஒரு விதத்தில் ஊழலும், அநீதியும் நாள்தோறும் பூத்துக் குலுங்கும் வேளைகளில் அதிகார மட்டங்களை அப்படி கேள்வி கேட்பது ஒன்றும் தவறில்லை என்று கூட சூழல் கொஞ்சம் இன்று மாறியிருக்கலாம்.

வினவின் ஆரம்ப மாதங்களில் தொடர்பு கொண்ட ஒரு பிரபல ‘அதிரடி’ பதிவர் – தற்போது அதிகம் எழுதுவதில்லை – ஒரு செய்தியினைக் கூறினார். வினவு கட்டுரைகளில் அவர் அவ்வப்போது பின்னூட்டமிடுவதை கண்காணித்த ஒரு பதிவர் எச்சரித்தாராம்: ” அவங்களெல்லாம் தீவிரவாதிகளாயிற்றே, ஏன் சகவாசம் வைத்துக் கொள்கிறீர்கள்?” இந்த எச்சரிப்பின் சொந்தக்காரர் ஓய்வு பெற்ற ஒரு அதிகாரி, பார்ப்பனர், கொஞ்சம் சி.பி.எம் அரசியலை ஆதரிப்பவர் என்பதெல்லாம் தற்செயலான உண்மைகள் மட்டுமல்ல. பின்னூட்டங்களில் கருத்தைச் சொல்வது கூட அது ஆதரித்தோ, எதிர்த்தோ இருப்பினும் வினவோடு அணிசேரும் நபராகவே இத்தகைய பெரியண்ணன்கள் கண்காணித்துக் கொண்டிருந்தார்கள்.

காலம் மாறிவிட்டது. தற்போது அப்படி பின்னூட்டம் இடுபவர்களை இந்தப் பெரியண்ணண்கள் எச்சரிக்க விரும்பினாலும் அவையெல்லாம் வயசு காலத்தில் பேசும் ஒரு பெரிசின் புலம்பலாகவே எடுத்துக் கொள்ளப்படும். இளைமையின் சொந்தக்காரர்களை முதுமையின் தவிப்பு முடக்கி விடுமா என்ன? விதவிதமான சமூக, அரசியல், பண்பாட்டு பிரச்சினைகளுக்கு அகத்திலும், புறத்திலும் மாற்றத்தை தீடும் இளமைத் துடிப்பான மார்க்சியத்தின் புத்தாக்க சிந்தனையை நிலவுகின்ற சமூக அமைப்பின் தேங்கிப் போன சிந்தனையையும் நடைமுறையையும் விடாமல் பற்றி வாழும் முதியவர்கள் புலம்பலாகத்தான் கரிக்க முடியும்; வெறுக்க முடியும்; நிச்சயமாக வேரறுக்க முடியாது.

வினவின் ஆரம்ப வருடங்களிலேயே காத்திரமாக எழுதக்கூடிய பதிவர்கள் கொஞ்சம்தான் இருந்தனர். தற்போது பலர் பதிவுகளை எழுதுவதில்லை. முன்னாள் பதிவர்களும், இலக்கிய குருஜிக்களும், கூகிள் ப்ளசிலும், ட்விட்டரிலும் ‘அறிவார்ந்த அரட்டை’ என்ற பெயரில் ஒதுங்கி விட்டனர். அதிலும் பழையவர்கள் மெல்ல மெல்ல ஓய்வு பெற்றுக் கொள்ள, அவர்களது அடியொற்றியபடியே புதியவர்கள் ஆக்கிரமித்துக் கொள்கிறார்கள். அரசியலும், இலக்கியமும், திரைப்படமும் சென்சேஷன் தரத்திலேயே பரிமாறிக் கொள்ளப்படுகின்றன.

இடைக்காலத்தில் சூடுபிடித்த முகநூல் – ஃபேஸ்புக் அறிவுஜீவிகளுக்கும் கருத்துரிமையாளர்களுக்கும் கருத்தாழமற்ற உரையாடலை கற்றுக் கொடுத்து ஏதோ கொஞ்சம் வாழ வைக்கின்றது. முகநூலில் நான்கு வரியில் பகிறப்படும் நிலைச்செய்தியினைத் தாண்டி வாசிப்பதற்கு விருப்பமற்ற மனங்களோடு அவர்கள் காலந்த தள்ள வேண்டிய நிலையில் வினவு அப்படி மாறியோ, சோர்ந்தோ வீழ்ந்து விடவில்லை. அரசியலை மேலும் மேலும் ஆழமாக கற்றுக் கொள்ளும் நெடிய கட்டுரைகளோ, நீண்ட விவாதங்களோ வினவில் மட்டும்தான் அரங்கேறுகின்றன.

ட்விட்டரிலும், முகநூலிலும் அறிமுகமாகி அரசியல் ஆர்வத்தோடு தேடி வரும் நண்பர்களை நாங்கள் வினவு தளத்திற்குள் அழைத்துச் செல்கிறோம். வாசகரையும் வாசிப்பையும் உயர்த்துதல் எங்களது நோக்கமாக இருக்கிறது. ஆனால் பின்நவீனத்துவ அறிஞர்கள், இலக்கியவாதிகள், சிறுபத்திரிகைகாரர்கள், பத்திரிகையாளர்கள், அரசியல் கட்சி ஆர்வலர்கள் அனைவரும் தங்களது ‘அறிவார்ந்த’ படைப்புகளை ஆளில்லாத டீக்கடையில் ஆறவிட்டுவிட்டு சூடான பாப்கார்ன் கடையில் வார்த்தைகளை கொறித்துக் கொண்டிருக்கிறார்கள். பொதுவான வாசக வெளிக்கு பாப்கார்னே போதுமானது என்றாகி விட்டது.

தமிழின் அரசியல் தளங்களில் வினவு முன்னணியில் இருக்கிறது என்பது ஒரு நெடிய போராட்டத்தின் விளைவே அன்றி யாரோ மனமிறங்கி அருளிய ஒன்றல்ல. அரசியல், பண்பாட்டு கருத்துப் போராட்டங்களில் அமெரிக்கா துவங்கி தமிழுலகின் பதிவர் வரை தலையிட்டு பேசுகிறோம். யாரையும் அறிவின் மேட்டிமைத்தனத்தோடு அணுகி விவாதிப்பதில்லை. அவர்கள் பயன்படுத்தும் ஆயுதத்தையே அடிப்படையாக்கி உரையாடுகிறோம். ஒரு பிரச்சினையில் எங்களோடு வேறுபடுபவர்கள் கூட பிறிதொன்றிலோ, பலவற்றிலோ ஒன்றுபடுவார்கள். இந்த ஐக்கியமும், போராட்டமும் தொடர்ந்து நடப்பதற்கேற்ப வாசகர்கள் வளருகிறார்கள். அது சாத்தியப்படுகிறது, இல்லை என்பதை பகுத்தாய்வதற்கேற்ப நாங்களும் வளர்கிறோம். இதுதான் வினவு.

எனினும் வினவை நடத்துவதற்கு நோக்கமென்ன? ஓய்வு பெற்ற பதிவர்களைக் கேட்டால் “ஆள் பிடிப்பதற்கு” என்பார்கள். பல்துறை பார்வை, படைப்புக்களால் நிரம்பி வழிந்த தமிழ்ப் பதிவுலகை அரசியல் கருத்தின்பாற்பட்டு ஒரு தனிக் கோஷ்டியை உருவாக்கி பிரித்து விட்டார்கள் என்று கூட அவர்கள் முன்பு பேசிவந்தார்கள். ஆள் பிடிப்பதும், அணி சேர்ப்பதும் ஏதோ அநாகரிகமான ஒன்று என்று கருதும் அளவுக்கேற்ப அவர்களது அரசியலின் இடம் தீர்மானிக்கப்படுகிறது. மற்றபடி ஆள் பிடிப்பதும், அணிசேர்ப்பதும், சேர்த்த அணியை நடைமுறையில் இறக்கி விடுவதும்தான் எங்களது நோக்கம் என்பதை பகிரங்கமாகவே தெரிவிக்கிறோம்.

ஆனால் புரட்சி, சமூக மாற்றம் என்ற நோக்கத்திற்காக நாங்கள் ஆள்பிடிக்கும் செயல் மற்ற பிரிவினரிடத்தில் காரணங்கள் மாறுபட்டாலும் இல்லாமல் போய்விடுகிறதா என்ன? அநேக இணைய தளங்களில் இருக்கும் விளம்பரங்கள் ஆள் பிடிப்பதற்காகத்தான் காத்திருக்கின்றன. நீங்களே விரும்பவில்லை என்றாலும் தினமணியில் ஒரு செய்தியை அழுத்திய மாத்திரத்தில் அந்த ஆள்பிடிப்பு நிறுவனங்களுக்குள் விழுந்து விடுகிறீர்கள். உங்களது ஒரு கிளிக் அவர்களுக்கு வர்த்தகம். கேட்காமல் வந்து விழும் அந்த விண்டோவை நீங்கள் பார்த்து விட்டால் இலாபம். இணையத்திலோ, சமூகவெளியிலோ யார்தான் ஆள் பிடிக்கவில்லை?

இணையத்தில் கட்டற்ற சுதந்திரம் இருப்பதாக கூறுப்படுவது ஒரு மாயை. யூ டியூபில் உங்களுக்கு பிடித்த பாடலை கேட்கும் சுதந்திரத்தினோடு கூடவே தொடர்புடைய இடுகைகள் மற்றும் அடிக்குறிப்பு விளம்பரங்கள் உங்களது திசையை தீர்மானிக்கின்றன. இறுதியில் உங்களது தேடல், ஆர்வம், இடம் எல்லாம் ‘அவர்களால்’ தீர்மானிக்கப்படுகின்றன. ஊடகங்கள் உருவாக்கி இருக்கும் பரபரப்பு மலினம் கலந்த செய்தி நாட்டத்தைத்தான் இணைய தந்தியான தட்ஸ்தமிழ் ஒரு ஃபார்முலாவாக தயாரித்து வெளியிடுகிறது. அந்த தளத்தில் படிப்பவற்றை நீங்கள்தான் தீர்மானிக்கிறீர்கள் என்றால் அது நகைக்கத்தக்கதா இல்லையா?

அதனால்தான் முகநூல், ட்விட்டர், பதிவர்கள் உள்ளிட்ட இணைய சூழிலில் இருப்பதாக கூறப்படும் இணையப் புரட்சியில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. சரியாகச் சொன்னால் இணையத்தில் புரட்சியெல்லாம் துளியும் சாத்தியமில்லை. எகிப்திலும், துனிஷியாவிலும் இருந்தாக கொஞ்சம் கற்பனை கலந்து கூறப்பட்ட இணையப் புரட்சியின் அபத்தத்தை அதாவது புரட்சியின்  வீழ்ச்சியை தற்போது பார்க்கிறோம். கணினியில் விசைப்பலகையின் உதவி கொண்டு புழங்கப்படும் ஒரு மாய உலகம் எங்ஙனம் புரட்சியை உருவாக்க முடியும்?

இணையத்தில் ஒரு பதிவரோ, டிவிட்டரோ, பேஸ்புக்கில் சாதனை இலக்கான 5000 நண்பர்களை எட்டிய நட்சத்திரங்களோ தங்களுக்குத் தோன்றிய கருத்தை எழுதும் சுதந்திரம் இருப்பதாக கூறலாம். நல்லது, உண்மையில் அப்படி ஒரு சுதந்திரம் இருப்பதாக வைத்துக் கொண்டாலும் அது குறித்த அங்கீகாரத்தை யார் வழங்குவது? அல்லது உங்களது சுதந்திரம் என்ன நடைமுறையை பொதுவெளியில் உருவாக்கி விட்டது? ஒரு ட்ராபிக் போலீஸ் கான்ஸ்டபிளிடம் கூட நான் பிரபல முகநூல் நட்சத்திரம் என்று கூறி அபராதத்தை கட்டாமல் தப்பித்துக் கொள்ளும் சாத்தியம் உண்டா? அதற்கு வட்டச் செயலாளர், ஏன் தலயின் ரசிகர் மன்றத் தலைவர் கூட கூடுதலான அதிகாரத்தைக் கொண்டிருக்கிறார்கள்.

அதன்படி சமூகப் பெருவெளியில் சிறியதாகவோ, பெரியதாகவோ செய்யப்படும் நடைமுறைதான் நமது சுதந்திரத்தை தீர்மானிக்கின்றன. ஆதிக்க சாதியின் அதிகாரம் தொழிற்படும் கிராமங்களில் அம்பேத்காரை பேசுவதற்கும் இணையத்தில் பாதுகாப்பாக இருந்து கொண்டு சாதி ஒழிப்பு போராளியாகக் காட்டிக் கொள்வதற்கும் பாரிய வேறுபாடுகள் உண்டு. முன்னதில் அடி, உதை, சிறை, வழக்கு எல்லாம் உண்டு. பின்னதில் நூறு லைக்கும், ஐம்பது ரீஷேரும், 55 மறுமொழிகளும் உண்டு. முன்னதில் ஈடுபடும் ஒருவர் சாதி ஒழிப்பின் வலி நிறைந்த பாதையை கண்டறிந்து அதில் முன்னேறும் போராட்டத்தை கற்றுக் கொள்கிறார். பின்னதில் ஈடுபடும் ஒருவர் தன்னைத்தானே தளபதியாக நியமித்துக் கொண்டு ஃபேஸ்புக்கின் உதவியால் போராளியாக சுய இன்பம் காணுகிறார்.

இணையத்தின் சாத்தியத்தில் காதலித்தோர் பலர் இருக்கலாம். ஆனால் சாதிவெறியும், பார்ப்பனியமும் கோலேச்சும் சமூகத்தில் அதை எதிர் கொண்டு வாழ்வதற்கு இரத்தமும், சதையுமாய் இருக்கும் நடைமுறை போராட்டத்தில் இறங்க வேண்டும். இணையம் ஒருவரை தெரிவு செய்வதற்கு வேண்டுமானால் உதவலாம். ஆனால் உங்களது சமூக நடைமுறையின் தரம்தான் அதை செய்து காட்டுவதற்கு நிபந்தனை. அந்த நிபந்தனையை சொந்தப் புரிதலில் செரித்துக் கொண்டு களமிறங்குவதற்கு மெய்யுலகோடு வினை புரிய வேண்டும்.

கார்ப்பரேட் ஊடகங்கள் உருவாக்கி வரும் சிந்தனை முறைதான் இணையத்திலும் செல்வாக்கு செலுத்துகிறது, செலுத்த முடியும். சான்றாக அம்பேத்கார் கார்ட்டூன் விவகாரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். பள்ளிக்கூடப் புத்தகத்தில் அம்பேத்கரை இழிவு படுத்திவிட்டார்கள் என்று கண்டுபிடிக்கப்பட்ட இந்த நாட்களில்தான் பதனிடோலா தீர்ப்பு வந்திருக்கிறது. ரன்பீர் சேனாவின் கொலைகாரர்களை விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். பீகாரின் மண்ணில் தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்டம் இந்திய நீதிமன்றங்களால் கொலை செய்யப்பட்ட இந்த செய்தி எத்தனை இணைய புலிகளை அசைத்திருக்கிறது?

ஆக அம்பேத்காரையோ, திராவிட இயக்கத்தையோ கேலிச் சித்திரத்தில் இழிவு படுத்திவிட்டார்கள் என்ற பரபரப்பு வெறும் அடையாள அரசியல்தான். அதில் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மக்கள் நடுத்தர வர்க்கமாகி நிலைபெற்றுவிட்ட தருணத்தில் அவர்களது அரசியல் நடைமுறையாக இத்தகைய மேம்போக்கான செய்திகள் மாற்றப்படுகின்றன. இதன் உச்சத்தை அண்ணா ஹசாரேவில் கண்டோம். கார்ப்பரேட் முதலாளிகளின் நலனை, ஊழலை மறைத்து விட்டு வெறும் கலெக்டர் ஆபிஸ் குமாஸ்தாவின் லஞ்சம் மாபெரும் பிரச்சினையாக முன்வைக்கப்பட்டது. மாஃபியாவுக்கு நிகரான லீலைகள் புரிந்து முதலாளியான ரிலையன்சின் பிச்சைக் காசை வைத்து அமீர் கானின் இந்திய சோகங்கள் சத்யமேவ ஜயதே வழி மலிவாக நடுத்தர மக்களை அழவைக்கின்றன.

ஆக இணையத்தின் கட்டற்ற சுதந்திரம் என்பதெல்லாம் இத்தகைய திட்டமிட்ட முதலாளித்துவ ஊடகங்களால் கட்டியமைக்கப்படுவைதான். இதில் விகடன், ரிப்போர்ட்டர், நக்கீரன் போன்ற பத்திரிகைகளெல்லாம் இணைய அக்கப்போர் புலவர்களை பெயர் போட்டு அங்கீகாரம் கொடுக்கின்றன. புலவர்களும் விகடனால் ஆசிர்வதிக்கப்பட்ட சான்றிதழை வைத்து ஒரு நூறு லைக்குகளை தேற்றுகிறார்கள். இதன்படி கருத்தும், சுதந்திரமும் உண்மையில் தேய்ந்து போகின்றது.

கொஞ்சம் எழுதும் திறன், சில மாதங்கள் பதிவு, சில வருடங்கள் முகநூல், பின்னர் எழுத்தாளர், அப்புறம் வெளிநாடு பயணம்,  இறுதியில் சினிமா உரையாடல் எழுதுபவர் என்பதாகத்தான் இங்கே முன்னோடிகள் பரவலான வட்டத்தின் பார்வையில் முன்னுதாரணங்களாக வலம் வருகின்றார்கள். ஊடக – சினிமா முதலாளிகளுக்கும் அவர்களது மசாலா ஃபார்முலாவுக்குத் தேவையான ‘திறமைகளை’ அடையாளம் காணும் வாய்ப்பை இணையத்தின் கட்டற்ற சுதந்திரம் வழங்குகிறது. முன்பு மதுரையிலிருந்து மஞ்சள் பையோடு வடபழனியின் வீதிகளில் பசியோடு சுற்றி வந்த உதவி இயக்குநர்கள் இனி இல்லை. முதலில் உங்களுக்கு இணையக் கணக்கு வேண்டும். குறும்படம் ஒன்றை யூடியூபில் ஏற்றியிருக்க வேண்டும். கவிதைகளும், கதைகளும், மொக்கைகளால் ஆராதிக்கப்பட்டிருக்க வேண்டும்.

இடையில் கிழக்கின் அருள் கிடைத்தால் ஒரு எழுத்தாளராகவும் அடையாளம் பெறலாம். சென்னைப் புத்தகக் கண்காட்சியின் போது புத்தகம் வெளிவந்தால் கட்டவுட்டில் ஜோலிப்பதோடு உலகப்புகழும் பெறலாம். ஆனால் இந்த படிநிலை வளர்ச்சி தமிழுக்கோ, இல்லை படைப்புலகத்திற்கோ எதையும் கொடுத்து விடுவதில்லை. ஆனால் கொஞ்ச நஞ்சமிருக்கும் திறமையையும், சமூக நேயத்தையும் இவை செல்லரித்துக் கொன்று விடுகின்றன. மீறி வைத்திருப்போர் என்று அடம்பிடிப்பவர்களையும் வென்று விடுகின்றன.

எந்திரனோ இல்லை பில்லா 2  திரைப்படங்களோ பொதுவெளியில் பார்த்தே ஆகவேண்டுமென்ற பரபரப்பை ஊடக, மூலதன, விளம்பர வலிமையால் உருவாக்கி விடுகிறார்கள். முதல் வாரத்தில் சென்று பார்ப்போர் இந்த அலையில் வீழ்ந்தவர்கள்தான். வீழ்ந்தவர்களை வைத்து இலாபத்தினை கோடிகளில் சுருட்டிக் கொள்கிறார்கள். ஆனால் பில்லா வரும் முன்னரும், வந்த பின்னரும் அதை எழுத வேண்டுமென்ற இணையப் பரபரப்பு எங்கிருந்து வருகிறது? எதை எழுத வேண்டும் என்ற சுதந்திரம் தனக்கிருப்பதாக விடைப்புடன் கூறிக் கொள்ளும் இணையப் புலிகள் பில்லா குறித்து ஏதாவது எழுதித்தான் ஆகவேண்டும் என்ற அரிப்பை எங்கிருந்து பெற்றார்கள்? ஆண்களுக்கு பிகினி உடை போட்டு பில்லாவில் ஏமாற்றி விட்டார்கள், எனக்கு குண்டான உடல்வாகு கொண்ட பெண்கள்தான் பிடிக்கும் என்பதெல்லாம் கிரியேட்டிவான நகைச்சுவைகளா? இல்லை கிழடுதட்டிய அவலச்சுவைகளா?

இதனால் இணையத்தில் சினிமா, நகைச்சுவை, இதர இதரவெல்லாம் இருக்கக்கூடாது என்று ‘கலாச்சாரப் போலிஸ்’ போல நாங்கள் கூறவில்லை. அரசியல் பொதுவெளியில் அடிமைத்தனம் கோலேச்சும் சமூகத்தில் இவை மட்டும் தனித்து ஒரு ரசனை மேம்பாட்டை அடைந்து விடாது என்பதையே வலியுறுத்துகிறோம். வினவில் வரும் சினிமா விமரிசன, பண்பாட்டு கட்டுரைகள் அத்தகைய முயற்சிகள்தான். அடிமைத்தனத்தை வென்று கடக்கக் கூடிய அரசியல் உணர்வு தோன்ற வேண்டுமானால் நீங்கள் அதற்காக களப்பணியும் செய்ய வேண்டும். இதன் போக்கில்தான் உண்மையான திறமைகளும், ரசனை உயர்வும், ஆயிரம் மலர்களும் பூத்துக் குலுங்கும்.

அமெரிக்க இராணுவ தளவாடங்களை இலவசமாக பயன்படுத்திக் கொண்டு கடைவிரிக்கும் ஹாலிவுட் படங்களின் திரைக்கதைகள் அதே இராணுவத்தாலேயே திருத்தப்படுகின்றன. இந்த கலை அடிமைத்தனம் கொண்ட நாட்டில் கருத்துரிமை இருப்பதாக பெருமைப்படுவது எவ்வளவு  பாமரத்தனமோ அவ்வளவு மடத்தனம்தான் இணையம் புரட்சியை செய்துவிடும் என்று நம்புவதும்.

மெய்யுலகில் நடக்கும் போராட்டங்களின் துணை கொண்டுதான் சமுகமும், தனிமனிதனும் நாகரீக நோக்கில் முன்னேற முடியும். அத்தகைய நோக்கத்தைத்தான் வினவு அடிப்படையாக கொண்டு இயங்குகிறது. வாசகர்கள் அரசியல் ரீதியாக வளர்ச்சி அடைவதும், தோழர்களாக நடைமுறையில் பணியாற்றுவதும், புரட்சிக்கு எதிரான பலவண்ண சமரசவாதிகளை கருத்து ரீதியாக முடக்குவதும் மட்டுமே எமது நோக்கங்கள். இவற்றில் சில சாதனைகள் உண்டென்றாலும் போதிய அளவு இல்லை என்பதே எமது நான்காண்டு சுயவிமரிசனம்.

எதிரிகளின் பலத்தோடு ஒப்பிடும் போது வினவு தளத்தின் செல்வாக்கு இன்னும் பலபடிகள் வளரவேண்டிய தேவை இருக்கிறது. வினவு கட்டுரைகள் பல நண்பர்களாலும், தோழர்களாலும் நகலெடுத்தும், இணையத்திலேயே பல வடிவங்களில் கொண்டு செல்லப்பட்டும் வருகின்றன. பல வாசர்கள் தொடர்ந்து விவாதிப்பதினூடாக தங்களது அரசியல் நோக்கை வளர்த்து வருகிறார்கள். பல புதியவர்கள் வினவினூடாக தங்களது எழுத்தை மேம்படுத்தி வருகிறார்கள். எனினும் பாதையின் தூரம் அதிகம்.

அதை உங்கள் துணையோடு கடப்போம் என்று உறுதி கூறுகிறோம்.

வாசகர்கள், பதிவர்கள், கூகிள் ஃப்ளஸ் நண்பர்கள், துவிட்டர்கள், பேஸ்புக் நண்பர்கள், தோழர்கள் அனைவருக்கும் எமது தோழமையான நன்றிகளும், வாழ்த்துக்களும்!

  1. வாழ்த்துகள் வினவு.

    உங்கள் சேவை தொடர வேண்டும்.

    மக்களின் அறியாமை என்னும் இருள் நீங்க, உங்களை போன்றோரின் சேவை மிக மிக அவசியம்.

    உங்களது கட்டுரைகளை பலரும் படிக்கும் வகையில் பல தளங்களில் இடம் பெறும் வகையில் செய்ய வேண்டும்.

    மீண்டும் வாழ்த்துகள்.

    • மறுமொழிகளில் வாழ்த்துக்கள் மூலம் உற்சாகப்படுத்தி வரும் நண்பர்கள், தோழர்கள் அனைவருக்கும் நன்றி! இத்தகைய துடிப்பு மிக்க வாசகர் வட்டம் இருக்கும் போது வினவு இன்னும் பல பரிமாணங்களில் வளரும் என்பதில் ஐயமில்லை. மார்க்சிய அறிமுகக் கட்டுரைகள், அனைத்து உடனடி நிகழ்வுகளையும் விடாமல் எழுதுவது ஆகியவற்றில் போதுமான பங்களிப்பை செய்ய முடியவில்லை. வருங்காலத்தில் சரிசெய்ய முயல்கிறோம். எனினும் வினவில் எழுதப்படும் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளே கூட மார்க்சியத்தித்தை குறிப்பிட்ட பிரச்சினை வாயிலாக கற்றுக் கொடுப்பவை தான். தொடர்ச்சியான வாசிப்பு, சிந்தனையில் ஒரு வாசகரே அத்தகைய பார்வையை பெறவேண்டும் என்பதே அமது அவா! அதன் பொருட்டு ஆரம்பிக்கப்பட்ட கேள்வி பதிலும் அடிக்கடி இடம்பெறுவதில்லை என்பதை வருத்தத்துடன் ஒப்புக் கொள்கிறோம். இதையும் களைய முயல்கிறோம்.

      நண்பர்கள் சாத்தியப்படும் நேரங்களில் குறிப்பிட்ட கட்டுரைகளின் விவாதங்களில் கலந்து கொள்ளுமாறு கோருகிறோம். விவாதங்களின் வழியும் நாம் அரசியலை, தத்துவத்தை கற்க முடியும். உங்கள் அனைவரையும் நேரில் சந்திக்க வேண்டுமென்ற ஆவலும் உள்ளது. சென்னையில் இருப்பவர்கள், சென்னைக்கு வருபவர்கள் நேரிலும் சந்திக்கலாம். தொடர்பு கொள்ளுங்கள். மீண்டும் நன்றி!

  2. மேலும் மேலும் செழிப்புற வாழ்த்துக்கள்!வினவு தளத்தை கட்டமைத்தும்,கட்டிக்காத்தும் வரும் தோழர்களுக்கு நன்றி.

  3. ஐந்தாண்டுகளாக தொடர்ந்து எழவு கொட்டும் எழவு டாட் காமுக்கு எழவெடுத்த வாழ்த்து தெரிவித்துத் தொலைக்கிறேன்.

  4. வாழ்த்துக்கள்; மேலும் சேவை தொடர தோழர்களுக்கு வேண்டிய ஆதரவை அளிப்போம்,நன்றி

  5. ஐந்து ஆண்டுகளில் நீங்கள் சோர்வடைந்தீர்களோ இல்லையோ, வள வளவென்ற இந்த கட்டுரையை படித்து நான் மிகவும் சோர்வடைந்துவிட்டேன்.
    நன்றி.

    அன்பு

  6. இனி வினவில் நகைச்சுவைக் கட்டுரைகளையும் எதிர்பார்க்கிறோம்.

  7. வினவு- தமிழ் இணைய தளத்தில் ஒரு மைல்கல். பணி சிறக்க வாழ்த்துக்கள்!

  8. வினவுதல் முதற்கட்டம். வினையாற்றுதல் அடுத்த கட்டம். அதை நோக்கி பயனிப்போம்.

    சாதாரண வாசகனையும் எழுதத்தூண்டியது, எதிர் கருத்து அல்லது மாற்று கருத்துக் கொண்டோரை மேலும் படிக்கத்தூண்டியது என பல படி நிலைகளில் வாசகனை அடுத்த நிலைக்கு உயர்த்தியது என வினவின் செயல்தளம் பரந்து விரிந்தது.

    வாழ்த்துகள்!

  9. வாழ்த்துக்கள் வினவு!!!
    தொடரட்டும் உங்கள் அணியின் சேவை….:)

  10. ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் வினவிற்கு வாழ்த்துக்கள்..

    தங்கள் பணி மென்மேலும் தொடர்ந்து என்னைப் போன்ற இன்றயை இளைய சமுதாயத்திற்கு ஒரு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்ற வேண்டுகோளுடன் விடைபெறுகிறேன்..

    நன்றி…

    தொடரட்டும் வினவின் வெற்றி பயணம்…

  11. வினவு ஆரம்பிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் முடிந்து ஐந்தாம் ஆண்டு தொடங்கிவிட்டது. முதலில் வாழ்த்துக்கள். என் நினைவுகளை பின்னோக்கி பார்க்கிறேன். நான் இனையத்தில் தொடர்ச்சியாக படிக்கத் தொடங்கியது வினவு ஆரம்பிக்கப்பட்ட பிறகுதான். அதற்கு முன்பு அசுரன் படிப்பேன் தமிழ் சர்க்கில் படிப்பேன். வினவு ஆரம்பிக்கப்பட்ட பிறகு வாரம் ஒருமுறை ஏதாவது கட்டுரைகளை படிப்பது என்பதைத் தாண்டி, தினந்தோறும் பதிவுகளையும் அதன் பின்னூட்டங்களையும் படிப்பவன். இப்படி என்னுடைய வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்திய வினவு தோழர்களுக்கு என் நன்றிகள், உங்கள் பனி தொடர வாழ்த்துக்கள்.

  12. வினவின் முதல் பிறந்தநாளின் பொழுது என் தளத்தில் வாழ்த்துக்களை பகிர்ந்த பொழுது எழுதியது!

    நாட்டில் மொள்ளமாரி, முடிச்சவுக்கி, பொறம்போக்கு, ரவுடி, மக்கள்ப் பணத்தை தின்று தீர்ப்பவன் என எல்லோரும் பிறந்தநாள் கொண்டாடும்பொழுது, மார்க்சிய-லெனினிய சித்தாந்தத்தின் ஒளியில் உலக விசயங்களை சமரசமில்லாமல் எழுதும் வினவு-க்கு பிறந்த நாள் தாராளமாய் கொண்டாடலாம்.

    பதிவுலகம் பற்றி ஒன்றுமறியாத காலத்தில், ஏதோ ஒன்றைப் பற்றி தேடும் பொழுது, பதிவுலகம் அறிமுகமானது. அதற்கு பிறகு பல பதிவர்கள் எழுதியதை படித்த பொழுது, பெரும்பாலும் மொக்கையாக இருந்தது. பொறுத்து, பொறுத்து ஒரு சமயத்தில் வெறுத்துப்போய் தான் “வலையுலகமும் நொந்தகுமாரனும்” என்ற பெயரில் வலைத்தளமே தொடங்கினேன். பல மொக்கைப் பதிவர்களை, பதிவுகளை கலாய்த்தும் பின்னூட்டங்கள் இட்டுக்கொண்டிருந்தேன். எழுதிப் பழக்கமில்லையென்றாலும், நானே சொந்தமாய் சமூக விசயங்கள் குறித்து எழுத துவங்கினேன்.

    இந்த நாட்களில் தான் ‘வினவு’ அறிமுகமானது. துவக்க கட்டுரைகளைப் படித்த பொழுது, வலைத்தளம் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டேன். வேலை நிலைமைகள் என்னதான் வாட்டியெடுத்தாலும், வினவு தளத்தை தவறாமல் வாசித்து வருகிறேன். பின்னூட்டங்களும் இடுகிறேன். என்ன ஒரு வருத்தம்! நேரமின்மையால் விவாதங்களில் பங்கு கொள்ள முடியவில்லை.

    என்வாழ்வில் சிந்தனையோட்டத்தையும், நடைமுறை வாழ்வையும் மாற்றியமைத்ததில் வினவின் பங்கு அதிகம். சமூக தளத்தில் வினவின் பங்கு, நீங்கள் நினைப்பதைக்காட்டிலும் அதிகம். தன் பாதையில் சற்றும் தளராமல் பயணிக்க வாழ்த்துக்கள்.

    – இன்றும் இதை மீண்டும் எடுத்து படிக்கும் பொழுது, எந்த கருத்திலும் மாற்றமில்லை! வினவிற்கு ஐந்தாமாண்டு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

  13. வினவிற்கு மீண்டும் இனிமையான ஐந்தாமாண்டு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

    மொக்கையாய் எழுதும் பொழுது மனதில் தனது அடிபொடிகளின் கைத்தட்டு சத்தமாய் கேட்டாலும், வினவின் கொட்டு விழும் என பயமும் நிச்சமாய் வரும்! வினவு வந்தபிறகு தான், மொக்கைகள், ஜல்லியடிப்பவர்கள், பதிவுலகில் உள்ள பெண்களை சீண்டுபவர்கள் கொஞ்சம் அடங்கினார்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை.

    அடுத்து வினவு ஆள் பிடிக்கிறது என்கிற விசயம்! ‘பிரபல’ பதிவர்களோ, ‘பிரபல’ முகநூல் பதிவரோ தன்னுடைய அடிப்பொடிகளை தக்கவைக்க, எண்ணிக்கையை பெருக்க என்னவெல்லாம் எழுதுகிறார்கள், எப்படியெல்லாம் எழுதுகிறார்கள் என்பதை படித்து நாளும் சிரித்து வருகிறேன். கோபப்பட்டும் வருகிறேன்.

    தொடர்ந்து பயணியுங்கள். மெய்யுலகில் களப்பணி ஆற்றுவதுடன், மெய்நிகர் உலகில் வினவுடன் தோளோடு சேர்ந்து நிற்பதில் சந்தோசம் கொள்கிறோம்.

    மற்றபடி வினவு தான் ஏற்கனவே அறிவித்த, மார்க்சிய கல்வி அறிமுகம் போன்ற சில செயல்திட்டங்களை கொஞ்சம் கொஞ்சமாக நடைமுறைக்கு கொண்டுவர முயற்சிக்கவேண்டும் என்பதையும் பதிவு செய்கிறேன்.

    ஒரு வேண்டுகோள் : வாழ்த்துக்கள் சொல்கிறவர்கள் ஒரு வரியில், ஒரு வார்த்தையில் சொல்லி, கடந்து போகாமல், வினவு தன்னுள் என்ன மாற்றத்தை ஏற்படுத்தியது என்பது சொல்லிச் சென்றால், மற்றவர்களுக்கும் பயன்படும். வினவும் தன் பாதையை செப்பனிட்டு கொள்ள பயன்படும்.

  14. சில நாட்களுக்கு முன் ஒரு நண்பர் வினவை பரிந்து சாதி ஆதிக்கம் பற்றிய ஒரு கட்டுரையை படிக்க சொன்னார். அதில் குழந்தைகள் பள்ளி சீருடையில் செருப்பை கையில் பிடித்துக்கொண்டு ஒரு ஆதிக்க சாதியினர் தெரு வழியே செல்லும் புகைப்படம் கண்டு வாழ்க்கையையே வெறுத்தேன் .ஒரு பின்னூட்டம் கூட எழுதினேன் ஆனால் ஒரு வாரம் போல் அந்த கட்டுரைக்கு ஒரு சில பின்னூட்டங்களே காண முடிந்தது.அடிமனதில் சாதிவெறியை வைத்துக்கொண்டு வெளியே கம்யுநிசம் என்று பம்மாத்து பண்ணும் சாதிதமிழர் குணம் அப்படியே பிரதிபலிக்கிறதா? …….இல்லை நான்தான் ரொம்ப ஓவராக வினையை எதிர்பார்க்கிறேனா?

  15. வாழ்த்துக்கள் வினவு!!! எனது 3வது வருட வாழ்த்து..தொடரடும் உங்கள் பணி..

  16. //பதிவுகள் – 1434// மெய்யாலுமா? //இந்திய அரசாங்கத்தின் பிரதமரையே இப்படி அழைப்பதை எப்படி விட்டு வைத்திருப்பார்கள் என்று கூட சிலருக்குத் தோன்றலாம்//. அட ஆமாம்பா! நாடு முன்னேரிடுச்சா ?///வினவின் ஆரம்ப மாதங்களில் தொடர்பு கொண்ட ஒரு பிரபல ‘அதிரடி’ பதிவர்/// – யாருப்பா அவரு ? ///இணையத்தில் புரட்சியெல்லாம் துளியும் சாத்தியமில்லை// – உண்மை தான் ( நாங்க எல்லாம் பின்னூட்டம் போடுவோமே தவிர வேற எதையும் புடிங்கி தள்ள போறதில்லை,)
    //ஒரு ட்ராபிக் போலீஸ் கான்ஸ்டபிளிடம் கூட நான் பிரபல முகநூல் நட்சத்திரம் என்று கூறி அபராதத்தை கட்டாமல் தப்பித்துக் கொள்ளும் சாத்தியம் உண்டா? அதற்கு வட்டச் செயலாளர், ஏன் தலயின் ரசிகர் மன்றத் தலைவர் கூட கூடுதலான அதிகாரத்தைக் கொண்டிருக்கிறார்கள்.// – இது தெரியாம பேமாளிங்க எதை எதையோ பதிவு போடுறானுங்க, கேட்ட, சமூகம் விழிப்புணர்வு அது இதுன்னு கத உடுராணுங்க. //ஆனால் பில்லா வரும் முன்னரும், வந்த பின்னரும் அதை எழுத வேண்டுமென்ற இணையப் பரபரப்பு எங்கிருந்து வருகிறது?// – யோவ்! அவங்கெல்லாம் வச்சிட்டா வஞ்சகம் பண்றானுங்க? வேற எதாவது தெரிஞ்சா தானே பதிவு போடுவானுங்க. நீங்க அவுங்கள பத்தி குறை சொல்றது தப்பு, அவங்க எல்லாம் பொழுதுபோக்க பிளாக் எழுதுறாங்க , அதிலென்ன தப்பு?

  17. அரசியல் நடப்புகளை அறிந்துக் கொள்ளும் ஆர்வம் என்னை அறியாமலே அதிகமானது. இந்த அதிசயத்தை நிகழ்த்திய வினவுக்கு வாழ்த்துக்கள். விவாதங்களை விறுவிறுப்பாக்கும் மறுமொழி களமே இதன் இரகசியமாகும். படைப்பாளனைவிட, பார்வையாளனை முக்கிய பங்காற்றவைக்கும். வினவின் மாயமிது. மாயத்தினை நிகழ்த்தும் வினவின் தோழர்களுக்கு வாழ்த்துக்கள்.

  18. ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் வினவுக்கு செவ்வணக்கம், இணையத்தில் புரட்சி பேசுவதைவிட நடைமுறையில் போராடுவதே உண்மையான போராட்டம் என்பதை உணர்ந்தேன், உணரவைத்த வினவுக்கு நன்றி. போராட்டம் தொடரட்டும்…

  19. வினவின் இந்த பனி மென்மமெலும் பல ஆன்ட்டுகல் தொடர என் மனமார்ந்த வால்துக்கல்

  20. புரட்சிகர வாழ்த்துக்கள் வினவு ! மார்சிச அறிமுகம் சம்பந்தமான கட்டுரைகளை எதிர்ப்பார்க்கின்றோம்.

  21. வினவுக்கு வாழ்த்துக்கள். எனக்கும் ஐந்து வருடங்கள் ஆயிற்று. வினவின் முதல் அறிமுகம் லீனாவின் மூலம் கிடைக்கப்பெற்றது. தீவிர மார்க்ஸியவாதம் இப்பொழுது போல் இல்லாமல் மிகப் புதிது. என்னை பல வழிகளில் யோசிக்கச் செய்தது. இதற்குள் பல ஊர்களுக்கு சென்று குடியேறி விட்டேன், ஆனாலும் வினவை படிப்பதை நிறுத்தியதில்லை. முன்னர் போல் வேலை பளுவால் பின்னூட்டமிட முடியவில்லை. ஆனாலும் வாசிப்பதை நிறுத்தியதில்லை. பழைய நண்பர்கள் பல பேர் ஒதுங்கி விட்டனர். தோழர் செங்கொடி, அக்கவுண்ட் அகமது, மாக்ஸிமம், விடுதலை சோழன் இன்னும் பலர். உங்களையெல்லாம் இப்பொழுது பிரிந்து துயருறுகிறேன்.

    வினவின் பணிகள் தொடரட்டும். ஒவ்வொரு நிகழ்விலும் மார்க்ஸிய வாதியின் அணுகுமுறை எவ்வாறு இருக்க வேண்டும், சமுதாயத்தை அந்நிகழ்வுகள் எப்படி பாதிக்கிறது, எவ்வாறு அதன் போக்கை திருப்புகிறது என்று உங்கள் பதிவுகளை படித்தே தெரிந்து கொள்ள முடிகிறது.

    மீண்டும் பணி சிறக்க வாழ்த்துகிறேன்.

  22. I am grateful to The Vinavu team. It is genuine, tireless, motivating, rational and scientific. It is a must for all households for meaningful arguments.
    I open vinavu site everyday.
    It helps a lot to discuss so many issues in my circle and also to shape up my life.
    Your impact is a lot more than what we normally think.
    Congratulations Vinavu.

  23. தினமும் செய்தித்தாள் படித்தாலும் படிக்காவிட்டாலும் வினவு கட்டுரைகளை கண்டிப்பாக படிக்கிறேன். வினவு.காம் கட்டுரைகள் என்னுள் விதைத்த மாற்றங்கள் ஏராளம். இந்த மாற்றங்களே என்னை இந்த காலத்து குறிக்கோளில்லாத ‘யூத்’திடமிருந்து மாறுபடுத்துகிறது. இதற்காகவே வினவுக்கு கோடான கோடி நன்றிகள்.
    ஐந்தாண்டு நிறைவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  24. வினவிற்கு வாழ்த்துக்கள்! சோர்வடைய இது நேரமுமல்ல. நீங்கள் சோர்வடையவும் முடியாது. நீங்கள் சும்மா இருக்க நினைத்தாலும் நாடு உங்களை சும்மா இருக்கவிடாதல்லவா! எஃப்.எம் ரேடியோ, தொலைக்காட்சி அலைவரிசைகளை எப்போது தொடங்கப்போகிறோம் என்று வினவிடமிருந்து எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்!

  25. வினவிற்கு வாழ்த்துக்கள்.
    இணையத்தின் மூலம் மட்டுமே புரட்சிசெய்வது என்பது நகைச்சுவைதான். எனினும் களப்பணி ஆற்ற முடியாத காரணத்துக்காக இணைய விரும்பிகளை (நான் உள்பட) குறைத்தும் மதிப்பிட முடியாது. ஆம் அவர்கள் குறைந்த பட்சம் தமது வாழ்கையை சுயவிமர்சனம் செய்யவும், மார்க்சிய பண்புகளோடு வாழவும், மார்க்சிய கருத்துக்களை மற்றவர்களுக்கு அறிமுகபடுதவும் இது பெரிதும் பயன்படுகிறது. அந்தவகையில் இன்றைய கால சுழலில் வினவு மிகபெரிய சாதனை செய்ததாகவே நான் கருதுகிறேன்.

  26. புரட்சிகர வாழ்த்துக்கள் வினவு,தொடரட்டும் வினவின் வெற்றி பயணம்..

  27. வாழ்த்துக்கள் வினவு. சுயநலத்தை போக்கி மக்களுக்காக வாழ வேண்டியதின் அவசியத்தை கற்ப்பிப்பதாக உள்ளது உங்கள் தளத்தில் வரும் கட்டுரைகள். என்னைப் போன்றோருக்கு, தன்னை வளர்த்துக்கொள்ள மிகவும் உதவியாக இருக்கும். வினவின் முன்னேற்றத்திற்கு உழைக்கும் அனைத்து தோழர்களுக்கும் என் செவ்வணக்கம்.

    //அடிமைத்தனத்தை வென்று கடக்கக் கூடிய அரசியல் உணர்வு தோன்ற வேண்டுமானால் நீங்கள் அதற்காக களப்பணியும் செய்ய வேண்டும்.//

    உணர்வுப்பூர்வமாக ஏற்றுக்கொண்ட வரிகள்.

    • மறுமொழிகளில் வாழ்த்துக்கள் மூலம் உற்சாகப்படுத்தி வரும் நண்பர்கள், தோழர்கள் அனைவருக்கும் நன்றி! இத்தகைய துடிப்பு மிக்க வாசகர் வட்டம் இருக்கும் போது வினவு இன்னும் பல பரிமாணங்களில் வளரும் என்பதில் ஐயமில்லை. மார்க்சிய அறிமுகக் கட்டுரைகள், அனைத்து உடனடி நிகழ்வுகளையும் விடாமல் எழுதுவது ஆகியவற்றில் போதுமான பங்களிப்பை செய்ய முடியவில்லை. வருங்காலத்தில் சரிசெய்ய முயல்கிறோம். எனினும் வினவில் எழுதப்படும் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளே கூட மார்க்சியத்தித்தை குறிப்பிட்ட பிரச்சினை வாயிலாக கற்றுக் கொடுப்பவை தான். தொடர்ச்சியான வாசிப்பு, சிந்தனையில் ஒரு வாசகரே அத்தகைய பார்வையை பெறவேண்டும் என்பதே அமது அவா! அதன் பொருட்டு ஆரம்பிக்கப்பட்ட கேள்வி பதிலும் அடிக்கடி இடம்பெறுவதில்லை என்பதை வருத்தத்துடன் ஒப்புக் கொள்கிறோம். இதையும் களைய முயல்கிறோம்.

      நண்பர்கள் சாத்தியப்படும் நேரங்களில் குறிப்பிட்ட கட்டுரைகளின் விவாதங்களில் கலந்து கொள்ளுமாறு கோருகிறோம். விவாதங்களின் வழியும் நாம் அரசியலை, தத்துவத்தை கற்க முடியும். உங்கள் அனைவரையும் நேரில் சந்திக்க வேண்டுமென்ற ஆவலும் உள்ளது. சென்னையில் இருப்பவர்கள், சென்னைக்கு வருபவர்கள் நேரிலும் சந்திக்கலாம். தொடர்பு கொள்ளுங்கள். மீண்டும் நன்றி!

  28. வாழ்த்துகள் வினவு. உங்கள் சேவை தொடர வேண்டும்.

    ஓசூர் தமிழ்நாட்டில் பெங்களூர் அருகில் உள்ள தொழில் நகரம் , இங்கு 75 சதவீத மக்கள் தமிழ்நாட்டின் வேறு பகுதிகளில் இருந்து குடியேறியவர்கள் , பெரும்பாலான மக்கள் தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்கள் , கடந்த 10 ஆண்டுகளில் நகரம் பெரும் வளர்ச்சி பெற்று உள்ளது , சென்ட் 5 ஆயிரம் ரூபாய் விற்ற நிலங்கள் இன்று 5 லட்சம் விற்று வருகிறது , 10 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு தேசிய கட்சிகளான காங்கிரஸ் , பா ஜ க , ஜனதா தள் கட்சிகளில் மட்டுமே இங்குள்ள மக்கள் இருந்து வந்தனர் , பின்பு மாநில கட்சிகளில் சேர்ந்து அதன் பலனாகப் பல்வேறு வழிகளில் பெரும் பணக்காரன் ஆகினர் சிலர் , இதனால் கடந்த உள்ளாட்சி தேர்தலில் மாநில கட்சிகளில் போட்டியிட கடும் போட்டி நிலவியது , ஆளும் கட்சியில் போட்டியிட பலர் கோடிகளில் கொட்டி சீட் வாங்க முயன்றனர் , இறுதியில் வேறு கட்சியில் இருந்து வந்து சில நாளே ஆன பாலகிருஷ்ணன் சீட் பெற்று , தேர்தலில் வெற்றியும் பெற்று நகராட்சி தலைவர் ஆனார், பெரும்பாலான கவுன்சிலர்கள் அதே வழியில் சீட் பெற்று பதவியை பெற்றனர் , நகராட்சி உப தலைவர் தேர்தலுக்கு ஒவ்வொரு கவுன்சிலருக்கும் தலா ரூ 5 லட்சம் வழங்கி வெற்றி பெற்ற பாஸ்கர், பதவிக்கு வந்த சில நாளிலே சாலை விபத்தில் காலமானார். அவர் கொடுத்த பணத்தை திரும்பி வாங்க அவர் குடும்பத்தினர் , அமைச்சர் முனுசாமி வைத்துப் பஞ்சாயத்து செய்தது ஒரு தனிக் கதை . பின்னர் பாஸ்கரை விட அதிக தொகை கொடுத்து இன்னொரு நபர் உப தலைவர் ஆனார் . பதவிக்கு வந்து ஏழு மாதம் ஆகியும் ஹோசூர் நகரத்துக்கு எந்த வசதியும் , புதிய திட்டங்களும் செய்யாமல் செலவு செய்த பணத்தை திரும்ப எடுப்பதிலேயே அனைவரும் குறியாக உள்ளனர். நகர எங்கும் குப்பை , எங்கும் லஞ்சம் , எதிலும் லஞ்சம் , சாலைகள் காணமல் போய் பல வருடம் ஆகியும் அதனைச் சரி செய்ய இந்த நடவடிக்கையும் இல்லை.

    சென்னையில் மாநகராட்சியில் நடக்கும் முறைகேடுகளுக்காக, கவுன்சிலர்களை மிரட்டிய அம்மா , ஹோசூர் மீது தனது பார்வையைப் பதிந்து இந்த நகர் முன்னேற நடவடிக்கை எடுக்க வேண்டும்

  29. சில தேர்ந்தெடுத்த படைப்புகளைப் புத்தகமாக வெளியிடலாமே!உங்களின் சுயவிமர்சனம் முழுமையாக நிறைவேறும்போது இங்கு நல்லதொரு வாசகர்கள் உருவாக்கப்பட்டிருப்பார்கள்.

  30. வினவிற்கு ஐந்தாமாண்டு பிறந்தநாள் வாழ்த்துக்கள்! மற்றபடி, வினவு கடந்த வந்த பாதையில், பல புதியவர்கள் தொடர்ந்து கட்டுரை எழுதுகிறார்கள். சிலர் மொழிபெயர்ப்பு செய்கிறார்கள். இந்த வட்டம் பெரிதாகிகொண்டே வளரவேண்டும். வாழ்த்துக்கள்.

    வருங்காலங்களில் விவாதத்திலும் கலந்துகொள்ள முயல்கிறேன். நன்றி.

  31. வினவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். தளர்ச்சியற்ற தங்கள் நடை தொடரட்டும். வினவின் கருத்துகளை எதிர்த்தே இரண்டாண்டுகளுக்கு முன் பின்னூட்டமிட ஆரம்பித்தேன். அது உண்மைகளைப் புரிந்திராத, மனம் நடுநிலைப் பார்வையை அதிகம் விரும்பியதால் ஏற்பட்ட விளைவென கருதுகிறேன். பின்னர் பலவற்றை ஆதரித்தே விவாதிக்க ஆரம்பித்தேன். சென்றமுறை சென்னை வந்தபொழுது சந்திக்க இயலவில்லை. மன்னிக்க. பிறிதொருமுறை நிச்சயம் சந்திக்கலாம். ஆனால் சமூக அடிப்படைக் கட்டமைப்பையே ஒட்டுமொத்தமாக மாற்றியமைத்தல் என்பது எவ்வகையில் எதிர்காலச் சாத்தியம் என்பதை இன்னும் உள்ளுக்குள் வாங்கிக் கொள்ளமுடியவில்லை. பயணத்தின் நீளம் அதிகமென்பதை உணர முடிகிறது.

  32. Dear Vinavu Team,

    Congrats.! ! ! However Pl tone down your comments on brahminism . It is already over and whenever you find NO REASON to blame a cause you take Parpaniyam. I bet This word is the most used word in ALL your articles in the past years.

    Pl understand the reality and request you to concentrate on the EMERGING social evils like Alcoholism,Corruption and other issues which are a big challenge to the future generation and society. Barring the above Vinavu is doing a better job than all other so called magazines in Tamil.

    Once again wishing the Vinavu team very best in future amidst expectations of more sensible articles in future….

    Punjab Ravi

  33. வினவுக்கு எனது வாழ்த்துக்கள். நான் வினவு பதிவுகளை படிக்க ஆரம்பித்தது கடந்த ஒரு மாதமாகத்தான். இதில் 2008 -இலிரிந்து இன்று வரை நிறைய பதிவுகளை ஒன்று சேர படித்ததில் பலவை புலனாகிறது.

    1 ) என் இன அசிங்கங்களை புரிந்து கொண்டேன், எனக்குள் வினவு மாற்றம் ஏற்படுத்தியது உண்மையே!

    2 ) நிறைய மறுமொழிகள் வருவது sensational பதிவுகளுக்கே! அதனால் இணையம் என்பதை timepass என்று தான் எடுத்துக்கொள்ளவேண்டும்

    3 ) மனித இனத்தின் survival tactics தான் இவ்வாறு சமூக பிரச்னைகளாக மாறுகிறது. எவன் ஏமாறுவான், நாமும் நம் குடும்பமும் பிழைக்கலாம் என்று தான் நாம் எல்லோரும் இருக்கிறோம். ஒரு விவசாயி செத்தாலோ, இன அழிவே ஏற்பட்டாலோ அதற்க்கு நாம் தான் மூல காரணம் என்று உணராமல் காங்கிரஸ், பிஜேபி, அதிமுக, திமுக, பார்ப்பான் (முக்கிய காரணம் தான் ஆனால் மூல காரணம் இல்லை) என்று சண்டை போட்டுகொள்கிறோம்

    4 ) காபிடலிசம் கூடாதென்று கூறும் வினவிற்கு கம்யுநிசமும் லாயக்கில்லை என்று புரியவில்லை. கொள்கைகள் மனிதனின் மன வரம்பிற்கு உட்பட்டவையே! survival -க்கு எது தேவையோ மனிதன் அதற்கேற்றார் போல் கொள்கைகளையும் மதங்களையும் வளைத்து தப்பிக்கின்றான்.

    நாமெல்லாம் பூமியை தின்று நமக்கு அழிவை நாமே உருவாக்கிக்கொள்ளும் ஒரு இனம். இதை உணர்த்திய வினவிற்கு நன்றி.

  34. வணக்கம் தோழர்களே !

    எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியாய் இருக்கிறது தெரியுமா ? அதை கண்டிப்பாய் என்னால் எழுத முடியாது. வினவின் உண்மையான வெற்றி நடைமுறை தான். நடைமுறையில் இல்லாமல் எத்தனையோ பேர்கள் காலாவதியாகிப்போன சூழலில் நடைமுறைக்கான அரசியல்தான் உங்களை இந்த வளர்ச்சியில் கொண்டு வந்திருக்கிறது.

    நான் எதையாவது எழுத வேண்டுமென்று இணையத்தில் திரிந்து கொண்டு இருந்த போதுதான் வினவை பார்த்தேன். நான் இப்போது எழுதுவதில்லை. ஏதாவது ஒன்றை செய்து கொண்டும் எழுதிக்கொண்டும் இருப்பது மிக சிரமமான விசயம்தான். வர்க்க விடுதலை என்ற இலக்கு இந்த சிரமத்தை ஒன்றுமில்லாமல் செய்து விடும் தோழர்களே!

    வினவு
    எதை வினவ?
    எப்படி வினவ?
    இதை
    இப்படி என்றல்ல
    எதையும் எப்படியும் வினவு

    இணையத்தில் மட்டுமல்ல
    நடைமுறைக்காக
    மக்களின் விடுதலைக்காக

    அப்படி வினவும் போது
    கண்டிப்பாக உன்னால்
    அட்டைக்கத்தி வீரனாக இருக்க முடியாது

  35. உங்கள் பணிகள் தொடரட்டும் தோழர்களே,

    இன்னும் அதிக வலிமையுடனும், சமூகத்தின் மீது படிந்திருக்கும் பொருக்குகளுக்கு இன்னும் அதிக வலி ஏற்படுத்தக் கூடியதாகவும் தொடருங்கள்.

    வாழ்த்துகளுடன்
    செங்கொடி

  36. வினவு நாத்திகவாதியாக இருந்தாலும் கூட ஆத்திகவாதிகளின்பால் வினவின் அணுகுமுறை போற்றத்தக்கது. இந்த அணுகுமுறையை மதங்களைப் பின்பற்றும் எந்தவொரு மதவாதிகளுக்கிடையேயும், இனவாதிகளுக்கிடையேயும் காணமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு ஆன்மாவையும் வினவத் தூண்டும் வினவின் பணிக்கு எனது வாழ்த்துக்கள்.

  37. வினவில் நான் வியப்பது எதிர்கருத்துகளை அனுகும் முறை.

    தொடர்ச்சியாக படிக்கிறேன், அரசியல் பார்வை மேம்பட்டிருக்கிறது..

    உற்சாகத்தோடு உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

  38. வினவிற்க்கு வாழ்த்துக்கள்,
    முற்றிலும் தலைகீழான சிந்தனை மாற்றத்தையும், நல்ல அரசியல் பார்வையையும் தங்கள் தளம் என்னைப்போல பலருக்கு கொடுத்துள்ளது. வினவு தொடர்ந்து புரட்சிகர அரசியலை முன்னெடுத்து செல்ல வாழ்த்துக்கள்.

    இணையப்போரளிகளின் மனநிலையை கேள்விக்குள்ளாக்கும் மிக முக்கியமான கட்டுரை, வினவின் வளர்ச்சி குறித்து மகிழும் அதே சமயத்தில், வினவை தொடர்ந்து படித்து வரும் வாசகர்கள்,நண்பர்கள் தங்களை நோக்கி கட்டுரையின் மையமான கேள்விகளை கேட்டுகொண்டால் நன்றாயிருக்கும்.

    பிரச்சனை அடிப்படையிலான விமர்சன கட்டுரைகளே வினவில் இருக்கிறது, மார்க்சியம் குறித்து அனைவருக்கும் புரியும்படியாக எளிய வடிவில் கட்டுரை தொடர் ஒன்றை வினவு அளிக்க வேண்டும், மேலும் மேலே குருசாமி மயில்வாகனன் சொன்னது போல இணையம் மட்டுமல்லாது, பண்பலை வானொலி, தொலைக்காட்சி என பல தளங்களை பயன்படுத்தி மக்களிடம் தங்கள் கருத்துக்களை எடுத்து செல்ல வேண்டும்.

  39. Hearty congratulations. While your articles on issues are rigorous and thought provoking, the comments on your articles are sometimes silly and personal attacks on some commentators should be avoided by the readers. I may not agree with some of your views. But you are doing great job in politicising the readers.-sundaram

  40. வாழ்த்துக்கள் வினவு.

    செய்திகளை பல்வேறு கோணங்களில் சிந்திக்க சொல்லி கொடுத்த பெருமை உங்களுக்கு சேரும்.

    நன்றி,
    ஜீவா

  41. என்னுடைய வாழ்த்துகள். அதியமான், சித்ரகுப்தன் விமர்சனங்களை எதிர்பார்த்தேன். இந்த கட்டுரையில் கோர்க்கப்பட்ட வார்த்தைகள் பொக்கிஷம். நிகழ்கால இணைய தள போக்கினை அற்புதமாக எடுத்துரைக்கின்றது. வலைதளத்தை தங்கள் பிடியில் இருப்பதாக நம்பியவர்களைப் பற்றியும், அதுவே கைகழுவிப் போன நிலையில் அவர்களின் தற்போதைய மகத்தான் பணியைப் பற்றியும் நாசூக்கு வார்த்தையில் நாறடிக்கின்றது.

    ஒரே நாளில் மாற்றம் வந்து விடும் என்று எந்த வரலாறும் சொல்லவில்லை. ஆனால் வந்து சேரக்கூடிய மாற்றத்திற்கான வலு மெதுமெதுவாகத்தான் உருவாக்கம் பெற்று ஒரு உன்னதமான இடத்திற்கு அழைத்துச் செல்கின்றது.

    வலையுலக வாசிப்பு என்பது ஒரு பொழுது போக்கு என்பதாக கற்பிதம் செய்யப்பட்டு, அதுவே தான் சரி என்பதையே ஒரு கூட்டமே உணர்த்திக் கொண்டிருக்கிறது. ஆனால் அதையும் தாண்டி இது இப்படித்தான்…….. யோசித்துப் பார்…….. என்பதாக பல்வேறு விசயங்களுக்கு பின்னால் ஒழிந்துள்ள உண்மைகளை பட்டவர்த்தனமாக உடைத்துச் சொல்லும் வினவின் கட்டுரைகள் ஒவ்வொன்றும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்று.

    இன்று சுகமாய் சுடுதண்ணீரில் இருப்பது தெரியாமல் வாழும் ஆமை சுகம் போல வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு தற்கால பிரச்சனைகளும், இதனால் எதிர்கால தலைமுறைகளுக்கு உருவாகப்பபோகும் சூனியமும் புரியாது. ஆனால் அப்போதும் இந்த வினவு தள கட்டுரைகள் இருக்கும். அப்போது படிக்கும் வாசகனின் மனோநிலை எப்படி இருக்கும் என்று பலமுறை யோசித்து இருக்கின்றேன்.

    தமிழர்களின் வாழ்வில் ஆவணப்படுத்துதல் என்பதே முறையாக அமைந்ததே இல்லை. அதுவும் ஒவ்வொரு காலகட்டத்திலும் உருவாகும் அரசியல் மாற்றங்கள், அதன் பின்னால் உள்ள விசயங்கள், இதன் காரணமாக பாதிக்கப்படும் சமூகம், காலமாற்றத்தில் அதிகமாக வளர்ந்து கொண்டேயிருக்கும் விளிம்பு நிலை மனிதர்கள் என்று வினவு கட்டுரைகளை பத்தாண்டுகள் ஒன்றாக வைத்து ஒருவர் படித்துப் பார்ப்பார் என்றால் சுயநலம் என்பது அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல. வாழ்ந்து மறைந்த ஒவ்வொருவருக்கும் தான என்பதை எளிதாக புரிந்து கொளள் முடியும். தங்கள் உண்மையான சமூக அக்கறைகளை வெளிப்படுத்தாமல் இறந்துள்ளார்கள் என்பது புரியும்.

    புரட்சிகாரர்கள், தீவிரவாதிகள் என்று என்று வினவுக்கு பட்டம் கொடுப்பவர்கள் ஒரு வகையில் பாராட்டப்பட வேண்டியவர்கள். ஆமாம். இருட்டுக்குள் இருந்து கொண்டு கல்எறிவது காலம் காலமாக நடந்து கொண்டிருப்பது தானே. எறிபவர்களின் தைரியத்தைப் பற்றி நாம் பேசுவதை விட அவர்களின் இயலாமையைத் தான் இங்கே குறிப்பிட வேண்டும்.

    நிச்சயம் உங்கள் கட்டுரைகளின் எண்ணிக்கையை விட தாங்கள் குறிப்பிட்டுள்ள வருகையாளர்களின் எண்ணிக்கை தான் உங்கள் கட்டுரைகளின் தரத்திற்கான சான்று. ஆங்கில வழியில் தளம் உருவாக்குவதாக சொல்லி இருந்தீர்கள். ஆனால் அது குறித்து எந்த அறிவிப்பும் நான் பார்த்ததாக நினைவில்லை. அந்த தளத்தை உருவாக்கி விட்டீர்களா?

    லட்சத்தில் படிக்கும் வாசக எண்ணிக்கை இன்னும் சில ஆண்டுகளில் கோடியைத் தொட வேண்டும் என்று விரும்புகின்றேன். காரணம் நடுத்தர வர்க்கம் மெதுமெதுவாக தெருக் கோடிக்கு அதிகம் வந்து கொண்டிருப்பதால் நிச்சயம் அப்பொழுது உங்கள் எழுத்தின் வீரியம் வெகுஜனத்திற்கு புரியக்கூடும்.

    எங்கள் இல்லத்தின் உளமார்ந்த நல்வாழ்த்துகள்.

  42. வாழ்த்துகள் வினவு // ஒரு பிரச்சினையில் எங்களோடு வேறுபடுபவர்கள் கூட பிறிதொன்றிலோ, பலவற்றிலோ ஒன்றுபடுவார்கள். //

    எமக்குப் பொருந்துகிறது,நன்றி…எழில்

  43. வாழ்த்துகள் வினவு //சத்தியம் என்றும் தோற்றதில்லை. மென் மேலும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்

    வாழ்த்துகளுடன்
    Arasi-Malik

  44. The woods are lovely, dark, and deep,
    But I have promises to keep,
    And miles to go before I sleep,
    And miles to go before I sleep. ராபர்ட் ப்ராஸ்ட்-இன் புகழ் பெற்ற இந்த கவிதை வரிகள் பதிவை படிக்கும் போது நினைவிற்கு வருகிறது. வினவின் வளர்ச்சிக்கும், முயற்சிகளுக்கும் வாழ்த்துக்கள். அன்றாட அரசியல் பற்றிய அலசல்களும், reactions வகை பட்ட கட்டுரைகளுமே அதிகம் வினவில் இடம் பெறுகிறது. ஆய்வெழுத்தின் தரத்தோடு எழுதப்படும் கட்டுரைகள் குறைவாக உள்ளன.

  45. சாதியத்தை எந்த ஊடகமும் சாடுவதில்லை எந்த புரட்சி பேசும் கட்சிகளும் சாதியத்தை துணிவுடன் எதிர்ப்பதில்லை இதை பார்த்தே பலரும் சாதியை எதிர்க்க தயங்குகிறார்கள்.திரைப்படங்களும் பத்திரிக்கைகளும் சாதி மீது ஒரு மரியாதையையும் பயத்தையுமே ஏற்படுத்துகின்றன,ஆனால் வினவு மட்டும் தான் சாதியத்தை சர்வ அலட்சியத்தோடு அடித்து நொறுக்கும் அதீத துணிவு கொண்ட ஒரு களமாய் திகழ்கிறது.இந்த ஒரு அதிநேர்மையான துணிவு ஒன்றிற்காகவே வினவுக்கு தலை வணங்குகிறேன்.மென்மேலும் வளர்க நெஞ்சார வாழ்த்துகிறேன்.

  46. அறிவொளி இருளைக்கிழித்து பரவட்டும். நமக்கு சுயமரியாதையைக் கற்றுக்கொடுத்து உரிமைகளைப் பெற்றுக்கொடுத்த நம் முன்னோர்கள் கொள்கைகளை தளராது முன்னெடுத்துச்செல்வோம். புரட்சிகர வாழ்த்துக்கள்.

  47. வாழ்த்துகள்…. வினவு இன்னும் மக்களுக்கு ஐயங்களை கலைய வேண்டும்.

  48. Vinavu,

    Congrats on 5th anniversary. You have helped me to sharpen my understanding of the society. I consider capitalism is necessary (not crony cpatialism) along with strict regulations.

    I consider there can not be any better system other than Communism to improve the capitalism.

    Thanks for your service.

    If a section on scientific literature in tamil can be started it would be great,

  49. வினவு மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.இணையப்பதிவின் மூலமாக வினவின் கருத்துக்கள் அனைவருக்கும் சென்று சேர வேண்டும் என்கிற ஆவலில் எனது நட்பு வட்டத்திற்க்கும் வினவினை அறிமுகம் செய்ததில் பெருமை கொள்கிறேன்.

    வாழ்த்துக்கள்.

    • வினவின் பதிவு பிற இந்திய மொழிகளிலும், ஆங்கிலத்திலும் வெளிவர வேண்டும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க