Sunday, October 17, 2021
முகப்பு செய்தி அழாதீங்க அப்துல் கலாமண்ணே, நாம ஏற்கனவே நெம்பர் ஒன்னுதாம்ணே!

அழாதீங்க அப்துல் கலாமண்ணே, நாம ஏற்கனவே நெம்பர் ஒன்னுதாம்ணே!

-

செய்தி -36

அப்துல்-கலாம்ந்தியாவின் கனவு மன்னன் அண்ணன் கலாம் அவர்கள் தேசத்துக்கான அடுத்த ரவுண்டு கனவு பாக்கேஜை அறிவித்துள்ளார். கொல்கத்தாவில் இந்திய கண்ணாடி மற்றும் பீங்கான் ஆய்வு மையத்தைத் திறந்து வைத்துப் பேசிய கலாம், இந்தியா ‘ஐந்தாம் தேச மனநோயால்’ (fifth nation syndrome) பீடிக்கப்பட்டிருப்பதாகச் சொல்லியிருக்கிறார். அது என்ன ஐந்தாம் தேச மனநோய்?

அதாகப்பட்டது, இந்தியா விண்வெளிக்கு ராக்கெட் விட்டாலும் சரி அணுவாயுத பரிசோதனை செய்தாலும் சரி, அதற்கு முன் வேறு நான்கு நாடுகள் அதே விஷயத்தை செய்து முடித்து இருப்பதால் இந்தியா அந்த விஷயத்தை நிறைவேற்றிய ஐந்தாம் நாடாக மாறி விடுகிறதாம். இந்த பீடையிலிருந்து விடுபட என்ன செய்ய வேண்டுமென்பதையும் கலாமே பரிந்துரைத்துள்ளார் என்பது தான் விசேஷம்.

இனிமேல் இந்தியா எது செய்வதாக இருந்தாலும் முதலில் செய்து விட வேண்டுமாம். அப்படிச் செய்து விட்டால் முதலில் சாதித்த நாடு என்கிற பெயரைப் பெற்று விட முடியுமாம். “அப்டியே தமிழ்நாட்டைப் பேத்து எடுத்துனு போயி டில்லிக்குப் பக்கத்தாப்டி வச்சிட்டா போதும்; பொறகாப்டி நாம தானே நெம்பர் ஒன்னு” என்கிற வடிவேலுவின் குரல் உங்களுக்குக் கேட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.

இந்தியாவை ‘நெம்பர் ஒன்’ ஆக்கும் இந்த விஷயத்தில் எங்களால் முடிந்த உதவியை அண்ணன் கலாமுக்கு செய்யலாமா என்று யோசித்துப் பார்த்த போது தான் நாம் ஏற்கனவே பல விஷயங்களில் நெம்பர் ஒன்னுக்கும் முன்னே நிற்பது நினைவுக்கு வந்தது. பாருங்களேன்,  உலகிலேயே நெம்பர் டூ போவதற்கு கக்கூசு வசதியில்லாத நாடுகளின் பட்டியலில் நெம்பர் ஒன்னுக்கு பக்கத்திலேயே நிற்கிறோம் – கொஞ்சம் முக்கினால் போதும் நெம்பர் ஒன் தான்.

அதே போல், உலகிலேயே ஊட்டச்சத்துக் குறைபாடான குழந்தைகள் இருக்கும் நாடுகளின் பட்டியலிலும் நாம் தான் முன்னணி. வீடற்றவர்கள், தினமும் மூன்று வேளை உணவு கிடைக்காதவர்கள், சேரிகளில் வாழ்பவர்கள் என்று எந்தப் பட்டியலை எடுத்துக் கொண்டாலும் உலகிலேயே மிகச் சிறப்பான இடத்திலே தான் பரம பவித்ரமான நம் புண்ணிய பாரத தேசம் இருக்கிறது.

இருக்கும் சிறப்பெல்லாம் போதாதென்று பல்வேறு ஊழல்களில் களவாடப்பட்ட தொகையில் சேரும் பூச்சியங்களின் எண்ணிக்கை வளரும் வேகத்திலும் நம் நாடு தான் படு வேகமாக முன்னேறி வருகிறது. உலகப் புகழ்பெற்ற கணித மேதைகளே இந்தியா இந்த விஷயத்தில் அடைந்து வரும் முன்னேற்றத்தைக் கணக்கில் கொண்டு புதிதாக சேரும் பூச்சியங்களுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று குழம்பி வருவதாகக் கேள்வி.

எனவே கனவு ஃபாக்டரி கலாம் பெரிய மனது வைத்து ஏற்கனவே இந்தியா அடைந்துள்ள முன்னேற்றங்களையும் கவனத்தில் வைத்துக் கொண்டு பேச வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறோம்.

அடுத்து, அதே நிகழ்ச்சியில் அண்ணா – அர்விந் கேஜ்ரிவால் குழுவினரின் ஊழலுக்கு எதிரான இந்தியா பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, “முதலில் உங்க வீட்டை சுத்தப்படுத்துங்க, அடுத்த எங்க வீடு, அடுத்து பக்கத்து வீடு, அடுத்து அவர் வீடு – இதே போல், எல்லோருடைய வீடும் ஊழலற்று சுத்தமானால் நாடும் சுத்தமாகும்” என்று திருவாய் மலர்ந்துள்ளார்.

அதாவது, நம்ம பெஞ்சு கோர் டவாலி கோவாலுசாமி கேஸ் கட்டை தூக்கி மேலே வைக்க பதினேழு ரூபாய் ஐம்பது காசுகளையும் ஒரு பீடிக் கட்டையும் டேபிளுக்கு அடியில் கை நீட்டி வாங்கும் உலகமகா ‘ஊழலைப்’ பார்த்து பொறாமைப் பட்டதால் தான் அம்பானியும் வேதாந்தியும் மிட்டலும் ஜிண்டாலும் சில லட்சக்கணக்கான கோடிகளில் கொள்ளையடித்து கொதிக்கும் தம் உள்ளங்களை ஆற்றுப் படுத்திக் கொள்கிறார்களாம். நம்ம டவாலி கோவாலுசாமி பீடிக் கட்டு வாங்கியது தான் அம்பானிக்கே இன்ஸ்பிரேஷனாய் இருக்கிறதாம். எப்பேர்பட்ட தத்துவம்!?

______________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

  1. Nothing wrong in what Kalam said. He wants the younger generation to have a better vision. Yes he dont talk about economic policy, reforms, Agriculture & corruption. He just encourages people to be innovative.

  2. அப்துல் கலாம் தன்னை பெரிய மகாத்மா என்று பைத்தியத்தனமாக உளரிக்கொன்டு திரிகிரார்.அவரை பலநூறு முட்டாள்கள் ஆதரவு தெரிவிப்பதால்.

  3. செம நக்கல் பதிவு. உங்க கோபம் 100%நியாயமானது. ஆனா அதுக்காக கலமை திட்டி என்ன பயன். இந்த வசதிகளை செய்து தரவேண்டிய நாம ஓட்டுபோடற அரசியல் வியாதிகள் 7 தலைமுறைக்கு சொத்து சேத்து வைக்கவே நேரமில்லாம இருக்காங்க. அவனுங்களைதான் திட்டணும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க