privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்'கோல்கேட்': உப்புமா கம்பெனிகளும் உலகமகா யோக்கியர் மன்மோகன் சிங்கும்!

‘கோல்கேட்’: உப்புமா கம்பெனிகளும் உலகமகா யோக்கியர் மன்மோகன் சிங்கும்!

-

நிலக்கரி ஊழல்ரி திருட்டை அம்பலப்படுத்தி மத்திய கணக்குத் தணிக்கை அதிகாரி தனது அறிக்கையை சென்ற 17-ம் தேதி பாராளுமன்றத்தில் சமர்பித்துள்ளார்.  அதைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக பாராளுமன்றத்தில் கடும் அமளி கிளம்பிய நிலையில் நேற்று (27/08/2012)  கணக்குத் தணிகை அதிகாரியின் அறிக்கைக்கு பதிலளித்து உலகமகா யோக்கியர் மன்மோகன் சிங் வாயைத் திறந்து பாராளுமன்றத்தில் பேசியுள்ளார்.

32 அம்சங்கள் கொண்ட பதிலில், 2006 – 2009 காலகட்டத்தில் பெருவாரியான நிலக்கரி வயல்கள் தனியார்களிடம் தாரைவார்க்கப்பட்டது பற்றி குறிப்பிட்ட பிரதமர்,  நிலக்கரி வயல்களைத் தனியாருக்கு ஒதுக்கீடு செய்வதற்கு புதிய வழிகாட்டுதல்கள் மற்றும் சட்டதிருத்தங்கள் கொண்டுவரும் வரை தள்ளி வைக்க முடிவு செய்திருந்தால், அது தேசத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியையே (GDP) பாதித்திருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த விளக்கத்துக்கு டைம்ஸ் நௌ சேனலின் விவாதத்தில் கோனார் உரை எழுத முன்வந்த கபில் சிபல், சிமெண்டு, இரும்பு மற்றும் மின்சார உற்பத்திக்கு நிலக்கரி மிக அவசியமான மூலப்பொருள் என்றும், இதை ஒதுக்கீடு செய்வதில் தாமதிப்பது தேச வளர்ச்சிக்கே எதிரானது என்றும்  தெரிவித்தார்.

இது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்.

மின்சாரம் சிமெண்டு மற்றும் இரும்பு உற்பத்தியோடு எந்த வகையிலும் சம்பந்தப்படாத உப்புமா கம்பெனிகளுக்கும் நிலக்கரி வயல்கள் தாரளமாக வாரி வழங்கப்பட்டுள்ளன. பல நிறுவனங்கள், தமது தேவைகளுக்கும் மிஞ்சி நிலக்கரி வயல்களின் உரிமங்களைப் பெற்றுள்ளன. மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பிரகாஷ் இன்டஸ்ட்ரீஸ், 25 கோடி டன் நிலக்கரியை கள்ளச் சந்தையில் விற்று 4000 கோடிகள் லாபம் பார்த்துள்ளது.

அதே போல், கொல்கத்தாவைச் சேர்ந்த எலெக்ட்ரோ ஸ்டீல் நிறுவனத்தின் தேவையே 50 லட்சம் டன்கள் தான் – ஆனால், அந்நிறுவனத்துக்கு 96.3 கோடி டன்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரிசாவின் நவபாரத் நிறுவனம் தனக்கு ஒதுக்கப்பட்டதில் இருந்து எஸ்ஸார் நிறுவனத்துக்கு விற்று 200 கோடி லாபம் பார்த்துள்ளது. பல கம்பெனிகள் இது வரை நிலக்கரியை எடுக்க எந்த முயற்சியையுமே செய்யவில்லை – அதற்கான முன் அனுபவமோ தொழில்நுட்பமோ பல கம்பெனிகளிடம் இல்லை. ரியல் எஸ்டேட் முதலைகளைப் போல விலையேறினால் விற்றுக் காசாக்கலாம் என்று போட்டு வைத்துள்ளன.

நிலக்கரி வயல்களைக் கைப்பற்றிய நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் திடீரென்று நூற்றுக்கணக்கான மடங்கு அதிகரித்துள்ளது. அப்படி அதிகரித்த பங்குகளை நல்ல விலைக்குத் தள்ளி விட்டு கொழுத்த லாபம் பார்த்துள்ளன இந்நிறுவனங்கள். இந்த சூதாட்டத்தைத் தான் பிரதமர் தேச வளர்ச்சியென்கிறார்.

தேசத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ( GDP) விவசாயம் மற்றும் சிறுதொழில்களின் பங்கு வருடா வருடம் தேய்ந்து கொண்டே வருகிறது. கோடிக்கணக்கானோருக்கு வாழ்வளிக்கும் இத்துறைக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த மானியங்களும் சலுகைகளும் வெட்டிச் சுருக்கப்பட்டு விட்டது – அதற்கெல்லாம் மன்மோகன் கலங்கவில்லை. ஆனால், பெரும் தரகு முதலாளிகளுக்கு தேசத்தின் வளங்களை விருந்து வைப்பது தடைபட்டால் ஜி.டி.பி சதவீதம் குறைந்து விடும் என்று ஒரு பிரதமர் கவலை கொள்கிறாரென்றால் அவர் யாருக்குப் பிரதமர்?

தனது உரையின் துவக்கத்தில் நிலக்கரி ஒதுக்கீட்டைச் செய்தது தானேயென்று பொறுப்பேற்றுக் கொண்ட பிரதமர், தாம் இதற்கு முந்தைய அரசுகள் பின்பற்றிய வழிமுறைகளையே பின்பற்றியதாகச் சொல்கிறார். மேலும், நிலக்கரியை வருவாய் ஈட்டும் வகையினமாக எப்போதும் கருதப்பட்டதில்லை என்பதால் அரசுக்கு நட்டம் இல்லையென்கிறார்.

இதே போன்ற விளக்கங்களைத் தான் ஆ.ராசாவும் அளித்திருந்தார். அவருக்கு பதவி பறிப்பு, நீதிமன்ற விசாரணை, சிறையிலடைப்பு என்றால் மன்மோகன் சிங்கிற்கு மட்டும் விதிவிலக்கா?

டைம்ஸ் நௌ சேனலின் விவாதத்தில் ஏலம் எடுத்த நிலக்கரி வயல்களில் ஏன் இதுவரை நிலக்கரி வெட்டியெடுக்கப்படவில்லை என்று கேட்டதற்கு, “நிலக்கரி வெட்டுவதென்றால் சும்மாவா, அதற்கு நிறைய திட்டமிட வேண்டும், பல்வேறு துறைகளில் தடையில்லா சான்றுகள் பெற வேண்டும், மாவோயிஸ்டுகள் வேறு இருக்கிறார்கள் மேலும் பல சிக்கல்கள் உள்ளன. எனவே குறைந்தது 54 மாதங்களாகும் தெரியுமா?” என்று சவடால் அடித்தார் கபில் சிபல்.

இன்னும் 54 வருடங்கள் கூட ஆகலாம் – ஏனெனில், ஏலம் எடுத்த லெட்டர் பேடு உப்புமா கம்பேனிகள் இனிமேல் தான் ஆட்களைப் பிடித்து பள்ளிக்கு அனுப்பி படிக்கவைத்து அதன் பின் கல்லூரிக்கு அனுப்பி கனிமங்களைப் பற்றி படிக்க வைத்து, புவியியல் படிக்க வைத்து, எந்திரவியல் படிக்கவைத்து… அடேங்கப்பா. கொஞ்சம் கஷ்டம் தான். இதெல்லாம் கபில் சிபல் சொல்லாமல் விட்ட ‘பல சிக்கல்களில்’ அடங்கும் விஷயங்கள்.

ஒரு பகிரங்கத் திருட்டை வார்த்தைகளுக்குள்ளும், விளக்கங்களுக்குள்ளும் ஒளித்து வைத்துக் கொண்டு என்னமாய் விளையாடுகிறார்கள்? இதற்கு தியேட்டர் வாசலில் நடக்கும் மூன்று சீட்டு மங்காத்தா எவ்வளவோ மேல்!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க