Thursday, December 12, 2024
முகப்புஉலகம்அமெரிக்காஆளைப் 'போட' ரவுடி - ஒரு நாட்டையே 'போடனும்'னா?

ஆளைப் ‘போட’ ரவுடி – ஒரு நாட்டையே ‘போடனும்’னா?

-

செய்தி-59

பிளாக்வாட்டர்பிளாக்வாட்டர் என்ற பெயரில் இயங்கி வந்த கிரிமினல் நிறுவனத்தின் மீதான வழக்குகளை ரத்து செய்து அதன் வாரிசு நிறுவனமான அகாடமிக்கு நற்சான்றிதழ் வழங்க முன் வந்திருக்கிறது அமெரிக்க அரசு.

பிளாக்வாட்டர் நிறுவனம் அமெரிக்க கடற்படையின் சீல் பிரிவு முன்னாள் வீரர் பிரின்ஸ் என்பவரால் 1997-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அமெரிக்க ராணுவத்துக்கும், பல்வேறு நாட்டு அரசுகளுக்கும், மான்சான்டோ, செவ்ரான், வால்ட் டிஸ்னி போன்ற வணிக நிறுவனங்களுக்கும், டாய்ச்ச வங்கி, பார்க்ளேஸ் வங்கி போன்ற வங்கிகளுக்கும் தனது சேவைகளை வழங்கி வந்திருக்கிறது அந்த நிறுவனம்.

பிளாக்வாட்டர் போன்ற தனியார் கான்டிராக்டர்களை பயன்படுத்துவதன் மூலம் சட்ட விரோதமான நடவடிக்கைகளுக்கான பொறுப்பிலிருந்து தப்பித்துக் கொள்வது அமெரிக்க அரசின் செயல்தந்திரமாக உள்ளது. போர்களின் மூலமே அமெரிக்க பொருளாதாரத்தை தாங்கிப் பிடிக்க முடியும் என்ற நிலையில், நிகழ்த்தும் மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் இவற்றிலிருந்து தப்பிக்க தனியார் பாதுகாப்பு படைகளை பயன்படுத்திக் கொள்கிறது அமெரிக்க அரசு.

ராணுவ வீரர்களுக்கு நிகராக அளவில்லாத அதிகாரம், பணம் இவற்றோடு மிக முக்கியமாக நெறி, சட்டம் என்று எல்லாவற்றிற்கும் அப்பால் இந்த தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் செயல்படுகின்றனர். அரசுகள் அனுப்பும் ராணுவங்கள் பெயரளவிலான நெறிகளுக்காவது கட்டுப்படுவது போல காட்ட வேண்டியிருக்கிறது. எந்த கட்டுப்பாடும் இல்லாமல் செயல்படும் தனியார் நிறுவனங்கள் ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் நடத்திய போர்க் குற்றங்கள் ஏராளம். அவற்றை அமெரிக்க அரசு “எங்கள் மீது தவறில்லை, நாங்கள் கான்ட்ராக்ட் விட்ட நிறுவனத்தின் தவறு” என்று கை கழுவி விடுகிறது.

ஈராக்கில் அமெரிக்க வெளியுறவுத் துறைக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை அளிப்பதற்கான $2 பில்லியன் பணியை பிளாக்வாட்டர் பெற்றிருந்தது. 2007-ம் ஆண்டு செப்டம்பர் 16-ம் தேதி அமெரிக்க வெளியுறவு குழு ஒன்றுக்கு பாதுகாப்பாக சென்ற பிளாக்வாட்டரின் 5 காவலாளிகள் பாக்தாதின் அல்-நிசூர் சதுக்கத்தில் துப்பாக்கி சூடு நடத்தியதில் 14 ஈராக்கிய பொது மக்கள் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து ஈராக்கிலும் உலக அளவிலும் பலத்த கண்டனங்கள் எழ, அமெரிக்க அரசு பிளாக்வாட்டர் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை 2009-ம் ஆண்டு ரத்து செய்ய வேண்டி வந்தது.

ஆனால், பிளாக்வாட்டர் தனது பெயரை எக்ஸ்ஈ(Xe) என்று உடனடியாக மாற்றிக் கொண்டது. உரிமையாளர் பிரின்சுக்கு சொந்தமான டோட்டல் இன்டலிஜென்ஸ் சொல்யூசன்ஸ் மற்றும் டெரரிசம் ரிசர்ச் ஆர்கனைசேசன் ஆகிய நிறுவனங்களின் மூலம் பிளாக்வாட்டரின் மாபியா சேவைகள் அமெரிக்க இராணுவத்துக்கும் வெளிநாட்டு அரசுகளுக்கும் வணிக நிறுவனங்களுக்கும் தொடர்ந்து அளிக்கப்படுகின்றன. 2009-ம் ஆண்டு பிளாக்வாட்டரின் பினாமி நிறுவனமான பாராவந்த் ஆப்கானிஸ்தானில் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது அம்பலமானது.

2011-ம் ஆண்டு பிளாக்வாட்டர் மீண்டும் ஒரு முறை தனது பெயரை மாற்றிக் கொண்டு அகாடமி (Academi) என்று மறுபிறவி எடுத்தது. இப்போது இந்த அகாடமி என்ற நிறுவனத்துடன் பிளாக்வாட்டரின் கிரிமினல் செயல்களை மன்னித்து விடுவதற்கான ஒப்பந்தத்தை அமெரிக்க அரசு போட்டிருக்கிறது. அமெரிக்க அரசு புதிய பெயரில் பிளாக்வாட்டருடன் கள்ள உறவை தொடர்வதற்கும், உலகெங்கிலும் கிரிமினல் செயல்களை தடையின்றி நடத்துவதற்கும் இந்த ஒப்பந்தம் வழி செய்கிறது.

போஸ்னியாவில் போர்க் குற்றங்கள் புரிந்த டெமக்ரா நிறுவனம் அதில் பணிபுரிந்த அமெரிக்க காவலதிகாரி கேத்தியால் அம்பலப்படுத்தப்பட்ட பிறகு அதே நிறுவனம் வேறு பெயருடன் ஈராக் போருக்கான ஒப்பந்தங்கள் பெற்றதையும் நினைவு கூரலாம். அமெரிக்க ஏகாதிபத்தியம் சட்டத்தையும், நீதியையும் மதிக்காத ஒரு ஆக்கிரமிப்பு அரசு என்பதை இத்தகைய தனியார் ராணுவ ஊழல்கள் வெளிப்படையாக தெரிவிக்கின்றன. அமெரிக்கா என்றால் அட்டூழியம் என்பதை யார் இனி மறுக்க முடியும்?

இதையும படிக்கலாம் –

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க