Thursday, September 19, 2024
முகப்புஉலகம்அமெரிக்காThe Whistleblower (2010) திரை விமரிசனம் : அமெரிக்க, ஐ.நா அமைதிப்படையின் அட்டூழியங்கள்!

The Whistleblower (2010) திரை விமரிசனம் : அமெரிக்க, ஐ.நா அமைதிப்படையின் அட்டூழியங்கள்!

-

லகம் முழுவதிலும் போர் நடக்கும் நாடுகளுக்கு ஐ.நா.வின் அமைதிப்படை செல்கின்றதே, அதன் வேலை என்ன? ஏதோ ஒரு நாட்டில் அமைதியை ஏற்படுத்த அவர்கள் ஏன் சிரமப்பட வேண்டும்? அப்படி ஒரு ஆபத்தான பணியை அவர்கள் ஏன் விரும்பி ஏற்றுக் கொள்கிறார்கள்?

இந்தக் கேள்விகளுக்குச் சரியான, அதே நேரம் அதிர்ச்சியான பதிலைச் சொல்லும் திரைப்படம் தான்Whistle Blower . ஐ.நா. அமைதிப்படையின் கோர முகத்தை உறைக்கக் கூறும் இந்த திரைப்படம் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது.

ஐ.நா.வின் அமைதிப்படைகள் தேவ தூதர்கள் அல்ல, வெள்ளைச் சமாதானப் புறாக்கள் அல்ல. பணம், அதிகாரம், கேளிக்கை இவற்றை மையமாகக் கொண்டு ஒன்றிணையும் அதிகார முகங்களின் சாத்தான் படை. இந்தப் படையின் அட்டூழியத்தை எதிர்த்துப் போராடிய ஒரு  சராசரி அமெரிக்கப் பெண் காவல் அதிகாரி காதரின் போல்கோவாக்கின் துணிச்சலான பயணம்  தான் இந்தத் திரைப்படம்.

டிரைலர்

கதை:

விசில்புளோயர்-1அமெரிக்காவில் ஒரு சாதாரண பெண் காவல் அதிகாரியான கேதரின் தன் மகளுடன் குறைந்தபட்ச வசதிகளோடு வாழ முனைகிறார். அதற்கு ஒன்று, பணி இட மாற்றம் வேண்டும், இல்லை வேலையை விட்டு விலக நிறைய பணம் வேண்டும். போர் நடந்து முடிந்திருக்கும் போஸ்னியாவில் ஐ.நா. அமைதிப்படையில் பணி புரிய டெமக்ரா (டைன்கார்ப்)  என்ற  தனியார் பன்னாட்டு நிறுவனம் ஆட்களை எடுக்கின்றது. அந்த விளம்பரத்தைப் பார்த்த கேதரின், டெமக்ரா  ஊழியராக போஸ்னியாவுக்குப் போகும் அமைதிப்படையில் செல்கிறார்.

அந்தப் போர்ச் சூழலில் உயிரைப் பணயம் வைத்து அமைதிக்காகப் பணியாற்ற வந்திருக்கும் டெமக்ரா நிறுவனத்தில் உள்ள தன் சகாக்களை எண்ணிப் பெருமையடைகிறார். அவர்கள் அனைவரும் அமெரிக்கா, இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள்.  போஸ்னியாவில் அடிப்படைச் சட்டங்கள் கூட ஒழுங்காகக் கடைபிடிக்கப்படாத நிலையில் அங்கு பெண்களின் உரிமையை காக்கவும் போராடுகிறார். இதனால் அவருக்குப் பதவி உயர்வு கிடைக்கிறது.

ஒரு நாள் மது விடுதி ஒன்றை போஸ்னிய போலிசார் சோதனையிடுகிறார்கள். அங்கிருக்கும் பெண்களைக் காப்பகத்துக்கு அழைத்துச் செல்வதாகச் சொல்கிறார்கள். அந்த விடுதியைப் பார்வையிடும் கேதரினுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. அந்த பெண்கள் 15 வயது முதல் 20 வயதுக்குட்பட்டவர்கள், ஏழை நாடுகளைச் சேர்ந்தவர்கள். ஐரோப்பாவில் ஏதாவது வேலைக்குச் செல்லலாம் என்ற ஆசை வார்த்தைக்கு மயங்கி நாடு கடத்தப்பட்டவர்கள். சட்டத்திற்குப் புறம்பாக, ஐ.நா. அமைதிப்படையினராலேயே கடத்தி வரப்பட்டு, பல அதிகாரிகளின் வக்கிர காம வெறிக்குப் பலியானவர்கள்.

மறு நாள் அந்தப் பெண்கள் அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் காப்பகத்திற்கு செல்கிறார் கேதரின். ஆனால், அங்கு யாரும் புதிதாக வரவில்லை என்று தெரிகின்றது. அவர் பணி புரியும் நிறுவனத்தின்  கணிப்பொறியிலும் இப்படி ஒரு சோதனை நடந்ததற்கான தகவல்கள் ஏதும் இல்லை. பெண்கள் மறுவாழ்வுக் காப்பகத்தின் மருத்துவர் உதவியுடன் இன்னும் பல அதிர்ச்சியான தகவல்களைத் தெரிந்து கொள்கிறார்.

அந்த மது விடுதியின் உரிமையாளர் ஒழுங்காக போலிசுக்கும், டெமக்ரா அமைதிப் படையினருக்கும் பணம் கொடுத்துவிட்டதால் மீண்டும் அந்தப் பெண்கள் மது விடுதியிலேயே விடப்படுகிறார்கள்.

அந்த விடுயில் இருக்கும் இரண்டு பெண்களைச் சாட்சியமாக்கி டெமக்ரா ஊழியர்களையும், போஸ்னிய போலிசையும் தண்டிக்கலாம் என முயற்சி செய்கிறார். ஒரு கட்டத்தில் அவருக்கு ஒரு உண்மை புலப்படுகின்றது. ’இது ஒன்றும் யாருக்கும் தெரியாத ரகசியமில்லை!’ ஐ.நா. அதிகாரிகள் முதல், அரசு அதிகாரிகள், டெமக்ரா நிறுவன மேலாளர்கள் என சகலருக்கும் பெண் கடத்தல் விவகாரம் தெரிந்த ஒன்றுதான் என்ற உண்மைதான் அது.

இதை வெளியே சொன்னால் டெமக்ரா நிறுவனம் ஐ.நா. உடன் போட்டிருக்கும் பல மில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தம் ரத்தாகும். அதனால் இதை மூடி மறைக்க  முயற்சிக்கிறார்கள் ஐ.நா. அதிகாரிகள். கேதரின் போராடுகிறார். கேதரினை மிரட்டுகிறார்கள், பலனில்லை. கடைசியில் அவரை வேலையை விட்டே துரத்துகிறார்கள். கேதரினும் இறுதியில் பல போராட்டங்களுக்குப் பின் அந்த ஆவணங்களை வெளி உலகிற்கு எடுத்துச் சென்று அம்பலப்படுத்துகிறார்.

கேதரின் பிபிசி தொலைக்காட்சியில் இதை அம்பலப்படுத்தும் காட்சியைத் தொடர்ந்து, அதே நிறுவனம் இப்பொழுது ஈராக் அமைதிப்படைக்கான பல மில்லியன் டாலர் ஒப்பந்தம் ஒன்றை ஐ.நா. உடனும், அமெரிக்க அரசுடனும் செய்திருக்கிறது என்ற உண்மைச்  செய்தியுடன் படம் முடிவடைகின்றது.

அரசை நம்பும் சாதாரணமானவர்கள்:

கேதரின் ஒரு சாதாரண அமெரிக்கப் பெண் காவலதிகாரி. அவருக்கு ஒரே மகள். அவர் தனது வேலையை மிகவும் நேசிக்கிறார். அரசை நம்பும் ஒரு சாதாரண பிரஜை அவர். அதிகப் பணம் ஈட்ட அவர் டெமக்ராவின் ஊழியராக போஸ்னிய செல்லும் போது, அங்கு நிலவும் அசாதாரண போர்ச் சூழல் நடுவே அமைதியை நிலை நாட்ட வந்திருக்கும் தன் சக அதிகாரிகளை ஆச்சரியத்துடன் பார்க்கிறார். நாட்டில் அமைதியை மீண்டும் நிலைநாட்ட தான் எவ்வளவு கடுமையாகவும், உண்மையுடனும் உழைக்க வேண்டும் என்று அவருக்கு நன்றாகவே தெரிகின்றது.

ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலைமைகளில் தன்னுடன் வேலை செய்யும் சக அதிகாரிகளின் காமக் கொடூர வக்கிரங்களையும், அநியாயங்களையும் முதலில் காணும் போது உடைந்து போகிறார். தன்னைச் சுற்றி இருப்பவர்களில் யாரை நம்ப வேண்டும், யாரை எதிர்க்க வேண்டும் என்று அவருக்கு புரியவே இல்லை. அது அவரை பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறது.

அவருடைய நிறுவனத்தையே எதிர்க்க வேண்டிய சூழலில் அவர் நம்பும் ஒவ்வொருவரும் அவரை விட்டு விலகுகிறார்கள். ஒருவர் தவறு செய்கிறார் என அவரைப் பற்றிய புகாருடன் மேலதிகாரியைப் பார்க்க, அவர் இந்தப் புகாரை மழுப்ப முனைகிறார். இப்படிப் புகார் மேல் புகார், மழுப்பல் மேல் மழுப்பல் என நாட்கள் செல்லச் செல்ல, கேதரின் மெதுவாக அந்த அமைப்பின் வேரே தவறாக இருப்பதை தன் அனுபவங்களினூடே புரிந்து கொள்கிறார்.

’நான் ஒரு நேர்மையான ஐ.ஏ.எஸ் அதிகாரியாவேன், நல்ல போலீசாக வந்து நாட்டைத் திருத்துவேன், நல்ல அரசியல்வாதியாவேன்’ என்று நிலவும் அமைப்பைப் புரிந்துக்கொள்ளாமல் பல இளைஞர்கள் அந்த அமைப்பினுள் சமரசவாதிகளாக செல்வதைப் பார்த்து இனி போராட நினைப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டியது: ’அமைப்பினுள் இருந்தே சரி செய்யலாம்’ என்ற வாதம் எவ்வளவு சொத்தையானது என்பதைத் தான். கேதரின் தன் அனுபவதில் ஓரிடத்தில் சொல்கிறார் “நான் இந்த அமைப்பினுள் இருந்தே இதை மாற்ற முடியும் என்று எண்ணியது எவ்வளவு பெரிய முட்டாள்தனமான செயல்” என்று.

விசில்புளோயர்-2
அமைப்பு முறைக்குள் நின்று இளம் பெண்களை காப்பாற்ற முடியாத கேதரின்

அமைதிப்படையும், ஐ.நா.வும்:

ஒரு காட்சியில் டெமக்ரா நிறுவனத்தின் தலைவர் சொல்கிறார், ”நான் என் ஊழியர்களுக்கு நன்னடத்தை விதிகளைப் போதிக்க முடியாது”. நன்னடத்தை விதிகளை அமைதிப்படை வீரர்களுக்குப் போதிக்க முடியாதாம். “பல நாள் குடும்பத்த விட்டு பிரிஞ்சிருக்கிற ராணுவ வீரன் போற எடத்துல பொண்ணுங்க மேல கைய வைக்க தான் செய்வான்” என்று பாசிச அரசாட்சியை ஆதரிப்பவர்கள் கூறுவதற்கு நிகரான வார்த்தைகள் இவை. ஆனால் சமகால சமுக சூழலில் இதில் அதிர்ச்சியடைய ஒன்றுமில்லை.

ஐ.நா. நிறுவனமயமாக்கப்பட்டு, ஏகாதிபத்திய நாடுகளுக்கு வாலாட்டுகிற ஒரு நிறுவனம். ஆரம்பித்த நாள் முதல் இந்த நாகரீக காலத்தில் ஐ.நா. எத்தனை போர்களை தடுத்திருக்கின்றது? ஏன் இப்பொழுது கூட அமெரிக்கா ஈராக் மீது ஆக்கிரமிப்புப் போர் நடத்தியதே ! ஐ.நா. என்ன செய்து விட்டது? ஈழத்தில் நடந்து கொண்டிருந்த யுத்தத்தின் சத்தம் ஐ.நா. காதில் விழவே இல்லையே!
ஆனால் எல்லாம் முடிந்தவுடன், இன்று ஈராக் மறுவாழ்விற்க்கும், ஈழத்தின் போர் குற்றங்களுக்கும் ஏதோ பிடில் வாசிக்கின்றது ஐ.நா. ’ஏகாதிபத்திய நாடுகளுக்கு ஆவணப்படுத்த வேண்டுமே’ என்று ஈழ யுத்தத்தை ஆவணப்படுத்தியது, அதற்கு மேல் பேச்சு மூச்சில்லை.

படத்தின் இறுதிக்காட்சியில் சொல்வது போல் இன்று டெமாக்ரா (டைன்கார்ப்)  நிறுவனம் ஈராக்கில் மறு வாழ்வு அமைக்க அமைதிப்படையை அனுப்பும் ஒப்பந்தத்தைப் பெற்றிருக்கின்றது. போஸ்னிய சம்பவம் வெளிவந்து, உலகமே காறித் துப்பிய பின்னும் அந்த  நிறுவனத்திற்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டிருக்கிறது என்றால், ஈராக் பெண்களை யார் காப்பற்றுவது?

Human Trafficking: மனிதக் கடத்தல்!

படத்தின் ஆரம்பத்தில் உக்ரைனில் இருந்த இளம் பெண் ஒருவரை அவர் உறவினரே போஸ்னியாவுக்கு விபச்சாரம் செய்ய விற்றிருப்பார். படத்தில் அந்தப் பெண் தப்பிக்க முயல, பல இன்னல்களைச் சந்தித்து இறந்து விடுவார். அந்தப் பென்ணை மீட்க அவரின் தாய் இன்னொரு பக்கம் போராடிக் கொண்டிருப்பார்.

உலக அளவில்,இந்தியா உள்பட்ட ஏழை நாடுகளில் இருந்து பல பெண்கள் உலகளாவிலான இந்தப் பாலியல் சந்தையில் விற்கப்படுகிறார்கள். இந்தச் சந்தை மட்டும் பல பில்லியன் டாலர் பணம் புழங்கும் ஒரு தொழில். அப்பாவிகளான 15 வயதே ஆன சிறுமிகள் கூட பல பணக்காரர்களின் கேளிக்கைக்கும், வக்கிரத்திற்கும் பலியாகிறார்கள்.
எந்நேரமும் சுரண்டலில் ஈடுபடும் பணக்கார முத்லாளிகளின் கேளிக்கைக்கு பாலியல் சுற்றுலா என்று தாய்லாந்து, உக்ரைன், மலேசியா, ஏன் நம்ம ஊர் கோவா, மாமல்லபுரம் வரை பெண்களும், குழந்தைகளும் பலியாகிறார்கள். இதில் மிக முக்கிய விடயம் இவையெல்லாம் சட்டப்பூர்வமானவை.

தாய்லாந்திலோ, காமத்திபுராவிலோ, சோனகச்சியிலோ, ஜப்பான் கிஷாக்களோ எல்லாம் சட்டப்பூர்வமானவை. இராணுவம் முதல் இந்த மாதிரியான அமைதிப்படைகள் வரை அவர்களின் பாலியல் வேட்டை சாதாரண பெண்கள் மீது நீண்டாலும் அதை அரசு கண்டும் காணாமல் விட்டுவிடுகின்றது. இன்னொரு பக்கம், பல பெண்கள் இப்படி கடத்தி வரப்படுவதையும் ஐ.நா. அதிகாரிகள், அறிவாளிகள், அரசு மந்திரிகள் கண்டுகொள்வதில்லை. ஆனால் குளிரூட்டப்பட்ட அறையில் நன்கு தின்று, புளித்த ஏப்பத்துடன் குழந்தைகள் மீதான பாலியல் பிரச்சினைகளைப் பற்றியும், பெண்ணியம் பற்றியும் இவர்கள் மாநாடுகள் போடத் தயங்குவதில்லை.

விசில்புளோயர்-3
கேதரினாக நடித்த ரேச்சல் வெய்சுடன், கேதரின் போல்கோவாக் (வலது)

படம் சொல்லும் தீர்வில் உள்ள பிரச்சினை:

தன் வேலையைக் கூட இழக்கும் கேதரின் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் பெற வேண்டி அந்தத் தனியார் நிறுவனத்தையும், ஐ.நா.வையும் அம்பலப்படுத்த முனைகிறார். அந்த நிறுவனம் ஒரு இங்கிலாந்து நிறுவனம் என்பதால், இந்த ஆவணங்களை பிபிசியில் கொடுக்கிறார். பிபிசி க்கு பேட்டியளிக்கும் ஐ.நா. அதிகாரி, ’ஐநா அமைதிப்படை மீதான இந்தப் பெண் கடத்தல் விவகாரம் ஒரு பொய்’ என்கிறார், அவரின் பேட்டியைத் தொடர்ந்து கேதரினின் ஆதாரங்களுடனான பேட்டி ஒளிபரப்பப்பட்டு, அந்த நிறுவனம் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றது.

கேதரின் ஒரு சாதரண அதிகாரி, தன் நியாய தர்மத்திற்கு அவர் உண்மையாக இருக்கிறார். இந்த அவலத்தை வெளியிடுகிறார். இதுவே பாராட்டப்பட வேண்டியதுதான். அதே போல் இந்தப் படத்தை இயக்கிய லாரிஸாவும் தன் உண்மையான அக்கறையோடு இந்த சம்பவத்தைப் படமாக்கியதுடன், இறுதியில் அந்த நிறுவனம் இன்னும் இயங்குவதையும் சுட்டிக்காட்டுகிறார். அவர்கள் நேர்மையாக இருந்துள்ளார்கள்.

ஏனினும் இந்த மொத்த சம்பவமும் நமக்கு கூறுவதென்ன?, இதற்கு என்ன தீர்வு? சமீபத்தில் ஈழ யுத்தம் நடந்து முடிந்த பிறகு பல தமிழின ஆதரவாளார்களும், மனித உரிமைக் காவலர்களும் ஐ.நா.வின் அறிக்கையை ஒரு புரட்சிகர ஆயுதமாக முன் வைத்தனர். ஐ.நா.வைக் கொண்டு ராஜபக்ஷேவை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என வாதாடினார்கள். அவர்களும் சேர்த்து புரிந்துகொள்ள வேண்டியது இது தான்,

உலகம் முழுவதிலும் ஏகாதிபத்தியங்கள் உலகைச் சுரண்டி கொண்டிருக்கும் வரையில் அவர்களிடம் இந்த ஐநா என்ற நிறுவனம் கைப்பாவையாகத்தான் இருக்கும். படத்தில் வருவது போல் பிபிசி இல் வெளியிட்டு விட்டால் ஒன்றும் மாறி விடாது. ஈழக் காட்சிகள் எத்தனை தொலைக்காட்சிகளில் வந்தன!, விக்கிலீக்ஸ் எவ்வளவு ஆதாரங்களைத் தந்தது!

படத்திலேயே சொல்வது போல் அழுகிப் போன ஒரு அமைப்பினுள் இருந்தே தீர்வைத் தேடுவது முட்டாள்தனமானது மட்டுமல்ல, தீர்வே கிடைக்காது. ஏகாதிபத்திய நலன் சார்ந்த அதிகாரம் வர்க்கம், அரசு, ஊடகம், ராணுவம், பொருளாதாரம் போன்றவற்றை உலகம் முழுவதும் தமது ஆக்டோபஸ் பிடியில் வைத்திருக்கும் போது, அத்தகைய அமைப்பையே தூக்கியெறிய மக்களை அரசியல் படுத்துவது தான் இதற்கு ஒரே தீர்வு. அப்படி அரசியல் படுத்தினால் ஒழிய இந்த ஆவணங்கள் எந்த மதிப்பையும் பெறப் போவதில்லை.
கேதரின் செய்து முடிக்க வேன்டிய வேலை இன்னும் இருக்கிறது.

இறுதியாக முதலாளித்துவ சினிமாவின் கேளிக்கை, பொழுதுபோக்கு என்று மட்டும் சிக்கிக் கொள்ளாமல் தங்களால் இயன்ற அளவு முன் முயற்சியுடன் இந்தப் படத்தை எடுத்த படக் குழுவினருக்கு பாராட்டுக்கள்.

_____________________________________________

–  புதிய கலாச்சாரம், மார்ச் – 2012

___________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

  1. ஐக்கிய நாடுகள் சபை என்று நாம் அதை குறிப்பிடுவதே
    பெரிய அபத்தம்.அது ஐந்து நாடுகள் சபையாகி
    பல மாமாங்கம் ஆயிற்று.
    BJP என்றால் பாரத தீய ஜனதா பார்ட்டி என்பதை போல.

  2. அமைதி படை என்பது ஒரு சுத்ந்திரமான அமைப்பு அதனால் அதனை கட்டுபடுத்துவது களங்களில் கடினம் ஏன் எனில் அவர்களது உயர் அதிகாரிகள் அவர்களது சொந்தநாட்டில் இருப்பர்.கூட இருப்பது வேறுநாட்டினை சேர்ந்தவர்களே அதனால் அதிகாரம் அவர்களது கையில்

  3. 1985ல் இந்திய ராணுவமும் அமைதிப்படை என்றப் பெயரில் பல இலங்கை தமிழர்களையும்,சிங்காளப் பெண்களையும் கற்பழித்தது..

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க