Monday, August 15, 2022
முகப்பு உலகம் அமெரிக்கா நியூயார்க் நகரில் வால்மார்ட் கடை திறப்பு முறியடிப்பு!

நியூயார்க் நகரில் வால்மார்ட் கடை திறப்பு முறியடிப்பு!

-

வால்மார்ட்நியூயார்க் நகரில் கடை திறக்கும் வால்மார்ட்டின் முயற்சியை மக்கள் முறியடித்திருக்கின்றனர்.

அமெரிக்காவில் 4,000 வால்மார்ட் கடைகள் இருந்தாலும் பெரிய நகரங்களான நியூயார்க்கிலும், வாஷிங்டன் நகரிலும் இதுவரை வால்மார்ட் கடைகள் திறக்கப்படவில்லை.

நியூயார்க் மக்கள் கூட்டணி போன்ற சமூக அமைப்புகள், மாநகராட்சி உறுப்பினர்கள், தொழிற்சங்கங்கள் என்று உழைக்கும் மக்களின் பல தரப்பினரும் நியூயார்க்கில் வால்மார்ட் கடைகள் திறக்கப்படுவதை தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர்.  இதற்கு முன்பு நியூயார்க்கின் குயீன்ஸ், ஸ்டாடன் தீவு பகுதிகளில் கடை திறக்கும் திட்டங்களை வால்மார்ட் கைவிட வேண்டி வந்தது.

வழக்கமாக 1.5 லட்சம் முதல் 2 லட்சம் சதுர அடியில் கடைகளை திறக்கும் வால்மார்ட், புரூக்ளினின் கிழக்கு நியூயார்க் மாவட்டத்தில் கட்டப்பட்டு வரும் கேட்வே II என்ற கடைவளாகத்தில் 20,000 சதுர அடி இடத்தை வாடகைக்கு எடுக்கத் திட்டமிட்டிருந்தது. வால்மார்ட் தனிக் கடை திறப்பதற்கு நியூயார்க் மாநகராட்சி உறுப்பினர்களின் எதிர்ப்பால் அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. அதனால்,  பொதுவான அனுமதி பெற்ற கேட்வே II கடை வளாகத்தில் இடம் பிடிக்கத் திட்டமிட்டது வால்மார்ட்.

போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டிருக்கும் அமெரிக்க பணக்காரர்கள் பட்டியலில் 10வது இடம் பிடித்திருக்கும் நியூயார்க் மேயர் மைக்கேல் புளூம்பெர்க் வால்மார்ட் கடை நியூயார்க்கில் திறக்கப்படுவதற்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.  அவரது சொத்து மதிப்பு $25 பில்லியன் (ரூ 1.32 லட்சம் கோடி)

ஆனால், புரூக்ளினில் கடை திறப்பதாக வால்மார்ட் அதிகாரபூர்வமாக அறிவிப்பதற்கு முன்பே கிழக்கு நியூயார்க்கைச் சேர்ந்த நூற்றுக் கணக்கானவர்கள் அந்த திட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். உள்ளூர் தொழிற்சங்கங்களும் மாநகராட்சி உறுப்பினர்களில் பலரும், சமூகக் குழுக்களும் நியூயார்க்கினுள் புறவாசல் வழியாக நுழையும் வால்மார்டின் முயற்சிக்கு தமது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

“வால்மார்ட்டின் கார்ப்பரேட் கொள்கைகள் (உற்பத்தியாளர்களுக்கு) குறைந்த விலையையும் தொழிலாளர்களுக்கு கடுமையான பாதிப்புகளையும்தான் தருகின்றன” என்று ‘யுனைட்டட் உணவு மற்றும் வணிக தொழிலாளர்கள் சங்கத்தின்’ பேச்சாளர் பேட்ரிக் பர்செல் கூறினார்.

மக்களின் உறுதியான எதிர்ப்பைத் தொடர்ந்து கேட்வே II நிர்வாகம் வால்மார்ட்டுடனான பேச்சு வார்த்தையை முறித்துக் கொண்டது.

“மக்கள் ஒன்று சேர்ந்தால் உலகின் மிகப்பெரிய நிறுவனம் கூட பின் வாங்க வேண்டியதுதான் என்பதை வால்மார்ட் கேட்வே IIவிலிருந்து துரத்தப்பட்டதன் மூலம் தெரிந்து கொள்ள வேண்டும்” என்று ‘வால்மார்ட் இல்லாத நியூயார்க் நகரம்’ என்ற அமைப்பின் பேச்சாளர் ஸ்டெபானி யாஸ்கி தெரிவித்திருக்கிறார்.

‘ஒரு வால்மார்ட் கடை திறக்கப்பட்டதும் சுற்று வட்டாரத்தில் உள்ள சிறு வணிகர்கள் அனைவரும் தொழிலை விட்டு துரத்தப்படுகின்றனர்’ என்பதை வால்மார்ட் பற்றிய ஆவணப்படம் பதிவு செய்கிறது. ‘ஊழியர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் மட்டுமே கொடுப்பது,  அடிப்படை மருத்துவக் காப்பீட்டு வசதியை மறுப்பது’ போன்ற வால்மார்ட்டின் மனித விரோத கொள்கைகளையும் அந்த ஆவணப்படம் அம்பலப்படுத்தியுள்ளது.

15 நாடுகளில் வெவ்வேறு பெயர்களில் நடத்தும் 8,500 கடைகள் மூலம் நடத்திய சுரண்டல்களின் விளைவாக வால்மார்ட் 2012ம் ஆண்டில் $447 பில்லியன் வருமானம் ஈட்டியிருக்கிறது.  அதன் உரிமையாளர்கள் கிறிஸ்டி வால்டன் குடும்பம், ஜிம் வால்டன், அலீஸ் வால்டன், ராப்ஸன் வால்டன் ஆகியோர் போர்ப்ஸ் பத்திரிகையின் பணக்காரர்கள் பட்டியலில்  6வது, 7வது, 8வது, 9வது இடங்களை பிடித்திருக்கின்றனர். அவர்களின் மொத்த சொத்து மதிப்பு $ 107.1 பில்லியன் (சுமார் ரூ 5.6 லட்சம் கோடி)

இத்தகைய வால்மார்ட் போன்ற பெருநிறுவனங்களை இந்திய சில்லறை விற்பனைத் துறையில் அனுமதிப்பதற்காகத்தான் மன்மோகன் சிங், ப சிதம்பரம் போன்ற ‘பொருளாதார மேதைகள் அரசு செலவிலும், பத்ரி போன்ற அமெச்சூர் நிபுணர்கள் சொந்த செலவிலும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

படிக்க

  1. வால்மார்ட் இந்தியாவுக்குள் வந்தால் விவசாயிகளுக்கு நல்ல காலம் பொறக்கும் என்று சொல்கிற காங்கிரஸ்காரன்கள் வாயில் ஒரு குத்து மண்ணைப் போட்ட மாதிரி இருக்கிறது வாஷிங்டன், நியூயார்க் மக்களின் போராட்டம்.தமிழ் நாட்டுப் பெரு வணிகர்கள்[வர்த்தகர்கள்]மென்மையான போராட்டங்களை நடத்துகிறார்கள்.ஆடிட்டர் குருமூர்த்தி[ஆர்.எஸ்.எஸ்.]பேச்சைக் கேட்கிறார்கள்.அன்னிய முதலீட்டைக் கொண்டு ஆதாயம் அடையலாமா என்று ஒரு தரப்பு யோசிக்கிறது.மக்களோடு இணைந்த ஒன்றுபட்டப் போராட்டத்தை வீரியமாக வணிகர்கள் நடத்த வேண்டும்.

  2. //“மக்கள் ஒன்று சேர்ந்தால் உலகின் மிகப்பெரிய நிறுவனம் கூட பின் வாங்க வேண்டியதுதான் என்பதை வால்மார்ட் கேட்வே ஈஈவிலிருந்து துரத்தப்பட்டதன் மூலம் தெரிந்து கொள்ள வேண்டும்” என்று ‘வால்மார்ட் இல்லாத நியூயார்க் நகரம்’ என்ற அமைப்பின் பேச்சாளர் ஸ்டெபானி யாஸ்கி தெரிவித்திருக்கிறார்.//

    ஓராண்டு காலம் போராட்டத்தின் வெற்றி.போராளிகலுக்கு வாழ்த்துக்கள்.

    இது காங்கிரசுக்கும் அதன் கைக்கூலிகளுக்கும் அடிவயிற்றை கலக்கியிருக்கும் செய்தி.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க