வால்மார்ட்: அதிர்ச்சியூட்டும் உண்மைகள்! ஆவணப்படம் – வீடியோ!

12

வால்மார்ட்-ஆவணப்படம்நம்ம ஊரில் மளிகைக் கடையில் அல்லது ஒரு சிறு நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியரை எடுத்துக் கொள்வோம். அவரை சக்கையாக பிழிந்து வேலை வாங்குவார் முதலாளி, சம்பளம் சொல்லும்படியாக இருக்காது. வேலை பார்ப்பவரின் வீட்டில் யாராவது மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். ஊழியர் போய் கை கட்டி சிரமத்தைச் சொன்னால், தேவையான பணத்தைக் கொடுத்து அனுப்பி வைப்பார் முதலாளி.

‘என்ன இருந்தாலும் ஒரு முதலாளியின் தயவில் இருக்க வேண்டியிருக்கிறது. கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை பார்த்தால், பிஎப் உண்டு, மெடிக்கல் இன்சூரன்ஸ் தருவார்கள், பெருமையுடன் நமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம்’ என்று ஒருவர் ஆசைப்பட்டால் நியாயம் இருக்கிறது. மிடுக்கான சீருடை, போக வர வாகன வசதி, மதிய உணவு வசதி, மருத்துவ வசதி, நல்ல சம்பளம் என்ற அம்சங்கள்தான் கார்ப்பரேட் கம்பெனிகளைப் பற்றி நினைக்கும் போது ஒருவருக்குத் தோன்றுபவை. அதுவும் பன்னாட்டு நிறுவனமாக இருந்தால் கேட்கவே வேண்டாம். பன்னாட்டு நிறுவனத்தில் வேலை வாய்ப்புக்கான மதிப்பு திருமண மார்கெட்டில் கூட அதிகம்தான்.

அண்ணாச்சிக் கடை பையன் அப்படி ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலைக்குச் சேருகிறார் என்று வைத்துக் கொள்வோம். ஓரிரு வாரங்களுக்குப் பிறகு கடை மேலாளர் அவனை அழைத்து, ‘ஏதாவது மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டால், 17M பிடித்து சென்ட்ரலில் இறங்கி சாலையைக் கடந்தால் அரசு மருத்துவமனை இருக்கிறது, அங்கு போய் விட்டால் எல்லாவற்றையும் கவனித்துக் கொள்வார்கள்’ என்று சொல்லித் தருகிறார்.

இல்லை ‘பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணும்’ என்று நிறுவனத்தின் காப்பீட்டு திட்டத்தில் சேர ஆர்வம் காட்டினால் அவனது சம்பளத்தில் பெரும்பகுதியை பிரீமியமாக கட்டினால்தான் அதில் சேர முடியும் என்று தெரிய வருகிறது. பல்லைக் கடித்துக் கொண்டு பிரீமியம் கட்டத் தயாராக இருந்தாலும் அதன் விதிமுறைகளின்படி அவனுக்கு அதில் சேர தகுதியே இல்லை என்று அப்புறம் புரிகிறது.

‘உலகத்திலேயே மிகப்பெரிய கார்ப்பரேட் சில்லறை வணிக நிறுவனம் வால்மார்ட் அதன் ஊழியர்களுக்கு இப்படிப்பட்ட மருத்துவ வசதிகள்தான் வழங்குகிறது’ என்பது தெரிய வந்தது ராபர்ட் கிரீன்வால்ட் என்ற அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளருக்கு. (அமெரிக்காவில் மருத்துவ காப்பீடு இல்லாமல் சிறு நோய்களுக்குக் கூட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று விட முடியாது என்பது நடைமுறை).

Wal-Mart: The High Cost of Low Price

ராபர்ட்-கிரீன்வால்ட்
ராபர்ட் கிரீன்வால்ட்

வால்மார்ட்டின் வணிக நடைமுறைகளைப் பற்றி ஆய்வு செய்து ஆவணப் படமாக எடுக்க முடிவு செய்தார் ராபர்ட் கிரீன்வால்ட். (வலைத்தளம்) வால்மார்ட் குறித்த தகவல்கள் லட்சக்கணக்கான பேரிடமிருந்து கிடைக்கக் கூடியவை. ஆனால், கேமராவின் முன்பு பேச பயப்படாத, வெளிப்படையாக வால்மார்ட் பற்றி பேச தயாராக இருப்பவர்களை தேடிப் பிடிக்க வேண்டும். வால்மார்ட்டில் வேலை பார்த்தவர்களிடமிருந்து மனதை உருக்கும் விபரங்கள் பல தெரிய வந்தன, ஆனால் பெரும்பான்மையானவர்கள் கேமிராவின் முன்பு பேச பயப்பட்டார்கள். நாட்டை விட்டே துரத்தப்பட்ட நிறுவனங்களின் தலைவர்கள் பேசவே பயப்பட்டார்கள். பேச ஒத்துக் கொண்டு வரச் சொன்னவர்கள் படப்பிடிப்புக் குழுவினர் கேமராவுடன் வீடு தேடி போனபோது வால்மார்ட்டை கோபப்படுத்த வேண்டாம் என்று மனம் மாறி பேச மறுத்து விட்டார்கள். திரைப்படத்தை வெளியிட்ட போது, படம் எடுக்க ஒத்துழைத்த யாரையும் பழி வாங்கக் கூடாது என்று விடப்பட்ட கோரிக்கையை வால்மார்ட் ஏற்றுக் கொள்ளவில்லை.

படக்குழுவினர் மாதக்கணக்கில் உழைத்து வால்மார்ட் முன்னாள்/இந்நாள் அமெரிக்க ஊழியர்கள், சீனா, பங்களாதேசம், ஹோண்டுராஸ் நாடுகளில் செயல்படும் தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்கள், வால்மார்ட்டால் வாழ்க்கை இழந்த சிறு வணிகர்கள், வால்மார்ட்டின் லாப வெறியால் நடக்கும் குற்றவியல் சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்கள், வால்மார்ட்டின் செயல்பாட்டால் குடிநீர் மாசுபடுதலை எதிர்த்துப் போராடியவர்கள் என்று நூற்றுக்கணக்கான தனிநபர்களிடமிருந்து விபரங்களை சேகரித்தார்கள். கிட்டத்தட்ட 400 மணி நேர நீளத்துக்கான பேட்டிகள், தனிநபர் விபரங்கள், விளம்பரங்கள், வால்மார்ட் வீடியோக்களை ஒன்றரை மணி நேர திரைப்படமாக மாற்றும் எடிட்டிங் வேலை ஆரம்பித்தது.

வால்மார்ட் கடை, ஒரு ஊரில் திறக்கப்படும் போது மற்ற போட்டியாளர்களுக்கு நேரும் கதி, வால்மார்ட்டில் வேலை செய்பவர்கள் சுரண்டப்படுவது, யூனியன் அமைப்பதற்கு எதிரான வால்மார்ட்டின் திட்டமிட்ட நடவடிக்கைகள், பெண்கள் மற்றும் சிறுபான்மை இனத்தவருக்கு எதிரான வால்மார்ட்டின் கொள்கைகள், லாப நோக்கிற்காக சுற்றுச் சூழல் சட்டங்களை வால்மார்ட் மீறுவது, சீனா, பங்களாதேசம் போன்ற நாடுகளில் வால்மார்ட் தொழிலாளர்கள் நிலை, வால்மார்ட்டின் லாப அதிகரிப்பு நோக்கத்தின் விளைவாக வாடிக்கையாளர்கள் மீது நடந்த கிரிமினல் தாக்குதல்கள் என்று பல பிரச்சனைகளை விரிவாக பேசுகிறது படம். வால்மார்ட்டை தமது பகுதிக்கு வர விடாமல் போராடி தடுத்த ஊர்களைப் பற்றிய தகவல்களும் திரைப்படத்தில் இறுதி பகுதியில் காண்பிக்கப்படுகின்றன.

திரைப்படத்துக்கு நிதிவழங்கிய இரண்டு நன்கொடையாளர்கள் வால்மார்ட்டின் பழிவாங்கலுக்கு அஞ்சி இடையில் பின் வாங்கிவிட்டார்கள். வங்கிக் கடன்கள் மூலம் படத்துக்கான நிதி பெறப்பட்டது. படத்தை வெளியிட பாரம்பரியத்துக்கு மாறான முறையை பின்பற்றினார்கள். படத்தின் டிவிடி மூலம் தனி நபர்களும், குழுக்களும் திரையிட்டுப் பார்த்துக் கொள்வதை ஊக்குவித்தார்கள்.  இணையம் மூலமாகவும் வாய்வழி பரப்புரை மூலமாகவும் சந்தைப் படுத்தலை செய்தார்கள்.

வால்மார்ட் தலைமை நிர்வாக அதிகாரி லீ ஸ்காட் ஊழியர் மாநாட்டில் கம்பெனியை பாராட்டிப் பேசுவதிலிருந்து படம் ஆரம்பிக்கிறது. வால்மார்ட்டின் சொந்த வீடியோ மற்றும் செய்தி தொகுப்புகளிலிருந்து கிடைத்த பகுதிகளை வைத்து வால்மார்ட்டின் தலைவர் லீ ஸ்காட் கதை சொல்வதாகவே திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

ஆவணப்படத்தின் வலைத்தளம்

 

வால்மார்ட் ஊழியர்கள் மாநாடு

“சரி, சரி, புரிகிறது உங்கள் உற்சாகம். ஒவ்வொரு ஆண்டும் வால்மார்ட்டின் தலைமை நிர்வாக அதிகாரியாக இந்த சந்திப்புக்கு வருவது சந்தோஷமான விஷயம். வரலாறு காணாத விற்பனை, வரலாறு காணாத லாபம், ரிக்கார்ட் வரலாறு காணாத மறு முதலீடு. ஆனால், நாம் இன்னும் சிறப்பாக செயல்பட தயாராவோம். வால்மார்ட் கடைகள் பல இடங்களில் பொறாமையையும் பயத்தையும் உருவாக்குகிறது. நாம் சரியானவற்றை செய்ய வேண்டும், சரியாக செய்ய வேண்டும். முதலாவது வால்மார்ட் கதையை சொல்ல வேண்டும். இரண்டாவது செய்வதை விடாமல் தொடர வேண்டும், குறைந்த வருமானத்தில் வாழும் மக்கள், லட்சக்கணக்கான ஊழியர்கள், கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்யும் சப்ளையர்கள் அனைவருக்கும் வால்மார்ட் மிகவும் முக்கியமானது. நாம் செய்வதை தொடர்ந்து செய்வோம் தொடர்ந்து வளர்வோம் என்று உறுதி சொல்கிறேன்”

என்று லீஸ்காட் பேச படத்தின் முதல் பகுதி ஆரம்பிக்கிறது.

H&H ஹார்ட்வேர் கடை, மிட்டில்பீல்டு, ஒஹையோ (அமெரிக்காவின் அண்ணாச்சி ஹார்ட்வேர் ஸ்டோர்)

1962ல் ஜோன் ஹன்டரின் தந்தை டான் ஹன்டரால் ஆரம்பிக்கப்பட்ட H&H ஹார்ட்வேர் கடை அவர்களின் வாழ்க்கையின் பிரிக்க முடியாத ஒரு பகுதியாக இருந்தது. கடைக்கு வரும் ஒவ்வொரு வாடிக்கையாளரும் அவருக்குத் தனிப்பட்ட முறையில் அறிமுகமானவர்களாக இருப்பார்கள். சிறு பையனாக கடையில் வேலை பார்த்து தனது நான்கு மகன்களையும் கடையிலேயே பயிற்றுவித்து விட்ட ஜோனுக்கு அந்தக் கடைதான் வாழ்க்கையாக இருந்தது.

“1962ல் ஒரு சின்ன இடத்தில் கடையை ஆரம்பித்தோம். 2 ஆண்டுகளில் பெரிய இடத்துக்கு மாற்றினோம். 1992ல் இப்போது இருக்கும் இடத்துக்கு வந்தோம். பல ஆண்டுகளாக எனது வலது கையாக பணி செய்த என் மகன் ஜோன் ஹன்டர் 1996ல் பொறுப்பேற்றுக் கொண்டதும் நான் ரிட்டையர் ஆனேன்.”

ஜோன் ஹன்டரின் மகன்கள் மகன்கள் ஜெரமி ஹன்டர், மேட் ஹன்டர் சிறு பையன்களாக இருக்கும் போதே கடையில் வேலை செய்வார்கள்.

மிட்டில்பீல்டில் வால்மார்ட் கடை திறக்க திட்டமிடுகிறது என்று செய்தி வருகிறது. ‘வால்மார்ட் போன்ற கடைகளில் பிளம்பிங் பிரிவில் யாருக்கும் பிளம்பிங் பற்றி தெரிந்திருக்காது’

“நாங்கள் அனைவருமே வால்மார்ட் வருவதற்கு எதிரானவர்கள்”.

டான் ஹன்டர் : “வால்மார்ட்டுக்குள் போனதே இல்லை, போக விருப்பமும் இல்லை. அவர்கள் நோக்கமே சிறு சமூகங்களை சிலுவையில் அறைவதுதான். எனக்கு சந்தை பொருளாதாரத்தில் நம்பிக்கை இருக்கிறது. ஆனால் வால்மார்ட் மிகப் பெரியது அதன் உரிமையாளர்கள் உலகிலேயே பணக்காரர்கள். தாங்கள் செயல்படும் சமூகங்களுக்கு எதையும் தருவதில்லை. அவர்களுடன் மற்றவர்கள் போட்டி போட முடியாது. ஒரு இடத்துக்கு வந்து எல்லோரையும் துரத்தி விடுவதுதான் அவர்கள் நோக்கம்”

“உண்மையில் அவர்கள் ஒரு சீன நிறுவனம்தான். சீனப்பொருட்களுக்கு அமெரிக்காவில் வினியோக வசதி ஏற்படுத்தித் தருகிறார்கள்.”

“ஏகபோக ஆதிக்கம் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று சொல்கிறார்கள். ஸ்டேண்டர்ட் ஆயிலை, மா பெல்லை மோனோபோலி நடவடிக்கைகளுக்காக பல நிறுவனங்களாக பிரித்தார்கள். வால்மார்ட் மோனோபோலி இல்லை என்றால் வேறு யார்? வால்மார்ட் அமெரிக்க பொருளாதாரத்தை இடித்துத் தள்ளிக் கொண்டிருக்கிறது. யாரும் அதைப் பற்றி கவலைப்படுவது போல தெரியவில்லை. நான் அமெரிக்காவை நேசிக்கிறேன். அமெரிக்காவுக்காக இந்த வயதிலும் உயிரை விடவும் தயாராக இருக்கிறேன். ஆனால், அமெரிக்கா பெரிய நிறுவனங்களுக்கு மட்டும்தான் நல்லது செய்கிறது, பரந்து பட்ட மக்களுக்கு இல்லை”

ஜோன் ஹன்டர் : “பிஸினஸ் பிளான் எடுத்துக் கொண்டு வங்கிக்கு நிதி பெறுவதற்காக போனேன். எங்கள் கடையின் கட்டிடத்தையும் வணிக மதிப்பையும் வங்கி கணக்கீட்டாளர் மதிப்பை குறைவாக மதிப்பிட்டிருந்தார். ’10 ஆண்டுகளில் மதிப்பு அதிகமாகத்தானே ஆக வேண்டும். விலைவாசி எவ்வளவு உயர்ந்திருக்கிறது?’ என்று கேட்டால், ‘நம்ம ஊருக்கு வால்மார்ட் வரப் போகிறது. அவர்கள் வந்ததும் நிறைய கடைகள் இழுத்து மூடப்படும். அவை அனைத்தும் விற்பனைக்கு வந்தால் கட்டிடங்களின் விலை சரியத்தான் செய்யும். அதனால் வால்மார்ட் வரும் ஊர்களில் கட்டிடங்களின் மதிப்பை குறைத்துதான் நிர்ணயிப்போம்’ என்று பதில் சொன்னார்கள.”

இவ்வளவு பெரிய மாற்றத்துக்கு எதிராக தாக்குப் பிடிக்க முடியாது என்று தெளிவானது. H&H கடையை இழுத்து மூட முடிவு செய்தது. எவ்வளவு நாள் நாம் தாக்குப் பிடிக்க முடியும் என்று தெரியாத நிலையில் வேறு என்ன செய்ய முடியும். “கைவசம் இருந்த சரக்குகளை தள்ளுபடி விலைக்கு விற்று, கட்டிடத்தை முடிந்த அளவு நல்ல விலைக்கு விற்று, கடன்களை அடைத்த பிறகு, மீதக் கடன் இல்லாமல் வெளியேற முடிந்தால் நல்லது என்று இருக்க வேண்டியதுதான்.”

43 ஆண்டுகளாக நடத்தி வந்த H&H இழுத்து மூடப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இரண்டு மைல் தூரத்தில் வால்மார்ட் தனது கடை ஒன்றை திறந்தது.

வெல்டன் நிக்கல்சன் என்பவர் 17 ஆண்டுகள் வால்மார்ட்டின் விசுவாசமான அடியாளாக வேலை செய்தார். ‘கம்பெனி என்னென்ன செய்யச் சொன்னதோ அதை எல்லாம் செய்தேன். ஒரு கட்டத்தில் அதற்கு மேல் தாங்க முடியாமல் வெளியேறினேன்’ என்கிறார் அவர். வால்மார்ட் நிறுவனத்தில் 17 ஆண்டுகள் வேலை பார்த்த ஸ்டான் பார்சூன், 4 மாநிலங்களில் பல கடைகளை நிர்வகித்தார். வால்மார்ட்டின் உயர் அதிகாரிகளில் ஒருவரான ஸ்டேனுக்கு நிறுவனத்தின் கொள்கைகளையும், இழப்பு தடுப்பு, பாதுகாப்பு, ஊழியர் நிர்வாகம், ஊதியம் கொடுப்பது போன்றவை குறித்து தினசரி முடிவெடுக்கும் முறைகளும் நன்கு தெரிந்திருந்தன.

இவர்கள் சொல்லும் தகவல்கள் திரைப்படத்தின் பொருத்தமான இடங்களில் சேர்க்கப்பட்டுள்ளன.

“ஒரு ஊரில் வால்மார்ட் கடை திறந்தபிறகு அந்த ஊரின் கடைத்தெரு வழியாக காரை ஓட்டிச் சென்று, ஒவ்வொரு கடையும் எத்தனை மாதங்களில் மூடப்படும் என்று கூட வேலை பார்ப்பவர்களுடன் பேசி சிரிப்போம்”

பல ஊர்கள் நியூட்ரான் குண்டு போட்டது போல வெறுமையான கட்டிடங்களும், ஆள் நடமாட்டம் இல்லாத நடைபாதைகளுமாக மாற்றப்பட்டன.

“தரமான வாழ்க்கை வால்மார்ட்டில் விற்பதில்லை. நாம் சிறு நகர வாழ்க்கை என்று சொன்னால் அவர்கள் மலிவான அண்டர்வேர் என்று பதில் சொல்வார்கள்”

“முன்பெல்லாம் நகரக் கடைத்தெருவில் கார் நிறுத்த இடமே இருக்காது. போன கிருஸ்துமசில் நான் நகர மையப்பகுதிக்குப் போன போது 12 கார்கள் மட்டும் நின்றிருப்பதை எண்ணினேன்”.

வால்மார்ட் கடைகளில் வேலை செய்யும் ஊழியர்கள்

தகவல் : வால்மார்ட் நாடு முழுவதுக்குமான சில்லறை வணிக ஊதியத்தை ஆண்டுக்கு $3 பில்லியன் குறைக்கிறது.

லீ ஸ்காட் : “நமது நிறுவனத்தில் முதன்மையாக கவனிக்கப்பட வேண்டியது நமது ஊழியர்கள் என்று சாம் வால்டன் சொல்லுவார்” என்று சொல்ல ஊழியர்கள் எப்படி கவனிக்கப்படுகிறார்கள் என்று முன்னாள், இன்னாள் ஊழியர்கள் பேசுகிறார்கள்.

டியான் டிவோய்:

“உள்ளூர் அரசு கல்லூரியில் படித்தேன். 4.0 கிரேட் சராசரி இருந்தது. வாழ்க்கை சிறப்பாகத்தான் போயக் கொண்டிருந்தது. திடீரென்று அப்பாவும் அம்மாவும் உடல் நிலை சரியில்லாமல் ஆனார்கள். வேலைக்குப் போக வேண்டி வந்தது. ஆரம்பிக்கும் போது பெருமையுடன்தான் ஆரம்பித்தேன். கூடுதல் நேரம் வேலை செய்வதற்கு சுணங்கியதில்லை. எப்போது பார்த்தாலும் ஆள் பற்றாக்குறையாகவே இருக்கும். விருப்பத்தோடு கூடுதல் நேரம் வேலை செய்வேன். பின்னர்தான் தெரிந்தது, ஆள் பற்றாக்குறை திட்டமிட்டு செய்யப்பட்ட ஒன்று என்பதை”.

“எப்போதும் தாமதமாகத்தான் வீட்டுக்கு வர முடியும். குழந்தைகளை காலையில் எழுப்பி பள்ளிக்குத் தயார் செய்து கொண்டு விட்டு விட்டு வேலைக்கு வருவேன் 4 மணி நேரம்தான் தூங்கியிருப்பேன். மாலையில் கூடுதல் நேரம் வேலை செய்வேன். ஓவர் டைம் கிடைக்காது.”

“சம்பளம் வாங்கியதுமே உடனேயே வால்மார்ட்டிலேயே செலவழிப்பேன். ஆரம்பத்தில் வால்மார்ட்டின் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் சேர்ந்திருந்தேன். ஆனால் அது கட்டுப்படி ஆகவில்லை. இன்சூரன்ஸ் பிரீமியம் கொடுக்க வேண்டும், ஏதாவது சிகிச்சைக்கு டாக்டரிடம் போனால் அவருக்கும் காசு கொடுக்க வேண்டியிருக்கும்”

அவரை விட குறைந்த அனுபவம் உடைய ஆண் ஊழியர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்கப்படுவதாக தெரிய வந்தது. உடல் நிலை சரியில்லாமல் இருந்த பெற்றோரை கவனித்துக் கொள்ள விடுமுறை எடுத்ததற்காக நிர்வாகத்தால் கொடுமைப்படுத்தப்பட்டார். உடன் வேலை செய்யும் சில ஊழியர்களுடன் சேர்ந்து யூனியன் ஆரம்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். எதிர்வினையாக டியானையும் கூட இருந்தவர்களையும் மிரட்டவும் பயமுறுத்தவும் செயதது நிர்வாகம். ஒரு புயலில் அவரது வீடு சேதமடைந்திருந்த வேளையில் அவரை வேலையிலிருந்து நீக்கி விட்டார்கள்.

எதிர்காலத்திலாவது மற்ற ஊழியர்களுக்கு நல்ல பணிச் சூழல் கிடைக்கட்டும் என்ற நோக்கத்தில் வால்மார்ட்டுடன் தனது அனுபவங்களை வெளிப்படையாக பேசுகிறார் டியான்.

ஸ்டேன் பார்சூன் : “வால்மார்ட் அதைப் பற்றிக் கவலைப் பட்டதேயில்லை. வேலை பார்ப்பவர்களின் குடும்ப வாழ்க்கை, அவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதைப் பற்றி அவர்களுக்கு கவலையே கிடையாது. அவர்கள் எந்த மாதிரி தியாகங்களை செய்ய வேண்டியிருக்கிறது என்று யோசிப்பதே கிடையாது. எத்தனை பேர் குடும்பங்களை இழக்கிறார்கள் என்று கவலை இல்லை”

“கடைக்குத் தேவையான அளவு சம்பள செலவை அனுமதிப்பதில்லை. ஆனால் வருமானம் பல மில்லியன் டாலர்கள் வரும். வால்மார்ட்டில் வேலை பார்த்தால் குடும்ப வாழ்க்கை சாத்தியமில்லை.”

லீ ஸ்காட் – “நமது ஊழியர்களில் பலர் முழு நேர ஊழியர்களாக இருக்கிறார்கள். அவர்கள் குடும்பத்தை நாம் கவனித்துக் கொள்கிறோம். எங்கள் ஊழியர்கள் எதைப் பற்றியும் கவலைப் பட வேண்டியதில்லை என்பதைப் பெருமையாக கருதுகிறோம். குடும்பத்தில் யாருக்காவது உடல்நிலை சரியில்லாமல் போனால் அதற்கான செலவைப் பற்றி அவர்கள் கவலைப்படக் கூடாது”

டொன்னா பேடன் வால்மார்ட்டில் ஒரு பிரிவு மேலாளர். வாரத்துக்கு 40 மணி நேரம் அல்லது அதற்கும் அதிகமாக வேலை செய்கிறார். உலகின் மிகப்பெரிய பணக்கார சில்லறை வணிக நிறுவனத்தில் வேலை செய்தாலும் ஏழைகளுக்கான உணவு கூப்பன்கள், மெடிக்எய்ட் திட்டம், அரசாங்க மான்யத்துடனான வீட்டு வசதி திட்டம் மூலம்தான் தனது குழந்தைகளை வளர்க்க முடிகிறது. மேலாண்மை பயிற்சி வகுப்பில் சேர விண்ணப்பித்தும், பல முறை திறமையாக செயல்பட்டும் அவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. ஆப்பிரிக்க அமெரிக்க பெண்ணான தனது தோலின் நிறம்தான் இவற்றுக்கெல்லாம் காரணமோ என்று அவர் நினைக்கிறார். வால்மார்ட் தனது ஊழியர்களை மதிப்பதில்லை என்று தெரிந்தாலும் அவரது குழந்தைகளை வளர்ப்பதற்காக வேறு வழியில்லை என்று தொடர்ந்து வேலை செய்கிறார்.

வால்மார்ட் தனது ஊழியர்களை அரசு தர்ம திட்டங்களை பயன்படுத்திக் கொள்ளும்படி சொல்கிறது. $86 மில்லியன் கலிபோர்னியாவிலும் $25 பில்லியன் நாடு முழுவதிலும் வால்மார்ட் ஊழியர்களுக்காக செலவழிக்கப்படுகிறது.

யூனியன் சேர்க்கும் முயற்சிகளை வேரிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்று வால்மார்ட் கொள்கை வைத்திருக்கிறது. யூனியன் நடவடிக்கைகள் பற்றி சந்தேகம் ஏற்பட்டால் கடை மேலாளர் தலைமையகத்திற்கு தகவல் சொல்ல வேண்டும். ‘இரண்டு பேர் பேசிக் கொண்டிருந்து விட்டு பிரிந்து போனால் அவர்கள் சதி செய்கிறார்கள்’ என்று எடுத்துக் கொள்ள வேண்டும் கடை மேலாளர். தகவல் போன அன்றே யூனியனுக்கு எதிரான குழுவினர் வால்மார்ட்டுக்கு சொந்தமான ஜெட் விமானத்தில் வந்து இறங்கி கடையின் பொறுப்பை  எடுத்துக் கொள்வார்கள்.

யூனியன் சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபடுவர்களின் வாழ்க்கை மோசமானதாக்கப்பட்டு விடும். சில பேர் யூனியன் சேர்க்க ஆரம்பித்ததால் சம்பள உயர்வு நிறுத்தி வைக்கப்படுகிறது என்று அறிவிப்பார்கள். உணவு இடைவேளையை குறைத்து விடுவார்கள். புதிய ஊழியர்கள் சேர்ப்பதை நிறுத்தி விடுவார்கள், ஊக்கத் தொகை வழங்குவதை நிறுத்துவார்கள்.

யூனியன் சேர்க்கும் முயற்சியை முறியடிப்பதற்காக பல நடவடிக்கைகளை எடுப்பார்கள். ஊழியர்களை வேறு கடைகளுக்கு இடம் மாற்றுவார்கள். புது ஊழியர்களை எடுப்பார்கள்.

ஜெர்மனியில் வால்மார்ட் ஒரு கடையை வாங்கியது. அவர்களிடம் ஏற்கனவே யூனியன் இருந்தது. ஆண்டுக்கு 36 நாட்கள் விடுமுறை, அதை இரண்டு மூன்று முறையாகக் கூட எடுத்துக் கொள்ளலாம். ‘ஏன் அமெரிக்க ஊழியர்களுக்கு யூனியன் இருக்கக் கூடாது என்று புரியவில்லை’.

லீ ஸ்காட் – “எங்களிடம் 1.2 மில்லியன் ஊழியர்கள் பணி புரிகிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் பொருளாதா ரீதியாக முன்னேறுவதற்கு பெரிய உதவி செய்கிறது”

எடித் அரானா என்ற பெண்ணுக்கு 2 பெண் குழந்தைபகள். வால்மார்ட்டில் 6 ஆண்டுகள் வேலை செய்தார்.

“வாடிக்கையாளர்களுக்கு உதவி செய்வதை உற்சாகமாக செய்தேன். ஓவர் டைம் கிடையாது. அரை மணி நேரம் இருக்கும் போது 5 கூடை நிறைய பொருட்களை அடுக்கி வைக்க வேண்டியிருக்கும். மலர்ந்த முகத்துடன் செய்ய வேண்டும். செய்தே தீர வேண்டும். உன்னால் முடியா விட்டால் வேறு ஆள் கிடைக்கிறது. நாம் ஆள் எடுத்துக் கொண்டேதான் இருக்கிறோம் என்று உனக்குத் தெரியும் என்பார்கள்”.

“மேலாளராக பதவி உயர்வு பெற விண்ணப்பித்தேன். என்னென்ன செய்ய வேண்டும் என்று பட்டியல் கிடைத்தது. அது அனைத்தையும் செய்து முடித்த பிறகு பதவி உயர்வு கிடைக்கவில்லை. மேலாளரிடம் கேட்ட போது, உன்னை போன்றவர்களுக்கு நிர்வாகத்தில் இடம் இல்லை என்றார். ஏன், நான் ஒரு பெண், நான் ஒரு கருப்பு என்பதாலா என்று கேட்டால் இரண்டையும் சரியாக சொல்லி விட்டாயே என்கிறார். “

மரணப் படுக்கையில் இருந்த அவரது கணவரை கவனித்துக் கொள்ளும் நேரங்களை வால்மார்ட்டில் செலவழித்தும் கணவரின் மரணத்துக்குப் பிறகு இரண்டு குழந்தைகளையும் வளர்க்கத் தேவையான வாய்ப்புகள் வால்மார்ட்டில் வேலை செய்தால் கிடையாது என்பதை உணர்ந்து வேலையை விட்டார். பெண்களுக்கு எதிராக நியாயமில்லாத கொள்கைகளை வைத்திருப்பதாக தொடரப்பட்டுள்ளு வழக்கில் எடித் அரானாவும் சேர்ந்திருக்கிறார்.

லீ ஸ்காட் – “வேலை செய்தவர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டும் என்பது எங்கள் கொள்கை.”

“ஒருவர் 42 மணி நேரம் வேலை பார்த்திருந்தால் அதை 40ஆக குறைப்பது எப்படி என்று சொல்லித் தரப்பட்டது. வாரத்துக்கான செலவுக் கணக்கைத் தாண்டி விடக் கூடாது என்று அழுத்தம் இருக்கிறது. வாழ்க்கையில் ஒவ்வொரு டாலருக்காக போராடிக் கொண்டிருக்கும் ஊழியர்களுக்கு இது செய்யப்பட்டது. நான் மட்டும்இதை செய்தவனில்லை” என்கிறார் கடை மேலாளராக பணி புரிந்தவர்.

லீ ஸ்காட் – “74% முழு நேர வேலை, நல்ல வசதிகளுடன் வால்மார்ட் வழங்குகிறது”

அமெரிக்காவில் ஆண்டுக்கு 17,650க்குக் கீழ் பெறுபவர்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் என்று வரையறுக்கப்பட்டுள்ளது, ஆனால், வால்மார்ட்டின் முழு நேர ஊழியரின் ஆண்டு வருமானம் $13,000

சட்ட விரோதமாக கணக்கில் சேர்க்காமல் வேலைக்கு ஆள் வைத்திருக்கிறார்கள். இரவு 9 மணியிலிருந்து காலையில் 7.30 மணி வரை கடைக்குள் அடைக்கப்பட்டு விடுவார்கள். சட்ட விரோதமாக நாட்டுக்குள் வந்து உரிய ஆவணங்கள் இல்லாதவர்களை கடைகளை சுத்தம் செய்ய பணிக்கு அமர்த்தியிருக்கிறார்கள். அப்போதுதான் 0.29 டாலருக்கு ஒரு ஸ்வெட்டர் வாங்கியிருந்த வாடிக்கையாளர் பெண் அந்த தகவல் அதிர்ச்சியாக இருக்கிறது என்கிறார்.

வால்மார்ட்-எதிர்ப்பு-போராட்டம்

பெண்களுக்கு/கருப்பு இனத்தவருக்கு எதிரான செயல்பாடுகள்

“நான் மட்டும்தான் கடையில் பெண்.  அதனால் எனக்குத்தான் பாத்ரூமை கழுவும் வேலை தினமும் தருவார்கள்”

“தகவல்களை மறைக்கிறார்கள். பெண்களுக்கு மதிப்பு இல்லை. பெண்ணுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக வழக்கு தொடரப்பட்டுள்ளது”

“என்னை நிக்கர் என்று அழைத்தார்கள், கழுத்தில் கயிற்றைக் கட்டி தூக்கில் போடுவது போல நடித்தார்கள். யாரும் கேட்கவில்லை”

வால்மார்ட்டுக்கு மானியம், போட்டியாளர்களுக்கு மஞ்சள் கடுதாசி

எஸ்ரி குடும்பம், ஹாமில்டன், மிசௌரி (வால்மார்ட்டுடன் நியாயமற்ற போட்டியில் மூடப்பட்ட இன்னொரு அண்ணாச்சிக் கடை)

“நான் அமெரிக்காவின் 13 ஜனாதிபதிகளின் ஆட்சியை பார்த்திருக்கிறேன். 1959ல் ஒரு உணவுப் பொருட்களை கடையை ஆரம்பித்தேன். 150 பேர் வேலை பார்க்கிறார்கள். அனைவருக்கும் முழு மருத்துவக் காப்பீடு கொடுக்கிறோம். நியாயமான ஊதியம் வழங்குகிறோம். 1995ல் ஒரு வால்மார்ட் கடை அருகில் திறக்கப்பட்டது. 40% வியாபாரம் பறி போனது. ஒரே இரவில் 50% குறைந்து விட்டது. பணம் கொடுப்பது சிரமமானது. 40 ஆண்டு கடின உழைப்பு போனது. 1990களின் இறுதியில் மூடி விட்டோம்.”

கேமரோன் நகரம் வால்மார்ட்டுக்கு 1.2 மில்லியன் டாலர் மானியம் வழங்கியது. அவர்கள் வணிகத்துக்கு உதவி கிடைக்கிறது. போட்டியாளர்களுக்கு எந்த உதவியும் இல்லை. அவர்களுக்கு எல்லா சலுகைகளும் கிடைக்கின்றன. வரி கட்ட வேண்டியதில்லை. இது நியாயமில்லை என்று கேட்டால் அவர்களுக்கு சலுகை கொடுக்கா விட்டால் நகரத்தின் எல்லைக்கு வெளியே கடை வைப்பார்கள்.

வால்மார்ட்டுக்கு மானியம் கொடுப்பதால் பல ஊர்களில் மக்களுக்கான அரசாங்க திட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வெற்றாக விடப்பட்டுள்ள வால்மார்ட் கடைகள் நாடெங்கிலும் இருக்கின்றன.

சுற்றுச் சூழல் பிரச்சனை

வடக்கு கரலினா பெல்மான்டில் ஓடும் கடாபா ஆற்றின் கண்காணிப்பாளர் டோனா லிசன்பி. ஆற்றின் நீரை பாதுகாக்கவும் சுத்தமான நீருக்காக போராடுவதும் அவரது வேலை. கடாபா ஆற்று நீர் வடக்கு தெற்கு கரலினாவில் வசிக்கும் சுமார் 20 லட்சம் மக்களுக்கு குடிநீர் வழங்குகிறது.

இந்த ஆற்றுப் பள்ளத்தாக்கில் இருக்கும் 7 வால்மார்ட் கடைகளில் பூச்சிக் கொல்லிகளும் உரங்களும் கார் நிறுத்தும் இடத்தில் அடுக்கி வைத்திருப்பட்டிருந்தன. அந்த மூட்டைகளின் மேல் இதை உட்கொண்டால் இனப்பெருக்க குறைபாடுகள் ஏற்படும் என்று எழுதியிருக்கிறார்கள். கடைக்கு அருகில் ஒரு கால்வாய் நீர் குடிநீராக பயனப்டுத்தப்படுகிறது. மழை நீரில் கரைந்து ஆற்றில் கலக்கின்றன.

“வால்மார்ட்டுக்குத் தொலைபேசினேன். பேசியவர் தலைமை அலுவலகத்தில் ஒருவரின் பெயரையும் தொலைபேசி எண்ணையும் கொடுத்தார். அங்கு கூப்பிட்டால் அப்படி யாரும் இல்லை. திரும்ப திரும்ப அழைத்தேன். வழக்கறிஞர்தான் இனிமேல் பேசுவார் என்று சொன்னேன். ஒரு வலைப்பதிவு ஆரம்பித்து விபரங்களை வெளியிட்டேன்”

“கடைசியாக அர்கன்சாஸ் தலைமை அலுவலகத்திலிருந்து ஒருவர் தொடர்பு கொண்டார். அவர் அப்போதுதான் அந்த பொறுப்பை ஏற்றிருந்தார். அவரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. செய்தியை பத்திரிகைகளில் வெளி வந்தது. வடக்கு கரோலினாவில் 6 மணி தொலைக்காட்சி செய்தியில் காண்பித்தார்கள். அதன் பிறகுதான் எல்லா கடைகளிலும் கெமிக்கல்கள் நீக்கப்பட்டன”

பல நீதிமன்ற வழக்குகளில் வால்மார்ட்டை சுற்றுச் சூழல் பாதுகாப்பு முறைகளை ஏற்படுத்தும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

“கடாபா ஆற்று பாதுகாப்பாளாராக நான் வேலை பார்க்கும் போது எதிர்கொண்ட நிறுவனங்களிலேயே வால்மார்ட்டைப் போன்று வெளிப்படையாக பொதுமக்களின் ஆரோக்கியத்தைப் பற்றி கவலைப்படாத ஒரு நிறுவனத்தைப் பார்த்ததே இல்லை”

வெளிநாடுகளில் இயங்கும் வால்மார்ட் தொழிற்சாலைகளின் கொடுமைகள்

லீ ஸ்காட் – “சீன அரசாங்கம் எங்களுக்கு எல்லா மதிப்பும் தருகிறது. நாங்கள் சீனாவின் எல்லா சட்டங்களையும் கடைப்பிடிக்கிறோம்.”

வெண்டி குய் – 21 வயது ஷான்ஷி மாகாணத்தை சேர்ந்தவர். விவசாயக் குடும்பம். காலையிலிருந்து இரவு வரை உழைக்கிறார்கள். உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் போது வேலைக்கு வந்தேன். தொழிற்சாலையில் இருக்கும் நண்பர் மூலம் வேலைக்குச் சேர்ந்தேன். வென் ஈ ஹூனானை சேர்ந்தவர். பாதுகாப்புத் துறையில் வேலை செய்கிறார். இரண்டு பேரும் சேர்ந்து வாழ்கிறார்கள்.

வெண்டி காலை 7.30 முதல் இரவு 10 மணி வரை வேலை செய்ய வேண்டும். வென் யி இரவு 10 மணி முதல் காலை 7 மணி வரை வேலை செய்கிறார்.

வெளியில் வாடகைக்கு அறை எடுத்து தங்குகிறார்கள். தொழிற்சாலை உணவு நன்றாக இருக்காது. தொழிற்சாலை அறையில் தங்கா விட்டாலும் மின்சாரம், தண்ணீருக்கு பிடிக்காவிட்டாலும், வாடகை பிடிப்பார்கள். தங்கினால் அறை வாடகை மட்டுமின்றி மின்சாரம், தண்ணீருக்கும் கட்ட வேண்டும்.

“நான் வேலை செய்யும் இடத்தில் மிகவும் புழுக்கமாக இருக்கும். என் உடல் வேர்வையால் நனைந்து போயிருக்கும். கண்காணிப்பாளர்கள் வரும் போது எப்படி பொய் சொல்ல வேண்டும் என்று கற்றுத் தருவார்கள். வாரத்துக்கு 7 நாட்கள் வேலை பார்த்தாலும் 6 நாட்கள் வேலை என்று சொல்ல வேண்டும். நனகு பொய் சொன்னால் பரிசு கிடைக்கும். இல்லா விட்டால் தண்டனை கிடைக்கும். பொய் தகவல்களை சொல்லும்படி மிரட்டுவார்கள்”

“இரவும் பகலும் வேலை பார்த்து ஒரு நாளைக்கு 3 டாலருக்குக் குறைவான வருமானம் பெறுகிறோம். எல்லோரும் இதே போலத்தான் வாழ்கிறார்கள்”

லீ ஸ்காட் : – “சென்ற ஆண்டு 1,25,000 நல்ல வசதிகள், லாபத்தில் பங்குடன் கூடிய புதிய வேலை வாய்ப்புகளை உலகம் முழுவதும் உருவாக்கினோம்”

பங்களாதேஷ்

வங்கதேசத்தில் 1,89,000 பேர் வால்மார்ட் தொழிலாளர்களாக வேலை செய்கிறார்கள். 5.30க்கு எழுந்து கைவிரல்களால் பல் தேய்த்து காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை வாரத்துக்கு 7 நாட்களும் வேலை செய்கிறார்கள். மணிக்கு 13 சென்ட் முதல் 17 சென்ட் வரை கிடைக்கிறது.

மற்ற எல்லா நிறுவனங்களும் வால்மார்ட்டின் உதாரணத்தைப் பின்பற்றிய கூலி, வேலை நேரத்தை நிர்ணயிக்கின்றன.

ஹோண்டுராஸ்

லீ ஸ்காட் : ‘சட்டப்படி சரியான நடத்தையை ஊக்குவிக்க வேண்டும் என்பது வால்மார்ட்டின் கொள்கை”

ஜிம் பில் லின் வால்மார்ட்டின் உயர்மேலாண்மை குழுவின் உறுப்பினர். வால்மார்ட் உலகளாவிய சேவைகளின் மேலாளர் பதவி ஏற்றிருந்தார். மெக்சிகோ, மற்றும் மத்திய தென் அமெரிக்க நாடுகளில் இயங்கும் வால்மார்ட் தொழிற்சாலைகளில் ஆய்வு செய்யும் பொறுப்பு அவருடையது.

“தொழிற்சாலை சான்று ஆய்வுக்காக போனேன். தொழிலாளர்களுக்கு தூய்மையான பாதுகாப்பான, மனிதர்களுக்கு ஏற்ற சூழல் இல்லை. மிகக் குறைவான வருமானத்துக்காக உழைக்கும் அந்த தொழிலாளர்களுக்கு சுகாதரமான பணிச்சூழல் இல்லை.”

பெண் தொழிலாளர்கள் கட்டாய கர்ப்ப சோதனைக்குட்படுத்தப்படுவது, குடி தண்ணீர் இல்லாமை, வேலை செய்யும் தொழிலாளர்கள் தொழிற்சாலைக்குள் பூட்டி வைக்கப்படுவது போன்ற அதிர்ச்சியளிக்கும் நிலைமைகளை பார்த்தார்.

“ஹோட்டலுக்குப் போய் மனைவிக்கு பேசினேன். அழுதேன். நான் செய்ய வேண்டிய கடமையை செய்வேன். வால்மார்ட் நிர்வாகத்துக்கு உண்மை நிலையை தெரிவிப்பேன். வால்மார்ட் நிச்சயமாக உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்பிக்கை வைத்து செயல்பட்டேன். எல்லாத் தொழிற்சாலைகளிலும் இதை நிலைமைதான்.

“என் கடமையை செய்வதற்காக என்னை பழி வாங்க மாட்டார்கள் என்று நினைத்தேன். அவர்களுக்கு லாபம் மட்டும்தான் நோக்கம். எல்லா கடை மேலாளர்களுக்கும் இலக்குகளை அடைய அழுத்தம் இருந்தது. எப்படியாவது பொருட்கள் அமெரிக்காவுக்குப் போய்ச் சேர வேண்டும் என்பதுதான் நோக்கமாக இருந்தது. அவர்கள் என் நம்பிக்கையை பொய்த்து விட்டார்கள்”

லீ ஸ்காட் – “விலைகளை குறைவாக வைத்திருந்து சம்பள விகிதங்களை உயர்த்தினால் நமது லாபம் வெகுவாக குறைந்து விடும். அது நமது பங்குதாரர்கள் எதிர்பார்ப்பதற்கு எதிரானது”

$27 – மில்லியன் லீயின் ஆண்டு வருமானம்.

$13,000 – சராசரி வால்மார்ட் ஊழியரின் ஆண்டு வருமானம்.

வால்மார்ட் குடும்பத்தின் 5 குடும்ப உறுப்பினர்கள் 10 அமெரிக்க பணக்காரர்களுக்கான பட்டியலில் இருக்கின்றனர். அவர்களது சொத்து $102 மதிப்பிலானது. அதிலிருந்து $10 பில்லியன் எடுத்தால் எல்லா ஊழியர்களுக்கும் மருத்து வசதியும், ஓய்வூதியத் திட்டமும் கொடுக்க முடியும்.

ஏதாவது தீவிரவாத தாக்குதல் நடந்தால் தப்பிப்பதற்கு வால்டன் குடும்பத்துக்கு ஒரு சுரங்க அறை ஏற்படுத்தியிருகிறார்கள்.

வால்மார்ட் குடும்பத்தினர் $3.2 மில்லியன் அரசியல் கட்சிகளுக்கு நிதியாக வழங்கினார்கள்.  2004ம் ஆண்டில் ஊழியர்கள் நல்வாழ்வு நிதிக்கு வால்மார்ட் ஊழியர்கள் $5 மில்லியன் கொடுக்க, வால்மார்ட் குடும்பம் $6,000 கொடுத்தது. வால்மார்ட் குடும்பம் ஒரு மணி நேரத்துக்கு $91,500 வீதம் வரிச் சலுகை பெறுகிறது.

லீ ஸ்காட் – “நமது கடைகளின் மூலம் பலன் பெறுபவர்கள் நமது வாடிக்கையாளர்கள்தான்”

லாரா தனாகா வங்கித் துறையில் வேலை செய்யும் ஒரு இளம் பெண். தற்போது அரிசோனாவில் வசிக்கிறார்.  1998, ஜனவரி மாதம் கலிபோர்னியாவில் ஒரு வால்மார்ட் கடையின் நுழைவாயிலுக்கு அருகிலேயே காரை நிறுத்தி விட்டு இறங்கும் போது இரண்டு பேரால் தாக்கப்பட்டார். கொல்லப்படவோ, பாலியல் ரீதியாக தாக்கப்படவோ செய்யலாம் என்று பயந்து வெளியே குதிக்க முயற்சித்த போது துப்பாக்கியால் மிரட்டப்பட்டார். ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் அவரைத் தள்ளி விட்டு விட்டு காரை ஓட்டிச் சென்றார்கள்.

வால்மார்ட்டின் மீது வழக்கு தொடுத்து வென்றார் லாரா. வால்மார்ட் தனது கடைக்குள் பொருட்களை பாதுகாக்க வைத்திருந்த ஏற்பாடுகளில் ஒரு சிறு பகுதி கூட வாடிக்கையாளர்களின் பாதுகாப்புக்கு செய்திருக்கவில்லை என்று நீதிமன்றம் தீர்ப்பு சொன்னது. கடைக்குள் 200 கேமராக்கள், 5 பாதுகாப்பு அதிகாரிகள் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்தார்கள். கார் நிறுத்தும் இடத்தில் எதுவும் இல்லை.

வால்மார்ட் 1994ல் ஒரு ஆய்வு நடத்தி கடைகளில் பாதுகாப்பு கொடுப்பது குறித்து ஆவணம் தயாரித்திருந்தது. 80% குற்றங்கள் பார்கிங் லாட்டில் நடக்கின்றன என்றும் ரோந்து ஏற்பாடு செய்தால் அவை 0 ஆக குறைகின்றன என்றும் தெரிந்தது. ஆண்டுக்கு $18 பில்லியன் சம்பாதிக்கும் வால்மார்ட் அதை செய்யவில்லை. அதைப்பற்றிய தகவல்களை வெளியிடவும் இல்லை.

வீடியோவில் 19 வயது பெண் கொல்லப்படுகிறார். கேமராக்கள் யூனியன் நடவடிக்கைகளை பதிவு செய்தவற்காக இழப்பு தடுப்பு குழுவினரால் பொருத்தப்பட்டிருந்தன. கேமரா இருக்கிறது ஆனால் கண்காணிப்பு இல்லை. மனிதர்களின் பாதுகாப்பை விட லாபத்தை முக்கியமாக கருதும் வால்மார்ட்டைப் பற்றி சொல்வதற்கு எதுவுமில்லை.

வால்மார்டுக்கு எதிரான போராட்டங்கள்

லீ ஸ்காட் – “வால்மார்ட் கடைக்கு சமூகத்துக்கான பொறுப்பு இருக்கிறது. நாம் செய்வது சமூகத்துக்கு பொருத்தமாக இருக்க வேண்டும்”

இங்கல்வுட்:

டிசம்பர் மாதம் ஒரு செய்தி வெளியானது.  வீடுகளின் அருகில் ஒரு சூப்பர் சென்டர் திறக்கவிருந்தது. நடந்து போகும் தூரத்தில் பள்ளி, பரபரப்பான இடம். “வால்மார்ட் வேண்டாம்” என்ற போராட்டம்க் குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது.

போராட்டத்துக்கு மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.  ‘215,000 சதுர அடியில் கடை ஏற்படுத்தப்பட இருந்தது. அதே இடத்தில் 17 கால்பந்து மைதானங்கள் அமைக்கலாம். பத்திரிகை செய்திகள், சுவரொட்டிகள், பிரச்சாரம் மூலம் போராட்டம் நடத்தப்பட்டது

“எல்லா முடிவு எடுத்தாகி விட்டது எதையும் மாற்ற முடியாது” என்றார்கள், “உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்” என்றார்கள்.  ‘வால்மார்ட்டை எதிர்த்து போராட, விரும்பும் இடத்தில் வாழ, விரும்பும் வேலையை செய்வது மக்களின் அடிப்படை உரிமை. டிரிக்கிள் டௌன் முறையிலான வளர்ச்சியில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை.’

6-0 வோட்டுக் கணக்கில் நகரசபை வால்மார்ட் வருவதை நிராகரித்தது.

லீ ஸகாட் : “எங்களை வரவேற்காத இடத்துக்கு நாங்கள் போக மாட்டோம்”

இந்த ஆவணப்படத்தை முழுமையாக பாருங்கள், வால்மார்ட் எனப்படும் ஆக்டோபசின் கொடூர சுரண்டலை உணருங்கள்!

– அப்துல்

மேலும் (ஆங்கிலம்) :

12 மறுமொழிகள்

  1. vanakkam tirupuril garment tholil saivathal thangalin katturail ullathu anaithum unmai enpathai anupavaporvamaga eartrukkolkiran.athaipol than bajai,amway,copanygalum.corporate companygalin soththai arasudamai agum nal veraivil varum.

  2. இது போன்ற தொடர் சூப்பர் மார்க்கெட்டுகளை நுகர்வோர் ஒதுக்க வேண்டும்! தற்போது நமது அண்ணாச்சிகளூம் இது போன்ற கடைகளை ஆரம்பித்துள்ளனர்!முதலில் மொய்க்கும் கூட்டம் நாளடைவில் குறைந்துவிடுகிறது! வாரக்கடைசிகளில் ஓரளவு கூட்டம் பொழுதுபோக்க வருகிறது!

    நல்ல விழிப்புணர்வு பதிவு!

  3. என்னய்யா சென்னை என்கவுண்டர் பத்தி விணவு சொல்லுவார்னு ஆவலா பாத்தா ஒன்னுமே சொல்ல மாற்றீன்களே?

  4. @#$%% அப்போதும் இருந்தார்கள்.இப்போதும் இருக்கிறார்கள்.
    நாட்டை அடகு வைத்தது அவர்கள்.ஆனால் நாட்டை திரும்ப மீட்டது
    நாங்கள்தான் என்று மார்தட்டி கொள்வார்கள்.காவிக்கூட்டம்
    சந்தோசப்பட வேண்டாம் நீங்கள் காட்டி கொடுத்த கயவர் கூட்டம்.
    பொருளாதார புலி ஒன்று இந்நேரம் வந்திருக்கவேண்டும்.
    ஏனோ இது வரை காணவில்லை.வரட்டும்….

  5. நாடே பரபரப்பாக பேசும் “5 பேர் படுகொலை” (அதாவது போலீஸ் அகராதியில்: என்கவுண்டர்) பற்றி இன்னும் ஒன்றுமே நீங்கள் எழுதவில்லையே!! எதிர்பார்த்து இருக்கிறோம்.

  6. Please read a book named A CASE AGAINST WALLMART written by an American Citizen. Hell lot of proofs on how Wallmart is controlling the retail arena and screwing its employees

  7. […] பெரு நிறுவனங்கள் சில்லறை வணிகத்தில் இறங்கும் போது சிறு வியாபாரிகளும் விவசாயிகளும் சிறு தொழில்களும் அழிந்து போகின்றனர் என்பது உலகளாவிய அனுபவம்  அமெரிக்காவின் வால்மார்ட் கால் வைத்த நகரங்களில் சிறு வணிகர்கள் தொழிலிலிருந்து துரத்தப்பட்டு கடைத்தெருக்கள் சுடுகாடுகளாக ஆகி விடுவதை சித்தரிக்கும் ஆவணப்படங்கள்வெளியாகியிருக்கின்றன […]

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க