2004-ம் ஆண்டு கும்பகோணம் கிருஷ்ணா பள்ளியில் நடந்த கொடிய தீ விபத்தை எவராலும் மறந்திருக்க முடியாது. அந்தப் பிஞ்சுத் தளிர்களின் கருகிய புகைப் படங்களை இன்று பார்க்கும் போதும், மன வேதனையை அடக்க முடிவதில்லை. இந்தச் சம்பவம் குறித்த வழக்கு எட்டு ஆண்டுகள் கழித்து செப்டம்பர் 24 ஆம் தேதி தஞ்சை மாவட்ட குற்றவியல் அமர்வு நீதிமன்ற வாசலை எட்டிப் பார்த்து இருக்கிறது.
“பிள்ளைகளை இழந்த வேதனையில் சுழலும் வாழ்க்கையில், எட்டு ஆண்டுகள் ஆகியும் வழக்கு விசாரணைக்கு வராத நிலை பெரும் சித்திரவதையாக இருந்தது. குற்றவாளிகளுக்கு இனிமேலாவது தண்டனை கிடைக்கும் என நம்புகிறோம்!” என்று கண்ணீரோடும், உடைந்த உள்ளத்தோடும் கூறுகிறார் இன்பராஜன்.
தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சங்கத்தின் செயலாளரான இவர் தன்னுடைய இரு குழந்தைகளையும் இவ்விபத்துக்கு பறிகொடுத்தவர்.
நத்தம் கிராமத்தை சேர்ந்த மதியழகன், ‘தன் மகனையும் சேர்ந்து நத்தத்தில் மொத்தம் 12 குழந்தைகள் இவ்விபத்துக்கு பலியாகி உள்ளதாகவும், எட்டு ஆண்டு ஆகியும் குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் இருப்பதை நினைத்தால், இதயம் பற்றி எரிகிறது’ என்றும் துக்கம் தாங்காமல் பேசுகிறார்.
நடந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 24 பேர் ஜாமீனில் வெளியில் வந்தும் விட்டனர். தங்களின் குற்றங்களை மறந்து அந்தத் தாக்கம் துளியும் இல்லாமல் இயல்பாக உலாவிக் கொண்டு இருக்கிறார்கள்.
நீதிமன்ற விசாரணைக்கு வந்த ராகுல் என்ற 10-ம் வகுப்பு மாணவன் அளித்த வாக்குமூலத்தில், ‘பள்ளித் தாளாளர் பழனிச்சாமி தான் விபத்தின் போது தன்னையும் மற்ற மாணவர்களையும் வலுக் கட்டாயமாக தீப்பிடித்து எரிந்து கொண்டு இருந்த அறைக்குள் அனுப்பினார்’ என்று கூறியுள்ளான்.
அதே போல 10-ம் வகுப்பு படிக்கும் திவ்யா என்ற மாணவி, ‘விபத்து நடந்த அன்று கல்வித் துறையின் பார்வையிடல் திட்டமிடப்பட்டு இருந்ததால் தன்னையும் பிற மாணவர்களையும் தமிழ் வழிக் கல்வி மாணவர்கள் இருந்த அறையில் நெரிசலாக உட்காரவைத்தது பள்ளி தாளாளர் பழனிச்சாமி தான், தீ விபத்தின் போது இட நெரிசல் காரணமாக தப்பிக்க முடியாமல் போனது’ என்று வாக்குமுலம் கொடுத்திருக்கிறாள்.
அற்பத் தவறுகளுக்குக் கூட எளிய மக்களை கைது செய்து சிறையில் அடைக்கும், அணு உலைக்கு எதிராக இடிந்தகரை, கூடங்குளம் மக்கள் நடத்திய போராட்டங்களில் பெற்றோர்களுடன் கலந்து கொண்ட சிறுவர்கள் மீது கூட தேசத் துரோக வழக்கு போடும், வாய்தா ராணிக்கு கருப்பு கொடி காட்டியதற்காக 1 வயது குழந்தை மீது கிரிமினல் வழக்கு போடும் காவல் துறையின் ‘சுறுசுறுப்பு’ இங்கே மறைந்து விட்ட மர்மம் என்ன?
‘விபத்து நடந்து 7 வருடங்கள் ஆகியும் வழக்கு விசாரணைக்கு வராமல், கண் முன்னே குற்றவாளிகள் சுதந்திரமாக உலவுவதை பார்த்து தங்களுக்குள் குமுறிக்கொண்டு, சிலர் பித்துப் பிடித்தவர்களாக மாறி விட்டனர்’ என்ற தகவல் நம்மை ஆச்சரியப்படுத்தவில்லை, உயிரோடு இருந்திருந்தால் இன்று 15-16 வயது ஆகி நம்மிடையே வாழ வேண்டிய குழந்தைகளின் முகங்களை மறக்க முடியாமல், அவர்களின் புகைப் படங்களுக்கு மாலை அணிவித்து கண்ணீர் சிந்தி கொண்டிருக்கும் இந்த பெற்றோர்களின் கொடுமையான வாழ்க்கையை மனம் கனக்கும் விதத்தில் எடுத்துக் காண்பிக்கிறது 2011-ல் வெளிவந்த என்.டி.டி.வியின் இந்த செய்தி வீடியோ
தன்னுடைய லாப வேட்டைக்காக பள்ளி என்ற பெயரில், பட்டிகளில் ஆடுகளை அடைப்பது போல குழந்தைகளை அடைத்து வைத்து, அவர்களை தீக்கு இரையாக்கியவர்களையும் அவர்களை காத்து நிற்கும் அதிகாரவர்க்கங்களையும் அம்பலப்படுத்தாமல் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் உண்மையான நீதி கிடைக்கப் போவதில்லை. தனியார்மயக் கொள்ளையர்களிடம் சிக்கியிருக்கும் கல்வியை விடுவிக்காமல் கும்பகோணம் கொலைகாரர்களை தண்டித்து விட முடியுமா?
விபத்தில் தீக்காயங்களுடன் பிழைத்த 18 மாணவர்கள் இன்று 15-17 வயது அடைந்துள்ளனர். அவர்களின் காயங்கள் இன்றும் நடந்ததை அவர்களுக்கு நினைவூட்டிக் கொண்டே இருக்கிறது.
அரசுத் தரப்பில் ‘கருணைத் தொகையாக இறந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு ரூ 1 லட்சம், காயம் அடைந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு ரூ 50,000, இறந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு கொடுத்த வீட்டு வசதி பட்டா தந்தாகி விட்டது’ என்று பொறுப்பைத் தட்டிக் கழிக்க முயன்றிருக்கின்றனர்.
‘குழந்தைகள் இயல்பு நிலைக்கு திரும்பத் தேவையான பிளாஸ்டிக் சர்ஜரி போன்ற சிகிச்சைகளை அளிப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டியும் நஷ்டஈட்டுத் தொகை கோரியும்’ பெற்றோர்கள் சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஆனால் வழக்கை விசாரித்த நீதிபதி அரிபரந்தாமன் ‘பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை தருவது அரசின் பொறுப்பு’ என்று தீர்ப்பு சொல்லியுள்ளார். ‘கடுமையான தீக்காயம் அடைந்த மாணவி கவுசல்யாவுக்கும் மாணவர் விஜய்க்கும் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை தருவதற்கான தலா ரூ 1.25 லட்சம் கட்டணத்தை அரசாங்கம் காலதாமதம் இன்றி அப்போலோவுக்கு கொடுக்கவேண்டும்’ என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அப்போலோ போன்ற கார்ப்பரேட் மருத்துவமனைகள் வெவ்வேறு நிறங்களின் பேரில், வெவ்வேறு உடல் உறுப்புகளின் பெயரில் சிறப்பு நாள்களை கடைப்பிடித்து, ‘சமூக அக்கறை’யை காட்டிக் கொள்கின்றன. கடுமையாக பாதிக்கப்பட்ட இந்தக் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான தொகை அப்போலோ மருத்துவமனைக்கு சொற்பக் காசு, இருப்பினும் காசு எண்ணி வைக்கப்படுவது வரை சிகிச்சை மறுத்து வந்ததுதான் அவர்களின் சமூக அக்கறையின் அளவு.
‘இருப்பவனுக்கு ஒரு நீதி இல்லாதவனுக்கு அவன் தலை விதி’ என்று அரசும், அதிகார வர்க்கமும் பாராமுகமாக நடந்து கொள்வது நமக்கு புதிதில்லை.
படிக்க
- Girl blames correspondent for injuries suffered in Kumbakonam school fire
- Student deposes in Kumbakonam school fire case
- Ray of hope for grieving parents
- Kumbakonam school fire: Headmaster cross-examined
- Adequate relief sought for Kumbakonam fire victims
- 8 years later, school fire tragedy trial begins
தன்னுடைய லாப வேட்டைக்காக பள்ளி என்ற பெயரில், பட்டிகளில் ஆடுகளை அடைப்பது போல குழந்தைகளை அடைத்து வைத்து, அவர்களை தீக்கு இரையாக்கியவர்களையும் அவர்களை காத்து நிற்கும் அதிகாரவர்க்கங்களையும் – அம்மணமாக்குவோம்.
புரட்சி வாழ்க
– ஆசாத்
கும்பகோணம் பள்ளி படுகொலை – விபத்து எது? வியாபாரம் எது?
கும்பகோணம் பள்ளி தீ விபத்து: கூடுதல் இழப்பீடு கோரிக்கை உச்சநீதி மன்றம் நிராகரிப்பு!
”உங்களுக்கு ஏற்கெனவே போதுமான இழப்பீடு வழங்கப்பட்டு விட்டது. மேலும், அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது” என்று ஒரு அநீதியை நீதியாக வழங்கியுள்ளது உச்ச(அ)நீதிமன்றம்.
இதை ஆதரித்து பார்ப்பன தினமணி இப்படி தலையங்கம் எழுதியிருக்கிறது.
விபத்து வியாபாரமாகக் கூடாது!
”ஏற்கெனவே போதுமான இழப்பீடு, சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருக்கும் இந்த வேளையில், நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானதுதான் என்பதைப் புரிந்துகொள்ள…. பாதிக்கப்பட்டோர் சங்கம், தமிழ்நாட்டில் எரியும் கூரை உள்ள பள்ளிகளுக்கு எதிராக வழக்குத் தொடுத்திருக்க வேண்டும். விபத்துக் காலத்தில் விரைந்து வெளியேற அகன்ற வாயில், மாடிப்படிகள் இல்லாத பள்ளிகளுக்கு எதிராக வழக்குத் தொடுத்திருக்க வேண்டும். பள்ளிக் குழந்தைகளின் அகால மரணங்களுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் கண்காணிப்பு அமைப்பாகத் தன்னை உருவாக்கிக் கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்திருந்தால் இவர்கள் உலகில் உள்ள ஒவ்வொரு குழந்தையிலும் தங்கள் குழந்தையைப் பார்த்திருப்பார்கள். ” என்று நடு நிலையாக ஒரு கருத்தை சொல்வதுபோல் ஏழைகள் மீது தனது வக்கிரத்தை கக்கியுள்ளது.
கும்பகோணம் பள்ளியில் நடந்த படுகொலையை யாரும் மறந்து விட மாட்டோம். ஆனால் அக்குழந்தைகளின் பெற்றோர்களுக்கு கூடுதல் இழப்பீடு தர முடியாது என்று கடந்த வாரம் உச்சநீதி மன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து நாளிதழ்களில் செய்தி வந்ததை பார்த்து சிலர் ஏதேனும் யோசித்து இருப்பார்கள்.
அப்படுகொலை குறித்த நினைவுகள், அன்று அரசு கொடுத்த பண்த்தால் தங்கள் குழந்தையை திரும்ப கிடைக்குமா? என குழந்தையை இழந்த பெற்றோர் பணத்தை வீசி எறிந்த நிகழ்வுகள் அனைத்தும் கண்முன் வந்து இருக்கும். இன்று தங்கள் தேவையை ஒட்டி ஒரு லட்சம் இழப்பீடு போதுமானதல்ல என்று கூடுதல் இழப்பீடு வழக்கு தொடுத்து உள்ளனர். எப்படி அப்படுகொலைக்கு காரணமான தனியார் முதலாளி தண்டிக்கபடவில்லையோ, அதுபோலவே அவர்கள் கோரிய இழப்பீடும் தர முடியாது என நீதிமன்றம் கூறிவிட்டது.
கூடுதலாக உங்களுக்கு போதுமான இழப்பீடும் (ஒரு லட்சம்) , அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சையும் கொடுத்துவிட்டோம் என்று உச்ச நீதிமன்றம் வக்கிரமாக கூறுகிறது.
எது கூடுதல் இழப்பீடு? உன்னுடைய கல்வி தனியார்மய கொள்கையினால் படுகொலை செய்யபட்ட எமது குழந்தைகளுக்கு கேவலம் ஒரு லட்சத்தை கொடுத்துவிட்டு அதுவே போதுமானது என பேசுகிறாய்? அப்பல்லோ சிகிச்சை என்பது என்ன அவ்வளவு அமுதமா? கல்வியை போல, நீ மருத்துவத்தை தனியார்மயமாக்கி தனியார் முதலாளிகள் கொள்ளை அடிப்பதற்காக திறந்து விட்டுட்டு அதுல சிகிச்சை கொடுப்பதை பெருமையாக பேசுகிறான்.
நீதிமன்ற தீர்ப்பை ஆதரித்து தினமணி தலையங்கம் எழுதுகிறது விபத்து, வியாபாரமாக கூடாது! என்று.
எது விபத்து? கல்வியை கடைச்சரக்காக மாற்றி நீங்கள் வைத்த தீ தாண்டா எம்முடைய 94 குழந்தைகளை கருக்கியது.
எது வியாபாரம்? எல்.கே.ஜி –க்கு இவ்வளவு யு.கே.ஜி-க்கு இவ்வளவு என போர்டு போட்டு விற்கும் உங்கள் தனியார் முதலாளிகள் செய்வது வியாபாரமா? இல்லை உயிரை இழந்த எமது குழந்தை-க்கு நியாயமான நிவாரணம் கேட்பது வியாபாரமா?
பெற்றோர் பாதுகாப்பு சங்கம் என்ன செய்யனும் என லிஸ்ட் போடும் நீ, இந்த அரசு எப்போதும் தனியார் முதலாளிகளுக்கு ஆதரவாக கல்வியை தனியார்மயமாக்கி கொள்ளைக்கு காவல் நிற்பதை ஏன் சாட மறுக்கிறாய்?
தீர்ப்பும் அது குறித்து தினமணி தலையங்கமும் காட்டிவது இந்த நீதிமன்றமும், அரசும் நமக்கானது அல்ல, தனியார் முதலாளிகளுக்காக தான் என்பதைதான். இதனை புரிந்து கொண்டு இந்த மக்கள் விரோத அரசுக்கு எதிராகவும், தனியார்மய கொள்கைக்கு எதிராகவும் போராட போகிறோமா? அல்லது இதனை சகித்து கொண்டு தனியார்பள்ளி முதலாளிகளிடம் கை கட்டி நிற்கப் போகிறோமா? என்பது தான் இப்போது நம்முன் உள்ள கேள்வி?
http://rsyf.wordpress.com/2011/10/12/kumbakonam-supreme-court-dinamani/