privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்காங்கிரஸ்ஒற்றை பிராண்ட் ஆதிக்கத்திற்கு மத்திய அரசின் தரகு வேலை!

ஒற்றை பிராண்ட் ஆதிக்கத்திற்கு மத்திய அரசின் தரகு வேலை!

-

சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு இந்தியாவில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும், உள் கட்டமைப்பை வளர்க்கும்’ என்று நாட்டு நலனில் அக்கறை உள்ளவர்கள் போல பேசும் ஆளும் கும்பல் உண்மையில் அன்னிய மூலதனத்துக்கு நாட்டை இரையாக்குவதில்தான் அக்கறையாக இருக்கிறது என்பதற்கான நடைமுறை உதாரணம் ஒன்று வெளியாகியிருக்கிறது.

கடந்த ஜனவரி மாதம் பலசரக்கு சில்லறை வணிகத்தில் 51 சதவீதம் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் முடிவையும் ஒற்றை நிறுவன பொருள் (Single brand) சில்லறை விற்பனையில் 100 சதவீதம் அன்னிய முதலீட்டை அனுமதிப்பதையும் ஒன்றாக அறிவித்திருந்தது மத்திய அரசு. மற்ற கட்சிகளின் எதிர்ப்புகளையும், மக்கள் போராட்டங்களையும் தொடர்ந்து மார்ச் மாதம் நடைபெறவிருந்த மாநில தேர்தல்களை கணக்கில் கொண்டு பலசரக்கு சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை 51 சதவீதம் வரை அனுமதிக்கும் முடிவை மட்டும் ஒத்தி போட்டது அரசு. ஆனால் ஒற்றை நிறுவன சில்லறை விற்பனையில் 100 சதவீதம் அன்னிய முதலீடு அனுமதிக்கும் முடிவை எதிர்க் கட்சிகள் யாரும் கண்டு கொள்ளாமல் விட்டு விட, அரசு அதை நடைமுறைப்படுத்த ஆரம்பித்தது.

அதைத் தொடர்ந்து ஸ்வீடனை சேர்ந்த அறைகலன் நிறுவனம் ஐக்கியா $1.5 பில்லியன் (சுமார் ரூ 8,000 கோடி) முதலீட்டிலும் இங்கிலாந்தைச் சேர்ந்த ஆடம்பர காலணி நிறுவனம் பாவேர்ஸ் $20 மில்லியன் (சுமார் ரூ 110 கோடி) முதலீட்டிலும் இந்தியாவில் கடைகள் திறப்பதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்திருந்தன.

  • அரசின் கொள்கைப்படி 100 சதவீதம் அன்னிய முதலீட்டுடன் சில்லறை விற்பனைக் கடை நடத்தும் நிறுவனங்கள் தமது விற்பனையில் 30 சதவீதம் மதிப்பை உள்நாட்டு சிறு/குறு/நடுத்தர நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்ய வேண்டும்.

இதன் மூலம் இந்தியாவில் சிறு தொழில்கள் வளர்ச்சி பெற வழி வகுப்பதாக காட்டிக் கொண்டது அரசாங்கம்.

  • இரண்டாவதாக, விற்பனையில் 30 சதவீதம் மதிப்பை அன்னிய முதலீடு மூலம் சில்லறை விற்பனை செய்யும் நிறுவனமே  உள்நாட்டிலிருந்து கொள்முதல் செய்ய வேண்டும் என்ற விதியும் சேர்க்கப்பட்டிருந்தது.

இதன் மூலம் ‘வெளிநாட்டு நிறுவனம் உயர் நுட்பப் பொருட்களை உற்பத்தி செய்யும் கட்டமைப்பை  இந்தியாவிலேயே ஏற்படுத்தும், அதன் மூலம் இந்தியாவில் தொழில் நுட்பமும் உற்பத்தித் திறனும் வளரும்’ என்று படம் காட்டியிருந்தது ஆளும் வர்க்கம்.

  • இன்னொரு நிபந்தனையாக ‘முதலீடு செய்யும் நிறுவனமே விற்கப் போகும் பிராண்டின் உரிமையாளராக இருக்க வேண்டும்’ என்பதும் விதிக்கப்பட்டிருந்தது.

இதன் மூலம் ‘குறிப்பிட்ட பிராண்டை உருவாக்கிய நிறுவனத்தின் தொழில் நுட்ப அறிவும் நிர்வாகத் திறனும் நாட்டுக்குள் வந்து சேரும்’ என்று வாதிடப்பட்டது.

இந்தியாவில் முதலீடு செய்யும் வரும் பெரும்பான்மை அன்னிய நிறுவனங்களைப் போலவே, பாவேர்ஸ் நிறுவனம் மொரிஷியசில் ஒரு  லெட்டர்பேட் கம்பெனி ஆரம்பித்து இந்த கொள்கையின் கீழ் முதலீடு செய்ய விண்ணப்பித்திருந்தது. ஆனால் பாவேர்ஸ் பிராண்ட் இங்கிலாந்து நிறுவனத்திடம் இருந்தது.

ஏற்கனவே ஜரா ஹோல்டிங் என்ற நிறுவனம் மாசிமோ தத்தி என்ற பிராண்டுக்கான கடை திறக்க முதலீடு செய்வதாக கொடுத்த விண்ணப்பம் பிராண்ட் உரிமைக்கான கொள்கைப்படி அன்னிய முதலீடு வளர்ச்சி வாரியத்தால் நிராகரிக்கப்பட்டிருந்தது.

ஐக்கியா நிறுவனம், விற்பனையில் 30 சதவீதம் மதிப்பை உள்நாட்டில் சிறு/குறு/நடுத்தர நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்வதைப் பற்றி ஆட்சேபணை தெரிவித்தது. ‘தான் கொள்முதல் செய்ய ஆரம்பிக்கும் நிறுவனங்கள் காலப் போக்கில் வளர்ந்து பெரு நிறுவனங்களாகி விடுவதால், அந்த நிபந்தனையை பின்பற்ற முடியாது’ என்று சொன்னது. மேலும் இந்தியாவிலேயே கொள்முதல் செய்யும் நிபந்தனையை நிறைவேற்றுவதற்கு 10 ஆண்டு அவகாசம் கேட்டது.

இரண்டாவதாக, ‘தனது கொள்கைப்படி பொருட்களை விற்பதற்கும் கொள்முதல் செய்வதற்கும் தனித்தனி பிரிவுகள் இருக்கின்றன. அதனால் இந்தியாவில் அவை தனித்தனி நிறுவனங்களாக செயல்பட அனுமதிக்க வேண்டும்’ என்றும் அடம் பிடிக்கிறது.

கூடவே கடைக்கு பொருட்கள் வாங்க வரும் வாடிக்கையாளர்களின் வசதிக்காக உணவு விடுதி ஒன்றையும் நடத்தப் போவதாக சொல்லியிருக்கிறது.

வெளிநாட்டு முதலாளிகளின் நலனுக்கும், நாட்டு நலனை கொஞ்ச நஞ்சம் பாதுகாப்பதாக காட்டுவதற்கு ஏற்படுத்தியிருந்த விதிகளுக்கும் முரண்பாடு ஏற்பட்டவுடன் அரசாங்கம் என்ன செய்திருக்கும்?

‘இது எங்க நாடு, எங்க தொழில் வளர்ச்சிக்காக, எங்க நாட்டு மக்களின் முன்னேற்றத்துக்காக இந்த நிபந்தனைகள் வைத்திருக்கிறோம். அதன்படி நடப்பதாக இருந்தால் உள்ளே வாங்க, இல்லை என்றால் வேறு இடத்தைப் பாருங்க’ என்று சொல்லவில்லை!

அன்னிய முதலீட்டாளர்களுக்கு ஒரு துன்பம் என்றதும் மன்மோகன் சிங் மனம் கசிந்துருகியது. அவரது தலைமையிலான அரசாங்கம் சென்ற வாரம் பலசரக்கு சில்லறை விற்பனையில் 51 சதவீதம் அன்னிய முதலீட்டை அனுமதித்த அதே நேரத்தில் ஒற்றை பிராண்ட் விற்பனையில் அன்னிய முதலீட்டுக்கான விதிமுறைகளையும் மாற்றி அமைத்தது.

  • ‘குறிப்பிட்ட பிராண்ட் உரிமையாளரிடமிருந்து பிராண்டை பெறுவதாக ஒப்பந்தம் வைத்திருந்தால் யாரை வேண்டுமானாலும் முதலீடு செய்ய அனுமதிப்போம்’ என்று பாவேர்ஸின் மௌரீஷியஸ் வழியான முதலீட்டுக்கு வழி வகுத்தார்கள்.

இனிமேல் வரி ஏய்க்கும் மௌரீஷியஸ் வழியில் பல நிறுவனங்கள் இந்தியாவுக்குள் கடை விரிக்க முடியும்.

வால்மார்ட் போன்ற ஏதாவது ஒரு வர்த்தக நிறுவனம் பல பிராண்டுகளை விற்பதற்கு தனித்தனியாக அனுமதி பெற்று ஒரே இடத்தில் எல்லா கடைகளையும் வைத்து நடைமுறையில் 100 சதவீத அன்னிய முதலீட்டுடன் பலசரக்கு விற்பனைக் கடை அமைத்துக் கொள்ளலாம்.

ஐக்கியாவின் விருப்பத்துக்கேற்ப உள்நாட்டில் கொள்முதல் செய்ய வேண்டிய விதியை தளர்த்தியிருக்கிறார்கள்.

  • ‘விற்பனையின் 30 மதிப்பிலான கொள்முதலை இந்திய நிறுவனங்களிடமிருந்து, குறிப்பாக முடிந்த அளவு சிறு/குறு நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்ய வேண்டும்’ என்று விதியை மாற்றுவதாக அரசாங்கம் சென்ற மாதம் விளக்கமளித்தது. முடியும் முடியாது என்பதை அந்தந்த நிறுவனமே தீர்மானித்துக் கொள்ளலாம்.

இதன்படி, 30 சதவீதம் உள்நாட்டு கொள்முதல் நிபந்தனையை நிறைவேற்ற என்பது டாடா குழுமத்திலிருந்தோ, அம்பானியின் உற்பத்தியிலிருந்தோ கூட கொள்முதல் செய்து கொள்ளலாம்.

  • இரண்டாவதாக 5 ஆண்டுகளில் மொத்த கொள்முதல் நிறுவனத்தின் இந்திய விற்பனையில் 30% இருந்தால் போதும் என்றும் நோக்கியாவின் பேரத்துக்கு படிந்தது அரசு.

அதாவது அன்னிய முதலாளியின் ஒரு நிறுவனம் முழுக்க முழுக்க வெளிநாட்டில் உற்பத்தியான பொருளை கொண்டு வந்து விற்கலாம். 30 சதவீதம் கொள்முதல் நிபந்தனையை கடைப்பிடிப்பதற்கு உள்ளூரில் வேறு ஏதாவது பொருளை வாங்கி கணக்கு காட்டலாம். உதாரணமாக, இந்திய கைவினைப் பொருட்களை வாங்கி ஏற்றுமதி செய்கிறோம் என்று கூட விதியை வளைத்துக் கொள்ளலாம்.

இதைத் தொடர்ந்து ஐக்கியா மற்றும் பாவேர்ஸ் நிறுவனங்களின்  அன்னிய முதலீட்டு விண்ணப்பம் ‘தொழில் கொள்கை மற்றும் வளர்ச்சித் துறை’யில் அனுமதி பெற்று ‘அன்னிய முதலீடு வளர்ச்சி வாரியத்துக்கு’ அனுப்பப்பட்டுள்ளது. ‘தொழில் கொள்கை மற்றும் வளர்ச்சித் துறை’ விண்ணப்பம் கொள்கைப்படி சரியாக இருக்கிறதா என்று பார்த்த பிறகு தனது கருத்துக்களுடன் அன்னிய முதலீட்டு வளர்ச்சி வாரியத்துக்கு அனுப்பி வைக்கிறது.

ஐக்கியா ரூ 7,500 கோடி முதலீடு போட்டு தனது விருப்பப்படி விதிகளை மாற்ற வைத்து சில்லறை விற்பனையில் இறங்கத் தயாராகிறது. பாவேர்ஸ் ரூ 110 கோடி மதிப்பிலான முதலீட்டில் இந்திய மக்களை சுரண்ட வழி வகுக்கப்பட்டு விட்டது. தம்பட்டம் அடிக்கப்பட்ட இந்தியத் தொழில் வளர்ச்சிக்கான நிபந்தனைகளை காற்றில் பறக்க விட்டிருக்கிறது இந்திய அதிகார வர்க்கம்.

இந்த கொள்கை மாற்றங்களைத் தொடர்ந்து பிரெஞ்சு ஆடை நிறுவனம் சீலியோ, இத்தாலிய ஆடை நிறுவனம் குருப்போ காயின், இத்தாலிய நலவாழ்வு நிறுவனம் ஆர்ட்சானா, ஸ்வீடனைச் சேர்ந்த பேஷன் நிறுவனம் எச்&எம், டாம்மி ஹில்பிகர் போன்ற நிறுவனங்களும் இந்திய மக்களை சுரண்டுவதற்கு வரிசையில் நிற்கின்றன.

நாட்டின் வளர்ச்சிக்காக ஆட்சி புரிவதாக போக்கு காட்டியவாறே தங்களது எஜமானர்களான ஏகாதிபத்தியங்களுக்கு விசுவாசம் காட்டுவதுதான் நமது அதிகார வர்க்கத்தின் லட்சணம்.

படிக்க

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க