privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்அரவிந்த் கேஜ்ரிவால்: பாம்புகளில் நல்ல பாம்பு!

அரவிந்த் கேஜ்ரிவால்: பாம்புகளில் நல்ல பாம்பு!

-

அரவிந்த் கேஜ்ரிவால்
அரவிந்த் கேஜ்ரிவால்

காங்கிரஸ்காரர்கள் ‘பொறுமைக்குப்’ பெயர் போனவர்கள். எதையும் நின்று நிதானித்து, ஆழமாய் ரசித்து, செய்து முடிப்பதில் கில்லாடிகள் என்கிற புகழ் அவர்களுக்கு உண்டு. ஒட்டுமொத்த இந்தியாவையும் ஓட்டாண்டியாக்க வேண்டுமென்கிற ஒற்றை லட்சியத்துக்காக நூற்றாண்டுகளையும் கடந்து கொஞ்சம் கொஞ்சமாய் காய் நகர்த்தும் சாமர்த்தியம் அவர்களுக்குண்டு. சட்டென்று பாய்ந்து குரல்வளையைக் கடித்துக் குதறி ரத்தம் உறிஞ்சும் பாரதிய ஜனதாவின் வழிமுறையும் காங்கிரசின் வழிமுறையும் வேறு வேறானது. முந்தையது ரத்தக்காட்டேறி என்றால் இது ராட்சச அட்டைப்பூச்சி. வலியை உணரக் காலமாகும்.

நிற்க.

இப்படியாப்பட்ட பெருமைக்கும் புகழுக்கும் சமீபமாய் பெரும் ஆபத்து வந்துள்ளது. எந்த முன்னறிவிப்பும் இன்றி டீசல் விலையை உயர்த்தியது, சிலிண்டர்களுக்குக் கட்டுப்பாடு விதித்தது, ஓய்வூதியத்தை சூதாட்டத்தில் இறக்கி விட்டது, வால்மார்ட்டை நுழையவிட்டது, இன்சுரன்ஸ் துறை மற்றும் ஊடகத் துறையில் அந்நிய முதலீட்டை அதிகரித்தது, விமான சேவையில் அந்நிய முதலீட்டை அனுமதித்தது மற்றும் இறுதியாக முக்கியமான மூன்று பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்க முடிவு செய்தது என்று தேசத்தின் மேல் அதிரடித் தாக்குதல்களை காங்கிரஸ் கூட்டணி அரசு தொடுத்துள்ளது. இது மக்கள் மேல் தொடுக்கப்பட்ட ஒரு உள்நாட்டுப் போர்.

தலையே கூத்தாடும் போது வால் துடிக்கவாவது வேண்டுமல்லவா? தில்லி நடுத்தர வர்க்கத்தினரிடையே ஆக்ஸ்போர்டில் படித்தவர், பண்பானவர் என்றெல்லாம் பெயரெடுத்த சல்மான் குர்ஷித் நாலாந்தர ரவுடியைப் போல ‘எங்க ஏரியாவுக்கு வாடா மவனே! முழுசா திரும்பிப் போய்டுவியான்னு பாக்கறேன்’ என்பது போல மிரட்டல் விடுத்துள்ளார். யாருக்கு இந்த மிரட்டல்? அர்விந்த் கேஜ்ரிவால் தான் மிரட்டப்பட்டவர். ஆம், வினவு வாசகர்களுக்கு நன்றாக அறிமுகமான ‘ அண்ணா ஆதரிக்கிறாரு ஆனா ஆதரிக்கலை’ புகழ் கேஜ்ரிவால் தான்.

கேஜ்ரிவால் தனக்கென்று சொந்தமாக ஒரு புத்தம் புதிய அரசியல் கம்பெனி துவங்கி கோதாவில் குதித்திருப்பது வாசகர்கள் அறிந்ததே. புதுப் படமல்லவா, எனவே புரமோஷன் வேலைகள் படு ஜரூராக நடந்து வருகின்றன. நாளொரு ஊழல் குற்றச்சாட்டும், பொழுதொரு முறைகேடு புகாருமாக அம்பலப்படுத்தி டி.ஆர்.பி ரேட்டிங் பெற கடுமையாகப் போராடி வருகிறார், கேஜ்ரிவால். அந்த வகையில் பல்வேறு அரசியல் கட்சிப் பிரமுகர்களின் யோக்கியதைகள் தொடர்ச்சியாக வெளியாகி இந்திய ஓட்டுக்கட்சி ‘ஜனநாயகம்’  ஒளிவீசிப் பிரகாசித்து வருகிறது.

சமீபமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘ஊழல் எதிர்ப்பு’ ரியாலிட்டி ஷோவின் எத்தனாவதோ சீசனில் முதலில் மாட்டியவர் ராபர்ட் வதேரா. ஐம்பது லட்சத்தில் ‘தொழிலைத்’ துவங்கிய நாட்டின் முதல் மருமகனார் ராபர்ட் வதேரா, சூரியவம்சம் லாலாலா பாட்டு முடியும் இடைவெளிக்குள் முன்னூறு கோடியாக அதை வளர்த்தெடுத்ததன் பின்னே இருக்கும் இரகசியங்களை கேஜ்ரிவால் சந்திக்கு இழுத்து வந்தார். இதில் டி.எல்.எஃப் என்கிற கட்டுமான மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனம் ராபர்ட் வதேராவுக்கு சும்மா கைமாத்தாக பல கோடி ரூபாய்களைக் கொடுத்ததும், அதைத் தொடர்ந்து தில்லியைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அரியானாவிலும் அந்நிறுவனம் அடிமாட்டு விலைக்கு நிலங்களை வளைத்துப் போட்டதும் அம்பலமானது.

அதைத் தொடர்ந்து ராபர்ட் வதேரா நேரடியாகவே அடிமாட்டு விலைக்கு நிலங்களை வளைத்துப் போட்டிருப்பதும், பல்வேறு வகையான அசையாத சொத்துக்களை வாங்கிப் போட்டிருப்பதும், இதற்கு அரசு இயந்திரமே முன்னின்று உதவியிருப்பதும் ஒவ்வொன்றாக வெளியாகி காந்தி குடும்பத்தின் மானம் கந்தல் கந்தலானது. நாட்டின் முதல் குடும்பத்தின் முதல் மருமகனாரையே சந்திக்கு இழுத்திருப்பதால் யாவாரம் சூடு பிடிக்கும் என்று கேஜ்ரிவால் எதிர்பார்த்திருப்பார். ஆனால், அவர் நினைத்த அளவிற்கு  செல்ப் எடுக்கவில்லை. தில்லி ஜந்தர் மந்தரில் வழமையாக கூடும் ஊழல்  எதிர்ப்புக் கட்சியினரின் கூட்டங்களுக்கு எப்போதும் வரும் அதே இருநூற்றி பதினேழரை பேர்கள் தான் வந்திருந்தனர்.

திரைக்கதையில் நான்கைந்து சண்டைக்காட்சிகள் சேர்த்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தார்களோ என்னவோ, ராபர்ட் வதேராவைத் தொடர்ந்து சல்மான் குர்ஷித் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் நிதின் கட்காரி ஆகியோரும் மேடைக்கு வந்துள்ளார்கள்.

சல்மான் குர்ஷித் மற்றும் அவரது மனைவி நடத்தும் மாற்றுத் திறனாளிகளுக்கான என்.ஜி.ஓ அமைப்பு, சுமார் 71 லட்சம் ரூபாய் அளவிற்கு மோசடியில் ஈடுபட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. ஜாகீர் ஹுசேன் நினைவு அறக்கட்டளை எனும் பெயரில் மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித்தும் அவரது மனைவி லூசி பெர்னாண்டஸும் இணைந்து நடத்தி வரும் என்.ஜி.ஓ அமைப்பு, ஊனமுற்றோருக்கு கருவிகள் வாங்கியதில் போர்ஜரி உள்ளிட்ட மோசடிகளில் ஈடுபட்டு கொள்ளையடித்திருப்பதாக வட இந்தியாவைச் சேர்ந்த ஊடகங்களில் பரபரப்பாக செய்திகள் வெளியாகத் தொடங்கின.

இதையடுத்து, சல்மான் குர்ஷித் மேல் நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமரின் இல்லத்தை மாற்றுத்திறனாளிகளோடு முற்றுகையிட்டுப் போராடப் போவதாக அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து தனது தொகுதியான பரூகாபாத்தில் பேசிய போது தான் சல்மான் குர்ஷித், அரவிந்த் கேஜ்வாலுக்கு மிரட்டல் விடுத்திருந்தார்.

நிதின் கட்காரியைப் பொறுத்த வரை, ஆர்.எஸ்.எஸின் அரசியல் கம்பேனிக்கு மேனேஜர் வேலை பார்ப்பதோடு சொந்தமாக பூர்த்தி சின்ச்சன் கல்யான்காரி சன்ஸ்தா என்கிற தொண்டு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்திற்கு பெயர் பலகை அமைப்புகள் பலவற்றிடம் இருந்து எந்த முகாந்திரமும் இல்லாமல் கோடிக்கணக்கான முதலீடுகள் வந்து குவிந்துள்ளன.

1995-ம் ஆண்டிலிருந்து 1999-ம் ஆண்டுவரை மகாராஷ்டிராவை ஆட்சி செய்த சிவசேனா – பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சியில் பொதுப்பணித் துறை அமைச்சராக பொறுப்பு வகித்த நிதின் கட்காரி, ஐடியல் ரோடு பில்டர் எனும் கம்பெனிக்கு பல்வேறு கட்டுமானக் காண்டிராக்டுகளை வாரி வழங்கியுள்ளார். 1996-ல் 46 கோடி ரூபாயாக இருந்த இந்நிறுவனத்தின் வருமானம் 1999-ம் ஆண்டு வாக்கில் 67 கோடிகளாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் ஐடியல் நிறுவனம் தனது இன்னொரு துணை நிறுவனமான குளோபல் சேப்டி விஷன் வழியாக நிதின் கட்காரியின் பூர்த்தி நிறுவனத்திற்கு எந்த அடிப்படையும் இல்லாமல் ‘கடனாக’ 165 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. மேலும் பல நூறு ஏக்கர் விவசாய நிலங்களை நிதின் கட்காரி மகாராஷ்டிர அரசின் துணையோடு ஆக்கிரமித்திருப்பதும் அம்பலமானது.

இப்படியாக கேஜ்ரிவால் தன்னைச் சுற்றி 360 டிகிரியிலும் கற்களை சராமாரியாக எறிந்து வருவது தேசிய ஊடகங்களில் பரபரப்பான செய்திகளாக இடம் பெற்று வருகின்றன.

இதில் பாரதிய ஜனதாவின் நிலை தான் உண்மையிலேயே நகைச்சுவையாய் இருக்கிறது. காங்கிரசு சேற்றில் சிக்கித் தவிக்கிறதே என்று இவர்களால் குதூகலிக்கவும் முடியாதபடிக்கு மலக்குட்டைக்குள் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஊழல் எதிர்ப்பு ரியாலிட்டி ஷோவிலிருந்து கெமிஸ்ட்ரி ஒர்கவுட் ஆகவில்லை என்பதால் வெளியேற்றப்பட்டுள்ள பாரதிய ஜனதா, வைல்ட் கார்ட் ரவுண்டிலாவது இடம் கிடைக்க வேண்டுமே என்று தவியாய்த் தவிக்கிறது. நடக்கும் நாடகத்தில் எந்த கதாபாத்திரத்தின் வாலைப் பிடித்துக் கொண்டு தொங்கலாம் என்கிற முடிவை வழக்கம் போல் இன்னும் வலது இடது போலி கம்யூனிஸ்டுகள் எடுத்து முடிக்கவில்லை. எடுத்து விட்டாலும் அது அவர்களின் பாரம்பரிய வழக்கத்தின்படி மொக்கையாய்த் தான் இருக்குமென்பதால் அதைப் பற்றி மக்களே கவலைப்பட மாட்டார்கள். போகட்டும்.

அரவிந்த் கேஜ்ரிவாலின் ஊழல் எதிர்ப்பு இயக்கம் ஒரு குறிப்பான பிரச்சினைக்காக போராடும் இயக்கம் என்பதைக் கடந்து பொதுவான அரசியல் கட்சி என்கிற அவதாரத்தை எடுத்துள்ளது. இவர்கள் ஊழல் எதிர்ப்பு மற்றும் அதற்கான தீர்வாக ஜன்லோக்பால் மசோதா என்பவற்றை முன்வைத்து இயங்கிய போதே பிரச்சினைகளைப் பற்றி கொண்டிருந்த கண்ணோட்டம் அபாயகரமானது. ஊழல் ஒழிப்பு என்பதைப் பற்றிப் பேசும் போதே அதற்கான அடிப்படைகளையும் அதன் ஊற்றுமூலம் என்னவென்பதையும் பற்றி பேசாமல் தவிர்த்தே வந்தனர்.

அதன் காரணமாகவே  இந்த நாட்டின் மிகப் பெரிய கிரிமினல் கும்பலான ரிலையன்ஸ் குழுமத்திடமிருந்தும் கூட உதவிகளைப் பெற்றுக் கொண்டனர். அலைக்கற்றை ஊழலில் தின்று வீங்கிய செல்பேசி நிறுவனங்கள் முன்வந்து வழங்கிய உதவிகளை எந்தக் கூச்சமும் இல்லாமல் பெற்றுக் கொண்டே ஊழலை எதிர்த்து முழக்கமிடத் தயங்கவில்லை.

பன்னாட்டு மூலதனத்தின் முன்னும், உள்நாட்டுத் தரகு முதலாளிகளிடமும், மேல்நிலை ஏகாதிபத்தியங்களின் பாதார விந்தங்களிலும் இந்தியப் பொருளாதாரமே அடகு வைக்கப்பட்டு விட்ட நிலையில், அவர்களின் லாப வேட்டைக்கும் பகாசுர கொள்ளைக்கும் தேசத்தின் எல்லைகள் அகலமாகத் திறந்து விடப்பட்டுள்ளன. இந்த அடிப்படையிலிருந்தே, இந்நாட்டின் வளங்களை வேண்டிய மட்டிலும் கூடிய விரைவில் உறிஞ்சித் தீர்த்து விட இவர்கள் வெறி கொண்ட முறையில் முயற்சிப்பதிலிருந்து தான், சட்டங்கள் நடைமுறைகள் விதிமுறைகள் மரபுகள் என்று சகலமும் கழிவறைத் தொட்டிக்குள் வீசியெறியப்படுகிறது. ஊழல் துவங்குகிறது.

அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் வெட்டியெடுத்ததாக சொல்லப்படும் கிரானைட் ஊழலைப் பற்றிப் பேசும் போது பி.ஆர்.பிக்கு எந்த வரைமுறையும் இன்றி மலைகளைப் பட்டா போட்டுக் கொடுக்க வகை செய்த அரசின் தனியார்மயக் கொள்கைகளில் இருந்து தான் துவங்க வேண்டும். அனைத்து மக்களுக்கும் சொந்தமான இயற்கை வளம் ஒன்றை பி.ஆர்.பி என்கிற தனி நபருக்குச் சொந்தமாக்க வேண்டும் என்பதில் இருந்து தான் ஊழல் துவங்குகிறது. இதில் அனுமதிக்கப்பட்ட அளவு என்பதெல்லாம் வெறும் கேலிக்கூத்து – குரல்வளையை ஒரு இஞ்சு ஆழத்துக்கு அறுக்க அனுமதி; அதற்கு மேல் அனுமதியில்லை என்பதைப் போன்ற வாதம் தான் அது.

கேஜ்ரிவால் ஊழல் பற்றி பேசுகிறார். ஊழல் செய்தவர்களை அம்பலப்படுத்தி பேசுகிறார். சவால் விடுத்துப் பேசுகிறார். ஆனால் இதற்கு யாரெல்லாம் – எதெல்லாம் காரணமோ அவற்றைப் பற்றி மட்டும் பேசாமல் தவிர்க்கிறார். ஊழல் ஒழிப்புக்கான வருத்தமில்லா வாலிபர் சங்கமாக இருந்து அதன் அடித்தளத்தின் மேல் இப்போது அவதரித்திருக்கும் கட்சியின் நிலைப்பாடு இப்படித்தான் இருக்கும் என்பது ஆபத்துக்குரியது.

இன்றைய நிலையில் ஆளும் கும்பல் தேசத்தின் மக்களின் மேல் ஒரு உள்நாட்டுப் போரைத் திணித்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை உயராத நிலையிலும் எந்தக் காரணமும் இன்றி டீசல் விலை உயர்த்தப்பட்டதால் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் விண்ணை முட்டுமளவிற்கு அதிகரித்துள்ளன. மின் உற்பத்தியும் வினியோகமும் தனியார் நிறுனங்களுக்குத் தாரை வார்க்கப்பட்டு விட்டதால் மின்சார கட்டணம் முன்னெப்போதும் இல்லாத வகையில் உயர்ந்துள்ளது. தண்ணீர் வினியோகமும் கொஞ்சம் கொஞ்சமாக தனியார்களுக்குத் திறந்து விடப்பட்டு விட்டது.

“நான் கஷ்டப்பட்டு சம்பாதிச்சேன். இப்ப ஜாலியா இருக்கேன். நான் ஏன் போராடணும்” என்று கிண்டலாக கேட்கும் தடித்தோல் கனவான்களுக்கும் ஆப்பு வந்துள்ளது மன்மோகன் மாண்டேக் சிதம்பரம் கும்பலால். உழைப்பால் உயர்ந்த விக்கிரமன் பட ஹீரோக்களின் ஓய்வூதியத்தையும் சேமிப்பையும் காப்பீட்டையும் சூதாட்டத்தில் இறக்கி விட அரசு தயாராகி வருகிறது. இன்று கிரீஸிலும் ஐரோப்பாவின் பிற நாடுகளிலும் நடப்பது நாளை இங்கும் நடக்கும். இதெல்லாம் தாராளமய பொருளாதார சீர்திருத்தத்தின் பல்வேறு கட்டங்களாய் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இன்சுரன்ஸ் துறையில் அந்நிய முதலீடு, ஓய்வூதியத்தை தனியாருக்கும் அந்நியருக்கும் திறந்து விடுவது, பச்சை வேட்டை, வேதாந்தாவின் சுரண்டல், 2-ஜி அலைக்கற்றை ஊழல், நிலக்கரி ஊழல், ஆதர்ஷ் வீட்டு மனை ஊழல், பி.ஆர்.பியின் மலைத்திருட்டு, ப.சிதம்பரத்தின் கள்ளச் சிரிப்பு, மன்மோகனின் கள்ள மௌனம், நிதின் கட்கரியின் நில மோசடி, ராபர்ட் வதேராவின் நில மோசடி, ராகுல் காந்தியின் ஃபிராடுத்தனம், நரேந்திர மோடியின் இதழோரம் வழியும் இரத்தம், விலைவாசி உயர்வு, மின் தட்டுப்பாடு – இவையனைத்தும் வேறு வேறு அல்ல. தேசத்தின் இறையாண்மையை ஒட்டுமொத்தமாக அடகுவைத்து நாட்டை மீண்டும் காலனியாக்கும் ஒரு  மாபெரும் நிகழ்ச்சி நிரலின் சின்னச் சின்ன பகுதிகளாக செயல்படுத்தப்படும் திட்டங்களின் வெளிப்பாடுகள் தான் இவை.

ஆக, இவையனைத்துக்கும் மையமான பிரச்சினையாக விளங்கும் காரணத்தைப் பற்றிப் பேசாமல் தவிர்ப்பதென்பது அதற்குச் சேவை செய்வதில் தான் முடியும். அந்த வகையில் தான் ஊழலின் அடிப்படையை பற்றிப் பேசாமல் தவிர்க்கும் அரவிந்த் கேஜ்ரிவால் மின்வெட்டு, விலைவாசி உயர்வு, தனியார்மயமாக்கம், பன்னாட்டு மூலதனத்தின் சுரண்டல் போன்றவைகளையும் பேசாமல் அமைதி காக்கிறார்.

போராடும் மக்களை திசை திருப்புவதற்காக ஏகாதிபத்தியங்களால் வளர்த்தெடுக்கப்பட்ட என்.ஜி.வோ பாணியிலான அரசியல் இயக்கம்தான் அரவிந்த கேஜ்ரிவால் மற்றும் அண்ணா ஹசாரேவுடையது. பரபரப்பான முழக்கங்கள், கிளர்ச்சிகள், வாய்ச் சவடால்கள் என்று வடிவத்தில் புரட்சியையும், உள்ளடக்கத்தில் ஆளும் வர்க்க சேவையும்தான் இத்தகைய தன்னார்வக்குழுக்கள் கொண்டிருக்கின்றன.

மாறி மாறி வரும் ஓட்டுக்கட்சிகளின் அரசாங்கங்களின் ஆட்சியின் கீழ் தொடர்ந்து தாம் வஞ்சிக்கப்படுவதை மக்கள் ஒருவேளை உணர்ந்து விழிப்படைந்து விட்டால் அவர்களுக்கு ஒரு மாற்று இருக்கட்டுமே என்பது தான் கேஜ்ரிவாலுக்கு முதலாளிததுவ ஊடகங்களில் கிடைக்கும் முக்கியத்துவத்தின் அடிப்படை. ஒருவேளை காங்கிரசும் பாரதிய ஜனதாவும் தமது ஊழல் மகாத்மியங்களால் மக்களில் ஒரு பிரிவினரிடையே செல்வாக்கிழந்து போனால் அந்த இடைவெளியை அரவிந்த் கேஜ்ரிவால் நிரப்புவது போன்ற மாயையைத் தரக்கூடும். ஆனால் அந்த மாயை எதையும் சாதித்து விடாது என்பதும் ஆளும் வர்க்கத்திற்கு தெரியும். அவர்களுக்குத் தேவை மேடையில் பரபரப்பாக நடிக்கும் ஒரு நடிகன். “நல்ல நடிகன்”.

அதாவது, ‘நல்ல’ தாலிபான்கள்,  ‘நல்ல’ பாம்பு  என்றெல்லாம் சொல்வார்களே அதுபோல என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

– தமிழரசன்.

  1. “நான் கஷ்டப்பட்டு சம்பாதிச்சேன். இப்ப ஜாலியா இருக்கேன். நான் ஏன் போராடனும்” என்று கிண்டலாக கேட்கும் தடித்தோல் கனவான்களுக்கும் ஆப்பு வந்துள்ளது மன்மோகன் மாண்டேக் சிதம்பரம் கும்பலால். உழைப்பால் உயர்ந்த விக்கிரமன் பட ஹீரோக்களின் ஓய்வூதியத்தையும் சேமிப்பையும் காப்பீட்டையும் சூதாட்டத்தில் இறக்கி விட அரசு தயாராகி வருகிறது. இன்று கிரீஸிலும் ஐரோப்பாவின் பிற நாடுகளிலும் நடப்பது நாளை இங்கும் நடக்கும்.

    வீதியில் இறங்கி போராடுவது ஒரு பக்கம் இருந்தாலும் அவரவர் பொறுப்புடன் இருக்க வேண்டும் என்பது கூட மங்கிப் போய்விட்டது. மழை பெய்த இடங்களில் நுழைந்த ஊடகத்திடம் பேசும் ஒவ்வொரு பொதுஜனமும் தனது தெருவை, தனது பகுதியை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று தெரியாமல் அவங்க வந்து பாக்கல. நான் பொறந்தது முதல் இப்படியே தான் இந்தஇடம் இருக்குது என்ற ஒப்பாரிகள் தான் அதிகம் கேட்க முடிகின்றது.

    போராட வேண்டும் என்ற எண்ணம் உருவாகவேண்டுமென்றால் தன்னைப் போல மற்றவற்றை நேசித்தல். நுகர்வு கலாச்சாரத்தில் அத்தனையும் வடிகால் இல்லாத இடம் போல அடித்துச் சென்று கொண்டு இருக்கிறது. அப்புறம் எங்கே போராட முன்வருவார்கள்?

    தண்ணீர் பிரச்சனை விஸ்ரூபம் எடுக்கும் போது தான் நீங்கள் சொல்லும் மக்கள் போராட்டம் வெடிக்கும்.

  2. ஏய்யா ! எவன் எதை செய்தாலும் அதில் தப்பு கண்டுபிடிப்பதே வழக்கமாக போய் விடக்கூடாது!

    ஊழலுக்கு ஆதரவாய் ஸ்போக்ஸ் மேன்களாக காங்கிரஸ் கட்சி வைத்திருக்கிற ஆட்களை முதலில் கேஜ்ரிவால் எதிர் கொள்கிறார் என்று வைத்துகொள்ளலாம்.
    குர்ஷீத் ஆலம் கான் , ஜெயந்தி நடராசன் போன்றவர்கள் கட்சியில் எந்த தப்பு நடந்தாலும் அதை சப்பை கட்டு கட்டி தாங்கள் நேர்மை ஆனவர்கள் என்று பேச கற்றுக்கொண்டு பதவியை வாங்குகிற திறமையை பெற்றிருக்கிறார்களே ஒழிய பொது வாழ்க்கையில் வந்து விட்டோம் ,சரியானதை பேசுவோம் ,செய்வோம் என்ற மனப்பான்மை எல்லாம் இவர்களுக்கு கிடையாது. எனவே இவர்களை முதலில் அப்புறபடுத்த வேண்டும்!

  3. பாம்புகளில் கொடிய விசமுள்ளது நல்ல பாம்புதான். இப்படிபட்ட பாம்புகள்தான் நல்ல(பாம்பு)வேஷம் போட்டு மக்களை ஏய்க்துக. மக்களும் நல்ல பாம்பு தெய்வ சக்தியுள்ளது என்று நம்புவதும் பின்னாடி பாம்பிடம் கொட்டு (கடி)வாங்குவதும் தொடர்ந்து நடக்கிறது. இந்த கதை சீக்கரமாகவும் முடியமாட்டுதுதே என்று சிலருக்கு கோபமாகவும் இருக்கிறது.

  4. ஏன் ராபர்ட் வத்ரா, சல்மான் குர்ஷித் ஊழல்களைப் பற்றி கேஜ்ரிவாலுக்கு முன் நீங்கள் பேசி இருக்கலாமே! மற்றபடி அவர் சகட்டுமேனிக்கு எல்லோரையும் அம்பலப்படுத்தி வருவது ஒரு கட்டத்தில் மக்களுக்கு அலுத்துவிடும் என்று ஆங்கில ஊடகங்களே சொல்லிக்கொண்டுதான் இருக்கின்றன (சி.என்.என். ஐ.பி.என், டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ்). இருக்கட்டுமே.

    இப்போது கேஜ்ரிவால்தான் என் ஹீரோ! வரும் தேர்தலில் அவருக்குதான் என் ஓட்டு. (இன்றைய நிலையில்). காங்கிரஸ், பிஜேபி இரண்டையும் பார்த்துவிட்டோம். இந்த இளைஞர்களுக்கு ஒரு வாய்ப்புக் கொடுத்துத்தான் பார்க்கலாமே! இவர்கள் முன்பு ‘படித்த இளைஞர்கள்’ என்று கூறிக்கொண்டு காமெடி பண்ணிய ‘லோக் பரித்ரன்’ வகையறா கிடையாது. ஐ திங்க் தே மீன் பிஸினஸ் அன்ட் தே ஆர் இன் இட் ஃபார் தி லாங் ஹவ்ல்.

    • ரொம்ம்ப கொழம்பி இருக்கறவங்களையும் கொழப்புறீங்களே…..என்ன சொல்ல வர்ரீங்க….அடுத்த ஓட்டு கெஜிரிவாலுக்குனா….?

  5. குறை கண்டு பிடித்தே பெரிய ஆளாக நினைக்கும், வினவு கூட்டங்களுக்கு மத்தியில் கேஜ்ரிவால் ஒளிர்கிறார்.
    வினவு கூட்டத்திடம் நல்ல திட்டம் இருந்து(?) , அதை மக்களிடம் கொண்டு சேர்த்து தேர்தலில் திறமையை காட்டலாமே ! சும்மா அது நொள்ளை இது நொள்ளை என்று சலம்ப வேண்டியது.

    • ஏற்கனவே “அன்னா அசாரே” இப்போது ‘கெஜ்ரிவால்” அடுத்து….? உங்க அரிப்பு எப்பதான் அடங்குமோ….புலிகேசி பாணியில் கேட்பதென்றால் ” எத்தனையோ அலுவல்களுக்கு மத்தியில் இந்த பின்னூட்டம் இடும் யோஜனை தங்களுக்கு ( ரகு) எப்படி மன்னா தோன்றியது…

      • குடிமகனே கருப்பா! பூவுலகில் குறையில்லாத முழுமையான திட்டம்,அமைப்பு அல்லது ஆள் என்று எதுவும் இல்லை.There is no such thing as ideal solution , plan …. Everything has to evolve over time. If you wait for a perfect perfect man descend on earth with perfect perfect solution to cure your needs,welcome to the religions club. They set you up with a mind set that God will be back with his perfect perfect solution to cure all the ills of society or punish the bad people. So you wait for your perfect man with perfect solution.( I heard people are waiting more than 2000 years already)
        I will move on with next iteration of democracy.

        • டென்சனாவாதீங்க ர்ர்ர்ர்ரகு…… நான் கேட்ட கேள்வி அன்னா பலூன் புஸ்ஸாயிடிச்சே ஏன், அப்போ எதோ நாட்டிலே புர்ட்சி வந்திச்சினு உங்கள மாதிரி கும்பல் கூச்சல் போடிச்சே அது என்னாச்சி…அதுக்கு பதில் சொல்லுங்க, அப்பிடியே இப்பொ கெஜிரிவாலுவின் கதையையும் சொல்லுங்க,அதுக்கு மின்னாடி இந்த பதிவை முழ்சா படிங்கோ….அப்புறம் உங்க இங்கிலிபிஸு எடுத்து வுடுங்கோ…..நான் ஒண்ணு கேட்டா நீங்க ஒண்ண உங்க “அன்னா” மாதிரியே பேசுனா எப்பிடி சார்ர்….

          • A good concept need not have followers or crowd. It will stand on its own. In democracy crowd may like Rajini over Kamaraajar. It is not necessary for a crowd to be right.No crowd does not mean it is a bad concept. It will take time for people to learn in a democracy. For some, democracy means free tv, for some it means cast power. but in the end truth will prevail. People will have no choice but to fight corruption

            • நான் குடிமகன்னு கன்டுபிடிச்ச உங்க ” அறிவுக்கு” பாவம் இதெல்லம் பிரியிலியா…. ரஜினி காமாராசுனு இந்த கொழப்பு கொழப்புறீங்க….

  6. அரவிந்த கேஜ்ரிவால் என்ன தான் தலை கீழாய் நின்று தண்ணி குடித்தாலும், காங்கிரசையும் ஜனதாவையும் அப்புறப்படுத்தி விடலாம் எனபது வெறும் கனவாகவே முடியும்…

    இத்தகைய ஊழல் குற்ற பிரசாரக் குழுவினால் மக்களுக்கு எந்த நேரடி பலனும் இல்லாத வரை அவர்களால் ஓட்டுக்களை கவர முடியாது…

    ராபர்ட் வதேராவை கேஜ்ரிவால் ரவுண்டு கட்டிவிட்டார் என்ற செய்தி ராயல் சீமாவிலோ, ராஜஸ்தானிலோ, ரூர்கேலாவிலோ, ரெட்டிக்குப்பதிலோ இருக்கும் சாமானிய ஓட்டு மனிதனை எள்ளளவும் அசைத்துவிடவில்லை…

    சல்மான் குர்ஷித் – கேஜ்ரிவாளுக்கு சவால் என்ற முக்கிய செய்தி, சன் டிவி செல்வத்தை விட தமிழனக்கு முக்கியமும் இல்லை.. சல்மான் கானை தெரிந்த அளவு சல்மான் குர்ஷித்தை அறிந்த கான் பனேகா க்ரோர்பதி ரசிகர்களும் இந்தியாவில் இல்லை…

    கேஜ்ரிவால் இன் ஆக்சன் – ஸ்பான்சர்ட் பை டைம்ஸ் நவ் என்பதை, அமிதாப் இன் ஆக்சன் – ஸ்பான்சர்ட் பை ஸ்டார் கோல்ட் தொலை தூரத்துக்கு பின்னுக்கு தள்ளி விடும் என்பதே எதார்த்தம்…

  7. அண்ணே… இப்போ ஒரு டவுட்டு… கிஜிரிவால்.. இப்போ அம்பானி தான் நாட்டை ஆள்ரார் பிரதமர் இல்லைன்னு அம்பானிய போட்டு குடுக்கிறார்.. இப்பொ என்ன சொல்லுறீங்க கிஜிரிவால் பத்தி…

Leave a Reply to கருப்பன் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க