Thursday, August 11, 2022
முகப்பு புதிய ஜனநாயகம் போலீசு அமைப்பையே கலைக்கக் கோரிப் போராடுவோம்!

போலீசு அமைப்பையே கலைக்கக் கோரிப் போராடுவோம்!

-

‘‘போலீசாரைச் சுதந்திரமாகச் செயல்படவிட்டால்தான் குற்றங்களைத் தடுக்க முடியும்; சமூக விரோதிகளை ஒடுக்க முடியும்” என்ற பொய் பார்ப்பனக் கும்பலால் மட்டுமின்றி, பத்திரிகைகள், நடுத்தர வர்க்க அறிவுத்துறையினராலும் திட்டமிட்ட முறையில் பொதுமக்கள் மத்தியில் திரும்பத்திரும்ப பரப்பப்படுகிறது.  இது மட்டுமின்றி, “தி.மு.க. ஆட்சியைவிட, அம்மாவின் ஆட்சியில்தான் தமிழக போலீசு, எவ்விதமான அரசியல் தலையீடும் இன்றி, அப்படிச் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்கப்படுகிறது” என்றும் இவர்கள் ஜெயாவைக் குற்றங்களைச் சகித்துக் கொள்ளாத இரும்பு மனுஷியாகப் புகழ்ந்து தள்ளிவருகிறார்கள்.

ஆனால், உண்மையோ இவர்கள் சொல்லி வருவதற்கு நேரெதிராகவே உள்ளது.  பார்ப்பன ஜெயா பதவியேற்ற பிறகும் தமிழகத்தில் தொடர்ச்சியாக நடந்துவரும் கொலை, கொள்ளைச் சம்பவங்கள், அவர்களே கூறிக்கொள்ளும் சட்டம்  ஒழுங்கைக் காப்பதில் ஜெயா ஆட்சி படுதோல்வியடைந்துவிட்டதையே எடுத்துக்காட்டுகின்றன.  இன்னொருபுறம் ஜெயாவின் ஆட்சியில் சுதந்திரமாகச் செயல்பட்டு வரும் தமிழக போலீசு, இக்குற்றங்களைக் கட்டுப்படுத்தாத அதேசமயம், பொதுமக்கள் தமது நியாயமான கோரிக்கைகளுக்காக நடத்தும் சட்டபூர்வமான போராட்டங்களைக்கூடப் பொறுத்துக் கொள்ளமுடியாமல், வெறிபிடித்த நாயைப் போலப் போராடும் மக்கள் மீது பாய்ந்து குதறிவருகிறது; கொட்டடிக் கொலை  சித்திரவதை, கும்பல் பாலியல் வன்புணர்ச்சி என அனைத்துவிதமான வக்கிரமான அத்துமீறல்கள், மனித உரிமை மீறல்களிலும் தொடர்ந்து ஈடுபட்டும் வருகிறது.

 • பெரியகுளத்தைச் சேர்ந்த மூன்று குழந்தைகளுக்குத் தாயான வசந்தி என்ற பெண் கடந்த பிப்ரவரி மாதம் 11ஆம் தேதியன்று, தான் அடகுவைத்த பொருளை மீட்பதற்காக நரியூத்து என்ற ஊருக்குச் சென்றுவிட்டு, மீண்டும் பெரியகுளம் திரும்புவதற்காக அன்றிரவு எட்டு மணி போல பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டு இருந்தார்.  அப்பொழுது அவர் முன்னால் திடீரென பைக்கில் வந்து நின்ற இரண்டு போலீசார் வசந்தியைச் சந்தேக கேஸில் கடமலைக்குண்டு போலீசு நிலையத்திற்கு வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று சட்டவிரோதக் காவலில் அடைத்து வைத்தனர்.

காக்கிச்சட்டையில் ஒரு காமக்கொடூரன்: கடமலைக்குண்டு ப்போஈசு நிலைய ஆய்வாளர் இமானுவேல் ராஜ்குமார்
காக்கிச்சட்டையில் ஒரு காமக்கொடூரன்: கடமலைக்குண்டு ப்போஈசு நிலைய ஆய்வாளர் இமானுவேல் ராஜ்குமார்

அன்றிரவு 11 மணிக்கு அப்போலீசு நிலைய ஆய்வாளர் இமானுவேல் ராஜ்குமார் வசந்தியை நெருங்கி, “கொஞ்சநேரம்தான், நான் சொல்றதைக் கேட்டா, உடனே உன்னை ஊருக்கு அனுப்பி வைக்கிறேன்னு” வக்கிரமாகப் பேசிக்கொண்டே, வசந்தியின் ஆடைகளை அவிழ்த்து, அவரைப் பாலியல் பலாத்காரப்படுத்த முயன்றான்.  வசந்தி அப்போலீசு அதிகாரியின் வக்கிரமான பசப்பு வார்த்தைகளுக்கு மயங்காமல் எதிர்த்து நின்று போராடியபொழுது, “ச்சீ நாயே…., ஒழுங்கா அவுத்துட்டுவா, இல்லைன்னா விபசார கேஸ் போட்டு நாளைக்குப் பேப்பர்ல உன்படம் வரும்” என அதிகாரத் திமிரோடு மிரட்டினான். அவனின் அம்மிரட்டலுக்கும் பணியாமல் வசந்தி அழுது ஆர்ப்பாட்டம் செய்து போராடவே, வசந்தியைத் தயார் செய்யும் வேலையை டூட்டியில் இருந்த ஒரு போலீசுக்காரனிடம் ஒப்படைத்தான் அப்போலீசு அதிகாரி.

அதிகாரியின் கட்டளையை ஏற்றுக் கொட்டடிக்குள் நுழைந்த காக்கிச் சட்டை அணிந்த மிருகமொன்று, வசந்தியை லத்தியைக் கொண்டு மாறிமாறித் தாக்கி, அவரது ஆடைகளை வலுக்கட்டாயமாகக் களைந்து அம்மணமாக்கி, தனது டூட்டியைச் செய்தது.  அதற்குப் பின் கொட்டடிக்குள் நுழைந்த ஆய்வாளர் இமானுவேல் ராஜ்குமார் வசந்தியின் எதிர்ப்பையும் மீறி, அவரைப் பாலியல் பலாத்காரப்படுத்தினான்.  இதனால் உதிரப் போக்கு அதிகமாகி, வசந்தி தன்னுணர்வு இழந்து மயக்கமடைந்தார்.

வசந்தியைச் சீரழித்த போலீசு அதிகாரி போன பிறகு, காவலுக்கு நின்ற போலீசார், வசந்தியை எழுப்பி, தரையில் ஒழுகித் தேங்கிக் கிடந்த இரத்தத்தை, அவரது சேலையைக் கிழித்துத் துடைக்கச் செய்தனர்.  வசந்தி இரத்தத்தையெல்லாம் துடைத்துவிட்டு, பாத்ரூம் போய்விட்டுத் திரும்பிய பிறகு, அப்போலீசு நிலையச் சிறப்புத் துணை ஆய்வாளர் அமுதனால் மீண்டும் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகி, மயக்கமடைந்தார்.  தங்களின் வக்கிரமான காமவெறியைத் தீர்த்துக் கொண்ட போலீசு, தமது கைஅரிப்பைத் தீர்த்துக் கொள்ள, அடகுப் பொருளை மீட்பதற்காக வசந்தி வைத்திருந்த 6,700 ரூபாயைத் தெனாவட்டாகத் திருடிக் கொண்டது.

தங்களின் இக்குற்றங்களை மறைத்துக் கொள்வதற்காக, “நரியூத்து பகுதியைச் சேர்ந்த புஷ்பம் என்ற பெண்மணியின் வீட்டிற்குள் புகுந்த வசந்தி, புஷ்பத்தைக் கம்பு, கத்தி போன்ற ஆயுதங்களால் தாக்கிக் காயம் ஏற்படுத்தி, அவரிடமிருந்து மூணே முக்கால் பவுன் தங்கச் சங்கிலியைத் திருடிச் சென்றுவிட்டதாக” வசந்தியின் மீது ஒரு திருட்டுக் குற்றத்தைச் சுமத்தி, அவரைச் சிறையிலும் தள்ளியது, கிரிமினல் போலீசு கும்பல்.  ஒரு மாதம் கழித்துச் சிறையில் இருந்து வெளியே வந்த வசந்தி நடந்த உண்மையை வெளியாட்கள் யாரிடமும் சொல்லிவிடக் கூடாது எனத் தொடர்ந்து போலீசாரால் மிரட்டப்பட்டதால், அவர் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொள்ள முயன்று காப்பாற்றப்பட்டார்.

“மேலிடம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கையில் குற்றம் புரிந்த போலீசாரின் பெயர்களை வெளியிடவில்லை” எனக் குறிப்பிட்டு, வசந்திக்கு நேர்ந்த கொடுமைகளை அம்பலப்படுத்தி எழுதியது ஜூனியர் விகடன் (8.7.2012).  ஆனால், அம்மாவட்ட போலீசு கண்காணிப்பாளர் பிரவீன் குமார் அபினபு, “திருட்டு வழக்கிலிருந்து தப்பிப்பதற்காகவே வசந்தி பொய் சொல்கிறார்” என அறிக்கைவிட்டு கிரிமினல் போலீசாருக்குச் சாதகமாக நடந்துவருவதையடுத்து, ஜூ.வி., வசந்தியைப் பாலியல் பலாத்காரப்படுத்திய இரண்டு போலீசு அதிகாரிகளின் பெயர்களையும் அம்பலப்படுத்தியது; “வசந்திக்கு இழைக்கப்பட்ட இக்கொடுமைகளைப் பற்றி சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க வேண்டும்; வசந்திக்குப் பாதுகாப்புத் தர நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்” என தவமணி என்ற வழக்குரைஞரும், மதுரையைச் சேர்ந்த எவிடென்ஸ் என்ற மனித உரிமை அமைப்பும் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருப்பதையும் சுட்டிக் காட்டியிருக்கிறது. (ஜூ.வி.25.07.2012)

 • திருட்டு கேஸ் விசாரணை என்ற பெயரில் சென்னை-கானத்தூர் போலீசால் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட கூலித் தொழிலாளி ஹூமாயூன்
  திருட்டு கேஸ் விசாரணை என்ற பெயரில் சென்னை-கானத்தூர் போலீசால் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட கூலித் தொழிலாளி ஹூமாயூன்

  சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள பனையூரைச் சேர்ந்த ஹுமாயூன் என்ற தையல் தொழிலாளியும் அவரது நண்பரும் மற்றொரு கூலித் தொழிலாளியுமான சௌகத் அலியும் நகை திருட்டு வழக்கு தொடர்பாக கானத்தூர் போலீசு நிலையத்திற்கு விசாரணைக்காக ஜூலை 8 அன்று இழுத்துச் செல்லப்பட்டனர்.  திருட்டுப் புகார் கொடுத்தவர்கள் ஹுமாயூன் மீதுதான் சந்தேகம் இருப்பதாகச் சொல்லியிருந்ததால் சௌகத் அலியை விடுவித்துவிட்ட போலீசார், ஹுமாயுனை போலீசு நிலையத்திலேயே சிறை வைத்தனர்.  முதல்நாள் ஹுமாயூனை உயிரோடு பிடித்துச் சென்ற போலீசார், மறுநாள், “ஹுமாயூன் மண்ணெண்ணெயை ஊற்றித் தீ வைத்துத் தற்கொலை செய்து கொண்டதாக” அப்பாவிகளைப் போல அறிக்கை வெளியிட்டனர்.

‘‘ரேஷனிலேயே மண்ணெண்ணெய் கிடைக்காதபொழுது, ஸ்டேஷனில் மண்ணெண்ணெய் எப்படி வந்தது?” என தி.மு.க. தலைவர் மு.க., இக்கொட்டடிக் கொலையை அம்பலப்படுத்தி நையாண்டி செய்து அறிக்கை அளித்தவுடன், “ஸ்டேஷனில் இருந்த போலீசார் ஹுமாயூனைத் தனியாக விட்டுவிட்டு வாகனச் சோதனைக்காகச் சென்றுவிட்டார்கள்; விசாரணைக்குப் பயந்துபோயிருந்த ஹுமாயூன் அந்தச் சமயத்தில் ஸ்டேஷனில் வேறொரு வழக்கு தொடர்பாகப் பறிமுதல் செய்து வைக்கப்பட்டிருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக்கொண்டார்.  ஹுமாயூனை நாங்கள் யாரும் கொடுமைப்படுத்தவில்லை.  தீ வைத்துக் கொண்ட அவரை மருத்துவமனையில் சேர்த்துக் காப்பாற்ற முயன்றோம்” எனக் கதையளந்தது போலீசு.  பறிமுதல் செய்யப்பட்ட மண்ணெண்ணெய்க்குப் பக்கத்திலேயே போலீசார் தீப்பெட்டியையும் வைத்துவிட்டுப் போய்விட்டார்கள் போலும்!

 • சென்னைதி.நகர் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் குமாரும், அவரது நண்பர்கள் கார்த்திக் உள்ளிட்ட சிலரும் கூடுவாஞ்சேரிக்குச் சென்றுவிட்டு நள்ளிரவு நேரத்தில் காரில் சென்னைக்குத் திரும்பிக்கொண்டிருந்தபொழுது, அவர்களது காரை வாகனச் சோதனைக்காக வண்டலூர் அருகே போலீசார் நிறுத்தினர்.  காரை ஓட்டிவந்த ரஞ்சித்குமாரின் நண்பர் கார்த்திக் காரிலிருந்து இறங்கிய அதேசமயம், வாகன சோதனையை நடத்திவந்த போலீசு இன்ஸ்பெக்டரின் கைத்துப்பாக்கி திடீரென வெடித்து, துப்பாக்கிக் குண்டு காரின் கதவையும் துளைத்துக் கொண்டு சென்று ரஞ்சித்குமாரின் தொடையைத் துளைத்தது.

இன்ஸ்பெக்டரின் கைத்துப்பாக்கி எதிர்பாராதவிதமாக வெடித்ததா அல்லது காரில் வந்தவர்களிடம் தனது அதிகாரத் திமிரைக் காட்டி, மிரட்டும் நோக்கத்தோடு சுட்டாரா என இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தவில்லை; மாறாக, தமது அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி, “கூடுவாஞ்சேரி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த இன்ஸ்பெக்டர் மீது சில ரவுடிகள் தங்களிடமிருந்த பெரிய ஆயுதமான காரை (!) ஏற்றிக் கொல்ல முயற்சி செய்தபொழுது போலீசு துப்பாக்கிச் சூடு நடத்தியதாக’’ச் செய்தி கொடுத்துத் தங்களது கிரிமினல் குற்றத்தை மூடிமறைத்துவிட்டதோடு, காரை ஓட்டிவந்த கார்த்திகையும் கைது செய்தனர்.

 • திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மறுகால்குறிச்சியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான வானுமாமலை, அவ்வப்போது மணல் அள்ளிவந்து விற்பனை செய்வதும் உண்டு.  மணல் அள்ளும் மாஃபியா கும்பலிடம் இலஞ்சம் வாங்கி வாங்கி அரிப்பெடுத்துப் போன நாங்குநேரி போலீசார் வானுமாமலையிடமும் இலஞ்சம் கேட்டுத் தகராறு செய்தபொழுது, அவர் தர மறுத்துவிட்டார்.  போலீசு இலஞ்சம் கேட்டுத் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த நாங்குநேரி போலீசு ஆய்வாளர் விஜயகுமார், கௌபாய் படங்களில் வருவது போல, வானுமாமலையை அவரது கிராமத்திற்கே தேடிவந்து சுட்டுக்கொன்று தப்பியோடிவிட்டார்.

போலீசு
எருதாட்டத்திற்குத் திடீரென விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து, சேலம்-நெய்க்காரன்பட்டி கிராம மக்கள் நடத்திய சாலை மறியல் போராட்டத்தின் பொழுது அம்மக்களை வீடு புகுழ்து தாக்க முற்படும் போலீசு

இந்த நான்கு சம்பங்களுமே திருட்டு, பாலியல் வன்முறை, கொட்டடிச் சித்திரவதை  கொலை, சாட்சியங்களை அழித்தல் எனக் கொடிய கிரிமினல் குற்றங்கள் சம்பந்தப்பட்டவை.  ஒரு சாதாரண மனிதன் இக்குற்றங்களைச் செய்திருந்தால் அல்லது அவன் மீது இப்படிப்பட்ட புகார்கள் கொடுக்கப்பட்டிருந்தாலே இந்நேரம் அவன் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருப்பான்.  ஆனால், இந்நான்கு வழக்குகளிலும் சம்பந்தப்பட்ட போலீசார் மீது எவ்வித கிரிமினல் வழக்கும் இதுவரை தொடுக்கப்படவில்லை.

போலீசார், தமது சக ஊழியர்களைக் காப்பாற்ற முயலுகிறார்கள் என்பதாக மட்டும் இந்தப் பிரச்சினையைச் சுருக்கிப் பார்த்துவிட முடியாது.  சாமானியனுக்குப் பொருந்தக்கூடிய சட்டத்திற்குத் தான் கட்டுப்பட்டு நடக்க வேண்டியதில்லை என்ற திமிரோடு போலீசு நடந்துவருவதையும்; சட்டத்திற்கு மேலான தனிவகைப்பட்ட சாதியாக இருந்துகொண்டு, சமூகத்தையே அச்சுறுத்தி வருவதையும்தான் இச்சம்பவங்கள் மீண்டும் எடுத்துக் காட்டுகின்றன.

சென்னை கூடுவாஞ்சேரி பகுதியில் நடந்த வாகனச் சோதனையின் பொழுது, போலீசாரின் துப்பாக்கி வெடித்துக் குண்டுக்காயம்பட்டு, சிகிச்சை பெற்றுவரும் ரஞ்சித்குமார்
சென்னை கூடுவாஞ்சேரி பகுதியில் நடந்த வாகனச் சோதனையின் பொழுது, போலீசாரின் துப்பாக்கி வெடித்துக் குண்டுக்காயம்பட்டு, சிகிச்சை பெற்றுவரும் ரஞ்சித்குமார்

மாலை ஆறு மணிக்கு மேல் பெண்களை போலீசு நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லக் கூடாது என்கிறது சட்டம்; ஆனால், கடமலைக்குண்டு போலீசாரோ வசந்தியை இரவு எட்டு மணிக்கு பொதுமக்களின் கண்முன்னாலேயே ஆட்டோவில் இழுத்துப்போட்டுத் தூக்கிச் சென்றுள்ளனர்.  குற்றவாளிகளைக் கண்காணிப்பது என்ற பெயரில் ரோந்து வந்த போலீசார்தான் வசந்தியைத் தூக்கிக் கொண்டுபோய் சீரழித்துள்ளனர்.  இலஞ்சம் தர மறுத்து, போலீசாரோடு மோதியதால் வானுமாமலை போலீசால் சுட்டுக் கொல்லப்படுகிறார்.  வாகனச் சோதனையின்பொழுது போலீசின் துப்பாக்கி வெடித்து, ரஞ்சித்குமார் குண்டடிபட்டுக் காயமடைகிறார்.

வாகன சோதனை நடத்தும் இடங்களில், போலீசு கேட்கும் ஆளறிச் சான்றுகள் இல்லாதவர்களைச் சந்தேகக் கேஸில் கைது செய்து, போலீசு நிலையத்திற்கு கூட்டிச் சென்று, அவர்களின் கைவிரல்கள், அங்க அடையாளங்கள், முகவரிகளைப் பதிவு செய்து கொள்ளும் அளவிற்கு போலீசிற்கு அதிகாரம் அளிக்கப்பட்டிருப்பதால், இப்பொழுதெல்லாம் இரவு 11 மணிக்கு மேல் சட்டபூர்வ கிரிமினல் கும்பலான போலீசு ராஜ்ஜியம்தான் கொடிகட்டிப் பறக்கிறது.  இது மட்டுமின்றி, சென்னை நகரத்தில் வாடகைக்குக் குடியிருக்கும் ஒவ்வொரு குடும்பமும் போலீசிடம் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்ற போலீசின் கட்டளை, சிவிலியன்கள் அனைவரையுமே சந்தேக லிஸ்டில் வைத்துக் கண்காணிக்கும் மமதையை போலீசுக்கு வழங்குகிறது.

இவையனைத்தும் போலீசு வழங்கப்பட்டுள்ள ரோந்து சுற்றும் அதிகாரம், ஆயுதம் ஏந்தும் அதிகாரம், போதிய ஆதாரம் எதுவுமின்றியே ஒருவரை விசாரணைக்காகக் கைது செய்யும் அதிகாரம் உள்ளிட்ட பல அதிகாரங்களைக் கேள்விக்குள்ளாக்க வேண்டும் என்ற கருத்துக்குத்தான் நம்மை இட்டுச் செல்கிறது.

ஆனால், துக்ளக் சோ போன்ற போலீசின் ஊதுகுழல்கள், “போலி மோதல்கள் நடப்பதெல்லாம் உண்மைதான்; அதன் மூலம்தான் சமூக விரோத சக்திகளை ஒடுக்க முடியும்” என வெளிப்படையாகவே போலீசின் அத்துமீறல்களுக்கும் அதிகாரத்துக்கும் வக்காலத்து வாங்கி வருகின்றனர்.  மனித உரிமை அமைப்புகள் என்ற பெயரில் இயங்கிவரும் குட்டி முதலாளித்துவ அறிவுஜீவிகளோ, “மனித உரிமைகள் பற்றி போலீசாருக்கு வகுப்புகள் எடுப்பதன் மூலம் அவர்களைப் பொதுமக்களின் நண்பனாகத் திருத்திவிட முடியும்” என ஆலோசனை வழங்கி வருகிறார்கள்.

சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றம், “போலீசாருக்கு அதிக ஊதியம் வழங்கி, அதன் மூலம் அவர்கள் வேறு எந்த முறைகேடுகளிலும் ஈடுபடுவதைத் தடுக்க வேண்டும்.  போலீசாரின் பிரச்சினைகளைக் கண்டறிந்து, அந்தப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டால், அதன் மூலம் காவல்துறை தனது முழுத்திறனையும் வெளிப்படுத்திச் செயல்பட முடியும்.  இது சமுதாயத்துக்கும் பெரும் நன்மைகளை விளைவிப்பதாக இருக்கும்” எனத் தனது தீர்ப்பொன்றில் குறிப்பிட்டுள்ளது.

போலீசு கேட்ட இலஞ்சத்தை தர மறுத்ததற்காக, நாங்குநேரி போலீசு நிலைய ஆய்வாளர் விஜயகுமாரால் தெருநாயைப்போலச் சுட்டுக் கொல்லப்பட்ட வானுமாமலை
போலீசு கேட்ட இலஞ்சத்தை தர மறுத்ததற்காக, நாங்குநேரி போலீசு நிலைய ஆய்வாளர் விஜயகுமாரால் தெருநாயைப்போலச் சுட்டுக் கொல்லப்பட்ட வானுமாமலை

உயர் நீதிமன்றத்தின் இந்த ஆலோசனையை ஒருவிதத்தில் மூடநம்பிக்கையோடு ஒப்பிடலாம்; இன்னொருவிதத்தில் மோசடித்தனமானது என்றும் குறிப்பிடலாம்.  திருப்பூரில் பொதுமக்களின் சேமிப்பைக் கொள்ளையடித்த பாசி நிதி நிறுவன உரிமையாளர்களை மிரட்டி 3 கோடி ரூபாய் வரை கையூட்டுப் பெற்ற கிரிமினல் வழக்கில் கோவை மேற்கு மண்டல ஐ.ஜி.யாக இருந்த பிரமோத்குமார்தான் முதன்மைக் குற்றவாளி.  அந்த ஐ.பி.எஸ். அதிகாரியின் சம்பளம் குறைவானதா என்ன?  அரசு ஊழியர்களிலேயே போலீசுதுறைதான் ஆட்சியாளர்களின் செல்லப்பிள்ளைகளாக இருந்து வருவதோடு, மற்றவர்களைவிட, போலீசாருக்குத்தான் பல்வேறு விதமான சலுகைகள் கொட்டி அழப்படுகின்றன.

இச்சலுகைகள் ஒருபுறமிருக்க, போலீசை சைவப் புலியாகக் காட்டுவதற்கும் அரசு ஏற்கெனவே பல்வேறு நடைமுறைகளைப் பின்பற்றி வருகிறது.  மனித உரிமைகள் தொடர்பாக அவர்களுக்கு கவுன்சிலிங் வழங்குவது தொடங்கி ஒருவரைக் கைது செய்யச் செல்லும்பொழுது என்னென்ன விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்பது வரை அவர்களுக்குப் பல வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.  இவற்றையெல்லாம் கீழ்நிலை போலீசுக்காரன் தொடங்கி உயர் போலீசு அதிகாரி வரை யாரும் மயிருக்குச் சமமாகக்கூட மதிப்பதில்லை.  போலீசார் இதனை மீறி நடப்பதை அரசும், ஆளுங்கட்சியும் மட்டுமல்ல, நீதிமன்றமும்கூடக் கண்டு கொள்வதில்லை.

ஒன்றிரண்டு மனித உரிமை மீறல் வழக்குகளில் கிரிமினல் போலீசார் தண்டிக்கப்பட்டுள்ளனர் என்றால், அதற்குப் பொதுமக்களின் சமரசமற்ற போராட்டம்தான் காரணமாக இருந்திருக்கிறதேயொழிய, அரசின், நீதிமன்றத்தின் ‘நீதிவழுவாத’ தன்மை காரணமாக இருந்ததேயில்லை.  “தவறு செய்யும் போலீசார் மீது நடவடிக்கை எடுத்தால், போலீசின் தார்மீக பலம் குன்றிவிடும்” எனக் கூறி, போலீசின் கிரிமினல் குற்றங்கள் அனைத்தையும் முடிந்தவரை மூடிமறைத்துவிடவும், கிரிமினல் குற்றம் புரிந்த போலீசாரைக் காப்பாற்றவும்தான் ஆளும் கும்பல் முயலுகிறது.

எனவே, பாலியல் வல்லுறவு, கொட்டடிக் கொலை உள்ளிட்ட மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் போலீசாரைத் தண்டிக்கச் சட்டம், நீதிமன்றங்களை நம்புவதைவிட, பொதுமக்கள் தமது சொந்த பலத்தைத்தான் நம்ப வேண்டும்.  போலீசின் அத்துமீறல்களுக்கு எதிராக மட்டுமின்றி, அத்துறைக்கு வழங்கப்படும் மட்டுமீறிய அதிகாரத்தை ரத்து செய்யக் கோரியும் கிளர்ச்சிகளிலும், கலகங்களிலும் இறங்க வேண்டும்; ஜேப்படி திருடர்களின் படங்களை வெளியிட்டுப் பொதுமக்கள் எச்சரிக்கப்படுவது போல, இலஞ்சம், ஊழல், பொறுக்கித்தனம், அத்துமீறல்களில் ஈடுபடும் போலீசாரின் பெயர்களையும் படங்களையும் பகிரங்கமாக வெளியிட்டு, அக்கும்பலை அவமானப்படுத்த வேண்டும்.  பொதுமக்களிடம் சிக்கிக் கொண்டால் உடனடியாகத் தண்டிக்கப்படுவோம் என்ற அச்சத்தை உருவாக்கி, அக்கும்பலின் அதிகாரக் கொட்டத்தை ஒடுக்க வேண்டும்.

கோவை அவிநாசி சாலையில் வாகனச் சோதனை நடத்திய சமயத்தில் குடிபோதையில் இருந்ததோடு, ஒரு பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சித்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் கருப்பையாவுக்கு பொதுமக்கள் கொடுத்த தர்ம அடி
கோவை அவிநாசி சாலையில் வாகனச் சோதனை நடத்திய சமயத்தில் குடிபோதையில் இருந்ததோடு, ஒரு பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சித்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் கருப்பையாவுக்கு பொதுமக்கள் கொடுத்த தர்ம அடி

போலீசின் அதிகாரங்களையும் தனிஉரிமைகளையும் பறித்து, அதனைப் பல் இல்லாத பாம்பாக ஆக்கிவிட்டால், சட்டம்ஒழுங்கு கெட்டுவிடும் என்ற வாதம் வைக்கப்பட்டு, போலீசுக்கு வக்காலத்து வாங்கப்படுகிறது.  ஆனால், இன்றளவும் நமது நாட்டின் பல்வேறு கிராமங்களில் போலீசு என்ற அமைப்பு இல்லாமலேயே சமூக ஒழுக்கம் பேணப்படுவதையும்; திருட்டு, விபச்சாரம், கள்ளச்சாராயம் உள்ளிட்ட பல்வேறு சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டுவரும் ரவுடிகளுக்குப் பாதுகாப்பு அளிப்பதே போலீசுதான் என்பதையும் மக்கள் தமது சொந்த அனுபவத்திலிந்தே புரிந்து வைத்திருக்கிறார்கள்.  எனவே, அந்த வாதத்தை நாம் ஒரு பொருட்டாக மதிக்க வேண்டியதேயில்லை; போலீசின் வரம்பற்ற அதிகாரங்களை பறிப்பது மட்டுமின்றி, சட்டம் ஒழுங்கைக் காப்பது என்ற பெயரில் மக்கள் அனைவருக்கும் மேலாக, தனிவகை ஜாதியாக இருந்துகொண்டு, மக்களை அடக்கி ஒடுக்கிவரும் போலீசு என்ற அமைப்பே தேவையில்லை என்ற முடிவுக்கும் நாம் வரமுடியும்.

__________________________________________________

– புதிய ஜனநாயகம், ஆகஸ்டு – 2012
__________________________________________________

 1. அன்புள்ள வினவு,

  உலகத்திலேயே Scotland Yard ( London city police ) க்கு அடுத்து ஆக சிறந்ததுன்னா அது தமிழ் நாட்டு போலிஸ் தான். இங்கு எனக்கு சில சந்தேகங்கள் …………….

  a . Scotland Yard போலிசும் ஹோட்டல்ல முட்ட பரட்டா தின்னுட்டு காசு கொடுக்காம போகுமா ?

  b .Scotland Yard போலிசும், திருட்டு கேசுன்னு கம்ப்ளைண்டு கொடுக்க போனா விசாரணை

  செலவுக்கு நம்ம கிட்ட இருந்து காசு கேட்குமா ?

  c .Scotland Yard போலிசும் ஸ்டேசன்ல வெச்சு ரேப் பண்ணுமா ?

  d . Scotland Yard போலிசும் வேளச்சேரி மாதிரி திருட்டு என்கவுண்டர் பண்ணுமா ?

  e .Scotland Yard போலிசும் பாஸ்போர்ட் வேரிபிகேசனுக்கு NOC குடுக்க 400 ரூவா கமிசன் கேட்குமா ?

  f . Scotland Yard போலிசும் ரோட்டுல போற பெண்ணிடம் கழுத்துச் செயினை வழிப்பறி பண்ணி பொது மக்களிடம் தர்ம அடி வாங்குமா ? — இந்த

  sp, dsp மாதிரி யாரு கிட்டயாவது கேட்டு சொன்னா நல்லாயிருக்கும்.

  ஆனாலும் சில நேரங்களில் இந்த ‘போலிஸ் நாய்கள்’ திருடர்களை சரியாக கண்டு பிடித்து விடுவதும் உண்டு ( ஒரு பெண்ணின் மனது இன்னொரு பெண்ணுக்குத்தான் தெரியும் – ஒரு திருடனை பற்றி இன்னொரு திருடனுக்குத்தான் நன்றாக தெரியும் )

  நாஞ்சில் குமரன் , ராதா கிருஷ்ணன் , நரேந்திர பால் சிங் போன்ற போலிஸ் நாய்களை பற்றி அண்ணன் சவுக்கு சங்கர் அவர்கள் தான் கடந்து வந்த போராட்ட பாதை குறித்த பதிவில் விரிவாக எழுதியிருக்கிறார். நேரமும் என்னைப்போல் பொறுமையும் உடையவர்கள்

  savukku.net தளத்தில் போய் படித்து பாருங்கள் .

  திரிபாதி யை பற்றி விலாவாரியாக தனி பதிவும் எழுதியிருக்கிறார்.

  இந்த Scotland Yard நிகர் தமிழ் நாட்டு போலீசின் சமீபத்திய அராஜகங்களை பட்டியலிடும் போது

  பரமக்குடி துப்பாக்கி சூட்டையும் நினைவு படுத்துவது அவசியமாகிறது.

  நன்றி.

 2. நீங்கள் சொல்வது சரி. போலீஸ் அமைப்பை கலைத்து விட வேண்டியதுதான். அதே போல, அரசுப் பள்ளிக்கூட ஆசிரியர்கள் சரியாக வேலைக்கு வருவதில்லை. எனவே அரசுப் பள்ளிகளை மூடி விடலாம். ரயில்களில் மூட்டை பூச்சி கடி தாங்க முடியவில்லை. எனவே ரயில்வேஸ் நிறுவனத்தை கலைத்து விடலாம்.

 3. பாப்பான் போலிசை நம்புவதற்கும் பார்ப்பன ஜெயலிதாதான் போலிசை திறம்பட பயன்படுத்துவார் அவன் பத்திரிக்கையில் எழுதுவதற்கும் காரணம் தங்களுக்கு எதிராய் மக்கள் திரளாமல் பாதுகாத்து கொள்ளவே. நம்ம காசிலேயே நவீன ஆயுதங்கள் வாங்கி நம்மை அடிக்கவா நாம் ஒட்டு போடறோம்..சோவியத்தை போல் கையில் குச்சி கூட இல்லாமல் தான் அவர்களை வைத்திருக்க வேண்டும்.மக்கள் தன்னெழுச்சியாய் ஒவ்வொரு முறை திரளும் போதும் அந்த பத்திரிக்கைகள் பயத்தில் மக்களுக்கு எதிராகவும் அரசுக்கு ஆதரவாகவுமே இருக்கின்றன .முதலாளிகளும் மக்களுக்கு எதிராய் போலிசை கூலிப்படை போன்று தான் பயன்படுத்துகிறார்கள்.இந்த அமைப்பு தேவையற்ற ஒன்று இதை ஒட்டுமொத்தமாய் அனைவரும் போராடி ஒழிக்கவேண்டும் அல்லது கணிசமாய் அளவையும் அதிகாரத்தையும் குறைக்க வேண்டும்.

 4. வீரம் ரத்ததுலையே ஊறி இருக்கற சாதிகார போலீஸ் இருக்கறதால தான் இன்னமும் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கபடுது.

  • What bravery is in ur blood ??? if u so called caste is so powerful and brave Y u caste people are falling in the legs of others ??? Y in madurai the control is NOT with ur caste people ???

 5. அரசியல் எலும்புத்துண்டுகளுக்காக வளர்க்கப்படும் காவல் விலங்குகள் காவலை விட்டுவிட்டு வேலையை மேயத்தொடங்கி விட்டன..! ஏறி அடிக்கவேண்டிய காலம் வரும். வர வைப்போம்

 6. அது தமிழ் மக்கல் கைய்யில் அனைத்து அதிகாரமும் உல்ல சோவியத் ஆட்சி வந்தால் தான் சாத்தியம்.

 7. தங்களின் பதிவின் உண்மைத்தகைமையை நான் என்றும் மறுத்துரைக்க போவதில்லை. காலணித்துவ வாதத்தின் பாசித விஷம் இன்று வரை ஆசிய நாடுகளின் தரத்தில் அதிகார வர்க்கம் இராணுவ மற்றும் பொலிசு இனுாடாக தமது சுக போகங்களை பேணிவருகின்றன.

  இருப்பினும் ஜனநாயகம் எனும் மாற்றுப்பொறி முறை ஒன்று அற்ற ஓர் யதார்த்த களத்தினுள் வாழ்ந்து வரும் நாம் பொலிசையோ இராணுவத்தையோ ஒரு போதும் ஒதுக்கிவிட முடியாது.

  இறுதியாண்டு சட்டமாணவன் என்ற வகையிலும் மனித உரிமை ஆர்வலன் என்ற ரீதியிலும் பொலிசாரை சாடி குறிப்பாக சித்திரவதை எனும் பெயரில் நடக்கும் கொடூரங்கள் தொடர்ப்பில் சட்டத்தளத்திலும் சமூகத்தளத்திலும் பல ஆக்கங்களை வெளியிட்டவனாகிலும்

  ஓர் நாள் நாடளாவிய ரீதியில் பொலிசாரை சேவையில் இருந்து நிறுத்தினால் என்ன நடக்கும் எனும் ஓர் கற்பனை கூட எமக்கு அச்சத்தையே விளைவிக்கின்றது என்பதை நாம் மறுக்கவியலாது. எனவே இம்முறைமைகளை எம்மால் நிச்சயம் ஜனநாயகம் எனும் முறைமைக்குள் நின்று தடுக்க இயலாது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க