Tuesday, September 17, 2024
முகப்புகலைகதைகருணையா, கொலையா? வரமா, சாபமா? - உண்மைச் சம்பவம்!

கருணையா, கொலையா? வரமா, சாபமா? – உண்மைச் சம்பவம்!

-

ஓவியர்-மருது

சுதா வந்துட்டாளாம்! சுதா வந்துட்டாளாம்!“ என்று ஒருவருக்கொருவர் பரபரப்பாய் பேசிக் கொண்டும், செய்தியைப் பரிமாறிக் கொண்டும் ஊரை வலம் வந்தார்கள்.

‘எப்படித்தான் மனம் வந்து செய்துருப்பாளோ?!  நிலமை இப்படி இருக்கும் போது அவள் என்ன தான் செய்வாள்? அதெல்லாம் டாக்டர்ட்ட காம்பிச்சு சரி செஞ்சுடலாமாம். மனசு பேதலித்துத்தான் இப்படி செய்திருப்பான்னு நினைக்கிறேன்‘ இவையெல்லாம் அவளைப் பார்த்தவர்கள் பகிர்ந்தவை. அவர்களைப் பார்த்தபடி வீட்டின் முன் நின்று கொண்டிருந்த என்னை அந்த வார்த்தைகள் குடைய ஆரம்பித்தன. இது வெறும் புறணி பேசும் மக்களுடைய கதைகள் என்றால் அதை நான் சட்டை செய்திருக்க மாட்டேன். இது அடிவயிற்றைப் பிசையும் ஒரு மனவலி.

நானும் சுதாவை பார்க்கும் எண்ணத்துடன் வேலைகளைச் சீக்கிரம் செய்து முடிக்க வேண்டுமென ஓடிக் கொண்டிருந்தேன். வேலையின் ஊடே இடையிடையே அவளின் கம்பீரமான நடையும், வைரம் போன்ற கருமையான அழகும், பெண்களுக்கென கிராமங்கள் விதித்திருக்கும் கட்டுப்பெட்டித் தனத்தை மீறாத அவளது அப்பாவித்தனமும் என் நினைவில் நிழலாடியது. கிராமத்து மொழியில் சொன்னால் ‘அவள் நல்ல உழைப்பாளி, பார மாடு மாதிரி எல்லா வேலையும் செய்வாள்‘.

அவள் இடத்தில் நான் இருந்தாலும் இதைத்தான் செய்திருப்பேனோ என்றெல்லாம் எண்ணத்திலே களைப்பூட்டும்படி நீந்தியதால் வேலையை சரியாகச் செய்ய முடியவில்லை. அவளைப் பார்த்தால் தான் மனசு ஆறுமென்று தோன்றவே, பக்கத்தில் உள்ள உறவுக்காரப் பெண்ணையும் அழைத்துக் கொண்டு சுதாவைப் பார்க்க விரைந்தேன்.

சுதாவைப் பார்த்த நொடியில் விக்கித்து நின்று விட்டேன். நான் பார்த்த சுதாவா அவள்? கல் தூண் போன்ற அந்த கம்பீரம் எங்கே? தலைவிரி கோலமாக, கழுத்து முழுதும் காயமாக, நான் பார்த்த உடம்பில் பாதியாக, நிலைகுத்திய கண்களுடன் செத்தும் சுடுகாடு தெரியாதவள் போல காட்சியளித்தாள். பேய் அறைஞ்சா மாதிரி என்று சொல்வார்களே அது போல் ’யார் வருகிறார்கள், யார் போகிறார்கள்?’ என்று உணராமல், தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று கூடத் தெரியாமல் கிணற்றில் போட்ட கல் போல குந்தியிருந்தாள்.

அவள் அம்மாதான் என்னைப் பார்த்த மாத்திரத்தில் கதறி அழுதார்.

“பாத்தியாளாயி என் மவளை! நாங்க இனிமே என்ன செய்யுவோம்? எப்படியெல்லாம் இருந்தா! உங்கள்ட்டெல்லாம் நல்ல பேரு எடுத்தாளே… இப்படியொரு அவப்பெயர எடுத்துட்டு வந்து உக்காந்திருக்காளே… இந்த ஊரு என்னா சொல்லும்? இனி யாரு எங்கள மதிப்பா? நான் இந்த ரெண்டு பொம்பளப் பிள்ளைவள வளக்க படாத கஷ்டமா? விதி விட்ட வழின்னு இல்லாம இந்தப் பாவி மவ இப்புடி செஞ்சு வச்சுருக்காளே? நான் இனி என்ன செய்வேன்? கூலி வேலைக்குப் போய் இந்தக் குடும்பம் பண்ணுனனே! இனி இவள பாதுகாத்துட்டு உக்காந்திருக்க முடியுமா? ஆம்பள துணையில்லாம 18 வயசுலேருந்து பொம்னாட்டியிலும் கம்னாட்டியா இருந்து கஷ்டப்படுறனே..இனிமே இந்த ஊர் எம்மவள கொலைகாரின்னு சொல்லுமே! எப்புடி உசுர வச்சுகிட்டு இருக்குறது? இந்தக் கடவுளு நம்மள கொண்டுட்டு போகாதா…..”

சுதா கொலை செய்தாள் என்பதை நினைத்துப் பார்க்கவே மனது நம்பவில்லை. ஆனால் உண்மை அதுதான். இரண்டு நாட்களுக்கு முன் அதிகாலை, கோழி கூப்பிடும் நேரம். ஐந்தரை மணியிருக்கும். நான் எழுந்திருக்கவே இல்லை. அந்த நேரத்தில் மனிதர்களின் சலசலப்பு சத்தம் என்னைத் தட்டி எழுப்பியது.

ஊரில் என்ன நடந்திருக்கும்? திருட்டு எதுவும் நடந்து விட்டதா? இல்லை யாரும் தற்கொலை எதுவும் செய்து கொண்டார்களா? ஒன்றும் யூகிக்க முடியாமல் ஒருவரிடம் விசாரித்தேன். சேதியைக் கேட்டு அப்படியே தலை சுற்றிப் போய் விட்டது. ‘சுதா தன் இரு குழந்தைகளையும் கழுத்தை நெறித்து சாவடித்து விட்டாளாம்‘.

♥ ♥

சுதாவுக்கு அப்பா, அண்ணன் என்று யாரும் ஆண் துணை கிடையாது. அம்மா, சுதாவோட நாலு வயசு மூத்த அக்கா என்று மூன்று பேரும் பெண்கள்தான். சொந்தமா ஒரு குடிசை, ரெண்டு முந்திரி மரம் கொண்ட ஐம்பது குழி குட்டியூண்டு நிலம் – இதுதான் அவங்களோட சொத்து. களை பறிக்க, கடலை பிடுங்க, கடலைக் கொடி ஆய, உளுந்து-பாசிப் பயிறு-எள்ளுச் செடி பிடுங்கன்னு பொம்பளைங்க செய்யுற எல்லா கூலி வேலையும் செய்ஞ்சுதான் பொழப்பை ஓட்டுனாங்க. இதுக்கெல்லாம் இப்பவும் கூலி 25 ரூபாதான்.

இந்த கஷ்டத்திலயும் சுதா பத்தாவது வரை படித்தாள். பிறகு பக்கத்து நகரத்தில் உள்ள சீவல் கம்பெனி வேலைக்கு ஒரு நாலு வருசமா போனாள். அந்த வருமானத்தில்தான் தனது திருமணத்துக்குத் தேவையான நகை, நட்டுக்களை வாங்கிச் சேர்த்தாள். உறவினர்கள் அவளுக்கு மாப்பிள்ளை பார்த்தார்கள். ஒரு வழியா 2003-ஆம் வருசத்துல சுதாவுக்கு கல்யாணம் நடந்தது. அவ பிறந்து வளர்ந்ததும் ஒரு கிராமம்னா, வாக்கப்பட்டதும் ஒரு கிராமம்தான். அவ பிறந்த ஊருதான் நான் வாக்கப்பட்ட ஊரும்.

சுதாவின் கணவன் அவனோட கிராமத்துக்கு பக்கத்துல இருந்த ஒரு சிற்றூர் சினிமா தியேட்டரில் டிக்கட் கொடுக்கும் வேலை செய்து வந்தான். மாலை, இரவு நேரம் மட்டும் சினிமா ஓடும் டூரிங் தியேட்டர் அது. சுதாவுக்கும் அவனுக்கும் 15 வயது வித்தியாசம். அந்த வட்டாரத்துல சுதா மாதிரி ஏழைங்கள ரெண்டாம் தாரமாவோ, இல்லை இது மாதிரி கல்யாணம் ஆகாம அதிக வயசுல இருக்கிற ஆம்பளைங்களுக்கு கட்டிக் கொடுப்பதோ தான் வழக்கம். எப்படியாவது கல்யாணம் நடக்கணும்கிறதைத் தாண்டி விருப்பப்பட்டெல்லாம் நடக்கவே நடக்காது.

எது எப்படியோ, சுதாவுக்கு இரண்டு பெண் குழந்தைகள் மூன்று வருட இடைவெளியில் பிறந்தன. முதல் குழந்தைக்கு மூன்று வயதாகி, இரண்டாவது குழந்தை மாசமான சமயத்தில் அவள் கணவனின் உடல் நிலை சரியில்லாமல் போகவே மருத்துவரிடம் காண்பித்தார்கள். குச்சி போல நடக்கத் தெம்பில்லாமல் இருந்தவனுக்கு மாவட்ட அரசு மருத்துவமனையில் பல்வேறு சோதனை எடுத்துப் பார்த்தார்கள். அப்போதுதான் அவன் எமன் மாதிரி சுதாவின் வாழ்வில் வந்தவனென்று தெரிந்தது. ஆம் அவனுக்கு எய்ட்ஸ் உள்ளதைக் கண்டுபிடித்தார்கள்.

பிறகு கர்ப்பமுற்ற சுதாவையும் பரிசோதித்தார்கள். அவளுக்கு மட்டுமல்ல, அவள் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் எய்ட்ஸ் நோய் உள்ளது என்று மருத்துவர்கள் கூறினார்கள். பிறகு முதல் குழந்தையையும் அழைத்து சோதனை செய்து, அதற்கும் எய்ட்ஸ் நோய் உள்ளது என்று கூறி விட்டனர். மொத்தக் குடியிலும் இடி விழுந்தது போல சுதாவைத் தாக்கியது எய்ட்ஸ். என்ன செய்வாள் அந்த அபலை?

இரண்டாவது குழந்தை பிறந்து ஒரு மாத காலத்துக்குள் கணவன் எய்ட்ஸ் நோய் முத்திய நிலையில் இறந்து விட்டான். பெண் எந்த நிலையில் இருந்தாலும், சுயநினைவே இல்லாவிட்டாலும், அவளுக்குச் செய்யும் விதவைச் சடங்கைச் செய்யாதிருக்காது இந்தச் சமூகம். பொட்டழித்து, பூப் பிடுங்கி, பின்னலைக் களைந்து தலைவிரி கோலமாய், தலையில தண்ணீர் ஊத்தி, வெள்ளைத் துணி போட்டு மூடி, ஏனைய விதவைப் பெண்கள் பிடித்துக் கொள்ள, நாவிதர் தாலியை அறுத்து பால் இருக்கும் கிண்ணத்தில் போட, யாரையும் பார்க்க விடாமல் துணி போட்டு மூடி, பாடைக்கும் கீழே குனிந்தபடி, வீடிருக்கும் வீதி வரை நடக்க வைத்து….. இறுதியில் வீட்டின் மூலையில் அவள் முப்பது நாட்கள் முக்காடு போட்டபடி, ஒரு வேளை மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்க வேண்டும்.

இப்படியாக சுதாவை ஒரு மூலையில் சாத்தி வைத்தது சமூகம். கணவன் இறந்து முப்பதாவது நாள் இறுதியாக ஒரு காரியம் செய்வார்கள். அந்த நிகழ்வு முடிந்ததும் எல்லா உறவுகளும் பொறுப்பு முடிந்தாகக் கலைந்து சென்று விடுவார்கள்.

அந்த முப்பதாவது நாள், அதிகாலை நான்கு மணியளவில் திண்ணையில் படுத்திருந்த சுதா, நாலு வயசு முதல் குழந்தையை தன் பாவடை நாடாவாலும், இரண்டு மாதம் கூட முடியாத அடுத்த குழந்தையை தன் கை விரல்களாலும் கழுத்தை நெறித்துக் கொன்று விட்டு, கடைசியாகப் புடவையால் தானும் தூக்குப் போட்டு விட்டாள். உயிர் போகும் நிலையில் சத்தம் கேட்டு வீட்டுக்குள் இருந்த உறவுக்கார சனங்க வெளியில் வந்து பார்த்து, சுதாவைக் காப்பாற்றி உடனே கார் வைத்து நகரத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள்.

அப்போது யாரும் குழந்தைகளை நினைக்கவில்லை. அவர்கள் தூங்கிக் கொண்டிருப்பதாகத்தான் எல்லாரும் கருதினார்கள். சுதாவை காரில் அனுப்பிய கையோடு குழந்தைகளுக்கு கடையில் டீ வாங்கிக் கொண்டு வீடு வந்து எழுப்பிய போதுதான் குழந்தைகள் இறந்திருப்பதைக் கண்டுபிடித்தார்கள்.

சுதா பிறந்த ஊரான எங்க ஊருக்கும் சேதி சொல்லப்பட்டது. அந்த செய்தி கேட்டுத்தான் மக்கள் கும்பல் கும்பலாக நிறுத்தாமல் பேசியபடியே இருந்தனர். பிறகு கிராமத்தின் முக்கியஸ்தர்கள் கூடி, சுதா வாக்கப்பட்ட ஊருக்கு போய் என்ன ஏது என்று பார்ப்போமெனப் புறப்பட்டனர்.

சொல்லப்பட்டவை, அதாவது சுதா குழந்தைகளைக் கொன்றது உண்மைதான். அவளது கணவர் வீட்டுக்காரர்கள் சுதாவை மருத்துவமனையில் இருந்து தங்களது ஊருக்கு வரக் கூடாது,  அப்படியே பிறந்த ஊருக்கு அழைத்துச் சென்று விடுங்கள், இல்லையின்னா போலீசுக்குப் போவோம் என்றனர். சுதாவின் ஏழைத் தாய் என்ன செய்வாள்? தற்போதைக்கு சுதாவை ஒரு வீட்டில் உட்கார வைத்து விட்டு, குழந்தைகளை அடக்கம் செய்த பின் தாயும், ஏனைய பிறந்த ஊர்க்காரர்களும் சுதாவை அழைத்துச் சென்று விடுகிறோம் என்றார்கள்.

அந்த ஊர்க்காரர்களும் அதுதான் நல்லது, போலீசுக்குப் போய் என்ன பிரயோசனம்? யாருக்கு என்ன நன்மை?! என்று கூறி சுதாவை பிறந்த ஊருக்கு வழியனுப்பி வைத்தனர். அதன் பிறகுதான் எங்க கிராமத்து பதட்டம், பரபரப்பில் நானும் சுதாவின் வீடு வந்து அவளைப் பார்க்கிறேன். அவளது தாய் அழுது அரற்றிய போதும் என்னால் ஒன்றும் ஆறுதலாகச் சொல்ல முடியவில்லை. அப்படி ஆறுதல் சொல்லுமளவு அந்த சம்பவம் லேசானதில்லை; நானும் வலிமையானவளில்லை.

♥ ♥

ப்படியே சில மாதங்கள் சென்றன. சுதாவின் கழுத்துப் புண் ஆறியது. எய்ட்ஸ் பயம் குறித்து அறிந்திருந்த கிராமத்தினர் சுதாவோடு தொட்டுப் பழகி உறவாடாத படிக்கு ஒரு இடைவெளியைக் கவனமாக வைத்தே அணுகினர். சுதாவோ அதையெல்லாம் ஒரு குறை என்று எடுத்துக் கொள்ளாதபடிக்கு சோகத்திலும், வேதனையிலும் வெகு தொலைவு போயிருந்தாள். திருமணத்திற்கு முன் சீவல் கம்பெனி வேலைக்குச் சென்ற இடத்தில் உள்ள பெண்கள் சிலர் வந்து பார்த்துச் சென்றனர். “சுதாவை இப்படி வீட்டிலேயே அடைத்து வைத்தால் அவளது மனது இன்னும் பாதிக்கப்படும். ஏதாவது வேலைக்கு ஏற்பாடு செய்கிறோம். அனுப்புங்கள்” என்றனர் அந்தப் பெண்கள்.

“ஊரே கண்டு பயப்படும் எய்ட்ஸ் நோயுள்ள பெண்ணை எப்படி வேலைக்கு அனுப்புவது, யார் ஏற்பார்கள் ?” என்றாள் சுதாவின் அம்மா. “காசுக்காக இல்லை என்றாலும் மன நிம்மதிக்காக சில வேலைகள் இருக்கின்றன. விசாரித்துவிட்டுச் சொல்லுகிறோம்” என்று அந்தப் பெண்கள் கூறினார்கள்.

அவர்கள் மூலமாக நகரத்தில் உள்ள மருந்துவமனையில் எய்ட்ஸ் தொண்டு நிறுவனம் நடத்தும் மருத்துவச் சேவைக்கு அழைத்துச் சென்றனர். சுதாவுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது. மரணத்தை நிச்சயமாகத் தேதியிட்டு அறிவிக்கும் எய்ட்ஸ் நோயை எதிர்கொண்டு வாழ்வது குறித்து அவளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. சுதாவும் ஓரளவு முன்னேறியிருந்தாள். யாரையும் நிலைகுத்திய விழிகளால் துளைக்கும் அவளது முகத்தில் கொஞ்சம் சாந்தம் குடியேறியது போல இருந்தது.

பிறகு அங்கேயே ஒரு வேலையும் போட்டுக் கொடுத்தார்கள். அவளைப் போல் எய்ட்ஸ் நோய் உள்ளவர்களை, அவர்கள் வசிக்கும் ஊர்களுக்கே சென்று, நம்பிக்கைத் தரும் வண்ணம் பேசி பழக்கப்படுத்த வேண்டும். அந்த நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரைகளும் கொடுத்து வர வேண்டும். மற்றவர் துயர் துடைக்கும் இந்த வேலையினூடாக சுதா தன்னுடைய சோகத்தை சற்று மறந்திருந்தாள். அந்த வேலையை உற்சாகமாகவே செய்து வந்தாள்.

சுதா வேலைக்குச் செல்லும்போதும், திரும்பி வரும்போதும் என்னிடம் நட்பாகப் பழகுவாள். நான் அவள் மேல் இரக்கப்பட்டு, பரிதாபமாகப் பார்ப்பேன். சுதா பஸ்ஸை விட்டு இறங்கிச் செல்லும் வழியில் என் வீடு இருந்தது. அவள் வீடு சற்றுத் தூரத்தில் இருந்தது. என் வீட்டில் சற்று இளைப்பாறி விட்டு, பேசிக் கொண்டிருப்பாள்.

அப்பொழுது சுதா வேதனையுடன் சொன்ன கதைகள் பல.

‘நான் மட்டும் இல்லக்கா. என்னப் போல நிறைய பேரு பாதிக்கப்பட்டிருக்காங்க. நான் ஒரு ஊருக்குப் போனேன். அங்க ஒரு பொண்ணு சொன்னிச்சு, “அவன் எங்கெல்லாம் அரிப்பெடுத்துப் போனானோ? மொத்தப் பாவத்தையும் எம் மேல இறக்கிட்டு போயிட்டான். இன்னைக்கு நடுத்தெருவுல நிக்கறேன்.” இதுனாலும் தேவலாம். இன்னொரு ஊருல நடந்ததக் கேளுக்கா. கல்யாணம் ஆன கொஞ்ச நாளுல பொண்டாட்டி கிட்ட ஒருத்தன் எய்ட்ஸ் இருக்குன்னு சொல்லியிருக்கான். பெறவு அந்த பொண்ணு தற்கொலை செஞ்சு செத்துப் போச்சு. திரும்பவும் பொம்பள சுகம் தேடி அந்த கம்னாட்டி இன்னொரு பொண்ணையும் கண்ணாலம் பண்ணியிருக்கான். பெறவு அவனும் நோய் முத்தி செத்துட்டான். இந்தக் கதையை அவனோட ரெண்டாவது சம்சாரமாயிருக்கிற பொண்ணு சொல்லிச்சு. நல்ல வேளை! அந்தப் பொண்ணு செஞ்ச புண்ணியம்.. அதுக்கு எய்ட்ஸ் இல்ல.‘

இதையெல்லாம் சுதா அழுதபடிதான் சொல்லுவாள். அழும்போது, “எப்படியெல்லாம் ஏமாத்துறானுங்க! பாவிப் பயலுவ… பொம்பளையா பெறந்தா பாவப்பட்ட ஜென்மாமா ஆயிறோம். எல்லாத்தையும் ஏத்துக்கிட்டு போக வேண்டியதா இருக்கு. இவனையெல்லாம் கொன்னு மரத்துல தொங்க விடணும். புதைக்க கூடாது, காக்கா, கழுகுதான் தின்னுட்டுப் போகணும்…” என்று அவள் சொல்லும்போது பாவப்பட்ட பெண்ணினத்தின் குமுறல் இறுதியில் சாபமாகவும் வரும். இப்படி அவள் சொல்லும் ஒவ்வொரு கதையையும் கேட்கும் போது அன்றைய பொழுது பேயறைந்தாற் போல் இருக்கும்.

ஒரு நாள் என் அம்மா என்னைப் பார்க்க ஊரிலிருந்து வந்திருந்தார்.  வேலைக்குச் சென்று திரும்பிய சுதா அன்று மிகவும் சோர்வாகக் காணப்பட்டாள். “ஏன்? உடம்பு சரியில்லையா?” என்று விசாரித்தேன். அம்மா தண்ணி கொண்டு வந்து கொடுத்தார். அவள் சிரித்துக் கொண்டே “வேண்டாம்மா! நான் தண்ணி வைச்சிருக்கேன்” என்றாள். என் அம்மா இருமியதைப் பார்த்து அவள் வைத்திருந்த இருமல் மருந்தை தயக்கத்துடன் கொடுத்தாள். ஒரு எய்ட்ஸ் நோயாளி தரும் மருந்தை சாதாரண மக்கள் வாங்க யோசிப்பார்களில்லையா?

அப்படியெல்லாம்  நினைக்கவில்லை என்பதாக வாங்கிக் கொண்டார் என் அம்மா. எங்கள் கிராமத்து நர்சின் உதவி ஆயாவாக வேலை பார்த்திருப்பதால் என் அம்மாவுக்கு அப்படி ஒரு தயக்கம் இல்லை.

“என்ன சுதா! மறுபடியும் உடம்பு சரியில்லையா?” என்று கேட்டார் என் அம்மா. “நான் நல்லாத்தான் இருக்கேம்மா! ஊருல சனங்க பேசற பேச்சுதான் நம்மை சாகடிச்சுரும் போல இருக்கு” என்றாள். “ஏன்? யாரு என்ன சொன்னாங்க?” என்றேன்.

“வீட்ல சும்மா இருக்கும்போது மனசு எதையாச்சும் நினைச்சுக்கிட்டே இருக்குதேன்னு பக்கத்துல நம்ம மாமா வீடுதானேன்னு  டி.வி. பார்க்கப் போனேன். அந்த வீட்டு அத்தை சொன்னாங்க, ’சொல்றனேன்னு தப்பா எடுத்துக்காத! இது புள்ள குட்டிங்க புளங்குற இடம். உன் நோய் எல்லாத்துக்கும் வந்திருச்சுன்னா என்னா பண்றது?’ பெரியப்பா வீட்டுக்குப் போனா டி.வி.யை இழுத்து வாசல்படிக்கு நேரா வைச்சு திண்ணையில ஒரு ஓரமா ஒக்காத்து பார்த்துட்டு போங்கிறாங்க. டி.வி. பார்த்துட்டுப் போன பிறகு நான் உக்காந்த இடத்தை தண்ணி விட்டுக் கழுவி விடுறாங்க. எனக்கு கோபம் வரல, அவங்க அறியாமையை நினைச்சு சிரிச்சுக்கிட்டேன். இது கூட பரவாயில்லம்மா. சில பேரு நான் திமிரெடுத்துப் போய் பிள்ளைகளை கொன்னுட்டு, மினிக்கிக்கிட்டுத் திரியறதா சொல்றாங்க.”

“புருசன் இல்ல. பிள்ளைவ என்னத்துக்கு எடைஞ்சலான்னு கொன்னுபுட்டு ஊரு மேயுறான்னு சொல்றாங்க. அதைத்தான் என்னால தாங்க முடியலக்கா!” என்று கதறி அழுதாள். அவளது ஒழுக்கத்தையும், முக்கியமாக தாய்மையைக் குத்திப் பேசுவதையும் சுதாவால் எப்போதும் தாங்கிக்கொள்ள முடிந்ததில்லை.

“காய்ச்சலும், தலை வலியும் வந்தவங்களுக்குத்தான் கஷ்டம் புரியும்” என்றேன். சுதாவோ தன் மனக்குமுறலை அடக்கமாட்டாமல் அழுது தீர்த்தாள்.

“ஜனங்க என்ன வேணா சொல்லட்டும். திமிரெடுத்துப் போயி வச்சுக்க முடியாம குழந்தைகளை கொன்னுபுட்டு திரியுறாங்கறாங்க. அதைதான் பொறுத்துக்க முடியல. நான் என்ன பரம்பரையாவா கொலை செஞ்சுட்டு திரிஞ்சேன்? என் நேர காலம். எங்க அம்மா ரெண்டு பொம்பளப் புள்ளைவள வெச்சுகிட்டு கஷ்டப்பட்டுச்சு. நான் இந்த நோய்வளோட இந்தப் புள்ளைவளை வச்சுகிட்டு என்னத்த செய்ய? அதுங்க இருக்கிறத விட சாவுறதுதான் மேலு. பிளான் பண்ணியா கொல செஞ்சேன்? ஆறு மாசத்துல எத்தனை பிரச்சினை? எதை நினைக்கிறது, எதை விடுறதுன்னே தெரியல. கல்யாணம் ஆகாம முத்திப்போய் எங்கயோ கிடந்தவன எந் தலையில கட்டி வெச்சாங்க. சினிமா கொட்டகையில டிக்கெட் கொடுத்துட்டு அங்கயே எத்தனை பேருகிட்ட படுத்து எந்திரிச்சானோ! எம் பாவத்துல விழுந்துட்டான். பொண்ணா பொறந்து என்ன சந்தோஷத்த அனுபவிச்சோம். பொம்பளையா பொறக்குறதே பாவம்க்கா.”

“நான் தூக்கு போட்ட அன்னைக்கே போயிருந்தா என் கதயும் முடிஞ்சிருக்கும். பெத்த பிள்ளைக்குத்தான் அம்மாவா இருக்க முடியல; பெத்தவளுக்காவது பிள்ளையா இருப்போம்னு இருக்கேன்” என்று தேம்பி தேம்பி அழுதாள் சுதா.

♥ ♥

ப்படியாக ஒரு வருட காலம் சென்றது. ஊர் அவளை நடைப்பிணமாகக் கூட வாழ விடவில்லை. “சுதாவை பாருங்க முடி கட் பண்ணி, ஸ்டைலா செருப்பு போட்டுக்கிட்டு, பொட்டு வச்சுக்கிட்டு போறத. அவளை யாராச்சும் ஒரு தாலியறுத்தவன்னு சொல்லுவாங்களா? ஊருக்குள்ளே இப்படி திரியறவ டவுணுக்குள்ள போயி என்னென்ன பண்ணுவாளோ”ன்னு ஒருத்தி எங்கிட்டயே பேசினாள். அவளிடம் சண்டை போட்டேன். “ஆட்டுக்கு வால அளவெடுத்துதான் வச்சுருக்கான் ஆண்டவன்” என்று சுதாவின் அவலத்தை விதியாக்கி சாபம் விட்டாள் அந்தப் பெண்.

இது போன்று என்னென்ன வார்த்தைகள் சுதாவைக் குதறியிருக்கும் என்று யோசித்துப் பார்த்தேன். எய்ட்ஸ் ஒருபுறம் அவளை அரித்தது என்றால், சமூகம் இன்னொரு புறம் அவளை உயிருடன் வதைத்தது.

அவளது குழந்தைகள் இறந்து கிட்டத்தட்ட இரண்டரை வருடங்கள் ஆகி விட்டன. அந்த நாளும் வந்தது. பகல் நேரம். சுதாவின் அம்மா வயல் வேலைக்குச் சென்றிருந்தார். மதியம் 12 மணி இருக்கும். கோடை காலம் என்பதால் ஊரே அடங்கியிருந்தது. வேலை முடிந்து வந்த சுதாவின் தாய் மகளைக் காணவில்லையே என்று அருகாமை வீடுகளில் தேடினார். பிறகு தெரு ஜனங்களும் தேடினார்கள். இறுதியில் வீட்டின் கொல்லைப்புறத்தில் சுமார் ஒரு ஃபர்லாங் தூரத்தில் உள்ள மரங்கள் அடங்கிய தோட்டமொன்றில் சுதா தனது 28 வருச வாழ்க்கையை முடித்துக்கொண்டு, தூக்கில் பிணமாகத் தொங்கியதை மக்கள் கண்டுபிடித்தார்கள்.

எங்கள் கிராமத்தில் தூக்குப்போட்டு இறப்பவர்களை வீட்டுக்குக் கொண்டு வர மாட்டார்கள். ரொம்ப நேரமும் வைத்திருக்க மாட்டார்கள். பேய் பயம்தான் முக்கியமான காரணம். அதன்படி சுதாவும் அப்படியே சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, எரிக்கப்பட்டாள்.

( உண்மைச் சம்பவம். ஊர்ப்பெயர் தவிர்க்கப்பட்டு, அந்தப் பெண்ணின் பெயரும் மாற்றப்பட்டிருக்கிறது.)

_________________________________________________

புதிய கலாச்சாரம், ஆகஸ்டு – 2012

_______________________________________________________

  1. தனக்கு எய்ட்ஸ் இருப்பது தெரிந்தும் மறைத்துவிட்டு திருமணம் செய்து கொண்டு மனைவியையும், குழந்தைகளையும் நரகத்தில் தள்ளிவிடும் தந்தையின் சுயநலம் ஒரு புறம்… தான் அனுபவிக்கும் கொடுமை தன் குழந்தைகளுக்கும் நேருமோ என்ற அச்சத்தில் குழந்தைகளைக் கொன்ற தாயின் மறக்கருணை ஒருபுறம்.. சுதாவைப் போன்ற அப்பாவிப் பெண்கள் சமூகத்தில் படும் அல்லல்கள் வேதனைக்குரியது..

  2. உலகத்துல நடக்குற உண்மையான விசயம் எல்லாம் முதல்ல வினவுக்குத்தான் தெரிய வருது… ப்ப்பா…. பின்ரப்பா…..

    • இந்தியன் ??!!
      எனக்கு ஒரு சந்தேகம். நீங்கள் என்ன மனித இனத்தைச் சேர்ந்தவர் தானா? இப்படி ஒரு நிகழ்வைப் படித்த பின்பும் உங்களுக்கு எப்படி இப்படி ஒரு பின்னூட்டம் இட மனது வந்தது?

  3. ஏகாதிபத்தியத்தின் கொடிய சீரழிவான வியாதியும். நிலவுடமையின் பிற்போக்கு தனங்களையும் ஒழிக்காதாவரை சுதாக்கள் மாய்த்துக்கொள்வதையும் தடுக்கமுடியாதுஃ

  4. Beautiful narration,an heart moving context. We live in a dualistic community. It is not only the world of have’s and have-nots but their different worlds. Today the social structures as religion to seek the ambiance of well-off and neglect the suffering majority.

  5. இது போன்ற சம்பவங்களினால்தான் கடவுள் பற்ரிய கருத்தை மறுபரிசீலனையில் வைக்க வேண்டியிருக்கிறது.

  6. இதைப் படித்ததும் மனது மிகவும் வலிக்கிறது. பாதிப்பைத் தந்தவனை விட்டுவிட்டு இந்த அவலம் பிடித்த சமூகம், பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணை எந்த அளவிற்கு மனதால் துன்பப்பட, வேதனைப்பட வைத்திருக்கிறது என்பதை நினைக்கும் போது ஆத்திரம் எழுகிறது.

  7. இது நிச்சயம் அவன் குடும்மத்திற்க்கும் தெரியாமல் இருந்து இருக்காது, அதனால் தான் இவ்வளவு நாள் திருமணம் இறைவன் அவனுக்கு தள்ளி வைத்து உள்ளான். இதற்க்கு அவன் குடும்பமும் பொறுப்பு, இது போன்று வாழ்பவனுக்கு சமூகம் தரும் பரிதாபம், விபாச்சாரத்தினை அதரிப்பது போல் ஆகிவிடும், இது அவர்களோடு போகாது, சுதா போன்று சமூக நலனில் அக்கறை கொண்டதால் இதோ தன்னுடைய வாழ்வை தன்னோடு முடித்து கொண்டாள், இதுவே தன் நலம் ஒண்றே என்று என்னி இருந்து இருப்பாள் என்றால் ஆயிரம் சுதாவும் ( எயிட்சுடன் ), ஆயிரம் பேர் அவள் கணவன் போன்று ( எயிட்சுடன்) தோன்றி இருப்பான். இதையென் சொல்லுகிறேன், அவள் கணவன் கொண்டு வந்த எயிட்சு நோய் அவனுடைய விபச்சர நடவடிக்கையால், அவன் நடத்தையில் சுத்தம் இருந்து இருந்தால் நிச்சயம் இவ்வளவு பெரிய அவலம் நடந்தேரி இருக்காது என்பதே என் கருத்து. விபச்சாரம் ஒழிக்கப்படவேண்டும், பாழியல் தொழில் என்று அதற்க்கு அங்கிகாரம் அளித்து மக்களை கேவலமான ஒரு நிலைக்கு தள்ளுகிறது, இங்கு இருக்கும் ஆதிக்க வெறி சக்திகள், தாங்கள் மட்டும் சுகமாக வாழ இது போன்று வேசி வாழ்க்கைகளை உருவாக்குவதோடு மட்டும் அல்லாது உழைக்கும் மக்களின் வேதனையான பாலியல் சுகத்திற்க்கு பின் தன்னையே அழித்து கொள்ளுகின்றனர். வினவுக்கு ஏன் கூறுகிறேன் என்று புரியும் எனெனில் முன்பு ஒரு கட்டுரையில் வேசி தொழில் புரியும் ஒரு பெண்ணிற்க்கு சொம்பு தூக்கி இருக்கும் கட்டுரை இதே வினவில் படித்தேன். அதில் அவள் எதோ வயிற்று பிழைப்பிர்க்கு அது போல் செய்வதாகவும், அவள் வாழும் இடம் சேரி என்றும் கூறி அவளுக்காக பரிதாப பட்டு இருக்கும் வாசகர்களும் , சுதாவிர்க்கு என்ன பதில் கொடுக்க போகிறார்கள் என்று தெரியவில்லை. வாழ்க்கை சுழ்ற்ச்சி ஆரம்பிக்கும் இடம் திரும்பவும் வந்தே தீரும். ஒரு தவறின் நியாயம் , நியாயம் என்று தெரிந்தே அது தவறாக புரிந்துணர்வு ஆகும். ஒன்றின் தவறு பலி நான்கு. புரிந்துணர்வு கொள்ளுவோம் வேசிதனத்தினை ஒழித்துடுவோம்.

  8. கண்டிப்பாக நான் வேசிகளை குற்றம் சொல்ல மாட்டேன்.
    எனக்கு தெரிந்து எந்த வேசியும், விரும்பி வேசித்தனம் செய்வதில்லை.

    வேசிகளே இல்லாது போனால் என்ன நடக்கும். பொறுக்கிகள் என்ன செய்வார்கள்?
    திருந்திவிடுவார்களா? அல்லது பக்கத்து வீட்டில் கை வைப்பார்களா?

    மீர்ஜாபர்கள் இல்லாது போனால் கிழக்கிந்தியக் கம்பெனி என்ன செய்திருக்கும் ?
    எட்டப்பனையும் தொண்டைமானையும் மன்மோகனையும் உருவாக்கியவர்கள் யார்?

    துரோகிகளால் எதிரிகள் வெல்வதில்லை. எதிரிகள் தான் துரோகிகளை உருவாக்குகிறார்கள்.

    வேசிகள் ஊரைக் கெடுப்பதில்லை. பொறுக்கிகள் தான் மாமாக்களையும், வேசிகளையும் உருவாக்குகிறார்கள்.
    பொட்டுகட்டி தேவதாசிகளை உருவாக்கியது யார்?

    ஊர்மேயும் ஆணாதிக்க திமிரை அடித்து வெளுக்காமல், வேசித்தனத்தையும் சுதாக்களையும் ஒழிக்க முடியாது.

  9. ஏகாதிபத்தியங்களை ஒழிக்காமல் அத்வாணி, காரத்களை ஒழிக்க முடியாது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க