privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஅரசியல்ஊடகம்சத்யமேவ ஜெயதே: அமீர் கானின் SMS புரட்சி!

சத்யமேவ ஜெயதே: அமீர் கானின் SMS புரட்சி!

-

அந்த நடுத்தர வயதுப் பெண்மணி கலங்கிய கண்களோடு அமர்ந்திருக்கிறார். கேமராக்கள் அந்த முகத்தை நெருக்கத்தில் காட்டுகின்றன. எதிரே அமர்ந்திருக்கும் இந்தி நடிகர் அமீர் கான் மெல்லிய குரலில் கேட்கிறார் –

“சொல்லுங்க! உங்க சோகத்தை எல்லோருக்கும் சொல்லுங்க!”

லேசான தழுதழுத்த குரலில் பேசத் துவங்கும் அப்பெண்ணின் பெயர்  கவுஷால் பன்வார். ஹரியானா மாநிலத்தில் வால்மீகி சாதியைச் சேர்ந்த தலித் பெண். கடுமையான சாதி ஒடுக்குமுறைகளைத் தாண்டி துப்புரவுத் தொழிலாளியாக வேலை பார்த்துக் கொண்டே சமஸ்கிருதத்தில் டாக்டர் பட்டம் பெற்றுள்ள கவுஷால், தற்போது தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருத பேராசிரியையாகப் பணிபுரிவதாகச் சொல்கிறார்.

கவுஷாலின் துயரமான வாழ்க்கைப் பயணத்தைப் பற்றிய விவரணைகளால் அந்நிகழ்ச்சியின் படப்பிடிப்பு அரங்கில் பார்வையாளர்களாக அமர்ந்திருந்த பலரும் கண் கலங்குகிறார்கள்.  கவுஷாலின் முன்னேற்றத்தில் பெரும் அக்கறை கொண்டிருந்த அவரது தந்தை ‘சித்தா’வின் பெயரைச் சொன்னதும் அமீர் பார்வையாளர்களைக்  கரவொலி எழுப்பச் சொல்லிக் கேட்கிறார் – அவர்களும் உற்சாகமாக கை தட்டுகிறார்கள்.

கவுஷாலைத் தொடர்ந்து ஆவணப்பட இயக்குநர் ஸ்டாலின் கே. வருகிறார். அவரது ஆவணப்படமான “தொடப்படாத இந்தியா”விலிருந்து (Untouched India) சில காட்சிகள் திரையிடப்படுகின்றது. அதைத் தொடர்ந்து துப்புரவுத் தொழிலாளர்கள் இயக்கத்தைச் (safai karmachari andholan)  சேர்ந்த பெசவாடா வில்சன் வருகிறார். மனிதக் கழிவை மனிதனே அகற்றுவதற்கெதிரான அவரது போராட்டங்களை விவரிக்கிறார். தொடர்ந்து ஓய்வு பெற்ற நீதிபதி தர்மாதிகாரி வருகிறார். பார்ப்பனரான அவர் சாதி வேற்றுமை கொடியது, இந்த வேற்றுமையை குழந்தைகளிடம் விதைக்கும் பெற்றோர்களே அதை அகற்ற வேண்டிய கடமையையும் கொண்டிருப்பதாகச் சொல்லிச் செல்கிறார்.

இறுதியில் அமீர் கான்.

“இதற்கெல்லாம் என்ன செய்யப் போகிறோம்? எப்படித் தடுக்கப் போகிறோம்? மனிதக் கழிவை மனிதனே அகற்ற வேண்டுமா? உங்கள் பதிலை திரையில் பளிச்சிடும் இந்த எண்ணுக்கு குறுஞ்செய்திகளாக அனுப்புங்கள்… நாம் மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்”

ஆமிர்-கான்-சத்யமேவ-ஜெயதே-3

மேலே விவரிக்கப்பட்டிருப்பது ஸ்டார் குழுமத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சியின் ஒரு அத்தியாயம். கடந்த 2012 மே மாதம் 6-ஆம் தேதி ஸ்டார் குழுமத்தைச் சேர்ந்த பல்வேறு மொழிச் சேனல்களிலும், தூர்தர்ஷனிலும் ஒரே நேரத்தில் ஒளிபரப்பாகத் துவங்கியது சத்யமேவ ஜெயதே. பிரதி வாரம் ஞாயிற்றுக் கிழமைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சமூகப் பிரச்சினைகளைப் பற்றி அலசுவதும், அதைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளை முன்வைப்பதும் இந்நிகழ்ச்சியின் நோக்கமென்று கூறிக் கொள்கிறார்கள்.

முதலாளித்துவ ஊடகங்களில் எழுதும் அறிவுஜீவியினர் சிலர் இந்நிகழ்ச்சி வெறும் ரியாலிட்டி ஷோ மட்டுமல்ல, இதில் பேசப்படும் ஒவ்வொரு விசயமும் சாமானிய மக்களின் இதயங்களைத் தொடுவது போலிருப்பதாகவும், ஒரு மாற்றத்துக்கான முதல் அடியை எடுத்து வைப்பதால் இது ஒரு சமூக இயக்கம் என்றும் சொல்கிறார்கள். ஒரு சிலர் நிகழ்ச்சியைக் காணும் போதே அடக்க முடியாமல் கண்ணீர் வடித்ததாக எழுதுகிறார்கள்.

சத்யமேவ ஜெயதே இதுவரையில்லாத வரவேற்பைப் பெற்றுள்ளதைப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் முக்கியமான ஆறு பெருநகரங்களில் மட்டுமே 4.74 டி.ஆர்.பி (தொலைக்காட்சி பார்வையாளர் கணக்கீட்டுப்) புள்ளிகளைப் பெற்றுள்ளது இந்நிகழ்ச்சி. இதன் இணையதளம் மே மாதத்தில் மட்டுமே சுமார் 68 ஆயிரம் வாசகர்களது மறுமொழிகளைப் பெற்றுள்ளது.

முதல் நிகழ்ச்சி நடந்த சமயத்தில், ஒரே மணி நேரத்தில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் அமீர் கானைத் தொலைபேசியில் அழைக்க முற்பட்டுள்ளனர். பல லட்சம் செல்பேசி குறுந்தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளது. சுமார் 42 ஆயிரம் பேர் சமூக வலைத்தளமான ட்விட்டர் மூலம் இந்நிகழ்ச்சியைத் தொடர்கிறார்கள். ஐ.டி. துறையைச் சேர்ந்த இளைஞர்களின் அரட்டைகளில் சமீப காலமாக சத்யமேவ ஜெயதே கட்டாயமாக இடம் பிடித்துள்ளது.

சத்யமேவ ஜெயதே பெற்றுள்ளது ஒரு பிரம்மாண்டமான வெற்றி போலத் தோன்றினாலும் அதன் பின்னே விளம்பர, ஸ்பான்சர் அளிக்கும் பெரும் நிறுவனங்கள் உள்ளன. நட்சத்திர நாயகர்கள் நடிக்கும் தமிழ் சினிமாவை முதல் வாரத்தில் பார்த்தே ஆக வேண்டுமென்று ஒரு பரபரப்பை கிளப்பி விட்டு ஆதாயம் பார்ப்பதற்கும் இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கும் நிறைய தொடர்புண்டு.

உதாரணமாக, கட்டுரையின் துவக்கத்தில் விவரிக்கப்பட்டுள்ள தீண்டாமை தொடர்பான நிகழ்ச்சியை எடுத்துக் கொள்வோம். ஸ்டார் குழுமத்தின் படப்பிடிப்பு அரங்கத்தில் அமர்ந்திருந்த பார்வையாளர்களின் கண்ணீரும், சிரிப்பும், ஆத்திரமும், ஆர்வமும், பெருமிதமும் தொலைக்காட்சிப் பெட்டியின் முன் அமர்ந்திருக்கும் நேயர்களையும் பற்றிக் கொள்வதாகத் தோன்றினாலும் இது ஒரு செட்டப் என்றால் நம்புவீர்களா?

அறிவுஜீவிகள் வியந்தோதும் அமீர்கானில் இந்த மலம் அள்ளும் சாதி பிரச்சினையின் பின்னே மறைக்கப்பட்ட இரண்டு வார்த்தைகளை அநேகமானோர் கவனிக்கத் தவறியுள்ளனர் – அந்த வார்த்தைகள் அம்பேத்கர் மற்றும் இட ஒதுக்கீடு.

outlook-satyameva-jayate
நன்றி Silence Eva Jayate – அவுட்லுக்

ஜூலை 23-ம் தேதியிட்ட அவுட்லுக் பத்திரிகையில் இது பற்றி எழுதியுள்ள ஆனந்த், தனது பத்தியில் இதை மிகச் சரியாக சுட்டிக் காட்டுகிறார். தலித்துகளின் மீதான சாதிய ஒடுக்குமுறைகளின் கொடூரங்களை விளக்கியும், அதற்கான தீர்வுகளை இலக்கில்லாமல் முன்வைத்தும் சுமார் ஒன்றரை மணி நேரங்கள் நீண்ட அந்த நிகழ்ச்சியில் அம்பேத்கர் பற்றியோ, இடஒதுக்கீடு பற்றியோ எந்த வார்த்தையும் வெளிப்படாமல் மிகக் கவனமாகத் தவிர்த்துள்ளனர்.

ஆனந்த் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களிடம் விசாரித்துள்ளார். குறிப்பாக வில்சன் தனது பேட்டியின் போது இட ஒதுக்கீடு பற்றியும் அம்பேத்கர் பற்றியும் குறிப்பிட்டதாகவும், பின்னர் ஒளிபரப்பான நிகழ்ச்சியின் அது வெட்டப்பட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளார். அதே போல் கவுஷால் பன்வாரும் அம்பேத்கர் பற்றி குறிப்பிட்டுள்ளார் – அதுவும் வெட்டப்பட்டிருக்கிறது. அதிர்ச்சியடைந்த ஆனந்த் வேறு சிலரிடமும் பேசியிருக்கிறார். அதில் சிலருடைய வாதங்கள் மறைக்கப்பட்டிருக்கிறது – சிலருடைய பதிவுகள் நிகழ்ச்சியில் வெளியிடப்படாமலேயே வெட்டியெறியப்பட்டிருக்கிறது.

மேலும், கவுஷால் பன்வார் தனது வாழ்க்கையை விவரித்தது பார்வையாளர்கள் இல்லாத ஒரு படப்பிடிப்பு அரங்கத்தில் – ஆனால், நிகழ்ச்சி ஒளிபரப்பான போது அந்த அரங்கத்தில் பார்வையாளர்கள் இருந்தனர். அவர்கள் அழுதனர், சிரித்தனர், கரவொலியெழுப்பினர், ஆத்திரமாகவும், அசூசையுடனும் முகபாவனைகளைக் காட்டினர் – இந்த ‘உணர்ச்சிகளெல்லாமே’ தனியே படம் பிடிக்கப்பட்டு பின்னர் சேர்க்கப்பட்டுள்ளது. அந்த உணர்ச்சிகள் ஏதேனும் ஒரு பாலிவுட் மசாலாப் படத்தின் மேல் எழுந்ததாகக் கூட இருக்க வாய்ப்பிருக்கிறது – ஆனால் நிச்சயம் கவுஷால் பன்வாரின் வாழ்க்கைச் சம்பவங்களின் மேல் எழுந்ததல்ல.

அமீர் கான் தனது நேயர்களை ஏமாற்றி விட்டார் என்பது மட்டும் இங்கே பிரச்சினையில்லை – இந்த போலித்தனங்களின் வெளிச்சத்தில் கேந்திரமான உண்மைகளைக் குழிதோண்டிப் புதைக்கும் அயோக்கியத்தனம் தான் நமது கவனத்திற்குரியது. சொல்லப்போனால், அமீரின் நேயர்கள் தாங்கள் ஏமாற்றப்படுவதை விரும்புகிறார்கள் என்பதே எதார்த்தம்.

தலித் மக்களுக்காக உயிர், பொருள், குடும்பத்தைத் தியாகம் செய்து இந்நாட்டில் நடந்த போராட்டங்கள் எண்ணற்றவை – அந்தப் போராட்டங்களில் எண்ணிறந்த உயிர்கள் மடிந்து போயுள்ளன. சமஸ்கிருத பண்டிதராவதற்காகப் போராடிய தலித்தின் கதையை இத்தனை மெனக்கெட்டுத் தேடியெடுத்த அமீர் கான், அதே ஹரியானாவில் மாட்டுத் தோலை உரித்த ‘குற்றத்திற்காக’ கொளுத்தப்பட்ட தலித் உடல்களைப் பற்றியோ, இந்த நாட்டின் குறுக்கும் நெடுக்குமாக ரத்தமும் தசையுமாக வாழும் கயர்லாஞ்சியின் போட்மாங்கேயைப் போன்றவர்களையோ சொல்லாமல் மறைப்பது தற்செயலானதல்ல.

“இந்த நாட்டில் சாதி இருக்கத்தான் செய்கிறது; அது மக்களின் மூளைகளுக்குள் இருக்கிறது; நாம் தான் நமது குழந்தைகளிடம் அதை விதைத்திருக்கிறோம் – எனவே நாம் தான் அதை அகற்ற வேண்டும்” என்றார் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓய்வு பெற்ற பார்ப்பன நீதிபதி சந்திரசேகர தர்மாதிகாரி. அவரே மேலும், “நமது பாரதம் இன்னும் முன்னேறி பல சாதனைகள் படைக்க வேண்டுமென்றால் நாமெல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டியது அவசியம்” என்கிறார்.

இந்திய சமூகத்தின் ஆன்மாவாக இருக்கும் பார்ப்பனியத்தின் உயிராதாரமே சாதியினுள் தான் புதையுண்டு கிடக்கிறது. ஓட்டுமொத்த இந்துப் பொதுப்புத்தியே சாதிப் படிநிலையென்கிற செங்கற்களால் தான் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், ஒரு சமூக எதார்த்தத்திற்கு தனிநபர்களைப் பொறுப்பாளிகளாக்கி கதையெழுதுகிறார் அமீர் கான். அதுவும் உழைத்து முன்னேறிய தலித்துக்கள்தான் அவரது அக்கறைக்குரியவர்களே அன்றி, வெட்டிப் புதைக்கப்பட்டவர்கள் அல்ல. இதைக் கூறினால் கொன்றவர்கள் யாரென்று குறிப்பாகப் பேச வேண்டியிருந்திருக்கும்.

அதாவது உள்ளூர் அளவில் கயர்லாஞ்சியின் கொலைகாரர்களைப் பாதுகாத்த கட்சி எதுவென்று சொல்ல வேண்டியிருக்கும்; மாட்டுத் தோலை உரித்ததற்காக தலித்துகளைக் கொளுத்திய வெறியர்கள் புனிதப் போராளிகள் என்று ஆராதிக்கும் காவிக் கட்சிகளை அடையளம் காட்ட வேண்டியிருக்கும். ஆனால் இத்தகைய கட்சிகள்தான் சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சிக்கு காசு கொடுக்கும் புரவலர்களின் சமூக அடித்தளங்கள் மற்றும் கூட்டாளிகள்.

சல்வா ஜூடூமினுடைய ஸ்தாபகர்களையும், ரன்பீர் சேனாவின் பிதாமகர்களையும் அமீர் எதிர்த்துப் பேசுவதை ரிலையன்சும் விரும்பாது; சத்யமேவ ஜெயதேவின் மற்ற புரவலர்களும் விரும்ப மாட்டார்கள்.  அது மட்டுமல்ல சத்யமேவ ஜெயதேவின் இந்தி-இந்து மாநில ரசிகர்களே கூட அதை விரும்பக் கூடியவர்களல்ல.

எனவே தான் அமீர் இருளான அந்தப் பக்கங்களுக்குள் நுழைய மறுக்கிறார். அந்த நிகழ்ச்சியில் தர்மாதிகாரி பேசியது அவரது கருத்து மட்டுமல்ல – சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சியின் கருப்பொருளே அது தான். மருத்துவத் துறைப் பிரச்சினைகளைப் பற்றி நடந்த முந்தைய நிகழ்ச்சியொன்றில் மருத்துவம் தனியார்மயமாகியிருப்பது, பன்னாட்டு மருந்துக் கம்பெனிகளின் இலாப வெறி, அவர்களுக்கு பாதபூசை செய்யும் இந்திய ஆளும் வர்க்கத்தின் அடிமைப் புத்தி போன்றவற்றைத் தவிர்த்து விட்டு சில மருத்துவர்களைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுகிறார்.

ஆட்டத்தின் விதிகள் இவ்வாறாகத் தீர்மானிக்கப்பட்ட பின் கோகிலா பென் அம்பானி மருத்துவமனையின் மூலம் கொள்ளையடிக்கும் ரிலையன்ஸ் சத்யமேவ ஜெயதேவின் ஆஸ்தான புரவலராக இருக்க தடையேது? அதனால் தான் சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சியில் அமீர்கானால் கைகாட்டப்படும் தன்னார்வ நிறுவனங்களுக்கு பொதுமக்கள் வழங்கும் நன்கொடைகளுக்கு இணையான தொகையைத் தானும் வழங்க முன்வந்திருப்பதாக எந்தக் கூச்சமும் இன்றி ரிலையன்ஸால் பீற்றிக்கொள்ள முடிகிறது.

பெண் சிசுக் கொலை பற்றிப் பேசும் போது இந்தியாவில் பெண்ணடிமைத்தனத்தின் ஊற்றுமூலமான பார்ப்பன இந்து மதத்தையும். அதன் சமூக அடித்தளமான நிறுவனங்கள், கட்சிகளைப் பற்றியும் பேசாமல் இருப்பது; குடியின் தீமை பற்றிய நிகழ்ச்சியில் விஜய் மல்லையாவின் கொள்ளைகளையும், அதற்கு இசைவான முதலாளி வர்க்கத்தையும் தவிர்த்து விடுவது; விவசாயத்தில் பூச்சிக்கொல்லிகள் பற்றிப் பேசும் போது பன்னாட்டு விதைக் கம்பெனிகளான மான்சாண்டோ, கார்கில் பற்றியும், அவர்கள் தேசத்தினுள்ளே நுழைய எல்லைகளை அகலத் திறந்து விட்ட மன்மோகன் —- சிதம்பரம்  கும்பலைப் பற்றிப் பேசாமல் தவிர்ப்பது – இது தான் சத்யமேவ ஜெயதே.

ஆமிர்-கான்-சத்யமேவ-ஜெயதே-2

பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்துவது மக்களின் ஆரோக்கியத்துக்கு எத்தகைய கேடுகளை உண்டாக்கும் என்று ஓதிய அமீர்கான், பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதற்கு விவசாயிகளை மட்டும் பொறுப்பாளிகளாக்குகிறார். இங்கே முறைகேடான வழிகளில் மரபீனி விதைகளையும், வீரிய நச்சு உரங்களையும் கள்ளத்தனமாக விற்கும் கார்கில், மான்சான்டோ முதலான பன்னாட்டுக் கம்பெனிகளைத் தடைசெய்து நாட்டை விட்டே விரட்ட வேண்டும் என்று கோரவில்லை. பன்னாட்டுக் கம்பெனிகளுக்குச் சாதகமான காட் ஒப்பந்தத்திலிருந்து இந்தியா விலக வேண்டுமென்று கேட்கவில்லை.

இது தான் அண்ணா ஹசாரேவின் ஊழல் ஒழிப்பு நடைமுறை என்பது. ஊழலை ஒழிக்க வேண்டும் – ஆனால் அம்பானியின் ஊழலைப் பற்றியோ, டாடாவின் திருட்டைப் பற்றியோ, மிட்டலின் கொள்ளைகள் பற்றியோ, வேதாந்தாவின் நிலப்பறிப்புகள் பற்றியோ வாயைத் திறப்பதில்லை என்பது தான் அண்ணா ஹசாரே. தாலுகா ஆபீஸ் ப்யூன் வாங்கும் பத்து ரூபாயைத் தடுக்க என்ன செய்யலாம், என்ன சட்டம் போடலாம் என்பதைப் பற்றியெல்லாம் மூளையைக் கசக்கும் ஹசாரே, பெல்லாரியின் இரும்புத் தாதுக்கள் வாரிச் செல்லப்படுவதற்கு வகை செய்யும் தனியார்மயத்தைத் தகர்த்தெறிவது பற்றிப் பேச மாட்டார்.

அதனால் தான் அவரது ஊழல் ஒழிப்புப் போருக்கு ஸ்பெக்ட்ரம் திருடர்களான ஏர் டெல்லும், ரிலையன்சும், டாடாவும் ஸ்பான்சர் செய்தார்கள் – அதே காரணத்திற்காகத் தான் இன்று அமீருக்கும் இவர்கள் ஸ்பான்சர் செய்யக் காத்திருக்கிறார்கள். ‘யார்ட்ட துட்டு வாங்கினா என்னா சார், எதுனா நல்லது நடக்குதா பாருங்க சார்’ என்று ஒரு மூலையிலிருந்து கூவுகிறது அறிவாளிகளின் மனசாட்சி. ‘கோழி குருடா இருந்தாலென்ன ?! குழம்பு ருசியா இருக்கா பாரு!’ பளீரென்று ஒளிரும் இந்த சந்தப்பவாதத்தின் நிழலில் தான் மோடியும், மான்சான்டோவும், ரன்பீர் சேனாவும், டாடாவும், அண்ணா ஹசாரேவும், ராமகோபாலனும், ப.சிதம்பரம்-மன்மோகன் சிங்கும் சந்தித்து கைகுலுக்கிக் கொள்கிறார்கள்.

இந்தளவுக்கு நேர்மையற்றும், அயோக்கியத்தனமாகவும் வழங்கப்படும் ஒரு நிகழ்ச்சி பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளதை எவ்வாறு புரிந்து கொள்வது? சின்ட்ரெல்லா கதைகளைப் போல மகிழ்ச்சியான தீர்வுகளை அளித்து தமது வார இறுதிகளைக் கொண்டாட்டமாக்குவதைத் தான் இதன் நடுத்தர மற்றும் உயர்நடுத்த வர்க்க நேயர்கள் விரும்புகிறார்கள். சிக்கலான சமூகப் பிரச்சினைகளை இப்படி மொன்னையாகவும், தட்டையாகவும் ஒரு வெண்ணைக் கட்டியை சுலபமாக அறுப்பது போலவும் ஒரு பேக்கேஜ்ஜாக வழங்குவதைத் தான் அவர்கள் வரவேற்கிறார்கள்.

நிகழ்ச்சியின் துவக்கத்திலேயே இதை அமீர்கான் வெளிப்படையாக அறிவித்தும் விடுகிறார். முதல் வார நிகழ்ச்சியின் துவக்கத்தில் அவர் விலை உயர்ந்த கார்களிலும், பைக்குகளிலும், ட்ரெயினிலும் இந்தியாவின் பல பகுதிகளுக்கும் பயணிக்கிறார். பின்னணியில் பாடல் ஒன்று ஒலிக்கிறது. கையிலிருக்கும் கின்லே பாட்டிலில் இருந்து தண்ணீரை அருந்தியபடியே ‘உண்மையான’ இந்தியாவின் முகத்தைத் தரிசிக்கிறார். திரையில் எழுத்துக்கள் முடியும் நேரத்தில், அந்திசாயும் பொழுதில் கடற்கரையொன்றில் அமீர் இறுகிய முகத்தோடு அமர்ந்திருக்கிறார். கனமான குரலில் ஒரு சிறு உரை நிகழ்த்துகிறார். அதில்…

“நான் யாரையும் குற்றம் சுமத்த வரவில்லை; யாரையும் குற்றவாளியாக்கவில்லை; யாரையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதோ அல்லது புண்படுத்துவதோ என் நோக்கமல்ல. ஆனால்…. நம்மில் ஒருவர் தானே இதற்கெல்லாம் (சமூகப் பிரச்சினைகளுக்கு) காரணம்?  அல்லது எல்லோருமே தானே காரணம்? வாருங்கள்! நாம் சேர்ந்து பயணிப்போம். கொஞ்சம் தேடல்.. கொஞ்சம் களைத்தல்.. கொஞ்சம் கேட்பது, கொஞ்சம் சொல்வது.. சில கஷ்டமான விஷயங்களுக்கு விடை தேடுவது. இதனூடாக கலவரம் எனது நோக்கமல்ல. சிறு மாற்றம் தான் விருப்பம்.” என்கிறார். நடுத்தர வர்க்கத்தின் இதயங்கள் ஏன் ‘விழுந்தன’ என்கிற கேள்விக்கான விடை இதனுள் தான் பொதிந்து கிடக்கிறது.

இந்தியாவில் நடுத்தர வர்க்கமாய் வாழ்தவதன் சிக்கல்கள் அவ்வளவு அலாதியானது. தொடர்ந்து அதிகரித்து வரும் விலைவாசி, வியர்வை வழியும் போக்குவரத்துப் பயணங்கள், நாளிதழ்களில் புரட்டப் புரட்ட முடைநாற்றமெடுக்கும் ஊழல்கள், அலுவலகத்தில் வெட்டப்படும் சலுகைகள், அதிகரித்து வரும் வீட்டுக் கடனின் மாதாந்திரத் தவணை, பெட்ரோல் காரை விட டீசல் கார் குறைந்தது ஒரு லட்சமாவது அதிகமாயிருகிறதே என்கிற எரிச்சல், இன்னுமா ஸ்மார்ட் போன் வாங்கவில்லை என்கிற துக்க விசாரிப்புகள், எப்போதாவது தென்படும் வறுமை பற்றிய செய்திகள் – ‘பேசாம இராணுவ ஆட்சி வரணும் சார்’ என்று அவலை மென்று கொண்டிருந்த வாய்களில் வி.கே.சிங் என்கிற புண்ணியவான் வேறு மண்ணள்ளிப் போட்டு விட்டார் – கடைசியில் இருந்த ஒரே நம்பிக்கை நட்சத்திரமான அண்ணா ஹசாரே உலக மகா காமெடியனாக சீரழிந்து விட்டார். பரிதாபமான நிலை தான்.

படித்த நடுத்தர வர்க்கத்தினர் புழங்கும் இணையம், ஆங்கிலத் தொலைக்காட்சி சேனல்கள், சமூக வலைத்தளங்களில் சமூகத்தை எதிர்நோக்கும் சவால்கள் என்பவை குறித்த மிக மேலோட்டமான, ஆனால் உணர்ச்சியைத் தூண்டும் விதமான விவாதங்களே நிறைந்துள்ளன. இந்த அடிப்படையில் இருந்து தான் ‘எதாவது செய்யணும் பாஸ்’ என்கிற அரிப்பு தோன்றுகிறது. உண்மையில் ஊழலையோ, பிற சமூகக் கேடுகளையோ எதிர்க்க வேண்டுமென்றால் அதற்குத் தெருவிலறங்கிப் போராடியாக வேண்டும்.

ஆனால், அதற்கு லீவு போட வேண்டும்; வெயிலில் நிற்க வேண்டும்; அரசு அடக்குமுறைகளைச் சந்திக்க வேண்டும்; சம்பள இழப்பைச் சந்திக்க வேண்டும் – அதிகபட்சமாக வேலையிழப்பையே கூட சந்திக்க வேண்டியிருக்கலாம் – இந்த இக்கட்டான நேரத்தில் தான் அமீர் கான் ஆஜராகிறார். சும்மா ஒரு எஸ்.எம்.எஸ் செய்தாலேயே நீங்களும் ஒரு சமூகப் போராளியாகி விடலாம் என்கிற எளிய வழியைத் திறந்து விடுகிறார். நாம் யாரையும் குற்றவாளியாக்க வேண்டாமே என்கிறார்.

இந்தக் குறுஞ்செய்தி எல்லைக்குள்ளேயே பாதுகாப்பாக நின்று கொள்வதில் வேறு சில வசதிகளும் இருக்கிறது. சிக்கலான பல்வேறு அரசியல் பரிமாணங்களைக் கொண்ட பிரச்சினைகளை மிக எளிமையாகவும், தட்டையாகவும் புரிந்து கொள்ளும் சாத்தியத்தை  உண்டாக்குவதோடு, எடுத்துக் கொள்ளும் பிரச்சினைகளின் ஆன்மாவாக இருக்கும் அரசியலை உருவியெடுத்து விடுகிறது. அந்த இடத்தில் சில தனிநபர்களை வில்லன்களாக நிறுத்துகிறது.

இந்த வில்லன்களைக் கூட மனுப் போடுவது மூலமோ, சட்டங்கள் மூலமோ திருத்தி விட்டால் பிரச்சினை தீர்ந்தது என்கிறார் அமீர் கான். ஒவ்வொரு நிகழ்ச்சியின் இறுதியிலும், சட்டங்கள் இயற்றச் சொல்லியோ நடவடிக்கை எடுக்கச் சொல்லியோ அரசை வலியுறுத்த நேயர்களைக் குறுஞ்செய்தி அனுப்பச் சொல்கிறார் – சில நிகழ்ச்சிகளின் தொடர்ச்சியாக அரசும் அவ்வாறாக ‘நடவடிக்கை’ எடுத்திருக்கிறது.

ஆமிர்-கான்-சத்யமேவ-ஜெயதே

ஒரு சமூகப் பிரச்சினையைத் தீர்க்க மனு அளிப்பது என்கிற 19-ம் நூற்றாண்டின் காங்கிரசு வழிமுறையை அன்றைய வெள்ளை அரசாங்கம் எந்தளவுக்கு ரசித்து வரவேற்றதோ அதே அளவுக்கு இன்றைய ஆளும் வர்க்கமும் விரும்பி வரவேற்கிறது. அமீர் கான் முன்னெடுத்துச் செல்லும் சமூகப் பிரச்சினைகளின் ஆயுள் ஒரு வாரம் தான் என்பதும், அதன் வரம்புகள் மனு மற்றும் குறுஞ்செய்திகள் மட்டும் தானென்பதும் ஆளும் வர்க்கத்திற்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதம்.

தண்டகாரண்யாவிலோ, வடகிழக்கு மாநிலங்களிலோ, காஷ்மீரத்திலோ அல்லது வாக்காளர் அடையாள அட்டையைத் திருப்பியளித்ததன் மூலம் கூடங்குளத்திலோ இருக்கும் மக்கள் இயக்கங்களின் போராட்டமும் அமீர் கானின் ‘ கடிதக் கலகமும்’  சாராம்சத்திலேயே வேறுபட்டது. முந்தையது ஆளும் வர்க்கத்தின் அதிகார அடிப்படையையே ஆட்டம் காணச் செய்பவையாக இருக்கும்; அதே நேரம் அமீர் கானுடையது காந்தி-ஹசாரே வகைப்பட்ட தடவிக் கொடுத்தல்கள் தான்.

அதனால் தான் ஊர்வலம், சாலை மறியல், கடையடைப்பு போன்ற மக்களின் ஜனநாயகப்பூர்வமான, மிதமான எதிர்ப்புகளைக் கூட ஏதோ பயங்கரமான தீவிரவாத நடவடிக்கை போல நடத்தும் அரசுக்கு இது போன்ற ‘போராட்டங்கள்’ உவப்பானதாக இருக்கிறது. முதலாளியே ஏற்பாடு செய்யும் தொழிற்சங்கம் போன்றது தான் அண்ணா ஹசாரே- அமீர் கான் வகைப்பட்ட ‘சமூக இயக்கங்கள்’. பாலியல் தேவைகளைத் தீர்த்துக் கொள்ள சிவப்பு விளக்குப் பகுதி இருப்பது அவசியம் என்று சில ‘அறிவுஜீவிகள்’ சொல்வார்களல்லவா, அது போல மக்களிடையே எழக்கூடிய நியாயமான எதிர்ப்புணர்வுகளுக்கு அண்ணா ஹசாரேவும், அமீர் கானும் வடிகால் அமைத்துக் கொடுக்கிறார்கள்.

அமைப்பாக்கப்பட்ட வகையில் ஆத்திரம் கொள்வதற்கும், அதனடிப்படையில் ‘எதிர்ப்பு’ நடவடிக்கையில் ஈடுபடுவதற்கும் மக்களைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பழக்கப்படுத்துவதே சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சியின் உட்கிடை. பாதுகாப்பான முறையில் எதிர்வினையாற்ற ஒரு வாய்ப்பை எதிர்பார்த்துக் கிடந்த நடுத்தர வர்க்கத்திற்கு இது கச்சிதமாகப் பொருந்திப் போனதாலேயே அவர்கள் இதைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள்.

காமெடியனாய்ச் சீரழிந்து போன அண்ணா ஹசாரேவின் சோக முடிவுக்குப் பின் நடுத்தர மற்றும் மேல் நடுத்தர வர்க்கத்தின் ‘போராட்ட வாழ்வில்’ ஏற்பட்டுள்ள இடைவெளியை நிரப்ப வந்திருக்கிறார் அமீர் கான்.

ஆகவே தான் அண்ணா ஹசாரேவை ஆதரித்தது போலவே அமீர் கானையும் பெரும் கார்ப்பரேட்டுகள் முன்னின்று ஆதரிக்கின்றன. பிளாச்சிமடாவில் நிலத்தடி நீரை உறிஞ்சிக் குடித்து அந்தப் பகுதியையே பாலைவனமாக்கிய கோகோ கோலா வாய்மையே வெல்லும் (சத்யமேவ ஜெயதே) என்று சுதி சேர்க்கிறது, நாட்டையே கொள்ளையடித்த ரிலையன்ஸ் வயலின் வாசிக்கிறது; 2ஜி கொள்ளையர்களெல்லாம் கன்னக் கோல்; கொலைகார பால் தாக்ரே பின்பாட்டு; உலகவங்கி ஏஜெண்ட் மன்மோகன் சிங் தம்புரா. இந்தக் கன்றாவியை ரசித்துப் பார்க்கும் நேயர்களெவருக்கும் கிஞ்சித்தும் வெட்கமில்லை – கச்சேரி மிகச் சிறப்பாகக் களை கட்டுகிறது.

_________________________________________________

புதிய கலாச்சாரம், ஆகஸ்டு – 2012

_______________________________________________________