privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஐரோப்பாஐரோப்பாவெங்கும் வேலை நிறுத்தம் - கிளர்ச்சி!

ஐரோப்பாவெங்கும் வேலை நிறுத்தம் – கிளர்ச்சி!

-

ஸ்பெயின் மாட்ரிட்டில் போராட்டம்
ஸ்பெயின் மாட்ரிட்டில் போராட்டம்

ஸ்பெயினிலும் போர்ச்சுகலிலும் நவம்பர் 14ம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தம் நடக்கிறது. பன்னாட்டு நிதி அமைப்புகளின் கட்டளைக்கு அணிபணிந்து அரசுகள் சுமத்தும் செலவுக் குறைப்பு நடவடிக்கைகளுக்கும் வரி உயர்த்தலுக்கும் எதிரான இந்த வேலை நிறுத்த போராட்டத்தின் போது போக்குவரத்து சேவைகள் அனைத்தும் பாதிக்கப்படும், கல்விக் கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும்.

நாடு தழுவிய ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளுக்குத் திட்டமிட்டுள்ள ஸ்பெயின் நாட்டு யூனியன்கள் தலைநகர் மேட்ரிடில் மாலை 6 மணிக்கு முக்கிய ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளன. ஸ்பெயினின் நீண்ட தூர ரயில் சேவையில் 20 சதவீதம் மட்டுமே இயக்கப்படும். புறநகர் சேவையில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே இயங்கும். மெட்ரோ முழுவதுமாக நிறுத்தப்படும். 600க்கும் அதிகமான விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை பிரிவுகள் மட்டும் இயங்கும்.

போர்ச்சுக் கல்லின் தேசிய விமான சேவை நிறுவனம் டிஏபி 45 சதவீதம் சேவைகளை ரத்து செய்திருக்கிறது.

ஏற்கனவே நவம்பர் 7ம் தேதியை மையமாகக் கொண்டு பொது வேலை நிறுத்தம் நடத்திய கிரீஸ் நாட்டு யூனியன்கள் நவம்பர் 14 அன்று 3 மணி நேர வேலை நிறுத்தத்துக்கும் பேரணிக்கும் அழைப்பு விடுத்துள்ளன.

இத்தாலியின் மிகப்பெரிய தொழிற்சங்கமான சிஜிஐஎல் நாடு முழுவதும் நான்கு மணி நேர வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. ரயில் சேவையும் படகுச் சேவையும் நான்கு மணி நேரம் நிறுத்தப்படும். ஆசிரியர்களும் மாணவர்களும் பேரணிகளில் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.

ஜெர்மனியில் டிஜிபி என்ற தொழிற்சங்க கூட்டமைப்பு பெர்லின், பிராங்க்பர்ட் உட்பட நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்த அழைப்பு விடுத்திருக்கிறது. பிரான்ஸ், ஸ்பெயின், பெல்ஜியம், போலந்து நாடுகளிலும் ஆர்ப்பாட்டங்கள் நடக்கவிருக்கின்றன.

ஐரோப்பிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு நவம்பர் 14ஐ  ‘ஐரோப்பிய கிளர்ச்சி நாள்’ என்று அறிவித்திருக்கிறது.

உலகின் சொர்க்கம், முன்னாள் காலனி முதலாளிகள், கலைகளின் கொண்டாட்டம் என்று மிதந்து கொண்டிருந்த ஐரோப்பிய நாடுகள் இன்று பெரும் பொருளாதாரச் சரிவில் சிக்கி தவிக்கின்றன. உலகை தமக்குள் பங்கு போட்டுக் கொண்டு கொள்ளை அடித்த காலனிய நாடுகளின் முதலாளிகள் நல வாழ்வுத் திட்டங்களை செயல்படுத்தி தமது ஆதிக்க கொள்கைகளுக்கு மக்கள் ஆதரவை பெற்றார்கள்.

உலகமயமாக்கத்தின் ஒரு பகுதியாக ஐரோப்பிய ஒன்றியமும் ஒற்றை நாணயமாக யூரோவும் உருவாக்கப்பட்டன. உலகளாவிய நிதி மூலதனத்தின் பாய்ச்சலால் தேசிய பொருளாதாரங்கள் சீரழிக்கப்பட்டன. அரசுகளின் கடன் சுமை ஏறியது.

ஒரு நாட்டில் ஆரம்பித்த பொருளாதாரச் சுணக்கம் சீட்டுக்கட்டு போன்று அடுத்தடுத்த நாடுகளுக்கு பரவி ஒவ்வொரு நாடும் இன்றா நாளையா என்று தவித்துக்கொண்டிருக்கின்றது. தேசங் கடந்த தொழிற் கழகங்களாலும், நிதி நிறுவனங்களாலும் ஏற்படுத்தப்பட்ட பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான சுமைகளை மக்கள் மீது சுமத்துகின்றன ஆளும் வர்க்கங்கள்.

நிதி உதவி பெறுவதாக தம்மை நாடும் தேசிய அரசுகள் மக்கள் நலத் திட்டங்களை ஒழித்துக் கட்டி அரசின் கடன் சுமையை குறைக்கும் நடவடிக்கைகளை எடுக்குமாறு ஐஎம்எப்பும், ஐரோப்பிய யூனியனும் கட்டாயப்படுத்துகின்றன. அரசு ஊழியர்களுக்கு சம்பளக் குறைப்பு, பணி நலத்திட்டங்கள் ரத்து, பொது மக்களுக்கு மருத்துவ வசதிகள் ஒழிப்பு, பொதுத் துறைக்கான பட்ஜெட் குறைப்பு, ஓய்வுதியம் குறைப்பது என்று மக்களின் வாழ்க்கையை நரகமாக்கும் பொருளாதார நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

கிரீஸில் வேலையில்லாத் திண்டாட்டம் தலை விரித்து ஆடுகிறது. ஏறக்குறைய 38 சதவீதம் தொழிலாளர்கள் வேலையிழந்திருக்கின்றனர்.  பள்ளி ஆசிரியர்களுக்கு மூன்று மாதம் சம்பள பாக்கி வைக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயினில் தொழிலாளர்களில் நான்கில் ஒரு பகுதியினர்  வேலை இழந்திருக்கின்றனர். ‘இந்த அரசியலமைப்பு முதலாளிகளுக்கானது. அதைத் தூக்கி கடாசிவிட்டு மக்களுகான அமைப்பை உருவாக்க வேண்டும். பன்றிக் கிடங்காக இருக்கும் ஸ்பெயின் காங்கிரஸை(நாடாளுமன்றத்தை) கலைக்க வேண்டும்’ என்று மக்கள் நாடாளுமன்ற முற்றுகை போராட்டம் நடத்தினர்.

‘வீட்டுக் கடன் கட்டவில்லை’ என்ற காரணத்துக்காக வீட்டை விட்டு வெளியேற்ற வந்த வங்கி அதிகாரிகளின் முன்பு ஒரு பெண் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். அரசிடமிருந்து பல பில்லியன் டாலர் நிதி உதவி பெற்ற வங்கிகள் மக்களிடமிருந்து கைப்பற்றி பல்லாயிரக்கணக்கான வீடுகளை பூட்டி வைத்திருக்கின்றன. சாதாரண மக்களை தெருவுக்கு துரத்துகின்றன.

போர்ச்சுக்கல் சென்ற ஆண்டு ஐரோப்பிய யூனியன் நிதி உதவியை ஏற்றுக் கொண்டு சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது. ‘பிரதம மந்திரி பெட்ரோ பசோஸ் கோயலோ தலைமையிலான அரசு அறிவித்துள்ள சிக்கன நடவடிக்கைகள் மற்ற நாடுகளுக்கும் மாதிரியாக விளங்குபவை’ என்று ஜெர்மானிய அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் தூக்கிப் பிடித்திருக்கிறார். ஆனால், மக்கள் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டங்களில் இறங்கியுள்ளனர்.

கலைகளின் சொர்க்க பூமியான பிரான்சில் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்தை தொட்டிருக்கிறது. பிரான்ஸ், இங்கிலாந்து நாடுகளில் பள்ளிக் கல்வி கட்டண உயர்வு, மாணவர்களுக்கான சிறப்புச் சலுகைகள் ரத்து போன்ற சிக்கன நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

பிரான்ஸ் நாட்டின் சீர்திருத்த சோஷ்லிஸவாதி அதிபர் கார்ப்பரேட் வருமான வரியை உயர்த்த முயற்சித்த போது, முதலாளிகள் தமது தொழில் முகவரியை வேறு நாடுகளுக்கு மாற்றப் போவதாக மிரட்டி அதை வாபஸ் வாங்க வைத்தனர். அதனால் அங்கேயும் மக்கள் விரோத பொருளாதாரக் கொள்கைகள் எவ்வித எதிர்ப்புமின்றி அதிவேகமாக அமல்படுத்தப்படுகின்றன.

இந்தியாவும் மேற்கு ஐரோப்பிய நாடுகளைப் போல மக்கள் நல அரசுகளை ஏற்படுத்தி ‘சாதுவான’ முதலாளித்துவத்தை நிறுவ வேண்டும் என்று வாதிடும் மன்மோகன் சிங் போன்ற ‘அறிஞர்’களின் பொருளாதாரக் கொள்கைகள் முதலாளித்துவத்தின் கருவறையிலேயே அம்பலப்பட்டு நிற்கின்றன. சீர்திருத்த முறையில்  மக்களுக்கு சில ஆண்டுகளுக்குத்தான் நலவாழ்வுத் திட்டங்களை செயல்படுத்த முடியும். மூலதனத்தின் பேராசைக் கரங்கள் அவற்றையும் கபளீகரம் செய்து பரந்து பட்ட மக்களை தெருவில் நிறுத்தி விடும் என்பது தெளிவாயிகியிருக்கிறது. இந்த கட்டமைப்பை வீழ்த்தி பரந்து பட்ட மக்களுக்கான அரசையும் சமூகத்தையும் கட்டியமைக்க ஐரோப்பிய மக்களுக்கும் உலக உழைக்கும் மக்கள் அனைவருக்கும் மார்க்ஸ் சொன்ன கம்யூனிச ‘பூதம்’தான் ஒரே வழி.

படிக்க: