Thursday, April 15, 2021
முகப்பு உலகம் ஐரோப்பா பிரான்சுக்கு மிட்டல் போட்ட பட்டை நாமம்!

பிரான்சுக்கு மிட்டல் போட்ட பட்டை நாமம்!

-

லஷ்மி மிட்டல்
லஷ்மி மிட்டல்

“பிரான்சை மதிக்காத லஷ்மி மிட்டல் எங்களுக்குத் தேவையில்லை. 2006-ம் ஆண்டு முதல் மிட்டல் சொன்ன பொய்கள் கேவலமானவை. இந்த நாட்டுக்கு கொடுத்த வாக்குறுதிகளை அவர்கள் ஒரு போதும் மதித்ததில்லை” என்கிறார் பிரான்ஸ் நாட்டின் தொழில்துறை புத்துயிர்ப்பு அமைச்சர் அர்னால்ட் மோன்ட்பர்க்.

இந்தியாவில் பிறந்து இங்கிலாந்தில் செட்டில் ஆகியிருக்கும் தொழிலதிபர்  லஷ்மி மிட்டல் போர்ப்ஸ் பணக்காரர்களின் பட்டியலில் 21-ம் இடத்தை பிடித்திருப்பவர். மிட்டல் குழுமம் 2006-ம் ஆண்டில் பிரெஞ்சு ஸ்டீல் நிறுவனமான ஆர்சிலரை வாங்கியது. வாங்கும் போது ‘ஆர்சிலர் நிறுவனத்தின் எந்த தொழிற்சாலையையும் மூட மாட்டோம்’ என்றும் ‘தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்ய மாட்டோம்’ என்றும் பிரெஞ்சு அரசாங்கத்துக்கு வாக்குறுதி அளித்திருந்தது மிட்டல் குழுமம்.

உலகளாவிய பொருளாதார நெருக்கடியை அடுத்து சீனாவில் எ்ஃகு தேவை குறைந்திருப்பதாலும், ஐரோப்பாவில் செலவுகள் அதிகமாயிருப்பதாலும் லஷ்மி மிட்டல் குழுமம் பொருளாதார சிக்கலில் மாட்டியிருக்கிறது. சென்ற காலாண்டில் $709 மில்லியன் இழப்புகளை சந்தித்த மிட்டல் குழுமம் லாபம் ஈட்டித் தராத உலைகளை மூட ஆரம்பித்திருக்கிறது. பிரான்சின் வடமேற்கில் உள்ள ்புளோரங்கேவில் இயங்கும் 2 உருக்கு ஆலைகளை மூடுவதற்கான ஆயத்தங்களை ஆரம்பித்திருக்கிறது.

‘இந்த உருக்கு ஆலைகள் துறைமுகங்களிலிருந்து வெகு தூரத்தில் இருப்பதால் போக்குவரத்துச் செலவு அதிகமாக இருக்கிறது’ என்று 2006-ம் ஆண்டு தெரியாத காரணத்தை கண்டு பிடித்து சொல்கிறது மிட்டல் குழுமம். இந்த உருக்கு ஆலைகள் மூடப்படுவதால் 2500 தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள்.

இந்த இரண்டு உருக்கு ஆலைகளைத் தவிர வடக்கு பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம் போன்ற இடங்களில் ஆர்சிலர் மிட்டல் 11 உலைகளை இயக்குகிறது. பெல்ஜியத்தின் லீஜ் நகரிலும், பிரான்ஸின் டுன்கிர்க் துறைமுக நகரிலும் இயங்கும் உலைகளை மிட்டல் குழுமம் ஏற்கனவே மூடிவிட்டிருக்கிறது.

ஐரோப்பா எங்கும் பரவி வரும் மக்கள் போராட்டங்களைக் கண்டு பீதி அடைந்திருக்கும் பிரெஞ்சு அரசாங்கம் வேலை இழப்பையும், தொழிலாளர் கோபத்தையும் தவிர்ப்பதற்காக தொழிற்சாலையை வேறு நிறுவனத்துக்கு விற்க முயற்சிக்கிறது.

உருக்கு ஆலைகளை மட்டுமின்றி மொத்தத் தொழிற்சாலையையும் வாங்குவதற்கு பன்னாட்டு முதலாளிகளில் சிலர் முன் வந்திருக்கின்றனர். ஆனால் மிட்டல் உருக்கு ஆலைகளை மட்டும்தான் விற்பேன் என்று அடம் பிடிக்கிறார்.

‘தேவைப்பட்டால், நிறுவனத்தை நாட்டுடமையாக்கி வேறு நிறுவனத்துக்கு விற்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என்று தொழில்துறை புத்துயிர்ப்பு அமைச்சர் அர்னால்ட் தெரிவிக்கிறார். ‘பிளாக்மெயில்களையும், மிரட்டல்களையும், வாக்குறுதிகளை கைவிடுவதையும் பிரான்சில் அனுமதிக்க முடியாது’ என்கிறார் அவர். அதிபர் ஹாலண்டேவின் கட்சியான சோசலிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 40 பேர் இந்த நிலைப்பாட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.

தொழில்துறை மீட்பு அமைச்சரின் கருத்துக்களை கேட்டு ‘ஷாக் ஆகி விட்டதாக’ மிட்டல் குடும்பத்தினர் அறிவித்திருக்கின்றனர். உருக்கு ஆலைகளை நாட்டுடமையாக்கினால் 20,000 பேர் பணி புரியும் தனது பிரான்ஸ் நிறுவனங்கள் அனைத்தையும் மூடி விடப் போவதாக மிட்டல் மிரட்டியிருக்கிறார்.

பிரான்சில் ஆர்சிலர் மிட்டல் தொழிலாளிகளின் போராட்டம்
பிரான்சில் ஆர்சிலர் மிட்டல் தொழிலாளிகளின் போராட்டம்

பன்னாட்டு நிறுவனங்களுக்கும் அவற்றின் பாதுகாவலர்களாக உள்ள மேற்கத்திய நாடுகளின் அரசுகளுக்கும் முரண்பாடு ஏற்பட்டிருக்கிறது என்ற உண்மை எதைக் காட்டுகிறது? முதலாளித்துவத்தின் பொருளாதார நெருக்கடி மேலும் மேலும் அழிவுகளைத்தான் கொண்டு வரும் என்பதையும், அதிகரித்து வரும் வேலையின்மை, மக்கள் போராட்டம் போன்ற காரணங்களால் அரசுகளுமே கூட இத்தகைய ‘சோசலிச’ வேடம் கட்டவேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதையும் காட்டுகிறது. எனினும் மிட்டலும், பிரெஞ்சு அரசாங்கமும் இந்த விவகாரத்தில் மக்களை பலியாக்கி ஒரு ‘நல்ல’ முடிவை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம். ஏனெனில் இது பங்காளிகளுக்குள்ளே எற்பட்டிருக்கும் ‘சண்டை’தானே?

படிக்க:

  1. இந்தியாவில் இந்த பிரச்சனை இல்லவே இல்லை. எபொழுது வேண்டுமானாலும் இழுத்து பூட்டலாம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க