privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஐரோப்பாகல்விக்காக 'கற்பைக்' கொடுக்கும் இங்கிலாந்து மாணவிகள்!

கல்விக்காக ‘கற்பைக்’ கொடுக்கும் இங்கிலாந்து மாணவிகள்!

-

ஸ்பான்சர் ஸ்காலர் இணையதளம்!
பொறுக்கிகளுக்கு மாணவிகளை விற்பனை செய்யும் ஸ்பான்சர் ஸ்காலர் இணையதளம்!

”உங்கள் பள்ளிக் கட்டணத்தை கட்டுவதற்கு ஸ்பான்ஸர் வேண்டுமா, எங்களை அணுகுங்கள், எவ்வளவு அதிகமாக செயல்படத் தயாராக இருக்கிறீர்களோ, அவ்வளவு அதிகப் பணம் கல்விக் கட்டணமாக கொடுக்கப்படும்” என்று பள்ளி, கல்லூரி மாணவிகளை வைத்து விபச்சாரம் செய்திருக்கிறது Sponsorascholar.co.uk என்ற இணைய தளம்.

அதிகரித்து வரும் கல்விக் கட்டணங்களை கொடுத்து மேற்படிப்புக்கு போக சிரமப்படும் மாணவியரை குறி வைத்து, படிக்க வேண்டும் என்ற அவர்களின் ஆர்வத்தை இலக்காக வைத்து அவர்களைச் சீரழிக்கும் இந்த மோசடி நடந்தது கனவான்களின் நாடான, முன்னாள் காலனிகளின் ஜமீன்தாரான இங்கிலாந்தில்.

இங்கிலாந்தின் இண்டிபெண்டன்ட் நாளிதழைச் சேர்ந்த பத்திரிகையாளர் மாற்று அடையாளத்துடன் இந்தத் தளத்தை தொடர்பு கொண்ட போது இந்த விவகாரம் அம்பலமாகியிருக்கிறது. 17 முதல் 24 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு பல்கலைக் கழக மேற்படிப்புக்கான கட்டணத் தொகையாக ஆண்டுக்கு £15,000 (சுமார் ரூ 12 லட்சம்) வரை உதவி செய்வதாக இந்த இணைய தளம் விளம்பரப்படுத்தியிருந்தது.

‘ரகசியமான அனுபவங்களைத் தேடும் பணக்கார கனவான்களுடன் ஒரு பருவத்துக்கு நான்கு முறை ஹோட்டல் அறைகளில் நேரம் செலவழித்தால் அதற்கு மாற்றாக அவர்கள் கல்விக் கட்டணத்துக்கான பணத்தை தருவார்கள்’ என்று அறிவித்திருந்தது.

‘படிக்க வேண்டுமா உன் கற்பை விற்பனை செய்’ என்று விளம்பரப்படுத்தும் வணிகச் சூழலை ஏற்படுத்திக் கொடுத்தது பிரிட்டிஷ் அரசுதான்.

பொருளாதார வீழ்ச்சியிலிருந்து விடுபட, டேவிட் காமரூன் தலைமையிலான பிரிட்டிஷ் அரசு கடுமையான சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. நிதி மூலதனம், வங்கிகள் போன்ற துறைகளில் வேலை செய்பவர்களிடம் பணம் குவிந்திருக்க, நாட்டின் பெருவாரியான மக்கள் மீது பொருளாதாரச் சுமைகள் சுமத்தப்பட்டுள்ளன. கடுமையான விலைவாசி உயர்வு, வரி அதிகரிப்பு, பொதுத் துறை சேவைகள் மூடப்படுதல், சம்பளக் குறைப்பு, வேலை இழப்பு  இவற்றுடன் கூடவே மக்களின் வாழ்க்கைக்கு அளிக்கப்பட்டு வந்த பல அடிப்படை உதவிகள் மீது வெட்டு வீழ்ந்திருக்கிறது.

பல்கலைக் கழக மேற்படிப்புகளுக்கான கல்விக் கட்டணங்கள் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளன. அதன் விளைவாக பட்டப் படிப்பை முடித்து வெளியில் வரும் போது பல மாணவர்களின் கடன் சுமை £53,000 (சுமார் ரூ 45 லட்சம்) வரை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதிகக் கல்வி கட்டணம், தனியார் கல்வி நிறுவனங்களின் கொள்ளை, கடன் வாங்கிப் படித்தாலும் வேலை இல்லை என மும்முனைத் தாக்குதலில் சிக்கி மாணவர்கள் தவிக்கிறார்கள்.

இந்தச் சூழலில் பொறுக்கிகளுக்கு சேவை அளிக்கும் Sponsorascholar.co.uk போன்ற தரகர்கள் களத்தில் குதித்திருக்கிறார்கள்.

‘புகைப்படத்துடன் உங்களைப் பற்றிய தகவல்களை கொடுங்கள், எங்கள் வாடிக்கையாளர் விருப்பட்டால், நேர்முகத் தேர்விற்கு அழைக்கிறோம். நீங்கள் எவ்வளவு நெருக்க்மாக நடந்துக்கொள்கிறீர்களோ, எவ்வளவு தாராளமாக இருக்கிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு அதிக பணம் உங்கள் கல்வி கட்டணத்துக்காக எங்கள் வாடிக்கையாளாரால் கொடுக்கப்படும்’ என்று இணையத்தில் கூவி அழைத்திருக்கிறது அந்தத் தளம். இதுவரை 1,400க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு இந்தச் சேவையை ஏற்பாடு செய்ததாக  விளம்பரப்படுத்தியிருந்தது.

‘இந்தச் சேவையை பயன்படுத்த விரும்பும் புரவலர்கள் அனுமதிக் கட்டணமாக £100 செலுத்த வேண்டும், பின்னர் கொடுக்கப்படும் தொகையில் 3 சதவீதத்தை  கமிஷனாக கொடுக்க வேண்டும்’ என்பதுதான் இந்த இணைய தளத்தின் வருமான அடிப்படை.

மாணவி போல நடித்து தொடர்பு கொண்ட இன்டிபென்டன்ட் பத்திரிகையாளரை சந்தித்த ஒரு ஆசாமி, செயல்முறை பரிசீலனைக்காக ‘அருகில் இருக்கும் வீட்டுக்குச் சென்று அவர் அளிக்கத் தயாராக இருப்பதாகச் சொல்லும் பாலியல் நெருக்கத்தை நிரூபிக்க வேண்டும்’ என்று சொல்லியிருக்கிறான்.

இந்தத் தளம் இப்போது முடக்கப்பட்டுள்ளது.

‘வயது வந்த ஆணும் பெண்ணும் ஒப்பந்தம் செய்து கொண்டு சேவைகளை பரிமாறிக் கொள்வதில் அரசு தலையிடக் கூடாது. அப்போதுதான் சந்தை சிறப்பாக செயல்படும்’ என்று இந்தப்பாலியல் சுரண்டலை முதலாளித்துவ தாராளவாதிகள் ஆதரிக்கக் கூடும்.

வளர்ச்சி என்ற வார்த்தையை தாரக மந்திரமாக்கி, சந்தை பரிமாற்றங்களில் அனைத்தையும் விடுவதுதான் வளர்ச்சிக்கு உற்ற வழி என்று மக்களின் வாழ்வாதாரங்களை அழித்துக் கொண்டிருக்கின்றன அமெரிக்கா தலைமையிலான உலகளாவிய பொருளாதார அமைப்புகள். அவர்கள்தான் ‘கல்வி கற்கவே விபச்சாரம் செய்ய வேண்டும்’ என்கிற நிலையையும் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

பேராசான் கார்ல் மார்க்ஸ் காலத்தில் கம்யூனிசம் என்பது எல்லாப் பெண்களையும் பொது மகளீர் ஆக்கிவிடும் என்று பூச்சாண்டி காட்டிய முதலாளித்துவம் தற்போது அதையே அமல்படுத்துகிறது என்றால் இதுதான் கவித்துவ நீதி. இன்று ‘கற்பையும்’ ‘பாலியலையும்’ மாணவிகள் விற்க வேண்டும் என்ற நிலைமை இனி எதையெல்லாம் விற்க வேண்டும் என்று ஆக்குமோ தெரியவில்லை. முதலாளித்துவத்தின் கொடூரங்களை ஆராதிப்போர் இனியாவது திருந்துவார்களா?

படிக்க: