Tuesday, April 13, 2021
முகப்பு உலகம் அமெரிக்கா ஐ.டி துறை ஊழியர்களின் வேலைச்சுமைக்கு காரணம் என்ன?

ஐ.டி துறை ஊழியர்களின் வேலைச்சுமைக்கு காரணம் என்ன?

-

ஐகேட்-கேட் நிறுவனத்தின் “சதித்திட்டம் அம்பலம்” என்ற விளம்பரத் தொடர் அமெரிக்க கார்ப்பரேட்டுகளுக்கு ஐடி சேவைகளை வழங்கும் அதன் போட்டி நிறுவனங்களுக்கு கடுப்பேற்றியிருக்கிறது.

பொதுவாக அமெரிக்க, ஐரோப்பிய கார்ப்பரேட்டுகளுக்கு தகவல் தொழில்நுட்ப சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் time & material எனப்படும் நேரம்& பொருட்செலவு அடிப்படையில் கட்டணம் வசூலிப்பது வழக்கம். தொழிற்சாலைகளுக்கு ஒப்பந்தத் தொழிலாளர்களை அனுப்பும் கான்ட்ராக்டர் போல, வாடிக்கையாளரின் பணியில் ஈடுபடுத்தப்படும் ஊழியர்களின் எண்ணிக்கை, அவர்கள் வேலை செய்த நேரம், கூடுதலாக ஆன செலவுகள் இவற்றை கணக்கிட்டு மாதா மாதம் இன்வாய்ஸ் அனுப்பி பணம் பெற்றுக் கொள்வார்கள்.

இந்த முறையில் வாடிக்கையாளருக்கு பலன் கிடைத்தாலும் கிடைக்கா விட்டாலும் காண்டிராக்டருக்கு பணம் வந்து விடும். வேலையை முடிக்க அதிக நேரம் பிடித்தால் அதிக பணம் கொடுக்க வேண்டியிருக்கும். சீக்கிரம் முடிந்து விட்டால் குறைந்த அளவுதான் வருமானம் வரும். நிறைய ஆட்கள் வேலையில் ஈடுபட்டால் வருமானம் அதிகம்.

அமெரிக்காவில் ஊழியர்களை வைத்து சேவை வழங்குவதற்கு கொடுக்க வேண்டிய சம்பளத்தை விட பல மடங்கு குறைவான சம்பளத்தில் இந்திய ஊழியர்களை வைத்து வேலை வாங்கும் கங்காணிகளாகவே இந்த நிறுவனங்கள் வளர்ந்தன. அதனால், அமெரிக்காவில் வேலை இழப்பு அதிகமாகி இந்தியாவில் வேலை வாய்ப்புகள் அதிகமாயின. அமெரிக்க ஊழியர்கள் இந்திய ஊழியர்களுக்கு பயிற்சி கொடுத்து தயாராக்கிய பிறகு  வேலையை விட்டு நீக்கப்பட்டார்கள்.

இந்தியாவில் ஆயிரக்கணக்கான ஊழியர்களை எடுத்து தயார் நிலையில் வைத்திருந்தனர். புதிய பட்டதாரிகளை எடுப்பதற்கு கல்லூரிகளில் மூன்றாம் ஆண்டு, நான்காம் ஆண்டு எஞ்சினியரிங் படிப்பவர்களை எல்லாம் வேனில் போய் அள்ளிக் கொண்டு வருவது வழக்கமாக இருந்தது. ஊழியர்களை ஈர்க்கவும் தக்க வைக்கவும் ஆண்டு தோறும் சம்பள உயர்வுகள், இலவச உணவு, இலவச பானங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் என்று வசதிகளை சொரிந்தனர்.

பெஞ்ச் எனப்படும் முறையில் வாடிக்கையாளர் பணி இல்லாத நேரத்திலும் ஊழியர்களை சும்மா உட்கார வைத்திருந்து சம்பளம் கொடுத்தனர். வாடிக்கையாளர் வேலை எடுத்த உடன் அதில் அதிக எண்ணிக்கையில் ஆட்களை ஈடுபடுத்தி கட்டணம் வசூலிப்பதற்கு அது தேவையாக இருந்தது.

இதை ஒரு ‘சதித்திட்டம்’ என்று உருவகிக்கும் ஐ-கேட், தமது நிறுவனம் பலன்களின் அடிப்படையில், அதாவது ‘சாப்பிட்டுப் பார்த்து நல்லா இருந்தா காசு கொடுங்க’ என்ற முறையில் சேவைகளை வழங்கத் தயாராக இருப்பதாக விளம்பரப்படுத்துகிறது.

இன்போசிஸ் நிறுவனத்தில் தலைமை விற்பனை மேலாளராக பணியாற்றிய அதிகாரியான பனீஷ் மூர்த்தி 2002ல் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு ஐ-கேட்டை ஆரம்பித்தார். அமெரிக்காவின் கலிபோர்னியாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஐ-கேட் சென்ற ஆண்டு தொடக்கத்தில் $1.2 பில்லியன் விலை கொடுத்து பட்னி கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தை விலைக்கு வாங்கியது. அதன் பிறகு ஆண்டுக்கு $70 பில்லியன் புழங்கும் இந்திய ஐடி சேவைத் துறையில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள புதிய வாடிக்கையாளர்களை தேட வேண்டி வந்திருக்கிறது.

$4 மில்லியன் (சுமார் ரூ 20 கோடி) செலவில் நியூயார்க் டைம்ஸ், பைனான்சியல் டைம்ஸ், வால்ஸ்ட்ரீட் ஜர்னல் போன்ற அமெரிக்க வணிக நாளிதழ்களில் வெளியிட்டுள்ள விளம்பரங்களில், “அமெரிக்க மெகா கார்ப்பரேட்டுகளுக்கு எதிரி பொருளாதாரச் சுணக்கம் இல்லை, நேரம்&பொருட்செலவு அடிப்படையிலான சேவைக் கட்டணம்தான்” என்கிறது ஐ-கேட். தான் மட்டுமே பலன்களின் அடிப்படையில் கட்டணம் வசூலிப்பதாக பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறது.

ஆள் பிடித்து கொடுத்து சம்பாதிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ள இந்திய தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களுக்கு பலன்களின் அடிப்படையில் கட்டணம் பெறுவது ஒரு சவாலாகவே இருக்கிறது. வாடிக்கையாளரின் வணிக நுணுக்கங்களையும், தொழில் நுட்பங்களையும் புரிந்து கொண்டு வேலை செய்யும் திறமை தேவைப்படுகிறது.

இன்றும் இன்போசிஸ்சின் மொத்த வருமானம் $7 பில்லியனில் (சுமார் ரூ 35,000 கோடி) 60 சதவீதம் நேரம்&பொருட்செலவு அடிப்படையில் வசூலிக்கப்படுகிறது. எச்சிஎல்லின் வருமானமான $4.3 பில்லியனில் (சுமார் ரூ 23,000 கோடி) 50 சதவீதம் நேரம்&பொருட்செலவு அடிப்படையில் ஈட்டப்படுகிறது.

ஆனால், உலகளாவிய பொருளாதார நெருக்கடியின் காரணமாக அமெரிக்க, ஐரோப்பிய கார்ப்பரேட்டுகள் வணிக பலன் அடிப்படையிலான சேவை வழங்குமாறு கட்டாயப்படுத்துகின்றன. அதாவது முன்பு லேபர் காண்டிராக்ட் முறைப்படி வேலைக்கு விட்ட கார்ப்பரேட்டுகள் இப்போது மொத்தமாக தொகை பேசி வேலை கொடுக்கின்றன. தேவையான ஆட்கள், பொருட்கள் எல்லாவற்றையும் அந்தத் தொகைக்குள் செலவு செய்து கொள்ள வேண்டும். இதனால் வேலையை குறுகிய நேரத்துக்குள் குறைந்த ஆட்களை வைத்து சரியான தரத்தில் முடிப்பதற்கான பொறுப்பு இந்திய நிறுவனங்களின் மீது விழுந்திருக்கிறது.

எச்.சி.எல் தான் முதல் முறையாக 2000-ம் ஆண்டுகளின் மத்தியிலேயே இத்தகைய முறையை அறிமுகப்படுத்தியதாக சொல்லியிருக்கிறது. விமான உற்பத்தி செய்யும் போயிங் நிறுவனத்துடனான பல மில்லியன் டாலர் ஒப்பந்தம் ரிஸ்க்-ரிவார்ட் அடிப்படையில் போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது எச்.சி.எல்.

இன்போசிஸ் தனது இன்போசிஸ் 3.0 சேவை ‘பலன் அளித்தால் கட்டணம்’ என்ற அடிப்படையில் இயங்குவதாக சொல்கிறது. நேரம்-பொருட்செலவு மாதிரியிலிருந்து, வணிகபலன் மாதிரிக்கு படிப்படியாக மாறிக் கொண்டிருப்பதாக சொல்கிறது.

விப்ரோ விமான நிலையங்களுக்கான சேவைக்கு பயணிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் கட்டணம் பெறுவதாக ஒப்பந்தம் போட்டிருப்பதாக தெரிவிக்கிறது.

இவர்களைப் போலவே பல முன்னணி நிறுவனங்களும் பலன் அடிப்படையிலான சேவை கட்டணத்துக்கு மாறிக் கொண்டிருக்கின்றனர்.

முன்பு எவ்வளவுக்கெவ்வளவு அதிகமான பேரை ஒரு புராஜக்டில் ஈடுபடுத்துகிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு வருமானம் அதிகமாகும், லாபம் அதிகமாகும். இப்போது வரையறுக்கப்பட்ட வருமானத்துக்குள் எவ்வளவுக்கெவ்வளவு குறைந்த ஆட்களை வைத்து முடிக்கிறார்களோ அவ்வளவுக்கு அதிக லாபம் என்று மாறியிருக்கிறது.

இதன் விளைவாக ஐடி துறையில் பணி புரிபவர்கள் மீது பல மடங்கு சுமை ஏற்றப்பட்டு வருகிறது. இலவச போக்குவரத்து வசதி, இலவச உணவு, ஆண்டுதோறும் கணிசமான சம்பள உயர்வு, வேலை இல்லாமல் பெஞ்சில் உட்காருவது உட்பட சலுகைகள் அனைத்தும் பறிக்கப்படுகின்றன. வேலைப் பளு 2 மடங்கு ஆனாலும் சம்பளம் அதே அளவில்தான் இருக்கிறது. ‘இஷ்டமில்லை என்றால் வேறு இடம் பார்த்துக் கொள்’ என்று அல்வா கொடுக்கிறார்கள். புதிதாக வேலைக்கு எடுக்கும் போது பார்த்துப் பார்த்து குறைந்த எண்ணிக்கையிலேயே ஆள் எடுக்கிறார்கள்.

‘மேற்கத்திய நிறுவனங்களுக்கு ஐடி துறை சேவைகள் அளிப்பது இந்திய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அள்ளிக் கொடுத்து, இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் செலுத்தும்’ என்ற கனவு கானல் நீராகிக் கொண்டிருக்கிறது. வேலை கொடுத்த அமெரிக்க/ஐரோப்பிய கார்ப்பரேட்டுகளுக்கும், ஆள் வைத்து வேலை செய்த இந்திய நிறுவனங்களுக்கும் நோக்கம் எப்போதுமே ஒன்றுதான்.

ஆரம்பத்தில் இந்திய ஊழியர்களின் குறைந்த சம்பளத்தை பயன்படுத்தி அமெரிக்க ஊழியர்களை சுரண்டி லாபம் சம்பாதித்தனர். அப்போது கணிசமான சம்பளம், எளிதான வேலைகள், வேறெங்கும் கிடைக்காத சலுகைகள் என்று இந்திய ஊழியர்களுக்கு தீனி போட்டு வளர்த்தனர். பொருளாதாரச் சூழல் நெருக்கடிக்கு உள்ளானதும், கொழுக்க வைத்த இந்திய ஊழியர்களை வாட்டி சுரண்ட ஆரம்பித்திருக்கின்றனர்.

வேலை வாய்ப்பு, ஊழியர் நலன், நாட்டின் வளர்ச்சி என்பதுதான் கார்ப்பரேட்டுகளின் நோக்கம் என்று இன்னமும் யாரெல்லாம் நம்புகிறீர்கள்?

படிக்க:

  1. This is a very good article. However, I’d like to point a small mistake. iGate was not founded by Phaneeh. It was founded atleast 10 years before he joined them. It started as MASTECH in US and it acquired Scott Systems in India and created MASCOT systems in India. Later on, it became iGate in the US and later Mascot was renamed as iGate Global Solutions in India as well.

  2. //பெஞ்ச் எனப்படும் முறையில் வாடிக்கையாளர் பணி இல்லாத நேரத்திலும் ஊழியர்களை சும்மா உட்கார வைத்திருந்து சம்பளம் கொடுத்தனர். வாடிக்கையாளர் வேலை எடுத்த உடன் அதில் அதிக எண்ணிக்கையில் ஆட்களை ஈடுபடுத்தி கட்டணம் வசூலிப்பதற்கு அது தேவையாக இருந்தது.//

    நான் 2004-2007இல் விப்ரோ BPOவில் வேலை செய்து கொண்டிருந்த போது, இவ்வாறு பெஞ்சில் இருக்கும் ஊழியர்களை பார்த்ததுண்டு. சக ஊழியர்கள் சொல்வதை கேட்டு நான் நம்பியதாவது, “client இல்லாத போது கூட, வேலைக்கு எடுத்துட்டோம், திரும்ப வேலை வர்ற வரைக்கும், ஊழியர்களை பார்த்துக் கொள்ள வேண்டியது எங்க பொறுப்பு”னு எவ்வளவு கண்ணியமா செயல்படறாங்க; முதலாளிகள் எப்படி இருக்கணும் என்பதற்கு விப்ரோ ஒரு எடுத்துக்காட்டு”!!!
    இப்பதான உண்மை விளங்குது. பதிவுக்கு நன்றி வினவு!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க