Tuesday, September 28, 2021
முகப்பு கட்சிகள் அ.தி.மு.க சிறுமி ஸ்ருதி படுகொலை: விரிவான ஆய்வறிக்கை!

சிறுமி ஸ்ருதி படுகொலை: விரிவான ஆய்வறிக்கை!

-

சிறுமி ஸ்ருதியின் படுகொலை!

சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிப் பேருந்தில் இருந்த ஓட்டையின் பின்னணி என்ன?

உண்மை அறியும் குழுவின் அறிக்கையும், பரிந்துரைகளும்!

25.07.2012 அன்று மாலை சென்னையை அடுத்த தாம்பரம் பகுதியில் உள்ள சேலையூர் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்த ஸ்ருதி, பள்ளிப் பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாள். முடிச்சூரில் அச்சிறுமி இறங்குவதற்கு முந்தைய நிறுத்தத்தில், அமர்ந்திருந்த இருக்கையின் முன்பகுதில் கால் வைக்கும் இடத்தில் இருந்த ஓட்டையின் காரணமாக சாலையில் விழுந்தாள்.

அவள் பயணித்த பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி, உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்தாள். இதை நேரில் கண்டும், பேருந்திலுள்ள குழந்தைகளின் கூக்குரலைக் கேட்டும் பேருந்தை நிறுத்திய மக்கள் அதன் ஓட்டுநர் மற்றும் நடத்தனரைத் தாக்கினர். ஆத்திரம் கொண்ட மக்கள் பேருந்தைத் தீ வைத்துக் கொளுத்தினர்.

சிறுமி ஸ்ருதி
சிறுமி ஸ்ருதி

சிறுமி ஸ்ருதியின் மரணம் தமிழகம் முழுவதும் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தைக் கேள்விப்பட்ட பொதுமக்கள் பள்ளியை மூடவேண்டுமென்று ஆங்காங்கே போராட்டம், வட்டார போக்குவரத்து அலுவலக முற்றுகை,  தாம்பரம் வியாபாரிகள் சங்கத்தின் கடையடைப்பு, பெருந்திரளான  மக்கள் கூடி பேரணியாகச் சென்று சிறுமி ஸ்ருதிக்கு இறுதி மரியாதை செலுத்தியது என மக்களின் உணர்வை இச்சம்பவம் தட்டி எழுப்பியுள்ளது. பணத்தை வைத்து மட்டுமல்ல, உயிரையும் பணயம் வைத்து தான் குழந்தைகள் கல்வி பெற முடியும் என்பதற்கு தக்க சான்று தான் ஸ்ருதியின் மரணம்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பத்திரிகைகளில் வெளியான செய்திகளை அடிப்படையாகக் கொண்டு சென்னை உயர்நீதி மன்ற தலைமை  நீதிபதி தாமாகவே முன்வந்து, இதனை வழக்காக முன்னெடுத்து, விசாரணையைத் தொடங்கி, உரிய அதிகாரிகள் அனைவரையும் ஆஜராக உத்திரவிட்டதோடு, இச்சிறுமியின் மரணத்தை கொலைவழக்காக ஏன் விசாரிக்கக் கூடாது என்றும், இதுபோல விபத்துகள் நடக்காமல் இருக்க விதிமுறைகளை வகுக்கவும் அரசுக்கு  உத்திரவிட்டுள்ளார்.

சிறுமியின் குடும்பத்துக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ. 1 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். மேலும் பழுதடைந்த பேருந்தை இதற்கு ஒதுக்கியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு காவல் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளுக்கும் முதல்வர் உத்திரவிட்டுள்ளார்.

அரசின் அறிவிப்புகள், நீதிமன்ற நடவடிக்கை எல்லாம் மக்களை அமைதிப்படுத்துனாலும், சேலையூர்  சீயோன் மெட்ரிக் பள்ளி பேருந்தில் விழுந்த ஒட்டை தனியார் பள்ளிக் கல்வியில், குழந்தைகளின் பாதுகாப்பில் விழுந்த ஓட்டையாகக் கருதி, அந்த ஓட்டையின் பின்னணியையும், அதற்கான தீர்வையும் ஆய்வு செய்ய மனித உரிமைப் பாதுகாப்பு மையம் சார்பில் வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் அடங்கிய உண்மை அறியும் குழு ஒன்று அமைக்கப்பட்டது.

உண்மை அறியும் குழுவின் உறுப்பினர்கள்:

 1. சு. ஜிம்ராஜ் மில்ட்டன், வழக்குரைஞர்,செயலாளர்,,  சென்னைக்  கிளை, ம.உ.பா. மையம்.
 2. பேரா. பா . சிவக்குமார், முன்னாள் முதல்வர், அரசு கலைக்  கல்லுரி, குடியாத்தம்
 3. பேரா. மு. திருமாவளவன், அம்பேத்கர் அரசு கலைக் கல்லுரி
 4. வே. மதிமாறன், எழுத்தாளர்
 5. சோ. முத்துக்குமரன், வழக்குரைஞர்,ம.உ.பா. மையம், சென்னை கிளை
 6. சு. செந்தமிழ்ச் செல்வன், வழக்குரைஞர், சென்னை உயர்நீதி மன்றம்
 7. ஜெ. செல்வராசு, வழக்குரைஞர், ம.உ.பா. மையம், சென்னைக் கிளை

இக்குழுவினர் சிறுமி ஸ்ருதி மரணம் குறித்து, 01.08.2012 – 03.08.2012  ஆகிய 3 நாட்கள் நேரில் சென்று விசாரித்த விவரங்களையும், அதனை ஒட்டிய சில கேள்விகளும், பரிந்துரைகளும் அறிக்கையாகத் தரப்படுகிறது.

முடிச்சூர் வரதராஜபுரம்

இந்த சம்பவம் குறித்து கடந்த 01.08.2012 அன்று முடிச்சூர் வரதராஜபுரம்பரத்வாஜ் நகரில் உள்ள சிறுமி ஸ்ருதியின் வீட்டிற்குச் சென்றோம். ஸ்ருதியின் அம்மாபிரியாவிடம் பேசிய போது:

“எனது மகள் எல்.கே.ஜி முதல் சேலையூர்  சீயோன் மெட்ரிக் பள்ளியில்  படித்து வந்தாள். அவளின் பிறந்த தினம் 17.03.2012. எங்களின் முதல் குழந்தை பிரணாப் தற்போது வேறொரு தனியார் பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வருகிறான்.

எங்க பாப்பா இறந்த பிறகு என் வீட்டிற்கு வந்த மாணவர்கள் ஏற்கெனவே அப்பேருந்தில் ஓட்டை இருந்ததாகவும், பல முறை மாணவர்களின் ஸ்கூல் பேக், லஞ்ச் பாக்ஸ்,  செருப்பு போன்றவை ஓட்டையின் வழியாக சாலையில் விழுந்ததாகவும் கூறினார்கள். பேருந்தில் ஓட்டையிருந்தது பள்ளி நிர்வாகத்தின் கவனக் குறைவுதான். இனி இதுபோல் எந்தக் குழந்தைக்கும் நடக்கக் கூடாது.’’

‘’இந்த சம்பவம் நடந்து இவ்வளவு நாளான பிறகும் கூட  பள்ளியின் ஆசிரியர்கள், நிர்வாகிகள் உள்பட யாரும் வரவில்லை. தொலைபேசியில் கூட வருத்தமோ, ஆறுதலோ சொல்லவில்லை. 31.07.2012 அன்று மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் ரூபாய் ஒரு லட்சத்திற்கான காசோலை கொடுத்தார்.

சீயோன் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டம் ஏதோ ஒப்புக்கு  நடைபெறும். அக்கூட்டத்தில் கலந்து கொள்ள மட்டுமே அனுமதி உண்டு.  எந்தவிதமான  ஆலோசனையோ, கருத்துக்களோ சொல்ல பெற்றோர்களுக்கு அனுமதி இல்லை.  என் மகளுக்கு வருடத்திற்கு புத்தகத்திற்கான கட்டணம் ரூ. 2,000/-;  கல்விக்கட்டணம் ரூ. 10,000/-; பேருந்துக் கட்டணம் ரூ. 8,000/-‘’ என்றார்.

இந்த சம்பவம் குறித்து ஸ்ருதியின் அண்டை வீட்டில் வசிக்கும் திருமதி லீலாவதியிடம் கேட்ட போது,

‘’இந்தச் சம்பவம் குறித்து பத்திரிகை, தொலைக்காட்சியில் பேட்டி கொடுக்கும்போது சுருட்டை முடிகொண்ட ஒருவர் சீயோன் பள்ளியின் பெயரைக் குறிப்பிடாமல் பேட்டி கொடு என்று என்னை மிரட்டினார். மேலும் அந்த நபர் பொதுஜனம் போல் எங்களுடன் இருந்து கொண்டே  பள்ளிக்கு ஆதரவாக சில பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்தார். மாணவியைப் பற்றிய சில தவறான தகவல்களையும் கூறினார். மறுநாள் டீ ஷர்ட் போட்டுக்கொண்டு வந்த அவர், இரண்டு லட்சம் பணம் தருகிறோம். எந்தப் பிரச்சினையும் செய்ய வேண்டாம். மேற்கொண்டு எந்தப் பேட்டியோ, அறிக்கையோ கொடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் நாங்கள் மறுத்து விட்டோம்.’’

‘’கடந்த ஞாயிறன்று  சர்ச்சுக்கு வந்த பெற்றோர்களையும், நிர்வாகத்திற்கு நெருக்கமாக உள்ளவர்களையும் இணைத்து பெயரளவில் ஆர்ப்பாட்டம், பள்ளி முற்றுகை போன்ற நாடகங்களை  அரங்கேற்றி, மக்களை திசைதிரும்ப வைத்து மீண்டும் உடனடியாக பள்ளியைத் திறந்து  விட்டனர். கல்வி என்ற பெயரில் கோடிக் கோடியாய் கொள்ளையடிக்கும் தனியார் பள்ளிகளை இழுத்து மூட வேண்டும்.  கொஞ்சமும் குழந்தைகள் மீது அக்கறை இல்லாத சீயோன் பள்ளியை உடனடியாக மூட வேண்டும். அப்போதுதான் மற்ற தனியார் பள்ளிகள் பயந்து பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.

மூன்று பேருந்துகளில் வரக்கூடிய மாணவர்களை ஒன்று அல்லது இரண்டு பேருந்துகளில் கொண்டு வருவார்கள்.  மேலும் எங்கள் பகுதியில் சாலைகள் நன்றாக இருந்தாலும் கடந்த ஆறு வருடமாக எந்தப் பள்ளிப் பேருந்தும் வருவதில்லை. ஆனால் பேருந்துக் கட்டணம் மாத்திரம் ரூ. 8000 வாங்கி இருக்கிறார்கள்.

எங்கள் பகுதியிலுள்ள நடேசன் பள்ளியில் மொத்தம் இருபது கழிப்பறைகள் இருந்தாலும் பதினைந்தை பூட்டி வைத்து விடுவார்கள். எட்டாயிரம் மாணவர்களுக்கு  வெறும் ஐந்து கழிப்பறைகள்  மட்டுமே உள்ளன. மற்ற  பதினைந்தை  ஏதேனும் பள்ளி ஆண்டு விழா, பள்ளியை ஆய்வு செய்ய அதிகாரிகள் வரும்போது மட்டுமே திறப்பார்கள்.  இதே போல் சீயோன் பள்ளியிலும் போதுமான கழிப்பறை வசதி இல்லை. இதனால் மாணவர்கள் மன உளைச்சலுக்காளாவதுடன் பல்வேறு விதமான தொற்று நோய்கள் மற்றும் தோல் நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள்.  மேலும் மாணவிகள் பயன்படுத்திய நாப்கினைப் போடுவதற்கு கழிப்பறைகளில் குப்பைத்தொட்டி கூட இருப்பதில்லை. கழிப்பறையில் சுகாதாரக் கேடு மிகுதியாக இருக்கிறது’’ என்றார்

இதைப் போன்ற  பள்ளிகளில் கல்வித்துறை அதிகாரிகள் சோதனை செய்வதில்லை. பள்ளி நிர்வாகம் செய்யும் தவறுகளைக் கண்டு கொள்வதும் இல்லை. ஏனெனில் அதிகாரிகளின் குழந்தைகளும் இப்பள்ளியில் தான் படிக்கிறார்கள். அவர்களுக்கு சிறப்பான பராமரிப்பும், கவனிப்பும் இருப்பதால் பள்ளியின் ஒட்டுமொத்த தவறுகளையும் அதிகாரிகள் கவனிக்காமல் விட்டு விடுகிறார்கள்.

இங்கே இறந்த குழந்தைக்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றது. அதற்கு அப்பள்ளி ஆசிரியர்கள் யாரும் வரவில்லை. இதுகுறித்து விசாரித்த போது யாரேனும் ஸ்ருதியின் வீட்டிற்குச் சென்றால் வேலையை விட்டு நீக்கி விடுவோம் என்று பள்ளி நிர்வாகம் மிரட்டியதாகச் சொன்னார்கள்.

மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் இல்லையென்றால், அவர்களை வகுப்பறையில் அவமானப்படுத்துவது, திட்டுவது, பல்வேறு விதமான நெருக்கடிகளைத் தருவது  என்பது போல பள்ளி  நிர்வாகத்தின் நடவடிக்கைகள் இருக்கும் என்று திருமதி லீலாவதி கூறினார்.

முடிச்சூர்  பிரதானசாலை

தீயிட்டு எரியூட்டப்பட்டிருந்த அப்பேருந்தின் பதிவு எண் TN 23 S 9952 ஆகும். அதில் கணுவாய், டிவிஎஸ் நகர், வேலாண்டிபாளையம், சாய்பாபா காலனி, பூ மார்க்கெட், மரக்கடை, டவுன்ஹால், ரயில் நிலையம் என்று கோவை நகரத்தில் உள்ள இடங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஏற்கெனவே தனியாருக்கு சொந்தமான டவுன் பஸ்ஸாக கோவை மாநகரில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள முடிந்தது.

மக்களின் பயன்பாட்டுக்கு லாயக்கில்லை என்ற போதிலும் சிறுசிறு மாற்றங்களைச் செய்து, வண்ணம் பூசி விட்டு அந்தப் பேருந்தைப் பள்ளியின் வாகனமாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

முடிச்சூர் ஊராட்சி மன்றஅலுவலகம்

இந்த சம்பவம் குறித்து முடிச்சூர் ஊராட்சி மன்றத்  தலைவர் தாமோதரன் அவர்களிடம்  கேட்ட போது:

‘’நடந்ததைக் கேள்விப்பட்டு  நானும், பஞ்சாயத்து செயலாளர்வாசுதேவனும் உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்றோம். பேருந்தைப் பார்வையிட்டபோது மாணவி ஸ்ருதி விழுந்த ஓட்டை  ஒரு சதுர அடிக்கும் பெரியதாக இருந்தது. பிறகு உடனடியாக பத்திரிகைகளுக்குத் தகவல் தந்து அந்த ஓட்டையினை ஃபோட்டோ எடுத்தோம்.

இதற்கிடையே இந்தச்  சம்பவம் அருகில் இருந்தோருக்கு தெரிய வரவே, அங்கே  மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. சிறிது நேரத்தில் பேருந்து தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. யார் தீ வைத்தார்கள்? என்று தெரியாது. ஆனால்  நிர்வாகம் பஸ்ஸிலிருந்த ஓட்டை சாட்சியாகக் கூடாது என்பதற்காக பேருந்தைக் கொளுத்தி இருக்கலாம் என ஊரில் மக்கள் பேசிக்கொள்கிறார்கள்.  இந்த சம்பவம் போல் இனிமேல் எங்கும் நடக்கக் கூடாது. மிகவும் கொடுமையான விஷயமாகும்.’’ என்றார்.

முடிச்சூர் பஞ்சாயத்து செயலாளர் வாசுதேவன்:

‘’குழந்தையின் இறந்த உடலைப் பார்த்த போது, மிகவும் கோரமாக இருந்தது.  போஸ்ட் மார்டம் செய்த மருத்துவர்   கண்ணீர்  விட்டுக்கொண்டே  செய்ததாகக் கூறினார். சம்பவ இடத்தில் அந்த டிரைவரைப் பிடித்து மக்கள் அடிக்கும்போது ”அய்யா! பலமுறை அந்த ஒட்டையைச் சரி செய்யச் சொல்லியும் நிர்வாகம் கேக்கலிங்கஎன அழுதான். அவன் என்ன செய்வான். நிர்வாகம் தான் இந்த விபத்துக்கு பொறுப்பு.’’

‘’இந்த சம்பவம் போல் இனி நடக்காமல் இருக்க அனைத்துத் தனியார் பள்ளிகளும் பழைய பேருந்துகளை உடனடியாக மாற்ற வேண்டும். அரசும் இதில் தீவிரக் கவனம் செலுத்த வேண்டும். இந்த வழக்கை உயர்நீதி மன்றம் தானாக முன்வந்து விசாரிக்கவில்லையேன்றால் இவ்வளவு பெரிய முக்கியத்துவம் இதற்கு கொடுக்கப்பட்டிருக்காது’’ என்று கூறினார்.

தாம்பரம்

தாம்பரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலரை சந்திக்கச் சென்றோம். அவரின் நேர்முக உதவியாளர் கூறியதாவது  “அவர் பணியின் நிமித்தமாக வெளியில் இருக்கிறார். சிறிது நேரம் காத்திருங்கள்” என்று கூறினார். நாங்களும் இரண்டு மணி நேரம் காத்து இருந்தோம்.  அவர் திரும்பி வரவில்லை.

வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் தொடர்பு எண்ணைக் கேட்டு வாங்கி, தொடர்பு கொண்டபோது, தன்னை இப்போது பார்க்க முடியாது, நாளை தொலைபேசியில் உறுதிசெய்து விட்டு நேரில் வாருங்கள் என்றார். அடுத்த நாள் (2.8.12) தொடர்புகொண்ட போது 3.8.12 அன்று காலை தொலைபேசியில் உறுதிப்படுத்தி விட்டு வருமாறு கூறினார். மறுநாள் காலையில் அழைத்தபோது மாலை 5 மணிக்கு வருமாறு கூறியவர் பின்னர் பல முறை அழைத்தும் தொடர்பில் வரவேயில்லை. அலட்சியமும், மக்களுக்கு பதில் சொல்ல வேண்டுமே என்ற பொறுப்புணர்ச்சியும் அரசு அதிகாரிகளிடம் இல்லாதது தெளிவாகப் புலப்பட்டது.

சேலையூர் சீயோன்  மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி

பள்ளியின் தற்போதைய முதல்வர் டாக்டர்.சாந்தி அவர்களைச் சந்தித்தோம். “இந்த சம்பவம் குறித்து எந்த விதமான கருத்து சொல்லவும் எனக்கு அதிகாரம் இல்லை. என்னால் எந்தப் பதிலும் சொல்ல முடியாது” என்றார்.  பள்ளியின் நிர்வாகத் தரப்பினரைச் சந்திக்க வேண்டுமென நாம் கோரியதற்கு, ‘இப்போது யாரையும் பார்க்க முடியாது’ என மறுத்து விட்டார். அதன்பிறகு பள்ளியின் முன்பகுதியில் நாங்கள் நின்று கொண்டிருந்தபோது பெற்றோர்கள் என்ற பெயரில் நிர்வாகத்திற்கு ஆதரவாகச் சிலரை அவர்களே அனுப்பி எங்களுடன் பேச வைத்தார்கள்.

அப்போது பெற்றோர் – ஆசிரியர் கழகத்தைச் சேர்ந்தவரென்று கூறிக்கொண்ட டாக்டர்.செந்தில்குமார்  கூறியதாவது,

“பள்ளியின் தாளாளருக்கும் இந்தச் சம்பவத்திற்கும் கொஞ்சமும் சம்பந்தம் இல்லை. ஏனெனில்  சம்பவம் நடந்த பேருந்தின் உரிமையாளர் யோகேஷ். மேலும் வாகன ஆய்வாளர் சான்றிதழ் அளிக்கும்போது பேருந்தை   ஒழுங்காகப் பார்த்து பரிசோதனை செய்திருந்தால் இந்த விபத்தைத் தடுத்திருக்கலாம். ஆகவே இச்சம்பவத்திற்கு முழுப்பொறுப்பும் இவர்கள் மட்டும் தான்.  ஆனால் சம்பந்தமே இல்லாமல் பள்ளியின் தாளாளரை கைது செய்தது மிகப்பெரிய அநீதி.’’

‘’பல பள்ளிகளில் இந்த விபத்து போல் ஏராளமான  குழந்தைகள் அவ்வப்போது இறந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் எந்தப் பள்ளியின் தாளாளரும் கைது செய்யப்படவில்லை. இங்கே அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சிலரும், பள்ளியின் வளர்ச்சியைப் பிடிக்காத சிலரும் ஒன்றிணைந்து சதித்திட்டம் தீட்டி எங்கள் பள்ளியின் தாளாளரைக்  கைது செய்ய வைத்திருத்திருக்கிறார்கள். ஏதோஉயிரிழப்புஏற்பட்டுவிட்டது. அதற்காகநஷ்டஈடுதரவும் தயாராகஇருக்கிறோம். அதைப் பெற்றுக்கொண்டுஅமைதியாகச்செல்லாமல்,வீணாகப்பள்ளியின்நல்லபெயரைக் கெடுத்துக் கொண்டுஇருக்கிறார்கள்.  பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் வேண்டுமென்றே எங்களது பேட்டியைத் திருத்தியும், எங்களுக்கு எதிராகவும்   தவறாகச் செய்திகளைத் தொடர்ந்து வெளியிடுகிறார்கள்“

பெற்றோர்கள் என அறிமுகப்படுத்திக் கொண்ட வெள்ளையம்மாள், தேவி ஆகியோர்,

“சீயோன் பள்ளியின் தாளாளர் குழந்தைகள் மீது மிகவும் பிரியமாகவும், அன்பாகவும் இருப்பார். குழந்தைகளுக்கு சோறூட்டி விடுவதிலிருந்து நலம் விசாரிப்பது வரை அனைத்தையும் செய்வார்” என்றும் கூறினார்கள்.

பெற்றோர்கள் என்று சொல்லிக் கொண்டவர்களிடமிருந்து குழந்தை மரணத்திற்கு இரங்கலாக ஒரு வார்த்தை கூட வரவில்லை. மாறாக அவர்கள் பள்ளி நிர்வாகத்தினரைப் போன்றே பேசினார்கள்.

அவர்களிடம், “உங்களை போன்ற ஒரு பெற்றோரின் குழந்தை தான் பாதுகாப்பற்ற பள்ளி வண்டியில் சிக்கி இறந்திருக்கிறது. பெற்றோர் – ஆசிரியர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற முறையில் அதற்கு நீங்கள் என்ன பதில் நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள்?” என்று கேட்டோம். அதற்கும் “எங்கள் பள்ளியின் தாளாளர் நல்லவர். அவர்தான் செய்ய வேண்டும். அவரைத்தான் ஜெயிலில் வைத்து விட்டீர்களே” என்ற பதில்தான் கிடைத்தது.

பள்ளியின் மாணவிகளான மதர்தெரசா மற்றும் ஏழாம் வகுப்பு மாணவி ஜெயஸ்ரீ   ஆகியோர் கூறியதாவது,

“எங்கள் பள்ளியின் நிர்வாகம் நன்றாக நடப்பதால் தான் பொதுத்தேர்வுகளில் மாநில அளவில் மாணவர்கள் தேர்ச்சி பெறுகிறார்கள். மேலும் விளையாட்டிலும் எங்கள் பள்ளி மாணவர்கள் பலரும் பல்வேறு தங்கப் பதக்கங்களை வென்று இருக்கிறார்கள். எங்கள் சார் (தாளாளர் – விஜயன்)  தேசிய நல்லாசிரியர் விருது வாங்கியவர். அவரைப் போய்  கைது செய்து சிறையில் அடைத்து விட்டார்கள். கல்வி நன்றாக இருப்பதால் தான் பலரும் எங்கள் பள்ளியில் போட்டி போட்டுக்கொண்டு தங்களது பிள்ளைகளைச் சேர்க்கிறார்கள். எங்கள் சார் திறமையான நிர்வாகி, நல்லவரும் கூட.  வண்டியில் இருக்கிற கிளீனர், டிரைவர் இவர்கள் தான் வண்டியில் இருந்த ஓட்டையைச் சரி செய்திருக்க வேண்டும்” என்று கூறினார்கள். அந்த மாணவிகளிடம் இரு கேள்விகளை முன் வைத்தோம். ‘’ஒன்று, எட்டாயிரம் பேர்  படிக்கும் பள்ளியில்ல் ஒரு மாணவர் அல்லது மாணவி  கல்விக் கட்டணம் செலுத்தா விட்டாலும் பள்ளித் தாளாளரின் கவனத்திற்கு அது சென்று சேரும் போது, பேருந்தில் ஓட்டை இருந்த செய்தி மட்டும் ஏன் சென்று சேரவில்லை? இரண்டு, உங்களுடைய பள்ளியில் படிக்கும் ஒரு குழந்தையின் மரணத்திற்கு  பள்ளியின் ஆசிரியர்களோ, நிர்வாகத்தினரோ நேரில் சென்று ஏன் ஆறுதல் கூட சொல்லவில்லை?’’ இந்த இரண்டு கேள்விகளுக்கும் அம்மாணவிகளிடமிருந்து மௌனம் தான் விடையாகக் கிடைத்தது.

பெயர் குறிப்பிடத் தயங்கும் பெற்றோர்

தன் பெயரைக் குறிப்பிட வேண்டாம் என்ற நிபந்தனையுடன் பேச ஆரம்பித்த பெற்றோர்கள் தரப்பிலுள்ள ஒருவரிடம் பேசியபோது,

‘’இது போன்ற விபத்துக்கு பள்ளியின் இலாப வெறியும், வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் லஞ்ச, ஊழலும் தான் காரணம். எனது மூன்று குழந்தைகள் சீயோன் மெட்ரிக் பள்ளியில் தான் படிக்கிறார்கள். பள்ளியில் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளிலும் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட 50% அதிகமாகவே பணம் வசூலிக்கின்றனர். முன்பெல்லாம் 3 தவணைகளாக கல்விக் கட்டணம் செலுத்த அனுமதி அளித்தனர். தற்போது ஒரே தவணையில் கட்டியாக வேண்டும். அதிகக் கட்டண வசூலை இயக்குனரோ, மெட்ரிக் பள்ளி ஆய்வாளரோ கண்டு கொள்வதே இல்லை. பள்ளி நிர்வாகம் எந்த கமிட்டியின் உத்தரவையோ, நீதிமன்றத் தீர்ப்பையோ மதித்து நடப்பதில்லை. அரசு தனது பள்ளிகளை ஒழுங்காக நடத்தினால் நாம் எதற்கு இப்படி இங்கே வந்து கஷ்டப்பட வேண்டும்?!’’ என ஆதங்கப்பட்டார்.

பெயர் சொல்ல விரும்பாத இன்னொருவர்,

‘’பி.எஸ்.சி., பி.எட் படித்த ஆசிரியருக்கு ரூ. 6000-மும், எம்.எஸ்.சி., பி.எட் படித்தவருக்கு ரூ 12,000-மும் தான் சம்பளம் கொடுக்கிறார்கள். ஆனால் 1 – 3 வகுப்புகளுக்கு நோட்டுப் புத்தகம் தவிர கட்டணமாக மட்டும் ரூ. 8000-மும், 4,5 வகுப்புகளுக்கு ரூ. 10,000–மும், 6 – 8 வகுப்புகளுக்கு ரூ. 15,000–மும், 9,10 வகுப்புகளுக்கு ரூ. 20,000–மும், 11,12 வகுப்புகளுக்கு ரூ. 25,000–மும் வசூலிக்கிறார்கள். இது அரசு கடைசியாக நிர்ணயித்ததை விட அதிகம் என்றாலும் தட்டி்க் கேட்க ஒரு பெற்றொர் கூட முன் வர மட்டார்கள்.’’

பள்ளியின் முன்னாள்  ஊழியர்கள் சிலர்

ஜோஷ்வா:-

நான் சீயோன் பள்ளி ஆரம்பித்தது முதல் (12.07.1996)  சுமார் 12 ஆண்டுகள் தாளாளருக்கு (விஜயன்) டிரைவராகப் பணியாற்றினேன். அப்போது பள்ளியின் நிர்வாகம் நன்றாக இருந்தது; நன்றாக குழந்தைகளை கவனித்துக் கொண்டிருந்தார்; அவர் கடின உழைப்பாளி; நல்ல திறமைசாலி; ஒவ்வொரு மாணவரின் வீட்டிற்கும் நேரில் சென்று, எப்படி படிக்கிறார் என்று  விசாரிப்பார்.

ஆனால் தற்போது பள்ளியின் நிர்வாகம் மிகவும் மோசமாக உள்ளது. ஏனெனில் கடந்த சில ஆண்டுகளாக நிர்வாகம் தாளாளரின் தம்பிகள், மச்சான் ஆகியோரிடம் சென்றபோது தரம் குறைந்து விட்டது. இலாபம் மட்டுமே முக்கிய நோக்கமாக மாறி விட்டது.

அதோடு  தாளாளரும் தற்போது மிகவும்  மாறி விட்டார். பள்ளியில் நடக்கும் ஏதேனும் குறைகளைச் சுட்டிக்காட்டினால், ‘எனக்கு கமிஷனர், அரசியல் தலைவர்கள்  என பல முக்கிய வி.ஐ.பி.க்கள்  தெரியும்’  என்று சொல்லி மிரட்ட துவங்கி விட்டார். ஆசிரியர்கள் மற்றும்  பணியாளர்கள்,  நிர்வாகம் செய்யும் தவறுகளைக்  கேட்டால் உடனடியாக எந்த விசாரணையும் இல்லாமல் கேட்டவர்களை டிஸ்மிஸ் செய்து விடுவார். அத்துடன் பல்வேறு விதமாக  மிரட்டுவார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்  பழைய பேருந்திற்கு செலவு செய்ய முடியவில்லை, ஒப்பந்தத்தில் பேருந்தை விடப் போகிறேன் என நீதிமன்றத்தில் பொய்யைக் கூறி விட்டு, 30 டிரைவர்களை  வேலையை விட்டு டிஸ்மிஸ் செய்து விட்டார். ஆனால் ஒப்பந்தத்தை தன் தம்பியிடமே ஒப்படைத்து, எங்களை மட்டுமில்லாது சட்டத்தையும் ஏமாற்றத் துவங்கினார். தற்போது விபத்து நடந்த பேருந்து கூட அவருடைய தந்தை பெயரில் தான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் திரு.விஜயன் அவர்கள் விபத்து நடந்தவுடன் தொலைக்காட்சியில், ‘எங்களுடைய  பள்ளி நிர்வாகத்திற்கும், பேருந்து ஒப்பந்தக்காரருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை’ என்றார். ஆனால் உண்மையில் அந்தப் பேருந்து பள்ளி நிர்வாகத்தின் பேரில்தான் உள்ளது. மேலும் அந்த ஒப்பந்தக்காரர் அவருடைய சொந்த சகோதரர் தான்.  இப்பள்ளியில் இருக்கும் பெரும்பாலான பேருந்துகள் பழைய மற்றும் தரமில்லாதவையே.  மேலும் குறைந்த சம்பளத்திற்காக ஹெவி லைசென்ஸ் இல்லாதவர்களும், குறைந்தபட்சம் பத்து வருடங்கள் டிரைவிங்கில் அனுபவம் இல்லாதவர்களும் ஓட்டுநர் பணியில் இங்கு பணி புரிகிறார்கள்.

சிவப்பிரகாசம் :

எனது மகன் ஹரிஷ்,  சீயோன் பள்ளியில்தான் படிக்கிறான். அவன் இரண்டாம் வகுப்பு படித்தபோது என் மீது உள்ள விரோதம் காரணமாக  ரிசல்டை  நிறுத்தி   வைத்து  விட்டார்கள். பிறகு நீதிமன்றம் சென்று, வழக்காடி ரிசல்டைப் பெற்றேன் .  சீயோன் பள்ளியில் கல்வித்தரம் நன்றாக இருந்தாலும், அவர்கள் செய்யும் தவறுகளைக் கேட்கும்போது  இது போன்ற பழிவாங்கும் போக்கினைக் கடைபிடிப்பார்கள்.

சீயோன் மெட்ரிக் பள்ளிக்கு ஒரு நாளில் 38 பேருந்துகளில் தலா 2 அல்லது 3 முறை குழந்தைகளை ஏற்றி வருகிறார்கள். மறைமலை நகர் – 22 கி.மீ., படப்பை – 20 கி.மீ., பள்ளிக்கரணை – 15 கி.மீ., பல்லாவரம் – 13 கி.மீ., கிண்டி – 20 கி.மீ என அதிக தூரம் பயணம் செய்து தினந்தோறும் குழந்தைகள் பள்ளிக்கு வருகின்றனர். நீண்ட தூரத்திலிருந்து வரும் குழந்தைகளை சுமார் 6.30 மணிக்கு அவர்களது வீட்டருகே ஏற்றிக்கொண்டு பள்ளியில் 7.20 மணிக்கே கொண்டு வந்து விட்டு விடுகிறார்கள். இரண்டாவது முறை சுமார் 7.40 மணிக்கு வீட்டருகே ஏற்றிக்கொள்கிறார்கள். இப்படி குறுகிய கால இடைவெளியில் ஓடும் பேருந்துகள் காலையில் மாத்திரம் 3 முறை குழந்தைகளை ஏற்றி வருகிறார்கள். அதுபோல 60 – 70 பேர் பயணிக்க வேண்டிய பேருந்தில் 100 முதல் 110 பேரை ஏற்றிச் செல்வதும் இங்கே வாடிக்கையானது தான்.

அசோக்குமார் :

எனது மகள் திலோத்தமா முதல் வகுப்பு படித்த போது, பள்ளியின் தாளாளர் என் மீது உள்ள விரோதம் காரணமாக  ரிசல்டை நிறுத்தி வைத்து  விட்டார். பிறகு நீதிமன்றம் சென்று வழக்காடி ரிசல்டைப் பெற்றேன். இப்பள்ளியின்  அருகே உள்ள  ஆல்வின் மெமோரியல் மேல்நிலைப் பள்ளி கூட இதே விஜயனுக்குச் சொந்தமானது தான். அந்தப் பள்ளியில் எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல் பெட்ரோல் பங்க் ஒன்று உள்ளது. அந்த பெட்ரோல் பங்கிலிருந்துதான் அவருக்குச் சொந்தமான நான்கு பள்ளிகளின் அனைத்துப்  பேருந்துகளுக்கும் பெட்ரோல் நிரப்பப்படுகிறது. மேலும்  பங்கின் அருகே  வாட்டர் டேங்க், மாணவர்களின்  சைக்கிள் ஸ்டாண்ட் போன்றவை உள்ளன. விபத்து ஏற்பட்டால் இங்கிருந்து மாணவ, மாணவிகள் யாரும் தப்பிக்க வாய்ப்பில்லாத சூழல் உள்ளது.

சென்னை எழும்பூர் பள்ளி கல்வி இயக்ககம்

மெட்ரிக் பள்ளியின் இயக்குநர்செந்தமிழ்செல்வி அவர்களை சந்திக்க காத்திருந்தோம். எங்களுக்கு பின்னால் வந்த பலரை  உடனடியாக பார்த்த அவர், இரண்டு மணி நேரத்திற்கும் பிறகு

மெட்ரிக் பள்ளியின் துணை இயக்குனர்கார்மேகம் அவர்களைச் சந்திக்குமாறு ஊழியர் ஒருவரிடம் சொல்லி அனுப்பினார்.

மெட்ரிக் பள்ளியின் துணை இயக்குனர்கார்மேகத்தைச் சந்தித்தோம். அலட்சியம் தொணிக்க பேச ஆரம்பித்தார்.

மெட்ரிக் பள்ளியின் கல்விமுறையில் உள்ள குறைபாடுகள் குறித்து பேச ஆரம்பித்தோம்,

“நல்ல கருத்து. இதை என்னிடம் ஏன் சொல்கிறீர்கள்? பார்லிமெண்டில் போய் பேசுங்கள். வெளியில் ஆர்ப்பாட்டம் செய்யுங்கள்.” என்றார்.

‘’பள்ளிக்கான பேருந்து ஓட்டை என்றால் அதற்கு நான் என்ன செய்ய முடியும்? நான் மெக்கானிக்கோ, எஞ்சினியரோ இல்லை. குழந்தையின் மரணத்திற்கு கல்வித்துறை பொறுப்பில்லை. ஆசிரியர்கள் கல்வியை எப்படி சொல்லித் தருகிறார்கள்? மாணவர்களின் கற்றல் திறன் எப்படி உள்ளது? கல்வியை எப்படி மேம்படுத்தலாம்? என்றெல்லாம் நாங்கள் பாடுபட்டுக் கொண்டு இருக்கிறோம். அதை விட்டுவிட்டு மற்ற பணிகளில் நாங்கள் கவனம் செலுத்த முடியாது; அதனால் சீயோன் பள்ளிக் குழந்தையின் இறப்பிற்கு நானோ, கல்வித் துறையோ  பொறுப்பில்லை.’’

பள்ளியின் சுகாதாரம் சரியில்லை என்றால் மருத்துவ சான்றிதழ் வழங்கிய அதிகாரி பொறுப்பு; பள்ளிப் பேருந்து சரியில்லை என்றால் போக்குவரத்து ஆய்வாளர் பொறுப்பு; பள்ளிக் கட்டிடம் சரியில்லை என்றால் அதற்கு அனுமதியளித்த பொறியாளரே பொறுப்பு; எங்களுக்கு நீதிமன்றத்திலிருந்து எந்தவிதமான அறிவிப்பும் வரவில்லை. ஏனெனில் எங்கள் மீது எந்தத் தவறும் இல்லை’’ என அலட்சியமாக, தனக்கு பொறுப்பில்லாதது போல பேசினார்.

‘’சரி! சீயோன் பள்ளியின் கல்வித்தரம் எவ்வாறு உள்ளது?’’ எனக் கேட்டபோது “சீயோன் பள்ளியின் கல்வித்தரம் குறித்து எங்களுக்கு எந்தவிதமான புகார் கடிதமும் வரவில்லை. அவ்வாறு வந்தால் ஒழுங்கு  நடவடிக்கை எடுப்போம்” என சட்ட மொழியில் கூறினார். ‘’இவ்வளவு பிரச்சினை ஏற்பட்ட பிறகு அந்தப் பள்ளியில் உங்கள் அதிகாரிகள் ஏதாவது ஆய்வு செய்தார்களா?’’ என்று கேட்டதற்கு ‘’இல்லை’’ என்றார்.

“தனியார் பள்ளிகளின் கல்வித்தரத்தை உயர்த்துவதற்காக ஒரு புதிய சட்டம் வர இருக்கிறது. அதன் பிறகு கல்வித் துறையில் நிறைய முன்னேற்றம் ஏற்படும். ஆகவே உங்களைப் போன்ற சமூக ஆர்வலர்கள் தங்களின் கருத்துக்களைக் கூறினால்,  அதைப் பரிசீலனை செய்து அந்தச் சட்டத்தில் சேர்த்து விடலாம்” என்றார்.

குழு வந்தடைந்த முடிவுகள்

மேற்படி விசாரணை மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் உண்மை அறியும் குழு வந்தடைந்த முடிவுகள்.

1. நேரிலோ அல்லது தொலைபேசி வழியாகவோ கூட பள்ளி நிர்வாகம் சிறுமி ஸ்ருதியின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறவில்லை. பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்திற்கு ஆதரவான பெற்றோர்கள் என யாருமே சிறுமி ஸ்ருதியின் பெற்றோர்களைச் சந்தித்து தங்களுடைய வருத்தத்தைத் தெரிவிக்கக் கூட இல்லை. ஒட்டுமொத்த ஆசிரியர்களும்,  பெரும்பாலான பெற்றோர்களும் மனிதத் தன்மையற்று இருப்பார்கள் எனச் சொல்ல முடியாது. மாறாக ஆறுதல் சொன்னால் வேலை போய்விடும் என்ற நிர்வாகத்தின் மிரட்டல் அல்லது அந்தப் பகுதிக்குப் போனால்    முடிச்சூர் மக்கள் தங்களைத் தாக்கி விடுவார்கள்  என்று நிர்வாகம் கிளப்பிய வதந்திதான் காரணம்.

2.    100 சதவீதம் தேர்ச்சி விகிதம் காட்ட வேண்டும் என்பதற்காக மாணவர்களை மதிப்பெண் எடுக்கும் எந்திரங்களாகவே தனியார் பள்ளிகள் நடத்துகின்றன. சீயோன் பள்ளி அதில் முதன்மையான பள்ளியாக இருந்திருக்கிறது. குறைவாக மார்க் எடுக்கும் மாணவர்களை பொது இடத்தில் வைத்து அவமானப்படுத்துவது, அவர்கள் வாழ்வதற்கே லாயக்கற்றவர்கள் போல் நடத்துவது என்று உளவியல்ரீதியாக துன்புறுத்தப்பட்டிருக்கிறார்கள். சீயோன் பள்ளியின் டார்ச்சருக்கு உள்ளான பல மாணவர்கள் மனநல மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெரும் அளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். சிலர் தற்கொலை முயற்சிக்கும் தள்ளப்பட்டுள்ளனர். மாணவியின் உயிர் குடித்த பள்ளிப் பேருந்தில் இருந்த ஓட்டையை விட மிகுந்த ஆபத்தானது, இப்படி 100 சதவீத தேர்ச்சிக்காக மாணவர்களை துன்புறுத்துவதாகும். இது மாணவர்களின் கல்வி, எதிர் காலத்தை விட  பள்ளியின் வியாபாரத்தைத் தான் வளர்க்க உதவுகிறது.

3. அரசாங்கம் காலாவதியான பேருந்தை ஏலம் விடுகையில் அதனை வாங்கி, பள்ளிக் குழந்தைகளை ஏற்றிவர அதனைப் பயன்படுத்தியது மனிதத்தன்மையற்ற, மானுட விரோதச் செயலாகும்.

‘’அந்தப் பேருந்து  எங்கள் பள்ளியினுடையது அல்ல!’’ என்று முதலில் பேட்டியளித்த சீயோன் பள்ளியின் உரிமையாளர் விஜயன், பின்னர் இதற்கு ஒப்பந்த்தாரர் தான் பொறுப்பு என்று  மாற்றி மாற்றிப் பேசியுள்ளார். ஆனால் உண்மை என்னவென்றால்,  அவரே சில ஆண்டுகளுக்கு முன் ‘’என்னுடைய  பள்ளிப் பேருந்துகள் எல்லாமே பழுதாகி விட்டது. அதனால் நான் பள்ளியின் போக்குவரத்தை வெளி நிறுவனத்துக்கு குத்தகைக்கு விடப் போவதால் பேருந்துகளை விற்றுவிடப் போவதாக நீதிமன்றத்தில் கடிதம் கொடுத்து விட்டு, தன்னிடம் வேலை பார்த்த அனைத்துப் போக்குவரத்துத் தொழிலாளர்களையும் வீட்டுக்கு அனுப்பியிருக்கிறார். ஆனால் பாதுகாப்பற்ற அந்தப் பழைய பேருந்தையே  புதிய அனுபவமில்லாத தொழிலாளர்களை வைத்தும், பராமரிப்பை ஒழுங்காகச் செய்யாமலும் இயக்கியுள்ளார். இந்த இலாப வெறி தான் குழந்தை ஸ்ருதியின் மரணத்திற்கு உடனடிக் காரணமாகும். அதனால் தான் அந்த ஓட்டுநர் பேருந்தில் இருந்த ஓட்டையை நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தும் அது அடைக்கப்படவில்லை.

மெட்ரிக்  பள்ளியின்  இயக்ககம் இதற்கு  எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  புகார் தந்தால் தான் நடவடிக்கை எடுப்போம் என அவர்கள் சொல்வது, சாவு விழுந்தால் தான் பிரச்சினையாகப் பார்ப்போம் என்பதற்குச் சமம். புகார் தந்தால் தன் குழந்தையின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதால் பெற்றோர்கள் புகார்தர முன்வர மாட்டார்கள்.  பள்ளியில் திடீர்  சோதனை நடத்துவது.   மாணவர்களிடம் தனிப்பட்ட முறையில் பேசிப் பார்த்து, சோதித்தறிந்து அதன் மீது நடடிவடிக்கை எடுப்பது என்பது, மெட்ரிக்  பள்ளி  இயக்ககத்தின் கடமைதானே!  அதை ஏன் அவர்கள் செய்யவில்லை?. குறிப்பிட்ட இந்த பேருந்தில் உள்ள ஓட்டை ஓட்டுநரால், நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டும், ஒட்டையை அடைக்காமல் விட்டது ஏன்? பெற்றோர்களிடம் ஏற்பட்ட தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியின் காரணமாக ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு படிக்கும் குழந்தைகளின் தேர்வு முடிவுகளை அறிவிக்காமல் அவர்களை அதே வகுப்பில் நிறுத்தி வைத்தது நிர்வாகம். நீதி மன்றம் தலையிட்டு தேர்வு முடிவைப் பெற்றுத்தந்த பிறகும் மெட்ரிக் பள்ளியின் இயக்ககம் சீயோன் பள்ளியின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

4. பெரும்பாலான பெற்றோர்களும், தனியார் பள்ளி நிர்வாகமும் பிஞ்சுக் குழந்தைகளை சொல்லவொண்ணாத் துயரத்தில் ஆழ்த்துகிறார்கள். ஒரு குழந்தை 1 ஆம் வகுப்பிற்கு காலை 5.30 க்கு எழுந்து 6.30 க்கு பேருந்தில் ஏறி, 20 கி.மீ பயணம் செய்து, 7.30 க்கு பள்ளிக்கு வந்து, 1.30 மணி நேரம் காத்திருந்து, 9.00 மணிக்கு படிக்க தொடங்குவதற்குள் தனது அத்துனை சக்திகளையும் இழந்த பிறகு எப்படிக் கற்க முடியும்? ஆகவே இந்தக் கல்வி முறை குழைந்தைகளுடைய நலன் மற்றும் அறிவு வளர்ச்சி ஆகியவற்றுக்கு எதிராகவே உள்ளது.

பரிந்துரைகள்

இவ்வளவு பிரச்சினைக்குரிய சீயோன் மெட்ரிக் பள்ளியை மூடுவது அங்கு படிக்கும் 14,000 குழந்தைகளின் கல்வியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே அதற்கு ஒரே தீர்வு  பள்ளியை அரசுடமையாக்கவதுதான்.

தமிழகம் முழுக்க 10 வயதுக்குள் உள்ள குழந்தைகளை  வாகனங்களில் பள்ளிக்கு அனுப்பாமல்,  1 கி.மீ. எல்லைக்குள் உள்ள பள்ளிகளில் சேர்ப்பதைக் கட்டாயமாக்க வேண்டும். அதாவது அருகாமைப் பள்ளி முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். அனைத்துப் பள்ளிகளுடைய தரமும் ஓரே அளவுள்ளதாக இருப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை உத்திரவாதப்படுத்த வேண்டும்.

குழந்தைகளின் உடல் நலம், மன நலம் பாதிக்காத அளவில் கல்வியை சொல்லித் தர வேண்டும் என்பதைக் கட்டாயமாக்க வேண்டும். குறிப்பாக தனியார் பள்ளிகள் மீது கட்டுப்பாடுகளை விதிப்பது மட்டுமல்லாமல், அவை விதிகளை மீறும்போது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாக, அந்தப் பள்ளிகள் செய்கிற தவறுகளை, குழந்தைகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மூடி மறைக்கிற அரசு அதிகாரிகளைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும். அதற்கான சட்டபூர்வ அமைப்புகளை அரசு ஏற்படுத்த வேண்டும்.

குழந்தைத் தொழிலாளர் முறையை விடக் கொடுமையாக இருக்கின்ற தனியார் பள்ளிகளின் கல்விமுறையில் மாற்றத்தை ஏற்படுத்திடவும், கல்வியில் தனியார்மயத்தை ஒழித்திடவும்  பொது மக்களும், பெற்றோர்களும் தங்களுடைய காரியவாதத்தைக் கைவிட்டு, அரசை நிர்ப்பந்திக்கும் போராட்டங்களுக்கு அணியமாவது அவசியம்.

_______________________________________________________

– மனித உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு

__________________________________________________

 1. புதிய தலைமுறையில் நேற்று தேர்வில் தோல்வி காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது குறித்த நேர்பட பேசு நிகழ்ச்சியில் சிறுமி ஸ்ருதி கொலைசெய்யப்படுவதற்கு காரணமான சியோன் பள்ளி முதலாளி விஜயன் கலந்து கொண்டு மாணவர்-பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்குகிறார்.

  கல்வி என்பது பிரதானமாக காசுக்கானதாகவும், காசு சம்பாதிப்பதற்கானதாகவும் அரசு மாற்றிவிட்டதால் தேர்வில் தோல்வி, மதிப்பெண் குறைவு எனும் போது அதனை எதிர்கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு மாணவர்கள் தள்ளப்படுகின்றனர். இந்த பக்குவத்திற்க்கு தான் இவர்களுகளுடைய கல்வி மாணவர்களை வளர்க்கிறது.

  பன்னாட்டு கம்பெனிகளுக்கு அடிமைகளை உற்பத்தி செய்யும் இந்த கல்வி முறை தோல்வி குறித்து அப்படிப்பட்ட அடிமைகளாக மாணவர்களை உற்பத்தி செய்யும் முதலாளிகளான பச்சமுத்துவும், சியோன் விஜயனும் கல்விவின் தரம் குறித்து பேசுவதை என்னவென்பது….?

  இதைவிட வெட்கக்கெடு இருக்க முடியாது.

 2. Aaam Nanba, Tambaram RTO romba romba Lanja pervali… last month my Frd, licence individual a apply panna poairunthan,. kadaisi varaikkum onnum sollama irunthuttu, kadaisiya licence venumna 300 rupees ku A4 sheet kodutha than koduppomnu Koosama keakkuranga… cha

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க