Saturday, April 17, 2021
முகப்பு கட்சிகள் அ.தி.மு.க தமிழ்நாட்டுக்கு சிறப்புக் காவல் இளைஞர் படை!

தமிழ்நாட்டுக்கு சிறப்புக் காவல் இளைஞர் படை!

-

போலீசு

ஜெயலலிதா ஆட்சிக்கு வரும்போதெல்லாம் பார்ப்பனர்கள் மட்டுமல்ல, தமிழ்நாடு போலீசும் “இது நம்ம ஆட்சி” எனக் குதூகலிக்கத் தொடங்கிவிடுகிறது.

மக்கள் போராட்டங்களைக் கொடூரமாக ஒடுக்கியும், பல கொட்டடிப் படுகொலைகளையும், போலிமோதல்களையும் செய்துவரும் இந்த செல்லப் பிராணிக்கு, இராணுவத்துக்கு உள்ளது போன்ற அத்தியாவசிய பொருட்களை மலிவாக விற்கும் சிறப்பங்காடி, அதிநவீன சொகுசுக்கார்கள், பல லட்சம் மதிப்பிலான சொகுசு மாடிக் குடியிருப்புகள் என வெகுமதிகளை வாரிவழங்கி வருகிறார் ஜெயலலிதா.

காவல்துறையின் பணிச்சுமையைக் குறைத்து, சட்டம் ஒழுங்கையும் புலனாய்வையும் இன்னும் ‘சிறப்பாக’ச் செய்வதற்கென அண்மையில் ஜெயலலிதா காவல்துறைக்கு துணையாக “தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படை” யை அமைக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

முப்பது வயதுக்குட்பட்ட இளைஞர்களைக்கொண்டு மாவட்டப் போலீசு கண்காணிப்பாளர்களால் உருவாக்கப்படவுள்ள இந்தப்படை, போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்துதல், கூட்ட நெரிசல்களை சரிசெய்தல் போன்ற வேலைகளோடு இரவு ரோந்துப்பணியிலும் ஈடுபடுத்தப்படும்.

பணிக்காலத்தில் மாதந்தோறும் ரூ.7500 ஊதியமும், காவலர்கள் சிறப்பங்காடிகளைப் பயன்படுத்தும் உரிமையும் அவர்களுக்கு வழங்கப்படும். இதுதவிர மானிய விலையில் அவர்களுக்கு அரிசி,கோதுமை, சர்க்கரை போன்றபொருட்களும் வழங்கப்படும் என்று அரசின் அறிவிப்பு கூறுகிறது.

இவ்வாண்டு பத்தாயிரம் பேரையும், அடுத்த ஆண்டு 15 ஆயிரம் பேரையும் சேர்த்து உருவாக்கப்படும் இப்படை, வருங்காலத்தில் சுமார் 50 ஆயிரம் பேரைக் கொண்டதாகக் கட்டமைக்கப்படுமாம். இதில் பணியாற்றுவோருக்கு ஆண்டுதோறும் போலீசுத் தேர்வில் முன்னுரிமை என்றும், நாற்பது வயது வரை துணைப்படையிலேயே இருப்பவர்களை நேரடியாக போலீசுப்படையில் சேர்ப்பது என்றும் தூண்டில்போட்டு இளைஞர்களைச் சுண்டியிழுக்க உள்ளனர்.

பெருகிவரும் மக்கள்தொகைக்கேற்ப 635 பேருக்கு ஒரு போலீசு எனும் விகிதத்தை நிலைநாட்டுவதற்காகவே துணைப்படை உருவாக்கப்படுவதாக ஜெயலலிதா சொல்லியுள்ளார். இதே அரசிடம் 42 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்ற விகிதத்தை நிலைநாட்ட கறாரான திட்டம் ஏதும் கிடையாது. பல பள்ளிகளில் 60 முதல் 90 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்தான் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அதேபோல இன்னமும் 10 ஆயிரம் மக்களுக்கு 6-க்கும் குறைவான மருத்துவர்களே உள்ளனர். இந்த எண்ணிக்கைகளை எல்லாம் உயர்த்த அக்கறையில்லாத அரசு, போலீசுப்படையை மட்டும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்ட மக்கள் நலப் பணியாளர்கள், சாலைப் பணியாளர்களைத் தடாலடியாக ஓரேநாளில் வீட்டுக்கு அனுப்பி வைத்த ஜெயா, “அவர்கள் அனைவரும் தி.மு.க. அனுதாபிகள்” எனக் கூறி, இப்பணி நீக்கத்தை நியாயப்படுத்தினார். அப்படி தி.மு.க. மீது பழிபோட்ட ஜெயா, இப்பொழுது அ.தி.மு.க. அனுதாபிகளைக் கொண்டு சிறப்பு காவல் இளைஞர் படையை உருவாக்க முனைகிறார். மு.க. நியமித்த மக்கள் நலப் பணியாளர்களும், சாலைப் பணியாளர்களும் கொஞ்சத்துக்கு கொஞ்சமாவது மக்கள் நலப் பணிகளில் ஈடுபட்டனர் எனச் சொல்லிக் கொள்ள வாய்ப்புண்டு. ஆனால், அம்மா உருவாக்க இருக்கும் இளைஞர் படையோ, மக்களுக்குச் சேவை செய்வதற்கு அல்ல; மக்களை ஒடுக்கும் நோக்கத்திற்காகவே உருவாக்கப்படுகிறது.

“சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு செயப்படாமல் மாவட்டப் போலீசு கண்காணிப்பாளரே இப்படையிரைத் தேர்வு செய்வதால், அ.தி.முக.வினர் பரிந்துரைதான் இப்படையின் தேர்வில் செல்லுபடியாகும்; அ.தி.மு.க. வின் இளைஞர்களை அரசுப் பணத்தில் குளிப்பாட்டிடும் திட்டம்” என அம்பலப்படுத்தி, ஜெயாவின் இத்திட்டத்தை கருணாநிதி எதிர்த்திருக்கிறார். ஆனால், அவர் கருதுவதுபோல இப்படை வெறுமனே ஆளும் கட்சித் தொண்டர்கள் பொறுக்கித் தின்பதற்கான திட்டம் மட்டும் அல்ல.

மக்கள் விரோத குண்டர்களைப் பொறுக்கியெடுத்து துணைப்படை அமைத்து, அந்தந்த மாநிலங்களில் அரசுக்கு எதிரான கருத்துகளோ, போராட்டமோ முளைவிடாது அழித்து வருவதை கடந்த சில ஆண்டுகளாகவே பல மாநில அரசுகள் செயல் உத்தியாகவே கடைப்பிடித்து வருகின்றன. கர்நாடகத்தில் ‘போலீசு நண்பர்கள்’ எனும் பேரில் ஆட்காட்டிகளை உருவாக்கியுள்ளனர். மாவோயிஸ்ட் புரட்சியாளர்கள் செல்வாக்கு பெற்றுள்ள மாநிலங்களில் சல்வாஜூடும், நாகா, கோர்பா போன்ற பல பெயர்களில் ஆயுதம் தாங்கிய குண்டர் படைகளை உருவாக்கி, பழங்குடியினரையும் புரட்சியாளர்களையும் ஒடுக்கி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாகத்தான் இங்கு ‘தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படை’ உருவாக்கப்படுகிறது.

ஆனால், அம்மாவின் முன்னாள் தோழர்களான மார்க்சிஸ்டுகள் இப்படை உருவாக்கப்படுவதன் பின்னுள்ள இந்த பாசிச நோக்கத்தை அம்பலப்படுத்த முன்வராமல், சாலைப் பணியாளர்கள், மக்கள்நலப் பணியாளர்கள் நீக்கப்பட்டது போல் இப்படையினரும் நீக்கப்படும் வாப்புள்ளதாக வருத்தப்பட்டு, போலீசு குண்டர்களை இன்னும் அதிகமாகத் தேர்வு செய்யுங்கள்; இப்புதிய இளைஞர் படை தேவையில்லை என்ற ஆலோசனையை அம்மாவின் முன் வைத்துள்ளனர்.

இங்கே நடைமுறையிலுள்ள தீவிரமான மறுகாலனியாக்கச் செயல்திட்டங்களின் விளைவாக சகல தரப்பு மக்களிடமும் அரசுக்கெதிரான கோபம் ஏற்கெனவே பரவி வருகிறது. அணு உலை எதிர்ப்புப் போராட்டம், மின்வெட்டுக்கு எதிரான போராட்டம் என உருவாகியுள்ள அக்கோபம் மாபெரும் எழுச்சியாக மாறிவிடாதபடிக்கு ஒட்டுமொத்த சமூகத்தையும் தீவிரமான கண்காணிப்பின் கீழ் அரசு கொண்டுவர முயலுகிறது.

அரசுக்கெதிரான கூட்டங்களுக்கு போலீசு அனுமதியே தருவதில்லை. இதன்பின் நீதிமன்றத்தில் வழக்காடி அனுமதி பெற்று வந்தாலும் கூட்டத்துக்கு வருவோரின் முகங்களை வீடியோவில் பதிவு செய்து மக்களை பீதிக்குள்ளாக்குகிறது,போலீசு. பெருநகரங்களில் முக்கியமான இடங்களில் எல்லாம் 24 மணிநேரமும் இயங்கும் காமிராக்களை பொருத்திக் கண்காணிக்கிறது. விரைவில் தமிழகம் முழுவதும் உள்ள பிற்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர் விடுதிகள் அனைத்தையும் பயோமெட்ரிக் கருவிகளின் மூலம் கண்காணிக்கவும் உள்ளது.

சென்னையில் நடந்த தொடர்கொள்ளைகளைக் கண்டறியத் துப்பில்லாத போலீசு, வடமாநிலத்தினர் சிலரை போலிமோதலில் சுட்டுக்கொன்றது. பின்னர், வாடகைக்குக் குடியிருப்பவர்களின் புகைப்படங்களோடு கூடிய தகவல்களை வீட்டு உரிமையாளர்கள் காவல்நிலையங்களில் தந்தாகவேண்டும் எனக் கட்டாயப்படுத்தி, ஒட்டுமொத்த சமூகத்தையும் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்க முயன்றது. மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தினரின் சட்டப் போராட்டத்தால் போலீசின் இந்த சட்டவிரோதச் செயல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இப்போது வேறுவழியில் அதனைச் சாதிக்க முயலுகிறது. படித்துவிட்டு வேலையின்றி வாடும் இளைஞர்களிலிருந்து பொறுக்கி எடுக்கப்படும் இப்படையை வைத்தே ஒவ்வொரு தெருவையும் அரசு இனி கண்காணிக்கும். மக்களின் கோபம் அரசுக்கு எதிராக எங்கெல்லாம் உருவாகிறதோ, அங்கெல்லாம் இந்த உளவாளிகள் மக்களைக் காட்டிக்கொடுத்து ஒழிக்கத் துணைபோவார்கள். இவ்வாறு சமூகத்தையே பாசிசத்தின் பிடியில் ஒப்படைக்கிறது, ‘தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படை’த் திட்டம். இதுவே நாளை சல்வாஜூடும் போன்ற கொடூரமான படையாகவும் பரிணமிக்கலாம். நாடும் மக்களும் பாசிச பயங்கரவாதத்தின் பிடியில் தள்ளப்படும் பேரபாயம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. விழிப்புடனிருந்து அதனை முறியடிப்பதே இன்றைய அவசியமாகியுள்ளது.

_____________________________________________________________

– புதிய ஜனநாயகம், டிசம்பர் – 2012
_________________________________________________________________

 1. இது இரு வகைகளில் உதவும்.

  1) அதிமுக அடிமைகளை போலீசில் கொண்டு வருவது.
  2) நூறு சதவித பொலிசும் அடிமையாக இருக்க செய்வது.

  இது ஜனநாயகம் கொடுத்துள்ள நல்ல ஒரு வழிமுறை.

 2. சிறப்புநீதி மன்றஙகளின் ‘சிறப்பான’ தீர்ப்புகள் ! சிறப்பு காவல் படையும் ‘சிறப்பாக’ பனியாற்றுமோ?

 3. இந்த படை அமைப்பு அடிப்படை உரிமைகளுக்கான ஒரு போராட்ட அமைப்பு தொடங்கப்படாமல் இருக்கவே ஏற்படுத்தப்படுகிறது.

  அவர்களை போலீசுக்கும் மக்களுக்கும் இடையில் இருக்க வைத்து – போராட்டங்கள் வராமல் தடுத்தல், வரும்போது தடுத்தல் ஆகிய முக்கிய பணிகளை செய்விப்பதுடன் தமது சுய லாபத்துக்கான அடியாட்களாகவும் பயன்படுத்தலாம்.

  இங்குள்ள மாய வலை – நாற்பது வயதுக்கு பின் அவர்கள் போலீசில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்பதே. அதுவரை – வேறெந்த முன்னேற்றமும் இல்லாமல் நாயாய்கிட – அதற்குப்பிறகு – அதுவே பழகீரும்!

  அரசு வழங்கும் மக்களுக்கான பொருட்களில் போடப்பட்டிருக்கும் முதல்வர்களின் படம் சொல்லிவிடுகிறது – நமது நிலையை!

  மக்களுக்கு கல்வி வேண்டும். சினிமா சாராத முதலமைச்சர் வேண்டும்.
  நடக்குற காரியமா இது?

 4. காவல் துறையினரைப் பொறுத்த வரையில் குறிப்பிட்ட மணி நேரப் பணி என்பது எட்டாக் கனியாகவே விளங்குகிறது. சட்டம் ஒழுங்கினைக் காக்கும் பொருட்டும், குற்றவாளிகளை தேடும் பொருட்டும் பணி நிமித்த மாக பல நாட்களில் தங்கள் குடும்பங்களை விட்டு வெளியூருக்கு செல்லக் கூடிய நிலைமை காவல் துறையினருக்கு ஏற்படுகிறது. சில சமயங்களில் குடும்பத்தை நினைத்துப் பார்க்கக் கூட முடியாத சூழ்நிலை அவர்களுக்கு ஏற்படுகிறது. அடுத்தடுத்து பிரச்சினைகளை எதிர்நோக்கும் போதும்,போலீசார் ஒரே நாளில் பல்வேறு சூழ்நிலைகளைக் கையாள வேண்டிய நிலையில் இருக்கும் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.காவல் துறையினரால் பயனடைந்தவர் காவல் துறையின் பணியினை பாராட்டினால், அதனால் பாதிக்கப்படுபவர் வசை பாடுகிறார்.

 5. இந்த ‘சிறப்பு’ படை , அரசு ஊழியர் பணிநியமன விதிகளுக்கு உட்படாவிட்டால், வெரும் அ தி மு க குண்டர் படையாகவே இருக்கும்! பழைய சீரணி படையைப போல! சீருடை ப்ணி தேர்வு ஆணையம் மூலம் நிரந்தர பணியாள்ராக எடுத்தால் என்ன?

 6. இன்னும் சில ஆண்டுகளில் இந்தியாவை பாதுகாப்பற்ற இரத்த பூமியாக காணப்போகிறோமோ என்ற அச்சம் நிலவுகிறது!!! legal formation of kundas

 7. தமிழகத்தில் படித்த இளைஞர்கள்,பட்டத்தாரிகள் எண்ணிலடங்கா இருந்தும் ,ஓர் ஆசிரியர் பள்ளி ,ஈராசிரியர் பள்ளி என்றநிலை இன்னும் இருந்துகொண்டுதான் இருக்கிறது. ஆசிரியர் விடுமுறை என்றால் பள்ளியே விடுமுறை என்றநிலைநடைமுறையில் இருப்பதை காண்கிறோம். பள்ளிகளே இல்லாத ஊர்கள் ,அதனால் எழுதபடிக்கமுடியாதநிலை இருபத்தி ஓராம் நூற்றாண்டிலும்நீடித்து கொண்டுதான் இருக்கிறது. இந்த் பணிகளில் படித்த பட்டதாரிகளை நியமித்துநாட்டுமக்களை முன்னேற்றவே இந்த அரசாங்கம்.
  அதை விடுத்து,சென்ற முறை ஆட்சிக்கு வந்த போது படித்து ,ஒழுக்கநெறிமுறைகளை கற்று அதன் படி மக்களையும் ,மாணவர்களையும் வழிநடத்தும் பண்பும் ,ஆற்றலும் கொண்ட பட்டதாரிகளை டாஸ்மாக் ஒயின்சாப்பில் அமர்த்தி அவர்களின் அறிவையும்,ஆற்றலையும், கெடித்ததோடு நாட்டு மக்களை குடிகாரர்களாக்கி குடும்பத்தையும்,நாட்டையும் கெடுத்தார்.
  இப்பொழுது அவர்களை அடியால் குண்டர் படிகளாக மாற்றி தனக்கு அடிமை வேலை செய்ய ஆட் களை இளைஞர் படை என்ற பெயரில் உருவாக்குவதற்கான வேலையை செய்ய திட்டமிடுள்ளார்.இதன் முடிவு நம் கையை கொண்டேநம் கண்ணை குத்துவதாக ஆகிவிடும்.
  சிலநாட்களிலேயே உழைக்கும் மக்கள்,விவசாயிகள், தொழிளாலர்கள்,மாணவர்கள்,ஆசிரியர்கள் ,அரசு பணியாளர்கள் என தங்களின் ஞாயமான கோரிக்கைகாக போராடும் மக்களை ஒடுக்கவே பயன்படுத்தப்படுவார்கள் .எனவே இந்த பாசிஸ்டுகளின் உண்மை முகத்தை கண்டு அனைத்து படித்த மாணவர்கள், இளைஞர்கள்,பட்டதாரிகள் ,பெற்றார்கள்,ஆசிரியர்கள், உழைக்கும் மக்கள் என அனைவரும் இதை எதிர்த்து முறியடிக்க வேண்டும்.இல்லையெனில் கூடங்கூல மக்களை போலவே அனைத்து மக்களும் ஒடுக்க்கப்படுவோம்.நம்நாட்டிலேயேநாம் அகதியை போல் அடக்கி ஒடுக்கப்படுவோம்.
  இது எதார்த்த உண்மை மட்டுமல்ல ,ஓர் எச்சரிக்கையும் கூட என்பதை நாம் உணர்ந்து எதிர்க்க கூடிய தருனம் ஆகும்.

 8. @ME Bala

  Velai kudutha mattum ozhunga schoolukku vandiruvaangala? Sambalam vaangittu,DMKla uruppinar aagi,veetula tution eduthu,therthal annaikki mattum velai paakuruthaukku thaane aasiriyar irukkanga.

 9. சரியாக சொன்னீர்கள் பாலா! மக்களிடம் இந்த புரிதல் தென்படுகிற்தா? எதிகாலத்தில் சாலைபணியாள்ர்கள் போல நடுத்தெருவிற்குத்தானே வரவேண்டும்? உள்ளதும் போச்சுடாநொள்ள கண்ணா என்று இருக்கிற பிழைப்பை விட்டு இதில் சேர படித்த இளைக்ன்ர்கள் முன்வருவார்களா?

 10. அரிகுமாருக்கு ஏன் இந்த வயிற்றெரிச்சல்? அரசு ஊழியர் யாருமே வெலை செய்வதில்லையா? இதில் தி மு க என்ன, அ தி மு க என்ன? பார்பனர்கள் தஙகளைத்தவிர மற்ற்வர்களை மட்டம் தட்டும் நோக்கம் என்ன?

 11. சட்டத்தை கைலெ வைத்துக்கொண்டு எதிரிகளை, போராடும் மக்களை ஒடுக்கவே“தமிழ்நாட்டுக்கு சிறப்புக் காவல் இளைஞர் படை!”. எப்படியும் அனைத்து மக்களும் நம்நாட்டிலேயேநாம் அகதியை போல் அடக்கி ஒடுக்கப்படுவோம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க