Tuesday, November 29, 2022
முகப்புகட்சிகள்அ.தி.மு.ககாசு உள்ளவனுக்கு மின்சாரம் ! இல்லாதவனுக்கு இருட்டு !

காசு உள்ளவனுக்கு மின்சாரம் ! இல்லாதவனுக்கு இருட்டு !

-

னித உரிமை பாதுகாப்பு மையம், மதுரை மாவட்டக்கிளையின் 9-ஆம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு கீழ் கண்ட தலைப்புகளில் கருத்தரங்கம் நடைபெற்றது. 23.12.2012 அன்று மதுரையில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு மாவட்ட செயலாளர் ம. லயனல் அந்தோணிராஜ் தலைமை தாங்கினார்

 • தமிழ்நாடு மிகு மின் உற்பத்தி மாநிலமாக மாறாது!
 • மின் உற்பத்தியை அரசு கைவிட்டது!
 • தனியார் முதலாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள மின் உற்பத்தியால் கட்டணம் உயரும்!
 • காசு உள்ளவனுக்கு மின்சாரம்! இல்லாதவனுக்கு இருட்டு !
 • வரலாறு காணாத மின்வெட்டு! கோரத்தாண்டவம் ஆடும் டெங்கு!

தலைமையுரை – லயனல் அந்தோணிராஜ்

“தமிழ்நாடு மின்துறையின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோதப் போக்குகளை வாரியத்தில் பொறியாளராகப் பணியாற்றிய காலம் முதற்கொண்டே த.நா.மி.வா.பொறியாளர் சங்கம் அமைத்துப் போராடி வருபவர் பொறியாளர் கோவை.சா.காந்தி. பணி ஓய்வு பெற்ற பின்பும் தமிழ்நாடு மின்துறைப் பொறியாளர்கள் அமைப்பை உருவாக்கி அதன் தலைவராகப் பொறுப்பேற்று அதே பணியை மக்கள் மத்தியில் தற்போது செய்து வருகிறார் பொறியாளர் காந்தி. இப்படி பொறுப்புடன் செயல்படுகிறவர்கள் மிகவும் அரிதாக உள்ளனர்.

அதுபோலவே டெங்கு பற்றி பேச வந்திருக்கும் மருத்துவர் மீ.அரிகர மகாதேவன் பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லுர்ரியில் மாணவராக இருந்தபோதே அரசின் அலட்சியங்களை எதிர்த்து மாணவர்களைத் திரட்டிப் போராடியவர். இப்போது முதுகலைப் பட்டம் பெற்று தனியே மருத்துவமனை நடத்தி வருகின்ற போதிலும் மக்கள் நலம் சார்ந்த பிரச்சினைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு செயல்பட்டு வருகிறார். டெங்கு காய்ச்சலுக்கு சித்த மருத்துவத்தில் சிறந்த மருந்து உள்ளது என்று அரசுக்குப் பலமுறை எடுத்துச் சொல்லியும் பாராமுகமாக இருந்த அரசு இறுதிக் கட்டத்தில் ஏற்றுக்கொண்டு சித்தமுறை சிகிச்சையை பரிந்துரை செய்தது. மேலூர் பகுதியில் டெங்கினால் அதிக உயிரிழப்பு ஏற்பட்டதனால் அப்பகுதியில் இலவச முகாம் நடத்தினார் மருத்துவர் மீ.அரிகரமகாதேவன். இப்போதும் தொடர்ந்து தனது பணியை எவ்வித எதிர்பார்ப்புமின்றி செய்து வருகிறார்.

இவர்களைப் போலவே தமிழ்நாடு பொதுப் பணித்துறையில் 9 தென் மாவட்டங்களின் விவசாயம், நீர் மேலாண்மைப் பிரிவு தலைமைப் பொறியாளராகப் பணியாற்றிய மூத்த பொறியாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர்.விஜயகுமார் அவர்களும் பணி ஓய்வுக்குப் பின்னும் பொ.ப.துறையின் மூத்த பொறியாளர்களை அமைப்பாக்கியுள்ளார். முல்லைப் பெரியாற்றில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டுவதற்காக மக்களைத் திரட்டும் பணியில் அவர் தன்னை அயராது ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.

இப்படிப்பட்ட சமுகப் பொறுப்புள்ள அதிகாரிகள், மருத்துவர்கள் சிலர் பலராகப் பல்கிப் பெருக வேண்டும். மனித உரிமை பாதுகாப்பு மையம் போன்ற மக்களுக்கான அமைப்புகள் அவர்களோடு எப்போதும் ஒத்துழைக்கும்”

குறுந்தகடு வெளியீடு

அதன் பின்பு மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் திருச்சி கிளை நடத்திய கருத்தரங்கில் பொறியாளர் சா.காந்தி ஆற்றிய உரை “திட்டமிட்டு திணிக்கப்படுகிறது செயற்கை மின்வெட்டு ‘பவரை’ அதிகாரத்தைக் கையிலெடுத்தால் தடையின்றி ‘பவர்’ வரும்” என்ற தலைப்பில் ”ஒலிக்குறுந்தகடாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. அது மதுரைக் கருத்தரங்கில் வெளியிடப்பட்டது. மதுரைக் கிளையின் தலைவர் ஐயா இரா.நல்லகாமன் வெளியிட மருத்துவர் அரிகர மகாதேவன் பெற்றுக் கொண்டார்.

 ‘கோரத் தாண்டவமாடும் டெங்கு-அலட்சியம் காட்டும் அரசு’ –  மருத்துவர் அரிகர மகாதேவன் பேச்சு

டெங்குவின் ஆரம்ப அறிகுறிகளை விளக்கிய அவர் “அலோபதி மருத்துவத்தில் அதற்கு மருந்து இல்லை என்று சொல்கிறார்கள். ஏழை மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் அரசு மருத்துவமனைகளில் வந்து குவிகின்றனர். சரியான கவனிப்பு இல்லை. தனியார் மருத்துவமனைகளில் 50 ஆயிரம் முதல் 2 லட்சம் வரை கொள்ளையடிக்கின்றனர். ஆரம்பத்தில் கடையநல்லுர்ரில் டெங்குவினால் இறப்பு ஏற்பட்ட போது பாளையங்கோட்டை மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளமானோர் அனுமதிக்கப்பட்டனர். தொடர் சாவுகள் நிகழ்ந்தன.

அரிகர மகாதேவன் - மதுரை கருத்தரங்கு
டெங்கு பற்றியும் அரசின் அலட்சியம் பற்றியும் சித்த மருத்துவர் அரிகர மகாதேவன்

சித்த மருத்துவத்தில் டெங்கு சுரத்திற்கு சிகிச்சை இருக்கிறது என்று அரசுக்கு 11/6/12ல் அறிக்கை அளித்தோம். கண்டு கொள்ளவில்லை. சென்னை மெடிக்கல் அசோசியேசனில் அறிக்கை தந்தோம். அக்டோபர், நவம்பரில் தீவிரமாகும் என்று எச்சரித்தோம். ஆனாலும் எந்த நடவடிக்கையும் இல்லை. அலோபதியில் மருந்து இல்லையென்றால் வேறு எதிலுமே மருந்து இல்லை என்று பொருளா? அலோபதி பல லட்சம் கோடிகள் புரளுகிற மிகப் பெரிய வியாபாரம். லாபம் கொழிப்பதில்தான் அவர்கள் கவனம் செலுத்துகிறார்கள். டெங்கு கொசுக்கடி ஏழைகளைத்தான் முழுவதுமாகப் பாதிக்கிறது. அதனால் அரசு அதைப்பற்றி அலட்சியம் காட்டுகிறது.

மேலும் டெங்குவை உருவாக்கும் ஏடியெஸ் வகை கொசு எப்படி உருவானது என்று ஆராய்ந்து பார்த்தால் அது அமெரிக்காவின் உயிரி தொழில் நுட்ப யுத்தத்தின் விளைவு என்பதாகச் சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. டெங்குக்கு ஜிடி நாயுடு மருந்து கண்டுபிடித்தார். அரசு அதிகாரிகளின் அலட்சியத்தாலே இவ்வாறு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.” என்று பேசினார்

‘மின்வெட்டு பேசப்படாத உண்மைகளும் பின்னணி அரசியலும்’ – பொறியாளர் கோவை சா.காந்தி

மிகத் துல்லியமான புள்ளி விவரங்களுடன் நீண்ட உரையாற்றினார். “மின்வெட்டுக்கான காரணங்கள் குறித்து நான் தருகிற புள்ளி விவரங்கள் அனைத்தும் ஆதார பூர்வமானவை. இதைச் சொன்னது யார் என்று உங்களிடம் யாராவது கேட்டால் பொறியாளர் காந்தி சொன்னது என்று சொல்லுங்கள்” என்று சொல்லி அவர் பேச்சைத் தொடங்கியது அனைவரையும் ஈர்த்தது.

“தமிழ்நாட்டில் சென்னை தவிர்த்த பிற இடங்களில் மின்வெட்டு கடுமையாக பாதித்து உள்ளது. சென்னையில் இருப்பவர்களுக்கு மின்வெட்டைப் பற்றி தெரியாது. சென்னையும் பிற மாவட்டங்களும் இந்தியா-பாகிஸ்தான் போல தனித்தனி நாடு போல் உள்ளது. ரிலையன்ஸ் என்று பெயர் ஆனால் அதனை நம்ப முடியாது. சத்யம் (கம்ப்யூட்டர்ஸ்) என்று பெயர் அதில் உண்மை இல்லை. (மின்சார) ஒழுங்குமுறை ஆணையம் என்று பெயர் ஆனால் அதில் ஒழுங்கு கிடையாது. 2013-ல் தமிழ்நாடு மிகுமின் உற்பத்தி மாநிலமாக மாறும் என்று 31.10.12ல் முதல்வர் சட்ட சபையில் அறிவிக்கிறார். ஆனால் அதில் உண்மை இல்லை. நான் ஆணித்தரமாகச் சொல்கிறேன் தமிழ்நாடு அப்படி ஆகவே ஆகாது.

தமிழ்நாட்டின் இன்றைய மின் தேவை 12 ஆயிரம் மெகாவாட். ஆனால் உற்பத்தியோ 8 ஆயிரம் மெகாவாட் தான் பற்றாக்குறை 4 ஆயிரம் மெகாவாட். அடுத்த ஆண்டில் (2013-ல்) நமது தேவை 13 ஆயிரத்து 100 மெகாவாட். ஆனால் தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டுக்குள் எல்லாத் திட்டங் களும் முடிக்கப்பட்டுவிட்டால் 3500 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். அப்போதும் 2 ஆயிரம் மெகாவாட் பற்றாக்குறை ஏற்படும். இந்தப் பற்றாக் குறை 2011ல் 5600 மெகாவாட்டாக அதிகரிக்கும்.

கூடங்குளம் அணுஉலை திறக்கப்பட்டால் மின் பற்றாக்குறை தீர்ந்து விடும் என்று கூறுவது தவறு. கூடங்குளத்தில் இப்போதைக்கு 1000 மெகாவாட் மின் உற்பத்திக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதுதான் தமிழ்நாட்டிலேயே அதிக திறன் கொண்டது. ஆனால் அதில் உற்பத்தி அதிகபட்சம் 270 மெகாவாட்டுக்கு மேல் இருக்காது. கல்பாக்கத்தில் இதுவரை 240 மெகாவாட்டுக்கு மேல் உற்பத்தி இல்லை. இவற்றில் தமிழ்நாட்டின் பங்கு மிகவும் குறைவு. இந்தச் சூழலில் தமிழ்நாடு எவ்வாறு மிகுமின் மாநிலமாக மாறும்?

காந்தி மதுரை கருத்தரங்கு
மனித உரிமை பாதுகாப்பு மையம் கருத்தரங்கில் பொறியாளர் காந்தி

தமிழ்நாட்டில் புனல், அனல், எரிவாயு, காற்றாலைகள் மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. சென்னை எண்ணூர். மேட்டூர், தூத்துக்குடி ஆகிய இடங்களில் அனல் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இதில் உள்ள இயந்திரங்கள் அடிக்கடி பழுதடைந்து உற்பத்தி பாதிக்கப்படுகிறது. எரிபொருள் நிலக்கரி பற்றாக்குறை ஏற்படுகிறது. காற்றாலைகள் ஆண்டிற்கு 5 மாதங்கள் மட்டும் தான் இயங்கும்-காற்று பருவமுறைப்படி வீசினால்.

புனல் மின்சாரத்தைப் பொருத்தவரை அணைகளில் நீர் இருந்தால் மட்டுமே மின் உற்பத்தி நடைபெறுகிறது. எரிவாயுவின் மூலமாக குத்தாலம், வழுதூர் ஆகிய இடங்களில் மின் உற்பத்தி நடைபெறுகிறது. ஆனால் அவற்றிலும் அடிக்கடி பழுது ஏற்படுகிறது. ஆனால் எரிகாற்று முலமாக மட்டுமே குறைந்த செலவில் தயாரிக்க முடியும். ஒரு யூனிட் உற்பத்திக்கு 68 பைசா தான் செலவு. ஆனால் அரசு அதை ஊக்குவிப்பதில்லை. ஆனால் தனியார் சிலபேர் இதைப் பயன்படுத்தி மிகுந்த லாபம் அடைகின்றனர்.

தமிழ்நாட்டின் மின் தேவையில் 35 விழுக்காடு மட்டுமே இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. 30% மத்திய தொகுப்பிலிருந்து கிடைக்கிறது. மீதமுள்ள 35% தனியாரிடமிருந்து பெறப்படுகிறது. தனியார் நிறுவனங்கள் அதிக விலைக்கு விற்கின்றன. அவர்களிடம் மின்சாரத்தை வாங்காவிட்டால் அதற்குரிய நிலைக் கட்டணத்தைச் செலுத்தியே ஆகவேண்டும். இந்த வகையில் ஆண்டுக்கு ரூ 650/- கோடி நிலைக் கட்டணமாகத் தனியாருக்குச் செலுத்தப்படுகிறது. இப்படித்தான் மின் வாரியத்துக்கு ரூ 65 ஆயிரம் கோடி கடன் ஏற்பட்டது. இப்போதும் தனியார் நிறுவனங்களிடமிருந்து மின்சாரத்தை மின்வாரியம் வாங்கி விநியோகிக்கலாம். ஆனால் கூடுதல் கட்டணம் தரவேண்டும். காற்றாலை முதலாளிகளுக்கு மட்டுமே ரூ 1000 கோடி பாக்கி வைத்துள்ளது அரசு. கொள்ளை லாபமடிக்கும் முதலாளிகள் தமிழக அரசுக்கு கடன் தர மறுக்கின்றனர். ஜெயலலிதா கடன் வாங்கத் தயாராக இல்லை. சென்னைக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு மட்டும் மின் பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக் கொண்டு ஏனைய தமிழ்நாட்டினை சுடுகாடாக்குவதில் அவருக்கு வருத்தமில்லை. அது மட்டுமல்லாமல் தனியார் முதலாளிகளுக்குச் செயல்படும் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஆண்டுக்கு இரண்டு முறை கட்டணத்தை உயர்த்தியே தீர வேண்டும் என்கிற கொள்கையை வகுத்துள்ளது. எனவே மின்சாரம் கிடைக்கிறதோ இல்லையோ கட்டண உயர்வு கட்டாயம் வரும். இவை தவிர தனியார் முதலாளிகளிடமிருந்து நமது ஆட்சியாளர்கள் வாங்குகின்ற கமிஷனும் மக்கள் தலையில் தான் வந்து விழுகிறது.

தமிழக அரசு ஏற்கனவே 2007-ம் ஆண்டு முதல் திட்டமிட்ட மின் நிலையங்கள் தான் அடுத்த ஆண்டு உற்பத்திக்கு வர இருக்கின்றன. அதில் 600 மெ.வா. மேட்டுர் இரண்டாவது அனல்மின் நிலையம் பி.எச்.இ.எல்க்கு தரப்படாமல் பி.ஜி.ஆர்-என்ற தனியார் நிறுவனத்துக்குத் தரப்பட்டுள்ளது. அவர்களுக்கு அனல் மின் நிலையம் கட்டமைப்பது பற்றிய எந்த முன் அனுபவமும் கிடையாது. ஏற்கனவே மிகுந்த கால தாமதம் ஏற்படுத்தி வரும் அந்த நிறுவனம் உற்பத்தியைத் தொடங்கினாலே நிஜம். இவை ஒருபுறமிருக்க தமிழ்நாட்டின் கடற்கரையோரத்தில் 8 இடங்களில் அடுத்த 3 ஆண்டுகளில் 18 ஆயிரம் மெ.வா. மின்சாரம் தயாரிக்க அனுமதியளிக்கப்பட்டு தனியார் நிறுவனங்கள் பல அதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. எஸ்.ஆர்.எம் குழுமம் 1000 மெ.வா. அப்போலோ மருத்துவமனை குழுமம் மரக்காணத்தில் 1000 மெ.வா. சென்ட்ரல் பவர் ஜென் 1600 மெ.வா. இந்து பாரத் 1023 மெ.வா. ஐ.எல்.எப்.எஸ். 3600 மெ.வா. ஆனால் இவர்கள் தயாரிக்கும் மின்சாரத்தில் ஒரு யூனிட் கூட தமிழ்நாட்டுக்குக் கிடைக்காது. ஏனென்றால் புதிய சட்டங்களின் படி தனியார் முதலாளிகள் தயாரிக்கும் மின்சாரத்தை அவர்கள் விருப்பப்படி யாருக்கு வேண்டுமானாலும் விற்கலாம். அவர்களைத் தடுக்கவோ, கேள்வி கேட்கவோ மாநில அரசுக்கு அதிகாரம் கிடையாது. நம்முடைய நிலம். நம்முடைய நிலக்கரி, நம்முடைய உழைப்பு ஆனால் அதன் பயன் மட்டும் நமக்கு கிடையாது. இதைக் கேள்வி கேட்க முடியாது. இப்படிப்பட்ட சட்டங்களையெல்லாம் கொண்டு வந்தது வேறு யாருமல்ல நம்முடைய செட்டிநாட்டு சிதம்பரமேதான்.

இப்போது சூரிய ஒளி மின்சாரத்தைப் பற்றி பேசுகிறார்கள். சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிக்க அதிகம் முதலீடு தேவைப்படுகிறது. 1 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க 5 ஏக்கர் நிலம் வேண்டும். 1000 மெகாவாட் தயாரிக்க 5000 ஏக்கர் நிலம் வேண்டும். இப்போது சூரிய சக்தி மின்சாரத் தயாரிப்பில் உலக முழுவதும் குத்தகை எடுத்திருப்பவர்கள் வேறு யாருமல்ல ‘நம்முடைய’ வால்மார்ட்டும் மான்சாண்டோவும் தான். எனவே இதிலும் உலக மயமாக்கத்தின் தாக்கம் இருக்கிறது. நம்முடைய மண் முழுவதுமாக அந்நியனுடைய கைக்குப் போகிறது. தண்டகாரண்யா, சட்டீஸ்கர், ஜார்கண்ட், மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் மக்கள் அவர்களது வாழ்விடங்களில் இருந்து விரட்டியடிக்கப்படுகின்றனர். மக்கள் வாழுமிடங்களில் பன்னாட்டு நிறுவனங்கள் அல்லது உள்நாட்டு ராணுவம் போலீசு அதிரடிப்படைகள் உள்ளன. இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பன்னாட்டு நிறுவனங்களின் கைப்பாவைகளாக நம்மை ஆள்கிறவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஆட்டுவிக்கிற பொம்மையாக மக்கள் உருவாக்கப்படுகிறார்கள். பன்னாட்டுக் கொள்ளைக்கு ஏற்ப நமது நாடு உருவாக்கப்படுகிறது. எனவே மக்கள் இவற்றுக்கு எதிராகப் போராட முன்வர வேண்டும். ஏழை மக்கள் சாவை நோக்கித் தள்ளப்படுவதைப் பற்றி நம்மை ஆட்சி செய்கிறவர்கள் கவலைப்படவில்லை. எல்லா வேறுபாடுகளையும் மறந்து மக்கள் ஒன்று திரண்டு போராட வேண்டும்”

மதுரைக்கிளையின் துணைச் செயலாளர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன்

கேள்வி-பதில் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்ததோடு சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (Unlawful Activities Prevention Act) மூன்றாவது முறையாகத் திருத்தப்பட்டிருப்பதைப் பற்றி விளக்கினார்.

வாஞ்சிநாதன் மதுரை கருத்தரங்கு
போராட்டங்களும் அடக்கு முறை சட்டங்களும் பற்றி வழக்கறிஞர் வாஞ்சிநாதன்

“போராடும் உரிமை நமது அடிப்படை உரிமை. அரசியல் சட்டம் அதை உறுதி செய்துள்ளது. ஆனால் போராடும் உரிமையைப் பறிப்பதுதான் இந்த சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம். எது சட்டவிரோதம்? உலக மயமாக்கச் சூழலில் பன்னாட்டு நிறுவனங்கள் வருகையின் பின்னணியில் சட்ட விரோதமாக இருந்தவை அனைத்துமே சட்டப் பூர்வமாக்கப்பட்டு வருகின்றன. புனேயில் தாக்கரேயின் இறப்புக்காக வருந்தமாட்டோம், மும்பையை முடக்கியது வீணானது என்று வலைத்தளம் முகநுர்லில் எழுதிய பெண்களை காவல்துறை கைது செய்து சிறையில் வைத்தது. தமிழ்நாட்டில் சட்டவிரோத என்கவுண்டர்கள் காவல் துறையில் சர்வ சாதாரணமாக நடத்தப்படுகின்றன, ஜெயலலிதா ஒருமுறை தவறு செய்பவர்களைக் கூட குண்டர் சட்டத்தில் சிறையில் தள்ள வேண்டும் என்று அதிகாரிகள் மாநாட்டில் பேசுகிறார். இந்தச் சட்டத்திருத்தத்தின் மூலம் நீதிமன்றக்காவல் 15 நாட்களில் இருந்து 30 நாட்கள் என்று நீட்டிக்கப்பட்டுள்ளது. எந்தவித விசாரணையும் இல்லாமல், சட்ட உரிமைகள் எதுவும் மறுக்கப்படுகிற நிலையில் ஒருவரை 6 மாதங்கள் சிறையில் வைக்கலாம் என்று இந்தச் சட்டம் சொல்கிறது.

இவையெல்லாம் போராடும் மக்களை ஒடுக்கும் நோக்குடன் கொண்டு வரப்படும் சட்டங்களாகும். இவற்றை எதிர்த்துப் போராட மனித உரிமை பாதுகாப்பு மையம் போன்ற மக்களின் வாழ்வுரிமைக்காகப் போராடும் இயக்கங்களுடன் மக்கள் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

மாவட்ட துணைத் தலைவர் வழக்கறிஞர் பா.நடராஜன் நன்றி சொல்ல கூட்டம் நிறைவுற்றது.

________________________________________________________________________________

தகவல்மனித உரிமை பாதுகாப்பு மையம் – மதுரை மாவட்டக்கிளை

__________________________________________________________________________________________

 1. “ஜெயலலிதா ஒருமுறை தவறு செய்பவர்களைக் கூட குண்டர் சட்டத்தில் சிறையில் தள்ள வேண்டும் என்று அதிகாரிகள் மாநாட்டில் பேசுகிறார்.”

  அப்பெடியென்றால் ஜெயலலிதாவை எத்தனை முறை சிறையில் தள்ளுவது?

 2. அணுமின் நிலையம் வேண்டாம். சூரிய மின் சக்தியேதான் வேண்டும் என கூக்குரல் விட்ட வினவு…
  சூரிய சக்தி மின்சாரம் தயாரிக்க உத்தரவிட்ட தமிழக அரசுக்கு ஓர் நன்றி கூட தெரிவிக்க வாய் வரவில்லை.
  ________

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க