Friday, June 2, 2023
முகப்புஉலகம்அமெரிக்காஅறிவை விடுதலை செய் ! ஆரன் ஸ்வார்ட்ஸ் தற்கொலை !!

அறிவை விடுதலை செய் ! ஆரன் ஸ்வார்ட்ஸ் தற்கொலை !!

-

மெரிக்காவைச் சேர்ந்த 26 வயது இளைஞரான ஆரன் ஸ்வார்ட்ஸ் நியுயார்க்கில் உள்ள தன் வீட்டு படுக்கையறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். கணினி நிபுணர், இணைய அறிவாளி, இணைய போராளி என்று பன்முகம் கொண்ட ஸ்வார்ட்ஸை, கார்ப்பரேட் அமெரிக்காவின் வெறிபிடித்த கணினி தொடர்பான குற்றங்கள் சட்டம் கொன்றே விட்டது.

ஸ்வார்ட்ஸ், இன்று இணையத்தில் மிகப் பரவலாக பயன்படுத்தப்படும்; இணையதளங்களில் வெளியாகும் புதிய பதிவுகளை பின் தொடர உதவும்; ஆர்எஸ்எஸ் (RSS) தொழில்நுட்பத்தை உருவாக்கியதில் பெரும் பங்கு வகித்தவர். திறந்தவெளி நூலகம் மற்றும் இன்னும் பிற இணைய சேவை நிறுவனங்களின் பங்குதாரர். இணைய தனிநபர் சுதந்திரம், சுதந்திரமான தகவல் பரிமாற்றம், அறிவுசார் சொத்துடமை எதிர்ப்பு போன்றவற்றிற்காக போராடி வந்தார். இதற்கு ஆதரவான இணைய குழுக்களில் இயங்கி வந்தார். அவர் உருவாக்கிய “முன்னேற்றத்தை கோருவோம் (Demand Progress) என்ற அமைப்பு அமெரிக்காவின் இணைய தணிக்கை சட்டங்களான சோப்பா/பிப்பாவுக்கு எதிரான இயக்கத்தை நடத்தி வந்தது.

“அறிவுசார் ஆவணங்கள் சில தனியார் நிறுவனங்களின் லாபவெறிக்கு மட்டும் பயன்படுவது தவறு, அது அனைவருக்கும் பயன்படுவதாக இருக்க வேண்டும்” என்பது அவரது கருத்து.

போராளி ஆரன் ஸ்வார்ட்ஸ்
போராளி ஆரன் ஸ்வார்ட்ஸ்

அறிவியல் ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வுடன் தொடர்புடைய  ஆவணங்கள், பிற ஆய்வாளர்களின் கட்டுரைகள் என்று நூற்றுக்கணக்கான கட்டுரைகள், புத்தகங்கள், ஆவணங்களை படிக்க வேண்டிய தேவை உள்ளது. இவையனைத்தும் ஒருங்கே கிடைக்கும் இடம் தான் ஜே-ஸ்டோர் (JSTOR) எனும் இணையதளம். பெருமளவு பணச் செலவில்தான் இதன் உறுப்பினராகி ஆவணங்களை பயன்படுத்த முடியும். $50,000 (சுமார் ரூ 25 லட்சம்) வரை ஆண்டு சந்தா செலுத்தி பெரிய ஆய்வு பல்கலைக் கழங்கள் ஜே-ஸ்டோரிலிருந்து அறிவியல் ஆவணங்களை பெற்றுக் கொள்கின்றன.

அப்போது ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தின் சென்டர் பார் எதிக்ஸ் துறையில் ஆய்வு மாணவராக செயல்பட்டு வந்த ஸ்வார்ட்ஸ் ‘அறிவியல் கண்டுபிடிப்புகள் பற்றிய விபரங்கள் உலகில் உள்ள அனைத்து ஆய்வாளர்களுக்கும் பயன் தர வேண்டும், மாறாக அதை காப்புரிமை என்ற பெயரில் ஜே-ஸ்டோர் நிறுவனம் லாபவெறியுடன் பதுக்கி வைக்கிறது’ என்று அதை எதிர்த்து வந்தார்.

‘2010 செப்டம்பரிலிருந்து 2011 ஜனவரி வரை அதே வளாகத்தில் இருக்கும் எம்.ஐ.டி. பலகலைக் கழக கணிணி நெட்வொர்க்கில் தன் மடிக்கணியை இணைத்து எம்.ஐ.டி. நெட்வொர்க் வழியாக ஜே-ஸ்டோரில் இருந்து பல லட்சம் ஆவணங்களை தரவிறக்கினார்’ என்று அவர் மீது மசாச்சுசெட்ஸ் மாவட்ட நீதித்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. 2011 ஜூலை மாதம் தாக்கல் செய்யப்பட்ட அந்த குற்றப் பத்திரிகை, ஆவணங்களை கோப்புகள் பகிர்ந்து கொள்ளும் இணைய சேவைகள் மூலம் வினியோகிக்கத் திட்டமிட்டதாகவும் அவர் மீது குற்றம் சாட்டியது.

அறிவுசார் ஆவணங்கள் மீதான காப்புரிமையை உறுதிசெய்து, அவற்றை பயன்படுத்தி சில தனியார் நிறுவனங்கள் மட்டும் லாபமீட்டுவதற்கும், இணையத்தில் ஆவணங்கள் பகிர்ந்து கொள்ளப்படுவதை தவிர்க்கவும், அதற்காக இணைய வெளி கண்காணிப்பை அதிகப்படுத்தவும் அமெரிக்க அரசு மேலும் மேலும் கடுமையான சட்டங்களை இயற்றியிருக்கிறது. அந்த சட்டங்களையும் அறிவுசார் ஆவணங்களை பகிர்ந்து கொள்வதில் இருக்கும் தடைகளையும் எதிர்த்த அவரது போராட்டமே இறுதியில் ஆரன் ஸ்வார்ட்சின் உயிரை பறித்து விட்டது.

தகவல் தொடர்பு இணைப்பு மோசடி, கணினி மோசடி, பாதுகாக்கப்பட்ட கணினியிலிருந்து சட்ட விரோதமாக தகவல்களை பெற்றது, பாதுகாக்கப்பட்ட ஒரு கணினியை சேதப்படுத்தியது, போன்ற பல பிரிவுகளில் அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தன் மீது சாட்டப்பட்ட குற்றங்களை ஏற்றுக் கொள்ள மறுத்த ஸ்வார்ட்ஸ் 1 லட்சம் டாலர் பிணைத் தொகை செலுத்தி பிணையில் வெளியில் வந்து வழக்கு நடத்திக் கொண்டிருந்தார். இந்த பிரிவுகளில் அவரது குற்றம் உறுதி செய்யப்பட்டால் 30 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அளிக்கப்படலாம் என்ற நிலையில் ஸ்வார்ட்ஸ் கடந்த ஜனவரி 10-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.

ஸ்வார்ட்ஸ் செய்த இணைய அதிர்வை அவர் நிஜத்தில் செய்திருந்தால் சில நூறு டாலர் அபராதம் கட்டி விட்டு வெளிவந்திருக்கலாம். உண்மையில் சொல்லப் போனால் ஸ்வார்ட்ஸ் செய்த இந்தச் செயலால் ஜே-ஸ்டோர் நிறுவனத்திற்கு 1 ரூபாய் கூட இழப்பு ஏற்படவில்லை. ஆனால் ஸ்வார்ட்சின் செயல் மற்றவர்களால் தொடரப்பட்டால் காப்புரிமை என்ற கட்டமைப்பே உடைக்கப்பட்டு, அதன் மூலம் கார்ப்பரேட்டுகள் சம்பாதிக்கும் பல ஆயிரம் கோடி டாலர்கள் லாபம் பாதிக்கப்படும்.

கணினி தொடர்பான குற்றங்களுக்கு அமெரிக்காவில் 30 வருடங்கள் வரை கடுங்காவல் தண்டனை என்றால், தமிழ்நாட்டில் 1 வருடம் பிணையில் வெளிவர முடியாத குண்டர்கள் சட்டம், ஃபேஸ்புக்கில் லைக் போட்டதற்காக சிறை என்று இணைய உலகம் அதிகாரவர்க்கத்தின் நேரடி அடக்குமுறையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

சிறிது காலம் முன்பு வரை பெரிய அளவு கண்டுகொள்ளப்படாமல் இருந்த இணைய மெய்நிகர் உலகம் இன்று மெய் உலகைவிட அதிகமான கண்காணிப்புக்கும் அடக்குமுறைக்கும் அரசாங்கங்களால் உள்ளாக்கப்பட்டுள்ளது. ‘இணையத்தில் குழுக்கள் ஏற்படுத்தி போராடுவதன் மூலம் மாற்றங்களை ஏற்படுத்தி விடலாம்’ என்று செயல்பட்ட ஸ்வார்ட்சும் நடைமுறை உலகின் நிதர்சனங்களால் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்.

சோப்பா இணையம்
டூன்பூல்

போலியோ தடுப்பு மருந்தை கன்டுபிடித்த மருத்துவர் ஜான் சால்க் அதை காப்புரிமை செய்ய மறுத்தார். ‘அது அனைத்துலக மக்களுக்கும் பயன்பட வேண்டும் அதை காப்புரிமை செய்து லாபமீட்ட முடியாது’ என்றார், மேலும் ‘நீங்கள் சூரியனை காப்புரிமை செய்ய முடியுமா’ என்றார்? ஆனால் வேம்பு முதல் எலுமிச்சை வரை அனைத்தையும் காப்புரிமை செய்து அவற்றை பயன்படுத்தும் மக்களிடம் பணமீட்டி லாபமடைந்து விட வேண்டும் என்று நினைக்கிறது முதலாளித்துவம்.

மனிதன் அவன் பெற்ற அனுபவங்களை வாய்வழி கடத்தி, பின் ஓலைகள், குகை ஓவியங்கள், காகிதம், புத்தகம் என அறிவை பகிர்ந்து கொண்டு அறிவு திரட்டல்களின் முழுத் தொகுப்பை பயன்படுத்தி மேலும் மேலும் வளர்கிறது மனித சமுகம். ஒரு விஞ்ஞானியின் கண்டுபிடிப்பு அவரால் மட்டும் நடத்தப்பட்ட ஒரு சாதனை அல்ல, அது இது நாள் வரை அந்தத் துறையில் உழைத்த எண்ணற்ற விஞ்ஞானிகள், நிபுணர்கள், அதற்கு உதவி செய்த உதவியாளர்கள் என இனம், மொழி மதம், நாடு கடந்த கூட்டு உழைப்பின் விளைவு. மொத்த உழைப்பின் விளைவையும் ஒருவர், ஒரு சில நிறுவனங்கள் சொந்தம் கொண்டாடுவதும் அதை வைத்து மற்றவர்களுக்கு அறிவுசார் தகவல்களை மறுப்பதும் இன்றைய முதலாளித்துவ பொருளாதார அமைப்பின் வக்கிரம்.

லாபவெறி, சுரண்டல், ஆதிக்கம் என்பதை எல்லாம் தாண்டி அறிவியல் வளர்ச்சியையே அறிவுசார் சொத்துடமை முடக்குகிறது என்பது நிதர்சனம். பணம் படைத்தவர்கள் மட்டுமே அறிவியல் ஆய்வுகளில் ஈடுபட முடியும் என்ற நிலையும், அறிவியல் வளர்ச்சியில் பரந்து பட்ட ஆய்வாளர்களின் பங்கெடுப்பு தடுக்கப்படுவதும் அறிவியல் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுகிறது.

ஒரு காலத்தில் அறிவியல் திருச்சபைகளின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தபோது வளர முடியாமல் தவித்ததும், பின்பு பிரெஞ்சு புரட்சியின் விளைவாக அறிவியல் விடுவிக்கப்பட்டதும் வரலாறு. கருத்து ரீதியான தளைகளிலிருந்து விடுவிக்கப்பட்ட அறிவியல் இன்று முதலாளிகளின் தனிச்சொத்து, பணம் என்ற தடைகளால் முடக்கப்பட்டுள்ளது. இந்த தளைகளை பாட்டாளி வர்க்கம் உடைக்கும் போதுதான் மனித சமூகத்தின் உண்மையான முன்னேற்றமும் வளர்ச்சியும் சாத்தியமாகும்.

அத்தகைய அரசியல் விடுதலை வராத வரை ஸ்வார்ட்ஸ் போன்ற இளைஞர்களை நாம் காப்பாற்ற முடியாதா?

மேலும் படிக்க

 1. அந்த பாட்டாளி வர்க்கத்தை சின்னாபின்ன படுத்தத்தானே ஒவ்வொரு அரசுகளும் முதலாளிகளும் அயராது பாடுபட்டு கொண்டு இருக்கிறார்கள்1

 2. ##மனிதன் அவன் பெற்ற அனுபவங்களை வாய்வழி கடத்தி, பின் ஓலைகள், குகை ஓவியங்கள், காகிதம், புத்தகம்…##

  பின் குகை ஓவியங்கள், ஓலைகள்,…. இப்படி வந்தால் பொருத்தாமாய் இருக்கும்.

 3. நீண்ட நாட்களாக நினைத்திருந்தது… நீங்கள் முழு rss feed அளிக்கலாமே… பின் தொடர வசதியாக இருக்கும்…

 4. //மனிதன் அவன் பெற்ற அனுபவங்களை வாய்வழி கடத்தி, பின் ஓலைகள், குகை ஓவியங்கள், காகிதம், புத்தகம் என அறிவை பகிர்ந்து கொண்டு அறிவு திரட்டல்களின் முழுத் தொகுப்பை பயன்படுத்தி மேலும் மேலும் வளர்கிறது மனித சமுகம்.//

  // ஒரு விஞ்ஞானியின் கண்டுபிடிப்பு அவரால் மட்டும் நடத்தப்பட்ட ஒரு சாதனை அல்ல, அது இது நாள் வரை அந்தத் துறையில் உழைத்த எண்ணற்ற விஞ்ஞானிகள், நிபுணர்கள், அதற்கு உதவி செய்த உதவியாளர்கள் என இனம், மொழி மதம், நாடு கடந்த கூட்டு உழைப்பின் விளைவு. மொத்த உழைப்பின் விளைவையும் ஒருவர், ஒரு சில நிறுவனங்கள் சொந்தம் கொண்டாடுவதும் அதை வைத்து மற்றவர்களுக்கு அறிவுசார் தகவல்களை மறுப்பதும் இன்றைய முதலாளித்துவ பொருளாதார அமைப்பின் வக்கிரம்.//

  அருமை

 5. ஆமா… நீங்க ஏன் முழு ஃபீட் தர மட்டேங்குறீங்க… ஜெயமோகன் எல்லாம் தர்ராரு….

 6. கார்ப்பொரேட்களின் ஆட்சியில்,ஆதிக்கத்தில் மானமுள்ள அறிஞர்களுக்கு கொலையோ தற்கொலையோ தான் முடிவு.கார்ப்பொரேட்களை ஒழித்தால் தான் மக்கள் நிம்மதியாக வாழமுடியும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க