privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஐரோப்பாநெருக்கடியில் ஜெர்மனி !

நெருக்கடியில் ஜெர்மனி !

-

ஏஞ்சலா மெர்கல்
ஜெர்மன் சான்சலர் ஏஞ்சலா மெர்க்கல்

ரோப்பிய ஒன்றியத்தின் மற்ற நாடுகளுக்கு ‘என்னென்ன செலவுகளை வெட்ட வேண்டும், எப்படி அரசாங்க பட்ஜெட்டை சமன்படுத்த வேண்டும்’ என்று லெக்சர் அடித்து வந்த சட்டாம்பிள்ளை ஜெர்மனியின் பொருளாதாரமும் முதலாளித்துவ நெருக்கடிக்குள் சிக்கி வீழ்ச்சியடைந்திருக்கிறது. ‘2012ம் ஆண்டின் கடைசி காலாண்டில் (அக்டோபர்-நவம்பர்-டிசம்பர்) பொருளாதார வளர்ச்சி குன்றியிருப்பதாக’ ஜெர்மானிய அரசாங்கம் வெளியிட்ட முழு ஆண்டுக்கான புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

யூரோ நாணயத்தைப் பயன்படுத்தும் ஐரோப்பிய ஒன்றியத்தின் 17 நாடுகளில் ஏழு நாடுகளின் பொருளாதாரங்கள் ஏற்கனவே வீழ்ச்சியடைந்து தேங்கியிருக்கின்றன. ஒட்டு மொத்த ஐரோப்பிய ஒன்றிய பொருளாதாரம் 2012ன் மூன்றாவது மற்றும் நான்காவது காலாண்டுகளில் தேக்கமடைந்து பொருளாதார சுணக்கம் என்ற வரையறைக்குள் வந்திருக்கின்றது. தொடர்ந்து இரண்டு காலாண்டுகளில் வளர்ச்சி குன்றுவதை பொருளாதாரச் சுணக்கம் (recession) என்று வரையறுக்கிறார்கள்.

முதலாளித்துவ பொருளாதாரத்தில் சுணக்கம் என்பது நாட்டின் பல கோடி மக்கள் மீது கூடுதல் சுமைகள் சுமத்தப்பட்டிருப்பதையும் பல லட்சம் பேரின் வாழ்வாதாரங்கள் பறிக்கப்பட்டிருப்பதையும் குறிக்கிறது.

ஜெர்மனி 2013ன் முதல் காலாண்டில் வீழ்ச்சியை தவிர்த்து விடும் என்று பல பொருளாதார நிபுணர்கள் நம்பினாலும், ஜெர்மனியும் ஐரோப்பிய ஒன்றியத்தின் மற்ற நாடுகளை போலவே பொருளாதாரச் சுணக்கத்தில் சிக்கிக் கொள்ளும் போக்கே தெரிகிறது. ஜெர்மானிய பொருளாதாரத்தின் வளர்ச்சி 2012ன் முதல் காலாண்டில் 0.8 சதவீதமாகவும், 2ம் காலாண்டில் 0.3 சதவீதமாகவும், 3ம் காலாண்டில் 0.2 சதவீதமாகவும், இறுதியாக இப்போது முடிந்த 4வது காலாண்டில் -0.5 சதவீதமாகவும் வீழ்ந்திருப்பதை பார்த்தால் அடுத்த காலாண்டும் இதே வீழ்ச்சிப் போக்கு தொடரும் வாய்ப்புகள் அதிகம்.

‘பொதுத்துறையில்  மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.1 சதவீதம் மிச்சப்படுத்தியிருப்பதாக’  இந்த ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பாக ஜெர்மன் அரசாங்கம் திருப்திப்பட்டுக் கொண்டிருக்கிறது.

‘பொது மக்களுக்கான நலத்திட்டங்களை வெட்டி, வேலை வாய்ப்புகளை குறைத்து, வரிகளை அதிகப்படுத்தி பட்ஜெட்டை சமன்படுத்துவதுதான் வளர்ச்சிக்கான வழி’ என்ற கொள்கையை ஐரோப்பிய ஒன்றியம் பொருளாதார வளர்ச்சிக்கான கசப்பு மருந்தாக பரிந்துரைத்து வருகிறது. அதை ஏற்றுக் கொண்டு செயல்படுத்திய ஜெர்மானிய பொருளாதாரமும் வீழ்ச்சியடைந்திருப்பது,  நெருக்கடியை தீர்த்துக் கொள்வதற்கான முதலாளித்துவ வழிமுறைகள் திவலாகிப் போயிருப்பதைக் காட்டுகிறது.

பற்றாக்குறையை குறைப்பது என்ற பெயரில் ஸ்பெயின், கிரீஸ் போன்ற நாடுகளில் மக்களுக்கான அடிப்படை நலத் திட்டங்கள் ஈவு இரக்கமின்றி ஒழித்துக் கட்டப்பட்டிருக்கின்றன. பல லட்சக்கணக்கான பொதுத்துறை ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டு தெருவில் விடப்பட்டுள்ளனர்.

இதுவரை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வளர்ச்சியை சமாளித்து வந்த ஜெர்மானிய பொருளாதாரம் இந்த காலாண்டில் ஏற்றுமதி வீழ்ச்சியின் காரணமாக பின்னடைவை சந்தித்திருக்கிறது. போராடிக் கொண்டிருக்கும் ஸ்பெயின், போர்ச்சுக்கல், கிரீஸ் போன்ற சக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு ஜெர்மனியின் ஏற்றுமதிகள் குறைந்திருக்கின்றன.   ஜெர்மானிய தொழில் நிறுவனங்கள் புதிய முதலீடுகளை குறைத்திருக்கின்றன.

யூரோவின் மதிப்பு அமெரிக்க டாலருக்கும் பிரிட்டிஷ் பவுண்டுக்கும் எதிராக அதிகமாகியிருப்பதால், ஜெர்மனியிலிருந்து ஏற்றுமதியாகும் பொருட்களின் விலை அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் உயர்கிறது. அதனால் ஜெர்மானிய ஏற்றுமதி குறைகிறது.  அமெரிக்க டாலருக்கு எதிரான யூரோவின் மதிப்பு கடந்த 11 மாதங்களில் உயர்ந்த அளவையும் பிரிட்டிஷ் பவுண்டுக்கு எதிரான மதிப்பு கடந்த 9 மாதங்களில் உயர்ந்த அளவையும் எட்டியிருக்கின்றது.

பிராங்க்பர்ட்
ஜெர்மானிய வணிக நகரம் பிராங்க்பர்ட்

‘யூரோவினால்தான் எல்லா பிரச்சனைகளும், தனித்தனி நாணயங்களை வைத்திருந்தால் பிரச்சனையை தவிர்த்திருக்கலாம்’ என்ற இன்னொரு முதலாளித்துவ பொருளாதார நிபுணர்களின் வாதத்தை பொய்யாக்கும்படியாக யூரோவில் சேராமல் பவுண்டை தொடர்ந்து பயன்படுத்தும் ‘இங்கிலாந்தின் பொருளாதாரமும் 2012ன் இறுதி காலாண்டில் சுருங்கியிருக்கிறது’ என்று பொருளாதார நிபுணர்கள் கணிக்கிறார்கள். அதை புள்ளிவிபரங்கள் உறுதி செய்தால் பேங்க் ஆப் இங்கிலாந்து வளர்ச்சியை ஊக்குவிக்க பணப் புழக்கத்தை அதிகரிக்கும். அது யூரோவுக்கு எதிரான பவுண்டின் மதிப்பை இன்னும் குறைத்து ஜெர்மனியின் மீதான நெருக்கடியை அதிகரிக்கும்.

ஜெர்மனியில் தீவிரமாகும் பொருளாதார நெருக்கடி, ஜெர்மனியிடமிருந்து நிதி உதவி பெற்று மற்ற ஐரோப்பிய நாடுகளை கைதூக்கி விடலாம் என்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் திட்டத்தை பணால் ஆக்கியிருக்கிறது.

இப்படியாக, ‘பக்கத்து வீட்டுக்காரனை பிச்சைக்காரனாக்கி பிழைப்பது’ போன்று நெருக்கடியை அடுத்த நாட்டுக்குத் தள்ளி விட்டுதான் ஒவ்வொரு நாடும் நிலைமையை சமாளிக்கப் பார்க்கின்றன.

மாறாக, உள் நாட்டில் அரசாங்கத் திட்டங்களை அதிகரித்து வேலை வாய்ப்பையும் பொருளாதார வளர்ச்சியையும் அதிகரிக்க முயற்சித்தால் பட்ஜெட் பற்றாக்குறை அதிகமாகி வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நம்பிக்கையிழந்து வெளியேறி நெருக்கடி தீவிரமாகும், அரசாங்கத் திட்டங்களை வெட்டி பற்றாக்குறையை குறைத்தால் வளர்ச்சி குன்றி, வேலை இழப்புகளும் மக்கள் மீதான சுமையும் அதிகரிக்கும்.

‘முன்னால் போனால் கடிக்கும், பின்னால் போனால் உதைக்கும்’ என்ற கழுதை போல நடந்து கொள்ளும் முதலாளித்துவ பொருளாதாரத்தின் நெருக்கடியிலிருந்து விடுவித்துக் கொள்ள வழி தெரியாமல் மக்களை முட்டுச் சந்தில் கொண்டு நிறுத்தியிருக்கின்றன ஐரோப்பிய நாடுகளின் அரசுகள்.

மேலும் படிக்க

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க