Thursday, April 15, 2021
முகப்பு உலகம் அமெரிக்கா அமெரிக்காவில் ஒரு அவுட்சோர்சிங் காமெடி !

அமெரிக்காவில் ஒரு அவுட்சோர்சிங் காமெடி !

-

ப்படி ஒரு வேலைக்கு ஆண்டுக்கு ரூ 1.25 கோடி சம்பளம் என்றால் எப்படி இருக்கும்?

காலை 9 மணி  அலுவலகத்துக்கு வந்து ரெட்இட் தளத்தை படிக்க  வேண்டும். சில பூனை வீடியோக்களை  பார்க்க  வேண்டும்

காலை 11.30 மணி    மதிய உணவு இடைவேளை

மதியம் 1 மணி       ஈபே நேரம்

மதியம் 2 மணி      பேஸ்புக், லிங்க்ட்-இன்

மாலை 4.30 மணி    நாள் இறுதி அறிக்கை நிர்வாகத்துக்கு அனுப்புதல்

மாலை 5 மணி     வீட்டுக்கு

இப்படி ஒரு கனவு வேலை எல்லோருக்கும் கிடைத்து விடுவதில்லை. ஆனால் சுயமுனைப்பு இருந்தால் அப்படி ஒரு வேலையை உருவாக்கிக் கொள்ளலாம். சில ஆண்டுகளாக இப்படி வேலை செய்து வந்த “பாப்” என்பவரைப் பற்றிய அறிக்கையை வெளியிட்டிருக்கிறது அமெரிக்காவின் பிரபல தொழில் நுட்ப நிறுவனமான வெரிசான்.

ஆம், 40களின் நடுவிலான வயதுடைய “பாப்”, அமெரிக்காவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு நிர்வாக சேவை நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார். அவரது ஆண்டு சம்பளம் $250,000 (சுமார் ரூ 1.25 கோடி). சற்றே வேலைப் பளு அதிகம் தான். ஆனால் “பாப்” இதை எளிமையாக கையாண்டார்.

“பாப்” வேலை செய்த நிறுவனம் ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்வதற்கு வசதியாக வி.பி.என். எனப்படும் மெய்நிகர் தனியார் இணைப்புச் சேவை (VPN)யை இரண்டு ஆண்டுகளாக செயல்படுத்தியிருந்தது. நிறுவனத்தின் பாதுகாப்புப் பிரிவு மே 2012ல் அந்த சேவை தொடர்பான கணினி பதிவுகளை ஆய்வு செய்ததில் சீனாவில் இருக்கும் ஷென்யாங்கிலிருந்து இந்த வசதி பயன்படுத்தப்படுவது தெரிய வந்தது.

அதற்கு பயன்படுத்தப்பட்டிருந்த கணக்குக்கு உரிமையாளரான “பாப்” அலுவலகத்தில் கணினி திரையை நோக்கி தனது இருக்கையில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அவர் C, C++, பெர்ல், ஜாவா, ரூபி, பி.எச்.பி., பைதான் போன்ற கணினி மொழிகளில் நிபுணர். நிறுவனத்தில் நீண்ட காலம் பணி புரிபவர். யாரையும் தொந்தரவு செய்யாத அமைதியான குடும்பப் பாங்கான மனிதர். அவருக்கு செல்லமாக “பாப்” என்று பெயர் சூட்டியிருக்கிறது வெரிசான்.

‘”பாப்”பின் கணினியில் புகுந்துள்ள ஏதோ ஒரு திருட்டு நிரல் மூலம் யாரோ சீனாவிலிருந்து தங்களது கணினி வலைக்குள் நுழைந்து விட்டார்கள்’ என்று அதிர்ச்சியடைந்த நிறுவனம் இதைப் பற்றி ஆராய்ந்து சரி செய்ய வெரிசான் ஆய்வாளர்களை உதவிக்கு அழைத்தது.

வெரிசானின் ஆய்வில், ‘சீனாவிலிருந்து வி.பி.என் பயன்படுத்தப்படுவது புதிதாக நடக்கவில்லை’ என்று தெரிந்தது. கைவசம் இருந்த 6 மாத கணினி பதிவுகளின் படி குறைந்த பட்சம் 6 மாதங்களுக்கு இது நடந்து வந்திருக்கிறது. “பாப்”பின் கணினியில் ஏதாவது நச்சு நிரல் புகுந்திருக்கிறதா என்று ஆய்வு செய்தது வெரிசான். அதற்காக கணினியில் அழிக்கப்பட்டு ஆனால் இன்னும் மறுபடியும் பயன்படுத்தப்படாத சேமிப்பிலிருந்து அழிக்கப்பட்ட பழைய கோப்புகளை மீட்ட போது ஷென்யாங்கில் இருக்கும் ஒரு சீன நிறுவனத்துக்கு அனுப்பிய நூற்றுக் கணக்கான இன்வாய்ஸ்களை கண்டுபிடித்தது வெரிசான்.

அதாவது, “பாப்” அவருக்குக் கொடுக்கப்படும் வேலையை சீனாவில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு அவுட்சோர்ஸ் செய்துவிட்டார்- அந்த வேலையைச் செய்ய வருடத்திற்கு $50,000 (சுமார் ரூ 25 லட்சம்) சீன நிறுவனத்திற்கு கொடுத்திருக்கிறார்.

இதனால் நிறுவனத்துக்கு நடக்க வேண்டிய வேலைகளில் எதுவும் பாதிப்பில்லைதான். கடந்த பல ஆண்டுகளாக அவருக்கு மிகச் சிறந்த மதிப்பீடுகள் கிடைத்திருக்கின்றன. அவரது நிரல்கள் சிறப்பாக எழுதப்பட்டிருந்தன; தெளிவாக இருந்தன; நேரத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு காலாண்டிலும் அவர் அந்த அலுவலகத்தின் மிகச் சிறந்த நிரலாளர் என்று பாராட்டப்பட்டிருந்தார்.

வங்கியை கொள்ளையடிக்கும் கொள்ளைகாரனிடம் பிக்பாக்கெட் அடித்த திருடனின் கதைதான் “பாப்”பின் கதை. வரும் சம்பளத்தில் கொஞ்சம் அங்கே கொடுத்து வேலையை முடித்துக் கொடுத்தார். சிறந்த, திறமையான பணியாளர் என்று பெயரும் கிடைத்தது. நியாயமாக பார்த்தால் “பாப்”புக்கு பதவி உயர்வு கொடுத்து அந்த நிறுவனத்தின் மேலாளர் ஆக்கி இருக்க வேண்டும். ஆனால், முதலாளித்துவ அறம் இதை குற்றம் என்கிறது. வெரிசானின் இந்த கண்டுபிடிப்புக்குப் பிறகு “பாப்” வேலை நீக்கம் செய்யப்பட்டார்.

பூனை

பாப் இந்த உத்தியை தானாக கண்டுபிடிக்கவில்லை. உலகமயமாக்கல் காலகட்டத்தில் குறைந்த கூலிக்கு வெளிநாடுகளில் வேலைகளை செய்து வாங்குவதை முதலாளித்துவ நிறுவனங்கள்தான் அவருக்கு கற்றுக்கொடுத்திருந்தன.

இந்த சம்பவத்தைப் பற்றி விசாரணை செய்த வெரிசானின் வேலன்டைன் என்ற அதிகாரி ‘”பாப்” போல இன்னும் பலர் இது போன்று செயல்படுவதாகவும், அவர்களைக் கண்டுபிடிக்க முயற்சித்துக் கொண்டிருப்பதாகவும்’ சொல்லியிருக்கிறார். சீனாவிலிருந்து நேரடியாக அலுவலகத்தில் இணைக்கச் சொல்லாமல் தனது வீட்டுக் கணினி மூலமாக வழி நடத்தியிருந்தால் “பாப்” கூட பிடிபடாமல் தப்பித்திருந்திருக்கலாம்.

அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் ஊழியர்களுக்கு சரியான கூலி, 8 மணி நேர வேலை, ஊக்கத் தொகை, வசதியான வேலைச் சூழல் மற்றும் இதர சலுகைகள் கொடுக்க வேண்டும். ஊழியர்கள் ஒன்று சேர்ந்து போராடி விடக் கூடாது என்பதற்காக பல சலுகைகளை கொடுத்து உழைக்கும் வர்க்கத்தை அமைதிப்படுத்தி வைத்திருக்க வேண்டியிருந்தது. கம்யூனிசம் வந்து விடக் கூடாது என்று உழைப்பவர்களுக்கு வசதிகளை கொடுத்து வைத்திருந்தால் போராட்டங்களையும் புரட்சியையும் தவிர்த்து விடலாம். ஆனால் முதலாளித்துவத்தின் புனிதமான லாப வேட்டைக்கு அது மிகப்பெரிய ஆப்பாக இருந்தது.

அதைத் தாண்டுவதற்கு உலகமயமாக்கல் முதலாளிகளுக்கு உருவாக்கிக் கொடுத்த வழி, ‘குறைந்த கூலிக்கு, மோசமான பணிச் சூழலில், அடிமைகளைப் போல், நேரம் காலம் பார்க்காமல் உழைக்க, வளரும் நாடுகளில் இருக்கும் மக்கள் கூட்டத்தைப் பயன்படுத்தி தேவையான வேலைகளை செய்து வாங்கிக் கொள்வது.’ அமெரிக்காவில் ஒரு சேவையை உருவாக்கும் செலவில் பல மடங்கு குறைவாக சீனாவிலோ, இந்தியாவிலோ, ஆப்பிரிக்காவிலோ வேலையை முடித்து வாங்கி விடலாம். கிளம்பினார்கள் முதலாளிகள். அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் வேலைகள் குறைந்தன, சீனாவிலும் இந்தியாவிலும் மனிதத்தன்மை குறைந்தது. முதலாளிகளின் உற்பத்தியும் லாபமும் உயர்ந்தது.

பன்னாட்டு நிறுவனங்களின் அவுட்சோர்சிங்கை கிண்டல் செய்து ஆனியன் இணைய தளம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வீடியோவை தயாரித்திருந்தது.

அந்தக் கேலி படத்தை நடைமுறையாக மாற்றியதுதான் “பாப்”பின் திறமை. இதையே அந்த நிறுவனம் செய்திருந்தால் அது பொருளாதாரத் திறமை. “பாப்” செய்ததால் துரோகம். அந்த நிறுவனம் இனி வரும் காலத்தில் ருசிகண்ட பூனையாக, தானே இதைத் தான் செய்யப் போகிறது.

பன்னாட்டு நிறுவனங்கள் தமது பெருமளவு லாப வேட்டைக்காக நடத்தும் சுரண்டலைப் போல “பாப்” சிறு அளவில் சுரண்டி இருக்கிறார். அழுகிப் போயிருக்கும் முதலாளித்துவம் தன் அழுகிய காயங்களை வெளியே காட்டிகொண்டிருகிறது. பாப் அந்த அழுகலின் ஒரு பக்கம் மட்டும்தான்.

‘கம்யூனிச சமூகத்தில் எல்லோரும் சோம்பேறிகள் ஆகி விடுவார்கள்’ என்று அவதூறு பேசினர் முதலாளித்துவ நிபுணர்கள். பொதுவுடமை சமூகத்தில் உழைப்பின் மீதான சலிப்பு ஒழிக்கப்பட்டு ஒவ்வொரு தனிமனிதரும் தனது திறமையை ஆகச் சிறந்த முறையில் வெளிப்படுத்தி உழைப்பை ரசித்து செய்வதற்கான சமூகச் சூழலும் அந்த சமூக உழைப்பின் விளைவுகள் ஒட்டு மொத்த சமூகத்துக்கும் பலன் அளிப்பதாகவும் இருக்கும். ஆனால் முதலாளித்துவ சமூகத்திலோ பிறரின் உழைப்பை சுரண்டி சுயநலமாகவும் சோம்பேறியாகவும் வாழ்பவர்கள்தான் செழிக்கிறார்கள்.

_____________________________________________

– ஆதவன்

_____________________________________________

மேலும் படிக்க

 1. “பொதுவுடமை சமூகத்தில் உழைப்பின் மீதான சலிப்பு ஒழிக்கப்பட்டு ஒவ்வொரு தனிமனிதரும் தனது திறமையை ஆகச் சிறந்த முறையில் வெளிப்படுத்தி உழைப்பை ரசித்து செய்வதற்கான சமூகச் சூழலும் அந்த சமூக உழைப்பின் விளைவுகள் ஒட்டு மொத்த சமூகத்துக்கும் பலன் அளிப்பதாகவும் இருக்கும்”

  சும்மா சொல்லக்கூடாது. சும்மா சிரிக்கணும்-ன்னு உங்க தளத்துக்கு வந்த என்னை வாய் விட்டு பலமா சிரிக்க வெச்சிட்டீங்க. யப்பா யப்பா தாங்க முடியல.

  • நீங்கள் எந்த சமூகத்தை விரும்புகிறீர்கள் ? அந்த சமூகத்தில் உழைப்பின் விளைவுகள் எப்படி இருக்கும்?

   // சும்மா சொல்லக்கூடாது. சும்மா சிரிக்கணும்-ன்னு உங்க தளத்துக்கு வந்த என்னை வாய் விட்டு பலமா சிரிக்க வெச்சிட்டீங்க. யப்பா யப்பா தாங்க முடியல.//

   என்னுடைய கடும் கண்டனம்.

 2. //‘கம்யூனிச சமூகத்தில் எல்லோரும் சோம்பேறிகள் ஆகி விடுவார்கள்’ என்று அவதூறு பேசினர் முதலாளித்துவ நிபுணர்கள். பொதுவுடமை சமூகத்தில் உழைப்பின் மீதான சலிப்பு ஒழிக்கப்பட்டு ஒவ்வொரு தனிமனிதரும் தனது திறமையை ஆகச் சிறந்த முறையில் வெளிப்படுத்தி உழைப்பை ரசித்து செய்வதற்கான சமூகச் சூழலும் அந்த சமூக உழைப்பின் விளைவுகள் ஒட்டு மொத்த சமூகத்துக்கும் பலன் அளிப்பதாகவும் இருக்கும். ஆனால் முதலாளித்துவ சமூகத்திலோ பிறரின் உழைப்பை சுரண்டி சுயநலமாகவும் சோம்பேறியாகவும் வாழ்பவர்கள்தான் செழிக்கிறார்கள்.//

  கட்டுரையின் இந்த செய்தி முக்கியத்துவமானது. இதை எப்படி முதலாளித்துவ சிந்தனையில் திளைக்கும் ஒரு நபர் எப்படி புரிந்துகொள்வார் என நினைத்து கொண்டே பின்னூட்ட பெட்டிக்கு வந்தால், முத்துக்குமார் சிரிக்கிறார். கஷ்டம் தான். 🙂

 3. // சும்மா சொல்லக்கூடாது. சும்மா சிரிக்கணும்-ன்னு உங்க தளத்துக்கு வந்த என்னை வாய் விட்டு பலமா சிரிக்க வெச்சிட்டீங்க. யப்பா யப்பா தாங்க முடியல.//- முத்துக்குமார்

  இந்த உத்தியை தானாக கண்டுபிடிக்கவில்லை. முதலாளித்துவ நிறுவனங்கள்தான் அநாகரீக மொழிகளை அவருக்கு (முத்துக்குமார்)கற்றுக் கொடுத்திருந்தன.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க