privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

படிக்கட்டுப் பயணப் படுகொலைகள் !

-

சென்னைக்கு அருகேயுள்ள பெருங்குடியில் கடந்த மாதம் 10-ஆம் தேதியன்று காலையில் சென்னை மாநகரப் பேருந்தும் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிவந்த லாரியும் ஒன்றோடொன்று உரசிக் கொண்டதில், அப்பேருந்தின் படிக்கட்டில் பயணம் செய்துவந்த நான்கு இளம் மாணவர்களின் உயிர் அநியாயமாகப் பறிக்கப்பட்டது; மேலும் மூன்று மாணவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின் நல்வாய்ப்பாக உயிர் பிழைத்தனர்.

பதின் வயதைச் சேர்ந்த மனோஜ்குமார், விஜயன், பாலமுருகன், சேகர் என்ற இந்த நான்கு மாணவர்களின் சாவும் தமிழக அரசு பொதுப் போக்குவரத்தைத் தொடர்ந்து அலட்சியப்படுத்திவருவதன் விளைவாகத்தான் நடந்திருக்கிறது. வேண்டுமென்றே அலட்சியமாக நடந்துகொண்டு நான்கு உயிர்களைப் பறித்திருக்கும் தமிழக அரசு மீது கொலைக் குற்றம் சுமத்த வேண்டும். ஆனால், அரசு, முதலாளித்துவப் பத்திரிகைகள், போலீசு, நீதிமன்றம் என நம்மை ஆள்வோர் அனைவரும் ஒன்றாகக் கைகோர்த்துக் கொண்டு, இச்சம்பவத்தை ஏதோ எதிர்பாராமல் நேர்ந்துவிட்ட விபத்து போலவும், முக்கியமாக மாணவர்களின் சாகசக் கலாச்சாரத்தால் நேர்ந்துவிட்ட மரணமாகவும் சித்திரித்து, இறந்துபோன மாணவர்களை மட்டுமல்ல, ஒட்டுமொத்த சென்னை மாணவர்களையும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றிவிட்டனர்.

இந்தச் சம்பவம் நடந்தவுடனேயே, மாநகரப் பேருந்துகளில் பயணம் செய்து பள்ளி-கல்லூரிகளுக்குச் சென்று திரும்பும் ஏழை மாணவர்கள் மீது அக்கறை கொண்டவனைப் போல, பொது போக்குவரத்தில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த விசாரணையைத் தானே முன்வந்து தொடங்கியது, உயர் நீதிமன்றம். அவ்விசாரணையின்பொழுது, “இந்த விபத்து நடந்த பழைய மகாபலிபுரம் சாலையில் காலை 8 மணியிலிருந்து 9 மணிக்குள் 95 பேருந்துகளை இயக்குகிறோம். ஆனால், மாணவர்கள் எப்போதுமே கடைசிப் பேருந்தில்தான் பயணிக்கின்றனர். மேலும், அவர்கள் படிக்கட்டில் பயணம் செய்யவே விரும்புகின்றனர்” என வாதிட்டார், தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன்.

கொல்லப்பட்ட மாணவர்கள்
சாகசத்திற்காக அல்ல, பள்ளி-கல்லூரிக்குப் போவதற்காகப் படிக்கட்டில் நின்று பயணம் செய்ய நேரிட்டதால் உயிரைப் பறிகொடுத்த (இடமிருந்து) விஜயன், சேகர், பாலமுருகன், மனோஜ்குமார்

இது அடுக்கமாட்டாத பொய் என்பது தினந்தோறும் சென்னை மாநகரப் பேருந்தில் பயணம் செய்யும் ஒவ்வொரு மாணவனுக்கும், தொழிலாளிக்கும் தெரியும். ஆனால், ஏ.சி. காரிலேயே பங்களாவிலிருந்து நீதிமன்றத்துக்கும், அங்கிருந்து சீட்டுகிளப்புக்கும் பயணம் செய்யும் நீதிபதிகளுக்குத் தெரியவில்லை. எனினும், அவர்கள் புத்தியிலும் பதியும்படி சென்னை போக்குவரத்து தொடர்பாக சில புள்ளிவிவரங்கள் பத்திரிகைகளில் வெளிவந்தன. “சென்னை மாநகரில் தினந்தோறும் 5,000 பேருந்துகளை இயக்குவதற்குத் தமிழக அரசு உரிமம் பெற்றிருந்தாலும், 3,300 பேருந்துகளை மட்டுமே இயக்குவதாகவும், இந்த 3,300-லும் 600 பேருந்துகள் தொழிலாளர் பற்றாக்குறையால் அடிக்கடி நிறுத்தப்படுவதாகவும்” அந்தப் புள்ளிவிவரம் கூறியது. மேலும், காரப்பாக்கம், சிறுசேரி, பெருங்குடி, அஸ்தினாபுரம் பகுதிகளில் பேருந்துகள் இயக்கப்படுவது படுமோசம் என்றும் அம்பலப்படுத்தியது, ஹிந்து நாளிதழ்.

இதுவொருபுறமிருக்க, பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் குறைவான கட்டணத்தில் ஓடும் சாதாரணப் பேருந்துகள் அதிகமாக இயக்கப்பட்டன. ஆனால், கடந்த இரண்டு மூன்றாண்டுகளாக, போக்குவரத்துக் கழகத்தின் நட்டத்தைக் குறைப்பது என்ற பெயரில், அநியாயக் கட்டணமுள்ள டீலக்ஸ் பேருந்துகளின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டு, வெள்ளை போர்டு பேருந்துகள் குறைக்கப்பட்டன. இலவச பஸ் பாஸ் வைத்துள்ள மாணவர்கள் இந்த வெள்ளை போர்டு பேருந்துகளைத் தவிர, டீலக்ஸ் பேருந்துகளில் ஏறக்கூடாது என்ற கெடுபிடியும் உருவாக்கப்பட்டது. இப்படிக் குறைவாகப் பேருந்துகள் இயக்கப்படுவதால், 73 பேர் (48 பேர் அமர்ந்துகொண்டும், 25 பேர் நின்றுகொண்டும்) மட்டுமே பயணம் செய்ய வேண்டிய பேருந்தில் நெரிசல் நேரங்களில் 150 பேர் வரை பயணம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இந்தக் கூட்ட நெரிசல்தான் மாணவர்கள் மீதும் இளைஞர்கள் மீதும் படிக்கட்டுப் பயணத்தைத் திணிக்கிறது.

தனியார் பள்ளிகளில் படிக்கும் பணக்கார, நடுத்தர வர்க்க மாணவர்கள் பள்ளிக்குச் செல்வதற்கு கார், ஆட்டோ, டூ வீலர், பள்ளிப் பேருந்து எனப் பல வாய்ப்புகள் உள்ளன. ஆனால், வீட்டிலிருந்து தொலைதூரத்திலுள்ள பள்ளிக்கும் கல்லூரிக்கும் போவதற்கு மாநகரப் பேருந்தை மட்டுமே நம்பியிருக்கும் ஏழை மாணவனுக்கு உயிரைப் பணயம் வைத்துப் படிக்கட்டில் தொங்க வேண்டியதுதான் விதிக்கப்பட்டிருக்கிறது. நிறுத்தத்தில் நிற்காமல் செல்லும் பேருந்துகளைத் துரத்திக்கொண்டு போய் ஏற வேண்டிய கட்டாயம் அவன் தலைக்கு மேல் தொங்குகிறது.

படிக்கட்டில் பயணம் செய்வது போக்குவரத்து விதிமுறைகளுக்கு எதிரானது; உயிருக்கே ஆபத்து ஏற்படுத்தக் கூடியது என்பது ஒவ்வொரு மாணவனுக்கும் தெரியாதா என்ன? ஆனால், நெரிசல் மிகுந்த நேரங்களில் இந்த விதிமுறையை மீறாமல், உயிரைப் பணயம் வைக்கும் சாகசத்தில் இறங்காமல் வேறென்ன செய்ய முடியும்?

‘‘நாங்கள்லாம் உள்ளே போக ஆரம்பிச்சோம்னா கேர்ல்ஸ்ங்க, வயசானவங்க இவங்கள்லாம் ஃபுட்போர்டு அடிக்க வேண்டியிருக்கும்ணே. அடிக்கடி பசங்க ஃபுட்போர்டு அடிக்கிற மாதிரி பத்திரிகையில ஃபோட்டா போடுறீங்களே, காலியா இருக்குற பஸ்ல நாங்க ஃபுட்போர்டு அடிக்கற மாதிரி ஒரு போட்டாவை காண்பீங்க” என நக்கீரன் இதழ் நிருபரிடம் ஜெயக்குமார், கார்த்திக் என்ற இரு மாணவர்கள் கேட்டுள்ளனர்.

படிக்கட்டில் பயணம் செய்ய வேண்டிய கட்டாயம் மாணவர்கள் மீது மட்டுமா சுமத்தப்படுகிறது? சென்னை நகரில் ஓடும் மின்சார ரயில்களில் நெரிசல் நேரங்களில் நடுத்தர வயதினர்கூடத் தொங்கிக்கொண்டு போவதைப் பார்க்க முடியும். நகர்ப்புறங்களிலிருந்து கிராமங்களுக்குச் செல்லும் பேருந்துகளில் படிக்கட்டில் மட்டுமல்ல, கூரை மீது உட்கார்ந்துகொண்டு பயணிகள் செல்வதையும் சர்வசாதாரணமாகப் பார்க்க முடியும். இவர்களையெல்லாம் சாகசம் செய்கிறார்கள் என மனம் போன போக்கில் குற்றஞ்சுமத்த முடியுமா?

அரசு, அருகாமைப் பள்ளிகளைத் தொடங்கி நடத்தினால் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு பள்ளிக்கு வர வேண்டிய கட்டாயமும் நிர்பந்தமும் ஒழிந்துவிடும் – எனக் கல்வியாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். லாரி இடித்து நசுங்கிச் செத்துப் போன இந்த நான்கு மாணவர்களை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்களது குடும்பங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நகரத்தினுள் குடியிருந்து வந்தன. நகரத்தை அழகுபடுத்துவது, அடிக்கட்டுமானத்தை மேம்படுத்துவது, குடிசைகளை ஒழிப்பது – எனப் பல்வேறு சால்ஜாப்புகளைச் சொல்லி, அந்த நான்கு மாணவர்களின் குடும்பங்களை மட்டுமின்றி, ஆயிரக்கணக்கான அடித்தட்டு மக்களின் குடும்பங்களை நகரத்திற்கு வெளியே துரத்தியடித்தது, அரசு.

இப்படி அரசால் துரத்தியடிக்கப்பட்ட மக்கள் வாழ்ந்துவரும் செம்மஞ்சேரி, பெருங்குடி, கண்ணகி நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் பள்ளிக்கூடம், மருத்துவமனை, போக்குவரத்து – என எந்தவொரு வசதியும் செய்து தரப்படவில்லை. இதனால் இங்கு வசிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ள குடும்பங்கள் வேலைக்கும், கல்விக்கும் பல கிலோமீட்டர் பயணம் செய்து நகரத்தின் மையத்திற்கு வந்து போவது தவிர்க்க முடியாததாக உள்ளது.

அருகாமைப் பள்ளிகளைத் தொடங்கியிருந்தால், சாதாரணப் பேருந்துகளின் எண்ணிக்கையையும் தரத்தையும் மேம்படுத்தியிருந்தால், சென்னையில் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்து வரும் படிக்கட்டு பயணத்தையும் அதனால் ஏற்படும் அநியாயச் சாவுகளையும் ஒழித்துவிட முடியும். ஆனால், தனியார்மயம்-தாராளமயம் என்ற பொருளாதாரக் கொள்கை இந்த இரண்டுக்குமே எதிராக இருக்கிறது. தனியார் பள்ளி முதலாளிகளின் இலாபத்திற்காக அரசுப் பள்ளிகள் ஒழிக்கப்படுகின்றன. இந்தியாவிற்குள் நுழைந்துள்ள பன்னாட்டு மோட்டார் கம்பெனிகளின் விற்பனையை அதிகப்படுத்துவதற்காக, பொதுப் போக்குவரத்தை மேம்படுத்துவது கைகழுவப்படுகிறது.

பொதுப் போக்குவரத்தை ஒழித்துக்கட்டி வரும் தனியார்மயம்-தாராளமயம்தான் மனோஜ்குமார், விஜயன், பாலமுருகன், சேகர் என்ற இந்த நான்கு மாணவர்களின் உயிரைக் குடித்திருக்கிறது; இந்தத் தனியார்மயம்-தாராளமயம்தான் மாணவர்களின் இலவசக் கல்வி உரிமையைப் பறித்து வருகிறது. இந்தத் தனியார்மயம்-தாராளமயம்தான் விவசாயத்தை நாசப்படுத்தி, விவசாயிகளைத் தற்கொலைக்குத் தள்ளிவருகிறது; இந்தத் தனியார்மயம்-தாராளமயம்தான் தொழிலாளர்களின் உரிமைகளையும், வேலைவாய்ப்பையும் தட்டிப் பறிக்கிறது; வறுமையையும் ஏழ்மையையும் தீவிரப்படுத்துகிறது. எனவே, இந்த நான்கு மாணவர்களின் மரணத்தை ஏதோ தனித்ததொரு அசம்பாவிதம் போலப் பார்க்க முடியாது; கூடாது என உணர வேண்டும்.

இந்த உண்மைகளையெல்லாம் உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஏறெடுத்துப் பார்க்கவோ, காது கொடுத்துக் கேட்கவோ தயாராக இல்லை. மாறாக, “பேருந்து படிக்கட்டில் இரண்டு முறைக்கு மேல் பயணம் செய்தால், பள்ளி, கல்லூரியை விட்டு மாணவனை நீக்க வேண்டும்” என அதிரடியாகத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். நீதிபதிகள் என்றால் மெத்தப் படித்த அறிவாளிகள் என நம் மீது ஒரு கற்பிதம் திணிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அவர்களோ குரூரமும் கோமாளித்தனமும் நிறைந்த பாசிஸ்டுகள் என இந்த உத்தரவின் மூலம் தங்களைத் தாங்களே அம்பலப்படுத்திக் கொண்டுவிட்டனர்.

————————–

மினி பேருந்துகடந்த டிசம்பர்-3 அன்று இரவு, கோத்தகிரியிலிருந்து கொட்டகம்பை என்ற ஊருக்குப் புறப்பட்ட மினி பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்; 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். கோத்தகிரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை அளிப்பதற்கேற்ப போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால், குற்றுயிரும் கொலையுயிருமாய் கிடந்தவர்களை அருகிலுள்ள கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

இந்த மினி பேருந்துகளை அதிவேகத்தில் இயக்கச் சொல்லி நிர்பந்திக்கும் முதலாளிகளின் இலாபவெறியே, நடைபெற்ற விபத்துக்கும் உயிர்ப்பலிக்கும் காரணம் என்பதை அம்பலப்படுத்தியும், இதுபோன்று அடிக்கடி விபத்துக்களை ஏற்படுத்தி வருகின்ற “மினி பேருந்துகள் அனைத்தையும் அரசுடமையாக்கு! கோத்தகிரி அரசு மருத்துவமனையின் தரத்தை உயர்த்து!!” என்ற கோரிக்கைகளை முன்வைத்தும் பகுதி உழைக்கும் மக்களிடம் பிரச்சாரம் செய்து, 07.12.2012 அன்று ஒருநாள் பகுதி அளவிலான வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்தது, இப்பகுதியில் செயல்பட்டு வரும் நீலமலை அனைத்துத் தொழிலாளர் சங்கம்.

முதலில் முழுநாள் கடையடைப்புப் போராட்டத்திற்கு ஆதரவு தருவதாகத் தெரிவித்த கோத்தகிரி வட்டார அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைமை, மினி பேருந்து முதலாளிகளின் அழுத்தம் காரணமாக கடையடைப்புக்கு தந்த ஆதரவை பின்னர் விலக்கிக்கொண்டது. வியாபாரிகள் சங்கத் தலைமையை அம்பலப்படுத்தி உடனடியாக பிரசுரம் தயாரித்து அனைத்து வியாபாரிகளிடமும் விநியோகித்து முழுநாள் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவைத் திரட்டியது, நீ.அ.தொ.சங்கம்.

வியாபாரிகள் சங்கத் தலைமை கடைகளைத் திறக்குமாறு மிரட்டல் விட்ட போதிலும், அதிகாரவர்க்கமும் போலீசும் நீ.அ.தொ.சங்கம் நக்சலைட் அமைப்பு என்று பீதியூட்டிய போதிலும் வணிகர்கள் முழுநாள் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவளித்தனர். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், விபத்தில் பலியானோர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் வியாபாரிகள் பெருந்திரளாகப் பங்கேற்றனர்.

நீ.அ.தொ.சங்கத்தின் நியாயமான கோரிக்கைகள் இப்பகுதிவாழ் உழைக்கும் மக்களின் பேராதரவைப் பெற்ற முழக்கமாக மாறியிருக்கிறது. இவ்விபத்துக் குறித்து இதுவரை வாய்திறக்காத ஓட்டுக்கட்சிகளையும் வேலை செய்ய வைத்திருக்கிறது, இப்போராட்டம்.
– தகவல்: நீலமலை அனைத்துத் தொழிலாளர் சங்கம், கோத்தகிரி.

______________________________________________________
– புதிய ஜனநாயகம், ஜனவரி – 2013
______________________________________________________