Tuesday, April 13, 2021
முகப்பு கட்சிகள் அ.தி.மு.க மின்வெட்டு - டெங்கு : உசிலம்பட்டி போராட்டம் !

மின்வெட்டு – டெங்கு : உசிலம்பட்டி போராட்டம் !

-

மின்வெட்டு பாலா கார்ட்டூன்
னித உரிமை பாதுகாப்பு மையம்-தமிழ்நாடு மதுரை மாவட்டக்கிளை-உசிலம்பட்டி உட்கிளையின் சார்பாக உசிலை பேருந்து நிலையம் எதிரில் மின்வெட்டு-டெங்குவை கட்டுப்படுத்தாத அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 19.01.2013 சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு உசிலை பகுதி செயற்குழு உறுப்பினர் மு.ஜெயப்பாண்டி தலைமை தாங்கினார்.

தலைமை உரைக்குப்பின் முதலில் பேசிய துணைச் செயலாளர், உயர் நீதிமன்ற வழக்கறிஞர் வாஞ்சிநாதன்,

மின் உற்பத்தி, விநியோகம், விலை நிர்ணயம் அனைத்தும் தனியார் கையில் ஒப்படைக்கப்படுவதை அம்பலப் படுத்தினார். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போல காசு உள்ளவனுக்கு மின்சாரம் கிடைக்கும் இல்லாதவனுக்கு இருட்டுதான்

என்று பேசினார்.

அடுத்து பேசிய விவசாயிகள் விடுதலை முன்னணி, உசிலை வட்டாரச் செயலாளர் குருசாமி

கிராமப்புறங்களில் மின்வெட்டு கடுமையாக உள்ளதைச் சுட்டிக் காட்டினார். விவசாயத்துக்கு மானியத்தில் வழங்கப்படும் மின்சாரம் இப்போது விவசாயமே இல்லாத நிலையில் எங்கே போகிறது? மழை இல்லை, அணையில் தண்ணீர் இல்லை, விவசாயம் இல்லை. எல்லா மின் உற்பத்தி நிலையங்களும் பழுதாகியும், குறைந்தளவு உற்பத்தியும் செய்து வருகின்றன. மேலும் பற்றாக்குறையைப் போக்கும் வகையில் புதிய திட்டங்கள் எதுவும் இல்லாத போது மின் பற்றாக்குறையை எப்படி தீர்க்க இயலும்

என்று கேள்வி எழுப்பினார்.

உசிலை பகுதியில் ஆட்டோ ஓட்டுநர்கள் மீது காவல்துறை கடுமையான ஒடுக்குமுறையைக் கடைபிடித்து வருகிறது. எதற்கெடுத்தாலும் அபராதம் விதிப்பது அல்லது 500, 1000 லஞ்சம் கேட்பது, அபராத்தத்துக்கு ரசீது தரமறுப்பது ஆகிய திருட்டுத்தனங்களை அம்பலப்படுத்தி ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்பு சங்கத்தின் பொறுப்பாளர் கண்ணன் பேசினார்.
புதிதாக ஆய்வாளரோ, சார்பு ஆய்வாளரோ உசிலைக்கு வந்தால் முதலில் ஆட்டோ தொழிலாளர்களிடம் தங்களது சண்டியர்தனத்தைக் காட்டுவதை வழக்கமாகக் கொண்டு உள்ளனர். இதை உடனடியாக நிறுத்தாவிட்டால் பெரிய அளவில் காவல்துறையை எதிர்த்துப் போராட்டம் நடத்த வேண்டி வரும் என்று அவர் எச்சரித்தார்.

அதுபோலவே உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் எதற்கும் மருந்தும் கிடையாது. சிகிச்சையும் கிடையாது, மருத்துவமும் கிடையாது என்ற நிலை உள்ளது. சாதாரண விபத்துக்கு கூட முதலுதவி செய்யாமல் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதையே உசிலை மருத்துவ மனை நிர்வாகம் வாடிக்கையாகக் கொண்டுள்ளது. மேலும் டெங்கு, உசிலை பகுதியில் பரவலாக உள்ளது. அண்மையில் டெங்குக்கு இரண்டு குழுந்தைகள் பலியாயினர். அந்தக் குழந்தைகளின் புகைப்படங்கள் ஆர்ப்பாட்ட பந்தலின் முன் மாலைபோட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அதுபோல மின் வெட்டை அடையாளப் படுத்தும் வகையில் இரண்டு கை சிம்னி விளக்குகள் பந்தலின் முன் ஏற்றி வைக்கப்பட்டிருந்தன.

இறுதியில் பேசிய மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாவட்ட செயலர் லயனல் அந்தோணிராஜ்,

2013-ஜூன் மாதத்துக்குள் தமிழ்நாட்டில் மின் வெட்டைத் தீர்த்து விடுவேன் என்று ஜெயலலிதா சொல்வது அண்டப் புழுகு, அசல் ஏமாற்று. தமிழ்நாட்டில் 18 ஆயிரத்து 345 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க, அப்பல்லோ மருத்துவமனை குழுமம், எஸ்.ஆர்.எம்.குழுமம், இந்து பாரத் குழுமம் இன்னும் பல வடநாட்டு முதலாளிகள் தீவிரப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதைப் பற்றி ஜெயலலிதா வாய் திறப்பது இல்லை. ஏனென்றால் இந்த மின்சாரம் தமிழ்நாட்டுக்கு ஒரு யூனிட் கூட கிடைக்காது. முதலாளிகள் தாங்கள் நிர்ணயிக்கிற கூடுதல் விலைக்கு யாருக்கு வேண்டுமானாலும் விற்கலாம் என்று அவர்களுடன் அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது. தமிழ்நாட்டின் மின்தேவை ஆண்டு தோறும் 1100 மெ.வா. அதிகரித்துக் கொண்டே போகிறது. இன்னும் 5 ஆண்டுகளில் 6000 மெகாவாட் கூடுதல் தேவை இருக்கிறது. ஆனால் அதனை உற்பத்தி செய்யத் தேவையான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மின் உற்பத்தியைத் தனியாரிடம் தரவேண்டும் என்பதே ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவு. மேலும் ஜெயா மத்திய அரசுடன் தமிழக உரிமைக்காகப் போராடுவதைப் போல ஒரு மாயையை உருவாக்குகிறார். இந்து மதவெறி பாசிஸ்டுகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டு மத்திய அரசைக் கைப்பற்றும் நோக்கத்துடன் ஜெயலலிதா இவ்வாறு பேசி வருகிறார். ஆனால் தனியார் மயம். உலக மயம், மறுகாலனியாக்கம் ஆகிய கொள்கைகளில் ஜெயாவுக்கு எந்த முரண் பாடும் இல்லை. மின் வெட்டைத் தீர்ப்பேன் என்று பேசுவது 2014 நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்தே பேசுவதாகும்

என்று கூறினார்.

ஆர்ப்பாட்டத்துக்கு 3 மணி நேரம் அனுமதி வழங்கிய காவல் துறை கடைசி நேரத்தில் பகுதி தோழர்களுக்கு கடுமையான டார்ச்சர் கொடுத்து கூட்டத்தை முடிக்க வைத்தது. ஜெயாவின் போலீசு ராஜ்யம் இதுதான் என்பதை செயலர் அம்பலப்படுத்திப் பேசினார். உசிலை பகுதி முன்னாள் செ.கு.உறுப்பினர் ப.ரவி நன்றி கூறினார்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க