Tuesday, March 9, 2021
முகப்பு போலி ஜனநாயகம் அதிகார வர்க்கம் போஸ்கோ நிலப்பறிப்பு - மக்கள் எதிர்ப்பு !

போஸ்கோ நிலப்பறிப்பு – மக்கள் எதிர்ப்பு !

-

போஸ்கோ எதிர்ப்பு போராட்டம்ரிசாவில் தென்கொரிய நிறுவனமான போஸ்கோவின் சார்பில் மக்களிடமிருந்து நிலப்பறிப்பு செய்வதற்கு அரசு போலீஸ் படையை ஏவியிருக்கிறது. நிலப்பறிப்பை எதிர்த்து போராடும் மக்களை போலீஸ் தாக்கி விரட்டியடித்திருக்கிறது.

சென்ற ஆண்டு தமது வாழ்வாதாரங்களை பாதுகாத்துக் கொள்ள கூடங்குளம் அணு உலையை எதிர்த்து முற்றுகைப் போராட்டம் நடத்திய மக்கள் மீது போலீஸ் நடத்திய தாக்குதல்களை நினைவுபடுத்தும்படியான காட்சிகள் ஒரிசாவின் ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை (பிப்ரவரி 3, 2013) நடந்தேறியிருக்கின்றன.

ஒரிசாவில் ரூ 52,000 கோடி செலவில் இரும்புத் தாது சுரங்கம், இரும்பு உருக்கு ஆலை மற்றும் இரும்புத் தாது ஏற்றுமதி செய்வதற்கான துறைமுகம் இவற்றை நிறுவுவதற்காக போஸ்கோ என்ற தென் கொரிய நிறுவனம் முயற்சி செய்து வருகிறது. போஸ்கோ பிரதிரோத் சங்க்ராம் சமிதி 2005ம் ஆண்டு முதல் இந்த திட்டத்துக்கு எதிராக போராடி வருகிறது.

‘இந்தத் திட்டத்தின் மூலம் பல லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும், பொருளாதார வளர்ச்சி பெருகும்’ என்று கதைகள் சொல்லப்பட்டாலும், ‘அடிப்படையில் போஸ்கோ திட்டம் நமது நாட்டின் இரும்பு கனிம வளத்தை கைப்பற்றுவதற்கான திட்டம்தான்’  என்று மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் 2010ம் ஆண்டு நியமித்த குழு கண்டறிந்தது. ‘இந்தத் திட்டத்தினால் ஏற்படும் சுற்றுச் சூழல் பாதிப்புகள் தொடர்பான ஆய்வுகள் முறையாக செய்யப்படவில்லை’ என்றும் ‘கடலோர பகுதிகள் பாதுகாப்பு சட்டம், பழங்குடியினர் நலச் சட்டம் இவற்றை மீறுகிறது’ என்றும் ‘நாட்டுக்கு இந்தத் திட்டத்தினால் நாட்டுக்கு நிகர இழப்பே ஏற்படும்’ என்று இந்தக் குழுவின் பெரும்பான்மை உறுப்பினர்கள் முடிவு செய்தனர்.

ஆனால், மத்திய அரசோ அந்த உண்மைகளை மறைத்து விட்டு, போஸ்கோவுக்கு சாதகமாக செயல்பட ஆரம்பித்தது. மக்களின் கடும் எதிர்ப்பினாலும் போராட்டங்களினாலும் நிலங்களை கைப்பற்றும் பணி கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பெண்களும், குழந்தைகளும் மனிதச் சங்கிலி அமைத்து போராடியதைத் தொடர்ந்து டிசம்பர் 2011ல் நிலம் கையகப்படுத்தல் நிறுத்தி வைக்கப்பட்டது.

ஒரு ஆண்டு காலமாக பின்வாங்கியிருந்த அரசு இன்று தனது முழு பலத்தையும் இறக்கி மக்களை துரத்தி அடிக்க ஆரம்பித்திருக்கிறது. நம் நாட்டு இரும்புத் தாது வளங்களை கைப்பற்றி, கிராமங்களை அழித்து, தென் கொரிய நிறுவனமான போஸ்கோ லாபம் சம்பாதிப்பதற்காக தனது சொந்தக் குழுவின் முடிவுகளையும், மக்கள் எதிர்ப்பையும் புறக்கணித்து நேரடி நடவடிக்கையில் இறங்கியிருக்கின்றன மத்திய அரசும், ஒடிசா மாநில நிர்வாகமும்.

‘ஏற்கனவே 2000 ஏக்கர் நிலத்தை கைப்பற்றி விட்டதாகவும் கூடுதலாக 700 ஏக்கர் நிலத்தை கைப்பற்றுவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும்’ மாவட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

“பாரதீப்புக்கு அருகில் உள்ள கோபிந்த்பூர் கிராமத்தில் நில கையகப்படுத்தல் ஆரம்பித்திருக்கிறது. நிலத்தை கொடுக்க விரும்பும் அனைவரின் வெற்றிலைத் தோட்டங்களும் கைப்பற்றப்படுவது வரை நடவடிக்கை தொடரும்” என்று மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ் கே மல்லிக் சொல்லியிருக்கிறார். அலெக்ஸ் பால் மேனன் போன்ற மாவட்ட ஆட்சித் தலைவர்கள் யார் பக்கம் வேலை செய்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள இது இன்னொரு உதாரணம்.

ஞாயிற்றுக் கிழமை அதிகாலை கிராமத்துக்குள் வர முயன்ற நிலப்பறிப்பு குழுவினரை தடுக்க முயன்ற கிராம மக்கள் மீது போலீஸ் லத்தி சார்ஜ் நடத்தி 6பேரை காயப்படுத்தியது. கோபிந்த்பூருக்குப் போகும் அனைத்து வழிகளையும் அடைத்து,  கோபிந்த்பூர்-திங்கியா சாலையையும் மூடி விட்டிருக்கிறது. 400 பேரைக் கொண்ட போலீஸ் படை அந்தப் பகுதியை சுற்றி வளைத்திருக்க நில கையகப்படுத்தும் கும்பல் வெற்றிலைத் தோட்டங்களை அழிக்கவும், மரங்களை சாய்க்கவும் ஆரம்பித்திருக்கிறது. இந்த வேலையை ஒடிசா தொழில் கட்டுமானக் கழக அதிகாரிகளும் போஸ்கோ-இந்தியா மேலாளர்களும் மேற்பார்வையிட்டனர்.

நாட்டுக்கும் மக்களுக்கும் விரோதமான கொள்கைகளை செயல்படுத்தி வரும் ஆளும் வர்க்கத்துக்கு எதிரான உறுதியான மக்கள் போராட்டங்கள்தான் இன்றைய தேவை.

மேலும் படிக்க

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க