Wednesday, April 14, 2021
முகப்பு உலகம் அமெரிக்கா ஆப்கான் - மத்திய ஆசியா - எண்ணெய் - இஸ்லாமிய தீவிரவாதம் !

ஆப்கான் – மத்திய ஆசியா – எண்ணெய் – இஸ்லாமிய தீவிரவாதம் !

-

“விசுவரூபம் திரைப்படம் முஸ்லிம்களுக்கு எதிரானதா இல்லையா?” என்ற கோணத்தில் மட்டுமே இப்பிரச்சினை குறித்த விவாதம் நடந்திருக்கிறது. அந்தப் படம் யாருக்கு ஆதரவானது என்பது குறித்த விவாதம் நடைபெறவில்லை. “இது  அமெரிக்க ஆதரவுத் திரைப்படம்; ஆஸ்கர் விருதுக்காக அமெரிக்க கைக்கூலித்தனம் செய்திருக்கிறார் கமலஹாசன்” என்று சிலர் கூறியிருக்கிறார்கள். இந்தப் பதில் சராசரி முஸ்லிம் வாசகர்களை மேலோட்டமாக திருப்திப் படுத்தலாம்.

சவூதி இளவரசரும், பின்லாடனும், முல்லா ஒமரும், பாக் அதிபர்களும், கமலஹாசனுக்கு வெகு காலம் முன்னதாகவே அமெரிக்காவுக்கு கைக்கூலி வேலை செய்திருக்கிறார்கள், செய்து வருகிறார்கள். அவர்கள் எந்த ஆஸ்கார் விருதுக்கு ஆசைப்பட்டு இதனைச் செய்தார்கள் என்ற கேள்விக்கு விடைகாண இக்கட்டுரை உதவும்.

நேற்று வெளியிடப்பட்டிருக்கும் இசுலாமிய சர்வதேசியம் குறித்த கட்டுரையையும், இந்தக் கட்டுரையையும், மத நம்பிக்கையுள்ள இசுலாமிய வாசகர்கள் படிப்பதுடன், இக்கட்டுரைகள் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் என்ன என்று முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்களிடம் கேட்குமாறும் கோருகிறோம்.

இக்கட்டுரைகள் இரண்டும் 2001 டிசம்பரில் வெளியிடப்பட்டவை என்பதையும் மனதிற்கொண்டு படிக்க கோருகிறோம்.

– வினவு

________________________________

ஆப்கான் – மத்திய ஆசியா எண்ணெய் – இசுலாமிய தீவிரவாதம் !

ஒரு வேளை உலக வர்த்தக மையம் தகர்க்கப்படாதிருந்தால் அமெரிக்கா ஆப்கானில் கால் வைத்திருக்காதா ?  ‘ஆம்’  என்று பலரும் சொல்லக்கூடும்.

‘ஆஸ்திரிய இளவரசனை ஒரு செர்பிய தீர்விரவாதி சுட்டுக்கொல்லாமலிருந்தால் முதல் உலகப் போரே மூண்டிருக்காது, ஒரு கோடி மக்களின் மரணமும் தவிர்க்கப்பட்டிருக்கும்’ என்று நம்புபவர்கள் இதையும் நம்பலாம். உலகை மறுபங்கீடு செய்யத் துடித்துக் கொண்டிருந்த ஏகாதிபத்திய நாடுகளுக்கு போரைத் துவக்குவதற்கு அந்த தோட்டாச் சத்தம் அன்று ஒரு முகாந்திரம். அந்தக் கொலையின் முக்கியத்துவம் அவ்வளவு தான்.

உலக வர்த்தக மையத்தின் மீது நடந்த தாக்குதல் என்பது கோப்பை நிரம்பி வழிவதற்கு தேவையான கடைசித்துளி. அவ்வளவுதான். ஒருவேளை இந்தத் தாக்குதல் நடந்திருக்காவிட்டாலும் ஆப்கானில் தலையிடுவதற்கான முகாந்திரம் ஒன்றை அமெரிக்கா உருவாக்கியிருக்கும் என்பது தான் இக்கட்டுரை முன்வைக்கும் வாதம்.

உலக வர்த்தக மையம் தகர்க்கப்பட்ட சில நாட்களுக்கு பின் நீனா பர்லே என்ற பிரபல அமெரிக்க நிருபர் இணைய இதழொன்றில் கீழ்கண்டவாறு எழுதியிருந்தார்.

“சமீபத்தில் மேன்மக்கள் பங்கு பெறும் வாஷிங்டன் விருந்தொன்றிற்குச் சென்றிருந்தேன். பிரிட்டீஷ் கனவான்களும் அமெரிக்கப் பிரபலங்களும் அங்கே நிறைந்திருந்தார்கள். சவூதி அரேபியாவின் தூதர் இளவரசர் பந்தர் அவர்களுக்கும் புஷ் குடும்பத்தினருக்கும் உள்ள நெருக்கமான நட்பு பற்றியது தான் அன்றைய விருந்து மண்டபத்தின் கிசு கிசு…. சிறிது நேரத்தில் பேச்சு மத்திய ஆசியாவின் எண்ணெய் வயல்களை நோக்கித் திரும்பியது.”

“6000 அமெரிக்கர்கள் செத்தது எண்ணெய் வயல்களுக்காகவா, சவூதி இளவரசர் குடும்பத்துக்காகவா இரண்டுக்கும் சேர்த்தா என்று சிந்தித்தபடியே நான் மண்டபத்தை விட்டு வெளியேறினேன்”…. என்கிறார் நீனா பர்லே.

இப்படித்தான் 1991 – ல் சதாம் உசேன் குவைத்தை ஆக்கிரமித்த போது குவைத் மருத்துவமனையிலிருந்து ஒரு நர்சை அமெரிக்க நாடாளுமன்றத்திற்குக் கொண்டு வந்தார் இன்றைய அதிபர் புஷ்ஷின் தந்தை சீனியர் புஷ்.

‘மருத்துவமனையிலிருந்து அப்போது தான் பிறந்த பிஞ்சு குழந்தைகளை ஈராக் சிப்பாய்கள் எப்படித் தூக்கிக் கடாசினர்’ என்பதைக் கண்ணீர் மல்க விவரித்தார் அந்த நர்ஸ். வளைகுடாப் போரில் அணுக்கழிவு ஆயுதங்களை ஏவி, பிறக்கப்போகும் ஈராக்கியக் குழந்தைகளையெல்லாம் கொல்ல அந்த சென்டிமெண்ட் பயன்பட்டது. நர்சின் கண்ணீர் ஒரு மோசடி நாடகம் என்பது பின்னர் தான் அம்பலமானது.

ஆனால், ஈராக்கின் பிரம்மாண்டமான ருமைலா எண்ணெய் வயல்களை ஆக்கிரமித்து குவைத்துடன் இணைக்க வளைகுடாப் போர் பயன்பட்டது. இவை அமெரிக்க, பிரிட்டிஷ் எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டன. இது வளைகுடப் போரின் பொருளாதார ஆதாயம்.

சந்தர்ப்ப சாட்சியங்கள் பின்லாடன் தான் குற்றவாளி என்று காட்டுவதால், அத்தகைய பயங்கரவாதிக்கு புகலிடம் அளித்திருக்கும் ஆப்கான் மீது போர் தொடுப்பதாக கூறுகிறது அமெரிக்கா. போர் தொடுக்கின்ற இந்த அமெரிக்க பயங்கரவாதிகளுக்கெதிரான சந்தர்ப்ப சாட்சியங்களை நாம் பார்ப்போம்.

புஷ் குடும்பத்தின் வரலாறு

அமெரிக்க அதிபர் புஷ்ஷை பற்றி அமெரிக்க ஆளும் வர்க்கமே மறுக்க முடியாத மூன்று உண்மைகள் உள்ளன.

ஒன்று – மரியாதைக்குரிய ஜனாதிபதி அவர்கள் அரசியல் அறிவற்ற ஒரு மாங்காய் மடையன். இந்த போர் தொடங்குவதற்கு முன்பு வரை ஆப்கானிஸ்தான் என்பது ஒரு நாடா, ஊரா, கண்டமா என்பது கூட அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தேர்தல் பிரச்சாரத்தின் போது நைஜீரியாவை ஒரு கண்டம் என்று குறிப்பிட்டு தனது பூகோள அறிவுக்காக உலகப் புகழ் பெற்றவர்.

அவரது தேர்தல் செலவுக்கு நிதியளித்தவர்களில் முதன்மையானவர்கள் அமெரிக்க எண்ணெய் கம்பெனி முதலாளிகள் என்பது இரண்டாவது உண்மை. கருப்பின மக்களைத் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி ஓட்டு போட விடாமல் தடுத்ததுத்தான் ‘மயிரிழைப் பெரும்பான்மை’ யில் அவர் அதிபர் நாற்காலியில் அமர வைக்கப்பட்டார் என்பது மூன்றாவது உண்மை.

 • துணை அதிபர் டிக் செனி, ஹாலி பர்ட்டன் என்ற அமெரிக்க எண்ணெய் நிறுவனத்தின் தலைமை அதிகாரியாகவும், இராணுவத்துறைச் செயலாளராகவும் இருந்தவர்.
 • தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கண்டோலசா ரைஸ் அம்மையாரும் இன்னொரு எண்ணெய்க் கம்பெனியின் இயக்குனர். ரசிய விவகாரங்கள் குறித்த வல்லுனர்.
 • தற்போதைய இராணுவத்துறைச் செயலர் டொனால்டு ரம்ஸ்பீஃல்டு சியர்லே என்ற பன்னாட்டு நிறுவனத்தின் தலைமை அதிகாரி.
 • இன்றைய அரசுச் செயலர் காலின் பாவெல் ராஜதந்திரி ( Diplomat ) அல்ல, ஈராக் போரைத் தலைமையேற்று நடத்திய தலைமை இராணுவத் தளபதி.
 • சென்ற மே – 2000 த்தில் நடந்த ரசிய – அமெரிக்க முதலாளிகள் சங்க கூட்டத்தில் டிக் செனி, ரம்ஸ்ஃபீல்டு ஆகிய இருவரும் முக்கியப் பேச்சாளர்கள்.
 • இன்றைய அதிபர் புஷ்ஷின் தந்தையான முன்னாள் அதிபர் சீனியர் புஷ் அவர்கள் அதிபராவற்கு முன் அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ – இன் இயக்குனர். பல அமெரிக்க எண்ணெய் நிறுவங்களில் முக்கிய முதலீட்டாளர், பங்குதாரர்.அது மட்டுமல்ல, கார்லைல் என்ற அமெரிக்க ஆயுதக் கம்பெனியின் ஆசியாவுக்கான அதிகார பூர்வமான தரகர். இன்றைய புஷ் நிர்வாகத்திலுள்ள பிரமுகர்கள் பலரும் இதில் பங்குதாரர்கள். ஜார்ஜ் சோரோஸ் என்ற பிரபல யூத முதலாளியும் பங்குதாரர். கடைசியாக, பின்லாடன் குடும்பத்தினரும் இதில் பங்குதாரர்கள் என்கிறார் பத்திரிகையாளர் நீனா பர்லே.

பின்லாடன் குடும்பத்திற்கு அப்பன் தரகு வேலை செய்கிறார். மகனோ பின்லாடன் மீது போர் தொடுக்கிறார். இதற்கு பெயர் பயங்கரவாதத்திற்கெதிரான உலகப்போர் !

இந்த அமெரிக்க பயங்கரவாதிகளுக்கு எதிரான மேற்கண்ட சந்தர்ப்ப சாட்சியங்களைத் தொகுத்துப் பார்த்தால் சி.ஐ.ஏ. – ஆயுத வியாபாரம் – எண்ணெய் வியாபாரம் – முன்னாள் சோவியத் ஒன்றியம் என்று முடிகிறது.

அதாவது முன்னாள் சோவியத் ஒன்றியத்தை சேர்ந்த உஸ்பெக்கிஸ்தானில் அமெரிக்கா தற்போது அமைத்துள்ள இராணுவத் தளத்துக்கு நாம் வந்து சேருகிறோம்.

சென்ற நூற்றாண்டின் துவக்கத்தில் ஆப்கானையும் மத்திய ஆசியாவையும் காலனியாக்குவதற்கு ஜாரின் ரசியாவும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமும் நடத்திய மோதலை “மாபெரும் ஆட்டம் என்று வரலாற்றாசிரியர்கள் கூறுவர். இன்றைய மறுகாலனியக்கக் காலத்தில் இந்த அழுகுணி ஆட்டத்தின் இரண்டாவது சுற்று தொடங்கியிருக்கிறது.

மத்திய ஆசியாவின் எண்ணெய் வயல்கள்

கிழக்கிலும் தெற்கிலும் பாகிஸ்தான், மேற்கே ஈரான், வடமேற்கில் துர்க்மேனிஸ்தான், வடக்கே உஸ்பெக்கிஸ்தான், தாஜிகிஸ்தான், வட கிழக்கில் சீனாவின் ஜின்சியாங் மாநிலம் ஆகியவற்றால் சூழப்பட்ட நாடு ஆப்கானிஸ்தான்.

இன்று ஆப்கானில் பின்லாடனைத் தேடி அமெரிக்க இராணுவம் படையெடுப்பதற்கு முன்னமே, மத்திய ஆசிய நாடுகளின் இயற்கை வளங்களை –  குறிப்பாக எண்ணெய், எரிவாயுவைத் தேடி அமெரிக்க நிறுவனங்கள் படையெடுக்கத் தொடங்கிவிட்டன.

2000 மைல் நீண்டு அகன்ற ஸ்டெபி புல்வெளிகளும், பனிபடர்ந்த நெடிய மலைத் தொடர்களும் கொண்ட மத்திய ஆசிய நாடுகள் அமெரிக்க முதலாளிகளின் நாக்கில் எச்சில் ஆறாய்ப் பெருகுமளவுக்கு இயற்கை வளங்களை கொண்டிருக்கின்றன.

உலகின் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் உஸ்பெக்கிஸ்தானிலிருக்கிறது. உலகிலேயே மிக அதிகமான வெள்ளி தாஜிகிஸ்தானின் மண்ணில் புதைந்திருக்கிறது. உலகின் நான்கில் ஒரு பங்கு யுரேனிய தாது கஜாக்ஸ்தானில் இருக்கிறது.

வளைகுடாவிற்கும் மேற்கு சைபீரியாவிற்கும் அடுத்தபடியாக மிக அதிகமான எண்ணெய் இருப்பு கஜாக்ஸ்தானிலும், துருக்மேனிஸ்தானிலும், அஜர்பைஜானிலும் உள்ளன. இந்த மத்திய ஆசிய நாடுகளில் மட்டும் சுமார் 6.6 டிரில்லியன் (66 லட்சம் கோடி)  கன மீட்டர் எரிவாயு நிலத்தினடியில் இருக்கிறது.

சோவியத் ஒன்றியம் உடைகிறது. எண்ணெய் முதலாளிகள் நுழைகிறார்கள்

சோவியத் ஒன்றியம் உடைந்து இவையனைத்தும் தனி நாடுகளானவுடனே, என்ரான், பிரிட்டீஷ் பெட்ரோலியம், மொபில் எக்ஸான், அமோகோ, செவ்ரான், யூனோகால் ஆகிய பன்னாட்டு நிறுவனங்கள் இந்நாடுகளை நோக்கி படையெடுத்தன. இந்த எண்ணெய் நிறுவனங்களுக்காக அந்நாடுகளுடன் வர்த்தக பேரம் பேசியவர்கள் இன்றைய அமெரிக்க ஆளும் கட்சியான குடியரசுக் கட்சியின் முக்கியப் பிரமுகர்கள், குறிப்பாக இன்றைய துணை அதிபர் டிக் செனி.

எண்ணெய் எடுப்பதற்கான பேரங்கள் படிந்தாலும் எண்ணெய் எரிவாயுவை கொண்டு செல்லும் குழாய்களெல்லாம் ரசியா வழியே தான் செல்கின்றன என்பதால் ரசியா கோருகிற வாடகையை கொடுக்க வேண்டும். அல்லது எண்ணெய் எரிவாயுவை ரசியாவுக்கு விற்றுவிட வேண்டும்.

‘கஜாக்ஸ்தானிலிருந்து பிரிட்டீஷ் காஸ் எடுக்கின்ற எரிவாயுவை ஆயிரம் கன மீட்டர் 8.74 டாலருக்கு ரசியாவுக்கு விற்க வேண்டியிருக்கிறது’ என்றும் ‘உலகச் சந்தையில் இதையே 80 டாலருக்கு விற்று அதிக லாபம் பார்க்க முடியும்’ என்றும் கூறி வயிறெரிந்தது அந்த நிறுவனம். (எண்ணெய் எரிவாயு விற்பனையில் பன்னாட்டு நிறுவனங்கள் அடிக்கும் கொள்ளையை இதிலிருந்து வாசகர்கள் புரிந்து கொள்ளலாம்)

1993 – இல் அமெரிக்காவின் செவ்ரான் நிறுவனம் கஜாக்ஸ்தானிலிருந்து எண்ணெய் எடுப்பதற்கு 10 பில்லியன் டாலருக்கு ஒப்பந்தம் போட்டது. ஆனால் ரசியாவோ கஜாக்ஸ்தானிலிருந்து கருங்கடல் வரை புதிய குழாய் அமைக்கத் திட்டமிட்டது. செவ்ரானின் திட்டம் நொறுங்கியது (நியூஸ் வீக், ஏப்ரல் 1995 )

அமெரிக்க முதலாளிகளின் ஆத்திரத்தை உடனே பிரதிபலித்தது கிளின்டன் அரசு. “யாருடைய செல்வாக்கு மண்டலத்தையும் அமெரிக்கா அங்கீகரிக்காது. அமெரிக்க நிறுவனங்களின் வர்த்தக உரிமைகளை அரசு பாதுகாக்கும்” என்று எச்சரித்தது.

என்ன தான் எச்சரிக்கைகள் விடுத்தாலும் புவியியல் ரீதியாக மத்திய ஆசியாவைச் சூழ்ந்திருக்கும் ரசியாவைத் தவிர்த்து – ஐரோப்பிய சந்தைக்கு குழாய் பாதை அமைக்க வேண்டுமானால் ஈரான் அல்லது ஜார்ஜியாவின் வழியே துருக்கியை இணைக்கும்படி பாதை அமைக்கப்பட வேண்டும்.

ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்திருக்கிறது. மேலும் வளைகுடாவில் ஈரானை தனிமைப்படுத்துவதே அமெரிக்காவின் அரசியல் தந்திரம். ஈரானையும் துருக்கியையும் குழாய் மூலம் இணைப்பதன் மூலம் அந்நாடுகளிடையே நட்புறவு தோன்றிவிடக்கூடும் என்று அமெரிக்காவும் இசுரேலும் அஞ்சுகின்றன. ஜார்ஜியாவிலோ ஆயுதந்தாங்கிய மாஃபியாக் குழுக்களின் அபாயம் !

எண்ணெய்க் குழாய் – ஆப்கான்

இந்தச் சூழ்நிலையில் தான் எண்ணெய் நிறுவனங்களின் பார்வையில் ஆப்கானிஸ்தான் முக்கியத்துவம் பெறுகிறது. பிரச்சினைக்குரிய பல நாடுகளுக்கும் காஸ்பியன் கடலுக்கும் குறுக்கே எண்ணெய்க் குழாய் அமைப்பதைக் காட்டிலும், தூரம் குறைந்த, பாதி செலவு மட்டுமே ஆகக்கூடிய பாதை ஆப்கான் – பாகிஸ்தான் – அரபிக்கடல் எனும் குழாய்ப் பாதை.

அரபிக்கடலிலிருந்து இந்தியாவையும் பிற ஆசிய நாடுகளையும், வளைகுடாவையும் ஐரோப்பாவையும் எளிதாகச் சென்றடைய முடியும். மேலும் பாகிஸ்தானின் பாலைவனப் பகுதிகளில் கணிசமான அளவு எரிவாயு இருப்பதாகவும் ஒரு பிரெஞ்சுப் பத்திரிகை தெரிவிக்கிறது.

அமெரிக்க நாடாளுமன்றக் குழுவின் முன் சாட்சியமளித்த யூனோகால் நிறுவனம் “ஆப்கானில் அமைதியை நிலைநாட்டாமல் குழாய் பதிக்கும் வேலையை நாங்கள் துவங்க முடியாது” என்று வலியுறுத்துகிறது. ஐரோப்பாவைக் காட்டிலும் ஆசியாவின் எண்ணெய் எரிவாயுச் சந்தை தான் வேகமாக வளர்கிறதென்றும், 2010 ஆம் ஆண்டுக்குள் சந்தை இரண்டு மடங்கு அதிகரிக்கும் என்றும் கூறி அமெரிக்க அரசுக்கு நிலைமையின் அவசரத்தை உணர்த்துகிறது.

இதுவரை மத்திய ஆசிய நாடுகளில் பன்னாட்டு நிறுவனங்கள் முடக்கியிருக்கும் மூலதனம் 59 பில்லியன் டாலர்கள். அதாவது சுமார் 3 லட்சம் கோடி ரூபாய். பத்தாண்டுகளாகப் பாதை கிடைக்காமல் அவர்கள் தவிக்கையில் கஜாக்ஸ்தானிலிருந்து ரசியா புதியதொரு எண்ணெய்க் குழாயை அமைக்கத் தொடங்கியிருக்கிறது. இது அமெரிக்காவின் வயிற்றெரிச்சலை மேலும் கூட்டும் என்பதை சொல்லத் தேவையில்லை.

அமெரிக்க நிறுவனங்களின் எண்ணெய்த் தாகம் என்பது இந்த பிரச்சினையின் பொருளாதார முகம். அமெரிக்காவின் உலக மேலாதிக்கப் பசியும், மத்திய ஆசியாவை விழுங்குவதற்கான அதன் அரசியல் இராணுவ வெறியும் இந்த பிரச்சினையின் பிற முகங்கள்.

ரசியா – மத்திய ஆசியா – சீனா

1991லேயே சோவியத் ஒன்றியத்திலிருந்து மத்திய ஆசிய நாடுகள் பிரிந்துவிட்ட போதிலும், இன்னமும் அரசியல், பொருளாதார, இராணுவ ரீதியில் பல விதங்களில் அவை ரசியாவுடன் பிணைக்கப்பட்டுள்ளன. எண்ணெய் உள்ளிட்ட அவற்றின் பெரும்பான்மையான வர்த்தகங்கள் இன்னமும் ரசியாவுடன் தான்.

உஸ்பெக்கிஸ்தான் தவிர்த்து எல்லா நாடுகளிலும் ரசிய இராணுவம் இருக்கிறது. உஸ்பெக்கிஸ்தான் இராணுவத்திலும் அதிகாரிகளில் பலர் ரசியர்கள். பனிப்போர் காலத்து அணு ஆயுதங்களும் எங்கும் இருக்கின்றன. கஜாக்ஸ்தானின் இராணுவத்தை ரசிய இராணுவத்துடன் இணைத்து விடுவதற்கான பேச்சுவார்த்தையும் நடக்கிறது.

இப்போது “இசுலாமியக் குடியரசு” என்று இந்நாடுகள் தம்மை அழைத்துக்கொண்டாலும் ஷரியத் சட்டங்கள் போன்றவை அங்கே அமலில் இல்லை. தேர்தல்கள் நடத்தப்பட்ட போது நாட்டை ஆளும் அதிபர்கள் முன்னாள் ரசிய போலி கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் தான். பழைய மரபின் தொடர்ச்சியாக எண்ணெய் வயல்கள் எல்லாம் அரசுடைமையாகவே உள்ளன. ஆனால் இந்த அதிபர்கள் அனைவரும் ஊழல் சர்வாதிகாரிகள்.

பன்னாட்டு நிறுவனங்கள் வாரி வழங்கும் இலஞ்சத்தையும் வாங்கிக்கொண்டு, ரசியாவுடனான உறவுகளையும் துண்டித்துக்கொள்ள முடியாமல் தவிக்கும் சர்வாதிகாரிகள் இவர்கள்.

ரசியாவோ போலி கம்யூனிசம் வீழந்து முதலாளித்துவ சர்வாதிகாரம் நிலைநாட்டப்பட்டுவிட்ட நாடு என்ற போதிலும், ஒரு அணு ஆயுத வல்லரசு என்ற முறையிலும், இராணுவ வலிமையிலும் அமெரிக்காவின் உலக இராணுவ மேலாதிக்கத்தை இன்னமும் அச்சுறுத்துகிறது. தேசிய வெறியனான ஜெரினோவ்ஸ்கி முதல் அதிபர் புடின் வரை ரசியாவின் முதலாளித்துவ அரசியல்வாதிகள் யாரும் தங்கள் உலக மேலாதிக்கக் கனவைக் கைவிட்டுவிடவில்லை என்பதையும் அமெரிக்கா அறிந்தே இருக்கிறது.

பல மத்திய ஆசிய நாடுகளுடன் பொது எல்லையை கொண்டுள்ள சீனா, அமெரிக்காவுடன் விரிவான வர்த்தக உறவுகளைக் கொண்டிருந்த போதும் அதன் இராணுவ வல்லமையையும், தென்கிழக்காசியப் பொருளாதாரத்தில் அதன் செல்வாக்கையும் குலைப்பது அமெரிக்க உலகத் திட்டத்தின் நோக்கம்.  மத்திய ஆசிய நாடுகளுடன் வளர்ந்து வரும் சீன வர்த்தகம், சீனா அமைத்திருக்கும் சீனா –  காஜக்ஸ்தான் ரயில் பாதை ஆகியவை அமெரிக்காவை உறுத்தும் கூடுதல் பிரச்சினைகள்.

அமெரிக்காவின் மத்திய ஆசியத் திட்டம்

இந்த புவியியல் –  அரசியல் சூழலிலிருந்து தான் அமெரிக்கா மத்திய ஆசியாவுக்கான தனது கொள்கையை வகுக்கிறது. “சோவியத் பிடியிலிருந்து மத்திய ஆசிய நாடுகளை விடுவித்து,  அமெரிக்க முதலாளிகளுக்கு அங்கே வாய்ப்பு ஏற்படுத்தி தருவது தான் நமது மத்திய ஆசியக் கொள்கையின் நோக்கம்” என்று அமெரிக்க நாடாளுமன்ற துணைக் குழுவின் ஆவணம் வெளிப்படையாகவே குறிப்பிடுகிறது.

அது மட்டுமல்ல, மத்திய ஆசியாவின் எண்ணெய் வயல்களை கைப்பற்றுவதன் மூலம் எண்ணெய் உற்பத்தியில் வளைகுடா நாடுகள் பெற்றிருக்கும் ஆதிக்கத்தை உடைப்பது, உலக எண்ணெய் விலையை தீர்மானிப்பதில் தனது ஏகபோக அதிகாரத்தை நிறுவுவது, ‘ஒபெக்’ என்ற எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் ஒன்றியத்தை பிளப்பது ஆகியவை அமெரிக்காவின் நீண்டகாலத் திட்டங்கள்.

தெற்காசியா, சீனா, மத்திய ஆசியா, வளைகுடா நாடுகள் என ஆசியா முழுவதையும் கட்டுப்படுத்துவதற்கு ஏற்ற இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்திருக்கிறது ஆப்கானிஸ்தான்.

“ஆசியா ஒரு விமானம் என்றால் அதில் விமான ஓட்டியின் அறை ஆப்கானிஸ்தான்” என்றான் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியவாதி கர்சன். இப்போது விமான ஓட்டியின் அறையில் நின்று கொண்டிருக்கிறார்கள் –  அமெரிக்க பயங்கரவாதிகள்.

ரசியாவின் ஆப்கான் போர்

1979 – இல் இதே இடத்தில் ரசிய ராணுவம் நின்று கொண்டிருந்தது. ஆப்கானின் போலி கம்யூனிஸ்டு ஆட்சியை காப்பாற்றவும் அதன் மூலம் தெற்காசியாவில் தனது இராணுவ மேலாதிக்கத்தை நிலைநாட்டிக்கொள்ளவும் ஆப்கானில் நுழைந்தது ரசியா.

ரசியாவுடனான பனிப்போரை (Cold War) பதிலிப் போராக மாற்றும் வாய்ப்பை (Proxy War) இது அமெரிக்காவுக்கு வழங்கியது.

கம்யூனிசத்திற்கும், தேச விடுதலைப் போராட்டத்திற்கும் எதிராக இசுலாமிய பழமைவாதத்தை பயன்படுத்தும் தந்திரம் அமெரிக்காவுக்கு புதியதல்ல. இரண்டாம் உலகப்போர் முடிந்தவுடன் அராபிய நாடுகளில் தோன்றிய கம்யூனிஸ்டு எழுச்சியையும், மன்னர்களுக்கும் முல்லாக்களுக்கும் எதிரான ஜனநாயகப் போராட்டங்களையும், ஏகாதிபத்தியங்களுக்கு எதிரான தேசிய விடுதலைப் போராட்டத்தையும் நசுக்குவதற்கு இசுலாமிய மதவாதத்தை தான் அமெரிக்காவும், பிரிட்டனும் பயன்படுத்தின.

ஆப்கானில் ஆட்சியிலிருந்த போலி கம்யூனிஸ்டுகள் பெண் கல்வி, வேலை வாய்ப்பு, நிலச்சீர்திருத்தம், மதச்சீர்திருத்தம் போன்றவற்றை அமல்படுத்தத் தொடங்கியவுடனே பண்ணையார்களும், பழங்குடித்தலைவர்களும், முல்லாக்களும், பழமைவாதிகளும் அவற்றை எதிர்க்கத் தொடங்கினர். ஜனநாயகம் என்ற சொல்லுக்கே எதிரான இந்த சக்திகளை அமெரிக்கா திட்டமிட்டே உக்குவித்தது.

மதத்தால் இசுலாமியர்களாக இருந்தாலும் புஷ்டுன், தாஜிக், உஸ்பெக் என்று இன உணர்வால் பிளவுபட்டிருந்த மக்கள், ரசிய எதிர்ப்பு ஆப்கானிய தேசிய உணர்வுக்கு ஆட்பட்டுவிடாமல் கவனமாகப் பார்த்துக்கொண்டது அமெரிக்கா. ஆப்கான் மீதான ரசியாவின் ஆக்கிரமிப்பு இசுலாத்தின் மீதான நாத்திக –  கம்யூனிஸ்டுகளின் ஆக்கிரமிப்பாகச் சித்தரிக்கப்பட்டது.

அமெரிக்கா உருவாக்கிய இஸ்லாமிய சர்வதேசியம்

“இசுலாம் என்பது வெறும் மதமல்ல, அது ஒரு சமூக அரசியல் தத்துவம். அத்தகைய புனிதமான இசுலாத்தின் மீது நாத்திகர்களான ரசியர்கள் போர் தொடுத்திருக்கிறார்கள்”  என்பதே சி.ஐ.ஏ நடத்திய பிரச்சாரத்தின் மையக் கருத்து. எனவே ஆப்கான் போராட்டம் என்பது “கம்யூனிஸ்டுகளுக்கெதிரான இசுலாமிய சர்வதேசியத்தின் புனிதப் போர்” (Pan Islamic Jahad)  ஆகிவிட்டது.

இன்று அமெரிக்கத் தாக்குதலை “இசுலாத்திற்கெதிரான போர் ” என்று தாலிபானும் பின்லாடனும் கூறியவுடனே “நாங்கள் பயங்கரவாதத்தை தான் எதிர்க்கிறோம் இசுலாமை அல்ல” என்று டோனி பிளேரும் புஷ்ஷும் ஊர் ஊரகச் சென்று கதறுகிறார்கள்.

ரசியா என்ற சொல் இருந்த இடத்தில் அமெரிக்கா என்ற சொல்லை பின்லாடன் பயன்படுத்துகிறாரே தவிர, மற்றபடி இந்த வசனத்துக்குரிய “அறிவுச் சொத்துடைமை”  அமெரிக்காவையே சாரும். 1980 களில் ரேடியோ லிபர்டி, ரேடியோ ஃப்ரீ யூரோ ஆகிய வானொலிகள் ரசியாவின் மத்திய ஆசிய நாடுகள், வளைகுடா நாடுகளுக்கான ஒலிபரப்பில் இசுலாமிய சர்வதேசியத்தை தான் பிரச்சாரம் செய்தன.

ரசியாவுடனான பனிப்போரில் இசுலாமிய நாடுகளை தன் பக்கம் இழுக்கவும், மத்திய ஆசிய நாடுகளில் இசுலாமிய மதவெறியை உருவாக்கவும், சி.ஐ.ஏ பயன்படுத்திய சித்தாந்த ஆயுதம் தான் இசுலாமிய சர்வதேசியம்.

வெறும் கருத்துப் பிரச்சாரத்துடன் இது நிற்கவில்லை. 1982  – இலிருந்து அடுத்த 10 ஆண்டுகளில், 40 நாடுகளைச் சேர்ந்த ஒரு லட்சம் முசுலீம் இளைஞர்கள் பாகிஸ்தானின் மதராஸாக்களில் இவ்வாறு பயிற்றுவிக்கப்பட்டனர். சித்தாந்த பயிற்சி மட்டுமின்றி ஆயுதப் பயிற்சியையும் வழங்கியது அமெரிக்கா.

சி.ஐ.ஏ. – ஐ.எஸ்.ஐ. கூட்டணி

பாகிஸ்தானிய உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ. மூலம் கொரில்லாப் பயிற்சி, நகரங்களைத் தாக்கி சீர்குலைத்தல், ரகசியத் தகவல் தொடர்பு முறைகள், சர்வதேச வங்கிகளில் இரகசியமாகப் பணப் பரிமாற்றம் செய்வது ஆகிய அனைத்தும் முஜாகிதீன்களுக்குக் கற்றுத் தரப்பட்டன.

சிறப்பு பயிற்சிக்காக இந்த முஜாகிதீன்களில் ஒரு பிரிவினர் அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டனர். நிகராகுவாவின் சாண்டினிஸ்டா ஆட்சியை ஒழிப்பதற்கு “காண்ட்ராஸ்”  என்ற கிரிமினல் கொலைப்படையை சி.ஐ.ஏ. எங்கு பயிற்றுவித்ததோ, அதே பயங்கரவாதப் பயிற்சிப் பள்ளியில் இவர்களும் பயிற்றுவிக்கப்பட்டனர். ஆப்கானியர்கள், அராபியர்கள், ஜோர்டானியர்கள், எகிப்தியர்கள் மட்டுமின்றி கருப்பின முசுலீம்கள் பலரும் வர்ஜீனியாவில் பயிறுவிக்கப்பட்டதை ஜான்கோலி என்ற அமெரிக்கப் பத்திரிகையாளர் தனது நூலில் (Unholy Wars : Afganistan, America and International Terrorism) குறிப்பிடுகிறார்.

ஆண்டுக்கு 65,000 டன் நவீன ஆயுத தளவாடங்களையும், வெடி மருந்துகளையும் ஆப்கானில் கொண்டு வந்து இறக்கியது சி.ஐ.ஏ.

ஜனநாயக உனர்வுக்கும் தேசிய உணர்வுக்கும் எதிராக மதராஸாக்களில் அளிக்கப்பட்ட இசுலாமிய சர்வதேசியக் கல்வி, சதிகாரக் கிரிமினல்களை உருவாக்குவதற்கென்றே சி.ஐ.ஏ நடத்திய பள்ளியில் போர்ப்பயிற்சி, இவற்றுடன் போதை மருந்து கடத்துவதற்கும் முஜாகிதீன்களை பயிறுவித்தார்கள் சி.ஐ.ஏ – ஐ.எஸ்.எஸ். உளவாளிகள்.

1979 – இல் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த கஞ்சா உற்பத்தி இரண்டே ஆண்டுகளில் பல்கிப் பெருகியது. புனிதப் போரின் செலவுகளுக்காக கஞ்சா பயிரிடுமாறு விவசாயிகளுக்கு உத்தரவிட்டார்கள் முஜாகிதீன்கள்.

ஐ.எஸ்.ஐ. யின் கட்டுப்பாட்டில் நூற்றுக்கணக்கான ஹெராயின் தயாரிப்புக் கூடங்கள் உருவாயின. 1981இலேயே அமெரிக்காவின் 60 சதவீதம் போதை மருந்துத் தேவையை ஆப்கான் நிறைவு செய்தது. 1985இல் பாகிஸ்தானில் 12 இலட்சம் ஹெராயின் அடிமைகள் உருவானார்கள்.  ஆப்கான் ‘விடுதலை’  பெற்றது.

1989  -இல் ரசிய இராணுவம் ஆப்கானை விட்டு வெளியேறிவிட்டது. ஆனால் சி.ஐ.ஏ.  உருவாக்கிய இசுலாமிய சர்வதேசியமும், சர்வதேச போதை மருந்து வியாபாரமும் ஆப்கானை விட்டு வெளியேறவில்லை.

“இதற்காக நாம் வருந்தத் தேவையில்லை.  ஒவ்வொரு நடவடிக்கைக்கும் ஒரு துணை விளைவு உண்டு. போதை மருந்து ஒரு துணை விளைவு. அவ்வளவுதான். நமது முக்கிய நோக்கம் நிறைவேறிவிட்டது. ரசியர்கள் வெளியேறிவிட்டார்கள்” என்று போதை மருந்து வியாபாரத்தை நியாயப்படுத்தினார் அன்றைய சி.ஜ.ஏ. இயக்குனர் சார்லஸ் கோகன்.

“உலக வரலாற்றிற்கு எது முக்கியமானது?  தாலிபானா, அல்லது சோவியத் சாம்ராச்சியத்தின் வீழ்ச்சியா?  சில கிறுக்குப் பிடித்த முசுலீம்களா அல்லது மத்திய கிழக்கு ஜரோப்பாவின் விடுதலையா?”  என இன்றைக்கும் கேள்வி எழுப்புகிறார் 1980இல் அமெரிக்காவின் பாதுகாப்பு ஆலோசகராக இருந்த பிரெசென்ஸ்கி.

உண்மையில் இசுலாமிய சர்வதேசியமும், போதைமருந்து வியாபாரமும் விரும்பத்தகாத துணை விளைவுகள் அல்ல, தனது உலக மேலாதிக்க போர்த்தந்திரத்திற்குப் பயன்படும் வகையில் அமெரிக்காவே உருவாக்கிய செயல் தந்திரங்கள் தான் அவை.

போலி கம்யூனிச ஆட்சி வீழ்ந்து பனிப் போர் முடிந்து விட்டதனால் அமெரிக்காவின் உலக மேலாதிக்க திட்டமும் முடிந்துவிடவில்லை. எதிர்காலத்தில் தனக்குச் சவால் விடக்கூடிய முதலாளித்துவ வல்லரசாக வளர்ந்துவிடக்கூடாது என்றால் சோவியத் ஒன்றியத்தை உடைக்க வேண்டும் என்பது அமெரிக்காவின் அடுத்த இலக்கு.

ஆப்கானில் ரசிய இராணுவம் நிலை கொண்டிருந்த காலத்திலேயே இந்த ‘எதிர்த் தாக்குதலை’ அமெரிக்கா தொடங்கிவிட்டது. மத்திய ஆசிய நாடுகளுக்குள் ஜ.எஸ்.ஜ. உளவாளிகளை அனுப்பி அங்கே முசுலீம் தீவிரவாதக் குழுக்களை உருவாக்கும் பணியை 1980 இலேயே தொடங்கி விட்டார் பாகிஸ்தான் அதிபர் ஜியாவுல் ஹக்.

தாலிபானை உருவாக்கியது பாகிஸ்தான் மட்டுமா?

ஆப்கானை விட்டு சோவியத் ஒன்றியம் வெளியேறிய பின் சில ஆண்டுகள் மட்டுமே நீடித்திருந்த நஜிபுல்லா ஆட்சி, அமெரிக்க- பாக் உதவியுடன் தாக்கிய முஜாகிதீன்களை எதிர்கொள்ள இயலாமல் வீழ்ந்தது.

அதன்பின் பாகிஸ்தான், ரசியா, ஈரான் ஆகிய நாடுகளின் பின்பலத்தில் ஹெக்மத்யார், தோஸ்தம், மசூத் குழுவினரிடையே அதிகாரப் போட்டியும் உள்நாட்டுப் போரும் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது.

இந்நிலையில், ஒரு உறுதியான ஆட்சியை (எண்ணெய்க் குழாய்க்கு தேவையான அளவு உறுதி)  ஏற்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டதுதான் தாலிபான் குழு. “அமெரிக்காவும், பிரிட்டனும்தான் தாலிபான்களைப் பயிற்றுவிப்பதற்கான செலவை ஏற்றுக் கொண்டனர்” என்று அப்போதைய பாகிஸ்தான் பிரதமரான பெனாசிர் புட்டோ தி நேஷன் நாளேட்டிற்கு 1997இல் அளித்த பேட்டியில் ஒப்புக் கொள்கிறார்.

இன்று பாகிஸ்தானில் அமெரிக்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தும் ஜமாத்-உல்-உலேமா-இ-இசுலாம் (JUL)  என்ற அமைப்புதான் அன்று தனது மதரஸாக்களில் தாலிபானைப் பயிற்றுவிப்பதற்கு அமெரிக்காவின் எச்சில் காசை வாங்கியது.

1996 செப்டம்பரில் தாலிபான் படை காபூலைக் கைப்பற்றியவுடன் அடுத்த சில மாதங்களிலேயே காண்டகாரில் தனது அலுவலகத்தைத் திறந்தது அமெரிக்க யூனோகால் நிறுவனம்.

தாலிபான் நடத்திய கொலைவெறியாட்டமும் பெண்கள் மீதான ஒடுக்குமுறையும் ‘உலகப் புகழ்’ பெற்றுவிட்டதால், தானே சோறு போட்டு வளர்த்த தாலிபான் அரசை அங்கீகரிக்க முடியாமல் தவித்தது அமெரிக்க அரசு.  ஆனால் அமெரிக்காவின் பினாமியான சவூதி அரசும், அடியாளான பாகிஸ்தான் அரசும் தாலிபானை உடனே அங்கீகரித்தன.

வளைகுடா மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் போர்த் தந்திரத்திற்கும் சவூதி-பாக்-தாலிபான் கூட்டணிக்கும் நெருங்கிய உறவு உண்டு.  ஈரானைத் தனிமைப்படுத்துவது மட்டுமின்றி ஈரான் ஆட்சியை கவிழ்ப்பதற்கென்று 20  மில்லியன் டாலரை அமெரிக்க நாடாளுமன்றம் அதிகாரப்பூர்வமாகவே ஒதுக்கியுள்ளது.  இந்தப் பணம் ரகசியமாகத் தாலிபானுக்கு தரப்பட்டுள்ளதாக ஈரான் அமெரிக்காவைக் குற்றம் சாட்டுகிறது.

இது ஒருபுறமிருக்க, சவூதி மன்னர் குடும்பத்துக்கு சொந்தமான “டெல்டா ஆயில்” நிறுவனம் அமெரிக்காவின் யூனோகால் நிறுவனத்தில் ஒரு முக்கியப் பங்குதாரார். மேலும் ஷியா முசுலீம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஈரானுடன், சுன்னி முசுலீம் நாடுகளான சவூதி, மற்றும் பாகிஸ்தானுக்குப் பகை. எனவே சவூதி ஷேக்குகளும், பாகிஸ்தான் உளவாளிகளும், தாலிபான்களும் சுன்னி முசுலீம்கள் என்ற முறையில் மட்டுமின்றி அமெரிக்காவின் கூட்டாளிகள் என்ற முறையிலும் ஒன்று சேர்ந்தனர்.

அமெரிக்காவின் இரட்டை வேடம்

எனவே தான் தாலிபான் ஆட்சிக்கு வந்தவுடன் காண்டகாரைச் சுற்றிலுமே கஞ்சா உற்பத்தி 50% அதிகரித்த போதும், பெண்கள் மீதும் மக்கள் மீதும் கொடூரமான அடக்குமுறை ஏவப்பட்ட போதும் அமெரிக்கா அதை கண்டிக்கவில்லை.

ஐ.நா. மதிப்பீட்டின்படி உலக போதை மருந்து வர்த்தகத்தில் மூன்றில் ஒரு பங்கு –  அதாவது சுமார் 200 பில்லியன் டாலர் – ஆப்கான் மற்றும் மத்திய ஆசியப் பகுதியிலிருந்து உற்பத்தியாகிக் கொண்டிருந்தது. 1980 முதல் சி.ஐ.ஏ ஒருங்கிணைத்து நடத்தும் இந்த போதை மருந்துக் கடத்தலை அமெரிக்க அரசு கண்டு கொள்ளாததில் வியப்பில்லை.

ஆனால் வியப்புக்குரிய வேறொரு நாடகம் தொடங்கியது. 1996 மே மாதம் சூடானிலிருந்து ஆப்கானிஸ்தானில் குடியேறிய பின்லாடன்,  தீவிரவாதப் பயிற்சிப் பள்ளிகளை அமைத்ததுடன், அமெரிக்காவுக்கு எதிராகப் புனிதப் போர் தொடுக்குமாறு உலக முசுலீம்களுக்கு அறைகூவல் விட்டார். 1996 ஆகஸ்டில் இந்த பேட்டி வெளியானது.

ஆனால் 1996 நவம்பரில் நடைபெற்ற ஐ.நா. மன்றத்தின் கூட்டமொன்றில் “தாலிபானைத் தனிமைப்படுத்துவது ஆப்கானுக்கும் நல்லதல்ல, நம் யாருக்கும் நல்லதல்ல” என்று கூறி  தாலிபானை ஐ.நா. அங்கீகரிக்க வேண்டுமென வாதாடினார் தெற்காசியாவுக்கான அமெரிக்க அரசின் துணைச் செயலர் ராபின் ரபேல்.

1997 மே மாதம் மசார்-ஏ-ஷெரிப் நகரின் மீது படையெடுத்த தாலிபான், பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான ஷியா முசுலீம்களைக் கொன்று குவித்தது. பதினோரு ஈரானிய அதிகாரிகளையும், ஒரு ஈரானியப் பத்திரிகையாளரையும் கொலை செய்தது.

தொடர்ந்து நடக்கும் உள்நாட்டுப் போரால் எண்ணெய்க் குழாய் கனவு தள்ளிப் போனாலும், தாலிபானின் ஈரான் எதிர்ப்பு வெறியை அமெரிக்கா புன்னகையுடன் ஆமோதித்தது.

1997 நவம்பரில் தாலிபானின் முல்லாக்களை அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்ற யூனோகால், தாலிபான் அரசுக்கு அமெரிக்க அரசின் அங்கீகாரத்தை பெற்றுத் தர முயன்றது.

1998 – இல் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினரும் மன்னர் ஜாகிர் ஷாவின் ஆதரவாளருமான ரோரா பேச்சர் ” தாலிபான் உருவாக்கத்தில் அமெரிக்க அரசின் பங்கு”  பற்றிய ஆவணங்களைத் தகவல் பெறும் உரிமையின் கீழ் (Right to information) சட்டப்படி தனக்கு காட்ட வேண்டும் என்று கடுமையாகப் போராடினார். 1996 – க்கு முந்தைய ஆவணங்களை (அதாவது தாலிபானை சி.ஐ.ஏ. உருவாக்கிய இரகசியத்தைத்) தர மறுத்தது கிளிண்டன் அரசு.

1998 ஆகஸ்டில் கென்யாவிலும் டான்சானியாவிலும் உள்ள அமெரிக்கத் தூதரகங்கள் தாக்கப்படன. “இது பின்லாடனின் சதி” எறு கூறி ஆப்கானிலுள்ள பயிற்சி முகாம்கள் மீது ஏவுகணைத் தாக்குதல் தொடுத்தது கிளிண்டன் அரசு.

பின்லாடனுக்கு தஞ்சமளிப்பது, மனித உரிமை மீறல், கஞ்சா பயிரிடுதல் போன்ற குற்றங்களுக்காக அக்டோபர் 99 முதல் பொருளாதாரத் தடை விதித்தது ஐ.நா.

இருந்த போதும் தனது கையாட்களான பாகிஸ்தான், சவூதி அரேபியா, ஐக்கிய எமிரேட்டுகள் ஆகிய நாடுகள் தாலிபான் அரசுடன் தூதரக உறவு வைத்திருப்பதை அமெரிக்கா கண்டு கொள்ளவில்லை. தாலிபானுக்கு கதவை மூடினாலும் சமரசத்திற்கு சன்னலைத் திறந்து வைத்திருந்தது.

மே, 2001 இல் 34 மில்லியன் டாலர் நிதியைக் கொடுத்து கஞ்சா பயிரிடுவதைக் கட்டுப்படுத்தியதற்காக தாலிபானைப் பாராட்டி, மேலும் உதவி தருவதாக ஆசையும் காட்டியது அமெரிக்க அரசு.

ஆனால் அடுத்த உதவியைத் தருவதற்குள் செப்டம்பர் 11 முந்திக்கொண்டு விட்டது. தான் பெற்றெடுத்த கம்யூனிசத்திற்கெதிரான “இசுலாமிய சர்வதேசியம்” என்ற பேய்க்கு ஞானஸ்நானம் செய்வித்து “பயங்கரவாதத்திற்கெதிரான உலகப் போர்” என்று புதுப் பெயர் சூட்டியிருக்கிறது அமெரிக்கா. இசுலாமியத் தீவிரவாதத்திற்கு அமெரிக்கா அளித்து வந்த ஆதரவு இத்துடன் முடிந்தது என்று நம்பலாமா ?

“என்னை நம்புங்கள். எங்கள் கொள்கை ரசியாவின் நலன்களுக்கு எதிரானதல்ல, மத்திய ஆசியாவிலிருந்து ரசியாவை வெளியேற்றும் திட்டம் எதுவும் எங்களுக்குக் கிடையாது” என்று பொய்ச் சத்தியம் செய்து ரசியாவின் ஆதரவைக் கோருகிறார் அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் கண்டோலசா ரைஸ். (ஆதாரம் : இஸ்வெஸ்தியா எனும் ரசிய நாளிதழ்)

சீனா, ஈரான் எல்லா அரசுகளிடமும் துண்டைப் போட்டுத் தாண்டுகிறார் டோனி பிளேர். உண்மைகளோ வேறு விதமாக இருக்கின்றன.

உலக மேலாதிக்கக் கருவியாக இஸ்லாமிய சர்வதேசியம்

மேற்கு சீனாவில் தொடங்கி மத்திய ஆசியாவைக் கடந்து ஐரோப்பா வரையில் அமெரிக்காவின் சதி வலை விரிந்திருக்கிறது. சீன, ரசிய நகரங்களில் குண்டு வைக்கும் இசுலாமியத் தீவிரவாதிகளும், உஸ்பெக்கிஸ்தான் தலைநகரின் பெயரை இசுலாமாபாத் என்று மாற்றக்கோரும் இசுலாமிய அமைப்புகளும் சவூதி பாக் சி.ஐ.ஏ. முகாமினால் பயிற்றுவிக்கப்பட்டவை என்று அந்நாட்டு அரசுகள் குற்றம் சாட்டுகின்றன.

1995 இல் செசன்யாவில் தாக்குதல் தொடுத்த ஷமில் பசயேவின் 35,000 பேர் கொண்ட இசுலாமியப் படை ஆப்கானில் பயிற்றுவிக்கப்பட்டது. ரசியாவின் எண்ணெய்க் குழாய்களை உடைப்பது, போதை மருந்துக் கடத்தல் ஆகியவை அவர்களது ‘அமைதிக்கால பணிகள்’

“தீவிரவாத ஒழிப்பு” என்ற பெயரில் செசன்யா மக்கள் மீது ரசிய இராணுவம் நடத்திய கொலைவெறியாட்டத்தை மட்டும் வெளிச்சம் போட்டுக் காட்டி “மனித உரிமை மீறல்” என்று அமெரிக்கா குற்றம் சாட்டியதை ரசியா மறக்கவில்லை.

“ஆப்கான், பாகிஸ்தான் முகாம்களில் பயிற்றுவிக்கப்பட்ட செசன்யாவின் இசுலாமியத் தீவிரவாதியான ஷமில் பசயேவ், அல் கடாப் ஆகியோருடன் பின்லாடனும் கலந்து கொண்ட இரகசியக் கூட்டமொன்று 1996 – இல் சோமாலியாவில் மொகாடிஷீ நகரில் நடத்தப்பட்டது. ரசிய அரசுக்கெதிரான போரைத் திட்டமிடுவதற்கு நடத்தப்பட்ட அந்தக் கூட்டத்தை ஐ.எஸ்.ஐ ஏற்பாடு செய்தது” என்று கூறுகிறார் அமெரிக்க நாடாளுமன்றத்தின் பயங்கரவாதத் தடுப்புக் குழுவின் இயக்குநர் ஒய். பெடொன்ஸ்கி

இதே நேரத்தில் அமெரிக்க உள்நாட்டு உளவுத்துறையான எப்.பி.ஜ. (FBI) இன் தேடப்படுவோர் பட்டியலில் பின்லாடன் இருந்தார்.

யூகோஸ்லாவியா மீதான நேட்டோ தாக்குதலுக்குக் காரணமாக இருந்த போஸ்னிய முசுலீம்கள் மீதான செர்பிய வெறியர்களின் தாக்குதல், இனப்படுகொலை ஆகியவற்றில் அமெரிக்காஇஸ்ரேல் கூட்டணியின் சதியும் இப்போது அம்பலமாகியிருக்கிறது.

ஒருபுறம் குரேசிய கிறித்தவ, நாஜி வெறியர்களுக்கு அமெரிக்க ஆயுத வியாபாரிகள் ஆயுத சப்ளை செய்தனர், இன்னொருபுறம் அமெரிக்கா, ஜெர்மனி, இசுரேல் ஆகிய நாடுகள் முசுலீம் தீவிரவாதிகளுக்கும் ஆயுத சப்ளை செய்திருக்கின்றனர்.

முசுலீம்களுக்கு இசுரேல் ஆயுதங்களை சப்ளை செய்ய முடியுமா என்று அதிசயிப்பவர்கள், இந்தப் போரின் விளைவிலிருந்து அதைப் புரிந்து கொள்ளலாம். பிரபல அமெரிக்க வர்த்தகச் சூதாடியான ஜார்ஜ் சோரோஸ் என்ற யூத ஏகபோக முதலாளிதான் இன்று கொசாவாவில் உள்ள சுரங்கங்களின் உரிமையாளன். (American Free Press.net – 14.10.2001)

முன்னாள் இசுரேலிய உளவுத்துறை அதிகாரியும் இந்நாள் முதலாளியுமான யூசுப் மைமைன் என்பவன் தான் துர்க்மேனிஸ்தான் அதிபரின் வர்த்தக ஆலோசகர். துர்க்மேனிஸ்தானிலிருந்து காஸ்பியன் கடல், அஜர்பைஜான் வழியே துருக்கிக்கு குழாய் அமைத்து ஈரானை ஒதுக்குவது மைமனின் திட்டம். குழாயை துருக்கியிலிருந்து ஐரோப்பாவிற்குள் கொண்டு செல்லத் தோதாக பால்கன் நாடுகள் அமெரிக்கப் பிடியில் கொண்டு வரப்படுகின்றன.

“மத்திய ஆசியாவில் நமது அரசியல் புவியியல் லட்சியங்களை எட்டுவதற்கு அமெரிக்க இசுரேல் அரசுகளால் சாதிக்க முடியாதவற்றை நாங்கள் சாதித்திருக்கிறோம்” என்கிறான் மைமன்.

சோவியத் ஆப்கான் போரின் காலம் முதல் வாஷிங்டனுக்கு தேவையான பதிலி யுத்தங்களை நடத்துவதற்கு முஜாகிதீன்களை பயன்படுத்துவது அமெரிக்க வெளியுறவுக் கொளையின் ஓர் அங்கமாகவே ஆகிவிட்டது. “போஸ்னியாவை இசுலாமிய தீவிரவாதத்தின் தளப்பகுதியாக மாற்றுவதற்கு உலகெங்கிலுமிருந்து ஆயிரக்கணக்கான முஜாகிதீன்களைத் திரட்டுவது என்று அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு கவுன்சில் திட்டமிட்டிருக்கிறது. அமெரிக்க நாடாளுமன்றத்தின் அறிக்கை இதைக் கூறுகிறது” என்கிறார் சோசுடோவ்ஸ்கி.

“இப்போது மாசிடோனியாவிலும் இதுதான் நடக்கிறது. போரிடும் இரண்டு தரப்பினரையும் (அரசு Vs முசுலீம் தீவிரவாதம்) அமெரிக்க இராணுவத்தின் உளவுத்துறை ஆட்டுவிக்கிறது.” (மைக்கேல் சோசுடோவ்ஸ்கி, ஆகஸ்டு, 2001 உலகமயமாக்கல் குறித்த ஆய்வு மையம், கனடா)

மேற்கூறிய விவரங்கள் கூறும் முடிவு இது தான். பனிப்போர்க் காலத்தில் ரசியாவை வீழ்த்துவதற்கான ஆயுதமாக இசுலாமிய சர்வதேசியத்தை பயன்படுத்திய அமெரிக்கா பனிப்போருக்குப் பின் அதையே தனது உலக மேலாதிக்கத்தை நிறுவ உதவும் இரகசிய ஆயுதமாகப் பயன்படுத்தி வருகிறது.

இனி என்ன?

“செப் 11 க்கு முன்பு வரை இது உண்மையாக இருந்திருக்கலாம். ஆனால் அதை இனியும் தொடர்வது தனக்கே ஆபத்து என்பதை அமெரிக்கா உணர்ந்திருக்குமல்லவா” என்று கேட்கலாம்.

வளர்த்த கடா மார்பில் பாய்ந்துவிட்டது என்பதனால் இனி கடா வளர்ப்பதே இல்லை என்று அமெரிக்கா முடிவு செய்யப் போவதில்லை. ஏற்கெனவே நொரிகோ, சதாம் உசேன் போன்ற கடாக்களைச் சந்தித்திருக்கும் அமெரிக்காவுக்கு பின்லாடன் தாலிபான் அனுபவம் புதியதல்ல. அதே நேரத்தில் சுலபமானதும் அல்ல.

வியத்நாமில் 65,000 அமெரிக்கச் சிப்பாய்களை காவு கொடுத்து, உள்நாட்டு மக்களின் கடும் எதிர்ப்பையும், உலக அரங்கில் அவமானத்தையும் சந்தித்ததன் காரணமாக “இனி அடுத்த நாட்டின் விவகாரத்தில் தலையிடுவதில்லை” என அமெரிக்கா முடிவு செய்யவில்லை.

தனக்கு தேவையான இடங்களில் அரசுகளை கீழிருந்து நெம்பிக் கவிழ்ப்பதற்கான கடப்பாறையாக இசுலாமிய பயங்கரவாதத்தை பயன்படுத்தி வரும் அமெரிக்கா, மேலிருந்து அரசுகளைத் தகர்க்கும் உலக்கையாக இப்போது ‘பயங்கரவாத எதிர்ப்பை’ பயன்படுத்துகிறது. பயங்கரவாதத்தை ‘ஆதரிக்கும்’ எல்லா நாடுகளின் மீதும் போர் தொடுப்பதாக மிரட்டுகிறது.

பின்லாடனைப் பிடிப்பது, மத்திய ஆசியாவின் எண்ணெய்க் குழாய்க்கு வழி தேடுவது, ஆப்கானில் பொம்மை ஆட்சி அமைப்பது, மத்திய ஆசியாவில் இராணுவதளம் நிறுவுவது, இசுலாமிய தீவிரவாதத்தையும், போதை மருந்துக் கடத்தலையும் முறைப்படுத்தி சி.ஐ.ஏ. வின் கட்டுப்பாட்டை நிறுவுவது, ஒத்துவராத அல்காய்தா போன்ற குழுக்களை ஒழித்துக்கட்டுவது, பயங்கரவாத அபாயத்தைக் காட்டி உலக நாடுகளின் இறையாண்மையில் தலையிடும் உரிமை பெறுவது என்ற பல நோக்கங்களை உள்ளடக்கிய போர் இது.

“ஊசியை தேடுவதற்காக வைக்கோல் போருக்குத் தீ வைக்கலாமா பின்லாடனைத் தேடுவதற்காக ஆப்கானை ஆக்கிரமிக்கலாமா?” என்று போர் தொடங்கு முன்னரே எழுப்பப்பட்ட கேள்விக்கு அமெரிக்கா பதில் சொல்லவில்லை.

இப்போது நான்காவது வாரமாக போர் தொடர்கின்ற நிலையில் “பின்லாடனைத் தேடுவதென்பது வைக்கோல் போரில் ஊசியைத் தேடுவதற்கு ஒப்பானது” என்கிறார் ரம்ஸ்பீல்ட்.

“இது தோல்வியை ஒப்புக்கொள்ளும் வசனம்” என்று எண்ணிக் குதூகலிப்பது முட்டாள்தனம். போரை இப்போதைக்கு முடிக்க முடியாது என்பதை சூசகமாக அறிவிக்கும் தந்திரம் இது.

“போர் முடிவதற்கு 4 ஆண்டுகள் கூட ஆகலாம். கம்யூனிசத்தை முறியடிக்க நமக்கு 50 ஆண்ன்டுகள் தேவைப்பட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்” என்கிறார் பிரிட்டிஷ் இராணுவத் தளபதி.

அமெரிக்காவின் ஆசியோடு தங்கள் சொந்த நலனுக்காக இசுலாமிய சர்வதேசியத்தை எண்ணெய் ஊற்றி வளர்த்த வளைகுடா ஷேக்குகள், முசுலீம் மக்களிடையே வளர்ந்து வரும் அமெரிக்க எதிர்ப்பைக் கண்டு பீதியடைகிறார்கள்.

“அவர்களிடம் நிறைய எண்ணெய் இருக்கிறதென்பது உண்மை தான். ஆனால் இப்போது நமக்கு அவர்கள் தேவைப்படுவதைக் காட்டிலும் நாம் தான் அவர்களுக்கு அதிகமாகத் தேவைப்படுகிறோம்” என்று ஏளனம் செய்கிறார் அமெரிக்க செனட்டின் வெளியுறவுத்துறைச் செயலர் ஜோசப் பிடன். கைக்கூலிகளுக்குத் தேவையான சூடு தான் இது.

“ரம்ஜானுக்காவது போரை நிறுத்துங்கள்” என்று மன்றாடுகிறார் முஷாரப் “ஈரானும் ஈராக்கும் அடித்துக்கொண்ட போது ரம்ஜானுக்கு விடுமுறையா விட்டார்கள்” என்ற ஏளனம் பதிலாய் கிடைக்கிறது.

ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நிற்கும் போராளிகள் கொல்லப்படுகிறார்கள் அல்லது விடுதலையை வென்றெடுக்கிறார்கள். கைக்கூலிகளின் கதையோ வேறு.

எசமானை எதிர்த்து நிற்பவர்கள் ஏவுகணைகளால் தாக்கப்படுகிறார்கள். எசமான விசுவாசிகளோ மக்களால் கல்லெறிந்து கொல்லப்படுகிறார்கள்.

அமெரிக்கா பொருளாதார நெருக்கடியாலும், உள்நாட்டில் வளர்ந்து வரும் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களாலும் அச்சுறுத்தப்படுகிறது. உலக பயங்கரவாதத்தைக் காட்டி உள்நாட்டில் அரசு பயங்கரவாதத்தை ஏவுகிறது.

பின்லாடனைத் தேடி அலைகிறது அமெரிக்க அதிரடிப்படை, அமெரிக்க ராஜதந்திரிகளோ மிதவாத தாலிபான்களைத் தேடி அலைகிறார்கள்.

எண்ணெய் முதலாளிகளின் மூலதனத்துக்குப் பதில் சொல்ல, குழாய் அமைக்க வேண்டும், அதற்கு ஈரானுடனும் ரசியாவுடனும் முரண்பட வேண்டும்; தாலிபான், பாகிஸ்தான் மட்டுமின்றி வடக்கு முன்னணியின் ஆதரவும் வேண்டும்.

போர்த் தந்திர நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள மத்திய ஆசியாவில் இராணுவத்தளம் வேண்டும் அதற்கு மத்திய ஆசிய நாடுகளின் ஆதரவு வேண்டும்; சீனா, ரசியா, ஈரானுடன் முரண்பட வேண்டும்.

அமெரிக்கப் போர்வெறியர்களுக்கோ இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சதாமை ஒழித்துவிட ஈராக்கின் மீதும் போர் தொடுக்க வேண்டும் அதற்கு ஜரோப்பிய நாடுகளின் எதிர்ப்பைச் சந்திக்க வேண்டும்.

தங்களுடைய மவுனமான ஆதரவுக்குப் பரிசாக வளைகுடா ஷேக்குகளுக்கு பாலஸ்தீனப் பிரச்சினைக்கு ஏதாவது ஒரு முடிவு வேண்டும், அதற்கு இசுரேலின் எதிர்ப்பைச் சந்திக்க வேண்டும்.

தனது துணிச்சலான ஆதரவுக்குப் பிரதி பலனாக முஷாரப்புக்கு காசுமீர் பிரச்சினையில் உதவ வேண்டும். அதற்கு இந்தியாவின் வெறுப்பை எதிர்கொள்ள வேண்டும்.

வெவ்வேறு விதமான தீர்வுகளைக் கோருகின்ற இந்தப் பிரச்சினைகள் அனைத்தையும், தனது நலனுக்கு உட்பட்டே தீர்த்துவிடலாம் என்று அமெரிக்கா கனவு காண்கிறது.

டாலரையும், ஏவுகணைகளையும் காட்டிக் தனது உலக மேலாதிக்கத்தை நிலைநாட்டி விடலாம் என்று நம்பி ஆசியப் புதை சேற்றில் கால் வைத்திருக்கிறது அமெரிக்கா.

பின்லாடனைப் பிடிப்பது. ஆப்கனில் பொம்மையாட்சியை நிறுவுவது என்ற உடனடி நோக்கம், எண்ணெய்க் குழாய் எனும் வர்த்தக நோக்கம், மத்திய ஆசியாவில் இராணுவதளம் நிறுவும் போர்த்தந்திர நோக்கம் அனைத்தையும் ஒரே கல்லில் அடித்து நிறைவேற்றி விடலாம் என்று எண்ணித்தான் அமெரிக்கா போரைத் துவக்கியது.

அமெரிக்காவின் வல்லமையை உலகுக்கு நிரூபிப்பதாக முரசு கொட்டிப் போரில் இறங்கினார் புஷ். தற்போதைய நிலவரப்படி, அமெரிக்காவின் வல்லமையை அவர் அமெரிக்காவுக்கே நிரூபிக்க வேண்டியிருக்கிறது !

_____________________________________________________________

மருதையன், புதிய கலாச்சாரம் – டிசம்பர் 2001
_____________________________________________________________

 1. இந்த ஒரு கட்டுரை வைத்தே ஒன்றல்ல ஒன்பது ஆக்சன் த்ரில்லர்களை உருவாக்கலாம். ஆனால் அதை செய்வதற்கான ஆண்மையும் முதுகெலும்பும் உலகநாயகனுக்கோ அவரது அடிவருடிகளுக்கோ இருக்குமா என்பது சந்தேகமே!

 2. எது எப்படியோ…நான் வினவு பதிவுகலை தொடர்ந்து வாசைத்து வருகிரேன்….பல விசயஙல் ஏற்றுக்கொகிரேன் சில விசயஙலில் முரண்படுகிரேன்….இதில் உங்கள் பதிவுகள் ரசிய அல்லது கம்யூனிசம் சார்பாகவே இருக்கிறது….அதுபோக….ஒரு வல்லரசை எதிர்க்க அவனது எதிரியை கையில் எடுப்பது யுத்தமுறையில் எடிரியின் எதிரி என் நன்பன் எனும் முரையே….

  ஆப்கானித்தான் உள்நாட்டுப் போர் 1978 ஏப்ரல் 27 அன்று இடம்பெற்ற சவுர் புரட்சி எனப்பட்ட இராணுவப் புரட்சியை அடுத்து ஆப்கானித்தான் மக்கள் சனநாயகக் கட்சி ஆப்கானித்தானின் ஆட்சியைக் கைப்பற்றியதுடன் தொடங்கியது. ஆப்கானித்தான் மக்கள் சனநாயகக் கட்சி அரசாங்கத்திற்கு எதிரான எழுச்சிகளை ஆப்கானித்தானியர்கள் தொடர்ச்சியாக அனுபவித்தனர். புதிய ஆட்சியை வலுப்படுத்த சோவியத் படையெடுப்பு 1979 டிசம்பரில் இடம்பெற்றது. முஜாஹிதீன் என அழைக்கப்பட்ட ஆப்கானித்தான் எதிர்ப்புப்படை சோவியத் படையெடுப்புக்கு எதிராகப் போரிட்டனர். சில பிரிவினர் பாக்கித்தானிய சேவைகளிடை உளவுத்துறை மற்றும் சவுதி அரேபிய ஆதரவுடன் அமெரிக்காவின் உதவியைப் பெற்றன. சோவியத் படைகள் 1989 பெப்ரவரியில் இல் பின்வாங்கின. எனினும் சோவியத் ஆதரவு ஆப்கானித்தான் பொதுவுடமை ஆட்சி 1992 இல் காபூல் வீழ்ச்சியடையும் வரை தொடர்ந்தது.

  தலிபான் ) எனப்படுவோர் ஆப்கானிஸ்தானை 1996 முதல் 2001 வரை ஆட்சி செய்த சுணி இஸ்லாமிய தேசியவாத அமைப்பாகும். 2001 இல் ஐக்கிய அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளின் உதவியுடன் இவ்வமைப்பின் தலைவர்கள் பதவியில் இருந்து அகற்றப்பட்டனர். அடிப்படைவாத தீவிரவாத அமைப்பாகக் கருதப்படும் “தலிபான்” பாகிஸ்தானின் பழங்குடியினரின் பகுதிகளில் தோற்றம் பெற்றது. தற்போது ஆப்கானிஸ்தானின் அரசுக்கெதிராகவும் நேட்டோ படைகளுக்கெதிராகவும் கெரில்லா முறையில் போரிட்டு வருகிறது[1].
  தலிபான் அமைப்பின் தலைவர் முல்லா முகமது ஓமார் ஆவார். தலிபானின் படைகளில் பெரும்பாலானோர் தெற்கு ஆப்கானிஸ்தானிலும் மேற்கு பாகிஸ்தானிலும் உள்ள பாஷ்டன் மக்கள் ஆவார். இவர்களைவிட சிறிய அளவில் ஐரோப்பா மற்றும் சீனாவைச் சேர்ந்த தொண்டர்களும் இவ்வமைப்பில் உள்ளனர். தலிபான் பாகிஸ்தான் அரசிடம் இருந்து இராணுவப் பயிற்சிகளையும் பெருமளவு இராணுவத் தளவாடங்களையும் பெற்றனர்

  மேர்சொன்ன சிரு வறலாரு உஙகல் வாதஙலை மறு ஆய்வு செய்வட்கர்கு….ithu ungaL karuththu….அதில் நான் தலையிட முடியாது….தயை கூர்ந்து…இச்லமிய தீவிரவாதம் என்ற பதம் ஏனய இச்லாமியர்கலையும் கேவலபடுத்துகிரது….ஜன்நாயகம் எண்ட்ரு வாய் கிழிய சொல்பவர்கல் இப்படி முறை இன்றி வார்த்தையை உபயோகப்படுத்தாதீர்கல்

  • இஸ்லாமிய தீவிரவாதம் என்ற பதம் ஏனைய இஸ்லாமியர்களையும் இழிவுப்படுத்துகிறது என்று கூறுகிறீர்கள்.
   இஸ்லாமை மையமாக வைத்து செய்யப்பகிறதனாலேயே இஸ்லாமிய தீவிரவாதம் என்று அழைக்கப்படுகிறது.
   காவி தீவிரவாதம் என்று அழைக்கப்படவில்லையா?
   மதத்தை மையமாகக் கொண்டு செயல் படும் தீவிரவாதிகளை, அவர்கள் எம்மதமானாலும், அவ்வாறு அழைப்பதில் தவறில்லை.

 3. ///வளர்த்த கடா மார்பில் பாய்ந்துவிட்டது என்பதனால் இனி கடா வளர்ப்பதே இல்லை என்று அமெரிக்கா முடிவு செய்யப் போவதில்லை. ஏற்கெனவே நொரிகோ, சதாம் உசேன் போன்ற கடாக்களைச் சந்தித்திருக்கும் அமெரிக்காவுக்கு பின்லாடன் தாலிபான் அனுபவம் புதியதல்ல. அதே நேரத்தில் சுலபமானதும் அல்ல.////

  மொத்த கட்டுரை நிறைய்ய விஷயங்களை விவரமாக சொல்கிறது.இந்த மூன்று வரிகள் பளிச்சென்று அதையே சொல்கிறது.அமெரிக்கா அவ்விடத்தை விட்டு போகாது.அதற்கு வேண்டியது அங்கே இருக்கிறது.அப்படியே போனாலும் இஸ்லாமுக்குள் உள்ள இரு பிரிவுகள் அடித்துக்கொள்ளும்.அந்த இரு பிரிவை உசுப்பேத்திக்கொண்டே இப்போது காலம்தள்ளுகிறது அமெரிக்கா….அதற்கு பிரச்னையை தீர்க்கவெல்லாம் ஐடியாவே இருக்காது…..

 4. இன்று இந்த உலகமயமாக்த்களின் தத்துப்பிள்ளைகளான பெருவாரியான இந்திய மக்கள் தன் சுய ஆளுமையையும் அதனால் வேரிலிருந்து ஆராய்ந்து அறியும் திறனையும் இழந்து ஒரு போலியான அறிவை அதுதான் அறிவு என்று சுமந்து நிற்கிறார்கள். அவர்கள் அனைவரும் அவசர நியாயத்தையும் அவசர தீர்வையும் தேடுகிறார்கள். இந்த கட்டுரை அவர்களுக்கெல்லாம் ஒரு சவுக்கடி. அவர்களை எழுப்பும் ஒரு அலாரம்.

  நல்ல பதிவு.

  தோழர் இடதுசாரிக்கு வாழ்த்துக்கள்…

 5. // நர்சின் கண்ணீர் ஒரு மோசடி நாடகம் என்பது பின்னர் தான் அம்பலமானது.//
  கவுசர் பானு கதைகூடதான் நாடகம் என்று தெரியவந்தது.. அதற்காக அதைச்சொல்லி மோடியைத் திட்டுவதை நிறுத்தியா விட்டீர்கள்?

 6. அமெரிக்காவின் எதிர்த்தால் எகிப்தின் அப்துல் நாசரைப் போல .சவூதி அரேபியாவின் பெயசல் போல சி,ஐ எ வின் கூலியாட்கள் மூலம் கொல்லப்படுவார்கள் .அல்லது கைவசம் இருக்கும் பயங்கரவாதம்

 7. இந்த கட்டுரை எழுதப்பட்டது 2001 என்றாலும், உண்மையை எழுதியதால் இன்றும் படிக்ககூடியதாக உள்ளது. தோழர் மருதையன் அவர்களுக்கு நன்றிகள்.

 8. அமெரிக்கா ஆயுதங்களை விற்கிறது என்கிறார்கள். உண்மையில் முதலில் அது பயத்தை விற்கிறது. பின்னர் ஆயுதங்கள் தானாகவே விற்பனையாகிறது.இந்தியாவில் சென்ஸிடிவான விஷயம் மதம்தான். அதை தூண்டிவிடணும் என்று முடிவு செய்தால் அதனால் எளிதாக செய்யமுடியும். பலமுனை கலாசாரம்,பண்பாடு எல்லாவகையான விவாதங்கள் இல்லாமல் இதை எதிர்கொள்ளவே முடியாது.

  எல்லா நாடுகளுக்கும் அமெரிக்கா ஒரு check வைத்தே இருக்கிறது. இந்தியாவுக்கு அது காஷ்மீர்.

 9. ஆப்கானின்,
  மலைக் குகைகளுக்குள்
  சத்தியாக்கிரகம் செய்த
  தலிபான் தீவிரவாதிகளின்
  சுயரூபத்தை,
  ஒஸ்காரை, மனதில்க்கொண்டு,
  கமலஹாசன்
  விஸ்வரூபமாக சொன்னார்.

  ………….
  http://koothadiveddai.blogspot.in/2013/02/blog-post_6.html
  -ஊர்க்குருவி-
  _________________

 10. உபதேசம் ஊருக்கு தான் எனக்கு இல்லை என்று சொல்வது போல, இந்து மதத்தவர்கள் சிலர் முஸ்லிம் தீவிரவாதி என்பதை குற்றமாக எழுதிய நீங்கள் இப்பொழுது இஸ்லாமிய தீவிரவாதி என்று தலைப்பில் சொல்வது அநாகரிகம்.

 11. 9/11 யுதர்கள் செய்த சதியே

  பெண்டகனில் முக்கியப் பொறுப்புக்களில் இருந்த அனைத்து அதிகாரிகளும் யூதர்கள் என்றால், ஜனாதிபதியாகிய புஷ்ஷும் அவர்களால் ஆட்டி வைக்கப்பட்ட பொம்மை மட்டுமல்ல அவர்களில் ஒர் ஆளாய் மாறிப் போனது. யூதர்களுக்கு உலக வர்த்தக மையத்தை இடிப்பது மிகவும் இலகுவாகிப் போனது. ஆனால் ஏன் இடிக்க வேண்டும்?,
  சத்திய சொரூபம்..விஸ்வரூபம்..
  அசத்தியம் நிரூபணம். தொடர் 7.

  பெண்டகனில் முக்கியப் பொறுப்புக்களில் இருந்த அனைத்து அதிகாரிகளும் யூதர்கள் என்றால், ஜனாதிபதியாகிய புஷ்ஷும் அவர்களால் ஆட்டி வைக்கப்பட்ட பொம்மை மட்டுமல்ல அவர்களில் ஒர் ஆளாய் மாறிப் போனது. யூதர்களுக்கு உலக வர்த்தக மையத்தை இடிப்பது மிகவும் இலகுவாகிப் போனது. ஆனால் ஏன் இடிக்க வேண்டும்?, எதற்க்கா இடிக்க வேண்டும்? யாருக்காக இடிக்க வேண்டும்? யார் இடிக்க வேண்டும்? என்கிற அனைத்து கேள்விகளும் தொக்கி நிற்க்கிறதல்லவா?!. விடை காண்போம் வாருங்கள்.

  ஏன் இடிக்க வேண்டும்?

  லாரி சில்வெர்ஸ்டைன் – உலக வர்த்தக மையக் கட்டிட இடிப்பின் சூத்திரதாரிகளில் ஒருவர். யார் இந்த சிவெர்ஸ்டைன்?. இந்நாளைய இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹுவோடு பிரதி ஞாயிறு தோறும் இன்று வரை தொடர்பு கொண்டு உரையாடும் அளவுக்கு நெருங்கிய நண்பர்.அவருக்கு மட்டுமல்ல யூதச் சியோனிசத்தின் முக்கிய நபரான ஏரியோல் ஷெரோனுக்கும், சியோனிச ஊடகமான ஃபாக்ஸ் தொலைக் காட்சியின் உரிமையாளர் ரூபெர்ட் மார்டோஷ்கும் கூட நெருங்கிய நண்பர். சரி அதுக்கு என்ன? எனக் கேட்கிறீர்களா?!. அது மட்டுமல்ல உலக வர்த்தக மையத்தை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்திருந்த குத்தகைதாரர் தான் இந்த சில்வெர்ஸ்டன் எனும் யூதர். 1987ல் பங்குச் சந்தையில் ஏற்பட்ட சீர்கேட்டினால் நியூயார்க் நிர்வாகம் மிகவும் மோசமான நிலையிலிருந்தது. ஆகையால் உலக வர்த்தக மையக் கட்டிடத்தில் யாரும் வாடகைக்கு எடுக்காத நிலை நீடித்த பொழுது, அப்பொழுதைய(1995) நியூயார்க்கின் கவர்னராக பதவியேற்ற ஜார்ஜ் பட்டாகி, 30 வருட நியூயார்க் வரலாற்றில் நிகழாத ஒரு முடிவை முன் வைத்தார். அது தான் WTC கட்டிடத்தை தனியாருக்குக் குத்தகைக்கு விடுவது என்கிற முடிவு. ஆகையால், நியூயார்க் துறைமுக நிர்வாகத்துடன் சேர்ந்து சில்வெர்ஸ்டைனுக்கு 3.55 பில்லியனுக்குக் இன்சுரன்ஸ் நிபந்தனையுடன் 2001 ஜூலை மாதம் குத்தகைக்கு விட்டனர்.

  குத்தகைக்கு எடுத்த அன்றைய தினத்திலிருந்து சில்வெர்ஸ்டைனுடைய வழக்கம் என்னவெனில் தினமும் காலையில் உலக வர்த்தக மையக் கட்டிடத்தின் 107 வது மாடியின் ஜன்னல் ஓரமாக அமர்ந்து தனது காலை உணவை முடித்துவிட்டு வாடகை கேட்டு வரும் நபர்களை சந்திந்து வந்தார். ஆனால், செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி செவ்வாய் கிழமை காலை மட்டும் இவர் எஸ்கேப்!. எங்கே இருந்தீர்கள் என தொலைக் காட்சி பேட்டியில் கேட்ட பொழுது. நான் என் மனைவியோடு ஒரு தோல் வியாதி சம்பந்தமாக டாக்டரைப் பார்க்கச் சென்றேன் எனக் கூறியுள்ளார். இந்த சில்வெர்ஸ்டைன் உலக வர்த்தக மையக் கட்டிடம் இடிக்கப்பட்டவுடன், தனக்கு நஷ்ட ஈட்டுத் தொகையாக 7.1 பில்லியன் இன்சுரன்ஸ் நிறுவனங்களிடம் வேண்டினார். ஆனால், இன்சுரன்ஸ் நிறுவனங்கள் மறுத்தது. கோர்ட்டுக்குப் போனார்.இறுதியில் 2004ல் கோர்ட் இவருக்கு 4.55 பில்லியன் கொடுக்குமாறு இன்சுரன்ஸ் நிறுவனங்களுக்கு கட்டளையிட்டது. அது மட்டுமல்லாமல், புதிதாக தற்பொழுது கட்டப்பட்டு வருகிறதே உலக வர்த்தக மையக் கட்டிடம் அதன் கட்டுமான குத்தகையும்(காண்ட்ராக்ட்) இவருக்கே.

  4.5 பில்லியன் டாலர் பணம். காண்ட்ராக்ட் வேறு. தகர்த்திட்டார் சில்வெர்ஸ்டைன். தகர்த்த காரணம் விளங்குதா?!. நாம் சொல்லவில்லை, அவரே சொல்லியிருக்கிறார். 2002ல் பிபிஎஸ் டாக்குமெண்ட்ரி என்ற நிறுவனம், ”அமெரிக்கா ரிபில்ட்ஸ்”- என்ற டாக்குமெண்ட்ரி படத்தை தயார் செய்தது அதில்,” நான் ஞாபகப்படுத்தி பார்க்கிறேன். தீயனைப்புத் துறை அதிகாரியிடமிருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. எங்களால் தீயை அணைக்க முடியாது என நினைக்கிறோம் என்றார். நான் சொன்னேன், நாம் அதிகமான மக்கள் உயிரை இழந்திருக்கிறோம். ஆகையால் கட்டிடத்தை இழுத்து வீழ்த்துவதே சிறந்தது” என்றேன்.

  இந்த கட்டிடம், இழுத்து வீழ்த்துவதற்க்குச் சாதாரண இரண்டு மாடி அல்லது மூன்று மாடிக் கட்டிடமா என்ன 107 அடுக்குகளைக் கொண்ட அந்தக் கட்டிடத்தை வீழ்த்த வேண்டும் என்றால் வெடி வைத்தல்லவா தகர்க்க வேண்டும். ஆம், தகர்க்கப்பட்டது. எரிந்து கொண்டிருந்தக் கட்டிடத்தில் எப்படி வைக்க முடியும்?. அதற்க்கு முன்னரே அது தகர்க்கப்பட்டது.

  தொடர் மூன்றில் மார்லன் என்ற தச்சு வேலைக்கு வந்த பெண் சொன்னாரே. நான் லிஃப்டில் நுழைந்த பொழுது மிகப் பெரிய குண்டு வெடிச் சப்தம் கேட்டது, நான் லிஃப்டிலிருந்து வெளியே தூக்கி வீசப்பட்டேன் எனச் சொன்னதை யூ-டியூப் வீடியோ ஆதாரத்தோடு பதிந்திருந்தேனே ஞாபகம் இருக்கிறதா. மிட்சல் என்ற பெண் தாங்கள் கீழே விரைந்து வந்த பொழுது குண்டு வெடிப்பால் லாபி சிதைந்திருந்தது எனப் பேட்டியளித்த யூ-டியூப் வீடியோவைப் பார்த்த நினைவு வருகிறாதா. ஆக, வெடி குண்டால் தகர்க்கப்பட்டது உலக வர்த்தக மையம் என்பது நிரூபணம். அதற்க்கு மேலதிக ஆதாரமாக 7 பேர் அடங்கிய வேதியல் இரசாயன வல்லுனர்களின் அறிக்கையை தொடர் மூன்றிலேயே குறிப்பிட்டதை இங்கே நினைவு கூருங்கள்.அதாவது மெட்டல் தெர்மடைட் மற்றும் கந்தகம் கலந்த 900 டிகிரி செண்டிகிரேடில் சூடேற்றினால் வெடிக்கக்கூடிய இரசாயனக் கலவை உலக வர்த்தக மையக் கட்டிட தகர்ப்பில் பயன்படுத்தபட்டுள்ளதாக அறிக்கை சமர்பிக்கப்பட்டது.

  வைத்தது யார் மெட்டல் தெர்மடைட் மற்றும் கந்தக இரசாயனக் கலவையை. அதை சூடேற்ற விமானத்தை எடுத்து வந்து ஏவுகனை தாக்குதலுடன் மோதியது யார்?

 12. உலகம் முழுவதும் இன்று அமெரிக்காவின் பயங்கரவாதப் பிடியில் சிக்கி இருக்கிறது. உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கின்ற மிகப்பெரிய பயங்கரவாத நாடு அமெரிக்காதான். ஆனால்…அமெரிக்க பயங்கரவாதத்தை எதிர்த்து போரிடுகின்ற முஸ்லிம்கள் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்படுவது பெரும் கொடுமை.

  மதம் பயங்கரவாதம் புரிகிறதா என்று பார்த்தால்…

  பயங்கரவாதம் புரியும் மதம் கிறிஸ்தவ மதமாகத்தான் இருக்க வேண்டும்.

  *** சென்னையில் நடை பெற்ற அனைத்துலக இஸ்லாமிய இலக்கிய மாநாட்டில் பீட்டர் அல்போன்ஸ் MLA அவர்கள் பேசியது.

 13. தீவிரவாதமும், முஸ்லிம்களும்!

  தீவிரவாதம் எந்த உருவத்தில் இருந்தாலும் அது வேரறுக்கப்பட வேண்டியதே. உலகம் முழுக்க இம்மாதிரியான சம்பவங்களை நடத்தியவர்களை ‘தவறாக வழிநடத்தப்பட்டவர்கள்’ என்றே வரலாறு பதிகின்றது. அவர்கள் சார்ந்த கொள்கையை, மதத்தை காரணமாக காட்டியதில்லை. ஆனால் இஸ்லாம் என்று வரும்போது மட்டும், இஸ்லாம் சொல்லாத ஒன்றை சிலர் செய்யும் போது, அதற்கு மதச்சாயம் பூசி பார்க்கப்படுகின்றது.

  எல்லாருக்கும் உலகம் எடுத்த அளவுக்கோலை முஸ்லிம்கள் என்று சொல்லப்படுவர்கள் விசயத்திலும் இவ்வுலகம் கடைபிடித்திருக்குமானால் இப்பதிவிற்கு அவசியம் இருந்திருக்காது.

  1. அறிவியலை துணையாகக்கொண்டு லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்தான் ஹிட்லர்,
  2. FBஈ தகவல்படி, அமெரிக்காவில் 94% தீவிரவாத தாக்குதலை நடத்தியது முஸ்லிம் பெயர் தாங்கிகள் அல்லாதவர்களே.
  3. போர் என்ற பெயரில் அப்பாவி மக்களை கொன்று குவித்த இலங்கை அரசாங்கமும், புலிகளும்
  4. நார்வே நாட்டில் சமீபத்தில் நடந்த தாக்குதலில், இனவெறியின் உச்சத்தில் பல மக்களை கொன்றுக்குவித்த ஆன்டெர்ச் Bஎக்ரிங் Bரெஇவிக்…எட்ச் எட்ச்..

  இப்படி சொல்லிகொண்டே போகலாம். ஆனால் இவற்றிற்கு அவர்கள் சார்ந்த கொள்கையை நோக்கி யாரும் கை நீட்டுவதில்லை.

  ……………….நான் முஸ்லிம்: தீவிரவாதமும் …

  நன்றி: செப்டம்பர் 2011 மனித உரிமைக் கங்காணி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க