நம்ம ஊரில் ஆளும் கட்சியான காங்கிரசும், எதிர்க் கட்சியான பாரதீய ஜனதாவும் பல விஷயங்களில் அடித்துக் கொண்டாலும் அம்பானிக்கு வரிச் சலுகை கொடுப்பது, சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி வழங்குவது கொடுப்பது போன்ற அவர்களுக்கு முக்கியமான விஷயங்களில் ஒன்று சேர்ந்து கொள்வார்கள். அதைப் போலவே, அமெரிக்காவின் இரண்டு பெரும் கட்சிகளான ஜனநாயகக் கட்சியும், குடியரசுக் கட்சியும் துப்பாக்கி கட்டுப்பாடு, மக்களுக்கு மருத்துவ சேவை, நடுத்தர வர்க்கத்துக்கு வரிக் குறைப்பு போன்ற விஷயங்களில் முட்டிக் கொண்டாலும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு சேவை செய்வதில் ஒன்று கூடி விடுகிறார்கள்.
ஊடா மாநிலத்தைச் சேர்ந்த குடியரசுக் கட்சி மேலவை உறுப்பினர் ஓரின் ஹேட்ச், மின்னசோட்டா மாநில ஜனநாயக் கட்சி மேலவை உறுப்பினர் ஏமி க்ளோபுகர், புளோரிடா குடியரசுக் கட்சி மேலவை உறுப்பினர் மார்கோ ரூபியோ, டெலாவர் ஜனநாயகக் கட்சி உறுப்பினர் கிறிஸ் கூன்ஸ் என்று இரு கட்சியைச் சேர்ந்தவர்களின் குழு ஒன்று குடியேற்ற புத்தாக்க சட்டம் (இமிக்ரேஷன் இன்னொவேஷன் ஆக்ட் 2013) எனப்படும் 20 பக்க மசோதா ஒன்றை தயாரித்திருக்கிறது. இந்த மசோதா வெளிநாட்டுக்காரர்களை அமெரிக்காவுக்கு அழைத்து வந்து சிறப்பான பணிகளில் வேலை வாங்குவதற்காக கார்ப்பரேட்டுகள் மூலமாக வழங்கப்படும் H-1B விசாக்களின் எண்ணிக்கையை பல மடங்கு அதிகரிக்க கோருகிறது.
சிறப்பான பணி என்பது குறிப்பிட்ட துறையில் ஆழமான அறிவும், அனுபவமும், திறமைகளும் தேவைப்படும் பணிகளைக் குறிக்கிறது. அந்த வேலையைச் செய்ய அத்தகைய படிப்பும், திறமையும், அனுபவமும் படைத்த அமெரிக்கர்கள் கிடைக்காத நிலையில் நிறுவனங்கள் வெளிநாடுகளிலிருந்து ஊழியர்களை வரவழைத்துக் கொள்ள வகை செய்யும் H1-B விசாவுக்கான சட்டம் 1990ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.
இப்போது, ஒவ்வொரு ஆண்டும் வணிக நிறுவனங்களில் வேலை செய்ய வருபவர்களுக்கு 65,000 விசாக்களையும், அமெரிக்க பல்கலைக் கழகங்களில் பட்டம் பெற்றவர்களுக்கு 20,000 விசாக்களையும் வழங்குவதற்கு சட்டம் வழி செய்கிறது. பல்கலைக் கழகங்களிலும் லாப நோக்கற்ற ஆராய்ச்சி நிறுவனங்களிலும் வேலை செய்வதற்கான விசாவுக்கு வரம்பு எதுவும் இல்லை என்பதால் 1 லட்சத்துக்கும் அதிகமான விசாக்கள் வரை ஒரே ஆண்டில் வழங்கப்படுகின்றன. 2010ம் ஆண்டில் 1.17 லட்சம் விசாக்களும், 2011ம் ஆண்டில் 1.29 லட்சம் விசாக்களும் வழங்கப்பட்டன.
இப்போது தயாரிக்கப்பட்டுள்ள மசோதா H1B விசாக்களின் குறைந்த பட்ச எண்ணிக்கையை ஆண்டுக்கு 1,15,000 ஆக அதிகரிக்கவும் வரும் விண்ணப்பங்களின் எண்ணிக்கையை பொறுத்து விசாக்களின் எண்ணிக்கையை படிப்படியாக 3 லட்சம் வரை அதிகரிக்கவும் கோருகிறது.
அமெரிக்க நாடாளுமன்றத்தில், ஒவ்வொரு மாநிலத்துக்கும் 2 உறுப்பினர்கள் என்ற வீதத்தில் 6 ஆண்டுகள் பதவி காலத்துக்கு தேர்ந்தெடுக்கப்படும் 100 உறுப்பினர்கள் கொண்ட செனட் என்ற மேலவையும், மக்கள் தொகை அடிப்படையிலான தேர்தல் தொகுதிகளில் 2 ஆண்டுகள் பதவி காலத்துக்கு தேர்ந்தெடுக்கப்படும் 435 உறுப்பினர்களைக் கொண்ட ஹவுஸ் என்ற கீழவையும் இருக்கின்றன. நாட்டின் தலைநகர் வாஷிங்டனில் ஒரு மாநிலத்தையே 6 ஆண்டுகளுக்கு பிரதிநிதித்துவப்படுத்தும் செனட்டர்கள் அமெரிக்க அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டவர்களாக இருப்பதோடு பெருமளவு கார்ப்பரேட் தொடர்புகளையும், பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகளையும் உருவாக்கி வைத்திருப்பவர்கள்.
ஐ.டி. நிறுவனங்கள் பல லட்சம் டாலர்கள் செலவில் இரண்டு கட்சிகளையும் சேர்ந்த 4 செனட்டர்களை வளைத்துப் போட்டு இந்த மசோதாவை தயாரிக்க வைத்திருக்கின்றன. ‘அமெரிக்க ஐ.டி துறையில் தேவைப்படும் திறமைகள் அமெரிக்கர்களிடம் இல்லாத சூழ்நிலையில் இந்தியா, சீனா போன்ற நாடுகளிருந்து வல்லுனர்களை அமெரிக்காவுக்கு கொண்டு வந்து, சரிந்துள்ள அமெரிக்க பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துவதற்கு கூடுதல் H1B விசாக்கள் தேவை’ என்று வாதங்களை முன் வைக்கின்றனர்.
H1B விசா திட்டம் ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டிய சம்பளங்களை குறைத்து லாபத்தை அதிகரித்துக் கொள்வதற்காக அமெரிக்க கார்ப்பரேட்டுகளின் லாபியிங் மூலம் 1990ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.
2011ம் ஆண்டு H1-B விசா பெற்று வேலை செய்ய வருபவர்களில் 48 சதவீதத்தினர் ஐ.டி. துறை நிறுவனங்களுக்கு வந்திருக்கின்றனர். மைக்ரோசாப்ட், இன்டெல் போன்ற ஐ.டி. துறை பெருநிறுவனங்கள் அவர்களுக்கு தேவைப்படும் ஊழியர்கள் அமெரிக்காவில் இல்லை என்று கணக்கு சொல்லி, H-1B விசாவுக்கான கோட்டாவை அதிகரிப்பதற்காக தொடர்ந்து லாபியிங் செய்து வருகின்றனர்.
சென்ற ஆண்டு, மைக்ரோசாப்டின் கார்ப்பரேட் சட்ட விவகாரங்களுக்கான பொதுக் குழுவின் துணைத் தலைவர், H1B விசாக்களின் எண்ணிக்கையை 20,000 அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். ‘மைக்ரோசாப்டில் மட்டும் பொறியாளர், நிரலாளர், ஆராய்ச்சியாளர்கள் இவர்களுக்கான 400 வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளன’ என்றும் ‘அரசு இத்திட்டத்தை அமுல்படுத்தி வல்லுனர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கா விட்டால், இந்த பணிகளை செய்வதற்கு வெளிநாட்டில் கிளைகள் தொடங்கும் நிலை ஏற்பட்டு விடும்’ என்றது மைக்ரோசாப்ட்.
வெளிநாட்டு ஊழியர்களை எடுப்பதன் மூலம் அமெரிக்க ஊழியர்களுக்கான சம்பளங்கள் குறைந்து விடுவதைத் தடுப்பதற்காக H1-B விசாவில் வரும் ஊழியர்களுக்கு அதே தகுதியும், திறமைகளும் உடைய அமெரிக்க ஊழியர்களுக்கு இணையான சம்பளம், அல்லது அந்த வேலைக்கு பொதுவாக வழங்கப்படும் சம்பளம் இரண்டில் எது அதிகமோ அதை வழங்க வேண்டும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.
தர்க்கப்படி பார்த்தாலும் அமெரிக்காவில் கிடைக்காத திறமை உடையவர்களை வெளியிலிருந்து இறக்குமதி செய்தால், அவர்களுக்கு சம்பளமாக அமெரிக்க ஊழியர்களுக்கு கொடுப்பதை விட அதிகமாகவோ அல்லது அதே அளவிலோ கொடுக்க வேண்டும். ஆனால், நடைமுறையில் ஐடி துறையில் வேலை செய்ய H-1B விசாவில் வருபவர்களுக்கான சம்பளம் அதே மாநிலத்தில் அதே மாதிரியான வேலையைச் செய்யும் அமெரிக்கருக்கு கொடுப்பதை விட $13,000 குறைவு என்றும் மென்பொருள் நிரல் எழுதும் வேலைகளில் H1-Bல் போகும் வெளிநாட்டு ஊழியர்களில் 85 சதவீதம் பேரின் சம்பள வீதம் சராசரி சம்பளத்தை விட குறைவாக இருக்கிறது என்றும், 4 சதவீத H1-B ஊழியர்கள் மட்டுமே உயர் சம்பளம் பெறும் 25% பேரில் இருக்கின்றனர் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
2010/2011ம் ஆண்டுகளில் H1-B விசா ஸ்பான்சர் செய்த நிறுவனங்களில் மைக்ரோசாப்ட் முதல் இடத்திலும், டி.சி.எஸ். இரண்டாவது இடத்திலும், விப்ரோ 4வது இடத்திலும், காக்னிசன்ட் 5வது இடத்திலும் உள்ளன. காக்னிசன்ட், டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ போன்ற ஆள்பிடித்துக் கொடுக்கும் நிறுவனங்கள் ஆண்டு தோறும் பெரும் எண்ணிக்கையிலான H1-B விசா ஊழியர்களை ஸ்பான்சர் செய்கின்றனர்.
இந்த ஊழியர்கள் வெளி நிறுவனம் மூலம் வேலைக்கு வருபவர்கள் என்ற பேதமே இல்லாமல் அமெரிக்க நிறுவனத்தினுள் ஒரு அமெரிக்க ஊழியர் செய்து வந்த வேலையை செய்தாலும் அவர்களுக்கான சம்பளத்தை ஆள்பிடி நிறுவனமே வழங்குகிறது. அமெரிக்க நிறுவனத்திடம் வாங்கும் கட்டணத்தில் (அமெரிக்க ஊழியருக்கு கொடுப்பதை விட குறைவான தொகை) ஒரு பகுதியை அவர்கள் எடுத்துக் கொண்டு ஊழியர்களுக்கு மிஞ்சிய தொகையை கொடுக்கின்றனர்.
பல ஊழியர்கள் குறிப்பிட்ட வேலை இல்லாமலேயே ஆள்பிடிக்கும் சேவை நிறுவனங்கள் மூலம் அமெரிக்காவுக்கு போய்ச் சேருகின்றனர். தாம் இறக்குமதி செய்து வைத்திருக்கும் ஊழியர்களின் பட்டியலை அமெரிக்க நிறுவனங்களிடம் சுற்றுக்கு விட்டு அவர்களை வேலைக்கு அமர்த்துகின்றனர்.
அமெரிக்காவில் செயல்படும் அமெரிக்க, இந்திய ஐ.டி. நிறுவனங்கள் H1B விசா மூலம் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுப்பதன் நோக்கம் அவர்களுக்கு 20-25 சதவீதம் குறைந்த சம்பளம் கொடுத்து, சக்கையாக பிழிந்து வேலை வாங்கலாம் என்ற நோக்கத்தில்தான். தமிழ்நாட்டுக்கு வடநாட்டில் இருந்து தொழிலாளர்களை அழைத்து வந்து சொற்ப சம்பளம், அதிக நேர வேலை, உரிமைகள் மறுப்பு என்று கட்டிட காண்டிராக்டர்கள் சுரண்டுவதற்கு நிகரானது இது.
ஒரு மணி நேர வேலைக்கு $15 முதல் $20 வரை (ரூ 750 முதல் ரூ 1000 வரை) வாங்கும் இந்தியர்களும் அதைவிடக் குறைவாக வாங்கும் சீனர்களும் அடிமைகளாக கிடைக்கும் போது, அமெரிக்காவில் வாழ்வதுதான் சொர்க்கம் என்ற கனவுடன் அவர்கள் அமெரிக்க தூதரகத்துக்கு வெளியில் விசாவுக்காக மணிக்கணக்காக தவம் புரிய தயாராக இருக்கும் போது, குடும்பத்தை பல வருடம் பிரிந்து போய் வேலை செய்ய முன் வரும் போது, ஒரு மணிநேரத்திற்கு $50 முதல் $100 வரை (ரூ 2,500 முதல் ரூ 5,000 வரை) செலவழித்து அமெரிக்கர்களை வேலையில் அமர்த்த முதலாளிகள் என்ன முட்டாள்களா? அந்த அளவிலான சம்பளம் அமெரிக்க சமூகத்தில் நடுத்தர வர்க்க வாழ்க்கைக்கான தேவை என்பதையும், குறைந்த சம்பளத்தில் வேலைக்குப் போகிறவர்கள் கொத்தடிமைகள் போலத்தான் வாழ முடியும் என்பதையும் பற்றி முதலாளிகள் கவலைப்படுவதில்லை.
‘சம்பளத்தை பாதியாக குறைத்துக் கொண்டாவது வேலைக்கு வைத்திருங்கள்’ என்று அமெரிக்க ஊழியர்கள் இறங்கி வந்து அந்த சம்பளத்தில் வாழ முடியாமல் தெருவுக்கு வந்து போராடி சாகத் தயாராக இருந்தாலும் அமெரிக்க முதலாளிகள் அதற்கு இடம் கொடுக்கப் போவது இல்லை. முதலாளிகளின் லாபம் அதிகரித்துக் கொண்டே போவதற்கான நடவடிக்கைகளை அவர்களுக்கான அரசும் நிறுத்தி விடப் போவதில்லை.
‘அமெரிக்க ஊழியர் ஒருவரை வேலையை விட்டு நீக்கி விட்டு அந்த இடத்தில் H1-B விசாவில் வெளிநாட்டு ஊழியரை அமர்த்தக் கூடாது’ என்று சட்டம் சொன்னாலும், அந்த இடத்தில் ஆள்பிடி நிறுவனங்கள் மூலம் ஆள் அமர்த்திக் கொள்வதை சட்டம் தடை செய்யவில்லை. இந்தியாவிலிருந்து போகும் பல ஐடி துறை ஊழியர்களுக்கு வேலை கற்றுக் கொடுத்து விட்டு தாம் வேலை இழக்கும் நிலையை பல அமெரிக்க ஊழியர்கள் எதிர் கொள்கின்றனர். அதற்கு எதிராக தொழிற்சங்கம் அமைப்பதும் போராடுவதும் அவர்களுக்கு தலைமுறைகளாக ஊட்டி வளர்க்கப்பட்ட சித்தாந்த போதனைக்கு எதிரானது. வேலை இழந்து, வீடு இழந்து, தெருவுக்கு வந்த பிறகு வால் வீதி ஆக்கிரமிப்பு போன்ற போராட்டங்களில் மறைந்து போகின்றனர்.
H1B விசாவில் அமெரிக்காவுக்கு வேலைக்குப் போகும் இந்திய ஐடி ஊழியர்கள் ஸ்பான்சர் செய்யும் நிறுவனத்தின் அடிமைகளாகவே பணி செய்கின்றனர். 5 ஆண்டுகள் தொடர்ந்து பணி செய்த பிறகு கிரீன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்; அதற்கு ஸ்பான்சர் செய்த நிறுவனத்தில் அப்போது வேலை செய்து கொண்டிருக்க வேண்டும் என்ற நிபந்தனையை மனதில் கொண்டு குறைந்த சம்பளம், அதிக வேலை நேரம், நினைத்த நேரத்தில் இன்னொரு இடத்துக்கு மாறிப் போவது என்று பல விதமான தொல்லைகளையும் சகித்துக் கொண்டு அடிமைகள் போல வேலை செய்கின்றனர்.
H-1B விசாவை ஸ்பான்சர் செய்யும் நிறுவனத்தில் வேலை செய்வதற்கு மட்டுமே பயன்படுத்த முடியும். ஸ்பான்சர் செய்த நிறுவனம் வேலையை விட்டு நீக்கி விட்டால், அதே போன்று H-1B விசா கோட்டா வைத்திருக்கும் இன்னொரு நிறுவனத்தில் வேலை தேட வேண்டும் அல்லது அமெரிக்காவை விட்டு வெளியேறி விட வேண்டும்.
H1-B விசாவில் குறைந்த சம்பளத்துக்கு அமெரிக்கா போகும் ஐ.டி. துறை ஊழியர்கள் ஆரம்ப ஆண்டுகளில் அமெரிக்காவில் வாழ்வதற்கு ஒரு தனிமனிதருக்கோ குடும்பத்துக்கோ தேவைப்படும் அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்றிக் கொள்ள முடியாமல், ஏழெட்டு பேர் ஒரே வீட்டில் தங்கிக் கொள்வது, பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவது என்று அவதிப்படுகின்றனர். கிடைக்கும் தினப்படியில் கொஞ்சம் மிச்சப்படுத்துவது மூலம் காசு சேமிக்கின்றனர். டாலர்-ரூபாய் செலாவணி விகிதத்தால் சில டாலர்கள் சேமிப்பு இந்தியாவில் கணிசமான பணமாக கண்ணில் தெரிகிறது. ‘அமெரிக்காவில் பையன் இருக்கிறான்’ என்று உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் பந்தாவும், கல்யாண சந்தையில் அமெரிக்கா ரிட்டர்ன் என்ற மதிப்பும் கூடுதல் கவர்ச்சியை அளிக்கின்றன.
5 ஆண்டுகள் பல்லைக் கடித்துக் கொண்டு வேலை செய்து விட்டால் கிரீன் கார்ட் வாங்க விண்ணப்பிக்கலாம் என்ற எதிர்காலக் கனவும் விதைக்கப்படுகிறது. இன்னும் கொஞ்சம் தம் பிடிக்கத் தயாராக இருப்பவர்கள், திருமணமாகி இருந்தால் மனைவியையும் சார்பு விசாவில் அழைத்துச் சென்று அங்கு ஏதாவது மளிகைக்கடை உதவியாளர், பெட்ரோல் பங்கு உதவியாளர் வேலையில் சேர்த்து விடுகின்றனர். குழந்தை பிறந்தால் பள்ளியில் கல்வி, மருத்துவ வசதி கிடைத்து விடுகிறது.
அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி முற்றி, வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்து, வீடற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகும் சூழலிலும் தங்கள் லாப வேட்டையே குறியாக கார்ப்பரேட் முதலாளிகள் வெளிநாட்டிலிருந்து வேலைக்கு ஆட்களை அழைத்து வரும் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான மசோதாவை ஸ்பான்சர் செய்துள்ளனர். முதலாளிகள் லாபியிங் என்ற பெயரில் பிச்சையாக போட்ட பணத்தை பயன்படுத்தி தேர்தலில் வெற்றி பெற்ற விசுவாசிகள், தமது பதவிக் காலம் முழுவதும் முதலாளிகளுக்கு நலன் பயக்கும் நடவடிக்கைகள் மூலம் தங்கள் விசுவாசத்தை காட்டுவதுதான் உலகெங்கிலும் பின்பற்றப்படும் தேர்தல் அரசியலின் நடைமுறை.
மேலும் படிக்க
__________________________________________
– அப்துல்
__________________________________________
“அமெரிக்காவில் வாழ்வதுதான் சொர்க்கம் என்ற கனவுடன் அவர்கள் அமெரிக்க தூதரகத்துக்கு வெளியில் விசாவுக்காக மணிக்கணக்காக தவம் புரிய தயாராக இருக்கும் போது, குடும்பத்தை பல வருடம் பிரிந்து போய் வேலை செய்ய முன் வரும் போது”
இது தான் நிதர்சனமான உண்மை.
துபாய் அரபு நாடுகளில் தமிழர்கள் கொத்தடிமை களாக நடத்தப்படுகின்றனர். அமெரிக்காவில் அப்படி இல்லை.
//ஒரு மணி நேர வேலைக்கு $15 முதல் $20 வரை (ரூ 750 முதல் ரூ 1000 வரை) வாங்கும் இந்தியர்களும் அதைவிடக் குறைவாக வாங்கும் சீனர்களும் அடிமைகளாக கிடைக்கும் போது, அமெரிக்காவில் வாழ்வதுதான் சொர்க்கம் என்ற கனவுடன் அவர்கள் அமெரிக்க தூதரகத்துக்கு வெளியில் விசாவுக்காக மணிக்கணக்காக தவம் புரிய தயாராக இருக்கும் போது, குடும்பத்தை பல வருடம் பிரிந்து போய் வேலை செய்ய முன் வரும் போது, ஒரு மணிநேரத்திற்கு $50 முதல் $100 வரை (ரூ 2,500 முதல் ரூ 5,000 வரை) செலவழித்து அமெரிக்கர்களை வேலையில் அமர்த்த முதலாளிகள் என்ன முட்டாள்களா?//
இந்த கணக்கு எந்த துறையில் என்று தெரியவில்லை. ஐடி துறையில், நான் வேலை செய்யும் டெக்னாலஜியில் ஒரு மணிநேரத்திற்கு 170$ முதல் 680$ வரை வாங்குபவர்கள் இருக்கிறார்கள்.
சீனு, அது உண்மைதான். நான் இப்போது சிங்கப்பூரில் இருக்கிறேன். என்னுடைய நண்பர்கள் பலர் என்னுடைய ப்ராஜெக்டுக்கும் மற்ற பணிகளுக்கும் அமெரிக்கா போனவர்கள் எனக்கு தெரியும். அவ்வாறு அமெரிக்கா சென்று வந்தவன் இப்போது என்னுடன்(ஒரே அறையில்) தங்கி இருக்கிறான். அவன் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்று எனக்கு நன்றாகத் தெரியும். சராசரியாக 4500-5500 முதல் சம்பளம் பெறுவதுண்டு. அதில் முப்பது விழுக்காடு வருமானவரி பிடித்தமும் உண்டு.
வினவு தனது கட்டுரையில் குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தில் தான் நான்(இன்றும்) பணிபுரிந்து வருகிறேன் என்பது மேல்படி தகவல்.
Please check the highest salary from big companies like Google, Apple, Cisco who operates on Silicon Valley..No one gets more than 150$ per hour(288K per annum). I hope someone gave you wrong info. Go through the below link
http://www.glassdoor.com/Salaries/san-jose-salary-SRCH_IL.0,8_IM761.htm
// இந்த கணக்கு எந்த துறையில் என்று தெரியவில்லை. ஐடி துறையில், நான் வேலை செய்யும் டெக்னாலஜியில் ஒரு மணிநேரத்திற்கு 170$ முதல் 680$ வரை வாங்குபவர்கள் இருக்கிறார்கள்.
அப்டி என்ன டெக்னாலஜி பாஸ் அது. சும்மா அடிச்சு விடாதீங்க!
If it is 680 dollars per hours, it would roughly amount to Rs 7.5 crore. This is more than the base salary (without shares/incentives) of CEOs of top companies.