Sunday, April 2, 2023
முகப்புஉலகம்இதர நாடுகள்வெனிசுவேலா - சாவேஸின் பொருளாதாரக் கொள்கை: சோசலிசமா?

வெனிசுவேலா – சாவேஸின் பொருளாதாரக் கொள்கை: சோசலிசமா?

-

2007ம் ஆண்டு புதிய ஜனநாயகத்தில் வெளியான கட்டுரை

“அமெரிக்க மேலாதிக்கவாதிகள்தான் உலகின் மிகக் கொடிய பயங்கரவாதிகள்!” இப்படி பகிரங்கமாக அமெரிக்க ஏகாதிபத்திய வாசலிலே இடியென முழங்குகிறார் தென்னமெரிக்கக் கண்டத்திலுள்ள வெனிசுலா நாட்டின் அதிபரான ஹியூகோ சாவேஸ். நம்நாட்டு ஓட்டுப் பொறுக்கி அரசியல்வாதிகளைப் போல, வெனிசுலா அதிபர் வீரவசனம் பேசி வெற்றுச் சவடால் அடிக்கவில்லை. அமெரிக்க மேலாதிக்கவாதிகளை எதிர்த்து நிற்பதோடு, மனிதநேய மாற்றுப் பொருளாதாரத் திட்டத்தை முன்வைத்து செயல்படுத்த விழைகிறார்.

எண்ணெய் வளமிக்க வெனிசுலாவின் தேசிய வருவாயில் பெரும் பகுதியை ஒடுக்கப்பட்ட மக்களின் மருத்துவம், சுகாதாரம், உணவு, கல்வி முதலான சமூகநலத் திட்டங்களுக்கு ஒதுக்கி, ஏழைகளின் அன்புக்குரிய தலைவராக உயர்ந்து நிற்கிறார்.

வெனிசுவேலா - சாவேஸ்

பன்னாட்டு ஏகபோக முதலாளிகளின் எண்ணெய் உற்பத்தி சுத்திகரிப்பு நிறுவனங்களை நாட்டுடமையாக்குவது; இந்நிறுவனங்களில் பன்னாட்டு முதலாளிகளின் பங்குகளைச் சிறுபான்மையாகக் குறைப்பது; உலகவங்கி ஐ.எம்.எப். போன்ற ஏகாதிபத்திய நிதி நிறுவனங்களிலிருந்து விலகிக் கொள்வது; மின்சாரம், தொலைபேசி மற்றும் நிலப்பிரபுக்களின் பெரும் பண்ணைகளை நாட்டுடமையாக்குவது; அமெரிக்க மேலாதிக்கத்துக்கு எதிராக ஈரானுடன் சேர்ந்து எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் புதிய கூட்டமைப்பையும், தென்னமெரிக்கக் கண்டத்து நாடுகளின் பிராந்திய கூட்டமைப்பையும் நிறுவ முயற்சிப்பது; நிலச்சீர்திருத்தத்தின் மூலம் விவசாயத்தை உயிர்ப்பித்து சுயசார்பான தேசிய பொருளாதாரத்தைக் கட்டியமைப்பது என அடுத்தடுத்து பல அதிரடி நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு வருகிறார். வெனிசுலா ஒரு கம்யூனிச அரசு அல்ல என்ற போதிலும், வெனிசுலாவின் ஆளும் வர்க்கங்கள் அதிகாரத்திலிருந்து வீழ்த்தப்படவில்லை என்ற போதிலும், தனது நடவடிக்கைகள் மூலம் மறுகாலனியாதிக்கத்துக்கு எதிராகப் போராடி வரும் உலக மக்களுக்கு பெரும் உத்வேகத்தை வழங்கியிருக்கிறார், அதிபர் சாவேஸ்.

சாவேசின் சீர்திருத்த நடவடிக்கைகள் முழுநிறைவான ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கைகள் அல்ல என்றபோதிலும், அவரது ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வையும் மக்கள் நலத் திட்டங்களையும் வைத்து அவரை “சோசலிஸ்டு” என்று மதிப்பீடு செய்கிறது ஆஸ்திரேலிய போலி சோசலிஸ்டுகளின் “கிரீன் லெஃப்ட்” பத்திரிகை. நம்நாட்டு போலி கம்யூனிஸ்டுகளோ, அவரை “இடதுசாரி” போக்குடையவர் என்றும், வெனிசுலாவில் புரட்சிகர மாற்றங்கள் நடந்து வருவதாகவும், தென்னமெரிக்க கண்டத்தில் “இடதுசாரி அலை” வீசுவதாகவும் சித்தரிக்கின்றனர்.

இப்படி “சோசலிஸ்டு”, “இடதுசாரி” என்றெல்லாம் வெனிசுலா அதிபர் சாவேசை மதிப்பீடு செய்வதற்கு ஏதாவது அடிப்படை உள்ளதா? அவரது நடவடிக்கைகள் ஏகாதிபத்திய நிதிமூலதனக் கட்டமைவைத் தகர்த்து, நாட்டு விடுதலையையும் சுயசார்பையும் நிறுவும் புரட்சிகர நடவடிக்கைகள்தானா? வெனிசுலாவின் பொருளாதாரமும் அதிபர் சாவேசின் நடவடிக்கைகளும் எந்த திசையில் செல்கிறது?

****

ண்ணெய் மூலம் கிடைக்கும் வருவாயில் பெரும் பகுதியை மக்கள் நலத் திட்டங்களுக்காக சாவேஸ் செலவிடுகிறார். விவசாயப் பொருளாதாரத்தை மீட்டுருவாக்கப் போவதாகக் கூறுகிறார்; புதிய நிலச் சீர்திருத்தக் கொள்கையை அறிவித்துச் செயல்படுத்தி வருகிறார். எண்ணெய் விலையை உயர்த்துவது, எண்ணெய் உற்பத்தியை விரிவாக்குவது, புதிய சந்தைகளைத் தேடுவது ஆகியவற்றின் மூலம் இத்திட்டங்களைச் சாதிக்க விழைகிறார்.

இதன்படி, வெனிசுலாவின் அரசுத்துறை எண்ணெய் நிறுவனம், தற்போதைய உற்பத்தியான நாளொன்றுக்கு 33 லட்சம் பீப்பாயிலிருந்து 2012ஆம் ஆண்டில் 58 லட்சம் பீப்பாயாக உற்பத்தியை விரிவுபடுத்தத் தீர்மானித்துள்ளது. இந்த விரிவாக்கத் திட்டத்திற்கு ஏறத்தாழ 7,500 கோடி டாலர் தேவை என்று கடந்த ஆண்டில் மதிப்பிடப்பட்டுள்ளது. இதுதவிர, ஏற்கெனவே உள்ள எண்ணெய் உற்பத்தி நிலையங்களைப் பராமரித்து மேம்படுத்துதல், புதிய எண்ணெய் துரப்பண நிலையங்களை நிறுவுதல் ஆகியவற்றுக்கு இன்னும் பல்லாயிரம் கோடி டாலர்கள் தேவை. மேலும், வெனிசுலாவின் எண்ணெய்க் கிணறுகள் மிகவும் பழமையானவை; ஆண்டுக்கு 23% அளவுக்கு இக்கிணறுகள் உற்பத்தியில் வீழ்ச்சியடைந்து வருகின்றன. எனவே, புதிய கிணறுகள் தோண்டப்பட்டால் மட்டுமே எண்ணெய் உற்பத்தியில் முன்னேற முடியும்; உலகளாவிய போட்டியில் ஈடுபடவும் முடியும்.

இதற்கான நிதியை எங்கிருந்து பெறுவது? வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் வங்கிகளிடமிருந்து கடன் வாங்குவது, வெனிசுலாவிலுள்ள அந்நிய எண்ணெய் கம்பெனிகளிடம் எண்ணெய்க்கு ஈடாக முன்பணம் பெறுவது, அந்நிய எண்ணெய் கம்பெனிகள் மீது புதிய வரிகள் விதித்து வருவாயைப் பெருக்குவது ஆகியவற்றின் மூலம் நிதிதிரட்டத் தீர்மானித்துள்ளார், அதிபர் சாவேஸ். எண்ணெய் மூலாதாரங்களும் உற்பத்தியும் அரசின் கையில் இருப்பதால், அன்னிய எண்ணெய் கம்பெனிகளும் நிதி நிறுவனங்களும் முந்தைய காலத்தைப் போல கொள்ளையடிக்கவோ மேலாதிக்கம் செய்யவோ முடியாது என்று கருதுகிறார்.

ஆனால், வெனிசுலா மட்டுமல்ல; உலகின் முக்கால் பங்கு எண்ணெய் எரிவாயு மூலாதாரங்களையும் உற்பத்தியில் பாதிக்கு மேலாகவும் சௌதி அரேபியாவின் ஆரம்கோ, குவைத் பெட்ரோலியம், அல்ஜீரிய எண்ணெய் கழகம் முதலான அரசுத்துறை நிறுவனங்களே கட்டுப்படுத்துகின்றன. இருப்பினும், இந்த அரசுத்துறை நிறுவனங்கள் சர்வதேச நிதி மூலதனத்தைச் சார்ந்திருப்பதாலும், எக்சான் மொபில் முதலான பூதகரமான மேற்கத்திய ஏகபோக எண்ணெய் நிறுவனங்களுடன் கூட்டுச் சேர்ந்திருப்பதாலும், தமது வர்த்தகத்துக்கும் சந்தைக்கும் தொழில் நுட்பத்துக்கும் ஏகாதிபத்திய நிறுவனங்களைச் சார்ந்திருப்பதாலும் உண்மையில் ஏகாதிபத்தியங்களே பல்வேறு வழிகளில் ஆதாயமடைகின்றன.

இப்படி பல்வேறு வழிகளில் ஆதாயமடைந்து ஆதிக்கம் செலுத்தும் ஏகாதிபத்திய நிறுவனங்களைக் கட்டுப்படுத்த, வெனிசுலாவின் எண்ணெய் திட்டங்கள் அனைத்திலும் அரசுத்துறையின் பங்கு 60%க்கு மேல் இருக்க வேண்டும் என்று அறிவித்த அதிபர் சாவேஸ், கடந்த மே முதல் நாளன்று இம்முடிவை ஏற்காவிடில், அன்னிய எண்ணெய் நிறுவனங்கள் அனைத்தும் வெனிசுலாவை விட்டு வெளியேற வேண்டும் என எச்சரித்தார். தொடக்கத்தில், இதை ஏற்க மறுத்த அன்னிய எண்ணெய் நிறுவனங்கள், பின்னர் இதற்கு உடன்பட்டன. இதன்படி உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏகபோக நிறுவனங்களான ஷெல், செவ்ரான், பிரிட்டிஷ் பெட்ரோலியம் முதலானவற்றுடன் வெனிசுலா அரசுத்துறை எண்ணெய் நிறுவனம் கூட்டுச் சேர்ந்து இயங்கும்; இக்கூட்டுத்துறை நிறுவனங்களில் அரசுத்துறையின் பங்கு 60% ஆக இருக்கும். இதன் மூலம் முந்தைய காலத்தை விட வெனிசுலா அரசுக்கு எண்ணெய் மூலம் கூடுதல் வருவாய் கிடைக்கிறது. மறுபுறம், எண்ணெய் விலையை வெனிசுலா அரசு உயர்த்தியுள்ளதால், முந்தைய காலத்தைவிட, அன்னிய ஏகபோக நிறுவனங்களும் கூடுதல் ஆதாயமடைந்துள்ளன.

மேலும், சந்தைக்காகவும், முதலீட்டு ஆதாரங்களுக்காகவும், தொழில்நுட்பத்துக்காகவும் அமெரிக்காவையே வெனிசுலா பெரிதும் சார்ந்துள்ளது. இச்சார்பு நிலையிலிருந்து வெனிசுலா மீள்வதென்பது மிகவும் கடினம். ஏனெனில், அமெரிக்காவின் மொத்த எண்ணெய் இறக்குமதியில், வெனிசுலாவின் பங்கு 12% தான். வெனிசுலா அரசு அமெரிக்காவுக்கு எண்ணெய் தர மறுத்துவிட்டால், அதனால் அமெரிக்காவுக்கு பெரிய பாதிப்பு ஏற்பட்டுவிடாது. அதேசமயம், வெனிசுலா அரசு அமெரிக்காவுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்யாமல் போனால், அதன் பொருளாதாரமே ஆட்டங்கண்டு விடும். ஏனெனில், வெனிசுலாவின் மொத்த எண்ணெய் உற்பத்தியில், 60%க்கு மேல் அமெரிக்காவுக்கே ஏற்றுமதி செய்யப்படுகிறது. எண்ணெய் வருவாயில் பெரும்பகுதி அமெரிக்க ஏற்றுமதியிலிருந்துதான் கிடைக்கிறது.

அமெரிக்காவைச் சார்ந்திராமல் எண்ணெய்க்குப் புதிய சந்தைகளைத் தேட முயற்சித்தார், அதிபர் சாவேஸ். அமெரிக்காவுக்கு அடுத்து பெருமளவு எண்ணெயைக் கொள்முதல் செய்யும் நாடான சீனாவுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தினார். ஆனால் சீனாவுக்கு எண்ணெயை ஏற்றுமதி செய்ய ஆகும் செலவு பூதாகரமானதாக இருப்பதோடு, உடனடி சாத்தியமின்றியும் உள்ளது. ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வகையில் பசிபிக் பெருங்கடலில் வெனிசுலாவுக்குத் துறைமுகம் இல்லை. வெனிசுலாவிலிருந்து பனாமா கால்வாய் வழியாக பசிபிக் பெருங்கடலை அடைய முடியும் என்றாலும், பல்லாயிரம் டன் எடை கொண்ட எண்ணெய் கலன்களை ஏற்றிச் செல்லும் மிகப்பெரிய கப்பல்கள் செல்லுமளவுக்கு பனாமா கால்வாய் ஆழமானதல்ல. எனவே கொலம்பியாவின் ஊடாக பெரும் எண்ணெய்க் குழாய்களைப் பதித்து, அந்நாட்டு உதவியுடன் பசிபிக் பெருங்கடலிலுள்ள துறைமுகம் வழியாக ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதைத்தவிர வேறு வழியில்லை. ஆனால் இதற்குப் பல்லாயிரம் கோடிகளைச் செலவழிக்க வேண்டும்.

மேலும், வெனிசுலாவில் கிடைக்கும் எண்ணெயில் கந்தகம் மிகுந்துள்ளது. அதைச் சுத்திகரித்துப் பயன்படுத்தும் ஆலைகள் சீனாவில் இல்லாததால், வெனிசுலாவிடமிருந்து கச்சா எண்ணெயை வாங்க சீனா தயங்குகிறது. சோவியத் ஒன்றியத்திலிருந்து பிரிந்து சென்ற காஸ்பியன் கடல் பிராந்திய நாடுகளிடமிருந்து கச்சா எண்ணெயை வாங்குவதிலேயே சீனா ஆர்வம் காட்டுகிறது.

இதுவொருபுறமிருக்க, வெனிசுலாவிலிருந்து தெற்கே அர்ஜெண்டினா வரை எரிவாயு குழாய் பதித்து தென்னமெரிக்க கண்டத்து நாடுகளுக்கு மலிவு விலையில் எரிவாயுவை விநியோகிப்பதை சாவேஸ் தனது நீண்டகாலத் திட்டமாக அறிவித்துள்ளார். மேற்கத்திய ஏகாதிபத்திய நிறுவனங்கள் அல்லாமல், இந்தியா, சீனா, ரஷ்யா முதலான இதர நாடுகளை இத்திட்டத்தில் முதலீடு செய்ய வருமாறு அழைத்துள்ளார். இத்திட்டமானது அமெரிக்க எதிர்ப்பு கொண்ட பிராந்திய ஐக்கியத்தைக் கட்டியமைக்கும் என்று கூறுகிறார்.

ஆனால், இன்றைய உலகமயச் சூழலில் ஒரு ஏழை நாட்டு நிறுவனம் வெனிசுலாவில் முதலீடு செய்தாலும் அதன் பின்னணியில் ஏகாதிபத்திய நிதி நிறுவனங்களும் வங்கிகளும்தான் உள்ளன. அவை முதலாளித்துவ முறைப்படி சுரண்டுவதும், முதலாளித்துவ முறைப்படி இலாப விகிதங்களை வலியுறுத்துவதும்தான் நடக்குமே தவிர, அவை அமெரிக்க எதிர்ப்பு கொண்ட தென்னமெரிக்க பிராந்திய ஐக்கியத்தைக் கட்டியமைக்க ஒருக்காலும் உதவி செய்யாது. மேலும் பூதாகரமான இத்தகைய திட்டங்களால் ஏற்படும் சமூக மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளும் பாரதூரமான விளைவுகளையே தோற்றுவிக்கும். தென்னமெரிக்கக் கண்டத்தில் கரிம வாயுக்களை வெளியேற்றுவதில் முதலிடம் வகிக்கும் வெனிசுலா நாடு, இத்தகைய பெருந்திட்டங்களால் இயற்கை முறை குலைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று சுற்றுச்சூழல்வாதிகள் அறுதியிடுகின்றனர்.

எல்லாவற்றுக்கும் மேலாக, வெனிசுலாவின் எண்ணெய்த் துறையின் மூலம் கிடைக்கும் வேலைவாய்ப்பு மிகக் குறைவானதாகவே உள்ளது. அரசுத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள ஒரினோகோ எண்ணெய் வயலில் 380 கோடி டாலர்களை சாவெஸ் அரசு முதலீடு செய்தும்கூட, அத்திட்டம் நிறைவேறும்போது ஏறத்தாழ 700 தொழில்நுட்ப தேர்ச்சி பெற்ற தொழிலாளிகளுக்கே வேலை கிடைக்கும். வெனிசுலா அரசுத்துறை எண்ணெய் நிறுவனத்தின் மூலம் தற்போது ஏறத்தாழ 45,000 தொழிலாளிகளே வேலை வாய்ப்பைப் பெறுகின்றனர். இது வெனிசுலாவின் மொத்த உழைப்பாளர் எண்ணிக்கையில் 1%க்கும் குறைவானதாகும். அதேசமயம் வெனிசுலாவின் வேலையில்லாதோர் விகிதம் ஏறத்தாழ 15% ஆக இருக்கிறது.

****

ண்ணெய் வளம் என்பது வெனிசுலாவின் பொக்கிஷமோ, பொன் முட்டையிடும் வாத்தோ அல்ல. எண்ணெய் வளமிக்க வெனிசுலாவிலிருந்து அல்ஜீரியா வரை உற்பத்தியும் ஏற்றுமதியும் பெருகி பல்லாயிரம் கோடி வருவாய் குவிந்த போதிலும், அந்நாடுகளில் ஏற்றத்தாழ்வுகளும் சமூக அவலங்களும் நீங்கிவிடவில்லை. சோசலிசம் என்பது எண்ணெய் உற்பத்தியைப் பெருக்குவதோ, எண்ணெய் வருவாயை நாட்டு மக்கள் அனைவருக்கும் கிடைக்கச் செய்வதோ அல்ல.

வெனிசுலாவின் ஏற்றுமதியைச் சார்ந்த எண்ணெய் உற்பத்தியும் விரிவாக்கமும் உலக ஏகாதிபத்தியப் பொருளாதாரத்துடன் பின்னிப் பிணைந்துள்ளது; அதன் ஆதிக்கம், கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது. புரட்சி என்பது, இத்தகைய ஏகாதிபத்திய கட்டுமானத்தைத் தகர்த்தெறிவதாகும். ஏகாதிபத்திய நிதிமூலதன ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்று, சுயசார்பான தேசிய பொருளாதாரத்தைக் கட்டியமைப்பதாகும்.

விவசாய முன்னேற்றம்சுயசார்பான தேசிய பொருளாதாரத்தின் அடித்தளம் எண்ணெய் அல்ல; விவசாயம்! பின்தங்கிய ஏழை நாடான வெனிசுலாவில் விவசாயத்துக்கு முன்னுரிமையும், விவசாயத்துக்கு உதவும் வகையிலும் சமூகத் தேவைகளை ஈடு செய்யும் வகையிலும் சிறுதொழில் உற்பத்திக்கு இரண்டாம்பட்ச முன்னுரிமையும், கனரகபெருந்தொழில் துறைக்கு மூன்றாம்பட்ச முக்கியத்துவமும் அளிக்கப்பட வேண்டும். இதன் மூலமே சுயசார்பான தேசியப் பொருளாதாரத்தைக் கட்டியமைத்து, ஏகாதிபத்திய ஆதிக்கத்திலிருந்து வெனிசுலா விடுதலையடைய முடியும். ஆனால் சாவெசின் பொருளாதாரத் திட்டங்கள் கனரக எண்ணெய் தொழிற்துறைக்கு முதல் முக்கியத்துவமளிப்பதாகவும், எண்ணெய் உற்பத்தியை விரிவுபடுத்த ஏகாதிபத்திய நிதிமூலதனத்தைச் சார்ந்திருப்பதாகவும் திரும்பத் திரும்ப உலக ஏகாதிபத்தியப் பொருளாதாரக் கட்டமைவில் பின்னிப் பிணைவதாகவுமே உள்ளன. எண்ணெய் ஏற்றுமதியில் கிடைக்கும் வருவாயைக் கொண்டு, நிலச்சீர்திருத்தம் விவசாய சீர்திருத்தங்களுக்கான முதலீட்டைப் பெறுவது என்ற சாவேசின் திட்டம் இதனாலேயே முன்னேற முடியாமல் நிற்கிறது.

நிலப்பிரபுக்களின் பயன்படுத்தப்படாத பெரும்பண்ணைகளை (லத்திபண்டியா) கிராமப்புற விவசாயிகள் எழுச்சியின் மூலம் கைப்பற்றி தமது அதிகாரத்தை நிறுவுவது என்ற புரட்சிகரப் பாதைக்குப் பதிலாக, நிலப்பிரபுக்களுக்கு நட்டஈடு கொடுத்து அரசே நிலத்தைக் கைப்பற்றி அவற்றை விவசாயிகளுக்கு விநியோகித்து, கூட்டுறவு மூலம் விவசாயத்தை உயிர்ப்பித்து தன்னிறைவையும் சுயசார்பையும் நிலைநாட்டுவது என்கிற முதலாளித்துவ சீர்திருத்த வழியையே சாவேஸ் செயல்படுத்த விழைகிறார். ஆனால் நகரங்களில் குவிந்துள்ள மக்களை நாட்டுப்புறங்களுக்கு அனுப்பி விவசாயத்தை உயிர்ப்பிக்க வேண்டுமானால், அரசு கோடிக்கணக்கில் முதலீடு செய்து ஆதரவளிக்க வேண்டும். எண்ணெய் வருவாயிலிருந்து இம்முதலீட்டைச் செய்ய வேண்டுமானால், வெனிசுலாவின் எண்ணெய் உற்பத்தியையும் ஏற்றுமதியையும் அதிகரிக்க வேண்டும்; சந்தைக்கும் விரிவாகத் திட்டங்களுக்குமான முதலீடுகளுக்கு மீண்டும் ஏகாதிபத்தியப் பொருளாதாரக் கட்டமைவையே சார்ந்திருக்க வேண்டும். இது மீள முடியாத நச்சுச்சூழல். இதனாலேயே சோசலிசக் கனவுகளோடும், வெனிசுலாவின் உழைக்கும் மக்கள் நலனில் அக்கறையோடும் அவர் மேற்கொள்ளும் சீர்திருத்தங்கள், முன்னேற முடியாமல் நிற்கின்றன.

சாவேசின் முற்போக்கான குட்டி முதலாளித்துவ வழியிலான சீர்திருத்தத் திட்டங்கள் வெனிசுலா உழைக்கும் மக்களுக்கு தற்காலிகமாக சில சலுகைகளையும் நிவாரணங்களையும் அளித்த போதிலும், அது நீடித்து நிலைக்க சாத்தியமே இல்லை. ஏகாதிபத்திய நிதிமூலதனக் கட்டமைவுடன் வெனிசுலாவின் பொருளாதாரம் பின்னிப் பிணைந்துள்ள நிலையில், ஏகாதிபத்திய உலகிற்கு மாற்றாக, அதற்கு வெளியே புதிய உலகைக் கட்டியமைக்க விழையும் சாவேசின் இலட்சியக் கனவு நிறைவேற அடிப்படை இல்லை.

அதேசமயம் மக்கள் நலன், சுயசார்பு, அமெரிக்க மேலாதிக்க எதிர்ப்பு எனும் உயர்ந்த நோக்கங்களைக் கொண்டுள்ள அதிபர் சாவேசின் முற்போக்கான சீர்திருத்த நடவடிக்கைகளை வரவேற்று ஆதரிப்பதும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயகப்பூர்வமான சாவெசின் ஆட்சியைக் கவிழ்க்க அமெரிக்கா மேற்கொண்டு வரும் சூழ்ச்சிகள் சதிகளை அம்பலப்படுத்தி முறியடிப்பதும் உலகெங்குமுள்ள புரட்சிகர ஜனநாயக சக்திகளின் கடமையாகும். அதேநேரத்தில், வெனிசுலா அதிபர் சாவேசின் முதலாளித்துவ வழிப்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகளையே “மாபெரும் புரட்சி”யாகவும், சாவேசை “இடதுசாரி” என்றும் சித்தரித்து மாய்மாலம் செய்துவரும் போலி கம்யூனிஸ்டுகள் போலி சோசலிசவாதிகளின் பித்தலாட்டத்தை முறியடிப்பது, அதைவிட முக்கிய கடமையாகும்.

· மனோகரன்

________________________________________________________________________________

புதிய ஜனநாயகம் – 2007

________________________________________________________________________________

 1. இந்த மனிதர் மறைந்த நிலையில் அமெரிக்க ஓநாய் எண்ணெய் வளனகளை சுரண்ட ஆரம்பித்து விடும்..லத்தீன் அமெரிக்க மக்களுக்கு என்றுதான் அமெரிக்காவிடம் இருந்து விடுதலை கிடைக்குமோ 🙁

 2. ஆடு நனைவதைப் பார்த்து ஓனாய் கவலைப் பட்டாதாம்… அதைப் போல சாவேசின் மரனத்துக்கு வருந்துகிரதாம்………. அமெரிகா… கன்னா லட்டு தின்ன ஆசையா?( அமெரிக்கா)

 3. ஊழல் மிக அதிகம் பரவி விட்டது அங்கு. அப்படி ஆகவிடாமல், மக்கள் நல திட்டங்களை மட்டும் அவர் செய்திருந்தால், சரியாக இருந்திருக்கும். அரச முதலாளித்துவம் crony capitalismத்திற்க்கு தான் இட்டு சென்றது / செல்லும். welfare state funded by oil revenue is ok ; but nationalisation of industries in a under developed and not so democratic nation will usually lead to economic crisis, rampant corruption and cronyism. all the rhetoric about ‘anti-imperialism’ was just rhetoric ; what matters is the ground realities..

  But any experiments with state socialism in the third world nation had inevitably ended as state capitalism with cronyism, rampant corruption and high inflation rates. Chavez’s legacy reminds me of our Indira Gandhi’s legacy.

  Both were charismatic and populist leaders with a strong dictatorial bent of mind undermining the freedom of press and judiciary to suit their political expediency. Both did not care much for the cronyism, corruption that their rule created.

  But Chavez is a more sincere and flamboyant leader who helped in reducing the poverty levels to a great extent. But the point is many other oil rich nations esp in middle east, Canada, Norway, etc had reduced poverty of their people thru the welfare state, funded by oil revenues ; but in a more sustainable and democratic manner ; without resorting to crude forms of state socialism or fiscal profligacy. Chavez could have gone the same way (or like Chile or Brazil) which is more sustainable model of growth. The future of Venezuela is indeed grim with 19 % inflation and soaring crime rates, rampant corruption and cronyism.

  TI reports that bribery, embezzlement, patronage, nepotism, conflict of interest and procurement padding in the public sector are the big sources of corruption. All of these are crimes committed in the dark, the antithesis of transparency, and Chavez has expanded the public sector more than 25% during his regime. No wonder so many billions are missing.

  • @K.R.Athiyaman
   from https://www.vinavu.com/2012/03/08/the-eu-crisis/
   2.1 comment
   ////போலி முதலாளித்துவாதிகள் மற்றும் திரிபுவாத முதலாளித்துவாதிகளின் செயல்களால் தான் இந்த குழப்பங்கள், மந்தங்கள், திவால்கள். உண்மையான தூய முதலாளித்தவத்தில், currency union, central bank fixing of interest rates, exporting nations manipulating their currency values artificially, aid thru IMF, WB, govt subsidies to housing loans, huge military spending and invasions இருக்காது.////

   உண்மையான தூய முதலாலித்துவதை எப்படி இந்தியாவில் கொண்டு வருவீர்கள் என்று வெகுநாட்களாக கேட்டுகொண்டு இருக்கிறேன் தாங்கள் பதில் சொன்னால் நன்றாக இருக்கும்

 4. @நாகராஜ்,

  உங்க கேள்விக்கு இரு வகை பதில்களை சொல்ல முடியும் :

  1. உண்மையான தூய கம்யூனிசத்தை எப்படி இந்தியாவில் கொண்டு வருவீர்கள் என்று மொதல்ல சொல்லுங்க, பிறகு நான் பதில் சொல்றேன். அல்லது உண்மையான தூய கம்யூனிசம் எதிர்காலத்தில் சாத்தியம் என்று இத்தனை வரலாற்று தவறுகளை பார்த்தும் நீங்க நம்பும் போது, உண்மையான தூய முதலாளித்துவம் சாத்தியம் என்று நான் ஏன் நம்ப கூடாது ? :))) நம்பிக்கை தான் வாழ்க்கை !!

  2. தூய சந்தை பொருளாதாரம் ஒரு ஆதர்சம் தான். 100 சதம் அடைய முடியாவிட்டாலும் ஒரு 75 சதம் அடைந்தாலே போதும். இந்தியாவில் 40 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இன்று சந்தை பொருளாதாரம் நோக்கிய பயணம் பரவாயில்லை. அன்று அரசு முதலீட்டியம் ஊழலுக்கு வித்திட்டது.
  உலகெங்கிலும் கடந்த 23 ஆண்டுகளில் சந்தை பொருளாதாரத்தை நோக்கிய பயண்ம் பரவிவிட்டது.
  ஆனாலும் legacy and long term /cumulative efforts of statism /socialism still exists. esp in US and Euro Zone areas as well as developing nations. it is a more complex issue and needs an open mind and thirst for knowledge to understand this. கற்றது கைமண் அளவு என்பது நம் எல்லோருக்கும் பொருந்தும். விவாதிப்பதன் மூலம் நான் தொடர்ந்து கற்று வருகிறேன். அதே போல் கற்க்க விரும்புவர்களுடன் மட்டுமே இனி விவாதிப்பதாக இருக்கிறேன். வெற்று வரட்டு வாதம் பயன் தராது…

  • புதிய ஜனநாயக புரட்சியின் மூலம் இந்த சமூக அமைப்பை மாற்றுவோம்.

   தாங்கள் எப்படி, ஒரு சட்ட திருத்தம் /பாராளுமன்ற ஜன்நாயகம் போன்று எதாவதா

   //உண்மையான தூய முதலாளித்தவத்தில்///
   சிவப்பு தான் அழகுன்னு ஒரு பார்வையை உருவாக்கி அதன் மூலம் அழகு சாதன பொருதளை விற்பனை செய்ய முடியுமா,
   fair and lovely market share 1800crores.

  • ///உண்மையான தூய கம்யூனிசத்தை எப்படி ………….///
   தாங்கள் தானே கம்யூனிசம் ஒத்து வராது என்று ரொம்ப நாளாக சொல்லி வருகிறீர்கள் .அதுவும் இல்லாமல் இப்பொது இருப்பது முதலாளித்துவமே கிடையாது க்ரொனி முதலாளித்துவம் என்று வினவு முன்வைக்கும் ஒவ்வொரு விசயத்தையும் மறுத்துள்ளீர்கள்.
   உண்மையான தூய முதலாலித்துவதை எப்படி இந்தியாவில் கொண்டு வருவீர்கள்
   எப்படி இருந்தாலும் தாங்கள் சொல்லும் உண்மையான முதலாளித்துவத்தில் இப்பொழுது காணப் படும் பல பிரச்ச்னைகள் இருக்காது.(அதாவது ஒரு அரசு, யார் குற்றம் செய்தாலும் முதலாளி – தொழிலாளி என்ற பாகுபாடில்லாமல் சரியான தண்டனை வழங்கும்)

   //இந்தியாவில் 40 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இன்று சந்தை பொருளாதாரம் நோக்கிய பயணம் பரவாயில்லை.//

   எப்படி ???

   பன்னாட்டு மருந்து கம்பெனிகள்: நாஜிகளின் வாரிசுகள்!
   https://www.vinavu.com/2012/08/14/pharma-nazi/

   ஆந்திர மாநிலத்தில் சோதிக்கப்பட்ட தடுப்பூசிகள் 6 பழங்குடியினச் சிறுமிகளைக் கொன்ற போதும், தில்லி “எய்ம்ஸ்” மருத்துவமனையில் 49 பச்சிளங்குழந்தைகள் பலியான போதும் இச்சோதனைகள் வெளியுலகுக்குத் தெரிய வந்தன.
   2005 க்கு முன் இந்தியாவில் பரவாக உள்ள நோய்களுக்கான மருந்துகளைத் தவிர வேறு எந்த மருந்துக்கும், முதல் கட்ட ஆய்வு இந்தியாவில் அனுமதிக்கப்படுவதில்லை. வெளிநாடுகளில் மூன்றாம் கட்ட ஆய்வுகள் முடிந்த மருந்துகளுக்குத்தான் இங்கே இரண்டாம் கட்ட ஆய்வு நடத்த அனுமதிக்கப்பட்டிருந்தது.

   2005இல் இந்தக் கட்டுப்பாடுகளை நீக்கி கதவைத் திறந்து விடுவதற்காக “டிரக்ஸ் அண்டு காஸ்மெடிக்ஸ் ரூல்ஸின் செட்யூல் ஒய்” திருத்தப்பட்டது. வெளிநாட்டில் ஒரு மருந்தை விலங்குகள் மீது பரிசோதித்து, அந்தப் பரிசோதனை முடிவுகள் அடங்கிய காகிதத்தைக் காட்டி, டி.சி.ஜி.ஐ. இன் தலையிலடித்து ஒரு ஹிப்போகிரெடிக் சத்தியத்தையும் செய்து விட்டால், இரண்டாம், மூன்றாம் கட்ட சோதனைகளை இந்தியர்கள் மீது நடத்திக் கொள்ளலாம் என்றும், அந்த ஆவணங்களை ஆராயத் தேவையில்லை என்றும் விதிகள் திருத்தப்பட்டன. உடனே ஆயிரக்கணக்கான ஒப்பந்த ஆராய்ச்சி அமைப்புகள் மனிதக் கசாப்புக் கடைகளாக இந்தியாவெங்கும் முளைத்தன.

   போன்றா ??
   இல்லை
   சூப்பர் ஆபர்: காசு கொடுத்தால்தான் கக்கூசுக்கும் தண்ணீர்…….
   https://www.vinavu.com/2012/02/15/water-policy-draft-favours-privatisation-of-services/

   //அன்பார்ந்த வாடிக்கையாளரே, உங்கள் கணக்கில் போதுமான கையிருப்பு இல்லாததால் தற்காலிகமாக இந்த சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. நிலுவைத் தொகையான ரூபாய் 2,212 செலுத்தி கணக்கை புதுப்பித்துக் கொண்டு எங்கள் சேவைகளை தொடர்ந்து அனுபவிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். எங்கள் வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்பு கொள்ள எண் 66832ஐ அழுத்துங்கள். உங்களுக்கு சேவை செய்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்///
   போன்றா ??

   • Nagaraj,

    First try to answer my counter question, if possible !!

    I do not totally reject all of vinavu’s posts but i find a lot of wrong and
    incomplete data and invalid arguments in many posts ; out of context quotes, etc.

    There are rogue companies and MNCs as there are unethical people among humans.
    still not all phrama majors can be classified like that. but for their contributions
    we would still be suffering from many diseases and pestilence. and pricing of drugs
    is a complex issue ; the R & D costs have to be factored in otherwise, this sector will
    become viable and no new molecules can be developed. Why don’t then govts nationalise
    these MNCs and then see the result.

    Privatisation of water is just theory and that draft will be rejected if introduced in parliament. Wherever the free competition cannot be practically possible, only govt should act as the service provider, like in water, etc.

    You are totally ignorant of the political and economic conditions in india until the 80s and what those anti-market polices wrought. and the change in mindset all over the world.
    and further you do not have the open mind or tolerance to learn from your opponent. hence
    Good day Sire…

    • //First try to answer my counter question, if possible !!//

     புதிய ஜனநாயக புரட்சியின் மூலம் இந்த சமூக அமைப்பை மாற்றுவோம்.

     தாங்கள் எப்படி, ஒரு சட்ட திருத்தம் /பாராளுமன்ற ஜன்நாயகம் போன்று எதாவதா

     • nagaraj,

      ஆம். சட்ட திருத்தம் மற்றும் பாரளுமன்ற ஜனனாயகம் மூலம் தான். ஆனால் இந்தியாவில் இவ்வமைப்பு சீரழிந்து போய் கிடப்பதால், இந்த முறையே சரியல்ல என்று நிராகரிப்பது அறிவீனம். இதை விட சிறந்த முறையை மனிதன் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. புரட்சி அரசு, மக்கள் அரசு, பாட்டாளிவர்க சர்வாதிகாரம் என்ற பெயரில் உருவானவை எல்லாம் ஃபாசிச, மக்கள் விரோத ‘சமூக ஏகாதிபத்தியமாக’ உருமாறிய வரலாற்றை பற்றி அறிவீர்கள்.

      உங்களுக்கெல்லாம் பாரளுமன்ற ஜனனாயக முறையை கண்டால் ஒரு இளக்காரம் மற்றும் கேலி. அது பூஸ்வாக்களுக்கான அரசு அமைப்பு, தொழிலாளர்களுக்கு எதிரானது, ஏமாத்து வேலை, என்றெல்லாம் ஒரு கருத்து. மிக மேலோட்டமான, மேட்டிமை திமிர் கொண்ட பார்வை இது. இதை பற்றி சொல்லி உங்களுக்கெல்லாம் விளங்க வைக்க முடியாது…

       • ஆம் நாகராஜ், மனு கொடுத்து, பொது கருத்தை உருவாக்கி, ஜனனாயக முறையில் தான். இது தான் சரியான முறை என்பதை உங்களுக்கு தொடர்ந்து இங்கு ’விளக்கினாலும்’ உங்களால் புரிந்து கொள்ளவே முடியாது. இளக்காரம் மற்றும் மேட்டிமை திமிர் என்ற மாயையில் சிக்கியுள்ளீர்கள். இருப்பினும் பதில் சொல்கிறேன்.

        இதற்க்கு மாற்றாக உருவாக்கப்ட்ட அனைத்து வகை அமைப்புகளும் ஃபாசித்தில் தான் முடிந்தன என்ற வரலாறை உங்களால சரியாக உள் வாஙக்வே முடியாது..

        • மனு கொடுத்து,பொது கருத்தை உருவாக்கி//

         இப்போது பொதுகருத்தை எப்படி உருவாக்கி விடுவீர்கள்

         இப்போது இருக்கும் ஊடகங்களை வைத்துகொண்டா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க