முகப்புபார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்இசுலாமிய தீவிரவாதத்திற்கு பாரதீய ஜனதாவின் அழைப்பு!

இசுலாமிய தீவிரவாதத்திற்கு பாரதீய ஜனதாவின் அழைப்பு!

-

குஜராத் 2002  முசுலீம் மக்கள் மீதான இனப் படுகொலை – 1

முன்னுரை:

குஜராத் 2002 முசுலீம் மக்கள் மீதான இனப்படுகொலை நடந்து பத்து ஆண்டுகளுக்கு மேல் முடிந்துவிட்டது. கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் சில அப்பாவி முசுலீம்கள் தண்டிக்கப்பட்டுள்ளனரே அன்றி பலநூறு கொலை, கற்பழிப்பு, வன்முறை செய்த இந்து மதவெறியர்கள் யாரும் இதுவரை தண்டிக்கப்படவில்லை. இந்தியா ஒரு மதச்சார்பின்மை கொண்ட நாடல்ல, இது இந்துத்துவ நாடு என்பதற்கு வேறு என்ன சான்று வேண்டும்? முசுலீம் என்பதற்காகவே இங்கு ஒருவர் கொலை செய்யப்பட்டாலும் அதை தட்டிக் கேட்க நாதியில்லை என்பதற்கு இந்தியக் குடிமகன் என்று அழைத்துக் கொள்ளும் ஒவ்வொருவரும் வெட்கப்படவேண்டும், வேதனைப் படவேண்டும். இந்த இனப்படுகொலையின் நாயகனான நரேந்திர மோடி வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் பிரதமராக நிற்பதற்கு கடும் பிரயத்தனம் செய்து வருகிறார். ஆகவே வருங்கால பிரதமர் போட்டிக்குரியவரின் கடந்த கால தகுதிகளை சீர்தூக்கி பார்ப்பது அவசியம்.  2002ஆம் ஆண்டு புதிய கலாச்சாரத்தில் வந்த இந்தக் கட்டுரையை காலப்பொருத்தம் கருதி வெளியிடுகிறோம். படியுங்கள், குற்ற உணர்வு கொள்ளுங்கள்!

– வினவு

__________________________________________

ந்தக் குழந்தை தலையைக் கவிழ்த்து நடுங்கியபடி உட்கார்ந்திருந்தது. திடீர் திடீரென விசும்பியது. அதற்கு 5 வயது இருக்கும். கிழிந்து போன மஞ்சள் சட்டையில் திட்டுத் திட்டாகக் கறை. சட்டையை விலக்கி அவளுடைய முதுகைக் காட்டினார் அவளுடைய தந்தை.

குஜராத் கலவரங்கள்முதுகு முழுவதும் வரி வரியாகத் தழும்புகள். அவளைக் கொடூரமாக அடித்திருக்கிறார்கள். பாலியல் பலாத்தகாரமும் செய்யப்பட்டிருக்கிறாள் என்று தெளிவாகத் தெரிந்தது. தேவதையைப் போன்ற அந்தப் பிஞ்சு முகத்தில் பிரமை பிடித்திருந்தது. “இவளைப் பேச வைக்க முடியவில்லையே. இனிமேல் பேசவே மாட்டாளோ” தந்தையின் குரல் உடைந்தது.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த அமீனா என்ற 30 வயதுப் பெண் என்னிடம் பேசத் தொடங்கினாள்:

“நான் ஒரு பெண்ணைப் பார்த்தேன். அவளுக்கு 20 வயதில் ஒரு அழகான மகள். ‘என் பெண்ணை எதுவும் செய்து விடாதீர்கள். நான் பணம் வேண்டுமானாலும் தருகிறேன்’ என்று அவள் இந்துக்களிடம் கெஞ்சினாள். அவர்கள் பணத்தை வாங்கிக் கொண்டார்கள். பிறகு ஒருவர் பின் ஒருவராக பத்து பேர் அவளைக் கற்பழித்தார்கள். அந்தப் பெண்ணும் இப்படித்தான். பிரமை பிடித்துப் போய் பேசுவதே இல்லை. அப்புறம் அவள் என்ன ஆனாளோ தெரியவில்லை.”

-டாம் மோரேஸ், எழுத்தாளர், குஜராத் அகதி முகாம்களுக்கு நேரில் சென்று பார்த்து எழுதிய கட்டுரையிலிருந்து. தி இந்து, 24.3.2002

“அப்புறம் அவள் என்ன ஆனாளோ தெரியவில்லை”

இந்தத் துயரம் தோய்ந்த சொற்கள் யாரோ ஒரு அப்பாவி முசுலீம் பெண்ணின் முடிவை மட்டும் சொல்லவில்லை. முசுலீம் மக்களுக்கெதிராக ஆர்.எஸ்.எஸ் கும்பல் நடத்திய எல்லாக் கலவரங்களின் முடிவையும் தெரிவிக்கின்றன அந்த சொற்கள்.

அத்வானி நடத்திய ரத்த யாத்திரை, செங்கல் ஊர்வலம், பாபரி மசூதி இடிப்பு… என ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஆர்.எஸ்.எஸ். காலிகளால் நர வேட்டையாடப்பட்ட முசுலீம் மக்களுக்கு அப்புறம் என்ன நடந்தது?

வீடிழந்தவர்கள், தொழிலிழந்தவர்கள், கை காலிழந்தவர்கள், பெற்றோரை இழந்த பிள்ளைகள, கணவனை இழந்த பெண்கள், வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டு புத்தி பேதலித்த பெண்கள்… அப்புறம் என்ன நடந்தது இவர்களுக்கெல்லாம்?

இந்தக் கொலை கொள்ளை கற்பழிப்புகளில், ஈடுபட்ட ஆர்.எஸ்.எஸ். குண்டர்கள், அவர்கள் மீது அரையும் குறையுமாகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகள், விசாரணைக் கமிசன்களுக்கெல்லாம் அப்புறம் நடந்ததென்ன?

யாருக்கும் எதுவும் நடக்கவில்லை. பகல்பூர், லக்னெள, மீரட், கான்பூர், பிவாண்டி, சூரத், பம்பாய்… ஒரு குற்றவாளி கூடத் தண்டிக்கப்படவில்லை. மாறாக, குற்றவாளிகள் அமைச்சர்களாகியிருக்கிறார்கள். அரசு அதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கிறார்கள்.

அனுதாபம் வேண்டாம் அரசியல் உணர்வு வேண்டும்!

இந்நிலையில் குஜராத்தில் நடை பெற்ற கொடூரங்களை விவரிப்பதனால் மட்டும் என்ன பயன்? கொடூரங்களின் விவரணை அனுதாபத்தைத் தோற்றுவிக்கக் கூடும். ஆனால் அதுவே இந்துமத வெறியர்களுக்கெதிரான அரசியல் உணர்வைத் தோற்றுவித்து விடுவதில்லை.

இன்று குஜராத்தில் முசுலீம் பெண்களை அவர்களது குடும்பத்தினரின் கண் முன்னே இந்து மதவெறியர்கள் கற்பழித்தனர் என்றால் அன்று சூரத்தில் அத்தகைய கற்பழிப்புகளை வீடியோவிலேயே பதிவு செய்தனர்.

எரிக்கப்பட்ட முஸ்லீம் குழந்தைகள்
முஸ்லீம் குழந்தைகளை தூக்கிலிட்டு கொன்று விட்டு எரித்தனர்.

உயிருடன் எரிப்பது, குழந்தைகளைக் கண்டதுண்டமாக வெட்டிக் கொல்வது, வாக்காளர் பட்டியலை வைத்துக்கொண்டு முசுலீம்களை வீடு வீடாகத் தேடிக் கொல்வது, முசுலீம் வர்த்தகர்களை ஒழித்துக் கட்டுவது, இந்து நடுத்தர வர்க்கத்தினரும் கொள்ளையில் பங்கேற்பது, இந்து மதவெறியர்களுடன் போலீசும் கூட்டுச் சேர்ந்து முசுலீம்களைக் கொலை செய்வது, மசூதிகளை இடிப்பது…. என 1993 பம்பாய்ப் படுகொலையில் சிவசேனா பா.ஜ.க. கும்பல் எதையெல்லாம் செய்ததோ அவையனைத்தும் முன்பைவிட விரைவாக, குரூரமாக, திட்டமிட்ட முறையில் குஜராத்தில் அரங்கேறியுள்ளன.

டாம் மொரேஸ் கூறுகின்ற சம்பவம் நம் அன்றாட வாழ்க்கையில் நடந்திருந்தால் பழிக்குப் பழி வாங்குவதற்காக அந்தப் பத்துப் பேரையும் கொலை செய்திருந்தாலும் அதை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். இதுவே திரைக்கதையாக இருந்தால் எதிரிகள் 100 பேரைக் கதாநாயகன் ரத்தம் சொட்டச் சொட்ட அடித்துக் கொல்லும் வன்முறைக் காட்சியைத் தணிக்கைக் குழுவும் ஏற்றுக் கொள்ளும்.

பழிவாங்குவதைத் தடுக்க பொடா சட்டம்

ஆனால் பாரதீய ஜனதாக் கட்சியோ அத்தகைய ‘பயங்கரவாத’ நடவடிக்கைகளை முன் கூட்டியே தடுப்பதற்காக பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அவசர அவசரமாக நிறைவேற்றியுள்ளது.

அத்வானி யாரையெல்லாம் சொல்லி பயங்கரவாதப் பூச்சாண்டி காட்டுகிறாரோ அவர்கள் யாரும் எந்த அமைப்பும் மூன்றே நாளில் 2000 பேரை எரித்துக் கொன்றதில்லை; ஆயிரம் ஓட்டல்களையும், ஆயிரம் லாரிகளையும், நூற்றுக்கணக்கான கார்களையும், ஆயிரக்கணக்கான வீடுகளையும், 17 தொழிற்சாலைகளையும, 500 மசூதிகளையும் மூன்றே நாட்களில் எந்தப் பயங்கரவாதியும எரித்துச் சாம்பலாக்கியதில்லை. மூன்றே நாளில் சுமார் இரண்டு லட்சம் மக்களைத் தம் சொந்த ஊரிலேயே யாரும் அகதிகளாக்கியதில்லை.

பல்வேறு பத்திரிகையளர்களும், ஹர்ஷ் மந்தேரும் அதிர்ச்சியுடன் குறிப்பிடுகின்ற வக்கிரமான முறைகளில் யாரும் இனப் படுகொலை நடத்தியதில்லை.

இருப்பினும், “கோத்ரா ரயில் பெட்டி எரிப்புதான் பயங்கரவாதமென்றும், அதற்குப் பின் குஜராத் முழுவதும் நடை பெற்றவை பயங்கரவாத நடவடிக்கைகள் அல்ல” என்றும் கூறியிருக்கிறார் அத்வானி.

பார்ப்பான் சூத்திரனைக் கொன்றால் அது நீதி. ஆனால் பதிலுக்குச் சூத்திரன் பார்ப்பானைத் தாக்க நினைத்தாலே அது மரண தண்டனைக்குரிய குற்றம்! அதாவது மனுநீதியின் திருத்தி பாலிஷ் செய்யப்பட்ட 21-ம் நூற்றாண்டுப் பதிப்புத்தான் பொடா.

பொடா சட்டத்தை இந்தக் கோணத்தில் சித்தரிப்பது தவறென்றோ, மிகையென்றோ கருதும் வாசகர்கள் கீழ்கண்ட செய்தியைக் கேளுங்கள்.

முசுலீம் அகதிகளால் இந்துக்களுக்கு ஆபத்தாம்!

இந்து மதவெறியர்கள் நடத்திய கொலைவெறியாட்டத்தில் வீடு, வாசல் சொந்த பந்தங்களைப் பறிகொடுத்த முசுலீம் மக்களில் 6,000 பேர் அகமதாபாத்தின் தாரியாபூர் அகதி முகாமில் அடைக்கலம் புகுந்திருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட முசுலீம்கள் 6,000 பேர் ஒரே இடத்தில் குவிந்திருப்பது அருகாமையில் வாழும் இந்துக்களுக்கு ஆபத்தென்றும், அவர்களை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்றும் உள்துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார் குஜராத்தின் சிவில் சப்ளைஸ் அமைச்சர் பாரத் பரோட்.

தின்னச் சோறில்லாமல், உடுத்த உடையில்லாமல், மேலே கூரையில்லாமல் ஒண்டிக் கொண்டிருக்கும் பரிதாபத்திற்குரிய முசுலீம் மக்களைக் கண்டால் அருகில் வாழும் இந்துக்களுக்குப் பயமாயிருக்கிறதாம். இப்படிப் ‘பயமுறுத்துவதைத்தான்’ பயங்கரவாதமென்றும் அதைத்தடுக்க வேண்டுமென்றும் சொல்கிறது மத்திய அரசு. இந்த வரைவிலக்கணப்படி அகதி முகாம்களனைத்தும் பயங்கரவாத முகாம்கள்! இன்றைய அகதிகள் நாளைய பயங்கரவாதிகள்!

ஏற்கனவே அகதி முகாம்கள் சிறைச்சாலைகளாகத்தான் உள்ளன. ஆர்.எஸ்.எஸ். காலிகளுடன் சேர்ந்து கொண்டு எந்தப் போலீசார் முசுலீம் மக்களைச் சூறையாடினார்களோ, அவர்கள்தான் அங்கே ‘காவல்’ இருக்கிறார்கள். அகதி முகாம்களும் ஆர்.எஸ்.எஸ். குண்டர்களால் தாக்கப்படுகின்றன.

ஒரு நாளைக்கு மட்டுமே போதுமான தானியத்தைக் கொடுத்து “ஒரு வாரத்திற்கான உணவு” என்று கணக்கு சொல்கிறது குஜராத் அரசு, இசுலாமிய அமைப்புகளும் தொண்டு நிறுவனங்களும்தான் உண்மையில் முகாம்களைப் பராமரிக்கின்றன. முகாம்களில் கழிப்பிடமில்லை. மருத்துவ வசதி இல்லை. கொள்ளை நோய்கள் பரவும் அபாயம் நிலவுவதாக எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

கை, கால்கள் வெட்டப்பட்டும், தீயில் பாதி வெந்து போன உடலுடனும் முகாம்களில் தவிப்பவர்கள் பலர். அவர்களை உடனே மருத்துவனைக்குப் போகச் சொல்கிறார்கள் மருத்துவர்கள. முகாமை விட்டு வெளியே சென்றால் இந்து வெறியர்களால் கொல்லப்படுவோமென்று அஞ்சி உள்ளேயே இருந்து அவர்கள் சித்திரவதையை அனுபவிக்கிறார்கள்.

வெட்டு, கொல்லு ஜெய் ஸ்ரீராம்!

குஜராத் கலவரம்எரிந்து போன வீட்டில் ஏதாவது மிச்சமிருக்கிறதா என்று பார்ப்பதற்காகத் தங்கள் வீட்டுக்குச் சென்ற சிலர் முகாமுக்குத் திரும்பவில்லை அவர்கள் அங்கேயே கொல்லப்பட்டு விட்டார்கள்.

இரவு நேரத்தில் யாரும் அறியாமல் தங்கள் வீட்டை ஒருமுறை பார்க்க விரும்பிச் சென்றவர்கள் ”வெட்டு, கொல்லு, ஜெய் ஸ்ரீராம்” (காட்டோ, மாரோ, ஜெய் ஸ்ரீராம்) என்ற கூச்சலைக் கேட்டு அலறி அடித்துக் கொண்டு முகாமிற்கு ஓடிவந்திருக்கிறார்கள்.

என்னென்ன வெறிக் கூச்சல்களுடன் இந்து மதவெறிக் குண்டர்கள் கொலை வெறியாட்டம் நடத்தினார்களோ அந்தக் கூச்சல்களையே ஒலிநாடாவில் பதிவு செய்து முசுலீம் குடியிருப்புப் பகுதிகளில் நள்ளிரவில் திடீர் திடீரென ஒலிபரப்பி திகிலூட்டுகிறது ஆர்.எஸ்.எஸ். கும்பல்.

அகதிகள் யாரும் இனி தம் வீட்டுக்குத் திரும்ப இயலாது. கிராமப்புறங்களில் அவர்களது நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. அகமதாபாத்திலோ முசுலீம்கள் குடியிருந்த வீடுகள் புல்டோசரால் இடித்துத் தரைமட்டமாக்கப்படுகின்றன. சொத்துக்களை வந்த விலைக்கு விற்றுவிட்டு சபர்மதி ஆற்றின் மறுகரைக்குக் குடியேறுகிறார்கள் முசுலீம்கள். இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியில் இனி முசுலீம்கள் குடியிருக்க இயலாது என்பது எழுதப்படாத விதியாகிவிட்டது.

முசுலீம்கள் பாதுகாப்பாக உணர்வதுதான் முக்கியம் என்பதால் நகரத்துக்கு வெளியே அகதிகளுக்கு ஒரு துண்டு நிலம் ஒதுக்கித் தந்து விடுங்களென்று தேசிய சிறுபான்மைக் கமிசனின் தலைவரே குஜராத் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார். (டைம்ஸ் ஆப் இந்தியா, மார்ச் -27). பஞ்சமர்கள் என்று தாழ்த்தப்பட்ட மக்களைச் சேரிக்கு ஒதுக்கிய பார்ப்பன மதவெறிக் கும்பல் முசுலீம்களை ஆறாவது பிரிவாக்கி அவர்களுக்கான சேரியையும் உருவாக்கிவிட்டது.

ஒரு சமூகத்தினரைத் துன்புறுத்துவதற்கும் இழிவு படுத்துவதற்கும், சித்திரவதை செய்வதற்கும் ‘இதுதான் எல்லை’ என்று நீங்கள் கருதினால் இதற்கும் ஒரு படி மேலே போகிறது ஆர்.எஸ்.எஸ். கும்பல்.

சந்தைக்குக் காய்கறி வாங்கச் சென்ற முசுலீம் பெண்களைக் கல்லெறிந்து விரட்டிவிட்டு ‘முசுலீம்களுக்கு விற்காதே’ என வியாபாரிகளை மிரட்டுகின்றனர் ஆர்.எஸ்.எஸ்.காலிகள். “முசுலீம்களுடன் சேர்ந்து தொழில் நடத்தாதே, முசுலீம்களிடம் வேலை செய்யாதே, முசுலீம்களை வேலைக்கு வைத்துக் கொள்ளாதே –இங்ஙனம் தேசபக்தன்” என்று அச்சிடப்பட்ட துண்டுப் பிரசுரங்கள் எங்கும் விநியோகிக்கப்படுகின்றன.

இதுதான் இந்து ராஷ்டிரம்.

இத்தகைய சூழ்நிலையில் முசுலீம் மக்கள் எப்படி இந்த நாட்டில் வாழ முடியும்?

“சிறுபான்மையினர் இந்த நாட்டில் வாழலாம். இந்து தேசத்திற்குக் கீழ்படிந்தவர்களாக, எதையும் கோராதவர்களாக, எந்தவிதச் சலுகைக்கும் தகுதியற்றவர்களாக இந்த நாட்டின் குடிமகன் என்ற உரிமையற்றவர்களாக வாழலாம்.”

–   கோல்வால்கர்

(ஆர்.எஸ்.எஸ். தலைவர், ‘நாம் அல்லது நமது தேசியம்’ எனும் நூலில்)

“பெரும்பான்மையினரின் நல்லெண்ணத்தைப் பெறுவதுதான் சிறுபான்மையினருக்கு உண்மையான பாதுகாப்பு” என்ற ஆர்.எஸ்.எஸ்.ஸின் பெங்களூர் தீர்மானம் இதே விசயத்தைத்தான் வேறு வார்த்தைகளில் கூறுகிறது.

‘பாதுகாப்பாக’ வாழவேண்டுமானால் ‘சட்டம் – உரிமை – சுயமரியாதை’ என்று பேசாமல் அடிமைகளாக வாழ ஒத்துக் கொள்ள வேண்டும் என்று பார்ப்பன உயர்சாதி இந்துக்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கூறுவதைத்தான் ஆர்.எஸ்.எஸ். கும்பல் முசுலீம்களுக்கும் கூறுகிறது. இந்த அடிமைத்தனத்தை முசுலீம் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதும் எதிர்த்துப் போராடுவார்கள் என்பதும் பார்ப்பன இந்து வெறியர்கள் அறியாததல்ல.

தங்களுக்கு எதிரான முசுலீம்களின் கோபத்தை ‘சாதாரண இந்துக்கள்’ மீதான தாக்குதலாக மடைமாற்றி விடுவதுதான் ஆர்.எஸ்.எஸ். –இன் நோக்கம். தொடர்ச்சியான ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் மூலம் முசுலீம் மக்களை இசுலாமியத் தீவிரவாதத்தின் பக்கம் தள்ளிவிடுவதுதான் அவர்களது திட்டம்.

இசுலாமிய தீவிரவீதத்தைத் தூண்ட ஆர்.எஸ்.எஸ். சதி!

எதிர்த்துப் போராடுவதற்கு “இசுலாமியத் தீவிரவாதம்” என ஒன்று இல்லையென்றால் தன்னுடைய இருப்பே கேள்விக்குள்ளாகி விடும் என்பதுதான் அரசியலரங்கில் பா.ஜ. கும்பலின் இன்றைய நிலைமை.

சாதி, தீண்டாமை, இன – மொழி ஒடுக்குமுறை ஆகியவற்றைத் தன் இதயமாகக் கொண்ட இந்துத்துவக் கொள்கைகளைச் சொல்லி பார்ப்பன மேல்சாதியினரிலேயே ஒரு சிறு பிரிவைத்தான் ஆர்.எஸ்.எஸ். ஆல் திரட்ட முடிந்திருக்கிறது.

உள்ளூர் அளவில் எழும் பிரச்சினைகளுக்கு இந்து – முசுலீம் சாயம் பூசி கலவரத்தைத் தூண்டினாலும் அது உள்ளூர் எல்லையைத் தாண்டுவதில்லை; நீடித்து நிற்பதுமில்லை.

‘வரலாற்றுப் பழி தீர்ப்பது’ என்ற பெயரில் தொடங்கிய அயோத்தி பிரச்சினையோ உத்தரப் பிரதேசத்திலேயே இன்று போணியாகவில்லை. இத்தனை அமர்க்களங்களுக்குப் பின்னரும் அயோத்தி நகரத்தில் ஒரு சொறிநாய் கூட ராமன் கோவில் பிரச்சினையைத் திரும்பிப் பார்க்கவில்லை.

“அணுகுண்டு – கார்கில் – காஷ்மீர் – பாகிஸ்தான் எதிர்ப்பு தேசவெறி” என்பதற்கெல்லாம் சிட்டுக்குருவி லேகியம் போல சிறிது நேரத்திற்கு மேல் வீரியம் இருப்பதில்லை.

“பொடோ சட்டத்தை எதிர்ப்பவன் தேசவிரோதி” என்று உ.பி.சட்டசபைத் தேர்தலில் பிரச்சாரம் செய்தால், மக்கள் ‘தேசவிரோதிகளுக்கே’ வாக்களித்து பா.ஜ.க.வை மூன்றாவது இடத்துக்குத் தள்ளி விட்டார்கள்.

தனியார் மயம், ஆட்குறைப்பு, மானிய வெட்டு, சிறுதொழில்கள் அழிப்பு போன்ற மறுகாலனியாக்க நடவடிக்கைகளும், லஞ்ச – ஊழல் கிரிமினல் நடவடிக்கைகளில் காங்கிரசை விஞ்சிய கட்சிதான் பாரதீய ஜனதா என்று மக்கள் பெற்ற அனுபவமும், அடுக்கடுக்கான தோல்விகளை பாரதீய ஜனதாவிற்குத் தந்திருக்கின்றன.

டில்லி அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டிருந்தாலும் மாநிலங்களில் பா.ஜ.க.ஏறத்தாழத் துடைத்தெறியப்பட்டு விட்டது. எஞ்சியிருப்பவை குஜராத், கோவா, இமாச்சலப் பிரதேசம் ஆகியவை மட்டுமே. குஜராத்தில் சமீபத்திய உள்ளாட்சித் தேர்தலில் படுதோல்வி; தற்போது அயோத்தி விவகாரம் நடை பெற்றுக் கொண்டிருக்கும் போதே டெல்லி மாநகராட்சித் தேர்தலில் படுதோல்வி….

எனவே இந்து மதவெறிக் கும்பல் அதிகாரத்தில் நீடிப்பதற்கே இசுலாமியத் தீவிரவாதத்தின் ‘தயவு’ அதற்குத் தேவைப்படுகிறது. “இந்துத்துவ கொள்கைகளில் தீவிரமாக இல்லாத காரணத்தினால்தான் நாம் அடுக்கடுக்காகத் தோல்விகளைச் சந்திக்கிறோம்” என்று சங்க பரிவாரத்தினர் கூறுவதற்கு பொருள், “முசுலீம் மக்களுக்கு ஆத்திரமூட்டுமளவுக்கு நமது செயல்பாடுகள் அமையவில்லை” என்பதுதான்.

குஜராத் படுகொலை – இசுலாமியத் தீவிரவாதத்திற்கு இந்துமத வெறியர்கள் விடுக்கும் அழைப்பு. இந்த அழைப்பை இசுலாமியத் தீவிரவாதிகள் நிராகரித்து விட்டால்… வேறு வழியில்லை. இசுலாமியத் தீவிரவாதியின் பாத்திரத்தையும் இந்து வெறியர்களே ஏற்று நடிப்பார்கள்.

______________________________________________

புதிய கலாச்சாரம், ஏப்ரல் 2002.

______________________________________________

 1. தனி ..இழத்திர்கவும் …பலசசந்தர் ..இரப்பிர்காவும்…பொரட தெரிந்த தமிழ்கர்கலுக்கு …( அந்த பொரடத்தை தப்பு என்ட்ரு சொல்ல வில்ல)
  அடுத்தநாட்டில் அரசு மெல்நடவடிகை எடுக்க பொரடதெரிந்தநமக்கு … உள்நட்டில் உள்ள திய சக்திகாக பொராட தெரியவில்ல ..என்னநியாயம்???
  டெல்Hஇ பெருந்தில்நடந்த கர்பழிப்பிர்கு பொராட தெரிந்தநமக்கு …அப்பவி பென் கள் (ஏன்னிலடஙக) இந்த வன்முரை எதிரக பொரட தெரியவில்ல…

  உலகம் எஙகு சென்ட்ரு கொன்டு இருகிரது???

 2. வினவின் கட்டுரை வெறியைக் கிளப்புவதற்கென்றே எழுதப் பட்டது போல இருக்கிறது. நடந்தவகளை யாராலும் நியாயப் படுத்த முடியாதுதான். ஆனால் இது போன்ற கலவரத்துக்குக் காரணாமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் அது தொடர்பான புகைப்படங்கள் எதுவும் ஏன் இதில் எடம் பெறவில்லை? கடந்த 20 வருடன்ஙளாக, உலகத்தில் தீவிரவாத செயல் என்ற செய்தி வந்தால் அதில் இஸ்லாமியரின் பெயர் நிச்சயமாகக் காணப் படுகிறதே? யார் மேல் கோபம் கொண்டு எல்லார் மேலும் பயஙகர வாதத் தாக்குதலை நடத்துகிறார்கள்? பாகிஸ்தானில் ஷியாக்களின் மேல், அஹமதியாக்களின் மேல் தொடர் தக்குதல் நடப்பதக் குறித்து வினவு குஜராத் கலவரக் கோபத்தோடு கட்டுரை அல்லது செய்தி போன்றவற்றை ஏன் வெளியிடுவதில்லை? இஸ்லாத்தில் உள்ள் நல்ல கருத்துக்க்கள் பற்றி பொது அறிக்க்கைகள், கருத்தரங்கங்கள் போன்றவை ஏன் நடப்பதில்லை? அதைப் போன்ற முயற்சியில் ஈடுபடும் இஸ்லாமிய அறிஞர்கள் ஏன் ஊக்கப் படுத்தப் படுவதில்லை? தாலிபான்கள் இன்றும் கூட பெண் பிள்ளைகள் படிக்கும் பள்ளிக் கட்டடங்களைத் தகர்ப்பதிலிடுந்து பெண்கள் அடக்குமுறையை நிலைநிறுத்துவதை ஏன் கண்டனம் கூட செய்வதில்லை? ராமர் கோவில் அரசியலானதாலேதான் அதக் கட்ட முடியவில்லை. வாஜ்பாய் பத வகித்த காலங்களில் அவரது கட்சிக்கு தனிப் பெரும்பான்மை இல்லை. அவரால் தனியான முடிவெடுக்க முடியாத சூழ்நிலை இருந்தது. இதில் பாஜக துரோகம் எதுவும் இல்லை.

  ல்

 3. Ragav–> Even if Godhra train fire was done by some group of men, it does not account the responsibility of all Muslims. The group of person who has done should be punished not all the muslims.

 4. arabu naadukaliLum , aafgaanistaanilum, kasmerilum muslimkaL thankaLai aakiramikka vantha anniya padaikalai ethirththE poraadukiRaarkaL! Izha makkaLin inthiya, sinkaLa padaiyai ethirththa pOraattamum appadiththaan! aanal, saamaaniya muslimkalai konRu kuvikka vanmuRaiyai Evividum hinthuthvaa payankaravaatham mannikkamudiyaathathu!

 5. கோவையில் இசுலாமியர்களின் மீது பொருளாதார தாக்குதல் நடைபெற்றது . அப்பொழுது பழுத்த அரசியல்வாதியான கலைஞர் முதல்வராக இருந்தும் தடுக்க முடியவில்லை. புதிய முதல்வரான இசுலாமியர்களின் மீது அக்கறை இலாத மோடியால் எந்த அளவு சிறப்பாக செயல்பட்டிர்க்க முடியும் என்று தெரிய வில்லை . .

  கருணாநதியின் சம்மதம் இல்லாமலே குஜ்ரால் அவர்கள் ராணுவத்தை அனுப்பி வைத்தார் .
  அதே போல வாஜ்பாய் செய்திருக்க வேண்டும் .

  காலம் காலமாக குஜராத்தில் நடைபெறும் கலவரங்களுக்கு மோடியை மட்டும் குறை கூறுவதில் பயன் இல்லை. நமது அரசு இயந்திரம் முடிவுகள் எடுப்பதில் மிக தாமதம் செய்கிறது. ஜனநாயக நாட்டில் மோடி தார்மீக பொறுப்பு வேண்டுமானால் எடுக்கலாம் . ஆனால் மற்ற அமைப்புகள் என்ன செய்து கொண்டு இருந்தன ?

  இடைய பல அடுக்குகளில் தலைவர்கள், அதிகாரிகள் உள்ல்லார்கள் , அவர்கள் என்ன செய்தார்கள் ?
  ஆகா இது நமது ஜனநாயக அமைப்பில் உள்ள ஒரு பழுது . அந்த பழுது நீக்கபடாதவரை
  கலவரங்களில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. சிறுபான்மையினரை கண்டு கொள்ளாத செயல்படாத முதல்வர்களை கொண்டிருந்தாலும் அரசாங்க அமைப்பு மக்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும் .

  Checks and balance -இல் உள்ள களை களையப்பட வேண்டும்

  • \\ஆகா இது நமது ஜனநாயக அமைப்பில் உள்ள ஒரு பழுது . அந்த பழுது நீக்கபடாதவரை
   கலவரங்களில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. சிறுபான்மையினரை கண்டு கொள்ளாத செயல்படாத முதல்வர்களை கொண்டிருந்தாலும் அரசாங்க அமைப்பு மக்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும் .//

   அந்த ”பழுதையே” திட்டமிட்டு இந்த அமைப்புக்குள் இந்துத்வா பயங்கரவாத கும்பல் திணித்து வருகிறதே. பல காவல்துறை, ராணுவ,நீதித்துறை உயர் அலுவலர்கள் ஓய்வு பெற்ற பின் இந்துத்வா கும்பலோடு ஐக்கியமாகி சட்ட மன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகிறார்கள். ஆளுநர் உள்ளிட்ட பதவிகளை பெறுகிறார்கள்.அவர்கள் பணிக்காலத்தில் நேர்மையாக செயல் பட்டிருப்பார்களா.

   1986-ல் சட்டத்துக்கு புறம்பாக பாபர் மசூதியை இந்துக்கள் வழிபாட்டுக்கு திறந்து விட்ட பாண்டே என்ற நீதிபதி பின்னாளில் பா.ச.க.வில் சேர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஆனான்.அவ்வளவு ஏன்.1949-ல் பாபர் மசூதிக்குள் திருட்டுத்தனமாக ராமர் சீதை சிலைகளை வைத்த சதித் திட்டத்திற்கு முழுக்கவும் உடந்தையாக இருந்தான் அப்போதைய அந்த மாவட்ட ஆட்சியர் k.k.நாயர் என்ற அயோக்கியன்.

   ஆகவே இந்த அமைப்பு மத சிறுபான்மையினரையும் தாழ்த்தப்பட்ட சமூக மக்களையும் பாதுகாக்கும் எனபது மூட நம்பிக்கை.

   உழைக்கும் மக்களே அனைத்து தரப்பு மக்களுக்கும் பாதுகாப்பு.

 6. ஒரு சராசரி முஸ்லிமாக என் மனதில் உள்ள ஆதங்கத்தை வினவு அவர்கள் கொட்டி தீர்த்துவிட்டார்கள் நன்றி. ஆனால் அனைத்து தீவிரவாதங்களும் இஸ்லாத்திற்காக அல்ல. முஸ்லிம் அனைவரும் தீவிரவாதிகளும் அல்ல.

  தீவிரவாதம் என்பது பாதிக்கப்பட்ட பலமில்லாத மக்கள், பலமிக்க எதிரிகளை எதிர்க்க எடுத்துக்கொள்ளும் ஆயுதம். இது உலகம் முழுக்க பொருந்தும்.

  இந்து வெறியர்கள் (சாதாரண மக்கள் அல்ல)தம் மக்கள் பலர் கிரிஸ்துவம், இஸ்லாம் பக்கம் மதம் மாறுவதை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடிவதில்லை. இந்தியாவில் உள்ள 90 சதவித மக்கள் முற்காலத்திலேயே மதம் மாறியவர்கள். என் தந்தையாரும் கூட. அவர்கள் அனைவரும் இந்தியர்கள். இவர்கள் நினைப்பது போல் அரேபியர்கள் அல்ல.

 7. இந்து மதவெறிக் கும்பல் அதிகாரத்தில் நீடிப்பதற்கே இசுலாமியத் தீவிரவாதத்தின் ‘தயவு’ அதற்குத் தேவைப்படுகிறது. “இந்துத்துவ கொள்கைகளில் தீவிரமாக இல்லாத காரணத்தினால்தான் நாம் அடுக்கடுக்காகத் தோல்விகளைச் சந்திக்கிறோம்” என்று சங்க பரிவாரத்தினர் கூறுவதற்கு பொருள், “முசுலீம் மக்களுக்கு ஆத்திரமூட்டுமளவுக்கு நமது செயல்பாடுகள் அமையவில்லை” என்பதுதான்.

  குஜராத் படுகொலை – இசுலாமியத் தீவிரவாதத்திற்கு இந்துமத வெறியர்கள் விடுக்கும் அழைப்பு. இந்த அழைப்பை இசுலாமியத் தீவிரவாதிகள் நிராகரித்து விட்டால்… வேறு வழியில்லை. இசுலாமியத் தீவிரவாதியின் பாத்திரத்தையும் இந்து வெறியர்களே ஏற்று நடிப்பார்கள்.

  இந்துமதவெறியர்களின் தோலை உரைக்கும் வார்த்தைகள் …… இதுவே இந்திய நாட்டின் …இந்துத்துவாவ அரசியல் கட்சிகளின் நிலை

 8. ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்புகளின் ஆத்திரமூட்டும் காரியங்கள் அனைத்தும், ஹிந்துக்கள் உட்பட அனைவரும் அறிந்ததே, ஆத்திரமூட்டலுக்கு இறையாகாமல் இஸ்லாமிய மக்கள் மதசார்பற்ற அமைப்புகளோடு இனைந்து இவ்விதமான தாக்குதல்களில் இருந்து அப்பாவி மக்களை பாதுகாக்க வேண்டும்

 9. “இசுலாமிய தீவிரவாதத்திற்கு பாரதீய ஜனதாவின் அழைப்பு!” அப்படீன்னு சொல்லி வினவு அழைக்குது வாரீர்… 😀

 10. இந்துத்வா சதிகாரர்களை தோலுரித்து காட்டிவிட்டீர்கள்! நன்றி !!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க