Friday, August 19, 2022
முகப்பு மறுகாலனியாக்கம் தொழிலாளர்கள் கைகளிலே எழுதி…… காளையார்கோவிலில் ஒரு வர்க்க வீரம்!

கைகளிலே எழுதி…… காளையார்கோவிலில் ஒரு வர்க்க வீரம்!

-

டந்த பிப்ரவரி 22 ஆம் தேதியன்று நடந்த அனைத்துத் தொழிற்சங்கங்கள் நடத்திய பொதுவேலை நிறுத்தத்தில் சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் இயங்கும் மத்திய அரசின் இந்திய தேசியப் பஞ்சாலைக் கழகத்தைச் சேர்ந்த காளீஸ்வரா மில் ‘பி’ யூனிட் ஆலையின் நிரந்தர மற்றும் தற்காலிகப் பணி செய்யும் தொழிலாளர்களும் கலந்து கொண்டு வேலை நிறுத்தம் செய்தனர். வேலை நிறுத்தத்திற்காக ஆலையின் வாயிலில் திரளாகக் கூடி நின்று கொண்டிருந்தனர்.

ஆலையின் பொது மேலாளர் (ஜி.எம்) ஒரு அல்லக்கை. ஏதோ தான் திறமையான அதிகாரி என்பதாக மனதில் நினைத்துக் கொண்டு ஆலையின் உற்பத்தியைக் கூட்டிக் காட்டவேண்டும் என்பதற்காக தொழிலாளர்களை கசக்குவதில் தனியார் முதலாளியையும் தாண்டி யோசிப்பார். தொழிலாளிகளின் வேலையிலுள்ள சிரமங்களைக் காது கொடுத்தும் கேட்கத் தயாராக இல்லாதவர். இதுபோன்ற வேலை நிறுத்தங்களில் தொழிலாளர்களை வேலை செய்ய வைத்து விட்டால் அதுதானே இவர்களுக்குப் பொன்வசந்தம். ஆனால், இம்முறை அனைத்து ஓட்டுக்கட்சிகளும் (பாழாய்ப்போன காங்கிரசின் சங்கம் உட்பட) வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் சி.எல்.ஆர் என்று சொல்லப்படுகிற தற்காலிகப் பணியாளர்களையாவது வைத்து ஆலையை இயக்கலாம் என எண்ணியிருப்பார் போலும். ஆனால், சி.எல்.ஆராகப் பணி செய்கின்ற தொழிலாளர்களில் சில தொழிலாளிகள் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் இணைப்புச் சங்கமான கோவை மண்டலப் பஞ்சாலை தொழிலாளர் சங்கத்தில் இருக்கிறார்கள். பொதுவாகவே, சி.எல்.ஆர் தொழிலாளர்களை எந்த ஓட்டுக்கட்சிச் சங்கமும் தங்களது சங்கங்களில் சேர்த்துக்கொள்வது இல்லை. ஆனால், கோவை மண்டலம் தொழிலாளர்களிடயே அப்படி ஒரு பிரிவினையை வைத்திருக்கவில்லை. தற்காலிகமோ, அல்லது நிரந்தரமோ, அனைவரும் தொழிலாளர்களே! சங்கத்தில் உறுப்பினாராகத் தகுதி உள்ளவர்களே! அப்படி கோவை மண்டலச் சங்கத்தின் ஆதரவாளர்களாக இருக்கும் சில தொழிலாளர்களும் ஆலைவாயிலில் நின்று கொண்டிருக்கிறார்கள்.

இப்போதுதான் கதாநாயகன் வருகிறார். அவர் வேறு யாருமல்ல. காளையார்கோவில் போலீஸ் இன்ஸ் சதீஷ்தான். அதாவது இன்ஸ்பெக்டர். எஸ்.பி., டிஎஸ்பி என்று சொல்லும்போது இன்ஸு., சப்பின்ஸு., எனச் சொல்லக்கூடாதா? கீழ் அதிகாரிகள் என்றால் மட்டமா என்ன? இன்ஸ் ஏற்கனவே அரசல் புரசலாக புஜதொமுவோடு உரசிக்கொண்டிருப்பவர். இருந்தாலும் அடக்கி வாசித்துக்கொண்டிருக்கிறார்.

இப்போது ஆலையின் முன்பாக வந்தவர் கூடியிருந்த தொழிலாளர்கள் மேல் வள்வள்ளென்று விழுகிறார். “ஏன் அங்கே இங்கேன்னு நாய் மாதிரித் திரிகிறீர்கள்” என்று குரைத்திருக்கிறார். உடனே தொழிலாளர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு கண்டிக்க, அவர் எஸ்கேப் ஆகி ஜீப்பில் போய் விடுகிறார். அப்போது அங்கு நின்ற காங்கிரஸ் தொழிற்சங்கமான ஐஎன்டியுசியின் மூத்த நிர்வாகியைத் தொழிலாளர்கள் கூப்பிட்டதற்கு அவர் வேகமாக இடத்தைக் காலி செய்து ரோட்டைத் தாண்டி ஓடி விடுகிறார். தன்மானத்தின் சின்னமாக விளங்கிய சின்னமருதுவின் ஊரிலா இப்படி? தொழிலாளர்கள் ஆதங்கத்தோடு கலைந்து செல்கின்றனர்.

காளையார் கோயில் போஸ்டர்மறுநாள் காலையில் ஆலையின் வாயிலிலும் நகரத்திலும் ஆங்காங்கே கைகளினால் எழுதப்பட்ட சில சுவரொட்டிகள் தென்பட்டன. அதைப் படித்துப் பார்த்த, நகரப் பொதுமக்களுக்கும் ஒரே ஆச்சர்யம் ஆலைத் தொழிலாளர்களுக்கு ஆச்சர்யமும் திருப்தியும்; அதோடு தாங்கள் அங்கம் வகிக்கின்ற; தங்களைப் பெரிய சங்கங்கள் என்று சொல்லிக் கொள்கின்ற எவருக்கும் இப்படி ஒரு தைரியமும் உணர்வும் வரவில்லையே என அதிருப்தியும் கொண்டனர்.

சுவரொட்டியைக் கையால் ஒட்டி எழுதியிருந்த அந்தத் தொழிலாளி மறுநாள் வேலைக்குப் போகிறார். ஆனால், ஆலை மேஸ்திரி “நீ வேலைக்கு வரவேண்டாம். போய் ஜி.எம்-மைப் பார்த்துவிட்டு, பிறகு வா”! என்று சொல்கிறார். “என்ன காரணம்” எனத் தொழிலாளி கேட்கிறார். “போஸ்டர் ஒட்டியதுதான்” என்றும் சொல்கிறார். ஆனால், நேற்றே ஜி.எம் வெளியூருக்குப் போய்விட்டார். அதனால், அன்றைய வேலையை இழந்தார் அந்தத் தொழிலாளி. மறுநாள் காலையில் ஜி.எம் வந்துவிட்டதை அறிந்து அவரைப் போய்ப் பார்க்கிறார். அவரைக் கண்டதுமே, “நீ தானா, தம்பி! நா வேறு யாரோன்னு நெனச்சேன். போலீசோட நமக்கு எதுக்கு தம்பி வம்பு!, இதுனால பல பின் விளைவுகள் வரலாம்ல!” என்று வழக்கமாக, இது போன்று வருகின்ற எல்லாக் காட்சிகளிலும் உலகம் முழுவதிலும் எல்லா அதிகாரிகளும் பேசுகின்ற, யாருமே எழுதிக் கொடுக்காத அதே வசனத்தை இவரும் சுதி சுத்தமாக, ஆனால், சத்தமில்லாமல் பேசுகிறார்.

அதற்கு, “சங்கம் சொன்ன வேலையைச் செய்கிறேன் சார். எது வந்தாலும் அதை சங்கம் எதிர்கொள்ளும்,” எனச் சொல்லிவிட்டு, வேலைக்கு வந்து விடுகிறார் அந்தத் தொழிலாளி. கொஞ்ச நேரத்திற்குப் பிறகு ஒரு மூத்த தொழிலாளி இவரிடம் வந்து “ஜி.எம் என்ன சொன்னான்?” எனக் கேட்டிருக்கிறார். இவரும் நடந்ததைச் சொல்லியிருக்கிறார்.

அந்த மூத்த தொழிலாளரின் மகன் போலீஸில் ஓட்டுனராகப் பணிசெய்கிறாராம்.

“‘நேற்று உங்க மில்லிலே என்ன போஸ்டர் ஒட்டியிருந்தீர்கள்’ என்று என்னிடம் என் மகன் கேட்டார். நானும் நடந்த விவரங்களைச் சொன்னேன். அதற்கு மகன் ‘அதுதான், நேத்து எதோ மில்லு சம்பந்தமா போஸ்டர் ஒட்டியிருந்தார்களாம். எஸ்.பிக்குத் தகவல் போயிருக்கு. உடனே இன்ஸ்பெக்டரை டிரான்ஸ்ஃபர் செஞ்சுட்டார். அவர் இப்ப வேற இடத்துக்குப் போறாரு’ என்று சொன்னதாக” மூத்த தொழிலாளி சொல்கிறார்.

இந்தச் செய்தி தொழிலாளர்களிடம் பரவுகிறது. அவர்களுக்கு “நம்மளோட பெரிய சங்கமெல்லாம் பயந்தாங்கோளியா இருக்கானுங்களேப்பா! கொஞ்சப்பேர் மட்டுமே இருக்கிற இந்தச் சங்கத்துக்காரங்க வீரமா கையினால போஸ்டர எழுதி இன்ஸையே டிரான்ஸ்பர் செஞ்சுட்டாங்களேப்பா!” என்று ஒரே மகிழ்ச்சி.

தொழிலாளத் தோழர்களே! நீங்களெல்லோரும் வாருங்கள். நமது வர்க்கத்தின் வீரம் எதையெதையெல்லாம் டிரான்ஸ்பர் செய்யும் என்பதை இன்ஸுக்கும் ஜி.எம்முக்கும் மட்டுமல்ல இந்த நாட்டிற்கே காட்டலாம்!

தகவல் : பு.ஜ செய்தியாளர், சிவகங்கை.

 1. இச்சம்பவம் படிப்பதற்கு ஒரு சிறுகதை போல இருக்கிறது. கதையின் இறுதியில் சிரிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது.

 2. தொழிலாளியின் வர்க்க வீரத்திற்கு முன் எந்த அதிகார வர்க்கத்தினால் நிற்கமுடியாது.தொழிலாளர்களுக்கு அவர்களின் உண்மை முகத்தை அறிமுகப்படுத்துகிற வேலையை செய்தாலே போதும்! இந்த சம்பவம் அதற்கு உதாரணம்.

 3. //ஆலை லாபத்தில் இயங்குகிறதா?// லாபம் என்றால் என்ன? எவ்வாறு அது உருவாகின்றது? யாருக்கு உண்மையில் அது சொந்தம்? வெங்கடேசன் அய்யா விளக்குவார்..

 4. >> லாபம் என்றால் என்ன? எவ்வாறு அது உருவாகின்றது?

  உங்க வீட்டு பக்கத்துல இட்லி சுட்டு விக்கற ஆயா யாராவது இருக்காங்களா? அவங்ககிட்ட “இன்னிக்கு லாபமா, நஷ்டமா” அப்பிடின்னு கேட்டீங்கன்னா எல்லாத்தையும் விளக்குவாங்க.

  >> யாருக்கு உண்மையில் அது சொந்தம்?

  இந்த ஆலை மத்திய அரசுக்கு சொந்தம். இதன் லாபமும், நஷ்டமும் அரசை (அதாவது மக்களை) சாரும்.

  இந்த ஆலையோட சமீபத்து Annual financial report சுட்டி இருந்தா கொடுங்க.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க