Tuesday, December 10, 2024
முகப்புகட்சிகள்அ.தி.மு.கசோனியா, மன்மோகன் கொடும்பாவி எரிப்பு! புமாஇமு போராட்டங்கள்!!

சோனியா, மன்மோகன் கொடும்பாவி எரிப்பு! புமாஇமு போராட்டங்கள்!!

-

 

போராட்டம் குறித்த செய்திப்பதிவு:

இலங்கையில் கடந்த 2009-ஆம் ஆண்டு சிங்கள இனவெறி அரசால் ஈழத் தமிழ் மக்களின் மீது தொடுக்கப்பட்ட இன அழிப்புப் போருக்கு எதிராக தமிழகம் அன்று குரல் கொடுத்தது. ஆனால், இந்திய அரசோ அந்த இனப் படுகொலை யுத்தத்தை  வழிகாட்டி இயக்கியது. இந்திய அரசின் இந்த அணுகுமுறையை எதிர்த்து தமிழக மாணவர்கள் அன்று போராட்டக் களத்தில் முன்னணியில் நின்றனர்.

இன்று ஈழ இன அழிப்பு யுத்தம் தொடர்பான ஆவணங்கள் நாளுக்கொன்றாய் வெளிவந்து கொண்டிருக்கின்றன. மீண்டும் தமிழகம் ஒரு மாணவர் எழுச்சியைக் காண தயாராகிறது என்பதை சமீப நாட்களாக நடந்து வரும் போராட்டங்கள் எடுத்துக் காட்டுவதாய் உள்ளது. இனப் படுகொலை தொடர்பாக ராஜபக்சே மீது ராஜபக்சேவையே விசாரணை நடத்தச் சொல்லும் LLRC எனும் அய்.நா சபையின் கபட நாடகத்துக்கு , இனப்படுகொலையை வழிநடத்திய மன்மோகன் அரசிடமே ஜெனீவாவில் தீர்மானம் கொண்டு வரக் கோருவது ஏமாற்று வேலையே.

உலக பயங்கரவாதி அமெரிக்காவையும், அதன் எடுபிடி நாடுகளையும் “சர்வதேச சமூகம் ” என்று கொண்டாடுவதும், அவர்களிடமே இனப்படுகொலைக்கு நீதி கேட்பதும் கேலிக்கூத்தாகும். பிரபாகரனின் மகன் மட்டுமல்ல இன்னும் ஏராளமான ஈழத் தமிழ் மக்களும் சிங்கள ராணுவத்தால் அநீதியான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். போர்க் குற்றவாளி ராஜபக்சேவைத் தண்டிக்க இந்திய அரசை ஒத்துழைக்கக் கோருவது “கொக்கு தலையில் வெண்ணெய்  வைக்கும் கதை”யாகவே முடியும்.

இன்று மாணவர்களே போராட்டக் களத்திற்கு வந்துள்ள நிலையில், பல்வேறு பெயர்ப்பலகை சவடால் இயக்கங்கள் களத்திலிறங்கிப் போராடாமல் மாணவர்களைச் சந்திக்கவும், புகைப்படங்கள் எடுத்து தங்களை மலிவான முறையில் பிரபலப்படுத்திக் கொள்ளவும் ஊர் ஊராக ஓடிக் கொண்டிருக்கிறார்கள். இவ்வமைப்புகளின் அணிகளும் இணையத்துக்குள் சவடால் அடிப்பதோடு தங்கள் ‘கடமையை’ முடித்துக் கொள்கிறார்கள். முக்கியமாக போராட்டத்தின் போக்கில் ஊடுருவி இந்த எழுச்சியை இந்தியாவிடமோ அமெரிக்காவிடமோ அடகு வைப்பதையே உள்நோக்கமாக கொண்டுள்ளனர்.

ஈழத்தின் துயரத்தை விலை பேசும் காங்கிரசு, பாரதீய ஜனதா, வலது-இடது போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட தேசிய கட்சிகள் முதல் டெசோ அமைப்பைத் தொடங்கி நாடகமாடும் கருணாநிதி, திடீர் ஈழத்தாயாக அவதாரமெடுத்திருக்கும் ஜெயலலிதா வரை அனைவரும் ஈழ விடுதலையின் எதிரிகளே! இனப்படுகொலை குற்றவாளி ராஜபக்சே கும்பலை தண்டிக்க , சிங்கள குடியேற்றம் – இராணுவ ஆக்கிரமிப்பு உள்ளிட்ட இன அழிப்பு நடவடிக்கைகளை முறியடிக்க , ஈழத்தமிழின மக்களின் சுய நிர்ணய உரிமையை நிலைநாட்ட குறுக்கு வழி தீர்வு எதுவும் இல்லை.

  • ஈழத்தமிழின படுகொலைக்கு நீதி கேட்டு ராஜபக்சேவின் கூட்டாளி  டெல்லிக்கும்  பங்காளி அய்.நாவுக்கும் காவடி தூக்குவதை நிராகரிப்போம் !
  • நூரம்பர்க் போர்க் குற்ற விசாரணையைப்  போன்றதொரு விசாரணையைத் தவிர, வேறு எதையும் ஏற்க மறுப்போம் !
  • தமிழகத்தின் வீதிகளில் மீண்டும் மக்கள் எழுச்சியை தோற்றுவிப்போம் !

என்கிற அடிப்படையில் போராட்டங்களை தமிழகம் தழுவிய அளவில் வீச்சாக நடத்தி வருகிறோம்.

திருச்சியில்..

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் திருச்சி மாவட்டத்தின் முக்கிய கண்ணியாக விளங்கியது திருச்சி பெரியார் ஈ.வெ.ரா கல்லூரி. 1983 ஈழப் படுகொலையின் போது மிகப் பெரிய மாணவர் எழுச்சியை கட்டியமைத்தது. திராவிட இயக்கங்கள் செல்வாக்கிழந்து போன பின் சமீப வருடங்களாக பு.ம.இ.மு இக்கல்லூரியில் செயல்பட்டு வருகிறது.

மைய முழக்கங்களை முன்வைத்து 14.03.2013 அன்று காலை 9 மணியளவில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி கல்லூரிக் கிளை செயலாளர் வேலு, பொருளாளர் அன்பு மற்றும் கிளை நிர்வாகிகள் இணைந்து மாணவர்களிடம் பிரச்சினையை விளக்கிப் பேசி அணிதிரட்டி உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து இந்த கோரிக்கையை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று கூறியதைக் கேட்டு மாணவிகள் உட்பட சுமார் 1000த்திற்கும் மேற்பட்டோர் தோழர்களுடன் இணைந்து நகரின் முக்கிய பகுதிகள் வழியாக ஊர்வலமாக வந்து மறியலில் ஈடுபட்டனர்.

ஊர்வலம் சென்ற வழி நெடுக பறையோசையுடன் முழக்கமிட்டு, மக்களிடம் துண்டுப் பிரசுர விநியோகம் செய்து பிரச்சாரம் செய்த படி சென்று  மன்னார்புரம் ரவுண்டானா அருகே அரை மணி நேரம் சாலை மறியல் செய்தனர். அங்கு கூடிய பொது மக்களிடம் பிரசுரம்  கொடுத்து ஈழத் தமிழர்களின் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமையை ஆதரித்தும் அய்.நா தீர்மானம் ஏமாற்று என அம்பலப்படுத்தியும்  முழக்கமிட்டனர். கூடியிருந்த மக்கள் மறியலை ஆதரித்தனர். தூரத்தில் இருந்தவர்களும் தங்களது வாகனத்தை நிறுத்திவிட்டு வந்து தோழர்களிடம் பிரசுரம் வாங்கிக் கொண்டனர். “சரியான போராட்டம் ; விடாமல் நடத்துங்கள்” என்று வாழ்த்துக் கூறினர்.

முந்தைய தினம் (13.03.2012) மன்மோகன், இராஜபக்சே கொடும்பாவி கொளுத்திய  சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் முடிந்து சென்ற பிறகு அக்கல்லூரியின் பு.மா.இ.மு கிளை செயலர் தோழர் சாருவாகன் உள்ளிட்ட 7 பேரை உளவுப் பிரிவு போலீசின் தூண்டுதலின் பேரில் போலீசு கைது செய்தது. விசயமறிந்து நூற்றுக் கணக்கான மாணவர்கள் தோழர்களை விடுதலை செய்யக் கோரி சாலை மறியல் செய்தும் போலீசு வாகனங்களை விரட்டியடித்தும் போர்க் குணமாகப் போராடி சில மணி நேரங்களில் தோழர்களை வழக்கின்றி விடுதலை செய்ய வைத்தனர்.இப் போராட்டத்தால் ஏற்கனவே எச்சரிக்கையடைந்து போலீசு பின்வாங்கியிருந்தது

எனவே, 15ம் தேதியன்று நடந்த போராட்டத்தில் TVS டோல்கேட்டிற்கு ஊர்வலமாக வந்து சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியல் செய்த ஈ.வெ.ரா கல்லூரி மாணவர்களுடன் சட்டக்கல்லூரி மாணவர்கள் 100 பேரும் இணைந்து கொண்டதால் போராட்டம் தீவிரமடைந்தது.

ஒரு மணி நேர மறியல் போராட்டத்தைத் தொடர்ந்து தலைமை அஞ்சல் நிலையத்தை நோக்கி ஊர்வலமாக சென்று முற்றுகையிட்டனர். அங்கிருந்த சிக்னலின் 4 வழிகளையும் மனித சங்கிலியாக கைகோர்த்து முற்றுகையிட்டதால் நகரமே ஸ்தம்பித்துப் போனது. அதன்பின்,“தமிழரின் உணர்வை மதிக்காத மத்தியஅரசு இங்கே செயல்படக் கூடாது” என அறிவித்து ஊர்வலம் சென்ற பகுதியில் இருந்த பாரத ஸ்டேட் வங்கியை முற்றுகையிட்டு கதவை மூடிதாழிட்டனர்.

மாணவர்களின் எழுச்சியான பேரணியால் அப்பகுதியில் உள்ள  மத்திய அரசின் அலுவலகங்கள் அடுத்தடுத்து இழுத்து மூடப்படுவதை தடுக்க முடியாமல் போலீசார் விரட்டப்பட்டனர். ஒரு சில காவல்துறை அதிகாரிகளோ அடுத்து எங்கே செல்கிறீர்கள்? என்று கெஞ்சியபடியே போராட்டத்தின் முன்னும் பின்னும் பெரும் போலீசு பட்டாளத்துடன் பின் தொடர்ந்து வந்தனர்.

“வாங்க, பேரணிதான் போகுதுல்ல, அங்கவந்து தெரிஞ்சுக்கோங்க ” என்று ரயில்வே சந்திப்பு நோக்கி சென்றனர். இதற்கிடையே போகும் பாதையை வைத்து இரயில் நிலையத்திற்குதான் செல்கின்றனர் என்று முடிவு செய்த காவல்துறை அங்கு தடுப்புக்கட்டைகள் கொண்டு பாதையை மறித்தனர். மாணவர்களோ அதை உடைத்தெறிந்தபடி முன்னேறி இரயில் நிலையத்தை சில வினாடிகளுக்குள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தங்களது அதிகாரம் செல்லாக் காசாவதைக் கண்டு ஆத்திரமடைந்து மாணவர்களைத் தாக்க முற்பட்ட காவல்துணை ஆணையரை கண நேரத்தில் மாணவர்கள் அப்புறப்படுத்தி விட்டு முன்னேறிச் சென்றனர். புறப்படத் தயாராக இருந்த பாலக்காடு எக்ஸ்பிரஸ் மற்றும் மயிலாடுதுறை பயணிகள் இரயில் மாணவர்களால் முடக்கி வைக்கப்பட்டது. இரயில்வே போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினரின் உருட்டல் மிரட்டலை கடுகளவும் பொருட்படுத்தாமல் இரயிலின் மீதேறி முழக்கமிட்டனர்.

பு.மா.இ.மு வின் இந்தப் போராட்டத்திற்கு களத்திற்கு நேரில் வந்து ஆதரவு தெரிவித்து பேசிய ம.க.இ.க –வின் மாவட்ட செயலர் தோழர் சீனிவாசன், ஈழப் படுகொலையில் ராஜபக்சே மட்டும் குற்றவாளி இல்லை. இந்திய அரசும் குற்றவாளிதான். இவர்கள் சர்வதேச சமூகம் என்று அழைக்கும் நாடுகளும் குற்றவாளிகள்தான். ஒரு குற்றவாளி மற்றொரு குற்றவாளியை தண்டிப்பான் எனக் கூறுவது ஏமாற்று என்று விளக்கிப் பேசினார்.

அடுத்துப் பேசிய ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்க சிறப்புத் தலைவர் தோழர் தர்மராசு, “ இந்த இரயில் நிலையத்திற்கு ஆயிரக்கணக்கான நபர்கள் தமது சொந்த வேலைக்காக வந்து செல்கின்றனர். ஆனால், முகம் தெரியாத நபர்கள் பாதிக்கப்பட்டதற்காக சமூகப் பொறுப்புடன் நீங்கள் வந்த பிறகு இரயில் நிலையம் அழகாகத் தெரிகிறது” என்றார். பறையோசையும் விண்ணதிரும் முழக்கங்களும் இரயில் நிலையத்தை உலுக்கின.

மாணவர்களை வலுக் கட்டாயமாக அங்கிருந்து அப்புறப்படுத்தி இரயில் நிலைய வாசல் வரை போலீசார் கொண்டு வந்தனர். மாணவர்களை கைது செய்து ஏற்றிச் செல்ல வந்திருந்த போலீசு வாகனங்கள் மாணவர்கள் விடுத்த எச்சரிக்கையின் காரணமாக திருப்பி அனுப்பப் பட்டன. இப்போராட்டத்தின் நியாயத்தை விளக்கி பிற கல்லூரி மாணவர்களையும் திரட்டி தொடர் போராட்டங்களை நடத்தும் அறிவிப்பை அங்கு கூடியிருந்த பத்திரிக்கையாளர்கள் முன்பு பகிரங்கமாக அறிவித்து விட்டு போராட்டத்தை தற்காலிகமாக முடித்துக் கொண்டனர்.

திருச்சி தலைமை தபால்நிலையம் முன்பாக....

மைய முழக்கத்தை வலியுறுத்தி முற்றுகை போராட்டம் நடந்தது. இதில் 50க்கும் மேற்ப்பட்ட ம.க.இ.க,பு.மா.இ.மு,பு.ஜ.தொ.மு,பெ.வி.மு தோழர்கள் கலந்து கொண்டனர் இதில் முன்னணியாளர்கள் 35 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும் மெயின்காட்கேட் மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் முன்பு மன்மோகன்,இராஜபக்சே உருவ பொம்மையை எரித்து காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிடசென்ற ம.க.இ.க தோழர்கள் 6பெண்கள் உட்பட 13பேரை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.

சென்னை அண்ணா சாலையில்....

15/03/2013 அன்று காலை பதினோரு மணியளவில் சென்னை அண்ணா சாலையில் அண்ணா சிலை அமைந்திருக்கும் பகுதியில் ம.க.இ.க, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு, பெவிமு ஆகிய புரட்சிகர அமைப்புகளின் சார்பாக நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் குழுமி, தலைமைத் தபால் நிலையம் நோக்கி ஊர்வலமாகச் சென்றனர். ஊர்வலத்தைத் துவங்கி வைத்த தோழர் ஜெயராமன், கண்டன ஆர்பாட்டத்தின் போது ஆற்றிய உரையில், இன அழிப்புக் குற்றவாளி ராஜபக்சேவைத் தண்டிக்க குறுக்குவழி ஏதும் இல்லையென்றும், தமிழகத்தின் வீதிகளில் மக்களின் எழுச்சியை மீண்டும் வெடிக்கச் செய்வோமென்றும் குறிப்பிட்டுப் பேசினார்.

மேலும், 2009 முள்ளிவாய்க்காலில் நடந்த இனப்படுகொலையின் போது, ஈழத்தமிழர்களின் பிணங்களைக் காட்டி ஓட்டுப் பொறுக்கியதைப் போலவே இன்றும் மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலை உத்தேசித்து ஜெனிவாவுக்கு காவடி தூக்கச் சொல்லும் இந்த ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகளை தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அமெரிக்காவையும், ஐ.நாவின் கபட நாடகங்களையும் இங்குள்ள தேசியளவிலான ஓட்டுக் கட்சிகளான காங்கிரசு, பா.ஜ.க, போலி கம்யூனிஸ்டுகள் என்று சகலரும் ஈழத்தமிழருக்கு எதிரானவர்களே  என்று பேசிய தோழர் ஜெயராமன், ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்காக தமிழகத்தின் வீதிகளில் 80களில் ஏற்பட்டதைப் போன்ற எழுச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்திப் பேசினார்.

சுமார் முக்கால் மணி நேரம் நடந்த இந்தப் போராட்டத்தால் பரபரப்பான அண்ணா சாலையே ஸ்தம்பித்துப் போனது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தோழர்கள், மன்மோகன் சிங் மற்றும் சோனியா காந்தியின் உருவ பொம்மைகளை  எரித்து முழக்கமிட்டனர். அதைத் தொடர்ந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட தோழர்களை போலீசு கைது செய்து தயாராக இருந்த வாகனத்தில்  ஏற்றியது.

சென்னை மத்திய ரயில் நிலையத்தில்....

சென்னை ரயில் நிலையத்தை முற்றுகையிட்ட புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியைச் சேர்ந்த தோழர்கள், மைய முழக்கங்களை எழுப்பியவாறே ரயில் மறியல் போராட்டம் நடத்தினர். ஈழத்தமிழர் நலன்களை டில்லியிலும் ஜெனிவாவிலும் அடகு வைக்கச் சொல்லும் ஓட்டுக் கட்சிகளை அம்பலப்படுத்தியும், போர் குற்றவாளி ராஜபக்சேவின் கூட்டாளியான இந்தியாவையும் அம்பலப்படுத்தியும் தோழர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.

புதுவையில்....

15.03.2013 அன்று இனவெறியன் ராஜபக்சேவுக்கும் ஈழப் படுகொலையில் அவனுக்குத் துணை நின்ற மன்மோகன், சோனியாகாந்தி ஆகியோரின் உருவ பொம்மைகளை எரித்து புதுச்சேரி பு.ஜ.தொ.மு சார்பில் ஆர்பாட்டம் நடந்தது. போலிசின் தடையை மீறி நடந்த இந்த ஆர்பாட்டத்தில் மத்திய அரசின் அலுவலகங்களையும், சட்டசபையையும் தோழர்கள் முற்றுகையிட்டு முழக்கமிட்டனர்.

போராட்ட்த்தைக் கண்டு பீதியுற்ற போலீசு தோழர்களை தடுக்க முயற்சித்ததில் தள்ளு முள்ளு ஏற்ப்பட்டது. அதைத் தொடர்ந்து சுமார் 50 தோழர்கள் கைது செய்யப்பட்டனர். பகுதியில் திரளாக கூடி ஆர்பாட்டத்தைக் காண வந்த மக்களோ “இப்படிப் பட்ட போராட்டங்கள் தான் சரியானது” என்று பாராட்டிச் சென்றனர்..

புதுவை பல்கலைகழகத்தில்..

14-03-2013 வியாழன் அன்று ஐ.நா மன்றம் இலங்கை இனப்படு கொலைக் குற்றவாளியான ராஜபட்சேவை தண்டிக்கவேண்டும் என்கிற கோரிக்கையுடன் புதுவைப்பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக இரண்டாம் வாயிலில் சுமார் நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவர்களின் சிறப்பு அழைப்பின் பேரில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் புதுவை மாநிலச் செயலாளர் தோழர்.கலை அவர்கள் உரையாற்றினார். தோழரின் உரையில் இந்தியா என்றைக்குமே ஈழத் தமிழ் மக்களுக்கு எதிரிதான் என்பதும் அதற்குக் காரணம் இந்தியத் தரகு முதலாளிகள் இலங்கையிலும், ஈழத்திலும் கோடிக்கணக்கில் முதலீடு செய்துள்ளனர் என்பதையும் விளக்கிப் பேசினார்.

இந்திய தரகு முதலாளிகளின் நலன்காக்கும் இந்திய அரசு ஈழத் தமிழ் மக்களுக்கு ஆதரவாகச் செயல்படும் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனமாகும் என்றும் விளக்கினார். இலங்கை இனப்படு கொலை தொடர்பாக அமெரிக்கா கொண்டு வரும் ஜெனீவா தீர்மானம் என்பது வெறும் கண்துடைப்பு என்றும், ஓட்டுப் பொறுக்கி அரசியல் வாதிகள் ஈழப்பிரச்சினையை தங்களது அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்துகிறார்கள் என்றும், ஈழமக்களின் சுயநிர்ணய உரிமையை வென்றெடுக்க நாம் மாற்றுப்பாதையில் பயணிக்கவேண்டியஅவசியத்தையும்உணர்த்திப்பேசினார்.

மேலும் தோழர் மருதையன் “ராஜபக்சேவை தண்டிப்பது சாத்தியமா?” எனும் தலைப்பில் அளித்த நேர்காணலின் ஆடியோ பதிவுகள் சி.டிக்களாக மாணவர்களிடம் விநியோகிப்பட்டு வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம்

14.03.2013 அன்று கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் அஞ்செட்டி பேருந்து நிலையத்திலிருந்து வி.வி.மு மற்றும் பு.ஜ.தொ.மு ஆகிய அமைப்பினர் ராஜபக்சேவின் உருவப்படத்தை செருப்பாலடித்துக் கொண்டே ஊர்வலமாக எடுத்து வந்து திரளாக மக்கள் கூடும் இடத்தில் வைத்து தூக்கிலேற்றினர். முழக்க அட்டைகளுடன் ஊர்வலமாக வந்த தோழர்கள் மைய முழக்கங்களை எழுப்பினர்.

நாற்றாம்பாளையம் கிளையை சேர்ந்த விவசாயிகள் விடுதலை முன்னணியின் அமைப்பாளர் தோழர் சரவணன் தலைமையில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. சிங்கள தமிழீழ மக்களைக் கொன்று குவித்த பாசிச இனவெறியன் ராஜபக்சேவை தூக்கிலேற்ற உழைக்கும் மக்கள் வீதியிலிறங்கிப் போராட வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டது.இராஜபக்சேவின் கூட்டாளி டெல்லிக்கும், பங்காளி ஐ.நா_ க்கும் காவடி தூக்கும் வகையில் போராட்டத்தை கொண்டுச் செல்ல எத்தணிக்கின்ற ஓட்டுக்கட்சிகளின் தேர்தல் நோக்கங்களை அம்பலப்படுத்தி தோழர்கள் வீச்சாக பிரச்சாரம் செய்தார். இந்த தெருமுனைப் பிரச்சாரம் மக்களிடையே நல்ல ஆதரவைப் பெற்றது. திரளான மக்கள் தங்களின் ஆதரவைத் தெரிவித்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மற்றும் விவசாயிகள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகளின் சார்பாக ஓசூர் முழுவதும் தெருமுனைப் பிரச்சாரம் ஆலைவாயில் பிரச்சாரம் பேருந்துப் பிரச்சாரம் என விரிவான பிரச்சாரம் மேற்கொண்டு அதன் இறுதியாக 15.03.2013 மாலை 5 மணியளவில் ஓசூர் ராம்நகரில்ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்டத் துணைத் தலைவர் தோழர் சின்னசாமி தலைமைத் தாங்கினார். அடுத்ததாக அச்சங்கத்தை சார்ந்த தோழர் ரவிச்சந்திரன் மற்றும் மாவட்டத் தலைவர் தோழர் பரசுராமன் கண்டன உரையாற்றினர்.

அப்போது நூரம்பர்க் விசாரணைகளை ஒத்த விசாரணையே தேவை என்பது வலியுறித்திப் பேசப்பட்டது. முசோலினியை தூக்கிலிட்டது போல் ராஜபக்சேவையும் தூக்கிலிட வேண்டும் என்பதையும் மன்மோகன் சோனியா கும்பலை போர்க் குற்றவாளியாக அறிவித்து தண்டனை வழங்க வீதியில் இறங்கிப் போராட வேண்டும் என்பதையும், அதற்கு 1980 களிலே நடந்த மக்கள் எழுச்சியை தமிழகத்தில் தோற்றுவிக்க வேண்டும் என்றும் பேசினர்.

இறுதியாக விவசாயிகள் விடுதலை முன்னணியைச் சார்ந்த தோழர் முருகேசன் நன்றியுரையாற்றினார்.  ஆர்ப்பாட்டத்தின் போது நூற்றுக்கணக்கான மக்கள் இறுதிவரை நின்று கவனித்து தொடர்ந்துப் போராட வேண்டும் என்று நம்பிக்கையை வெளிப்படுத்திச் சென்றனர்.

கோவை

மைய முழக்கத்தின்  அடிபடையில்   ம.க.இ.க – புஜதொமு – புரட்சிகர அமைப்புக்களின் சார்பில் 15.03.13 அன்று  மாலை  5 மணி அளவில்  கோவை  மாவட்ட ஆச்சியார் ஆலுவலகம்  அருகில்  உள்ள  தொலை  தொடர்பு   அலுவலகம் (BSNL) முன்பு ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.

இனப் படுகொலை குற்றவாளி ராஜபக்சே கும்பலை தண்டிக்க சிங்கள குடியேற்றம், இராணுவ ஆக்கிரமிப்பு உள்ளிட்ட இன அழிப்பு நடவடிக்கைகளை முறியடிக்க , ஈழத்தமிழின மக்களின் சுய நிர்ணய உரிமையை நிலை நாட்ட வேண்டுமெனில் தமிழகத்தின் வீதிகளில் 1980களின் மக்கள் எழுச்சியை மீண்டும் வெடிக்கச் செய்யவேண்டும் என்பதை வலியுறுத்தி மக்கள் கலை இலக்கியக் கழகம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, தோழர்கள்  நீதிமன்ற   வாலாகதில்  இருந்து  மாவட்ட ஆட்சியர்  அலுவலகம்  அருகில்  உள்ள  தொலை  தொடர்பு   அலுவலகம் (BSNL)  நிறுவனத்திற்கு  400 மீட்டர்   தூரம்   முழக்கமிட்டு  சாலையை  மறித்து சென்றனர்.  BSNL  அலுவலகத்தை   முற்றுகை  க்கு  73 பேர்  சென்றோம்.   தயார் நிலையல்  இருந்த  காவல்துறை தோழர்களை  கைது செய்தனர் . பின்னர்  இரவு 8.30 மணிக்கு  விடுதலை  செய்தனர்.

இதுபோல தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகள் தமிழகமெங்கும் நடத்திய போராட்டக் காட்சிகளிலிருந்து சில புகைப்படப் பதிவுகள் கீழே தரப்பட்டுள்ளன.

 

 

  1. மேலும்,பட்டுக்கோட்டை,வேதாரணியம் ஆகிய இடங்களில் போராட்டம் நடைபெற்றதாக அறிகிறேன்.வாழ்த்துக்கள்.

  2. தமிழக அரசு, இந்திய அரசு, அரசியல் கட்சிகள், அமெரிக்கா, உலக நாடுகள், ஐநா சபை என அனைத்தையும் நிராகரித்துவிட்டீர்கள். நன்று. பிறகு, ராஜபக்ஷேவை தண்டிப்பது, தனி ஈழம், எஞ்சியிருக்கும் ஈழத் தமிழர்களின் வாழ்வு என்ற மூன்று விஷயங்களில் நீங்கள் இங்கே தமிழகத்தில் போராட்டம் நடத்துவதால் எத்தகைய முன்னேற்றம் நிகழும், அது எப்படி நிகழும் என எதிர்பார்க்கிறீர்கள்.

  3. இதுவரை, மாணவர்கள் நடத்தும் போராட்டம் சரியான பாதையில் செல்கிற்து! அரசியல் அண்ணாச்சிகள் தலையிட்டு இதை கட்சி அரசியல் ஆக்காமலிருப்பதே தமிழனுக்கு பேருதவியாக இருக்கும்! பாராளுமன்றத்தில் நம்மை உண்மையாக ஆதரிக்கும் கட்சிகள் எவை, ஒப்புக்கு ஆதரிக்கும் கட்சிகள் எவை என்பதையும் மாணவ நண்பர்கள் கவனிக்க வேண்டும்! தீய சக்திகள் வன்முறையை தூண்டிவிட முயற்சிக்கும் ! எச்சரிக்கை!

  4. சோனியா, மன்மோகன் கொடும்பாவியை எரிப்பதால் என்ன லாபம்?. கடைசிக்கட்ட சண்டைக்கு திட்டம் போட்ட பிரனாப் முக்கர்ஜியின் கொடும்பாவியை அல்லவா எரிக்க வேண்டும்!. அந்த ஆள் இப்போது ஜனாதிபதி பதவியில் உள்ளதால் யாரும் கண்டுகொள்ளவில்லை போலும்.மன்மோகன் வெறும் டம்மி பீஸ் என்பது எல்லோருக்கும் தெரியும். பாவம். சோனியா காந்திக்கும் அவர் மகனுக்கும் கடைசிக்கட்ட சண்டையில் பெரும் பங்கு இருப்பதாக தோன்றவில்லை. இந்தியாவின் சார்பில் திட்டமிட்டு இந்த கடைசிக்கட்ட சண்டையை வழிநடத்தியது பிரணாப் முக்கர்ஜி தான். அந்த ஆளின் கொடும்பாவியை தான் கொளுத்த வேண்டும்!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க