Saturday, April 17, 2021
முகப்பு மறுகாலனியாக்கம் ஊழல் நோக்கியாவின் பலே திருட்டு!

நோக்கியாவின் பலே திருட்டு!

-

ரோப்பாவிலுள்ள பின்லாந்து நாட்டைச் சேர்ந்த கைபேசி தயாரிப்பு நிறுவனமான நோக்கியா குறித்துப் புதிதாக அறிமுகப்படுத்தத் தேவையில்லை. தமிழக அரசு, பலத்த போட்டிக்கிடையே, பல சலுகைகளை அளித்து, அந்நிறுவனத்தைத் தமிழகத்திற்கு அழைத்து வந்தது. நோக்கியாவின் வருகை சிறப்புப் பொருளாதார மண்டலக் கொள்கைக்குக் கிடைத்த வெற்றியாகவும், தமிழகத்தின் நவீன அடையாளமாகவும் காட்டப்பட்டது. இப்படி ஆளும் கும்பலால் ஒளிவட்டம் போட்டுக் காட்டப்பட்ட நோக்கியா, பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்துள்ள திருட்டுக் கூட்டம் என்ற உண்மை இப்பொழுது அம்பலமாகியிருக்கிறது.

சிறீபெரும்புதூரில் அமைந்துள்ள நோக்கியா ஆலையிலும், பெருங்குடியில் அமைந்துள்ள அதன் அலுவலகத்திலும், டெல்லியை அடுத்துள்ள குர்கானில் அமைந்துள்ள அதன் துணை நிறுவனங்களிலும் கடந்த ஜனவரி மாதத்தில் ஒரே சமயத்தில் வருமான வரிச் சோதனை நடத்திய அதிகாரிகள், நோக்கியா, பின்லாந்திலுள்ள அதன் தாய் நிறுவனத்திடமிருந்து மென்பொருளை இறக்குமதி செய்ததில் 3,000 கோடி ரூபாய் முதல் 18,000 கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு செய்திருப்பதைக் கண்டுபிடித்து உறுதி செய்துள்ளனர். பின்லாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மென்பொருட்களை, கச்சாப் பொருளாகக் காட்டி இந்த வரிஏய்ப்பை நோக்கியா நடத்தியிருக்கிறது.

நோக்கியாஅரசுக்குச் செலுத்த வேண்டிய பல ஆயிரம் கோடி ரூபாய் வரியைக் கட்ட நோக்கியா முன்வருமா? அல்லது நீதிமன்றத்தில் முறையிட்டு, சட்டத்தின் ஓட்டைகளுக்குள் புகுந்து, வோடாஃபோன் நிறுவனம் போல ஏய்த்த வரியைக் கட்டாமல் தப்பித்துக் கொள்ளுமா என்ற சுவாரசியமான காட்சிக்கு நாம் இன்னும் சில காலம் காத்திருக்கத்தான் வேண்டும்.

நோக்கியா நிறுவனம் தமிழகத்தின் சிறீபெரும்புதூர் ஆலையில் போட்டுள்ள மொத்த மூலதனம் 22.5 கோடி அமெரிக்க டாலர்கள். இது (இந்திய ரூபாயில்) இன்றைய மதிப்பின்படி 1,125 கோடி ரூபாய். நோக்கியா நிறுவனம் தனது ஆலையைத் தமிழகத்தில் அமைப்பதற்காக, “அந்நிறுவனம் இந்தியாவினுள் விற்கும் அதனின் கைபேசிகள் மீது விதிக்கப்படும் மதிப்புக் கூட்டு வரி உள்ளிட்ட பிற வரிகள் அனைத்தையும் அந்நிறுவனத்திற்கே மானியமாக அளிப்பதாக” ஒப்புக் கொண்டது, தமிழக அரசு. இதன் காரணமாக நோக்கியா சிறீபெரும்புதூர் ஆலையில் உற்பத்தியைத் தொடங்கியதிலிருந்து ஏழு ஆண்டுகளுக்கு 645.4 கோடி ரூபாயை வரிச் சலுகைகளாகவும் மானியமாகவும் தமிழக அரசிடமிருந்து பெறும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

நோக்கியா தொழிலாளர்கள்
நோக்கியா, ஐரோப்பிய நாடுகளில் உள்ள தனது ஆலைகளில் வேலை பார்க்கும் தொழிலாளிக்கு ஆண்டொன்றுக்குத் தரும் சராசரி ஊதியம் 29 இலட்சம் ரூபாய். இது, சென்னையில் உள்ள நோக்கியா ஆலையில் வேலை பார்க்கும் தொழிலாளிக்குத் தரப்படும் ஆண்டு ஊதியத்தைவிட 45 மடங்கு அதிகம். சட்டபூர்வமாக நடந்துவரும் இந்த உழைப்புச் சுரண்டல்தான் அந்நிறுவனத்திற்கு ஆறே ஆண்டுகளில் 25,000 கோடி ரூபாய் என்ற அளவிற்கு அதிரடி இலாபத்தை அள்ளித் தந்திருக்கிறது.

இதுவொருபுறமிருக்க, நோக்கியா நிறுவனம் சிறப்புப் பொருளாதார மண்டலமாகக் கருதப்படுவதால், 2005-06 மற்றும் 2006-07 ஆகிய இரு ஆண்டுகளில் மட்டும் அந்நிறுவனத்திற்கு மைய அரசு அளித்துள்ள சுங்க வரி மற்றும் உற்பத்தி வரி விலக்குச் சலுகை ஏறத்தாழ 681.38 கோடி ரூபாய். மேலும், 2006-07, 2007-08, 2008-09 ஆகிய மூன்று ஆண்டுகளில் அந்நிறுவனத்திற்கு அளிக்கப்பட்ட வருமான வரி உள்ளிட்ட நேரடி வரிச் சலுகைகள் மற்றும் ஏற்றுமதி வரிச் சலுகைகள் ஆகியவை காரணமாக அந்நிறுவனம் அடைந்துள்ள மறைமுக இலாபம் ஏறத்தாழ 8,000 கோடி ரூபாய். இவ்வளவு வரிச் சலுகைகளைப் பெற்றுக் கொண்டு வரி ஏய்ப்பில் ஈடுபட்டிருக்கும் அந்நிறுவனத்தை மூடி சீல் செய்திருக்க வேண்டும்; இந்த வரி ஏய்ப்பில் ஈடுபட்ட அந்நிறுவனத்தின் தலைவர், அதிகாரிகள் என்ற கொள்ளைக் கூட்டத்தின் மீது கிரிமினல் வழக்குகள் தொடரப்பட்டிருக்க வேண்டும்.

இவை எதுவுமே நடைபெறவில்லை. ஆனாலும், நோக்கியா உள்ளிட்ட கார்ப்பரேட் முதலாளிகள், தங்கள் மீது வருமான வரித் துறை அதிகாரிகள் வேட்டை நாயைப் போலப் பாய்வதாகவும், இது முதலீட்டுச் சூழலைப் பாதிக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள்.

நோக்கியா பல்லாயிரம் கோடி ரூபாய் வரிச்சலுகைகளையும் பெற்றுக் கொண்டு 18,000 கோடி ரூபாய் அளவிற்கு வரி ஏய்த்திருப்பது மட்டுமல்ல; ஆறே ஆண்டுகளில் அந்நிறுவனம் 25,000 கோடி ரூபாய் அளவிற்கு அதிரடி இலாபம் அடைந்திருப்பதும், அந்த இலாபம் முழுவதும் இந்தியாவிலிருந்து பின்லாந்திற்கு எடுத்துச் செல்லப்பட்டிருப்பதும் கவனத்திற்குரியதாகும். நோக்கியா, ஐரோப்பிய நாடுகளில் உள்ள தனது ஆலைகளில் வேலை பார்க்கும் தொழிலாளிக்கு ஆண்டொன்றுக்குத் தரும் சராசரி ஊதியம் 29 இலட்சம் ரூபாய். இது, சென்னையில் உள்ள நோக்கியா ஆலையில் வேலை பார்க்கும் தொழிலாளிக்குத் தரப்படும் ஆண்டு ஊதியத்தைவிட 45 மடங்கு அதிகம். சட்டபூர்வமாக நடந்துவரும் இந்த உழைப்புச் சுரண்டல்தான் அந்நிறுவனத்திற்கு ஆறே ஆண்டுகளில் 25,000 கோடி ரூபாய் என்ற அளவிற்கு அதிரடி இலாபத்தை அள்ளித் தந்திருக்கிறது.

இந்தியாவைக் கொள்ளையடித்துத்தான் இங்கிலாந்து வளமான நாடாக மாறியது என்பது காலனியக் காலக்கட்டத்தில் நிரூபணமான உண்மை. அன்றிருந்தது கிழக்கிந்திய கம்பெனி என்ற ஒரு நிறுவனம்தான். இன்றோ பல நூறு பன்னாட்டு நிறுவனங்கள், தனியார்மயம்-தாராளமயம் என்ற பெயரில் நாட்டைச் சட்டபூர்வமாகவும் சட்டவிரோதமாகவும் கொள்ளையடித்து வருகின்றன.

2005-06 நிதியாண்டில் மட்டும் 1,915 பன்னாட்டு நிறுவனங்களுள் 411 நிறுவனங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபட்ட உண்மையை நாடாளுமன்றத்திலேயே போட்டு உடைத்தார், நிதித்துறை துணை அமைச்சர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம். வோடாஃபோன் நிறுவனம் 11,000 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்த தகிடுதத்தம் கடந்த ஆண்டு அம்பலமாகியது. இவையன்றி, பெட்ரோலிய நிறுவனமான ஷெல், இணைய தள நிறுவமான கூகுள் ஆகியவையும் வரி ஏய்ப்பில் ஈடுபட்டிருப்பது சமீபத்தில் அம்பலமாகியிருக்கும் உண்மைகள். கடந்த நான்கு ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் தோராயமாக 95,000 கோடி ரூபாய் இந்தியாவிலிருந்து அந்நிய நாடுகளுக்குக் கடத்தப்பட்டிருப்பதாகக் கூறுகிறது, குளோபல் இன்டகிரிட்டி என்ற தன்னார்வ அமைப்பு.

பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவைக் கொள்ளையடிக்கத்தான் குதித்திருக்கிறார்கள் என்பதையும், உமிகூட கொண்டு வராமல் அவலைத் தின்னும் பகற்கொள்ளைக் கூட்டம்தான் பன்னாட்டு நிறுவனங்கள் என்பதையும் இந்த உண்மைகளிலிருந்து புரிந்துகொள்ளலாம். ஆனால் மன்மோகன் சிங் கும்பலோ, பன்னாட்டு நிறுவனங்கள் அனைத்தும் ஏதோ இந்தியாவை வளமாக மாற்றுவதற்கும் இங்குள்ள ஏழைபாழைகளுக்கு வேலை கொடுப்பதற்கும்தான் அமெரிக்க டாலர்களை மூட்டையாகக் கட்டிக்கொண்டு இங்கு வருவதாகவும், அதைத் தடுப்பது நாட்டின் முன்னேற்றத்தையே தடுப்பதாகும் எனத் திரும்பத்திரும்பப் பச்சையாகப் புளுகி வருகிறார்கள்.

தனியார்மயம்-தாராளமயம் திணித்துள்ள உழைப்புச் சுரண்டலும், அக்கொள்கைகளின் விளைவாக நடந்துவரும் மூலதனக் கடத்தலும்தான் இந்திய மக்கள் வறுமையில் வாடுவதற்கு முதன்மையான காரணமாகும். இவையிரண்டையும் தடுப்பதற்குப் பதிலாக, தொழிற்சங்கச் சட்டங்களை மேலும் தாராளமயமாக்க வேண்டும் எனச் சாமியாடி வருகிறார், மன்மோகன் சிங். இதன் பொருள் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு இன்னும் கூடுதலாக இலாபம் கிடைக்க வேண்டும் என்பதுதான். ப.சிதம்பரமோ, வரி ஏய்ப்பைத் தடுப்பதற்காகக் கொண்டுவரப்படவிருந்த வரி ஏய்ப்புத் தடுப்புச் சட்டம் என்ற பூதத்தை நாங்கள் புதைத்துவிட்டோம் என நிதியாதிக்கக் கும்பலிடம் உறுதியளிக்கிறார். இதன் பொருள் வரி ஏய்ப்பைச் சட்டபூர்வமாக்குவதுதான்.

– திப்பு

____________________________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – மார்ச் 2013
____________________________________________________________________________________________________

 1. எதையும் உற்பத்தி செய்யும் தொழில் நுட்பம் நம் இடத்தில இல்லை. அதற்கான முனைப்பும் இல்லை. ஒரே வழி இது போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் காலில் விழுவது தான்.

  அனைவருக்கும் வேலை வேண்டும் என்றால் , இன்றைய கடன் சார்ந்த பொருளாதாரத்தில் இது மட்டுமே சாத்தியம் .

  புரிந்து கொள்ள விரும்புபவர்கள் , கீழ்க்கண்ட வீடியோவை பார்க்கவும்

 2. நமக்கு ஏன் இந்த நிலை?

  இக்கேள்விக்கு பல விடைகள்…
  அதில் ஒன்று: கல்வித்தரம், ஆய்வு சார்ந்த சிந்தனை…

  பல ஆண்டுகளுக்கு முன்னால் போன்ற சீ.வீ. ராமன், ஜே.சி. போஸ், ஜீ.டீ.நாயுடு, தங்க திருப்பதி, ராமானுஜம் போன்ற home grown மேதைகளை உருவாக்க முடிந்த நம்மால் இன்று தரகு நிறுவன அடிமைகளேயே உருவாக்க முடிகிறது…

  பல ‘உயர் கல்வி’ நிறுவனங்கள் ‘தரமான’ அடிமைகளை உருவாக்குவதால் பெயர் பெறுகின்றன…

  மற்ற கல்வி நிறுவனங்களோ கல்வி வள்ளல்கள் கையில்…

 3. அரசு அதிகாரிகளுக்கு பெரிய அளவுக்கு வரி ஏய்ப்பு செய்ய முடியுமா? அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் சேர்ந்தே இத்தகைய குற்றஙளை செய்யமுடியும்! அதிகாரிகளுக்கும், ஆளும் கட்சிக்கும் அள்ளிக்கொடுப்பவர்களிடம் வரி கேத்க முடியுமா? முன்பு ப.சி, வரி செலுத்தாத கார்ப்பரேட் கம்பனிகள் மீது, எம் எ டி என்ற குறைந்த பட்ச வரி 12% போட்டார்! என்ன ஆயிற்று ? அடுத்து வந்த பி ஜெ பி அரசு, இந்த கார்பரேட ஏழைகள் செலுத்திய வரியை நீக்கியதுடன், முந்தைய ஆண்டு செலுத்திய வரியை திருப்பி கொடுத்தார்களே! அதே போல, நரசிம்ம ராவ் திருடர், ஏழைத்தொழிளாலிகளின் வைப்பு நிதியை கட்டாய குடும்ப ஓய்வு என்ற பெயரில் கொள்ளையடித்தார்! விருப்படாத தொழிலாளர்களுக்கு மட்டுமாவது திரும்ப தாருஙகள் என்று கேட்டதற்கு, அது சட்டப்படி முடியாது என்றாரே! இதனைக்கும் அன்றைய காம்ரேடு தொழிலாளர் மந்திரி குப்தா மெளனமாகத்தானே இருந்தார்!

 4. ஒரு திருத்தனம்: அரசு அதிகாரிகளுக்கு தெரியாமல் பெரிய அளவுக்கு வரி ஏய்ப்பு செய்ய முடியுமா? ‘தெரியாமல்’- தெரியாமல் விடுபட்டு போனது! மன்னிக்கவும்!

 5. சாம்சங், ஆப்பிள் இதோடெல்லாம் போட்டி போட முடியாம நோக்கியாவை இழுத்து மூடப் போறாங்கன்னு சமீபத்துல எங்கயோ படிச்சேன் (எங்கேன்னு நினைவுல இல்ல). நீங்க என்ன கிட்டத்தட்ட ஐஞ்சு பில்லியன் டாலர் லாபம்னு சொல்றீங்க? (தெரிஞ்சுக்கத்தான் கேக்கறேன். நோக்கியாவுக்கு வக்காலத்து வாங்கல).

  • நோகியாவின் சென்ற ஆண்டு லாபம்: 330.9 மில்லியன் யூரோக்கள்…
   அதாவது 330900000 யூரோக்கள்…
   23340560940 ரூபாய்கள்…2334கோடி ரூபாய்கள்…
   இதுநோக்கியா பின்லாந்து பங்கு சந்ததையில் கொடுத்திருக்கும் கணக்கு…

   வேறு பங்கு சந்தை பற்றி தெரியாது…
   http://www.reuters.com/finance/stocks/incomeStatement?perType=ANN&symbol=NRE1V.HE

   • நண்பரே…
    நீங்கள் எதை எங்கு படித்தீர்களோ தெரியாது…
    உண்மையைப்படியுங்கள்…4 பில்லியன் டாலர்கள் வருகிறது என் கணக்கில்…
    http://www.results.nokia.com/results/Nokia_results2012Q4e.pdf

    அவர்களை லேசு பட்டவர்களாக நினைக்க வேண்டாம்…

 6. பன்னாட்டு நிறுவனங்களுக்கு கோடி கோடியாய் வரிச்சலுகையும், நம் நாட்டு விவசாயிகளுக்கு கடன் தொல்லையும் தற்க்கொலைகலையும் தான் இந்நாட்டில் பன்னாட்டு ஆட்சிக் கொள்கை.இதை மாற்ற மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டத்தை தவிர நம் நாட்டை காப்பற்ற நமக்கு வேறு வழி ஏது?

 7. இந்தியாவில் 1991 க்கு பிறகு நடப்பது பன்னாட்டு நிதிமூலதனத்தின் ஆட்சி.தேர்தல்கள் நடந்து மக்கள் வாக்களித்தாலும் நடப்பது பன்னாட்டு நிதிமூலதனத்தின் ஆட்சி தான்.ஆட்சி என்பதற்கு ஆதிக்கம் என்பது தானே பொருள்.ஆள்வோர் வாழ்வர்,ஆளப்படுவோர் வதைபடுவர்.மக்களாகிய ஆலைத்தொழிலாளர்கள்,நிலமற்ற விவசாயிகள்,சிறு குறு விவசாயிகள்,சிறுவணிகர்கள்,அரசு மற்றும் தனியார்துறை ஊழியர்கள் ஆகியோர் ஆளப்படுவோராயிருப்பதிலிருந்து மீண்டு ஆள்வோர் ஆகவேண்டும்.மக்கள் வாழ்வதற்கு அது ஒன்று தான் வழி !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க