ஒன் பை டூ பரதேசிகளே, கோஸ்டா காபி தெரியுமா!

13
18

ந்தியா நிஜமாகவே வேகமாக வல்லரசாகிக் கொண்டிருக்கிறது என்பதைத் தான் காட்டுகிறது அந்த நிகழ்வு; பிப்ரவரி 19-ம் தேதி சாந்தோம் மலிவு விலை உணவகத்தை அம்மா திறந்து வைத்த சாதனையை கொண்டாடி முடிப்பதற்குள் அம்மாவின் ஆட்சியில இன்னொரு சாதனையாக அந்த நிகழ்வு சென்னையில் நடந்துள்ளது. நாம் சொல்வதெல்லாம் இங்கிலாந்தின் பிரபல காபி ஷாப் நிறுவனமான “கோஸ்டா” வின் காபி கடை சென்னையில் திறக்கப்பட்டுள்ளதை பற்றி தான்.

கோஸ்டா காபி
கோஸ்டா காபி

வெளிநாட்டில் கனவான்களின் நாவில் தவழ்ந்து, அவர்களின் மூளைகளை உற்சாகப்படுத்தி அவர்களை மெய்மறக்கச் செய்த கோஸ்டா காபியின் சுவை இனி இந்திய மக்களையும் குறிப்பாக சென்னை மக்களையும் மகிழ்விக்கும்.

சென்னையில் உள்ள ஹாரிங்டன் சாலையில், நீண்ட நாட்களாக “விரைவில் வருகிறோம்” என்று இளைஞர்களையும், காபி காதலர்களையும் (காபியை காதலிப்பவர்கள், காபி குடிப்பவரை காதலிப்பவர்கள் அல்ல) ஏங்க வைத்த அந்த பேனர் கிழிக்கப்பட்டு, 70 பேர் வரை அமர்ந்து காபியை பருகக் கூடிய விசாலமான இடத்தில் வந்தே விட்டது கோஸ்டா.

கோஸ்டாவின் சென்னைக் கடையை திறந்து வைத்த பேசிய அதன் முதன்மை மேலாளர் விரைவில் இந்தியா முழுவதும் நூற்றுக்கும் அதிகமான கடைகளை திறந்து பரந்து விரிய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

வெள்ளைக்காரன் இந்தியாவில் காபியை அறிமுகப்படுத்த முதன் முதலில் அதை இலவசமாக கொடுத்தான் என்ற கதை மிகப் பிரபலம். அதெல்லாம் கதை மட்டும் தான் போல. இங்கு கோஸ்டாவில் காபியும் டீயும், அத்துடன் கொறிக்கும் சிற்றுண்டிகளும் பல நூறுகள் விலை கொடுத்தால்தான் கிடைக்கும். இருந்தால் என்ன, காபி குடிக்க பலர்  லைனில் காத்திருக்கிறார்கள்.

மலிவு விலை உணவகம்
மலிவு விலை அம்மா உணவகம்

பக்கத்திலேயே மலிவு விலை உணவகங்களில் 1 ரூபாய் இட்லிக்கும், 5 ரூபாய் சாம்பார் சாதத்திற்கும் அடித்துகொண்டு நிற்கும் கூட்டமும் இதே இந்தியாவில்தான் இருக்கிறது. ஆனாலும் இந்தக் கூட்டத்தை வல்லரசு இந்தியாவின் திருஷ்டிக் கழிப்பு என்று ஒதுக்க வேண்டும். ஒரு ரூபாய் இட்லி சாப்பிட்டுத்தான் இந்தியா வாழ்கிறது என்று பார்க்காமல் கோஸ்டா காபிக்காக பல நூறு ரூபாய் செலவழிக்கும் இந்தியா என்று பார்த்தால் வல்லரசு பெருமை புரியும்.

காலையில் டீயையும் பன்னையும் தின்றுவிட்டு, அங்கே வைத்திருக்கும் வடையை வாங்க காசு இருக்கிறதா தங்கள் சட்டை பாக்கெட்டை தடவியபடி ஏக்கத்துடன் பார்த்துவிட்டு செல்பவர்கள் வாழும் நாட்டில். “காபி டே”, “மோச்சா”, ”எக்ஸ்பிரஸோ”, “கோஸ்டா” என விதவிதமாக விலையுர்ந்த காபி கடைகள் நூற்றுக் கணக்கில் இருக்கும்போது இந்தியாவின் பெருமையை யார் தவறாகப் பேச முடியும்?

கனவான்கள், மேட்டுக்குடிகள் அனைவரும் காபியை ஒரு பானமாக மட்டும் பார்க்கவில்லை. காபி ஒரு பொழுதுபோக்கு, காபி ஒரு மன நிம்மதி, ஒரு கப் காபி உங்கள் வாழ்க்கையையே மாற்றிவிடும். காபி குடிக்கும் போது படிக்க என்றே காபி டேபிள் புத்தகங்கள், காபி ஒரு புத்துணர்ச்சி, காதல், அழகு, இளமை, கலை என்று எண்ணி மாளாது. அதனால் தான் இளமையாக காட்டிக்கொள்ள டை அடித்துகொண்டு ஜீன்ஸ் பேன்ட் போட்டுக் கொண்டு, இடுப்பில் இருந்து நழுவும் பேன்டை கையில் பிடித்தபடி மோக்காவிற்க்கு காபி குடிக்க செல்கிறார்கள் பல இலக்கியவாதிகள். அந்தவகையில் இலக்கியவாதிகளையே வென்றுவிட்ட கொண்டாட்டத்தின் குறியீடுதான் இந்த காபி கிளப்புகள்.

கோஸ்டாவில் மெலிதான இசையை கேட்டபடி, ஏஸி குளிரில், தோலால் செய்யப்பட்ட சோபாவில் உட்கார்ந்து பின்புறம் வியர்வையால் ஈரமாகும் வரை  மணிக்கணக்காக அரட்டையடித்து, தன் அனுபவங்களை பேஸ்புக் பக்கங்கள் மூலம்  உடனுக்குடன் நண்பர்களுடன் பகிர்ந்து, அங்கேயே காதல் சொல்லி, ஜாலியை படரவிட்டு என்று அவர்களது வாழ்க்கையின் ஒரு முக்கிய நினைவிடமாய் கவிதைகள் குவியப் போகின்றன. ஆனாலும் கோஸ்டாவின் இந்த கொண்டாட்ட இலக்கிய அனுபவத்தை தரிசிப்பதற்கு நீங்கள் நிறைய பணம் செலவழிக்க வேண்டும் என்பதை தவறாக எடுத்துக் கொள்ளக்கூடாது. நாகரீகத்தின் எல்லைகளை தொடுவதற்கு பணம் ஒரு பொருட்டாய் பார்க்கக் கூடாது என்பது உங்களுக்குத் தெரியுமா?

ஏற்கனவே உலகம் முழுவதும் 2,500 கடைகளாக விரிந்து பலரின் நாவில் நீங்காத சுவையாக இடம் பிடித்திருக்கும் கோஸ்டா இந்திய ஞான மரபிற்காக கோமியம் கலந்த காபி எனும் புது சுவையுடன் வரலாம். அதையும் கொண்டாட இங்கே பக்தர்கள் இருக்கிறார்கள்.

பிளாட்பாரத்து கிடையில் ஒன் பை டூ தேநீர் குடிக்கும் பரதேசிகளின் நாட்டில்தான் கோஸ்டா ஒரு புதிய வரலாற்றைப் படைக்கப் போகிறது. ஜெய் கோஸ்டா ஹிந்த்! பாரத் கோஸ்டா மாதாகி ஜெய்!

மேலும் படிக்க
Costa says Hola to Chennai

சந்தா