privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஐரோப்பாஉங்கள் பணம் சைப்ரஸ் வங்கியிலிருந்தால் கிடைக்காது !

உங்கள் பணம் சைப்ரஸ் வங்கியிலிருந்தால் கிடைக்காது !

-

ன்று சைப்ரஸ் நாட்டிலிருக்கும் வங்கிகள் திறக்கப்படவிருக்கின்றன. இதில் என்ன செய்தி என்று நினைக்கிறீர்களா? அந்த நாட்டின் வங்கிகள் அனைத்தும் சுமார் 2 வாரங்களுக்கு மூடப்பட்டிருந்த பிறகு இன்று திறக்கவிருக்கின்றன. கடந்த 2 வாரங்களாக யாரும் தமது வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை எடுக்கவோ, வேறு யாருக்கும் அனுப்பவோ முடியாமல் பணிகள் முடக்கப்பட்டிருந்தன. அது மட்டுமில்லை, ஏ.டி.எம்.களில் ஒரு நாளைக்கு அதிக பட்சம் 100 யூரோ (சுமார் ரூ 6,500) மட்டும்தான் எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடும் இருந்தது.

இன்று வங்கிகள் திறக்கப்படும் என்றால் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் எல்லோருக்கும் முழுப் பணமும் கிடைத்து விடப் போவதில்லை.

லய்க்கி வங்கிமுதலாவதாக லய்க்கி என்ற வங்கி ஒரேயடியாக இழுத்து மூடப்படவுள்ளது. அந்த வங்கியில் 1 லட்சம் யூரோக்களுக்கு அதிகமான பேலன்ஸ் பணம் வைத்திருப்பவர்களுக்கு (மொத்தம் சுமார் 4 பில்லியன் யூரோ) பட்டை நாமம்தான் மிஞ்சும். அதை விடக் குறைவான மதிப்புடைய கணக்குகள் மட்டும் சைப்ரஸ் வங்கிக்கு மாற்றப்படும்.

இரண்டாவதாக, சைப்ரஸ் வங்கியில் 1 லட்சம் யூரோவுக்கு அதிகமான மதிப்புடைய நீண்டகால வைப்புத் தொகை வைத்திருப்பவர்களின் பணத்தில் (மொத்தம் 14 பில்லியன் யூரோ) 40 சதவீதம் வெட்டப்பட்டு வங்கியில் பங்குகளாக மாற்றப்படும். வங்கி ஒரு வேளை தப்பிப் பிழைத்து லாபம் ஈட்ட ஆரம்பித்தால் அதிலிருந்து ஏதாவது கிடைக்கலாம்.

ஆனால் 2012-ன் மூன்றாவது காலாண்டு நிலவரப்படி சைப்ரஸ் வங்கியின் மொத்த கடன்களில் 22 சதவீதம் வாராக்கடன்களாக வரையறுக்கப்பட்டிருந்தன. சைப்ரஸ் பொருளாதாரம் இந்த ஆண்டு 5-10 சதவீதம் சுருங்கவிருப்பதாகவும் அடுத்த 3 ஆண்டுகளில் 20 சதவீதம் சுருங்கவிருப்பதாகவும் பொருளாதார நிபுணர்கள் மதிப்பிடும் நிலையில் வங்கி சேமிப்பாளர்கள் இன்னும் அதிக இழப்புகளை ஏற்றுக் கொள்ள நேரிடும். “சைப்ரஸ் வங்கியின் கடன்களை முறையாக மதிப்பிட்டால் அந்த வங்கி இன்னும் 12 மாதங்களில் திவாலாகி விடும்” என்கிறார் வாஷிங்டனிலுள்ள அரசு கடன்களுக்கான நிபுணர் ஆடம் லெரிக்.

மூன்றாவதாக, சைப்ரஸ் வங்கியிலுள்ள மொத்தம் 14 பில்லியன் யூரோ நீண்ட கால வைப்பு நிதிகளில் 30 சதவீதத்துக்கும் மேல் வெளிநாட்டவர்களான ரஷ்யர்கள், கிரேக்கர்களுடையவை. அவற்றை அவர்கள் வெளியில் எடுத்துக் கொண்டு போய் விடாமல் இதைத் தடுப்பதற்கு நிதி பரிமாற்றங்களின் மீது கட்டுப்பாடுகளை விதிக்க சைப்ரஸ் அரசு முடிவு செய்துள்ளது.

சுமார் 11 லட்சம் மக்கள் தொகை கொண்ட ஆண்டுக்கு சுமார் 24 பில்லியன் யூரோ மொத்த தேசிய வருமானத்தைக் கொண்ட குட்டி நாடான சைப்ரஸின் கடன் சுமை 16 பில்லியன் யூரோ. நாட்டின் கடன்களை ஈடு கட்ட ஐ.எம்.எப், ஐரோப்பிய மத்திய வங்கி, ஐரோப்பிய கமிஷன் ஆகிய மூவர் 10 பில்லியன் யூரோ கடன் வழங்க முன் வந்துள்ளனர். மீதி 6 பில்லியன் யூரோ பணத்தை வங்கி சேமிப்பாளர்களிடமிருந்தும், பொதுத்துறை செலவுகளை குறைப்பதன் மூலமும், மக்கள் நலச் சேவைகளை வெட்டுவதன் மூலமும் சைப்ரஸ் சம்பாதிக்க வேண்டும்.

சைப்ரஸ் 2004-ம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தினுள் அனுமதிக்கப்பட்டது, 2008-ம் ஆண்டு முதல் நாட்டின் நாணயமாக யூரோ ஏற்றுக் கொள்ளப்பட்டது. அப்போது சைப்ரஸின் வங்கிக் கடன்கள் மொத்த தேசிய வருமானத்தை விட 4.5 மடங்காக (80 பில்லியன் யூரோ) இருந்தன. 2012-ம் ஆண்டு  நெருக்கடியில் சிக்கிய கிரீஸ் நாட்டு நிதி நிறுவனங்களை மறுசீரமைக்கும் போது சைப்ரஸ் வங்கிகள் 4.5 பில்லியன் யூரோ இழப்புகளை ஏற்றுக் கொள்ள வேண்டி வந்தது. அன்று கிரீஸை காப்பாற்றுவதற்காக சைப்ரஸ் பலி கொடுக்கப்பட்டது, இன்று சைப்ரஸை காப்பாற்றுவதற்கு எந்த நாடு பலியாகும் என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

சைப்ரஸ் போராட்டம்
சைப்ரஸ் தலைநகர் நிக்கோசியாவில் நாடாளுமன்றத்துக்கு வெளியில் போராட்டம்

சைப்ரஸில் இப்போது 14 சதவீதமாக உள்ள வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை இன்னும் சில மாதங்களில் 25 சதவீதமாக உயர்ந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சைப்ரஸின் நிதித் துறையை மீட்கும் திட்டங்களில் ஒன்றாக அனைத்து வங்கி கணக்குகள் மீதும் 6.75 சதவீதம் வரி விதிப்பது என்ற திட்டம் முன் வைக்கப்பட்டது. அந்த திட்டம் கைவிடப்பட்டு விட்டாலும் வங்கிக் கணக்கில் இருக்கும் பணம் முழுமையாக கிடைப்பது உத்தரவாதமில்லை என்ற நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

‘சைப்ரஸில் செய்யப்படும் நிதித் துறை மீட்பு நடவடிக்கை எதிர்காலத்தில் மற்ற யூரோ நாடுகளுக்கு நெருக்கடி மீட்பு முயற்சிகளுக்கு முன் மாதிரியாக இருக்கும்’ என்று யூரோகுரூப் தலைவர் ஜெரோன் டிசல்புளூம் கூறியிருப்பது ஐரோப்பிய நாடுகள் எங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. “சைப்ரஸிலிருந்து ரஷ்ய வைப்புத் தொகைகளை பறிமுதல் செய்கிறார்கள் என்றால் நாளைக்கு லக்சம்பர்கில் அமெரிக்க வைப்புத் தொகைகளை பறிமுதல் செய்ய மாட்டார்கள் என்று என்ன நிச்சயம்?” என்கிறது ஸ்ட்ராட்போர் என்ற பன்னாட்டு நிறுவனம்.

2008-ம் ஆண்டு லேமன் பிரதர்ஸ் திவால் ஆன போது உலகெங்கிலுமான நிதித் துறையில் பரவிய அதிர்வலைகளை போல சைப்ரஸின் வங்கித் துறை மீது சுமத்தப்பட்டிருக்கும் வெட்டுகள் ஐரோப்பிய, அமெரிக்க நிதி நிறுவனங்களை ஆட்டம் காண வைத்திருக்கின்றன.

மன்மோகன் சிங், ப சிதம்பரம் தலைமையிலான இந்திய ஆளும் வர்க்கங்களும் இத்தகைய மேற்கத்திய நிதி மூலதனத்தை அடிப்படையாகக் கொண்டுதான் நாட்டின் பொருளாதாரத்தை வளரச் செய்து வறுமையை ஒழிக்க திட்டம் தீட்டுகிறார்கள். கிரீஸில் நேற்று நடந்தது, சைப்ரஸில் இன்று நடப்பது, மற்ற ஐரோப்பிய நாடுகளில் நாளை நடக்கவிருப்பது, இந்தியாவில் என்று நடக்கும் என்பதுதான் கேள்வி.

சீட்டுக் கட்டு மாளிகையாக உருவாக்கப்பட்டிருக்கும் நிதி மூலதன ஏகாதிபத்திய கட்டமைப்பில் சரிந்திருக்கும் அடுத்த சீட்டுதான் சைப்ரஸ். சீட்டுக் கட்டு மாளிகை சரியும் போது பல கோடி மக்களின் வாழ்வாதாரங்களை அழித்து, போர்களையும் கலவரங்களையும் ஏற்படுத்தி, பேரழிவுகளிலும் லாபம் சம்பாதித்து 1% பணக்காரர்கள் கொழுப்பதுதான் முதலாளித்துவம் முன் வைத்திருக்கும் பாதை.

உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்கள் ஒன்று சேர்ந்து இந்த ஏகாதிபத்திய நிதிமூலதனக் கட்டமைப்பை வீழ்த்தி சோசலிச பொருளாதார கட்டமைப்பு உருவாக்குவதுதான் மனித குல முன்னேற்றத்துக்கான வழி.

மேலும் படிக்க
The lesson from cyprus. Eurpoe is politically bankrupt
Has Cyprus become the Lehman Brothers Eurpoe?