privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்காங்கிரஸ்பட்ஜெட் 2013 - 14 பன்னாட்டு நிதிச் சூதாடிகளுக்குச் சமர்ப்பணம்!

பட்ஜெட் 2013 – 14 பன்னாட்டு நிதிச் சூதாடிகளுக்குச் சமர்ப்பணம்!

-

மைய அரசின் 2013-14 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு அறிக்கையை காங்கிரசின் விசுவாசிகள் மட்டுமின்றி, இரண்டு சர்வதேச தர நிர்ணய நிறுவனங்களும் பாராட்டியிருப்பதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன.  ஆறேழு மாதங்களுக்கு முன்பு, இந்தியாவின் தரச் சான்றைக் குறைக்கப் போவதாக மிரட்டிவந்த சர்வதேச தர நிர்ணய நிறுவனங்கள், இன்று பட்ஜெட்டைப் பாராட்டுகின்றன என்றால், இந்த மனமாற்றம் ஆதாயமில்லாமலா ஏற்பட்டிருக்கும்?

பட்ஜெட் கார்ட்டூன்முடிவடையப் போகும் இந்த நிதியாண்டில் (2012-13) நிதிப் பற்றாக்குறை நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.7 சதவீதமாக அதிகரிக்கும் எனப் பொருளாதார வல்லுநர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், சிதம்பரம் அப்பற்றாக்குறையை 5.2 சதவீதமாகக் கட்டுப்படுத்திவிட்டதாக பட்ஜெட்டில் கணக்குக் காட்டியிருக்கிறார்.  இது மட்டுமின்றி, வரும் நிதியாண்டில் (2013-14) அப்பற்றாக்குறையை 4.8 சதவீதமாகக் குறைக்கும் அளவிற்கு பட்ஜெட்டைத் தயாரித்திருப்பதோடு, 2014-15 நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை, சர்வதேச நிதி நிறுவனங்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு – 3 சதவீதமாகக் குறைந்துவிடும் என்றும் உறுதியளித்திருக்கிறார்.  சர்வதேச தர நிர்ணய நிறுவனங்கள் சிதம்பரத்தின் பட்ஜெட்டைப் பாராட்டியிருப்பதன் பின்னணி இதுதான்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பெட்ரோலுக்குக் கொடுத்து வந்த மானியத்தை முற்றிலுமாக நிறுத்திய மைய அரசு, அதன் விலையை நிர்ணயம் செய்யும் உரிமையை அதிகார வர்க்கக் கும்பலிடம் ஒப்படைத்தது; இதனையடுத்து, ஆண்டொன்றுக்கு 6 சமையல் எரிவாயு உருளைகள் மட்டுமே மானிய விலையில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, பின்னர் அந்த எண்ணிக்கை ஒன்பதாக உயர்த்தப்பட்டது.  டீசலின் விலையை மாதாமாதம் 50 காசு உயர்த்தி விற்கும் முடிவினை அறிவித்து, டீசலுக்கு வழங்கி வந்த மானியத்திற்கும் மங்களம் பாடிவிட்டது, மைய அரசு.  இந்தச் சீர்திருத்தங்களின் மூலம் பட்ஜெட்டிற்கு முன்பாகவே பல ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு எரிபொருள் மானியத்தை வெட்டித் தள்ளினார், ப.சிதம்பரம்.

கடந்த ஆண்டு (2012-13) பட்ஜெட்டில் உணவு மானியத்திற்கு 80,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது.  பின்னர், அதில் 5,000 கோடி ரூபாய் வெட்டப்பட்டு, உணவு மானியம் 75,000 கோடி ரூபாயாகச் சுருக்கப்பட்டது.  மைய அரசு கொண்டு வந்துள்ள உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டுமென்றால், குறைந்தது 1,35,000 கோடி ரூபாய் மானியமாக ஒதுக்க வேண்டும் என்ற நிலையில், ப.சி., தனது பட்ஜெட்டில் உணவு மானியத்திற்கு ஒதுக்கியிருக்கும் தொகை 90,000 கோடி ரூபாய்தான். உணவு மானியத்திற்கு 45,000 கோடி ரூபாய் குறைவாக ஒதுக்கியிருப்பதைப் பற்றிப் பேச மறுக்கும் காங்கிரசு கும்பல், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு உணவு மானியத்திற்குச் சற்றுக் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டிருப்பதைக் காட்டித் தன்னை ஏழைப் பங்காளனாகக் காட்டிக் கொள்ள முயலுகிறது.

தங்கம்
கடந்த 2005-06ம் ஆண்டு தொடங்கி 2012-13 ஆம் ஆண்டு முடியவுள்ள எட்டு ஆண்டுகளில் தங்கம், வைரம், சுங்கவரிச் சலுகைகள் 3,14,456 கோடி ரூபாயாகும். இதுவும் உள்ளிட்டு கடந்த எட்டு ஆண்டுகளில் மேட்டுக்குடிப் பணக்காரர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள மொத்த வரிச்சலுகை 31,11,169 கோடி ரூபாய். வரிச்சலுகைகள் என்ற பெயரில் சட்டபூர்வமாக நடந்து வரும் இப்பகற்கொள்ளைதான் பற்றாக்குறை என்ற புதைசேற்றுக்குள் இந்தியாவைத் தள்ளி விட்டுள்ளது.

இப்படி எரிபொருள், உணவு, உரம் ஆகியவற்றுக்கு வழங்கப்பட்ட மானியங்களை வெட்டியதன் மூலம் அல்லது குறைவாக ஒதுக்கியதன் மூலம் 26,571 கோடி ரூபாயும்;  கடந்த ஆண்டு பட்ஜெட்டில் கல்வி, சுகாதாரம், சாலை வசதி, பாசன வசதி உள்ளிட்ட சமூக நலத் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை வெட்டியதன் மூலம் ஏறத்தாழ 90,000 கோடி ரூபாயும் மக்களிடமிருந்து மறைமுகமாகப் பிடுங்கியிருக்கிறார், ப.சிதம்பரம்.  மேலும், பொதுத்துறை நிறுவனத்தின் பங்குகளையும், அலைக்கற்றை உள்ளிட்ட இயற்கை வளங்களையும் தனியாருக்குத் தாரை வார்ப்பதன் மூலம் 50,000 கோடி ரூபாய் திரட்டவும் திட்டமிட்டுள்ளார்.  நிதிப் பற்றாக்குறையைக் குறைக்க ப.சிதம்பரம் கையாண்டுள்ள இந்த வழிகளை ஜேப்படித் திருட்டுத்தனத்தோடு மட்டுமே ஒப்பிட முடியும்.

தனியார்மயம்-தாராளமயம் நடைமுறைக்கு வந்த பிறகு, நிதிப் பற்றாக்குறையைக் குறைக்க வேண்டும் என்ற ஏகாதிபத்திய நிதி நிறுவனங்களின் கட்டளையை, இந்திய அரசு புனிதமான மதக் கட்டளையைப் போலக் கடைப்பிடித்து வருகிறது.  தற்போதைய காங்கிரசு கூட்டணி அரசு மட்டுமின்றி, இதற்கு முன்பிருந்த அரசுகளும் கூட இக்கட்டளைக்கு ஏற்றபடிதான் பட்ஜெட்டைத் தயாரித்து வந்தன.  பற்றாக்குறையைக் குறைப்பதற்கு மக்களுக்கு அளிக்கும் மானியங்களையும், சமூக நலத் திட்டங்களுக்குச் செலவு செவதையும் படிப்படியாக வெட்டுவது என்ற வழிமுறையைத்தான் இதற்கு முன்பிருந்த அரசுகளும் கடைப்பிடித்தன.

ப.சிதம்பரமும் இதேவழியில்தான் இந்த ஆண்டு பட்ஜெட்டைத் தயாரித்து, பற்றாக்குறையைக் குறைத்துக் காட்டியிருக்கிறார்.  பழைய கள்ளு புதிய மொந்தை என்றபடிதான் பட்ஜெட் தயாரிக்கப்பட்டிருக்கிறது என்றபோதும், அடுத்த ஆண்டு தேர்தல் வரவுள்ள சூழ்நிலையில்கூட, விலைவாசி உயர்வு மக்களை வாட்டிவரும் வேளையிலும்கூட ப.சிதம்பரம் மானியங்களை வெட்டத் தயங்கவில்லை என்பதனால்தான் சர்வதேசத் தர நிர்ணய நிறுவனங்கள் சிதம்பரத்தின் பட்ஜெட்டைப் பாராட்டியுள்ளன.

கோடிக்கணக்கான மக்களுக்குக் கிடைக்க வேண்டிய மானிய உதவிகளை வெட்டியது குறித்து குற்ற உணர்வோ, வருத்தமோ கொள்ளாத ப.சிதம்பரம், கையளவேயான பணக்காரர்கள் (42,800 பேர்) மீது, அவர்கள் ஆண்டொன்றுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ஈட்டும் வருமானத்தின் மீது மட்டும் கொஞ்சம் கூடுதலாக, எறும்பு கடித்தாற் போல வரி விதிக்க நேர்ந்த துயரத்திற்காகப் பெரிதும் சஞ்சலப்படுகிறார். “நாட்டிலுள்ள ஏழை மக்களின் நலன் கருதி இந்தக் கூடுதல் சுமையை நீங்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும்” என மன்றாடும் ப.சிதம்பரம், இந்தக் கூடுதல் வரி விதிப்பை அடுத்த ஆண்டே ரத்து செய்துவிடுவதாக அவர்களுக்கு வாக்குறுதி அளிக்கிறார்.

“பல லட்ச ரூபாய் மதிப்பு கொண்ட சொகுசுக் கார்கள் இந்தியச் சந்தையில் ஒவ்வொரு ஆண்டும் 27,000-க்கும் அதிகமாக விற்கப்படும் வேளையில்;  இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 5.5 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டுவோரின் எண்ணிக்கை 1,25,000 ஆக இருக்கும் என சர்வதேசப் பொருளாதாரப் பத்திரிகைகள் குறிப்பிட்டு வரும் நிலையில், வெறும் 42,800 பேர்தான் ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டுவதாக பட்ஜெட்டில் காட்டப்பட்டுள்ள கணக்கே மோசடியானது” எனக் கேலி செய்கிறார், சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தைச் சேர்ந்த எஸ்.குருமூர்த்தி.

இந்த 42,800 பேர் மீது 3 சதவீத அளவிற்குக் கூடுதல் வருமான வரி விதிக்கப்பட்டிருப்பதை மட்டும் பெரிதுபடுத்தியிருக்கும் ப.சிதம்பரம், கார்ப்பரேட் நிறுவனங்கள் மீது விதிக்கப்படும் வருமான வரியில் மட்டும் 1,90,000 கோடி ரூபாய் அளவிற்கு இந்த பட்ஜெட்டில் வரி விலக்குகள் அளித்திருப்பதை வெளிப்படையாக அறிவிக்காமல் மூடிமறைத்திருக்கிறார்.

2012-13 ஆம் ஆண்டில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் மொத்த வரிச் சலுகைகள் 5,28,163 கோடி ரூபாய்.  அதே ஆண்டில் ஏற்பட்டுள்ள நிதிப் பற்றாக்குறை 5,20,925 கோடி ரூபாய்.  பட்ஜெட்டில் துண்டு விழுவதற்கான காரணத்தை இந்தப் புள்ளிவிவரமே தெளிவுபடுத்திவிடுகிறது.

நியாய விலைக்கடை

2005-06 ஆம் ஆண்டு முதல் 2012-13 ஆம் ஆண்டு முடியவுள்ள காலக்கட்டத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட 31,11,169 இலட்சம் கோடி ரூபாய் பெறுமான வரிச்சலுகைகள் இந்தியாவை நிதிப் பற்றாக்குறை என்ற புதைசேற்றுக்குள் மட்டும் சிக்க வைக்கவில்லை.  கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சாதகமான தனியார்மயம் – தாராளமயம் என்ற இப்பொருளாதாரக் கொள்கை தேக்கவீக்கம் என்ற கட்டுமான நெருக்கடிக்குள்ளும் இந்தியாவைத் தள்ளிவிட்டுள்ளது.  குறைந்த கூலி, சம்பள வெட்டு, வேலையிழப்பு, விலைவாசி உயர்வு, மானிய வெட்டு, விவசாய நசிவு என மக்கள் சந்தித்துவரும் பிரச்சினைகள் அனைத்தும் இந்நெருக்கடியின் விளைவுகளாகும்.

உலகமயம் இந்தியாவைப் பொருளாதார வல்லரசாக மாற்றிவிடும் என ஆளும் கும்பல் கூறி வந்த சரடுகளையெல்லாம் இந்தத் தேக்கவீக்கம் வெளுத்துப் போகச் செய்து விட்டதை இன்று யாராலும் மறைக்க முடியவில்லை.   “பொருளாதாரத் தேக்கம், விலைவாசி உயர்வு, நடப்புக் கணக்குப் பற்றாக்குறை ஆகியவைதான் நாம் தற்பொழுது எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள்” எனத் தனது பட்ஜெட் உரையில் குறிப்பிட்டுள்ள ப.சிதம்பரம், இதிலிருந்து நம்மைக் காப்பாற்ற அந்நிய மூலதனத்திடம் சரணடைவதைத் தவிர வேறு நாதி நமக்கில்லை என்று பிரகடனம் செய்வதோடு, அந்நிய மூலதனத்திற்கு காட்டப்படும் சலுகைகளை யாரும் எதிர்க்கக் கூடாது என்றும் அறிவுரை சொல்கிறார்.

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த ரேஷன் மூலம் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்படுவதைப் பலப்படுத்தக் கூடாது; மாறாக, சில்லறை வர்த்தகத்தில் பன்னாட்டு நிறுவனங்களை அனுமதிக்க வேண்டும்.  நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் வரிச் சலுகைகள் மீதும் கைவைக்கக் கூடாது; அவர்கள் வரி ஏப்பு செவதையும் கண்டுகொள்ளக் கூடாது; மாறாக, மக்களுக்கு வழங்கப்படும் மானியத்தை வெட்ட வேண்டும்.  இந்த மானிய வெட்டைக் கவர்ச்சிகரமான முறையில் நடைமுறைப்படுத்த “உங்கள் பணம், உங்கள் கையில்” திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.  நடப்புக் கணக்குப் பற்றாக்குறையைச் சமாளிக்க பங்குச் சந்தை, வங்கி, காப்பீடு, ஓய்வூதியம் உள்ளிட்ட நிதிச் சந்தையில் அந்நிய மூலதனத்திற்கு இருக்கும் கட்டுப்பாடுகளை அறவே நீக்க வேண்டும் – இவைதான் மன்மோகன் சிங் – ப.சிதம்பரம் கும்பல் தற்போதைய நெருக்கடியைத் தீர்க்க முன்வைக்கும் தீர்வுகள்.

எந்த விஷக் கிருமி இந்திய மக்களை மேலும் மேலும் வறுமை படுகுழிக்குள் தள்ளி வருகிறதோ, எந்த விஷக் கிருமி இந்தியப் பொருளாதாரத்தைத் தேக்க வீக்கம் என்ற கட்டமைப்பு நெருக்கடிக்குள் சிக்க வைத்ததோ, அதே விஷக் கிருமியை இன்னும் தீவிரமாக இந்தியாவிற்குள் இறக்கிவிட்டால், இந்தியா அடுத்த ஆண்டே 13 சதவீதப் பொருளாதார வளர்ச்சியைச் சாதித்துவிடும் என நம்மை நம்பச் சொல்கிறார், ப.சிதம்பரம்.  13 சதவீத பொருளாதார வளர்ச்சி என்ற வாய்வீச்சு நிறைந்துள்ள ப.சிதம்பரத்தின் பட்ஜெட் பற்றிச் சுருக்கமாகச் சொன்னால், அது இந்தியாவைப் பன்னாட்டு நிதிச் சூதாடிகளிடம் முழுமையாக அடகு வைக்கும் இன்னொரு அடிமைச் சாசனம் தவிர வேறில்லை.

– செல்வம்
___________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2013
___________________________________________________________________________________

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க