privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்விவசாயக் கடன் ஊழல்: கோமான்கள் நடத்திய கொள்ளை!

விவசாயக் கடன் ஊழல்: கோமான்கள் நடத்திய கொள்ளை!

-

க்கிய முற்போக்கு கூட்டணி அரசின் முதல் பருவ ஆட்சியில், அக்கூட்டணி அரசு 2008-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தபொழுது, 2009-ஆம் ஆண்டு நடக்கவிருந்த நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து,  விவசாயக் கடன் தள்ளுபடி மற்றும் நிவாரணத் திட்டம் ஒன்றை அறிவித்தது. இத்திட்டத்திற்காக 71 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கவுள்ளதாகக் கூறிய அன்றைய நிதியமைச்சர் ப.சிதம்பரம், “விவசாயிகளுக்கு இந்நாடு கடன்பட்டுள்ளது. அந்தக் கடனைத் திருப்பி அடைத்திருக்கிறோம்” என்று சுயதம்பட்டம் அடித்துக் கொண்டார்.

ஆந்திர விவசாயிகள்
ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டத்தில் கடன்சுமை தாளாமல் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் சடலங்களைக் கண்டு கதறும் உறவினர்கள் (கோப்புப் படம்).

இக்கடன் திட்டத்தால் ஏறத்தாழ 3.45 கோடி விவசாயிகள் பலனடைவார்கள் எனக் கூறப்பட்டாலும், சிறு-குறு விவசாயிகள் அனைவரும் இக்கடன் தள்ளுபடியைப் பெற முடியாதபடியும், விவசாயிகளின் வங்கிக் கடன் முழுவதும் தள்ளுபடி ஆகிவிடாதபடியும், இந்நிவாரணத் திட்டம் நரித்தனமாகத் தயாரிக்கப்பட்டிருந்தது.

“ஐந்து ஏக்கருக்கும் குறைவாக நிலம் உள்ள விவசாயிகளுக்கு மட்டுமே இக்கடன் நிவாரணத் திட்டம் பொருந்தும்; 50,000 ரூபாய் வரையிலும் கடன் பெற்ற விவசாயிகள் மட்டும்தான் முழுத் தள்ளுபடி கோர முடியும்.  50,000 ரூபாய்க்கு மேல் கடன் பெற்ற விவசாயிகள், தாம் வாங்கிய கடனில் 75 சதவீதத்தை ஜூன் 30, 2010-க்குள்  திருப்பிச் செலுத்தியிருந்தால், மீதி 25 சதவீதக் கடனைத் தள்ளுபடி செய்யக் கோர முடியும்.  இந்த 25 சதவீத தள்ளுபடியும் இருபதாயிரம் ரூபாய் என்ற வரம்பைத் தாண்டாது” என்றவாறு விதிகள் உருவாக்கப்பட்டிருந்தன.  அதேசமயம், ஏற்றுமதி சார்ந்த பணப்பயிர்களைப் பயிரிடும் விவசாயிகள்  ரூ. 1 இலட்சம் வரையிலும்; கோழிப்பண்ணை, பால்பண்ணை நடத்துவோர் மற்றும் சுய உதவிக் குழுக்களும் இக்கடன் நிவாரணத் திட்டத்தின் கீழ் தள்ளுபடி பெறத் தகுதி வாய்ந்தவர்களாக வரையறுக்கப்பட்டிருந்தது.

இப்படிப்பட்ட ஏறுக்குமாறான விதிகளின் காரணமாக, நாட்டிலேயே விவசாயிகளின் தற்கொலைச் சாவுகள் அதிகமாக நடந்துவரும் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த விதர்பா பகுதி பருத்தி விவசாயிகளுக்கு இந்தக் கடன் தள்ளுபடியால் எந்தவிதமான பலனும் கிடைக்காது என்று இத்திட்டம் அறிவிக்கப்பட்ட சமயத்திலேயே விமர்சனங்கள் எழுந்தன.

விவசாய கடன்கள்

கடன் தள்ளுபடித் திட்டத்தின் இவ்வர்க்கச் சார்பு ஒருபுறமிருக்க, இக்கடன் தள்ளுபடித் திட்டம் செயல்படுத்தப்பட்ட விதம் குறித்து நாடெங்கிலும் 800 வங்கிக் கிளைகளையும், அக்கிளைகளில்  கடன் தள்ளுபடி செய்யப்பட்ட கணக்குகளுள் 90,576 கணக்குகளையும் வகைமாதிரியாக எடுத்துக் கொண்டு ஆய்வு செய்த மையத் தணிக்கைத் துறை, “இவற்றுள் கடன் தள்ளுபடி பெறத் தகுதியற்ற 20,216 கணக்குகளுக்கு முறைகேடாகக் கடன் தள்ளுபடி தரப்பட்டிருப்பதை” அம்பலப்படுத்தியிருக்கிறது.  மேலும், “கடன் தள்ளுபடி பெற அனைத்துத் தகுதிகளும்  இருந்தும் 9,334 விவசாயிகளுக்குக் கடன் தள்ளுபடி மறுக்கப்பட்டுள்ளது. 4,826 விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி நீட்டிப்பு வழங்கப்படவில்லை” என்பதையும் சுட்டிக் காட்டியிருக்கிறது.

தகுதிவாய்ந்த விவசாயிகளுக்குக் கடனைத் தள்ளுபடி செய்ய மறுத்த வங்கிகள், நவீன கந்துவட்டிக் கும்பலான நுண்கடன் நிறுவனங்களை இத்தள்ளுபடித் திட்டத்தின் மூலம் மஞ்சள் குளிக்க வைத்துள்ளன.  ஒரு தனியார் வணிக வங்கி, விதிமுறைகளுக்கு மாறாக நுண்கடன் நிறுவனங்களின் கடன்களை விவசாயக் கடன்களாகக் காட்டி ரூ.164.6 கோடி ரூபாயை அரசிடம் இருந்து சுருட்டியுள்ளதை, அவ்வங்கியின் பெயரைக் குறிப்பிடாமல் அம்பலப்படுத்தியுள்ள தணிக்கை அறிக்கை, அந்நுண் கடன் நிறுவனங்களிடம் கடன்பட்ட விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடியாகியிருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்கிறது.

தமிழ்நாட்டுக்கு ஒதுக்கீடு செய்ய்யப்பட்ட வேளாண் கடன் தொகையில் 7 சதவீதத் தொகை சென்னையைச் சேர்ந்த புள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள இரகசியத்தைத் தமிழகத் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு ஊழியர் சங்கம் அம்பலப்படுத்தியிருக்கிறது.  ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் சொர்க்க பூமியாக மாறிவிட்ட சென்னையில், மொட்டை மாடியில் காய்கறிகளைப் பயிரிடும் ‘விவசாயிகளுக்கு’ இந்தக் கடன் தள்ளுபடியை வங்கிகள் வழங்கியுள்ளன போலும்.

இத்திட்டம் 3.45 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்குப் பலனளிக்கும் என்ற அரசின் அறிவிப்பையும் தணிக்கையில் அம்பலமாகியிருக்கும் முறைகேடுகளையும் ஒப்பிட்டால், ஒட்டுமொத்தமாக இத்திட்டத்தின் கீழ் 24 இலட்சம் பேர் முறைகேடாகக் கடன் தள்ளுபடி பெற்றிருக்கக்கூடும்; தகுதிவாய்ந்த 34 இலட்சம் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி மறுக்கப்பட்டிருக்கக்கூடும்.  இம்மோசடியால் கடன் தள்ளுபடி செய்வதற்கு இதுவரை ஒதுக்கப்பட்ட 52,000 கோடி ரூபாயில் தோராயமாக 10,000 கோடி ரூபாய்க்கும் மேலாக ஊழல் நடந்திருக்கக்கூடும் என்ற முடிவுக்கு வர முடியும்.

விஜய் மல்லையா
வங்கிகளில் கோடிகோடியாய் தொழில்கடன் வாங்கி ஏப்பம் விட்ட தரகு முதலாளி விஜய் மல்லையா.

அரசியல் புள்ளிகள், ஆதிக்க சாதியைச் சேர்ந்த பணக்கார விவசாயிகள் உள்ளிட்ட கும்பல்தான் வேளாண் கூட்டுறவு வங்கிகளை இயக்கி வருவதால்; இவர்களோடு நுண்கடன் நிறுவனங்கள், நவீன பண்ணை விவசாயத்தில் இறங்கியிருக்கும் புதியவகை தரகு முதலாளிகள் மற்றும் பொதுத்துறை வங்கி அதிகாரிகள், வருவாய்த் துறை அதிகாரிகள் ஆகியோர் கூட்டுச் சேர்ந்து இந்த ஊழலை நடத்தியிருப்பதால், விவசாயத் துறை அமைச்சர் சரத் பவார் இந்த ஊழலை அமுக்குவதில் முன்னணியில் நின்றார்.  அதனால், இக்கடன் தள்ளுபடி ஊழல் நாடாளுமன்றத்திலோ, தேசியப் பத்திரிகைகளிலோ பெரிய அளவில் விவாதிக்கப்படாமல், வந்த சுவடே தெரியாமல் அமுங்கிப் போய்விட்டது.

இவ்வூழலால் பலனடைந்த கும்பலைக் கண்டுபிடித்துக் கைது செய்ய முன்வராத அரசு, முறைகேடாகக் கடன் தள்ளுபடி பெற்றவர்களிடமிருந்து அத்தொகையைத் திரும்பப் பெறுமாறு பொத்தாம் பொதுவாக வங்கிகளுக்கு அறிவுறுத்தியிருக்கிறது.  வங்கிகளோ, இதைச் சாக்காக வைத்துக் கொண்டு நியாயமாகக் கடன் தள்ளுபடி பெற்ற விவசாயிகளுக்கு பணத்தைத் திரும்பக் கட்டுமாறு நோட்டீஸ் அனுப்பி வருகின்றன.  மகாராஷ்டிராவில் கோலாப்பூர் மாவட்டக் கூட்டுறவு வங்கி மட்டும் 49,000 விவசாயிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி, அவர்களின் தலையில் இடியை இறக்கியிருக்கிறது.

தமிழ்நாட்டிலோ, சில பொதுத் துறை வங்கிக் கிளைகள் விவசாயக் கடனைத் திருப்பிச் செலுத்தாத விவசாயிகளின் புகைப்படங்களை வங்கிகளின் வாசலில் ஒட்டி, விவசாயிகளை ஏதோ ஜேப்படி திருடர்களைப் போல அவமானப்படுத்தும் அடாவடித்தனத்தில் இறங்கியுள்ளன.  கடன் தள்ளுபடியை ஏப்பம் விட்ட கும்பலோடு,வங்கியில் தொழில்கடன் வாங்கிவிட்டு ஏப்பம் விட்டுள்ள விஜய் மல்லையா போன்ற தரகு முதலாளிகளோடு இணக்கமாகவும், அக்கொள்ளையில் பங்காளியாவும் நடந்துவரும் வங்கி நிர்வாகம், சிறு விவசாயிகளைக் கிள்ளுக்கீரைகளாக நடத்துவதையும் எட்டி உதைப்பதையுமே வாடிக்கையாகக் கொண்டுள்ளன என்பதைத்தான் இந்த விவகாரங்கள் மீண்டும் எடுத்துக்காட்டியுள்ளன.

– அழகு

___________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2013
___________________________________________________________________________________