privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காஜெர்மனியில் நோவார்டிஸுக்கு காவடி தூக்கும் மன்மோகன் சிங்!

ஜெர்மனியில் நோவார்டிஸுக்கு காவடி தூக்கும் மன்மோகன் சிங்!

-

முதலாளித்துவம்
முதலாளித்துவ நியாயம்.

“பல் இருக்கறவன் பக்கோடா சாப்பிடுறான், அது போல பணம் இருக்கிறவன் காபி ஷாப்பில் காபி சாப்பிடுவான், 7 நட்சத்திர ஹோட்டலில் தண்ணி அடிப்பான், வேலியிட்ட குடியிருப்பில் வீடு வாங்குவான், அப்பல்லோவில் சிகிச்சை பார்த்துப்பான்.’ அதைப் பார்த்து ஏன் பொறாமைப்படுறீங்க?”

‘யாருக்கு பொருட்களும் சேவைகளும் கிடைக்க வேண்டும்’ என்பதற்கு முதலாளித்துவ சிந்தனையாளர்களின் பதில் இதுதான்.

ஒருவருக்கு ரத்தப் புற்றுநோய் வந்து விட்டது என்று வைத்துக் கொள்வோம். முதலாளித்துவ கனவு உலகத்தில், ஐடியல் சந்தை பொருளாதாரம் செயல்படும் ‘பூலோக சொர்க்கத்தில்’, மருந்து வாங்குவதற்கு அவர் மாதம் ரூ 1.5 லட்சம் செலவழிக்க வேண்டும். அதாவது கிலிவெக் என்ற பெயரில் நோவார்டிஸ் என்ற பன்னாட்டு மருந்து நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் மருந்தை வாங்கிச் சாப்பிட்டு நோயை கட்டுக்குள் வைத்திருக்க ஒரு ஆண்டுக்கு ரூ 18 லட்சம் செலவழிக்க வேண்டும். 5 ஆண்டுகள் உயிரோடு இருக்க ரூ 90 லட்சம், 10 ஆண்டுகள் உயிரோடு இருக்க ரூ 1.8 கோடி.

இவ்வளவு பணத்தை யார் செலவழிக்க முடியும்? அந்தப் பணம் எப்படி வந்திருக்கும் என்று யாரும் கேட்கப் போவதில்லை. ‘நாய் விற்ற பணம் குரைக்கப் போவதில்லை’, அதனால் நாயையோ, பேயையோ விற்று பணம் குவித்த முதலாளிகளுக்கு மட்டும்தான் வாழும் உரிமை இருக்கும்.

‘அப்படி பணம் குவித்திருக்காதவர்கள் செத்து விட வேண்டியதுதான். அவ்வளவு பணம் சம்பாதிக்க வக்கில்லாத ஒருவர் இந்த உலகத்தில் வாழ்ந்து என்ன பலன்’ என்கிறது முதலாளித்துவம்.

“உயிர் காக்கும் மருந்துகளை கண்டு பிடிப்பதற்கான ஆராய்ச்சிக்கு பெருத்த செலவாகிறது. கண்டு பிடித்த மருந்துகளை மருந்தகங்களில் பரிசோதனை செய்து, தேசிய மருந்து ஒழுங்குமுறை கழகங்களிடம் ஒப்புதல் வாங்க இன்னும் பெரும் தொகை செலவாகிறது. இவ்வளவு செலவு செய்த மருந்தை அதிக விலைக்கு விற்றால்தான் எதிர்கால ஆராய்ச்சிகளுக்கு பணம் கிடைக்கும்” என்ற வாதத்தின் அடிப்படையில் பன்னாட்டு மருந்து நிறுவனங்களின் நலனை பாதுகாக்க மேற்கத்திய நாடுகளில் காப்புரிமை சட்டம் நடைமுறையில் உள்ளது. ஒரு புதிய மருந்தை முதலில் கண்டுபிடித்து சந்தைக்கு கொண்டு வந்த நிறுவனத்துக்கு அந்த மருந்தை உற்பத்தி செய்து விற்பதற்கு 20 ஆண்டுகள் தனி உரிமை கொடுக்கப்படுகிறது. கண்டுபிடித்த நிறுவனத்தின் அனுமதி இன்றி மற்ற நிறுவனங்கள் அந்த மருந்தை நகல் செய்து உற்பத்தி செய்வது சட்டப்படி குற்றம்.

அறிவியல் ஆராய்ச்சி, தொழில் நுட்ப முன்னேற்றம் அனைத்தும் ஒட்டு மொத்த மனித சமூகத்தின் உழைப்பின் பலன்கள்; ஒவ்வொரு தலைமுறையும் அதற்கு முன் வந்த ஆயிரக்கணக்கான முன்னோடிகளின் தோள்களின் மீது நின்றுதான் புதிய அறிவியல் முன்னேற்றங்களை நிகழ்த்துகிறது.

அறிவியல் என்பது நோவார்டிஸ் கம்பெனியின் கிணற்றுக்குள்ளோ, ஒரு தனிநபர் வீட்டு புழக்கடையிலோ விளைவதில்லை. உலகெங்கிலும் உள்ள பொதுமக்களின் பணத்தில் இயங்கும் பல்கலைக் கழகங்களில் நோய்களின் உடற்கூறு பற்றியும் அவற்றுக்கான மருந்துகள் பற்றியும் தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. புகழ் பெற்ற ஆய்வு இதழ்களில் வெளியாகும் இந்த ஆராய்ச்சி முடிவுகள்தான் புதிய மருந்துகள் உருவாக்குவதற்கான விளைநிலம். சுருக்கமாகச் சொல்லப் போனால், ஒட்டு மொத்த உலகும் சேர்ந்து ஆதரிப்பதுதான் அறிவியல், தொழில் நுட்ப வளர்ச்சி; எந்த தனிப்பட்ட நிறுவனமும் அதற்கு சொந்தம் கொண்டாட முடியாது. இப்போது மேற்கத்திய அறிவுசார் சொத்துரிமை சட்டங்களின் படி அறிவுக்கு சொந்தம் கொண்டாட வேண்டுமானால், மனித குலத்தின் பொது அறிவுக் களஞ்சியத்திலிருந்து எந்த ஆதாயமும் பெறாத ஒரு குழுவை நிறுவனம் உருவாக்க வேண்டும்.

கிலிவெக் மருந்து தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்ட அமெரிக்காவின் ஒரேகான் சுகாதார அறிவியல் பல்கலைக்கழக விஞ்ஞானி டாக்டர் பிரியன் டிரக்கர், ‘தங்களது ஆய்வுக்கான செலவில் 10% மட்டுமே நோவார்ட்டிஸ் நிறுவனத்தால் வழங்கப்பட்டது என்றும், 90% அரசு மற்றும் கல்வி ஆய்வு நிறுவனங்களின் பங்களிப்பு’ என்றும் தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில் அறிவியலை வளர்த்துச் செல்ல முதலாளித்துவம் உருவாக்கியிருக்கும் முறையின் முட்டாள்தனம் விரிவாக விவாதிக்கப்பபட வேண்டிய விஷயம். இங்கு உச்சநீதி மன்ற தீர்ப்பு தொடர்பான விபரங்களை மட்டும் பார்ப்போம்.

பன்னாட்டு நிறுவனங்கள்
நாட்டு உரிமைகளை விழுங்கும் பன்னாட்டு நிறுவனங்கள்.

காப்புரிமை பெறுவது மூலம் மருந்து நிறுவனம் 20 ஆண்டுகள் வரை நேரடி உற்பத்திச் செலவை விட 20-30 மடங்கு அதிக விலை வைத்து மருந்துகளை விற்க முடிகிறது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு காப்புரிமை காலாவதி ஆன பிறகு, மற்ற நிறுவனங்களும் உற்பத்தியில் நுழைய விலை 20-ல் ஒரு பங்காக வீழ்ந்து விடுகிறது.

ஆனால், இந்தியாவின் அரசியல் சட்டத்தின் அடிப்படையில் இயற்றபட்ட இந்திய காப்புரிமை சட்டம் 1970 வித்தியாசமாக இருந்தது. மருந்து பொருட்களுக்கு காப்புரிமை வழங்குவது சட்டத்தில் இல்லை. மாறாக, மருந்தை உற்பத்தி செய்யும் முறைக்குத்தான் காப்புரிமை வழங்கப்பட்டது. அதுவும் 7 ஆண்டுகளுக்கு மட்டுமே காப்புரிமை வழங்கப்படும். இதன்படி பன்னாட்டு நிறுவனம் ஒன்று கண்டுபிடித்த புதிய மருந்தை மாற்று முறையில் இந்திய நிறுவனங்கள் உற்பத்தி செய்து அதே மருந்தை பல மடங்கு குறைந்த செலவில் சந்தைப் படுத்த முடிந்தது. இப்படி உருவாக்கப்பட்ட மருந்துகள் அடிப்படை மருந்துகள் (generics) என்று அழைக்கப்படுகின்றன.

இதன் மூலம் இந்தியாவிலும் மற்ற மூன்றாம் உலக நாடுகளிலும் மேற்கத்திய நிறுவனங்களின் மருந்து விலைகள் கட்டுப்படியாகாத மக்கள் கோடிக்கணக்கான பேர் பலன் பெற்றார்கள்.

1990களுக்குப் பிறகான ஒற்றைத் துருவ மேலாதிக்க உலகில் ‘ஒரு நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டம் என்ன சொன்னாலும் சரி, அமெரிக்கா வைப்பதுதான் சட்டம்’ என்பதை நிரூபிக்கும் விதமாக காட் ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டார் அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ். ‘அப்படி உலகப் பொருளாதாரத்தோடு இரண்டற கலந்து விடா விட்டால் நாட்டில் சோறு, தண்ணீர் கிடைப்பது நின்று போகும்; குழந்தைகள் போதிய ஊட்டச் சத்து இல்லாமல் இறந்து போவார்கள்; பள்ளிக் கூடங்கள் நடப்பது நின்று போகும்; மருத்துவமனைகள் செயலிழந்து விடும்’ என்றெல்லாம் பயமுறுத்தினார்கள்.

அதைத் தொடர்ந்து வர்த்தகம் தொடர்பான அறிவுசார் சொத்துரிமை ஒப்பந்தத்திலும் (TRIPS) இந்திய அரசு கையெழுத்திட வைக்கப்பட்டது. அதற்கேற்ப இந்தியாவின் காப்புரிமை சட்டம் 1999, 2002, 2005, 2006 ஆண்டுகளில் மாற்றப்பட்டது. இனிமேலும் புதிய நிபந்தனைகள் பன்னாட்டு நிறுவனங்கள் முன் வைக்கும் போது அவற்றிற்கு ஏற்ப சட்டம் மாற்றப்படும் என்பதை உறுதியாக சொல்லலாம்.

இந்த திருத்தங்களுக்குப் பிறகு அமெரிக்காவில் என்ன செல்லுபடியாகுமோ அதுதான் இந்தியாவிலும் செல்லுபடியாகும். ‘மருந்து நிறுவனங்களுக்கு மருந்து மீதான காப்புரிமை வழங்கப்பட வேண்டும், அதுவும் 20 ஆண்டுகளுக்கு ஏகபோக சந்தை உரிமை வழங்கப்பட வேண்டும். அடிப்படை வடிவிலான மருந்துகளை இந்திய நிறுவனங்கள் உற்பத்தி செய்ய முடியாது.’

இதன் விளைவாக அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்திய மருந்து நிறுவனங்கள் ரான்பாக்ஸி, பிரமல், மேட்ரிக்ஸ் லேப், ஆர்சிட் நிறுவனத்தின் ஒரு பிரிவின் உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி துறைகள் என்று வரிசையாக பன்னாட்டு நிறுவனங்களால் விழுங்கப்பட்டன.

இனிமேல் புதிதாக கண்டுபிடிக்கப்படும் எந்த ஒரு மருந்துக்கும் சம்பந்தப்பட்ட பன்னாட்டு நிறுவனம் வைப்பதுதான் விலை. அதற்கான காப்புரிமையை இந்திய அரசு வழங்கியே தீர வேண்டும். இனிமேல் மார்பகப் புற்றுநோய்க்கு மருந்து கண்டு பிடிக்கப்பட்டால் கோடீஸ்வரர்கள் மட்டும்தான் சிகிச்சை பெற்று உயிர் வாழ முடியும்.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு இந்த நிலைமையை இம்மியளவு கூட மாற்றி விடவில்லை. அமெரிக்க காப்புரிமை சட்டங்களை வளைத்து விளையாடும் பன்னாட்டு நிறுவனங்களின் ஒரு உத்தியை மட்டும் இந்தியாவில் தடுத்திருக்கிறது, அவ்வளவுதான்.

நோய் பற்றி ஆராய்ச்சி செய்வது, அதற்கான புதிய மருந்து ஒன்றை கண்டுபிடிப்பது, அதற்கான பரிசோதனைகளை நடத்துவது என்று நீண்ட முயற்சிக்குப் பிறகு லாபம் கிடைப்பதை முதலாளிகளின் லாப வேட்கை சகித்துக் கொள்ளப் போவதில்லை. குறுக்கு வழியில் லாபத்தை பெருக்க கண்டு பிடித்த வழிகளில் ஒன்றுதான் “என்றென்றும் பசுமை” என்ற முறை. அதாவது ஒரு மருந்தின் மூலம் என்றென்றும் லாப அறுவடை செய்யும் வழிமுறை.

மருந்தின் 20 ஆண்டு கால காப்புரிமை காலாவதி ஆவதற்கு முன்பு அந்த மருந்தின் உள்ளடக்கத்தில் ஒரு சிறு மாற்றம் மட்டும் செய்து புதிதாக காப்புரிமைக்கு விண்ணப்பிப்பார்கள். ‘இந்த மாற்றத்தினால் நோய்க்கான சிகிச்சை பல மடங்கு மேம்பட்டிருக்கிறது’ என்று விளம்பரம் செய்வார்கள். ஒரிஜினல் மருந்துக்கும் ‘புதிய’ மருந்துக்கும் இன்னும் 20 ஆண்டுகளுக்கு ஏகபோக சந்தை உரிமை கிடைத்து விடும்.

கிலிவெக் மருந்தின் காப்புரிமை காலம் முடியப் போகிறது. சென்ற ஆண்டு மட்டும் நோவார்டிஸ் $8.5 பில்லியன் மதிப்பிலான கிலிவெக் மருந்துகளை உலகம் முழுக்க விற்றிருக்கிறது. அந்த ஏகபோக சந்தை வருமானத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள கிலிவெக் மருந்தில் அப்படி ஒரு மாற்றம் செய்து இமதினிப் மெசிலேட் என்ற வேதி சேர்மத்துக்கான காப்புரிமைக்கு சென்னை அறிவுசார் சொத்துரிமை அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தது நோவார்டிஸ்.

சென்னை அலுவலகம் அந்த விண்ணப்பத்தை 2006-ம் ஆண்டு நிராகரித்து விட்டது. ‘இந்திய காப்புரிமை சட்டம் (2005)ன் பிரிவு 3(d)ன் படி அப்படி சிறு அளவு மாற்றம் செய்யப்பட்ட மருந்துகளுக்கு காப்புரிமை இல்லை’ என்று சொல்லி விட்டது.

அதை எதிர்த்து நோவார்டிஸ் சென்னை உயர் நீதி மன்றம், இந்திய அறிவுசார் சொத்துரிமை மேல் முறையீட்டுக் கழகம் இவற்றில் மேல் முறையீடு செய்து இறுதியாக ஆகஸ்ட் 2009-ல் உச்ச நீதிமன்றத்துக்கு வழக்கை கொண்டு வந்தது. அந்த வழக்கில்தான் உச்சநீதிமன்றம் தீர்ப்பு சொல்லியிருக்கிறது. ‘சென்னை அறிவுசார் சொத்துரிமை அலுவலகத்தின் முடிவு சரியானதுதான், நோவார்டிஸூக்கு கிலிவெக் மருந்தில் சிறிதளவு செய்த மாற்றத்தின் அடிப்படையில் காப்புரிமை வழங்க முடியாது’ என்று முடிவு செய்திருக்கிறது.

ஆனால், இதே அடிப்படையில் சீனா, ரஷ்யா, தாய்வான் உட்பட 40 நாடுகளில் நோவார்டிஸ் காப்புரிமை பெற்றிருக்கிறது. எதிர்காலத்தில் மற்ற நாடுகளிலும் காப்புரிமை பெறுவதற்கான தடைகளை தகர்த்தெறிவதற்கு முழு முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

மன்மோகன் சிங் - ஏஞ்சலா மெர்கல்
மன்மோகன் சிங் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் உடன்.

ச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியான உடனேயே ‘இனிமேல் இந்தியாவுக்கு அன்னிய முதலீடுகள் வருவதே குறைந்து போகும்’ என்று எச்சரித்தார் நோவார்டிஸ் இந்தியாவின் மேலாண்மை இயக்குநர் ரஞ்சித் ஷாஹானி. இந்திய ஆளும் வர்க்கங்களுக்கு எங்கு அடித்தால் வலிக்கும் என்று அவருக்குத் தெரியாதா என்ன?

இப்போது ஜெர்மனிக்கு காவடி தூக்கிக் கொண்டு போயிருக்கும் மன்மோகன் சிங், ‘இது தொடர்பான புதிய ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்’ என்று ஜெர்மனி வலியுறுத்துகிறது. ஐரோப்பிய ஒன்றியம்-இந்தியா சுதந்திர வர்த்தக ஒப்பந்தம், ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மார்கெல்லுடனான மன்மோகன் சிங்கின் பேச்சுவார்த்தையில் முக்கிய இடம் வகிக்கப் போகிறது. அந்த ஒப்பந்தத்தில் அறிவு சார் சொத்துரிமையில் உலக வர்த்தக நிறுவன பொறுப்புகளை விட உறுதியான சட்டங்களை நிறைவேற்ற ஐரோப்பிய ஒன்றியம் இந்தியாவை வலியுறுத்துகிறது.

இந்திய நீதித் துறையில் சாதகமான தீர்ப்பு கிடைக்கா விட்டால், சட்டத்தையே மாற்றுவதற்கு ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தம் மூலம் பன்னாட்டு நிறுவனங்கள் முயற்சிக்கின்றன.

“பொருளாதாரத் தேக்கம், விலைவாசி உயர்வு, நடப்புக் கணக்குப் பற்றாக்குறை ஆகியவைதான் நாம் தற்பொழுது எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள்” என 2012-13 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை உரையில் குறிப்பிட்ட நிதியமைச்சர் ப.சிதம்பரம், ‘இதிலிருந்து நம்மைக் காப்பாற்ற அந்நிய மூலதனத்திடம் சரணடைவதைத் தவிர வேறு நாதி நமக்கில்லை’ என்று பிரகடனம் செய்து, ‘அந்நிய மூலதனத்திற்கு காட்டப்படும் சலுகைகளை யாரும் எதிர்க்கக் கூடாது’ என்றும் அறிவுரை சொல்கிறார்.

அதன்படி, இந்த ஆண்டு இல்லா விட்டால் அடுத்த சில ஆண்டுகளுக்குள், காங்கிரசு தலைமையிலான ஆட்சியில் இல்லா விட்டால் பா.ஜ.க தலைமையிலான ஆட்சியில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இருக்கும் அசௌகரியங்கள் நீக்கப்பட்டு தடையின்றி அன்னிய மூலதனம் இந்தியாவிற்குள் பாய்வதற்கான மடை வெட்டப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கலாம்.

இந்திய தரகு முதலாளிகளுக்கு ஒளிமயமான எதிர்காலமும் சாதாரண மக்களுக்கு அடிமை வாழ்வும் உறுதி.

– அப்துல்

மேலும் படிக்க
HIV cancer patients seek access to affordable medicines
A Just order
Top three MNC pharma companies Novartis, Pfizer and Abott lose 10 in 2013
Novartis loses Indian Glivec patent case
Novartis denied cancer drug paten