Sunday, July 21, 2024
முகப்புகட்சிகள்இதர கட்சிகள்சாரதா குழுமம்: ஒரு பிக்பாக்கெட் பில்லியனரின் கதை !

சாரதா குழுமம்: ஒரு பிக்பாக்கெட் பில்லியனரின் கதை !

-

பணத்தை பறி கொடுத்த மக்கள்
பணத்தை பறி கொடுத்த மக்கள்

கொல்கத்தாவை மையமாகக் கொண்டு மேற்கு வங்காளத்திலும், வடகிழக்கு மாநிலங்களிலும் செயல்பட்டு வந்த சாரதா குரூப்பைச் சேர்ந்த நிறுவனங்கள் பொதுமக்களிடமிருந்து பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் நிதி திரட்டி பின் அதை மறைய வைத்து திவால் ஆகியிருக்கின்றன. இந்த நிறுவனத்தின் செயல்பாட்டில் அரசியல்வாதிகள், ஊடக தொழிலதிபர்கள், அதிகார இடைத்தரகர்கள், வழக்கறிஞர்கள் என்று பல தரப்பட்டவர்கள் தொடர்பு கொண்டிருந்தது தற்போது அம்பலமாகியிருக்கிறது.

ஏப்ரல் 16-ம் தேதி சாரதா குழுமத்தின் ஊடக நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்களில் மூன்று பேர் தாம் திடீரென்று வேலையிலிருந்து நீக்கப்பட்டு விட்டதாகவும், பல மாதங்களாக அவர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படவில்லை என்றும் புகார் செய்தனர். இரண்டு நாட்களுக்குப் பிறகு ரூ 40,000 மற்றும் ரூ 1 லட்சம் பணம் முதலீடு செய்த சேமிப்பாளர்கள் இரண்டு பேர் தமது பணத்தை இழந்ததாக புகார் செய்தனர்.

அதனைத் தொடர்ந்து சாரதா குழுமத்தின் சேர்மன் சுதிப்தா சென்னும் அவரது உதவியாளர் தேப்ஜனி முகர்ஜியும் நிறுவனத்தின் மற்றொரு மேலாளர் அர்விந்த் சிங் சௌகானும் காஷ்மீரில் ஏப்ரல் 23-ம் தேதி கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது ஏமாற்றுதலும் நேர்மையின்மையும், நம்பிக்கை மோசடி செய்தல், மிரட்டுதல் ஆகிய குற்றப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏப்ரல் 21-ம் தேதி சாரதா குழுமத்தில் ரூ 30,000 சேமித்திருந்த ஒரு 50 வயது பெண் தீவைத்து தற்கொலை செய்து கொண்டார். ஏப்ரல் 27-ம் தேதி 35 வயதான தபன் பிஸ்வாஸ் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் ரூ 4 லட்சம் முதலீடு செய்திருந்தார்.

ஏப்ரல் 23-ம் தேதி இந்திய பங்கு பரிவர்த்தனை மையம் சாரதா நிறுவனம் தனது அனைத்து திட்டங்களையும் இழுத்து மூடி வைப்புதாரர்களுக்கு பணத்தை திரும்பிக் கொடுக்கும்படி உத்தரவிட்டுள்ளது.

ஒவ்வொரு சில ஆண்டுகளுக்கு ஒரு முறை வெடித்துக் கிளம்பும் இத்தகைய நிதி மோசடித் திட்டங்களில் மோசடி செய்யப்பட்ட பணம் திரும்பக் கிடைக்கப் போவதில்லை என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்று. ஒவ்வொரு முறையும் மோசடி செய்த தனி நபர்களின் சூழ்ச்சி, தந்திரம் அல்லது ஏமாற்றப்பட்டவர்களின் மந்தைப் புத்தி, ஏமாளித் தனம், அல்லது மோசடியை தடுக்கும் பொறுப்பில் உள்ள அரசு அமைப்புகளின் கவனமின்மை என்று புதுப்புது காரணங்களை கண்டு பிடித்து சொல்கிறார்கள் நிபுணர்கள். அரசு ஒழுங்குமுறை சட்டங்களை வலுவாக்கி இனிமேல் இப்படி நடக்க விடாமல் தடுத்து விடுவதாக சொல்கிறது.

ஆனால் சாதாரண மக்களின் சேமிப்புகளை ஆட்டையைப் போடும் நிதித் துறை மோசடிகள் மீண்டும் மீண்டும் தலையெடுக்கின்றன.

சாரதா குழுமத்தை உருவாக்கியவரும் சேர்மனாக பொறுப்பு வகித்தவருமான சுதிப்தா சென், ஏப்ரல் 6-ம் தேதியிட்டு ஒரு கடிதத்தை தனது வாக்குமூலமாக சி.பி.ஐ.ன் கொல்கத்தா அலுவலகத்துக்கு அனுப்பியிருக்கிறார். அதன் ஊடாக சாரதா ரியல்ட்டி எப்படி உருவாகி வளர்ந்தது, பணம் எப்படி திரட்டப்பட்டது, எப்படி செலவானது என்பதை பார்க்கலாம்.

சுதிப்தா சென்
சுதிப்தா சென்

சுதிப்தா சென் கொல்கத்தாவில் வாழ்ந்து மறைந்த துறவி ராமகிருஷ்ணரின் மனைவி சாரதா அம்மாவின் கோட்பாடுகளை நம்புபவராம். ஏழைகளுக்கு உதவுவதும், இந்தியாவின் கிராமப்புற மற்றும் சிறுநகர மக்களுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துத் தருவதும்தான் அவரது நோக்கமாம்.

அந்த நோக்கத்திற்காக அவர் சாரதா கன்ஸ்ட்ரக்சன் என்ற நிறுவனத்தை ஆரம்பித்து நடத்தினாராம். அதனைத் தொடர்ந்து பல்வேறு தேவைகளுக்காக சுமார் 160 நிறுவனங்களை தொடங்கினாராம். அனைத்து நிறுவனங்களும் சாரதா என்ற பெயரிலேயே தொடங்கப்பட்டனவாம்.

சிறுவயதிலிருந்தே மிகவும் உயர்ந்த இலக்குகளை எட்ட முயற்சிப்பாராம். அவரது இலக்குகளை அடைவதற்கு வானம்தான் எல்லை என்று நம்பினாராம். ஒரு கட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ 33 கோடி செலவாகும் வணிக சாம்ராஜ்யத்தை கட்டி எழுப்பியிருந்தாராம். இப்படியாக ஆன்மீகமும், மோசடியும் கலந்த கலவையாக அவர் ஆரம்பத்திலிருந்தே செயல்பட்டார்.

சாரதா ரியால்ட்டி தொடக்கம்

ஆரம்பத்தில் ரியல் எஸ்டேட், சுற்றுலா போக்குவரத்து, சொகுசு சுற்றுலா தளங்கள் மற்றும் ஏற்றுமதி தொழில்களை செய்து கொண்டிருந்தார். 2008-ம் ஆண்டு ஜூன் மாதம் அவரது டிரைவர்கள் ரத்தன், திப்பு ஆகியோர் ஷிப் நாராயண் தாஸ் என்பவரை அழைத்து வந்தார்களாம். இந்த ஷிப் நாராயண் தாஸ் பொலேரோ காரில் வந்திருக்கிறார். பாசுதேவ் மண்டல் என்பவர் நடத்தும் பிரயாக் குரூப்பின் சந்தைப்படுத்தல் அதிகாரியாக இருப்பதாக சொல்லியிருக்கிறார்.

நெட்வொர்க் மார்கெட்டிங் அல்லது மல்டிலெவல் மார்கெட்டிங் (வலைப்பின்னல் திட்டம்) மூலமாக சுதிப்தா சென்னின் நிறுவனங்களுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி திரட்டி தருவதாகவும், திரட்டும் பணத்தில் 30% கமிஷனாக கொடுக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்கள்.

சுதிப்தா சென் கொல்கத்தாவிலும் அசாமிலும் பிற வட இந்திய நகரங்களிலும் அவர்கள் செயல்படுவதற்கு அலுவலக வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அவர்களது செயல்பாடுகளுக்கான ஏற்பாடுகளை செய்து கொடுப்பதோடு, பிஷ்ணுபூரில் உள்ள சுதிப்தா சென்னின் சாரதா கார்டன் என்ற ரியல்எஸ்டேட் திட்டத்திற்கு போய் வரவும் அனுமதிக்க வேண்டும். அவர்களுக்கு சமூக பாதுகாப்பையும், சட்ட பாதுகாப்பையும் சென் வழங்க வேண்டும்.

2008-ம் ஆண்டு ஜூலை மாதம் சாரதா ரியால்டி என்ற நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. ஷிப்நாராயண் தாஸ் நிறுவனத்தின் இயக்குனராகவும் பங்குதாரராகவும் சேர்ந்தார். சுபீர் தாஸ் மார்கெட்டிங் தலைவராக நியமிக்கப்பட்டார். ஷிப்நாராயண் தாஸூம் அவரது நண்பர்களும் சென்னின் கொல்கத்தா, குவகாத்தி மற்றும் டெல்லி அலுவலகங்களை போய்ப் பார்த்து திருப்தி செய்து கொண்டார்களாம். ஜூலை 4-ம் தேதி பிஷ்ணுபூர் சாரதா கார்டனில் திட்டம் செவ்வனே தொடங்கி வைக்கப்பட்டது.

திட்டத்தைப் பற்றிய விளக்க அறிக்கை, விளம்பரத் துண்டறிக்கை அடித்து சுதிப்தா சென் பெயரை சேர்மனாக போட்டு சந்தைப்படுத்த ஆரம்பித்தார்கள். தங்களிடம் முதலீடு செய்யப்படும் பணத்தை ரியல் எஸ்டேட், ஏற்றுமதி, ஹோட்டல்கள் துறைகளில் பயன்படுத்தி சேமிப்பாளர்களுக்கு பெருமளவு லாபம் தரப் போவதாக விளக்கியிருந்தார்கள்.

15 முதல் 120 மாதங்கள் வரையிலான திட்டங்களில் ரூ 10,000 முதல் ரூ 1 லட்சம் வரை முதலீடு செய்பவர்களுக்கு 12 முதல் 24 சதவீதம் வட்டி தருவதாக வாக்குறுதி அளித்திருந்தார்கள். வைப்புத் தொகை முதிர்ச்சி அடைந்த பிறகு சேமிப்பாளர் விரும்பினால் பணத்துக்குப் பதிலாக நிலம் அல்லது ்பிளாட் வாங்கிக் கொள்ளலாம்.

இணைய மென்பொருள் மூலம் மக்களிடமிருந்து வாங்கும் பணத்துக்கு ரெசீது தயாரிக்கும் ஏற்பாட்டை செய்து கொண்டார்கள். முதலீட்டாளர்கள் பற்றிய தரவுகள் இணையம் மூலமாக அமெரிக்காவின் போஸ்டனில் உள்ள கணினியில் சேமிக்கப்பட்டு வந்திருக்கின்றன. கிழக்கு, வடகிழக்கு இந்தியாவின் பல நகரங்களில் ஒன்றன்பின் ஒன்றாக கிளை அலுவலகங்கள் திறக்கப்பட்டன. 4 மாதங்களில் கொல்கத்தாவில் ஆயிரக்கணக்கான பேர் பங்குபெற்ற மாநாட்டை நடத்தி சாரதா குழுமத்துக்கு பெரும் அளவிலான பணத்தை திரட்டித் தருவதாக வாக்களித்தார்கள்.

திட்டத்தை ஒருங்கிணைப்பதற்கு 16-17 பேர் கொண்ட நிர்வாகக் குழுவை ஏற்படுத்தினார்கள். சுதீப் கோஷ் என்பவர் சாரதா ரியால்டி நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அலுவலராக நியமிக்கப்பட்டார்.

மக்களிடமிருந்து பணம் திரட்டும் திட்டம்

பணத்தை போட்ட மக்கள்
பணத்தை போட்ட மக்கள்

பணத்தை முதலீடு செய்பவர்கள் புதிய வைப்பாளர்களை கொண்டு வந்தால் புதிய வைப்புத் தொகையில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் அவர்களுக்கு கிடைக்கும். அவர்கள் அறிமுகப் படுத்திய முதலீட்டாளர்கள் அறிமுகப்படுத்தும் ஒவ்வொருவரின் வைப்புத் தொகைக்கும் இவர்களுக்கும் கமிஷன் வரும். மல்டிலெவல் மார்கெட்டிங் என்ற இந்த உத்தி, முதலில் பணம் போட்டவர்களுக்கு வட்டி கொடுக்க பிறகு முதலீடு செய்பவர்களின் பணத்தை பயன்படுத்துவது என்ற உத்தி, இவற்றின் மூலம் இந்த திட்டங்களை பிரபலப்படுத்தியிருக்கிறார்கள்.

ஓய்வு பெற்ற முதியோர்கள், நடுத்தர வர்க்கத்தினர், சிறு வணிகர்கள், உழைக்கும் மக்கள் என்று பல தரப்பினரும் தமது சேமிப்புகளை அதிக லாபம் கிடைக்கும் இந்த திட்டத்தில் முதலீடு செய்திருக்கின்றனர். பல ஆயிரம் கோடி அளவிலான நிதி குவிய ஆரம்பித்திருக்கிறது. முதலீட்டாளர்களுக்கு வைப்புத் தொகை, முதிர்ச்சியடையும் நாள், முதிர்ச்சித் தொகை இவற்றை குறிப்பிட்டு சுதிப்தா சென்னின் பெயரை முத்திரையாக பதித்து கொடுக்கும் நிதி சான்றிதழ் கொடுத்தார்கள். மேற்கு வங்காளம், வடகிழக்கு மாநிலங்கள், ஒரிசா, ஜார்கண்ட், மாநிலங்களில் 4 ஆண்டுகளில் 300க்கும் மேற்பட்ட அலுவலகங்கள் ஏற்படுத்தப்பட்டன.

சாரதா ரியால்ட்டியிலிருந்து ஆதாயம் ஈட்டிய நபர்கள்

இந்த நடைமுறையில் பல முகவர்கள், முதலீட்டாளர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு, சாரதா நிறுவனத்திற்கு பணம் கட்டாமலேயே ரசீதை மட்டும் மென்பொருளிலிருந்து எடுத்து கொடுத்து விட்டார்கள் என்று குற்றம் சாட்டுகிறார் சுதிப்தா சென்.

எந்தவிதமான மேற்பார்வையும் ஒழுங்குமுறை விதிகளும் இல்லாத நிறுவனத்தில் பெருமளவிலான பணம் புரளும் போது அவற்றிலிருந்து தமக்கு வேண்டியதை சுருட்டிக்கொள்ள பல்வேறு வகையினர் உருவாகிறார்கள். சாரதா குழுமத்திலிருந்து மக்கள் பணத்தை ஆட்டையை போட்டவர்களின் விபரங்களைப் பார்க்கலாம்.

ஒவ்வொரு தரப்பும் எத்தனை கோடி ரூபாய் எடுத்துக் கொண்டார்கள் என்று கணக்கு போட்டுக் கொண்டே வந்தால் ஒழுகிப் போன பணத்தின் அளவை தெரிந்து கொள்ளலாம்.

  1. பிரதிதின் என்ற வங்காள மொழி பத்திரிகையைச் சேர்ந்த குணாள் கோஷ் (இப்போது திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா உறுப்பினர்) என்பவர் சாரதா குழுமத்தை தாக்கி எழுத ஆரம்பித்தாராம். அவர், அப்போதைய மேற்கு வங்க மாநில நிதி அமைச்சர் அஸிம் தாஸ்குப்தாவைச் சந்தித்து சாரதா குழுமத்துக்கு எதிராக புகார் தெரிவித்தாராம். இத்தகைய ஊடகத் தாக்குதல்களை சமாளிக்க தானும் ஊடகத் துறையில் நுழைய வேண்டும் என்று சென் முடிவு செய்தாராம்.ஜெனிடிஸ் குரூப் என்ற நிறுவனத்தின் உரிமையாளர் சாந்தனு கோஷ் என்பவரிடமிருந்து சேனல்-10 என்ற வங்காள மொழி தொலைக்காட்சி சேனலை ரூ 24 கோடி விலை கொடுத்து வாங்கினாராம். அந்த சேனலுக்கு ரூ 6 கோடி கடன்கள் இருந்திருக்கின்றன.இதற்கிடையில் குணாள் கோஷூம் சிறின்ஜய் போஸ் (இருவரும் இப்போது திரிணாமூல் காங்கிரஸ் ராஜ்ய சபா உறுப்பினர்கள்) என்பவரும் பிரதிதின் நாளிதழுக்கு மாதம் ரூ 60 லட்சம் தர வேண்டும் என்றும் குணாள் கோஷை தொலைக்காட்சி சேனலின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமித்து மாதம் ரூ 15 லட்சம் சம்பளம் தர வேண்டும் என்றும் கட்டாயப்படுத்தினார்களாம். நடிகர் மிதுன் சக்ரவர்த்தியை சேனலின் பிராண்ட் தூதுவராக கொண்டு வந்து அவருக்கு மாதம் ரூ 20 லட்சம் கொடுக்க வைத்தார்களாம்.இப்படி ஒப்பந்தங்களை போட்டுக் கொண்டால் மாநில, மத்திய அரசுகளிடமிருந்து சென்னின் தொழில்களை பாதுகாப்பதாக சொன்னார்களாம். மேற்கு வங்கத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜியுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் சொன்னார்களாம். அடுத்த 2 ஆண்டுகளில் சென் பிரதிதின் பத்திரிகைக்கு ரூ 20 கோடி வரை கொடுத்தாராம். (இதுவரை மொத்தம் ரூ 44 கோடி)சேனல் 10ஐ நடத்துவதற்கு மாதம் ரூ 2 கோடி, குணாள் கோஷூக்கு ஒரு புதிய கார், அவரது செலவுகளுக்கு மாதா மாதம் ரூ 1.5 லட்சம் என்று செலவானதாம். சேனலின் பெயரை நிலைநாட்டுவதற்கு ரூ 50 கோடி செலவழித்ததாக கூறுகிறார் சென். (இதுவரை மொத்தம் ரூ 94 கோடி)ஆனால், குணாள் கோஷூம் சில முரடர்களும் சென்னின் அலுவலகத்துக்கு ஒரு நாள் வந்து ‘சென் ரூ 55 லட்சத்துக்கு சேனலை அவர்களுக்கு விற்று விட்டதாக’ ஆவணங்களில் கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கினார்களாம். கூடவே, காலோம் என்ற உருது செய்தித் தாளை அவர்களுக்கு மாற்றிக் கொடுத்ததாகவும் ஆவணம் தயாரித்தார்களாம்.
  2. அடுத்ததாக, சாந்தனு கோஷூம் (சேனல் 10 விற்றவர்) இந்திரஜித் சந்திரா என்பவரும் வந்து அவர்களுக்கு சொந்தமான ஒரு மோட்டர் பைக் தொழிற்சாலையிலிருந்து மாதம் ரூ 55,000 கோடி வருமானம் ஈட்டலாம் என்றும் அந்த நிறுவனத்துக்கு இருக்கும் ரூ 200 கோடி வங்கிக் கடனை ரூ 144 கோடிக்கு செட்டில்மென்ட் வாங்கி 3-5 ஆண்டுகளில் கட்டுவதாக ஏற்பாடு செய்வதாகவும் கூறி சென்னிடம் ரூ 22 கோடி தரும்படி கேட்டிருக்கிறார்கள். ரூ 2.6 கோடி ரூபாய் கொடுத்த பிறகு அதிலிருந்து பின்வாங்க விரும்பிய சென்னுக்கு மோட்டர்பைக் நிறுவனத்தின் 75% பங்குகளை கொடுத்து அவருக்கு பாதுகாப்பு வேண்டும் என்றால், ரூ 5 கோடி தர வேண்டும் என்றும் இந்திரஜித் சந்திராவை தலைமை செயல்பாட்டு அலுவலராக நியமித்து மாதம் ரூ 6 லட்சம் சம்பளம் தர வேண்டும் என்றும் ஏற்பாடு செய்து கொண்டார்களாம். சாந்தனு கோஷூக்கு ரூ 5 கோடியும், வங்கிகளுக்கு ரூ 29 கோடியும் கொடுத்திருக்கிறார் சென். (இதுவரை மொத்தம் ரூ 128 கோடி)பின்னர் குளோபல் ஆட்டோமொபைல்ஸ் என்ற மோட்டர் பைக் நிறுவனத்தை ஆய்வு செய்த குழு அதன் மதிப்பு ரூ 30 கோடி கூட இருக்காது என்று தெரிவித்ததாம். இதற்கிடையில் அந்த நிறுவனத்தை நடத்துவதற்காக சென் ரூ 20 கோடி செலவழித்திருக்கிறார். (இதுவரை மொத்தம் ரூ 148 கோடி)170 கோடி பைக்குகளை உற்பத்தி செய்ததாக கணக்கு காட்டி வங்கிகளிடமிருந்து கடன் வாங்கியிருக்கிறார்கள். அந்த அடிப்படையில் கலால் வரித் துறை ரூ 55 கோடி வரி கட்டுமாறு நோட்டிஸ் அனுப்பியிருக்கிறது. சாந்தனு கோஷ் இந்த வகை வங்கிக் கடனாக ரூ 186 கோடி ரூபாயும், நிறுவன பங்குகளை அடமானம் வைத்து பாரத ஸ்டேட் வங்கிக் கடனாக ரூ 25 கோடியும் சுருட்டியிருந்தாராம். அதற்காக பல வங்கி மேலாளர்களுக்கு விலையுயர்ந்த பரிசுப் பொருட்களை கொடுத்தாராம்.
  3. திருமதி மனோரஞ்சனா சின்ஹ் என்பவர் பாசிடிவ் குரூப்ஸ் நிறுவனத்தை சென்னுக்கு விற்பதற்காக தொடர்பு கொண்டாராம். அவரை சென்னையில் உள்ள வழக்கறிஞர் திருமதி நளினி சிதம்பரத்தின் அலுவலகத்திற்கு அழைத்துப் போனாராம். நளினி சிதம்பரம் வடகிழக்கு மாநிலங்களில் ஒரு தொலைக்காட்சி சேனலை ஆரம்பிப்பதற்கு குவகாத்தியில் தொடர்புகள் ஏற்படுத்திக் கொள்ள உதவுமாறும் அவரது நிறுவனத்துக்கு ரூ 42 கோடி கடன் வழங்குமாறும் சென்னிடம் கேட்டாராம். தனது கன்சல்டன்சி கட்டணமாக ஆண்டுக்கு ரூ 1 கோடி என்று அவரே நிர்ணயித்துக் கொண்டாராம். அந்த வகையில் ரூ 1 கோடிக்கு அதிகமான தொகை நளினி சிதம்பரத்துக்கு கொடுக்கப்பட்டதாம். (இதுவரை மொத்தம் ரூ 149 கோடி).அப்போது உள்துறை அமைச்சராக இருந்த ப சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்தின் ஆதரவு இருந்தால் மத்திய அரசுடனான சிக்கல்களை எளிதாக தீர்த்துக் கொள்ளலாம் என்று மனோரஞ்சனா சின்ஹ் சொன்னாராம்.மனோரஞ்சனா சின்ஹ்க்கு சொந்தமான ஜி.என்.என். இந்தியா என்ற நிறுவனத்திற்கு சென் ரூ 25 கோடி கொடுத்தாராம். மனோரஞ்சனா சின்ஹாவின் ஹோட்டல் செலவுகளுக்காக ரூ 3 கோடி வரை செலவழித்தாராம். (இதுவரை மொத்தம் ரூ 177 கோடி)மனோரஞ்சனா சின்ஹின் முன்னாள் கணவர் மதாங் சின்ஹ்க்கு பல்வேறு கணக்குகளில் ரூ 28 கோடி கொடுத்தாராம். (இதுவரை மொத்தம் ரூ 205 கோடி)
  4. ஹேமந்தா பிஸ்வாஸ் ஷர்மா என்பவர் பல்வேறு செலவுகளுக்காக ரூ 3 கோடி ரூபாய் எடுத்துக் கொண்டிருக்கிறார். (இதுவரை மொத்தம் ரூ 208 கோடி)
  5. அசாம் சட்டசபை உறுப்பினரும் அனுபூதி பப்ளிகேஷன்ஸ் உரிமையாளருமான அஞ்சன் தத்தாவுக்கு ரூ 6 கோடி கொடுத்து அவரது அச்சகத்தையும் செய்தித் தாளையும் சென் வாங்கியிருக்கிறார். (இதுவரை மொத்தம் ரூ 214 கோடி)
  6. 2010ம் ஆண்டு சாரதா ரியால்ட்டியின் நிதித் திட்டங்கள் பற்றி விளக்கம் கேட்டு இந்திய பங்கு பரிவர்த்தனை மையம் செபியிடமிருந்து கடிதம் வந்தவுடன் சென் மிகவும் பயந்து விட்டாராம். ஈஸ்ட் பெங்கால் கிளப்பின் செயலர் தேபபிரதா சர்க்கார் என்ற நீத்து அவரை சந்தித்து, செபி விஷயத்தை தான் சமாளித்து விடுவதாகச் சொன்னாராம். செபியின் சேர்மன் யு கே சின்ஹாவிடம் அவருக்கு நெருக்கம் உள்ளதாகவும் அவரது கூட்டாளி சஜ்ஜன் அகர்வால் மற்றும் மகன் சந்தீப் அகர்வால் இருவரும் அப்போதைய நிதி அமைச்சர், (இன்றைய ஜனாதிபதி) பிரணாப் முகர்ஜிக்கு நெருக்கமானவர்கள் என்றும் சொன்னாராம். ஆனால் இவர்கள் எல்லோருக்கும் கொடுப்பதற்கு பணம் வேண்டும்.2010ல் ரூ 5 கோடி, அதன் பிறகு ஒவ்வொரு மாதமும் ரூ 80 லட்சம் என்று மூன்று ஆண்டுகளில் ரூ 40 கோடி அவர்கள் வாங்கிக் கொண்டார்களாம். (இதுவரை மொத்தம் ரூ 254 கோடி)பணம் கொடுப்பதை நிறுத்தினால் ஈஸ்ட் பெங்கால் கிளப் துணையுடன் சென்னுக்கு நல்லதொரு பாடம் கற்பிப்பதாக நீத்து மிரட்டினாராம். நீத்து இடது சாரி கட்சிகளுடனும் பிற கட்சிகளுடனும் தொடர்புடையவராம். ஈஸ்ட் பெங்கால் கிளப் ஸ்பான்சர்ஷிப்புக்கும் புதிய கேலரி கட்டவும் சென் ரூ 5 கோடி கொடுத்தாராம். (இதுவரை மொத்தம் ரூ 259 கோடி)
  7. DY365 என்ற தொலைக்காட்சி சேனலின் உரிமையாளர் சஞ்சீப் அகர்வால் கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னை மிரட்ட ஆரம்பித்தாராம். அதை சமாளிக்க சேனல் DY365க்கு விளம்பரக் கட்டணமாக ரூ 27 லட்சம் கொடுத்தாராம். ஜார்கண்டிலுள்ள அவரது புராஜக்டில் ரூ 50 கோடி முதலீடு செய்ய சஞ்சீப் அகர்வால் கேட்டாராம். சென் தர மறுத்ததும் தவறான செய்திகளை வெளியிட்டு சென்னுக்கு எதிரான பிரச்சாரத்தை தனது தொலைக்காட்சி சேனலில் அவிழ்த்து விட்டாராம்.
  8. CNIBMல் வேலை செய்யும் சுமன் கல்யாண் சக்ரவர்த்தி என்பவர் டில்லியில் சேனல் ஆரம்பிக்க ஏற்பாடு செய்வதாக கூறி அவர் பெயரில் ரூ 50 லட்சமும் இன்னொருவர் பெயரில் ரூ 25 லட்சமும் வாங்கிக் கொண்டாராம்.

இது போன்று அடிதடி மிரட்டல்கள் முதல் அரசு அதிகார மிரட்டல்கள் வரை சமாளிப்பதற்காக சுமார் ரூ 270 கோடி ரூபாய் செலவழித்திருக்கிறார் சென்.

இனிமேல் என்ன நடக்கும்?

மக்களிடம் திரட்டிய பணத்திற்கு ஈடாக கைவசம் இருக்கும் சொத்து விபரங்களையும் சென் குறிப்பிடுகிறார்.

குவஹாத்தியில் ரூ 5 கோடி மதிப்புள்ள ஆறு மாடி கட்டிடம். காம்ரூப் மாவட்டத்தில் உள்ள சோனாபூரில் ரூ 6.75 கோடி மதிப்புள்ள நிலம், ரூ 10 கோடி மதிப்பிலான பசாங்க் பிஸ்கட் தொழிற்சாலை மற்றும் துப்ரி மார்கெட்டிலுள்ள கட்டிடம், ஜார்கண்டில் பொக்காரோ அருகில் 47 பிகா நிலம், ஒரிசா பாலாசோரில் நிலம் இவை சாரதா குழுமத்துக்கு சொந்தமாக, பல்வேறு நபர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாக சென் குறிப்பிடுகிறார். இவற்றின் மதிப்பு சுமார் ரூ 30 கோடி.

நிறுவனத்தை நடத்தும் போது ஏற்கனவே ரூ 2,000 கோடிக்கு கமிஷன், போனஸ், மார்கெட்டிங் அலவன்ஸ் என்று பணம் வழங்கியிருக்கிறாராம் சென். இந்த தொகை திரட்டிய மொத்த பணத்தில் 30% என்று வைத்துக் கொண்டால் மட்டும் மொத்தம் சுமார் ரூ 6,000 கோடி திரட்டியிருக்கிறது சாரதா ரியால்ட்டி.

சாரதா நிதி நிறுவனங்களில் பணத்தைப் போட்டவர்களுக்கு இழப்பீடு அளிக்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி ரூ 500 கோடி நிதி ஒதுக்கியிருக்கிறார். அந்த நிதியை திரட்ட புகையிலை பொருட்கள் விற்பனையில் 10% சிறப்பு வரி விதித்திருக்கிறார்.

பெரும்பான்மையான மக்களுக்கு பணம் திரும்பிக் கிடைக்கப் போவதில்லை என்பதுதான் நிதர்சனம்.

போராடும் மக்கள்
பணத்தை மீட்கக் கோரி போராடும் மக்கள்

சுதந்திரச் சந்தை, நிதிச் சந்தையின் அடிப்படையில் இயங்கும் முதலாளித்துவ பொருளாதாரத்தில் மக்களை ஏமாற்றும் இத்தகைய திட்டங்கள் தோன்றுவது தவிர்க்க முடியாதது. அதுவும் 1990களுக்குப் பிறகு தனியார் மய, தாராள மய பொருளாதார கொள்கைகள் அமல்படுத்தப்பட்ட பிறகு கல்வி, மருத்துவம், ஓய்வூதியம் போன்ற அடிப்படைத் தேவைகள் ஒவ்வொன்றுக்கும் தனியார் நிறுவனங்களிடம் பெருமளவு கட்டணம் கொடுக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

ஒரு சராசரி உழைக்கும் வர்க்க அல்லது நடுத்தர வர்க்க குடும்பம் அன்றாட உணவு, வீட்டு தேவைகள், போக்குவரத்து, பொருட்கள் வாங்குதல், வீட்டு வாடகை இவற்றுக்காக சம்பாதிக்க வேண்டும்; கூடவே யாருக்காவது உடல் நிலை சரியில்லாமல் போனால் மருத்துவமனைக்கு கொடுக்க பணம் சேர்க்க வேண்டும்; எதிர்காலத்தில் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க, கல்லூரியில் சேர்க்க தேவைப்படும் கட்டணத்தை சிறிது சிறிதாக சேர்த்து வைக்க வேண்டும்; உழைக்கும் வயது போய் முதுமை வந்த பிறகு தேவையான பணத்தையும் சேர்த்து வைக்க வேண்டும்; குடியிருக்க வீடு வேண்டுமானாலும் பணம் சேமிக்க வேண்டும்.

ஆனால் சேமிக்கும் பணத்தின் எதிர்கால மதிப்பு குறைந்து கொண்டே போகிறது. ரூ 10,000க்கு இன்று வாங்க முடிகிற அளவு பொருட்களையும் சேவைகளையும் 1 ஆண்டுக்குப் பிறகு வாங்குவதற்கு ரூ 11,000 தேவைப்படலாம். (10% பணவீக்கம் என்று சொல்லப்படும் விலைவாசி உயர்வு). சேமிக்கும் பணத்தை அதன் வாங்கும் மதிப்பு குறையாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டியது கட்டாயமாகிப் போகிறது.

இந்த இலக்கை நோக்கித்தான் மக்கள் ஓடுகிறார்கள். அதிகரித்துக் கொண்டே வரும் சேமிப்புத் தேவைகளையும் (கல்வி, மருத்துவம், ஓய்வூதியம் தனியார் மயம்), குறைந்து கொண்டே வரும் சேமிக்கும் வாய்ப்புகளையும் (சேமநல நிதித் திட்டம் தனியார் மயம், ஓய்வூதியத் திட்டம் ரத்து) எதிர் கொள்ளும் மக்களின் தேடலை பயன்படுத்திக் கொண்டு மோசடி நிதி நிறுவனங்கள் சில ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்களை ஏமாற்றி கொள்ளை அடிக்கின்றன.

உழைக்கும் மக்கள் வேலை செய்யும் போது, கூலி பெறும் போது, பொருட்களை வாங்கும் போது, சேமிக்கும் போது என்று ஒவ்வொரு கட்டத்திலும் சுரண்டப்படுவதுதான் முதலாளித்துவ பொருளாதார அமைப்பின் அடிப்படை. இந்த அமைப்பை தூக்கி எறிந்து அனைவருக்கும் சமூகக் கல்வி, சமூக மருத்துவம், சமூக பராமரிப்பு என்ற சோசலிசத்தை உருவாக்குவதுதான் இது போன்ற மோசடி திட்டங்களை ஒழிப்பதற்கான ஒரே வழி.

– அப்துல்

___________

மேலும் படிக்க
Sudipta Letter
Promoter at large, no trace of depositors money on Saradha
Saradha Group crisit reaches CMs doorstep

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க