
ஈழ அகதிகளுக்குத் தமிழகத்தில் 112 திறந்தவெளி முகாம்களும், 2 சிறப்பு முகாம்களும் உள்ளன. பூந்தமல்லியில் உள்ள சிறப்பு முகாமில் 7 ஈழத்தமிழர்களும், செங்கல்பட்டு முகாமில் 39 தமிழர்களும் 4 நைஜீரியர்களும் வைக்கப்பட்டிருக்கின்றனர். பூந்தமல்லியில் 7 பேரைப் பாதுகாக்க 160 ஆயுதம் தாங்கிய காவலர்கள், அவர்களுக்கான செலவு மாதம் ரூ.34 இலட்சம். ஆனால், உள்ளே இருப்பவர்களுக்கோ ஒரு நாளுக்கான படி 70 ரூபாதான். அதற்குள் உணவு, பாத்திரம், எரிபொருள் உள்ளிட்ட அனைத்தையும் வாங்கி, அவர்களே சமைத்துத்தான் சாப்பிடவேண்டும்.
இந்தச் சிறப்பு முகாம்கள் 1990 – இல் பல்வேறு ஈழ இயக்கங்களைச் சேர்ந்தவர்களையும் அடைத்து வைப்பதற்காக உருவாக்கப்பட்டவை. பின்னர், ராஜீவ் கொலை தொடர்பாகப் பல கைதிகள் இங்கு விசாரிக்கப்பட்டனர். அதற்குப் பின், தமிழகத்தின் முகாம்களிலும், வெளியிலும் இருக்கின்ற ஈழத்தமிழர்களை ஒடுக்குவதற்கும், பணம் பிடுங்குவதற்குமான இடங்களாக இந்த இரண்டு சிறப்பு முகாம்களும் கியூ பிரிவு போலீசால் பயன்படுத்தப்படுகின்றன. 2009-க்குப் பின் தங்கள் மீதான அடக்குமுறை அதிகரித்துவிட்டதாக கூறுகின்றனர், சிறப்பு முகாம் அகதிகள்.
சிறப்பு முகாம் என்பது சட்டப்படி சிறை அல்ல. “வெளிநாட்டவர் சட்டம், 1946” இன் 3(2)e- பிரிவின் படி இந்தியாவுக்கு வந்திருக்கும் ஒரு வெளிநாட்டவரை, அவருக்கு நிலையான முகவரி இல்லாத காரணத்தினால், தனது கண்காணிப்பின் கீழ் ஒரு மாவட்ட ஆட்சியர் தடுத்து வைப்பதற்கான ஒரு இடம்.
ஆனால், இரு சிறப்பு முகாம்களிலும் வைக்கப்பட்டிருக்கும் ஈழ அகதிகள் அனைவரும் முகவரி பதிந்தவர்கள். மேற்கண்ட வரையறைகள் எதிலும் வராதவர்கள். சொல்லப்போனால், ஒரு ஈழ அகதிக்கு நீதிமன்றம் பிணை வழங்கி விட்டாலும், அவரை வெளியில் விடாமல் தடுத்து வைப்பதற்கான இடமாகவே இதனை கியூ பிரிவு போலீசு பயன்படுத்துகிறது. இதற்காகவே பொய் வழக்கு போடுகிறது. வெறும் 2000 ரூபாய் ஏமாற்றி விட்டதாக பொய்வழக்குப் போட்டு, 6 மாதமாக முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் உண்டு. செங்கல்பட்டு முகாமில் இதுவரை அடைக்கப்பட்ட 3600 பேரில், 6 பேர் மட்டுமே நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டிருக்கின்றனர் என்கிறார் செங்கல்பட்டு முகாமில் வைக்கப்பட்டிருக்கும் ஈழ நேரு என்பவர்.

ஏப்ரல் 19-ஆம் தேதி முதல் 12 நாட்களாக இவரும். சிறீகாந்தன், செல்வகுமார் ஆகியோரும் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தி வருகின்றனர். தன் குடும்ப உறுப்பினர் உள்ளிட்ட சிலரை ஆஸ்திரேலியா அனுப்ப முயற்சித்தார் என்பதுதான் காந்தன் மீதான குற்றச்சாட்டு. ஒரு கால் ஊனமான இவரை “ஈழ அகதி நாயே, எங்க சோத்த தின்னுட்டு எங்க காலுக்கு கீழ கிடக்கறத விட்டுட்டு சட்டம் பேசிறியா, இன்னொரு காலையும் உடச்சாதான் சரியாகும்” என்று கூறித் தலைகீழாக தொங்கவிட்டு சித்திரவதை செய்து வெள்ளைத்தாள்களில் கையெழுத்து வாங்கியிருக்கின்றனர். நீதிமன்றம் பிணை கொடுத்தும் வெளியே விடாமல், அப்படியே சிறப்பு முகாமுக்கு மாற்றியிருக்கின்றனர். இவர் மனைவி மற்றும் பிள்ளைகளை கடந்த 9 மாதங்களில் இரண்டு முறை மட்டுமே பார்க்க அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
சசிகரன் என்ற இளைஞர் ஆஸ்திரேலியா செல்ல முயன்று 2012 அக்டோபரில் கைது செய்யப்பட்டவர். சிறுவனாக இருந்ததால், புழல் சிறை அதிகாரிகள் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பிவிட்டனர். கஷ்டப்பட்டு உயர் நீதிமன்றம் போய் பிணை உத்தரவு வாங்கியிருக்கிறார் இவரது தாய். அதற்குள் இவரைச் சிறப்பு முகாமில் அடைத்து அம்மாவைப் பார்க்க விடாமல் செய்து விட்டது கியூ பிரிவு போலீசு. தாயைப் பார்க்க முடியாமல், எப்போது வெளியே வருவோம் என்ற உத்திரவாதமும் இல்லாத நிலையில், மனம் நொந்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார் சசிகரன்.
இப்படி ஈழ அகதிகளைத் தற்கொலைக்குத் தள்ளும் அபூர்வ சிந்தாமணிதான், தனி ஈழம் வாங்கித் தரவிருக்கும் தாயாம்!
– அஜித்.
________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – மே 2013
________________________________________________________________________________
agathikal endru solla vendam nanbare elatamilarkal