Sunday, September 15, 2024
முகப்புபோலி ஜனநாயகம்இராணுவம்சத்தீஸ்கர் தாக்குதல் குறித்து மாவோயிஸ்டுகள் அறிக்கை !

சத்தீஸ்கர் தாக்குதல் குறித்து மாவோயிஸ்டுகள் அறிக்கை !

-

சத்தீஸ்கர் தாக்குதல் குறித்து மாவோயிஸ்டுகள் வெளியிட்டுள்ள அறிக்கை பல்வேறு ஊடகங்களில் மிக மிக சுருக்கப்பட்டு ஓரிரு வரிகளில் வெளியிடப்பட்டிருக்கிறது. இங்கே அதன் முழுமையான அறிக்கையை தமிழாக்கம் செய்து வெளியிடுகிறோம். இதன் மூலம் தாக்குதலின் பின்னணியை அவர்கள் தரப்பிலிருந்து விரிவாக அறிந்து கொள்ள முடியும். இந்த அறிக்கையின் ஆங்கில மூலம் BANNIEDTOUGHT.NET என்ற தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது.

– வினவு

__________________________________

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்), தண்டகாரண்யா சிறப்பு மண்டல குழு

பாசிச சல்வா ஜூடும் தலைவர் மகேந்திர கர்மாவை அழித்தொழித்தல்: பஸ்தார் பழங்குடி மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட மனிதத் தன்மையற்ற கொடுமைகள், கொடூரமான கொலைகள், முடிவற்ற பயங்கரவாதத்துக்கான நியாயமான எதிர்வினை!

உயர் மட்ட காங்கிரஸ் தலைவர்கள் மீதான தாக்குதல் : பல மாநில அரசுகளுடன் கூட்டு அமைத்துக் கொண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நடத்தி வரும் பாசிச பச்சை வேட்டைக்கு தவிர்க்க முடியாத பதிலடி!

க்கள் விடுதலை கொரில்லா படை மே 25, 2013 அன்று காங்கிரஸ் பேரணி ஒன்றைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட வாகனங்களின் மீது பெரும் தாக்குதல் நடத்தியது. அந்த தாக்குதலில் ஒடுக்கப்பட்ட பஸ்தர் மக்களின் எதிரியான மகேந்திர கர்மா, காங்கிரஸ் மாநில கிளையில் தலைவர் நந்த குமார் படேல் உள்ளிட்டு குறைந்தது 27 காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் காவல் துறையினர் கொல்லப்பட்டனர். வரப் போகும் சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து அவர்களது ‘பரிவர்த்தன் யாத்ரா’ (மாற்றத்துக்கான யாத்திரை) இயக்கத்தின் ஒரு பகுதியாக பஸ்தர் பகுதியில் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பயணம் செய்த போது இந்த தாக்குதல் நடந்தது.

அரசு படைகள்
தாக்குதல் நடந்த இடத்தில் அரசு படைகள்

இந்த தாக்குதலில் முன்னாள் மத்திய அமைச்சரும், பழம்பெரும் காங்கிரஸ் தலைவருமான வித்யா சரண் சுக்லா உட்பட குறைந்தது 30 பேர் காயமடைந்தனர். கொடுங்கோலன், கொலைகாரன், பாலியல் வன்முறை குற்றவாளி, கொள்ளைக்காரன் என்று மக்களால் பழிக்கப்பட்ட, ஊழல் வாதி என்று தூற்றப்பட்ட மகேந்திர கர்மா நாய் போல கொல்லப்பட்டது பஸ்தர் பகுதி முழுவதும் திருவிழா போன்ற கொண்டாட்டத்தை உருவாக்கியிருக்கிறது. முன்னாள் மாநில உள்துறை அமைச்சர் நந்த் குமார் பட்டேலும் மக்களை ஒடுக்கும் வரலாறு உடையவர். அவரது பதவி காலத்தில்தான் மத்திய ரிசர்வ் காவல் படை (சிஆர்பிஎஃப்) முதன் முதலில் பஸ்தர் பகுதிக்கு அனுப்பப்பட்டது.

உள்துறை அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பொறுப்பு வகித்த முன்னாள் மத்திய அமைச்சர் வி சி சுக்லா மக்களின் எதிரி என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அவர் ஏகாதிபத்தியங்கள், தரகு முதலாளிகள், அதிகார வர்க்க முதலாளிகள் மற்றும் பண்ணையார்களின் விசுவாசமிக்க ஊழியராக பணி புரிந்தார். மக்களைச் சுரண்டும் அரசின் திட்டங்களை உருவாக்கி, செயல்படுத்துவதில் முக்கிய பங்காற்றியவர் அவர். இந்தத் தாக்குதலின் முக்கிய நோக்கம் மகேந்திர கர்மாவையும் சில எதிர் புரட்சி காங்கிரஸ் தலைவர்களையும் ஒழித்துக் கட்டுவதாகும்.

இருப்பினும், இந்த பெரும் தாக்குதலில் நமது கொரில்லா படைகளுக்கும் போலீஸ் படைகளுக்கும் இடையே நடந்த 2 மணி நேர துப்பாக்கிச் சண்டையில் மாட்டிக் கொண்டு நமது எதிரிகள் இல்லாத சில அப்பாவி மக்களும் கீழ் மட்ட காங்கிரஸ் தொண்டர்களும் கொல்லப்படவும் காயமடைவும் நேர்ந்திருக்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) யின் தண்டகாரண்யா சிறப்பு மண்டல குழு இதற்காக வருந்துவதோடு, கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தனது துயரங்களையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) யின் தண்டகாரண்யா சிறப்பு மண்டல குழு இந்த தாக்குதலுக்கான முழு பொறுப்பையும் ஏற்றுக் கொள்கிறது. இந்த துணிச்சலான தாக்குதலை முன்நின்று நடத்திய மக்கள் விடுதலை கொரில்லா படைத் தளபதிகளுக்கும், இந்த வெற்றியில் பங்களித்த செம்படை வீரர்களுக்கும், இந்த தாக்குதலுக்கு முனைப்பான ஆதரவு அளித்து பங்கேற்ற மக்களுக்கும், பஸ்தார் பகுதியின் அனைத்து புரட்சிகர மக்களுக்கும் எமது புரட்சிகர வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

மக்களுக்கு எதிராக வன்முறை, கொடுமைகள், படுகொலைகள் இவற்றை நிகழ்த்தும் பாசிஸ்டுகள் ஒரு போதும் மன்னிக்கப்பட மாட்டார்கள், அவர்கள் தவிர்க்க முடியாமல் மக்களால் தண்டிக்கப்படுவார்கள் என்ற வரலாற்று உண்மையை இந்த தாக்குதல் மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறது.

பழங்குடித் தலைவர் என்று சொல்லப்படும் மகேந்திர கர்மா ஒரு நிலப்பிரபுத்துவ பெரும் நிலவுடமை குடும்பத்தில் பிறந்தவர். அவரது தாத்த மாசா கர்மாவும், அப்பா போட்டா மாஞ்ஜியும் அவர்களது காலத்தில் மக்களை கொடுமைப்படுத்துவதில் புகழ் பெற்று விளங்கியதோடு அப்போதைய காலனிய ஆட்சியாளர்களின் நம்பிக்கைக்குரிய ஏஜென்டுகளாகவும் செயல்பட்டார்கள். அவரது குடும்பத்தின் மொத்த வரலாறும் பழங்குடி மக்களை மனிதத் தன்மையற்று சுரண்டுவதும் ஒடுக்குவதுமாக இருந்தது.

1975-ம் ஆண்டு அவர் சட்டப்படிப்பு படித்துக் கொண்டிருக்கும் போது அகில இந்திய மாணவர் முன்னணி உறுப்பினராக மகேந்திர கர்மாவின் அரசியல் வாழ்க்கை ஆரம்பித்தது. முதலில் அவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) சார்பில் சட்ட மன்ற உறுப்பினராக 1978-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1981-ல் சிபிஐ அவரை வேட்பாளராக நியமிக்காததால் காங்கிரசில் சேர்ந்தார். 1996-ல் அவர் காங்கிரசிலிருந்து பிரிந்து சென்ற மாதவ ராவ் சிந்தியா குழுவுடன் சேர்ந்து இந்திய நாடாளுமன்றத்துக்கு சுயேச்சை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.

1996-ம் ஆண்டு ஆறாவது பட்டியலை அமல்படுத்த கோரி பஸ்தரில் ஒரு பெரும் இயக்கம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) அதற்கு முக்கியத் தலைமை வகித்தாலும், நமது கட்சிதான் – அப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மக்கள் யுத்தம்) – அந்த இயக்கத்தில் முனைப்புடன் செயல்பட்டு மக்களை பெருமளவில் ஒன்று திரட்டியது. ஆனால் மகேந்திர கர்மா அந்த இயக்கத்துக்கு எதிராக தீவிர எதிர்நிலை எடுத்தார். பஸ்தருக்கு குடிபெயர்ந்து வந்து பெருமளவு சொத்து சேர்த்து விட்ட சுயநலமிக்க நகர்ப்புற வர்த்தகர்களின் பிரதிநிதியாக தன்னை நிரூபித்துக் கொண்டார். அப்போதுதான் பழங்குடி மக்களுக்கு எதிரான, தரகு முதலாளிகளுக்கு ஆதரவான அவரது இயல்பு மக்களிடம் அம்பலப்பட்டது. 1980-களிலிருந்தே பஸ்தர் பகுதியில் பெருநிறுவனங்களுடனும், முதலாளித்துவ வர்க்கத்துடனும் உறவுகளை அவர் உறுதிப் படுத்தி வந்திருக்கிறார்.

1999-ல் ‘மாலிக் மக்பூஜா’ என்ற மிகப்பெரிய ஊழலில் கர்மாவின் பெயர் அம்பலப்படுத்தப்பட்டது. 1992-96 கால கட்டத்தில் மரக் கடத்தல்காரர்களுடன் கூட்டு சேர்ந்து பழங்குடி மக்களை ஏமாற்றியும் வருவாய்த் துறை அதிகாரிகள், வனத் துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியருடன் சேர்ந்து சதி செய்தும் மகேந்திர கர்மா பல கோடி ரூபாய் சொத்து சேர்த்ததை லோக்ஆயுக்தா அறிக்கை வெளிப்படுத்தியது. மத்திய புலனாய்வு துறை (சிபிஐ) விசாரணை ஒன்றுக்கு உத்தரவிடப்பட்டாலும், வழக்கம் போல குற்றவாளிகளுக்கு எந்த பாதிப்பும் வந்துவிடவில்லை.

மகேந்திர கர்மா ஒன்றுபட்ட மத்திய பிரதேசத்தில் சிறைத்துறை அமைச்சராக இருந்தார். பின்னர் சத்தீஸ்கர் மாநிலம் தனியாக பிரிக்கப்பட்ட பிறகு அஜித் ஜோகி அமைச்சரவையில் தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சரானார். அந்த சமயத்தில் ரோமல்ட்/என்எம்டிசி சார்பில் திட்டமிடப்பட்ட இரும்பு உருக்காலை அமைப்பதற்காக நகர்னார் பகுதியில் கட்டாய நிலப் பறிப்பு நடந்தது. உள்ளூர் மக்கள் தமது நிலத்தை விட்டுக் கொடுக்க மறுக்க, மகேந்திர கர்மா மக்களுக்கு எதிராக முதலாளிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தார். கொடுமையான போலீஸ் படையின் உதவியுடன் மக்களை ஒடுக்கி வன்முறை மூலம் நிலங்களை பிடுங்குவதில் அவர் முக்கிய பங்கு வகித்தார். நகர்னாரில் தமது நிலங்களை இழந்த மக்களுக்கு அரசாங்கம் உறுதியளித்தது போல நிவாரணமும் வேலை வாய்ப்புகளும் இன்று வரை அளிக்கப்படவில்லை. அவர்கள் சிதறி பிரிந்து போகும் நிர்ப்பந்தத்துக்கு ஆளானார்கள்.

ஆரம்பத்திலிருந்தே மகேந்திர கர்மா புரட்சிகர இயக்கத்தின் திறம்பட்ட எதிரியாக நின்றார். அதற்கான காரணம் தெளிவானது. வழக்கமான பண்ணையார் குடும்பத்தில் பிறந்து, பெரு நிறுவனங்களுக்கும் சுரண்டல் வர்க்கங்களுக்கும் ஏஜென்டாக வளர்ந்தவர் அவர். புரட்சிகர இயக்கத்துக்கு எதிரான முதல் ஜன் ஜாக்ரண் (விழிப்புணர்வு) இயக்கம் 1990-91ல் ஆரம்பிக்கப்பட்டது. திரிபுவாத இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) அந்த எதிர்ப் புரட்சி நடவடிக்கைகளில் பங்கேற்றது. கர்மாவும் அவரது பண்ணையார் குடும்ப உறவினர்கள் பலரும் அதில் தீவிரமாக பங்கேற்றனர். இரண்டாவது ஜன் ஜாக்ரண் இயக்கம் 1997-98ல் மகேந்திர கர்மாவே தலைமையேற்று தொடங்கப்பட்டது.

இது மகேந்திர கர்மாவின் சொந்த கிராமம் பராஸ்பாலிலும் அதன் சுற்றுப் புற கிராமங்களிலும் ஆரம்பிக்கப்பட்டு பைரம்கர், குட்ரூ பகுதிகள் வரை பரவியது. நூற்றுக் கணக்கான மக்கள் சித்திரவதை செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டனர். பெரும் எண்ணிக்கையிலான கொள்ளை அடித்தல், வீடுகளுக்கு தீ வைத்தல் போன்ற சம்பவங்கள் நடந்தன. பெண்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டனர். இருப்பினும், நமது கட்சியின் தலைமையிலும் மக்கள் திரள் அமைப்புகளின் கீழும் ஒன்று திரண்ட மக்கள் இந்த எதிர் புரட்சி தாக்குதலை உறுதியாக எதிர்த்து நின்றனர். மிகக் குறுகிய காலத்தில் அந்த தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டன.

பின்னர் புரட்சிகர இயக்கம் மேலும் உறுதிப்பட்டது. நிலப்பிரபுத்துவத்துக்கு எதிரான போராட்டங்கள் பல பகுதிகளில் தீவிரப்படுத்தப்பட்டன. மக்கள் திரள் எதிர்ப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மகேந்திர கர்மாவின் சகோதரரான போதியா பட்டேல் போன்ற பண்ணையார்களும் அவரது நெருங்கிய உறவினர்களும் கொல்லப்பட்டனர். பல கிராமங்களில் நிலப்பிரபுத்துவ சக்திகளும் பிற்போக்கு மேட்டுக்குடியினரும் அதிகாரத்திலிருந்து தூக்கி எறியப்பட்டு மக்களின் புரட்சிகர அதிகார அமைப்புகளை உருவாக்கும் நடைமுறைகள் ஆரம்பமாயின. ஏழை, நிலமற்ற விவசாயிகளுக்கு பண்ணையார்களின் நிலங்கள் பிரித்துக் கொடுக்கப்பட்டன; பண்ணையார்களுக்கு மக்களை அபராதங்கள் கொடுக்க வைக்கும் பழக்கங்களும் நிறுத்தப்பட்டன. இவை மகேந்திர கர்மா போன்ற நிலப்பிரபுத்துவ சக்திகளுக்கு கடுப்பேற்றின. முற்போக்கு மாற்றங்களான, பெண்களை கட்டாயமாக மணமுடித்துக் கொடுப்பது, பலதார மணம் ஆகியவற்றை தடுப்பதை அவர்கள் எதிர்த்தனர்.

சல்வா ஜூடும்
சல்வா ஜூடும் கொடூரங்கள்

அதே நேரத்தில் பஸ்தர் பகுதியில் இயற்களை வளங்களை கொள்ளை அடிக்கும் முயற்சிகளை ஆரம்பித்திருந்த பெருநிறுவன குழுமங்களான டாட்டாக்களும் எஸ்ஸார்களும் புரட்சிகர இயக்கத்தை ஒரு தடையாக கருதினர். எனவே, அவர்கள் எதிர்புரட்சி சக்திகளா மகேந்திர கர்மா போன்றவர்களுடன் இயல்பாகவே கூட்டு சேர்ந்தனர். அவர்களது விருப்பம் போல கொள்ளையடிப்பதற்கு சாதகமான சூழலை உருவாக்குவதற்காக அவனுக்கு கோடிக்கணக்கில் நிதி அளித்தனர். அதே நேரத்தில் உண்மையான புரட்சிகர அமைப்புகளின் இணைப்பின் மூலம் நாடு தழுவிய ஒருங்கிணைந்த கட்சியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) உருவானதை தொடர்ந்து சுரண்டும் ஆளும் வர்க்கங்கள் ஏகாதிபத்தியங்களின் வழிகாட்டலின்படி புரட்சிகர இயக்கத்தை நசுக்கி விடுவதற்கு அவர்களது எதிர் புரட்சி நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியிருந்தனர்.

அவ்வாறாக, பஸ்தர் பகுதியில் காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சிகளின் ரகசிய உடன்பாட்டுடன் ‘சல்வா ஜூடும்’ என்ற பெயரில் ஒரு கொடும் தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டது. சோயம் மூக்கா, ராம்புவன் குஷ்வாஹா, அஜய் சிங், விக்ரம் மாண்டவி, கன்னு பட்டேல், மதுக்கர் ராவ், கோட்டா சின்னா போன்ற மகேந்திர கர்மாவின் அடியாட்களும் உறவினர்களும் சல்வா ஜூடுமின் முக்கிய தலைவர்களாக உருவெடுத்தனர்.

சல்வா ஜூடும் பஸ்தர் மக்களின் வாழ்க்கை மீது ஏற்படுத்திய அழிவுகள் மற்றும் கொடுமைகளின் கடுமையுடன் ஒப்பிடும்படியான வரலாற்று உதாரணங்களை எதுவும் சொல்ல முடியாது. அந்த கூலிப் படை ஆயிரத்துக்கும் அதிகமான மக்களை கொடூரமாக கொலை செய்தது; 640 கிராமங்களை எரித்து சாம்பலாக்கியது; ஆயிரக்கணக்கான வீடுகளை கொள்ளையடித்தது; கோழிகளையும், ஆடுகளையும், பன்றிகளையும் அடித்து தின்றது அல்லது எடுத்துச் சென்றது; 20 லட்சத்துக்கும் அதிகமான மக்களை அவர்களது கிராமங்களிலிருந்து துரத்தியடித்தது; 50 ஆயிரத்துக்கும் அதிகமான மக்களை அரசு நடத்திய ‘நிவாரண’ முகாம்களுக்கு இழுத்துச் சென்றது. அவ்வாறாக சல்வா ஜூடும் மக்களால் வெறுக்கப்படுவதாக மாறியது. நூற்றுக்கணக்கான பெண்கள் கூட்டு பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டனர். பல பெண்கள் பாலியல் வல்லுறவுக்குப் பின் கொலை செய்யப்பட்டனர். பல இடங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக கொல்லப்பட்டனர்.

சல்வா ஜூடும், போலீஸ் மற்றும் துணை இராணுவப் படைகள் – குறிப்பாக நாகா மற்றும் மிசோ படைப் பிரிவுகள் – இவற்றைச் சேர்ந்த ரௌடிகள் மக்கள் மீது நடத்திய கொடுமைகளும் அழிவுகளும் அனைத்து வரம்புகளையும் கடந்தன. பல இடங்களில் மக்கள் கொடூரமாக துண்டு துண்டாக வெட்டப்பட்டு ஆறுகளில் எறியப்பட்டனர். சேரலி, கோத்ரபால், மன்கேலி, கர்ரேமார்கா, மோஸ்லா, முண்டேர், பதேடா, பரால்னார், பூம்பாத், ககன்பள்ளி உட்பட பல கிராமங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக கொல்லப்பட்டனர். நூற்றுக் கணக்கான பழங்குடி இளைஞர்கள் சிறப்புக் காவல் அதிகாரிகளாக அமர்த்தப்பட்டு ஈவு இரக்கமற்ற கிரிமினல்களாக மாற்றப்பட்டனர். கூட்டங்கள், பேரணிகள் நடத்தும் முகாந்திரத்தோடு பல கிராமங்களின் மீதான தாக்குதல்களை மகேந்திர கர்மா தானே முன்னின்று நடத்தினார்.

மகேந்திர கர்மாவின் நேரடி கட்டளையின் பேரில் பல பெண்கள் முரடர்களால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டனர். கிராமங்களை எரிப்பது, மக்களை சித்திரவதை செய்து கொல்வது ஆகிய பல சம்பவங்களில் அவர் நேரடியாக ஈடுபட்டிருந்தார். எனவே, பஸ்தார் மக்களை பொறுத்த வரை மகேந்திர கர்மா மனிதத் தன்மையற்ற கொலைகாரனாகவும், பாலியல் குற்றவாளியாகவும், கொள்ளைக்காரனாகவும், பெரு முதலாளிகளின் விசுவாசமான ஏஜென்டாகவும் மனதில் பதிந்திருந்தான். பஸ்தரின் மொத்த மக்கள் திரளும், அவன் தண்டிக்கப்பட வேண்டும் என்று பல ஆண்டுகளாக நமது கட்சியையும் மக்கள் விடுதலை கொரில்ல படையையும் கேட்டு வந்தனர். அவர்களில் பலர் தாமாகவே அந்த பணிக்கு தமது நேரடி ஆதரவை தர முன் வந்தனர். சில முயற்சிகளும் செய்யப்பட்டன, ஆனால் சில சிறு தவறுகளாலும் பிற காரணங்களாலும் அவன் தப்பி விட முடிந்தது.

இந்த நடவடிக்கை மூலம் சல்வா ஜூடும் ரௌடிகளாலும் அரசு படைகளாலும் கொடுமையாக கொலை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான பழங்குடி மக்களுக்காக நாம் பழி தீர்த்துக் கொண்டிருக்கிறோம். கொடும் வன்முறைக்கும், அவமானத்துக்கும், பாலியல் தாக்குதல்களுக்கும் உள்ளாக்கப்பட்ட நூற்றுக் கணக்கான தாய்மார்கள், சகோதரிகள் சார்பிலும் நாம் இந்த பழி தீர்த்தலை செய்திருக்கிறோம். தமது வீடுகளையும், கால்நடைகளையும், கோழிகளையும் ஆடுகளையும், உடைகளையும், தானியங்களையும், பயிர்களையும், வீட்டு பொருட்களையும் அனைத்தையும் இழந்து மனிதர் வாழ முடியாத கேவலமான நிலையில் வாழ கட்டாயப்படுத்தப்பட்ட ஆயிரக்கணக்கான பஸ்தார் மக்களுக்கும் நாம் பழி தீர்த்திருக்கிறோம்.

மன்மோகன் சிங்இந்த தாக்குதலுக்குப் பின் பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, சத்தீஸ்கர் முதலமைச்சர் ராமன் சிங் போன்றவர்கள் இந்த தாக்குதலை ஜனநாயகத்தின் மீதும் ஜனநாயக மாண்புகளின் மீதுமான தாக்குதலாக சித்தரித்திருக்கின்றனர். சுரண்டும் வர்க்கங்களின் வளர்ப்பு நாய்களுக்கு ஜனநாயகத்தின் பெயரை எடுப்பதற்கு என்ன உரிமை இருக்கிறது என்று கேட்க வேண்டியிருக்கிறது. மே 17-ம் தேதி பிஜப்பூர் மாவட்டத்தின் ஏட்ஸ்மேட்டா கிராமத்தில் 3 அப்பாவி குழந்தைகள் உட்பட எட்டு பேர் போலீஸ் மற்றும் துணை இராணுவப் படைகளால் கொல்லப்பட்ட போது இந்த தலைவர்களில் யாரும் ஏன் ‘ஜனநாயகத்தை’ பற்றி நினைக்க முயற்சிக்கவில்லை?

ஜனவரி 20-க்கும் 23-க்கும் இடையே பீஜப்பூர் மாவட்டத்தின் தோடி தும்னார், பிடியா கிராமங்களில் உங்கள் படைகள் தாக்கி 20 வீடுகளையும் மக்களால் நடத்தப்பட்ட பள்ளிக் கூடத்தையும் எரித்துப் போட்ட போது உங்கள் ‘ஜனநாயகம்’ அங்கு செழித்ததா? சரியாக 11 மாதங்களுக்கு முன், ஜூன் 28 2012 அன்று இரவு சார்கின்குடா கிராமத்தில் 17 பழங்குடி மக்கள் கொல்லப்பட்டு 13 பெண்கள் கூட்டு பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டனர். அந்த சம்பவங்கள் உங்கள் ‘ஜனநாயக மாண்புகளின்’ ஒரு பகுதியா? உங்கள் ‘ஜனநாயகம்’ மகேந்திர கர்மா போன்ற கூட்டுக் கொலை குற்றவாளிகளுக்கும் நந்த குமார் பட்டேல் போன்ற ஆளும் வர்க்க ஏஜென்டுகளுக்கும் மட்டும்தான் பொருந்துமா? பஸ்தரின் ஏழை பழங்குடி மக்கள், முதியவர்களும், குழந்தைகளும், பெண்களும் உங்கள் ‘ஜனநாயகத்தின்’ கீழ் வருகிறார்களா, இல்லையா? பழங்குடிகளின் படுகொலைகள் உங்கள் ‘ஜனநாயகத்தின்’ ஒரு பகுதியா? இந்த தாக்குதலுக்கு எதிராக உரக்க கூக்குரலிடும் யாருக்காவது இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லத் தெரியுமா?

2007-ன் இறுதியில், மக்களின் எதிர் போராட்டங்களின் மூலம் சல்வா ஜூடும் தோற்கடிக்கப்பட்டது. 2009-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு முன்னணியின் பச்சை வேட்டை நடவடிக்கை என்ற பெயரில் அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் வழிகாட்டலும், உதவியும், ஆதரவும் வழங்குவதோடு மட்டுமில்லாமல் தமது சிறப்பு படைகளை இந்தியாவில் ஈடுபடுத்தி நேரடியாக எதிர் கிளர்ச்சி நடவடிக்கைகளில் பங்கேற்கின்றனர். மாவோயிஸ்ட் தலைவர்களை கொல்வதற்கு அவர்கள் அழுத்தம் கொடுக்கின்றனர். மத்திய அரசு இப்போது நடந்து கொண்டிருக்கும் ‘மக்கள் மீதான போர்’ தொடர்பாக இதுவரை 50 ஆயிரம் துணை இராணுவப் படைகளை சத்தீஸ்கருக்கு அனுப்பியிருக்கிறது. இதன் விளைவாக படுகொலைகளும், அழிவுகளும் பல மடங்கு அதிகரித்திருக்கின்றன.

ரமண் சிங்
சத்தீஸ்கர் முதலமைச்சர் ரமண்சிங்

2009-க்குப் பிறகு மத்திய, மாநில ஆயுத படைகளால் 400 பழங்குடி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 2011-ன் மத்தியிலிருந்து ‘பயிற்சிக் கல்லூரிகள்’ அமைப்பதாக சொல்லி பஸ்தர் பகுதியில் இராணுவத் தளங்கள் அமைக்கப்படுகின்றன. முன்னாள், மற்றும் தற்போதைய உள்துறை அமைச்சர்களான சிதம்பரம், ஷிண்டே, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் சத்தீஸ்கர் அரசுக்கு முழு ஆதரவையும் ஆர்வத்துடன் அளிக்கின்றனர். புரட்சிகர இயக்கத்தை நசுக்குவதில் ரமண் சிங் அரசின் செயல்பாட்டின் மீது முழு திருப்தி தெரிவித்திருக்கின்றனர். மத்திய அரசின் உதவிக்கு ரமண் சிங் ஒவ்வொரு வாய்ப்பிலும் தனது நன்றியை தெரிவித்திருக்கிறார்.

எனவே, புரட்சிகர இயக்கத்தை நசுக்குவதை பொறுத்த வரை சத்தீஸ்கரில் காங்கிரசுக்கும் பாரதீய ஜனதா கட்சிக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை. மக்கள் போராட்டங்களாலும், தேர்தல் ஆதாயங்களுக்காகவும் மட்டும்தான் சில உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் சர்கின்குடா, ஏட்ஸ்மெட்டா படுகொலைகளின் போது கண்டனங்களை தெரிவிக்கின்றனர். அவர்களது எதிர்ப்பு மோசடியானது, சந்தர்ப்பவாதத்தை தவிர வேறு ஒன்றுமில்லை. காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சி இரண்டுமே கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமான கொள்கைகளையும் அடக்குமுறை கொள்கைகளையும் செயல்படுத்துவதில் ஒரே மாதிரியானவை.

சத்தீஸ்கர் எல்லைக்கு அப்பால் ஆந்திர பிரதேசத்திலிருந்து பழுப்புவேட்டைநாய் படைகள் அடிக்கடி வந்து, 2008-ல் காஞ்சாலிலும், சமீபத்தில் மே 26, 2013-ல் புவ்வார்தியிலும் நடத்திய படுகொலைகள் காங்கிரஸ் கட்சி செயல்படுத்தி வரும் அடக்குமுறை கொள்கைகளின் பகுதியும் மொத்தமுமாகும். அதனால்தான் நாங்கள் காங்கிரசின் மேல் மட்ட தலைவர்களை குறி வைத்தோம்.

இன்று, சத்தீஸ்கர் முதலமைச்சர் ரமண் சிங், உள்துறை அமைச்சர் நன்கிரம் கன்வர், அமைச்சர்கள் ராம்விசார் நேதர், கேதார் காஷ்யப், விக்ரம் உசெண்டி, ஆளுனர் ஷேகர் தத், மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் ஆர் ஆர் பட்டீல், டிஜிபி ராம் நிவாஸ், ஏடிஜி முகேஷ் குப்தா மற்றும் பிற மூத்த போலீஸ் அதிகாரிகள் அனைவரும் தண்டகாரண்யாவின் புரட்சிகர இயக்கத்தை நசுக்குவதில் கண்மூடித்தனமாக உறுதி பூண்டுள்ளார்கள். தாங்கள் தோற்கடிக்கப்பட முடியாதவர்கள் என்ற பெரு மாயையில் அவர்கள் சிக்கியிருக்கிறார்கள். Z பிளஸ் பாதுகாப்பும், குண்டு துளைக்காத வாகனங்களும் அவனை எப்போதும் காத்திருக்கும் என்று மகேந்திர கர்மாவும் மாயையை வைத்திருந்தான்.

உலக வரலாற்றில் ஹிட்லரும் முசோலினியும் கூட யாரும் அவர்களை தோற்கடிக்க முடியாது என்ற இதே கர்வத்தில் இருந்தனர். நமது நாட்டின் தற்கால வரலாற்றில் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி போன்ற பாசிஸ்டுகளும் இதே போன்ற தவறான கருத்துக்களுக்கு பலியானார்கள். ஆனால், மக்கள் ஒடுக்கப்பட முடியாதவர்கள். மக்கள்தான் வரலாற்றை படைக்கிறார்கள். இறுதியில், ஒரு சில சுரண்டல்காரர்களும் அவர்களின் வளர்ப்பு நாய்களும் வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள் எறியப்படுவார்கள்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) யின் தண்டகாரண்யா சிறப்பு மண்டல குழு தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், அறிவுஜீவிகள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் அனைத்து ஜனநாயக சக்திகளையும், பச்சை வேட்டையை உடனே நிறுத்த வேண்டும்; தண்டகாரண்யாவிலிருந்து அனைத்து விதமான துணை இராணுவப் படைகளை திரும்பப் பெற வேண்டும்; ‘பயிற்சி’ என்ற பெயரில் இராணுவத்தை அனுப்பும் சதித் திட்டத்தை கைவிட வேண்டும்; விமானப் படையின் தலையீட்டை நிறுத்த வேண்டும்; சிறையில் வாடும் புரட்சிகர சக்திகளையும், சாதாரண பழங்குடி மக்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்; UAPA, CSPSA, MACOCA, AFSPA போன்ற கொடூர சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்; நாட்டின் இயற்களை வளங்களை கொள்ளை அடிக்கும் நோக்கத்தோடு கார்ப்பரேட் குழுமங்களோடு போட்டுக் கொண்ட அனைத்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்று அரசை வலியுறுத்தும் படி கேட்டுக் கொள்கிறது.

(குட்சா உசெண்டி)
மக்கள் தொடர்பாளர்,
தண்டகாரண்யா சிறப்பு மண்டல குழு,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்)
_________________________________________________
தமிழாக்கம் : செழியன்
_________________________________________________

  1. திருட்டு மீடியாக்கள் முழு பூசணியையும் சோற்றில் மறைக்கக் எப்போதுமே முயற்சிக்கின்றது

    இதை மொழி பெயர்த்து வெளியிட்டமைக்கு நன்றி வினவு.

    “மக்கள் ஒடுக்கப்பட முடியாதவர்கள். மக்கள்தான் வரலாற்றை படைக்கிறார்கள். இறுதியில், ஒரு சில சுரண்டல்காரர்களும் அவர்களின் வளர்ப்பு நாய்களும் வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள் எறியப்படுவார்கள்.”

  2. பன்னாட்டு கம்பெனிகள் கனிம வளங்களை எங்கு கொண்டு செல்கின்றன ? http://www.thkunz.com/indias-export-to-china-is-not-diverse/ ரெட்டி சகோதரர்கள் இரும்பு தாதுக்களை சீனாவிற்கு அனுப்பியுள்ளார்கள் http://www.canarytrap.in/2010/07/14/exclusive-the-rise-of-bellary-reddys/
    The justice MB Shah Commission report, which was tabled in Parliament on Friday, says that Goa’s iron ore mining scam is worth nearly Rs. 35,000 crore.The voluminous report holds the state government and central government agencies as parties to the scam along with powerful mining operators in Goa, who according to Justice Shah, plundered natural resource and facilitated an “unrestricted, unchecked and unregulated export of iron ore to China”, which made the exporters of ore “richer and richer”. http://profit.ndtv.com/news/corporates/article-goa-mining-scam-worth-rs-34-935-crore-justice-shah-commission-310518
    India’s trade – exports & imports https://docs.google.com/spreadsheet/ccc?key=0AonYZs4MzlZbdGRTUWtSWlRsenMxTTNqRzlyNXgyWmc#gid=1

    • உங்கள் கேள்விக்கான பதில் மிக எளிது. உங்கள் மனைவி, மகள், சகோதரியை கற்பழித்து கொன்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்? இதற்கான பதில்தான் உங்கள் கேள்விக்கு பதில்.

      (மன்னிக்கவும் ஒரு புரிதலுக்காக தான் இந்த கேள்வி)

  3. ஆயிரம் நியாயங்கள் கூறினாலும் நக்சைலைட்டுகள் செய்தது கொலைவெறியே அன்றி அகிம்சை அல்ல. இந்திய மக்களுக்கு காந்தி கற்றுக்கொடுத்தது அகிம்சை என்ற அறவழிதான். அனைவருக்கும் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கிறது …உங்கள் கனவு மற்றும் ஆசைகள் நிறைவேற வில்லையெனில் மக்களை திரட்டி போராடலாம் மற்றும் இந்திய நாட்டு மக்களின் கவனத்தை ஈர்க்கலாம் …இந்திய நாட்டின் இறையாண்மைக்கு எதிராக ஆயுதங்களை கொண்டு போராடினால் வெற்றி பெற்று விட முடியாது ….விளைவு ஆபத்தில் தான் முடியும் என்பதை பல கடந்த கால வரலாறுகள் நமக்கு கற்றுக்கொடுத்த பாடங்கள்

      • இந்த நாட்டின் இறையான்மை என்னும் பெயரை கொண்டு , சொந்த நாட்டு மக்களை கொல்லும்போது காந்தியின் அறவழியில் சாக வேண்டுமா ஹானஸ்டு… கிட்டதட்ட நூறு ஆண்டுகளாக மக்கள் அப்படித்தான் சாகிறார்கள். அப்படி சாவது ஆபத்து இல்லையா ? மக்கள் கொல்லபடும்போது ஹானள்டு என்ன பண்ணிகொண்டு இருந்தீங்க ?

        போராட்டம் கயவர்களுக்கு எதிராகதானே ? கயவர்களுக்கு வக்காலத்து ஏன் வாங்குறிங்க.. நாட்டின் சொத்தை கொள்ளையடிப்பதை பற்றி ஒரு வார்த்தை கூட பதில் இல்லை…அக்கறை எல்லாம் கயவர்கள் சாவதை பற்ரி மட்டும் தால் போல..அப்படி தானே ஹானஸ்டு ?

        ஏன் கொஞ்ச நாள் தவறு செய்யும் கயவர்கள் சாகட்டுமே…

        இந்த மானங்கெட்ட கமெண்டுக்கு கேம்வி கரக்க்டு வேற ஒரு கேடா..

    • காந்தியின் அஹிம்சை வெள்ளைக்காரனிடம் மட்டுமே செல்லுபடியாகும். வெள்ளைக்காரன் மானஸ்தன். அஹிம்சையை பொறுக்க முடியாமல் சுதந்திரத்தை கொடுத்துவிட்டு போய்விட்டான். ஆனால் நம்ம அரசியல்வாதிகள் அப்படி அல்ல. அவர்களிடம் இந்த அஹிம்சை பருப்பெல்லாம் வேகாது. டெல்லி மாணவி கற்பழிப்புக்கு இந்தியா முழுவதும் போராட்டம் செய்தார்கள். முடிவு என்ன ஆனது? பசியால் 100 ருபாய் திருடியவன் அடி உதை வாங்குவதும், கோடிக்கணக்கில் ஊழல் செய்தவர்கள் நெஞ்சை நிமிர்த்தி உலா வருவதும் நம் நாட்டில் தான். நக்சல்களின் இந்த தாக்குதல் ஒரு வேள்வி. இந்த வேள்வி தீ இந்தியாவெங்கும் பரவட்டும். நல்ல அரசியல்வாதிகள், தலைவர்கள் இவர்களை பார்த்து அஞ்ச தேவையில்லை. பொறுக்கிகளை போட்டு தள்ளத்தான் வேண்டும்.

      • காந்தி .. அகிம்சை… வெள்ளையனிடம் செல்லுமா ? வெள்ளையன் மானஸ்தனா?

        ஹி ஹி ஹி…ரொம்ப தான் காமெடி போங்க… நித்ய கல்யாணி..
        வரலாற்றை ஸ்கூலு புத்தகத்தில் மட்டும் படிச்சீங்கன்ன இப்படி தான் இருக்கும்…

        தயவு செய்து காந்தி நண்பனா, துரோகியா http://othisaivu.wordpress.com/2012/04/04/post-111/
        படிக்கவும்..
        https://www.vinavu.com/2012/10/02/mk-gandhi/

        காந்திக்கும் இந்திய சுதந்திரத்துக்கும் இருக்கும் சம்பந்தம் மைசூருக்கும் மைசூர் போண்டவுக்கும் இருக்கும் சம்பந்தத்தை விட குறைவு தான்.

        இந்தியாவுக்கு சற்று முன்னும் பின்னும் வெள்ளையன் ஆண்ட அனைத்து நாடுகளூம் சுதந்திரம் அடைந்தது. ஏன் ? காந்தி போராடியதால் அகிம்சை தாங்காமல் சுதந்திரம் கொடுத்தால் இந்தியாவுக்கு மட்டும் அல்லவா சுதந்திரம் தந்து இருக்க வேண்டும் ? காந்தி மற்ற எந்த நாட்டுக்காகவும் போராடவில்லையே?

        உண்மை என்னவென்றால் இரண்டாம் உலகபோருக்கு பின் பிரட்டன் பலவீனப்பட்டது. உலக அளவிலான ஆட்சி அவர்களுக்கு லாபகரமான வியாபரமாக இனி இருக்க முடியாது என புரிந்தது. அதனால் பிரிட்டன் மட்டுமல்ல, பிரான்சு பெல்ஜியம் என எல்லா நாடுகளும் தங்களின் காலனி ஆதிக்கதை விட்டுவிட்டன..

        காந்தியின் அகிம்சை, போராடும் மக்களின் போராட்ட உணர்வை திசை திருப்பி, மங்க வைக்கும் உத்தியாக மட்டும் இருந்தது. எப்போது மக்கள் முனைந்து போராட ஆரம்பித்தாலும் போராத்தை வாப்பஸ் வாங்க் காந்தி முறியடித்தார். அரசுக்கும் முதாலாளீகளூக்கும் விசுவாசமாக இருந்தார்.

        இந்தியர்களுக்கு மட்டுமே இம்சையாக இருந்தது .. இருக்கிறது… இனி இருக்க கூடாது என நாம் நினைத்தாலும் , அரசால் இருக்க வேண்டும் என நிலைக்கவைக்கப்படுகின்றது.

  4. தமிழ் நாட்டு வாசகர்களுக்கு இந்தக் கொடியவர்கள் பற்றிய முழு விவரத்தையும் வெளியிட்ட வினாவுக்கு நன்றி. அரசாங்க அதிகாரிகளை விட இந்த மீடியாக்கள் மிகவும் கொடியவர்கள். எல்லா விபரங்களையும் இருட்டடிப்பு செய்து உண்மை எது என்று தெரியாமல் செய்துவிடும் இந்த வேளையில் உண்மையை வெளியிட்ட வினவுக்கு மிக்க நன்றி.

    வாசிப்பவர்கள் இப்போது நெஞ்சைத்தொட்டு சொல்லட்டும் இந்த மிருகங்கள் இருந்தால் என்ன போனால் என்ன? இத்தனை பேரைக் கொன்ற இந்தப் பாவி மீது ஒரு கிரிமினல் வசக்கு கூட இல்லையாம். இது தான் இன்றைய இந்தியா. இதுதான் நமது ஜனநாயகம். உண்மை விபரங்களை வெளியிட்டு தமிழ் வாசகர்களை சிந்திக்க வைக்கும் வினவு வாழ்க.

    படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான் போவான் ஐயோ என்று போவான் என்றான் பாரதி. இப்படிப்பட்ட கொடிய மிருகங்கள் இப்படித்தான் போகவேண்டும்.

    இதுவே பாரதி கண்ட கனவு.

  5. எடுத்தமுடிவு சரியனது ஆனால் தாக்குதலை கொரிளாபடையினர் செய்துருக்ககுடது பழங்குடி மக்களை திறட்டி செய்துருக்கணும்

    • கொரில்லா படை என உசிலம்பட்டியிலிருந்தா போனார்கள்..

      200 பேர் 300 பேர் என நக்சல் தாக்குதல் என்றால் அது பழங்குடி மக்கள் அல்லாமல் சாத்தியமா..? அரசு கணக்கின் படியே 600 நக்சலைட்டுகள் தான் அங்கு உள்ளனர் என்ற ஒரு புள்ளிவிவரம் உள்ளது. அப்ப 600 பேரை ஒழிக்கவா மன்மோகன் கம்பெனி 50 ஆயிரம் படையை அனுப்பி உள்ளது.

      வில்லேந்தி எதிர்ப்பு தெரிவிக்கும் அனைத்து பழங்குடி மக்களும் மன்மோகன் கம்பெனியை பொறுத்தவரை மாவோஸ்டுகள்ட் தான்.

      தமிழர்கள் அனைவரும் புலிகள் என ஜெயா, ராசபக்சே எழுதிய அதே கோட்பாடு தான் இங்கேயும்.

  6. The general question is very simple. Whether this democratic govt is for the public or the public are for the democratic govt. This would be the result those who misunderstand the terms called democratic and independence. A common man will never required independence if he is driven off from his land.

  7. காட்டை காலி செய்து டாடா, வேதாந்தாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் வேலை செய்து வரும் கூலிப்ப்டைக்கு ஒரு சிறிய தாக்குதல் என்றால் பின்னடைவு என்றால் மட்டும் கூச்சலிடும் ஊடகங்கள், அறிக்கையில் உள்ளது போல நித்தம் நித்தம் குழந்தைகளை, பெண்களை கொன்றொழித்த, கற்பழித்த போது என்ன புடுங்கினார்கள்… என கேட்கவேண்டும்.

    இந்த அறிக்கையை முழுமையாக வெளியிடாத ஊடகங்களில் கலைஞர் டிவி, கலாநிதி தினகரன் போன்ற தரகு முதலாளிகள் மாவோஸ்ட் , ஜன்நாயகம் என பீதி ஊட்டிவது சரிதான்.

    ஆனால் வெடிக்க காத்திரிக்கும் எரிமலை என அப்பாவி பழங்குடி மக்கள் சிறைகளிலும், முகாம்களிலும் அடைக்கப்பட்டு உள்ள நாடு என்ன ஜனநாயகம் இருக்க முடியும் என் தலையங்கம் எழுதிய தினமணி வைத்தி மாமா அடுத்த வாரமே மாவோயிஸ்ட்களின் காட்டுமிராண்டித்தனம் குறித்து வகுப்பு எடுக்கிறார்.

    சாதிகள் இல்லையடி பாப்பா என பார்ப்பனிய பாரதியின் மீசையை வைத்து வீரம் பேச வாய்ப்பு இல்லை எனபது தெளிவு.

  8. Mr. Honest, அரசு காந்திய வழியில் செயல்படும்போது மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தியது தவறுதான்… மாவோயிஸ்டுகளிடம் மட்டும்தான் ஆயுதம் உள்ளது, அப்பாவி அரசிடம்???

  9. first, hats off to maoists. Their courage has to be followed by every state in India especially the oppressed people. The mOist should extend their links to other movements all over india. The time has ripened to develop the movement as a strong movement for the whole country. Again, my sincere thanks and best wishes to maoists.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க