முகப்புமறுகாலனியாக்கம்கல்விகல்வி உரிமை கேட்டு கடலூரில் மாநாடு : உரைகள் - படங்கள் !

கல்வி உரிமை கேட்டு கடலூரில் மாநாடு : உரைகள் – படங்கள் !

-

மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம் மற்றும் மனித உரிமை பாதுகாப்பு மையம் கடலூர் மாவட்டக்கிளையின் சார்பில் மூன்றாவது ஆண்டாக அனைவருக்கும் தரமான இலவச கல்வியை அரசே வழங்க போராடுவோம் என்ற முழக்கத்தை வலியுறுத்தி கடலூர் மஞ்சக்குப்பத்தில் 25-5-13 அன்று மாலை 6-00 மணிக்கு தொடங்கி இரவு 10-00 மணி வரை திறந்த வெளி மாநாடு நடைபெற்றது.

பேரணி மற்றும்  மாநாட்டுக்கு இறுதி நேரத்தில் மாவட்ட காவல்துறை அனுமதி மறுத்தது. மனித உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கறிஞர்களின் விடாப்பிடியான போராட்டத்திற்குப் பின் மாநாட்டிற்கு மட்டும் அனுமதி பெறப்பட்டது.

மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மைய கலைக்குழுவின் நாடகம் பாடல்களுடன் நிகழ்ச்சி தொடங்கியது. ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தின் பின்னணியை தோலுரித்து காட்டும் வகையில் சிறுவர்கள் நாடகம் மக்களை பெரிதும் கவர்ந்தது. தொலைக்காட்சி வருவதற்கு முன்னும் பின்னும் நடக்கும் நிகழ்வுகளை சித்தரிக்கும் வகையிலும் நாடகம் நடத்தப்பட்டது. திரண்டிருந்த அனைவரும் எழுந்து நின்று முழக்கமிட மாநாடு தொடங்கியது.

கடலூர் மாநாடு

தமிழக அரசே தமிழக அரசே
அமல்படுத்து அமல்படுத்து
அனைவருக்கும் தரமான
இலவச கல்வியினை அமல்படுத்து

தாய்ப்பால் குடிப்பது
குழந்தையின் உரிமை
கல்வி கற்பது மாணவன் உரிமை

அனுமதியோம் அனுமதியோம்
காசுள்ளவனுக்கு ஒரு கல்வி
ஏழைகளுக்கு ஒரு கல்வி
தனியார்மய கல்வியை அனுமதியோம்

தமிழக அரசே தமிழக அரசே
அரசுடமையாக்கு அரசுடமையாக்கு
அனைத்து தனியார் பள்ளிகளையும்
அரசுடமையாக்கு அரசுடமையாக்கு

வெல்லட்டும் வெல்லட்டும்
அனைவருக்கும் தரமான
இலவச கல்வி உரிமைக்கான
மக்கள் போராட்டம்
வெல்லட்டும் . . .

வெங்கடேசன்
பெற்றோர் சங்கத் தலைவர் வை வெங்கடேசன்

தலைமையுரையாற்றிய மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத் தலைவர் வை.வெங்கடேசன் 2011 விருத்தாசலத்திலும் 2012 சிதம்பரத்திலும் நடந்து இன்று கடலூரில் இந்த மாநாடு நடக்கிறது. கடந்த மூன்றாண்டுகளில் பல சாதனைகளை நமது சங்கம் சாதித்துள்ளது. இங்கு திரண்டு இருக்கும் மக்களே அதற்கு சாட்சி. தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இலவசக் கல்வி என அரசு கூறுகிறது. நாம் 100 சதவீதம் இலவசக் கல்வி கேட்கிறோம். கடலூர் மாவட்டத்தில் ஒரு அரசுப் பள்ளிக் கூடத்தில் கூட 100 சதவீத தேர்ச்சி இல்லை. பல பள்ளிகள் 22 %முதல் 35 வரைதான்  தேர்ச்சி வீதம் பெற்றுள்ளன.

விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 31 சதவீத தேர்ச்சியை கண்டித்து தேர்ச்சி குறைவதற்கு காரணமான ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாங்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தினோம். தனியார் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி காட்டுகின்றனர். அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை அழைத்து வந்து மாவட்ட ஆட்சியரிடம் வாழ்த்து பெற்று அந்த புகைப்படத்தை அனைத்து பத்திரிக்கைகளும் பிரசுரிக்கின்றன. ஆனால் ஆலடி என்ற அரசு மேல்நிலைப்பள்ளியில் 86 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மூன்று பாடத்தில் 100 சதவீத தேர்ச்சி ஆனால் எந்த பத்திரிக்கையிலும் வரவில்லை. கல்வித் துறை அதிகாரிகள் யாரும் மாவட்ட ஆட்சியருடன் மாணவர்களை அழைத்து பாராட்டவில்லை, ஏன்? அரசு பள்ளிகளை தமிழக அரசு நடத்தும் லட்சணம் இதுதான். பெற்றோர்கள் முறையாக அரசு பள்ளிகளை கண்காணிக்க வேண்டும். வீதியில் இறங்கி கல்வி உரிமைக்காக போராட வேண்டும் என பேசினார்.

செந்தில்
வழக்கறிஞர் செந்தில்

வரவேற்புரை ஆற்றிய மனித உரிமை பாதுகாப்பு மைய மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் செந்தில் பள்ளிகளை நடத்த வேண்டிய அரசு சாராயக்கடைகளை திறம்பட நடத்துவதில்தான் கவனம் செலுத்துகிறது. தேர்ச்சி விகிதம் அரசு பள்ளிகளில் குறைந்ததற்காக நாங்கள் முற்றுகை போராட்டம் நடத்தினோம்.

பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர், ஆதரித்தனர், கலந்து கொண்டனர். மே மாதம் வெயில் என பாராமல் இவ்வளவு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் இந்த மாநாட்டில் கல்வி உரிமைக்காக போராட கலந்து கொண்டதை வரவேற்கிறேன். தொடர்ந்து போராடுவதன் மூலம் நாம் கோரிக்கையை வெல்ல முடியும். அனைவருக்கும் தரமான இலவசக் கல்வியை அரசே கொடுக்கும்வரை நமது போராட்டம் ஓயாது என பேசினார்.

மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றிய முன்னாள் அமைச்சர் திரு.வி.வி.சுவாமிநாதன் அவர்கள்

மாநாட்டின் துவக்கத்தில் ராணுவ தலைமையகம் உத்திரவுபோடுவது போல் அரசுக்கு கோரிக்கைகளை முழக்கங்களாக உத்திரவிட்டீர்கள், இது சரிதான். மக்கள்தான் எஜமானர்கள். தனியார் பள்ளிகளின் கவர்ச்சி விளம்பரங்கள் தரமானவை என மக்கள் மத்தியில் எடுபடுகின்றது. நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது மத்திய அரசு செயலாளராக உயர் பதவியில் தமிழர்கள் பலர் இருந்தனர். அரசு பள்ளியில் தமிழில் படித்தவர்கள்தான் பிரிட்டன் நடத்திய தேர்வில் ஐ.சி.எஸ் பட்டம் பெற்றவர்கள். தனியார் பள்ளிதான் அறிவை வளர்க்கும் என்பது மோசடி. 1970-களில் ரயில்வே, ஏர்வேஸ், வங்கிகள் என அனைத்தும் தேசியமயமாக்கபட்டது. ஆனால் இன்று கல்வி, மருத்துவம், குடிநீர் என அனைத்தும் தனியாருக்கு விடப்பட்டுள்ளது.

வி வி சுவாமிநாதன்
முன்னாள் அமைச்சர் வி வி சுவாமிநாதன்

வெட்ட வெளியில் அமர்ந்து நாம் பேசி கொண்டிருக்கிறோம். இது சட்டமன்றத்தில் பேசி விவாதிக்க வேண்டியது. இதை எந்த சட்டமன்ற உறுப்பிராவது எழுப்பினாரா? இல்லை. அவர்கள் எல்லாம் காண்ட்ராக்டர்களாக, முதலாளிகளாக மாறியுள்ளனர். தேர்தல் செலவுகளை பள்ளி முதலாளிகள்தான் கவனிக்கின்றனர். கமிசன் பிரச்சினையை கவனிக்கவே அவர்களுக்கு நேரம் சரியாக இருக்கிறது. தனியார் கல்வியை அரசு ஒழிக்குமா? ஒழிக்காது. ஏனெனில் கல்வி அதிபர்களாக அமைச்சர் முதல் எம்.எல்.ஏ, பி.ஏ. வரை உள்ளனர். கல்வி முதலாளிகளால் மாவட்டம், வட்டம் வரை கட்சி பாகுபாடின்றி கவனிக்கபடுகின்றனர். போராடிதான் ஒழிக்க வேண்டும்.

இந்த போராட்டம் கண்டிப்பாக வெற்றி பெறும், வெற்றி பெற்றிருக்கிறது. 2011-ல் ஆரம்பித்த பெற்றோர் சங்கம் தொடர்ந்து போராடியதன் விளைவாகதான் 17 கல்வி மாவட்டங்களாக இருந்தது இன்று 27 மாவட்டங்களாக மாறியிருக்கிறது. தமிழகத்தில் 100 பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சிக்கு உங்கள் போராட்டம் முக்கிய காரணம். மறுபுறம் ஆனால் அரசு பள்ளிகளில் தரம் வீழ்ச்சி அடைந்து வருகிறது. இதற்கு பொறுப்பேற்று கல்விதுறை அமைச்சரோ, அதிகாரிகளோ, தலைமை ஆசிரியரோ ராஜினாமா செய்வதில்லையே!

அடுத்து மாநாட்டின் தீர்மானங்களை மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்தின் சிதம்பரம் கிளை செயலாளர் கலையரசன் வாசித்தார். அனைவரும் ஏக மனதாக கரவொலி எழுப்பி ஆதரித்து நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டுத் தீர்மானங்கள்…

 1. அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில்,உயர் கல்வியில் முன்னுரிமை வழங்க தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும் என இம்மாநாடு ஒரு மனதாக வலியுறுத்துகிறது.
 2. மழலையர் பள்ளி முதல் +2 வரையிலான பள்ளிக்கல்வி முழுவதும் அரசு பொறுப்பில் அனைவருக்கும் தரமாக வழங்கும் ஒரே பாடத்திட்டம், ஒரே பயிற்சி முறை, ஒரே தேர்வு முறை கொண்ட மாணவர்கள் சமத்துவத்திற்கான பொதுப்பள்ளி, அருகமைப்பள்ளி முறையை அமல்படுத்த உரிய சட்டம் இயற்றவும் நடைமுறைப்படுத்தவும் மத்திய மாநில அரசுகளை நிர்ப்பந்தித்து போராட வேண்டும் என பொது மக்களை ஒருமனதாக இம்மாநாடு வலியுறுத்துகிறது.
 3. அனைத்து பள்ளிகளிலும் சமச்சீர் பாடம் அமல்படுத்தப்பட்ட பிறகு தனியார் பள்ளிகள் மெட்ரிக் என்ற பெயரை பயன்படுத்துவதை தமிழக அரசு தடை செய்து உத்திரவு பிறப்பிக்க வேண்டும் என இம்மாநாடு ஒருமனதாக கேட்டுக் கொள்கிறது.

  கலையரசன்
  பெற்றோர் சங்க சிதம்பரம் கிளைச் செயலாளர் கலையரசன்
 4. அரசு பள்ளிகளில் பாடம் நடத்துவது, ஆசிரியர்கள் பிற தொழில்களில் ஈடுபடுவது ஆகியவற்றை கண்காணிக்க மக்கள் கமிட்டியை மாவட்டம் தோறும் அமைக்க தமிழக அரசை ஒருமனதாக இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
 5. மாணவர்களுக்காகத்தான் பள்ளிகள், பள்ளிகளுக்காக மாணவர்கள் இல்லை என்பதை பெற்றோர்கள் புரிந்து கொண்டு பணம் சம்பாதிக்கும் இயந்திரமாக நமது பிள்ளைகளை மாற்றும் கல்வி வணிகமயத்திற்கு, தனியார் பள்ளிகளின் லாப நோக்கிலான மதிப்பெண் தேர்வுமுறைக்கு பலியாகாமல், சிந்திக்கும் ஆற்றலை, தன்னம்பிக்கையை உருவாக்கும் தாய்மொழிக்கல்வியில் பயில, அரசு பள்ளிகளில் தங்களது குழந்தைகளை சேர்க்க வேண்டும் என பெற்றோர்களை இம்மாநாடு ஒருமனதாக கேட்டுக் கொள்கிறது.
 6. அரசியலமைப்பு சட்டம் சரத்து 21 ஏ படி 14 வயது குழந்தைகள் வரை அனைவருக்கும் இலவசக்கல்வி வழங்குவது வாழ்வுரிமையின் ஒரு அங்கம் என 2002 –ல் சட்டம் இயற்றிய பிறகு நீதியரசர் சிங்காரவேலு கமிட்டி மூலம் தமிழக அரசு தனியார் பள்ளி முதலாளிகளுக்கு ஏற்ற மாதிரி பலவிதமான கட்டணங்களை நிர்ணயிப்பதுடன் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்டணத்தை ஏற்றி கொண்டே போவதற்கு எதிராக பொது மக்கள் போராட வேண்டும். தமிழக அரசு 14 வயதுவரை தனியார்பள்ளிகளில் கட்டணம் வசூல் செய்வதை தடைசெய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இம்மாநாடு ஒருமனதாக கேட்டுக் கொள்கிறது.
 7. மாணவர்களை பணயக்கைதிகளாக வைத்து கட்டணக்கொள்ளை அடிக்கும் தனியார் பள்ளி முதலாளிகள், முதல்வர்களை கிரிமினல் சட்டத்தில் கைது செய்ய காவல்துறைக்கு உரிய உத்திரவிட தமிழக அரசை இம்மாநாடு ஒருமனதாக கேட்டுக் கொள்கிறது.
 8. தாய் மொழிக்கல்விக்கு எதிராக அரசு பள்ளிகளில் ஆங்கிலவழி கல்வியை அமல்படுத்தும் தமிழக அரசின் முடிவை இம்மாநாடு வன்மையாக கண்டிக்கிறது. உடனடியாக தமிழக அரசு ஆங்கிலவழி கல்வி அறிவிப்பை கைவிட வேண்டும் என இம்மாநாடு ஒருமனதாக வலியுறுத்துகிறது.
 9. அனைவருக்கும் இலவச கல்வி என்பதை உறுதி செய்ய அனைத்து தனியார் பள்ளிகளையும் அரசுடமையாக்க மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இம்மாநாட்டின் மூலம் ஒருமனதாக வலியுறுத்துகிறோம்.
 10. கல்வி, மருத்துவம், குடிநீர் உள்ளிட்ட அனைத்தையும் தனியாருக்கு விற்கும் அரசின் தனியார்மயக் கொள்கையை மீறி உரிய கட்டமைப்பு இல்லாத சூழலில் அரசு பள்ளியில் அடித்தட்டு மாணவர்களுக்காக அர்ப்பணிப்போடு பாடம் நடத்தி அதிக மாணவர்களை தேர்ச்சியடைய வைக்க போராடும் அரசு பள்ளி ஆசிரியர்களை இம்மாநாடு மனதார பாராட்டுகிறது. அத்தகைய ஆசிரியர்களுக்கு அனைத்துவித ஒத்துழைப்புகளையும் ஆதரவுகளையும் பெற்றோர்களும் நமது சங்கத்தினரும் தர வேண்டும் என இம்மாநாடு ஒருமனதாக கேட்டுக் கொள்கிறது.
 11. 1 முதல் 5 வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு ஏப்ரல் 30 வரை பள்ளி வகுப்புகள் நடத்தபடுகிறது. கடுமையான வெயிலில் இளம் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல அவதிப்படுகிறார்கள். இவர்களின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு பள்ளி கல்வித்துறை மார்ச் மாத இறுதியில் வகுப்புகளை மூட வேண்டும் என இம்மாநாடு ஒரு மனதாக தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.
ராமகிருஷ்ணன்
சிதம்பரம் கிளைத் தலைவர் ராமகிருஷ்ணன்

மாநாட்டை வாழ்த்தி பேசிய சிதம்பரம் கிளை தலைவர் ராமகிருஷ்ணன்:

தனியார் பள்ளிகள் அரசு உத்திரவை மதிக்காமல் பெற்றோர்களிடம் கட்டணக் கொள்ளை அடித்ததை சிதம்பரத்தில் நமது சங்கம் போராடி முறியடித்தது. கடந்த ஆண்டு நமது சங்க உறுப்பினர்களுக்கு மட்டும் அரசு கட்டணத்தை பெற்ற சிதம்பரம் காமராஜ் பள்ளி நிர்வாகம் இந்த ஆண்டு அனைத்து பெற்றோர்களும் அரசு கட்டணத்தை மட்டும் கட்டுங்கள் என அறிவிப்பு பலகையில் ஒட்டியுள்ளது. இதே போன்று அனைத்து தனியார் பள்ளிகளும் அமல் படுத்த நாம் சளையாமல் போராடவேண்டும். போராடும் என முடித்தார்.

 

வனராசு
முன்னாள் அரசு வழக்கறிஞர் வனராசு

 

கடலூர் மாவட்ட நீதிமன்றத்தின் முன்னாள் அரசு வழக்கறிஞர் வனராசு அவர்கள் :

மனித உரிமை பாதுகாப்புமைய வழக்கறிஞர்களின் முயற்சியில் உருவானதுதான் இந்த பெற்றோர் சங்கம். கல்வி உரிமைக்கான இந்த போராட்டம். தனியார் பள்ளிகளிடம் ஏன் அரசாங்கம் 25 இலவச ஒதுக்கீடு கேட்டு கெஞ்ச வேண்டும்? தனியார்பள்ளிகளை அரசுடமையாக்கினாலே போதும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி நடைபெறும் இம்மாநாட்டின் கோரிக்கை வெற்றி பெறும் என வாழ்த்தி பேசினார்.

 

சக்கரவர்த்தி
கொள்ளிடம் அமைப்பாளர் சக்கரவர்த்தி

நாகை மாவட்டம் கொள்ளிட அமைப்பாளர் சக்கரவர்த்தியின் வாழ்த்துரை: குழந்தைகளை பெற்றவுடன் மூன்றாண்டுகள் மகிழ்ச்சியாக இருக்கும் பெற்றோர்கள் பள்ளி சேர்த்தவுடன் துன்பத்திற்குள்ளாவோம். எல்.கே.ஜி கட்டணம் 4000, 8000,16000 என உயர்ந்து கொண்டே போகிறது. பள்ளி நிர்வாகம் வாங்கும் பணத்திற்கு உரிய வசதிகளை செய்து தருவதில்லை. கொள்ளைதான் அடிக்கிறார்கள். 100 பெறுமான உள்ள சீருடை 600 ரூபாய்க்கு விற்கிறார்கள். நம் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்ப்பதைவிட அரசு பள்ளிகளில் சேர்த்து அங்குள்ள குறைகளை சுட்டிகாட்டி முடிந்த அளவு நாமும் உதவிகள் செய்தால் அரசு பள்ளிகள் வளர்ச்சி பெறும். நாமும் பயனடையமுடியும். பள்ளி இறுதி தேர்வுகளை கேமிரா வைத்து கண்காணித்தால் பல தனியார்பள்ளிகளின் தரம் என்ன? உண்மை நிலை என்ன என தெரியவரும் என முடித்தார்.

கோ பாக்கியராஜ்
ஆதிவாசிகள், ஆதிதிராவிடர் நலத்துறை ஆசிரியர் சங்கம் – கோ பாக்கியராஜ்

கோ.பாக்கியராஜ், மாநில தலைவர், ஆதிவாசிகள் ஆதிதிராவிட நலத்துறை ஆசிரியர் காப்பாளர் சங்கம் தனது வாழ்த்துரையில்

மூன்றாவது ஆண்டாக மாநாடு நடத்தி வருகிறீர்கள். ஏதோ கூட்டம் கூடினோம் கலைந்தோம் என இல்லாமல் தெருத்தெருவாக கல்வி உரிமைக்காக பிரச்சாரம் செய்கீறீர்கள் பள்ளிகளுக்கு முன் போராடுகிறீர்கள். அப்படிபட்ட உங்களை பாராட்ட வேண்டியது எமது கடமை. அரசு பள்ளிகள்தான் சமூக நோக்குடைய, தாய்மொழி பற்றுள்ள, பிறரை நேசிக்கக்கூடிய, அறிவாற்றலுடைய மாணவர்களை உருவாக்குகிறது. தனியார் மெட்ரிக் பள்ளிகள் மார்க் எடுக்கும் இயந்திரமாக மட்டுமே நமது மாணவர்களை உருவாக்குகிறது.

இன்றும் பல அரசு பள்ளிகள் தரமான கல்வியை கொடுத்து வருகின்றன. 100 சதவீத தேர்ச்சி, அதிக மதிப்பெண் என கிராமத்து மாணவர்கள் சாதிக்கிறார்கள். 1000 மேல் மதிப்பெண் எடுக்கிறார்கள் இதனை கல்வித்துறை அதிகாரிகள் விளம்பரப் படுத்துவதில்லை, மூடி மறைக்கின்றார்கள். இவர்கள் தனியார் பள்ளி முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறார்களோ என்ற சந்தேகம் எழுவதாக கூறினார்.

 

செந்தில்
சிதம்பரம் வழக்கறிஞர் செந்தில்

மனித உரிமை பாதுகாப்பு மையத்தின்  துணைச் செயலர் சிதம்பரம் வழக்கறிஞர் செந்தில் மாநாட்டு பிரச்சாரத்தின் போது பலரும் கேட்டனர். அனைவருக்கும் தரமான இலவச கல்வி சாத்திமானதா? நடைமுறையில் சாத்தியம்தான். சிதம்பரம் நடராஜர் கோவில் சிற்றம்பல மேடையில் தாழ்த்தப்பட்ட ஒருவர் தமிழ்பாட முடியுமா? என 10 ஆண்டுகளுக்கு முன் எங்களிடம் கேட்டார்கள். இன்று முடித்து காட்டியுள்ளோம். தொடர்ந்த போராட்டம் சாத்தியமாக்கியது. அதுபோல் இதையும் சாத்தியமாக்குவோம். நமது குழந்தைகளை பணயக்கைதிகளாக வைத்து பணம் பறிக்கும் மாபியா கும்பல்களாக வளர்ந்துள்ளன தனியார் பள்ளிகள். அதனை தடுக்க வேண்டிய அரசோ அவர்களிடம் மன்றாடிக் கொண்டிருக்கிறது.

சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் பள்ளிக்கு எதிரான போராட்டத்தின் போது அரசு நிர்ணயித்த கட்டத்தை வசூலிக்க கோரி ஆண்கள் பெண்கள் என இரவு முழுவதும் போராடினோம். அரசு கட்டணத்தை மட்டும் வாங்கி கொள்ளுங்கள் என்று தாளாளரிடம் சிதம்பரம் ஏ.எஸ்.பி. இரவு 11 மணி வரை மன்றாடுகிறார். மாவட்ட ஆட்சி தலைவர் எங்களிடம் இரண்டு நாள் பொறுத்து கொள்ளுங்கள் என தவணை கேட்கிறார். விடாப்பிடியாக நாங்கள் போராடிதான் பள்ளி நிர்வாகத்தினை பணிய வைத்தோம். சிதம்பரம் முழுவதும் “அரசு உத்திரவை மயிரளவும் மதிக்காத தாளாளரை குண்டர்சட்டத்தில் கைது செய்” போஸ்டர் ஒட்டினோம், ஆர்ப்பாட்டம் நடத்தினோம். வரும் ஜுன் மாதத்தில் தனியார் பள்ளிகள் கட்டணக் கொள்ளை அடித்தால் பெற்றோர்கள் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் அளவுக்கு போராட வேண்டும். பேரணிக்கு தடை விதித்து அமைதியை நிலை நாட்டும் காவல்துறை பள்ளி முதலாளியை கைது செய்யட்டும். எத்தனை அடக்குமுறைகள் ஏவப்பட்டாலும் உரிமைக்கான எமது போராட்டம் ஓயாது என பேசினார்.

குடிக்கச் சொல்லும் அரசுக்கு படிப்பு சொல்லித்தர முடியாதா?
இமையம், எழுத்தாளர், விருத்தாச்சலம்

இந்திய கல்வி முறையே ஆங்கிலேயர்கள் தங்களது நிர்வாக வசதிக்காக ஏற்படுத்திய கல்விமுறைதான்….

இந்திய சாதிய படிநிலை போன்ற கல்வி நிறுவனங்களும் சிபிஎஸ்சி, ஆங்கிலோ இந்தியன், மெட்ரிகுலேஷன், அரசு உதவி பொறும் பள்ளிகள், அரசு பள்ளிகள் என ஏற்றத்தாழ்வாக பிரிக்கப்பட்டுள்ளன….கல்வித்துறை சீர்கெட்டு போனால், சமூக நோக்குடைய கல்வி இல்லாமல் போனால் ஒட்டுமொத்த சமூகமே சீர்கெட்டு போய்விடும்….

இமையம்
எழுத்தாளர் இமையம்

இன்று நிலவும் கல்வித்துறை சீர்கேடுகளுக்கு மூன்று குற்றவாளிகள் உள்ளனர். அரசு நிர்வாகம், ஆசிரியர்கள், பெற்றோர்கள் தான் அக்குற்றவாளிகள்.

தமிழகம் முழுவதும் கல்வித்துறை குறித்த புள்ளிவிவரங்கள் காட்டுவதென்ன? இலட்சக்கணக்கான அரசு பள்ளி ஆசிரியர்கள், ஆயிரக்கணக்கான அதிகாரிகள் என மிகப்பெரிய கல்வித்துறையே உள்ளது. ஆனால் இவர்கள் சாதிப்பது என்ன… தரமற்ற அரசு பள்ளிகளை நடத்துவது தானே…..எந்த கல்வித்துறை அதிகாரிகளாவது பள்ளிகளை முறையாக ஆய்வு செய்து குறைபாடுகளை கண்டறிந்து இன்னென்ன நிவர்த்தி செய்தோம் எனக் கூற முடியுமா….

பள்ளிகளை நடத்துவதில், பாடம் எடுப்பதில் குறைகண்டோம், அதற்காக இத்தனை ஆசிரியர்கள் மேல் நடவடிக்கை எடுத்தோம் என பட்டியலிட முடியுமா.. அப்படி நடவடிக்கை இல்லையென்றால் இலட்சக்கணக்கான அரசு பள்ளி ஆசிரியர்கள் தவறுகள் ஏதும் செய்யாமல் வேலை செய்கிறார்கள் என்பது தானே அர்த்தம்! மாவட்ட கல்வி துறை அதிகாரி, இயக்குனர் துணை இயக்குனர் எத்தனை முறை எந்த பள்ளியை ஆய்வு செய்தார் தணிக்கை செய்தார் என்று யாரும் சொல்ல முடியாது. அப்படி ஏதும் நடப்பதில்லை. சாராயக் கடையினை நடத்துவதில் அக்கறை காட்டும் அரசு பள்ளிகளை நடத்துவதற்கு ஏன் முன்வருவதில்லை. இதனை வருமானமற்ற முதலீடாக, செலவாக அரசு பார்க்கின்றது. சாராயக் கடைகள் போல் அரசு பள்ளிகள் வருமானம் ஈட்டி தருவதில்லையே..

ஆசிரியர்கள் 40,000 ஆயிரம் சம்பளம் வாங்குகிறார்கள் மனசாட்சிபடி வேலை பார்க்கிறார்களா? காலையில் நடைபயிற்சி போன களைப்பில் பள்ளியில் போய் தூங்குவதுதான் நடக்கிறது. மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியருக்கு ரூ. 67,000 சம்பளம். ஒரு வருடத்தில் எத்தனை வகுப்புகள் மாணவர்களுக்கு எடுத்திருப்பார். தன் பிள்ளையை கொண்டு போய் லட்சக்கணக்கில் பணம் கட்டி நாமக்கல் பள்ளி கூடத்தில் சேர்க்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள், அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு சொல்லி கொடுப்பதற்குதானே அவ்வளவு சம்பளம். தன் பிள்ளைகளின் படிப்பில் கவனம் செலுத்தும் அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்களை நம்பி வந்த மாணவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுப்பதில் கவனம் செலுத்துவதில்லை… இது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்? நன்கு படிக்கும் 90 சதவீத மார்க் எடுத்த மாணவன் வாத்தியார் வேலைக்கு வருவதில்லை. அரசு கல்லூரியில் படித்து அஞ்சல் வழியில் பி.எட்.படித்து வரும் சராசரி மாணவன் தான் ஆசிரியர் வேலைக்கு வருகிறார்கள். கல்வித் தரம் உயராமல் இருப்பதற்கு இது ஒரு காரணம். பள்ளிக்கே செல்லாத, பாடம் நடத்தாத ஆசிரியருக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது, மாவட்ட கல்விதுறை அதிகாரியின் ஒப்புதல் இல்லாமலே மந்திரியை பிடித்து விருது வாங்கி விடுகிறார்கள். அரசு பள்ளி ஆசிரியர்கள் பெரும்பாலும் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் படிக்க வைப்பதில்லை. தனியார் பள்ளியில்தான் படிக்க வைக்கின்றனர்.

போலி மருத்துவர் போல போலி ஆசிரியர்தான் தனியார் பள்ளியில் பாடம் நடத்துகிறார்கள். பெற்றோர்கள் இதை பற்றி கவலைபடுவதில்லை. 4,000 சம்பளம் வாங்கும் அனுபவம் இல்லாத முறையான பயிற்சி படிப்பு இல்லாமல் பாடம் எடுக்கும் தனியார் பள்ளி எப்படி தரமானதாக இருக்க முடியும் என்பதை பெற்றோர்கள் உணருவதில்லை?. நடக்க முடியாத தன் குழந்தையை பல கி.மீ.பயணம் செய்து படிக்க அனுப்பும் பெற்றோர்கள் குற்றவாளிகள்தானே, தன் குழந்தையின் மனநிலை, உடல்நிலை பற்றி அக்கறையில்லாமல் செயல்படுவத்தை நாம் கண்டிக்க வேண்டாமா? அங்கீகாரம் இல்லாத பள்ளியில் கூட தங்கள் பிள்ளைகளை பெற்றோர்கள் சேர்க்கின்றனர்.

பெற்றோர்களை ஆட்டிப்படைக்கும் ஆங்கில மோகத்திற்கு அளவே இல்லாமல் போய்விட்டது…அரசு பள்ளியைவிட தனியார் பள்ளிதான் சிறந்தது என்ற மாயைக்குள் பெற்றோர்கள் சிக்கி கொண்டு விட்டனர். அரசும் தாய்மொழி வழி கல்வியை புறக்கணிக்கிறது. உலகத்திலேயே இல்லாத கேவலம் தமிழகத்தில் தான் நடந்தது. சில ஆண்டுகளுக்கு முன் 5-வது வகுப்பு வரையாவது தாய்மொழி வழி கல்வியை கட்டாயமாக்கக் கோரி 100 தமிழறிஞர்கள் பட்டினிப் போராட்டம் நடத்தினர்….தமிழிலே பேசுவது குற்றம் எனக்கூறும் தனியார் பள்ளிகள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது எந்தவிதத்தில் நியாயம் என கேள்வி எழுப்பினார்.

கல்வி கட்டணக் கொள்ளைக்குத் துணை போகும் மக்கள் விரோத கமிட்டி உத்தரவுகள் தீர்ப்புகளுக்கு எதிராகப் போராடுவோம்
வழக்கறிஞர். மா.பாரி, உயர்நீதிமன்றம், சென்னை.

கல்வி கற்றுக்கொடுப்பது சமூக பொறுப்புள்ள ஒரு மனிதனை உருவாக்கவா? அல்லது பணம் சம்பாதிக்கும் இயந்திரத்தினை உருவாக்கவா? பெற்றோர்கள் சிந்திக்க வேண்டிய விஷயமாக இது உள்ளது.

மா பாரி
உயர்நீதிமன்ற வழக்கறிஞர் மா பாரி

பணம் சம்பாதிக்கும் இயந்திரமாக தனியார் பள்ளிகளில் உங்களது பிள்ளை படித்து வெளியே வந்தால் அப்பிள்ளை எப்படி குடும்பத்தில் ஆசாபாசத்துடன் இருக்கும். பிராய்லர் கோழிகள் போன்று பிள்ளைகளை வளர்க்க சிந்திக்காதீர்கள். பயனற்ற பிள்ளைகளை சமூகத்திற்கு உருவாக்காதீர்கள்.

பெரும்பாலான நீதிபதிகள் தனியார் பள்ளிகள், கல்லூரிகள், நிறுவனங்கள் என இவற்றிற்குச் சாதகமாகவே தீர்ப்புகளை வழங்குகின்றனர். முதலில் தனியார் கல்லூரிகளுக்கு ஆதரவாக தீர்ப்புகளை வழங்கி வந்தனர். இப்போது பள்ளிகளுக்கு ஆதரவாக உள்ளனர். நீதிபதிகள் ஒன்றும் நீதியை வழங்கக்கூடிய கடவுள் அல்ல. அவர்களும் சம்பளம் பெற்று சேவை செய்யக்கூடியவர்கள்தான். அவர்களும் மற்ற அரசு ஊழியர்கள் போன்றே தனியாருக்கு சேவை செய்கிறார்கள்.

எந்தவொரு நபரும் கல்வி உரிமைத் தொடர்பாக தனி நபராக நீதிமன்றங்களை நாடி வெற்றி பெறலாம் என்று எண்ணினால் அதுதான் ஆகப்பெரிய மூடநம்பிக்கை.

இதுபோன்று அமைப்பாகத் திரண்டு போராடினால் மட்டுந்தான் இதற்கு தீர்வு உண்டு.

காசு உள்ளவனுக்கே கல்வி என்ற நவீன மனுதர்ம தனியார் மயத்தை ஒழிப்போம்
தோழர் த.கணேசன், மாநில அமைப்பாளர்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, சென்னை.

சூத்திரனுக்கு கல்வியில்லை – இதுதான் பார்ப்பனியத்தின் மனுநீதியாக இருந்தது. பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பிறகு ஏற்பட்ட கல்வித் துறை மாற்றங்கள் அரசியல் சாசனம் வழங்கிய இடஒதுக்கீடு போன்றவற்றின் மூலமாக படித்து முன்னேறிவிடலாம் என எண்ணிய தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் கனவினை தகர்க்க பார்ப்பன இராஜாஜி கொண்டுவந்ததுதான் குலக்கல்வித் திட்டம்.

கணேசன்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் தோழர் த கணேசன்

அத்தருணத்தில் திருவண்ணாமலையில் நடைபெற்ற சலவைத் தொழிலாளர்கள் மாநாட்டில் பேசச் சென்ற இராஜாஜி என்ன தெரியுமா பேசினார்? ”சலவைத் தொழில் செய்வோருக்கெல்லாம் எதற்குப் பள்ளிக் கூடம். எல்லாரும் படிக்க வந்துவிட்டால் மற்ற வேலைகளையெல்லாம் யார் பாக்கரது. துணிய நல்லா வெளுக்கறது எப்படின்னு கத்துக்கங்க..”

ஆட்சிக் கட்டிலில் ஏறிய உடனேயே சமச்சீர் பாடத்திட்டத்திற்கு முடிவு கட்ட துடித்தார் ஜெயலலிதா. அதனைப் போராடித்தான் முறியடித்தோம்.

தனியார் பள்ளிகளின் வளர்ச்சிக்கு ஊடகங்கள் மிக முக்கியமாக கவனம் செலுத்துகின்றன. இந்த ஊரில் இந்தப் பள்ளி சிறந்தது என புள்ளி விவரங்களை வெளியிடுகிறார்கள். கல்வி மலர் என்ற பெயரில் கல்வி முதலாளிகளின் கொள்ளைக்கு ஆள் பிடித்துத் தருகின்றனர். ஊர் ஊருக்கு கல்வி கண்காட்சி மாதந்தோரும் நடத்தப்படுகின்றது. இப்படி சுண்டி இழுக்கப்படும் பெற்றோர்கள் விட்டில் பூச்சிகளைப் போன்று தனியார் பள்ளிகளை நோக்கி படையெடுக்கின்றனர்.

தனியார் மயக் கல்வியின் கொடூரம் எது தெரியுமா? காசு இல்லாதவனையும் தனியார் பள்ளிகளை நோக்கி இழுத்துச் சென்று சிக்க வைக்கும் இந்த நிலைமையே.

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 என்ற பெயரில் தனியார் பள்ளிகளில் ஏழைகளுக்கு 25 சதவிகித இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டுள்ளது. தனியார் கல்வி முதலாளிகளையெல்லாம் தர்மவான்களாக, வள்ளல்களாக காட்டுகின்ற நடவடிக்கையே இது. ஏசி வகுப்பில் வசதி வாய்ப்புக்களுடன் தன் பிள்ளை படிப்பதைப் பார்க்கும் ஏழைப் பெற்றோர்கள் கல்வி முதலாளிகளை வாயார வாழ்த்தாமல் என்ன செய்வார்கள். கல்விக்கொள்ளைக்கு எதிராக பேச வேண்டிய மக்களை கல்வி முதலாளிகளைப் போற்ற வைக்கும் அபாயம்தான் இது.

இந்தியாவில் தனியார் மய கல்விக்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. 1986ல் தேசிய கல்விக் கொள்கை மூலம் துவங்கிய அரசின் சதித்திட்டம் பல்வேறு ஆய்வுக் குழுக்கள் மூலம் வளர்ச்சியடைந்துள்ளது. வாஜ்பாய் அரசாங்கத்தின் போது கல்வித்துறை நிபுநர்கள் வழங்கிய அனைவருக்கும் இலவச கல்விக்கான 14,000 கோடி நிதி ஒதுக்கீட்டுப் பரிந்துரை குப்பைத் தொட்டியில் வீசப்பட்டு. பிர்லா -அம்பானி குழு வழங்கிய “கல்விக்கு காசு நிர்ணயிக்கும்“ பரிந்துரைதான் ஏற்கப்பட்டது.

சேவைத் துறையின் கீழ் கல்வி வழங்குதல் கொண்டுவரப்பட்டு காட்ஸ் ஒப்பந்தத்தின் மூலம் கல்வி விற்பனைச் சரக்காக மாற்றப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட அரசு மக்களுக்கு இலவச கல்வியை வழங்குமா?

அலை அலையான மக்கள் போராட்டமே கல்வி உரிமையை நடைமுறையில் சாத்தியமாக்க வழிவகைச் செய்யும்.

நிறைவுரை
வழக்குரைஞர் சி.ராஜூ
மாநில ஒருங்கிணைப்பாளர், மனித உரிமை பாதுகாப்பு மையம்

கல்வி உரிமைக்காக மூன்றாமாண்டாக மாநாட்டினை நடத்திக்கொண்டிருக்கிறோம். அனைவருக்கும் இலவச கல்வி வழங்கு! என நாம் ஏன் கேட்க வேண்டும். உரிமையை நாமே எடுத்து கொள்வோம். பயனாளிகளும் நாம் தான் பாதிப்படைவது நாம்தான். காடு, மலை, கழனி, கட்டிடம் எல்லாம் உருவாக்கியது நாம்தான். பராமரிப்பதும் நாம். சுனாமி வந்தால் அழிவதும் நாம்தான். ஆட்சியாளர்களா பாதிக்கப்படுகிறார்கள்?. இந்திய அரசியலமைப்புச் சட்டம்தான் அனைவருக்கும் இலவச கல்வி வழங்க வேண்டும் எனக் கூறுகின்றதே. பின் என்ன பிரச்சினை? நாம் உரிமையை நிலைநாட்ட களத்தில் இறங்கிப் போராட வேண்டும். தனியார் பள்ளிகளை அரசுடமையாக்கு என தமிழக அரசை கேட்கிறோம். அரசு என்ன செய்வது….? நாமே அமல்படுத்துவோம். இனி 8ம் வகுப்பு வரை எந்த தனியார் பள்ளியிலும் கட்டணம் செலுத்த மாட்டோம் என போராட வேண்டும். சட்டம் இருக்கிறது. நீதிமன்றம் அமல்படுத்துகிறதா? பஞ்சாயத்துதான் செய்கிறது.

ராஜூ
மனித உரிமை பாதுகாப்பு மையம் – மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சி ராஜூ

5-ம் வகுப்பு வரை தாய் மொழியில் பாடம் நடத்த வேண்டும் என அரசாணை இருக்கிறது. தனியார் பள்ளி முதலாளிகள் தடைபெற்றுள்ளனர். சமச்சீர் கல்வியை எதிர்த்து, தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணய ஒழுங்கு முறை சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை தனியார் பள்ளி முதலாளிகள் செல்கின்றனர். இவர்கள் பின்னே நாம் செல்ல முடியுமா?. தனியார் பள்ளிகள் வளர வளர.., நர்சரி பள்ளிகள் வளர வளர.., அரசு பள்ளிகள் அழிகிறது என்று அர்த்தம். நாம் கண் கூடாக பார்க்க முடியும். தனியார் முதலாளி ஒரு துறையில் வளருகிறான் என்றால் அரசு துறை அழிந்து போகிறது என அர்த்தம். தனியார் பள்ளிகள் ஏ.சி வகுப்புகள் பேருந்து மாட மாளிகைள், கவர்ச்சியான விளம்பரம் என்பதை மட்டும் பார்க்காதீர்கள். அதனால் அழிந்தவரும் அரசு பள்ளிகளை பாருங்கள். ஏர்டெல், ரிலையன்ஸ், ஏர்செல், வோடபோன் வளருகிறது என்றால் பி.எஸ்.என்.எல் அழிகிறது என்று அர்த்தம். கண்கூடாக பார்க்க முடியும். தனியார் மருத்துவமனைகள் பெருகி கொண்டே போகிறது….வளர்கிறது….என்றால் அரசு மருத்துவமனைகள் அழிகிறது என்று அர்த்தம். இதை பார்க்க வேண்டும். இதற்கு அரசு துணை போகிறது. உடந்தையாக இருக்கிறது.

அப்பல்லோ தரமான மருத்துவ வசதியை கொடுக்கிறது, நமக்கு கிடைக்குமா?. எஸ்.ஆர்.எம்., ஜேப்பியார் தரமான கல்வியை கொடுப்பதாக வைத்து கொள்வோம் நமக்கு கிட்டுமா……? எல்லாவற்றையும் காசு இருந்தால்தான் பெறமுடியும் என்ற நிலையினை தனியார்மயம் உருவாக்கியுள்ளது. கல்வி உரிமையை மட்டும் அது அழிக்கவில்லை, மக்களின் வாழ்வுரிமையையே அது ஒழித்துக்கட்டுகின்றது. இன்று அனைவருக்கும் தரமான கல்வி வேண்டும் என கேட்கிறோம். ஆனால் சுதந்திரம் பெற்றதிலிருந்து எத்தனை முறை குழு போடப்பட்டு கல்வியாளர்கள் அறிக்கை கொடுத்துள்ளார்கள்…? அதை பாராளுமன்றமும் அங்கீகரித்து ஏற்று கொண்டதே? இன்று வரை ஏன் அமல்படுத்தவில்லை. என்ன தடை?

இயற்கையாக கிடைக்கும் அலைக்கற்றைக்கு நாம் காசு கொடுக்கிறோம் இதோ வந்துட்டேன்… என பேசினால் 50 பைசா போச்சு, எங்க இருக்கே…. என்ன ஆச்சு….? என்றால் 1 ரூ போச்சு. இயற்கையாக கிடைக்கும் குடிநீருக்கு… காசு கொடுக்கிறோம். தனியார் மினரல் வாட்டர் கம்பெனி வளருகிறது… என்றால் நகராட்சி குடிநீர் மாசுபட போகிறது என்று பொருள். வாழ்வுரிமையை காசு கொடுத்தால்தான் கிடைக்கும் என்பதை எப்படி ஏற்க முடியும்? பேண்ட் சட்டை போட வேண்டும் என்று ஒரு போராட்டமா? ஆனால் அப்படிதான் இலவச கல்வி உரிமைக்காக போராடுகிறோம்.

பணம் சம்பாதிக்க கல்வி என்றால் 15 ஏக்கர் நிலம் வைத்து சாகுபடி செய்யும் விவசாயி பணம் சம்பாதிக்கவில்லையா?. கள்ளசாராயம் ஓட்டியவன் , கட்டபஞ்சாயத்து அரசியல்வாதிதான் கல்லூரி வைத்திருக்கிறார்கள். அதில் சம்பளத்துக்கு கொத்தடிமையாக வேலை பார்ப்பவன் பிஎச்டி, டாக்டர் பட்டம் வாங்கியவன். உன் கொள்கைப்படி படித்தவன் தானே கல்லூரி வைத்திருக்க வேண்டும். ஒருமனிதனுக்கு மானம், வீரம், அன்பு, இசை, இலக்கியம், படைப்பாற்றல் என்பதை வளர்ப்பதாக கல்வி அமைய வேண்டும்.

குழந்தை கற்றுக் கொண்டே இருக்கிறது. அதை முறைப்படுத்த வேண்டியதுதான் பெற்றோர்கள் கடமை. ஆனால் ஈமு கோழி வளருங்கள் பல ஆயிரம் கிடைக்கும், சிட்பண்டில் போடுங்கள் பலமடங்கு பணம் உயரும், காந்த படுக்கை வாங்க உறுப்பினர்களை சேருங்கள். மாதந்தோறும் வீடு தேடி பணம் வரும், ஒரு லட்சம் எங்களிடம் கொடுங்கள் மாத பத்தாயிரம் உங்களுக்கு அனுப்புகிறோம். என்கிற விளம்பரங்களை மக்கள் எப்படி கொடுப்பாய் என கேள்வி கேட்பதில்லை. அதுபோல் தனியார் பள்ளிகளின் விளம்பரத்தை பார்த்து மக்கள் ஏமாற்றமடைகின்றனர். லாபத்தை மட்டுமே வைத்து உயிர் வாழும் முதலாளி எப்படி தரத்தை கொடுக்க முடியும். லாபத்திற்காக எத்தகைய படுபாதக செயலையும் செய்யும் முதலாளித்துவம் தன் லாப வெறிக்காக ஆறுகளை கொல்லும் காடுகளை கொல்லும் மலைகளை கொள்ளும், மக்களையும் கொல்லும். இத்தகைய தனியார்மயக் கல்வி எப்படி தரமானதாக இருக்கமுடியும்? இந்த ஆண்டு எல்.கே.ஜிக்கு 15 ஆயிரம் என்றால் அடுத்த ஆண்டு 20,000 என ஏறிக் கொண்டே போகும். எப்படி நாம் பணம் கட்டி படிக்க முடியும்.

அரசு பள்ளிகள் வீழ்ச்சியடைவதை நொடித்து போவதை அரசு பார்த்து கொண்டிருக்கிறது. ஆதரிக்கிறது. பெரும்பான்மையான அரசு பள்ளிகளில், நகராட்சி பள்ளிகளில் இரவு நேரத்தில் சமூக விரோதிகள் குடிக்கும் இடமாக, மலஜல கழிக்கும் இடமாக இருக்கிறது. கோட்டாட்சியர் அல்லது காவல்நிலையத்தில் இது நிகழ அரசு அனுமதிக்குமா? தலைமை ஆசிரியர் என்ன செய்கிறார். அரசு அதிகாரிகள் அந்த பள்ளியில் உள்ள பெயரளவு பெற்றோர் சங்க நிர்வாகிகள் என்ன செய்கிறார்கள்.

குடிநீர், கல்வி, மருத்துவம் அனைத்திலும் அரசு தனியார் மயக்கொள்கையை அமல்படுத்துகிறது. கார் பிசினஸ் செய்வதில் காட்டிலும் 122 கோடி மக்கள் பயன்படுத்தும் குடிநீர் கல்வி மருத்துவம் பிசினஸ் அதிக உத்திரவாத லாபம். ஐசியுவில் படுக்க வைத்தால் எந்த ஏழையிடமும் பணத்தை கறக்க முடியும். குழந்தை ஆசைப்படுகிறது கடன் வாங்கியாவது எல்.கே.ஜி படிக்க சேர்ப்போம். சேர்க்கமுடியாத பெற்றோர்கள் குற்ற உணர்விற்கு ஆட்படுத்தப்படுகிறார்கள். ஒருவர் சம்பாதித்து குடும்பம் நடத்திய காலம் போய் குடும்பத்தில் உள்ள அனைவரையும் சம்பாதித்து வாழ வேண்டிய நிலை.

மாவட்டம் முழுவதும் ஒரு மாத காலம் தெருத்தெருவாக மக்களை சந்தித்து இலவச கல்வி உரிமைக்காக இவ்வளவு பெற்றோர்களை திரட்டியிருக்கிறோம். அரசியல் கட்சிகளுக்கு சாத்தியப்படாத விசயம் நமக்கு மட்டும் எப்படி சாத்தியபட்டது. அயராத நமது உழைப்பு. தொடர்ந்த போராட்டம். இலவச கல்வி உரிமைக்காக கூடிய நீங்கள் உங்களை ஒரு போராளியாக கருதி அடுத்த ஆண்டு 5000 பேரை திரட்டினால் பெரிய மைதானத்தில் இந்த மாநாட்டை நடத்தலாம். காவல்துறையிடம் நாம் அனுமதி கேட்டு காத்திருக்க வேண்டியதில்லை. மக்கள் அலை அலையாக தொடர்ந்து போராடினால் அரசு என்ன செய்யமுடியும்?. இந்த மாநாடு ஆண்டு விழாபோல் முடிந்துபோக கூடாது. வரும் கல்வி ஆண்டில் நாம் தொடர்ந்து கல்வி உரிமைக்காக பாராட வேண்டும். உரிமைக்காக போராடி பாருங்கள். சாதாரண கோழை மனிதன்கூட வீரனாகலாம். சுயமரியாதைகாரனாக இருக்க முடியும். போராடுவதற்கு பெரிய தலைவராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மற்றவர்களுக்காக போராடும்போது உங்கள் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும். நம்பிக்கை பெறமுடியும்.

தனியார் பள்ளிகள் கட்டணக்கொள்ளை, அரசு பள்ளி என பேசுகிறோம். மாணவர்களை பற்றி பேசுவதில்லை. அவர்களை பேசவைப்பதில்லை. கற்கும் இடம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். தண்டனையாக இருக்க கூடாது.

விருத்தாச்சலத்தில் தனியார் பள்ளி விடுதியில் கொடுமைக்குள்ளான மாணவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முதல் நாள் தன் சித்தப்பாவிடம் சொன்ன வார்த்தை என்ன தெரியுமா? “சொந்த ஊரிலேயே என்னை ஜெயிலில் வைத்துவிட்டீர்களே!“ என்பதுதான். விருத்தாச்சலத்தைச் சேர்ந்த அம்மாணவன் சிறந்த கல்வி பெறுவதற்காக அவ்வூரிலேயே பள்ளி விடுதியில் தங்க வைக்கப்பட்டு படிக்க வைக்கப்பட்டான். வகுப்பறையே… விடுதி, உணவருந்தும் இடம்.

சமீபத்தில் வந்த “பரதேசி“ படத்தில் பஞ்சம் பிழைப்பதற்காக தேயிலை எஸ்டேட்டுகளுக்கு கூலிகளாக அழைத்துச் செல்லப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் அங்கே அடிமைகளாக தப்பிக்க வழியின்றி தங்களது வாழ்வினை முடித்துக்கொண்டனரே அது போன்று படித்து முடித்து பன்னாட்டு நிறுவனங்களுக்கு லட்சம் சம்பளம் என்று அறிவுக் கூலிகளாகத் தான் நம் பிள்ளைகள் அனுப்பபடுகிறார்கள்.

பெற்றோர்கள் தனியார் பள்ளிகள் விளம்பரத்தை பார்த்து ஏமாந்து அப்பாவிகளாக இருக்கிறார்கள். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் வாக்கு கேட்டு வரும் அரசியல்வாதிகளிடம் கேளுங்கள் கல்வி வரலாறுபற்றி. 1950 அமுலுக்கு வந்த அரசியல் அமைப்பு சட்டத்தில் 10 ஆண்டுகளில் 14 வயது வரை அனைவருக்கும் இலவச கல்வி கொடுக்க வேண்டும் என சொல்லப்பட்டது. 1997 உச்சநீதிமன்ற தீர்ப்பு வரும் வரையில் ஒன்றும் செய்யவில்லை. இந்த தீர்ப்பையும் 2002 தான் சட்டமாக்கப்பட்டது. அனைவருக்கும் இலவச கல்வி என்பதை புறக்கணித்து 2009 –ல் 25 சதவீதம் தனியார் பள்ளியில் இலவச கல்வி என்று சட்டம் போட்டார்களே…….. ஏன்? என்று கேளுங்கள்.

அரசாங்கம் அரசுத்துறையை நொடிக்கச் செய்யத்தான், தனியார் காப்பீடு…, தனியார்கல்வி 25 சதவீதம்…, மேல் படிப்புகளுக்கு கல்விக்கடன், இத்தகைய பணங்களை அரசுத் துறையில் முதலீடு செய்தால் பல தலைமுறை கல்வி கற்கும், மருத்துவம் பார்க்கும். மத்திய மாநில அரசுகள் நேராக முதலாளிகளிடம் தூக்கி கொடுப்பது அரசு துறையை வீழ்ச்சியடைய வைக்கும் தனியார்மயக்கொள்கை. மக்கள் சங்கமாக திரண்டு போராடினால் மட்டுமே இதை நாம் வீழ்த்த முடியும்.

மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்திலும், மனித உரிமை பாதுகாப்பு மையத்திலும் உங்களை உறுப்பினராக இணைத்து கொள்ளுங்கள், போராடுவோம். அடுத்த ஆண்டு மாவட்ட முழுவதும் தாலுக்கா அளவில் இது போன்று பெருந்திரள் மாநாடு நடைபெற வேண்டும். பெரும் திரள் மக்களை இலவச கல்வி உரிமைக்கான போராட்டத்தில் அணிதிரட்ட வேண்டும்.

[படங்களை பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் :
மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு,
கடலூர்.

 1. இத்தனை ஆண்டுகள் ஆன பின்பும் குறைந்தபட்சம் இந்த அடிப்படை வசதி கூட அரசால் செய்யமுடியாதா?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க