privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காஇங்கிலாந்து 'அம்மா' உணவகத்தில் 5 இலட்சம் ஏழைகள் !

இங்கிலாந்து ‘அம்மா’ உணவகத்தில் 5 இலட்சம் ஏழைகள் !

-

ங்கிலாந்தில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக ஒருவேளை உணவுக்கே வழியில்லாமல், இலவச அன்னதான சாலைகளை நாடும் மக்களின் எண்ணிக்கை 5 லட்சமாக உயர்ந்துள்ளது. உலகின் ஏழாவது பணக்கார நாடு என்று பெருமைப்பட்டுக் கொள்ளும் இங்கிலாந்தின் கருப்பு பக்கம் இந்த அப்பாவி ஏழை மக்கள்.

அன்னதான சாலை
ட்ரஸ்ல் அறக்கட்டளையின் அன்னதான சாலை

நம் நாட்டின் கஞ்சித் தொட்டிகளை ஒத்தவை தான் இந்த அன்னதான சாலைகளும். பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சர்ச் கூட்டமைப்புகள் இவற்றை நடத்துகின்றன. அன்னதான சாலைகளை நடத்தும் இங்கிலாந்தின் மிகப் பெரிய அறக்கட்டளையான ட்ரஸல் நடத்தும் அன்னதான சாலைகளை நாடியவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு சுமார் 3.5 லட்சம். இந்த எண்ணிக்கை அதற்கு முந்தைய ஆண்டு எண்ணிக்கையான 1.3 லட்சத்தை விட 170 சதவீதம் அதிகம். மற்ற அமைப்புகளின் அன்னதான சாலைகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டு ஆக்ஸ்பாம் என்ற அமைப்பு மொத்த எண்ணிக்கையை 5 லட்சம் என்று மதிப்பிடுகிறது.

ட்ரஸ்ல் அறகட்டளை, 2011-12-ல் ஏழைகள் அதிகமாக வசிக்கும் லண்டன் பகுதிகளில் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று அன்னதான சாலைகளை தொடங்குவது வழக்கமாக இருந்தது. இன்று ட்ரஸல் அறக்கட்டளை மட்டும் 30,000 தன்னார்வத் தொண்டு செய்யும் ஊழியர்களின் உதவியுடன் 350 அன்னதான சாலைகளை நடத்தி வருகிறது. வாரத்திற்கு மூன்று புதிய இடங்களில் அன்னதான சாலைகள் திறக்கப்படுகின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்தில் மிக முக்கியமான நாடும், ஒரு காலத்தில் “சூரியன் அஸ்தமிக்காத நாடு” என்று பல காலனி நாடுகளை தன் ஆதிக்கத்தின் கீழ் சுரண்டி வந்த நாடுமான இங்கிலாந்து இன்று கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. இங்கிலாந்தில் ஏழைகளின் எண்ணிக்கை நாள்தோறும் உயர்ந்து வருவதும், ஏழைக்கும் பணக்காரனுக்குமான ஏற்றத்தாழ்வு விண்ணுக்கும் மண்ணுக்குமாக மாறி இருப்பதும் முதலாளித்துவ ஆதரவாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கடும் விலைவாசி உயர்வு, விலைவாசி உயர்விற்கு ஏற்றபடி சம்பளம் உயராதது, வேலை இழப்பு, வேலையில்லா திண்டாட்டம், மக்கள் நல சலுகைகள்-ஓய்வூதியம் போன்றவை கிடைப்பதற்கு தாமதமாதல், மக்கள் நலத் திட்டங்களில் வெட்டு என இவற்றுக்கான காரணங்களை அடுக்கிக் கொண்டே போகிறார் சர்ச் ஆக்ஷன் ஆன் பாவர்ட்டி என்ற அமைப்பின் தகவல் தொடர்பாளர் லியாம் ப்ருசல்.

பணக்காரர்களை ஒப்பிடும் போது ஏழைகளுக்கு கிடைக்கும் உணவுப் பொருட்களின் விலை 69 சதவீதம் உயர்வாக உள்ளது, மக்கள் உணவு வங்கியை நாட உணவுப் பொருட்களின் கடும் விலை உயர்வு முக்கிய காரணமாக இருக்கிறது. மேலும், இங்கிலாந்தில் சுமார் 40 லட்சம் பேர் வரை ஆரோக்கியமான, சமச்சீரான, சத்தான உணவை உட்கொள்வதில்லை என்பது இன்னொரு அதிர்ச்சியான தகவல். இதுதான் முதலாளித்துவத்தின் பிறப்பிடமும், தலைமையகமுமான இங்கிலாந்து தனது மக்களுக்கு சாதித்திருப்பது.

poverty-uk-food-banksலியாம் ப்ருசல், ”இங்கிலாந்தில் நிலவி வரும் கடும் பொருளாதார ஏற்றத் தாழ்வின் குறியீடாகவே இப்பொழுது அதிகரித்து வரும் அன்னதான சாலைகள் மற்றும் ஏழைகளின் எண்ணிக்கையை பார்க்க வேண்டும். இது இந்த சமூகத்திற்கு மிகவும் ஆபத்தானது” என்கிறார்.

மக்கள் நலத் திட்டங்களுக்கும் சலுகைகளுக்கும் கடுமையான வெட்டு விழுந்திருப்பதும் அதை எதிர்த்து வீதிகளில் மக்கள் கலவரங்களில் ஈடுபட்டதும் கடந்த ஆண்டு நடந்த நிகழ்வுகள். அந்த கலவரங்கள் அரசு அமைப்புகளால் ஒடுக்கப்பட்டன. லண்டன் கலவரங்களை பற்றி வினவில் வந்த கட்டுரை.

இங்கிலாந்தில் வேகமாக வளரும் இந்த அன்னதான சாலைகளை முறியடிக்கும் நோக்கத்தில்தான் தமிழ்நாட்டின் அம்மா உணவகங்கள் மாநகராட்சிகளின் வார்டிற்கு வார்ட் திறக்கப்படுகின்றன என்று சொல்லலாம். இங்கிலாந்தின் அன்னதான சாலைகளுக்கும், தமிழ்நாட்டின் அம்மா உணவகங்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை. உணவிற்கு போராடும் ஏழை மக்களின் எண்ணிக்கை இந்தியாவிலும், இங்கிலாந்திலும் உலகின் பல நாடுகளிலும் பெருகிக் கொண்டே போகிறது.

  1. அமெரிக்க மக்கள் தொகையில் 15 சதவீதம் பேர் இலவச உணவை நம்பி இருப்பவர்கள்.
  2. ஸ்பெயினில் குப்பையில் உணவை தேடும் மக்கள்
  3. அமெரிக்காவில் உணவு இல்லாமல் அவதிப்படும் குடும்பங்களின் அவல நிலை.
  4. அமெரிக்காவில் பட்டினி போடப்படும் பள்ளிக் குழந்தைகள்.
  5. கல்விக்காக கற்பை விற்கும் இங்கிலாந்து மாணவிகள்.
  6. தமிழகத்தில் அதிகரித்துவரும் அம்மா உணவகங்கள்.

உலகமயம், தனியார்மயம், தாராளமயம் கொள்கைகள் உலகிற்கு அள்ளிக் கொடுத்த பரிசு தான் இந்த அவலம். ‘சோவியத் யூனியனில் மக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்காக கியூவில் நிற்க வேண்டும், பல கோடி மக்கள் பட்டினியால் உயிரிழந்தனர்’ என்றெல்லாம் பொய் பிரச்சாரம் செய்து, வண்ண வண்ண பொய்களை கட்டவிழ்த்து விட்டன முதலாளித்துவ நாடுகள். சீனாவிலும் ரஷ்யாவிலும், இயற்கையாக இறந்தவர்களின் எண்ணிக்கையை எல்லாம் பஞ்சத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கையாக காட்டபட்டு மக்கள் மத்தியில் சோஷலிச பொருளாதாரத்தின் மீதான அவதூறுகள் பரப்பப்பட்டன. 1991-ல் சமூக ஏகாதிபத்தியமான சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு மக்களை கம்யூனிச அபாயத்தில் இருந்து மீட்டு விட்டதாக தம்பட்டம் அடித்துக் கொண்ட முதலாளித்துவத்தின் லட்சணம் 20 ஆண்டுகளில் பல்லிளித்திருக்கிறது.

உணவுக்கு வேலை
சாப்பாட்டுக்கு வேலை செய்யத் தயார் !

இன்று உலகமே கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதில் முன்னாள், இந்நாள் வல்லரசுகள், பல முதலாளித்துவ நாடுகளும் அடக்கம். இந்த பொருளாதார நிகழ்வுகளுக்கு விதவிதமான பெயர்களை வைத்து, தலையை பிய்த்துக்கொண்டு பல வண்ண வியாக்கியானங்களை சொல்லிகொண்டிருக்கிறார்கள் முதலாளித்துவ பொருளாதார அறிஞர்கள்.

வளர்ந்த நாடுகளின் முதலாளித்துவ அரசுகள், முதலாளிகளுக்கும் வங்கிகளுக்கும் நிதி உதவி அளிப்பதற்காக, மக்களுக்கு அளிக்கப்பட்டிருந்த குறைந்தபட்ச சலுகைகளை கூட ஒழித்துக் கட்டி வருகின்றன. மக்களுக்கு உணவு, தண்ணீர், கல்வி போன்றவற்றை வழங்க வேண்டிய அரசு அதில் இருந்து விலகி பணம் இருப்பவர்கள் வாழட்டும், இல்லாதவர்கள் சாகட்டும் என முதலாளிகளுக்கு அடிபணிந்து கிடப்பதுதான் முதலாளித்துவ ஜனநாயகத்தின் அறமாக முன் வைக்கப்படுகிறது.

ஆக்ஸ்ஃபேம், சர்ச் அக்ஷ்ன் ஆன் பாவர்ட்டி ஆகிய அமைப்புகள் இந்த பிரச்சனையை எப்படி எதிர்க்கொள்ளலாம் அரசுக்கு சில பரிந்துரைகளை செய்துள்ளன. பணக்காரர்களுக்கு அதிக வரி விதிப்பது, வரி ஏய்ப்பு செய்கிறவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது போன்றவை. இதனால் தேவையான பணம் அரசுக்கு பெருகி மக்கள் நல திட்டங்களில் கவனம் செலுத்தலாம் என்கின்றன அவை.

ஆனால், உலகமயம், தனியார்மயம் தாராள மயம் போன்றவை ஏற்படுத்தியிருக்கும் இந்த பிரச்ச்னைகளை மேற்சொன்ன வரி விதிப்பு முறை மூலம் தீர்த்துவிட மூடியாது. லாபத்தை ருசித்த முதலாளிகள் மீண்டும் மீண்டும் லாபத்திற்காக தமக்கான ஆதரவு அரசை ஏற்படுத்திக்கொள்வார்கள். ஒரு நாட்டில் தமக்கு சாதகமான சூழல் மாறி விட்டால், உடனேயே தமது மூலதனத்துடன் இன்னொரு நாட்டுக்கு நகர்ந்து விடுவார்கள். முதலாளிகளால் கட்டுப்படுத்தப்படும் எந்த ஒரு அரசும் மேலே சொன்ன பரிந்துரைகளை ஏற்று நிறைவேற்றப் போவதில்லை.

இன்று உலகத்தை பீடித்திருக்கும் முதலாளித்துவ பொருளாதார நெருக்கடிக்கான ஒரே தீர்வு, முதலாளிகளின் லாப வேட்டையின் அடிப்படியில் இயங்கும் இந்த பொருளாதார அமைப்பையும், அதற்கு முட்டுக் கொடுக்கும் அரசு அமைப்புகளையும் ஒழித்துக் கட்டி மக்கள் நலனை முன்வைக்கும் சோஷலிச பொருளாதாரத்திற்கான அரசை உருவாக்க வேண்டும். அப்படி சோசலிச முகாம் உருவாகாத வரை மேற்குலக மக்களுக்கு விடுதலை இல்லை.

மேலும் படிக்க