Wednesday, February 21, 2024
முகப்புஉலகம்அமெரிக்காதுருக்கியை உலுக்கிய மக்கள் போராட்டம் !

துருக்கியை உலுக்கிய மக்கள் போராட்டம் !

-

“அரசு அனைத்து இடங்களிலும் வணிக வளாகங்களாக கட்ட முனைகிறது. நானும் என் குடும்பமும் சில்லறை வியாபாரம் செய்பவர்கள், நாங்கள் எப்படி வாழ்வது?” என கேட்கிறார் ஒருவர்.

“இந்த நாட்டில் ஏழைகள் ஏழையாகிக்கொண்டே இருக்கிறார்கள் ஆனால் பிரதமரோ பணக்காரர் ஆகிக் கொண்டே இருக்கிறார், போராட்டம் தான் ஒரே வழி” என்கிறார் ஒரு தொழிலாளி.

கடந்த வெள்ளிக்கிழமை துருக்கியின் தலைநகரான இஸ்தான்புல்லில் உள்ள சென்டர் பார்க்கை வணிக வளாகமாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து சிலர் பூங்கா ஆக்கிரமிப்பு போராட்டத்தை துவங்கினார்கள். பின்னர் இது பூங்காவை மட்டுமல்ல நாட்டையே முதலாளிகளிடமிருந்து மீட்கும் போராட்டமாக வளர்ந்தது. இந்தப் போராட்டம் அமெரிக்காவில் நடந்த வால் வீதி ஆக்கிரமிப்பு போராட்டத்தை ஒத்திருந்தது. பூங்காவை ஆக்கிரமித்து அங்கே போராட்டக்காரர்கள் அமைதியாக உட்கார்ந்திருந்தனர். அவர்கள் முதலாளிகளை எதிர்த்ததாலேயே போராட்டம் ஊடகங்களில் இருட்டடிப்பு செய்யப்பட்டது. பிபிசி மாதிரியான ஊடகங்கள் இதை ஒரு சூழலியல் போராட்டமாக செய்திகள் வெளியிட்டன.

மக்கள் இஸ்தான்புல்லில் உள்ள டக்சிம் சதுக்கத்தில் குவிந்து அரசுக்கெதிரான போராட்டத்தை தீவிரப்படுத்தினர். கூட்டத்தை கலைக்க அரசு போலீஸ் மூலம் பெரும் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டது. போலீஸார் கண்ணீர் புகைக் குண்டுகள், தண்ணீர் லாரிகளை கொண்டு போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர்.

Turkey 2ஊடகங்கள் இருட்டடிப்பு செய்யும் நிலையில் இணையமும் மட்டுறுத்தப்படும் நிலையில் போலீஸின் கடும் வன்முறை மூலம் இந்த போராட்டம் ஒடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் போலீசின் தாக்குதல், அரசின் அடக்குமுறை இன்னும் நிறைய மக்களை வீதிக்கு அழைத்து வந்தது. தலைநகரில் உள்ள டக்சிம் சதுக்கம், துருக்கியில் ஜனநாயகத்தை விரும்பும் மக்களின் போராட்டக் களமாகியது. போராட்டக்காரர்கள் தங்களை தாக்க வரும் போலீஸ்காரர்களை திருப்பித் தாக்கி அவர்களின் கவசம் போன்றவற்றை எடுத்து வந்து விடுகிறார்கள்.

ஆம், போராட்டம் டக்சிம் சதுக்கத்தில் இருந்து விரட்டியடிக்கப்பட்டு நாடு முழுவதும் பரவியது. உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் மக்கள் போராட்டம் செய்தால் அவர்களை ஒடுக்க பல்வேறு ரசயான பொருட்களையும், போராட்டங்களை ஒடுக்கும் இதர கருவிகளையும் அமெரிக்கா தான் டன் கணக்கில் ஏற்றுமதி செய்கிறது. அமெரிக்காவிடமிருந்து துருக்கி டன் கணக்கில் கண்ணீர் புகை குன்டுகளையும், ரப்பர் குண்டுகளையும் இதர கருவிகளையும் வாங்கியது அம்பலமாகியுள்ளது.

துருக்கியில் ஒடுக்கப்படும் பல்வேறு தரப்பினர் போராட்டங்களில் கலந்து கொண்டனர். குர்து தேசிய இனமக்கள், இடது சாரி எதிர்க் கட்சியினர், கம்யூனிஸ்ட் கட்சியினர், மாணவர்கள், சிறு வியாபாரிகள் பெரும் எண்ணிக்கையில் போரட்டங்களில் பங்கெடுக்க துவங்கியுள்ளனர். செவ்வாய்க் கிழமை முதல் துருக்கியின் மிகப் பெரிய தொழிலாளர்கள் யூனியனும் போராட்டத்தில் பங்கேற்கும் என அறிவித்துள்ளது.

“நான் முதல் நாள் வந்தேன், போலீஸார் தாக்கினார்கள், அதனால் போராட வேண்டும் என்ற என் எண்ணம் உறுதியானது” என்கிறார் டக்சிம் சதுக்கத்தில் உள்ள மாணவர் ஒருவர். போலீஸின் அடக்கு முறையை மக்கள் ஆண்கள், பெண்கள் என பாகுபாடு இல்லாமல் எதிர்த்து நிற்கின்றனர். போலீஸின் அடக்கு முறையையும் மீறி போராட்டக்காரர்கள் டக்சிம் சதுக்கத்தை ஆக்கிரமித்துள்ளனர்.

turkey-protestsடக்சிம் சதுக்கம் ஒரு கம்யூனை போல் காட்சியளிக்கிறது, ஒரு பக்கம் பொது வாசிப்பகம் ஏற்படுத்தப்பட்டு அங்கு புத்தகங்கள் குவிந்து கொண்டிருக்கின்றன. ஊடகங்கள் இருட்டடிப்பு செய்யும் நிலையில் போராட்ட விபரங்களை இணையத்தின் மூலம் பரப்புவதையும் கூட்டாக செய்கின்றனர். தாமாக முன் வந்து அனைவரிடமும் “உங்களுக்கு டீ வேண்டுமா” என்று கேட்டு ஒருவர் டீ கொடுக்கிறார். ராமுவா என்கிற ஆசிரியர் தம் மாணவர்களுடன் வந்து அங்கேயே பாடம் சொல்லிக் கொடுக்கிறார். ஸ்டார்பக்ஸ் காபி ஷாப் மக்களால் கதவடைக்கப்பட்டு இலவச உணவு பரிமாறப்படுகிறது.

ரோப்பாவில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடியில் துருக்கி காயப்பட்டிருகிறது, ஐரோப்பா எங்கும் நிலவி வரும் மக்கள் நலத் திட்டங்களின் வெட்டு துருக்கியிலும் தொடர்கிறது. பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் மக்கள் வீதிக்கு வந்து போராடிக் கொண்டிருக்க, துருக்கியிலும் மக்கள் நேரடியாக முதலாளிகளுக்கு எதிராக போராடுகின்றனர்.

துருக்கியில் ஆளும் ஏகே கட்சியின் தலைவரும், பிரதமருமான எர்டோகன் இந்தியாவின் நரேந்திர மோடி போன்று ஒரு வலதுசாரி அடிப்படைவாதி. மூன்றுமுறை தேர்தலில் வென்று பிரதமரானவர். பத்து ஆண்டுகளுக்கு மேல் பிரதமராக இருக்கும் அவருக்கு இது மூன்றாவது பதவிக் காலம். தேர்தல் எல்லாம் நடக்கும் ஜனநாயக நாடு தான் துருக்கி என தப்புக்கணக்கு போடக் கூடாது. ஜனநாயக முறை தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்க அதிபர் முதலாளிகளின் நலன்களுக்காக செயல்படுவதை போலத் தான் துருக்கியிலும், பிரதமர் பன்னாட்டு முதலாளிகளுக்கும் அமெரிக்க நலன்களுக்காகவும்தான் செயல்படுகிறார்.

Turkey-Protestஅவர் பதவியேற்றதும் இசுலாமிய சட்டத்தை துருக்கியில் கொண்டுவருவார் என பலர் பயந்தனர். ஆனால் அதற்கு நேர்மாறாக எர்டோகன் முதலாளிகளுக்கு நாட்டை திறந்துவிட்டார், ஐரோப்பிய யூனியனுடன் நட்பு பாராட்டி சிரியாவுக்கு அனுப்பப்படும் நேட்டோ படைகளில் துருக்கி ராணுவ வீரர்களை சேர்த்தார். துருக்கியில் ஒடுக்கப்படும் குர்து தேசிய இன மக்களின் அடிப்படை உரிமைகளை பறித்தார். கருத்து சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம், தனி நபர் சுதந்திரம் என சகலமும் கானல் நீராகியது. சுமார் 100 பத்திரிகையாளர்கள் கைது செய்யபட்டு ஜெயிலுக்கு அனுப்பப்பட்டனர். இணைய தளங்கள் மட்டுறுத்தப்பட்டன, தீவிர கண்காணிப்பின் கீழ் மக்கள் கொண்டு வரப்பட்டனர். போலீசுக்கு விண்ணளவு அதிகாரம் வழங்கபட்டது.

துருக்கியில் பல நகரங்களில் உள்ள பூங்காக்கள் தனியாருக்கு விற்கப்பட்டு அங்கெல்லாம் வணிக வளாகங்கள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. துருக்கியின் அழுகிய உடலின் மீது வண்ண வாசனை திரவியங்களை தெளித்துக் கொண்டிருந்தார் எர்டோகன். தாங்க முடியாத பொருளாதார நெருக்கடியும் எரடோகனின் மக்கள் விரோத கொள்கைகளும் மக்களை போராட்டக் களத்திற்கு கொண்டு வந்தன.

போராட்டச் செய்திகளை பதிவு செய்யும் பன்னாட்டு ஊடகங்கள் முதலில் பூங்காவை பாதுகாக்கும் நோக்கில் நடத்தப்படும் சுற்றுச்சூழல் போராட்டமாக சித்தரித்தன. பின்பு ஒரு பிரதமர் எர்டோகனை எதிர்த்த போராட்டமாக செய்திகள் வெளியிட்டன. மக்கள் முதலாளிகளையும், தனியார் நிறுவனங்களையும் எதிர்ப்பதை திட்டமிட்டே மறைக்கின்றன.

ஆப்பிரிக்காவிற்கு ஏற்கனவே திட்டமிட்ட சுற்றுப்பயணத்தில் உள்ள பிரதமர் எர்டோகன் போரட்டக்காரர்களை கலவரக்காரர்கள், அடிப்படைவாதிகள், திருடர்கள், என்றும், போராட்டங்கள் எதிர்க்கட்சியினரின் சதி என்றும் பல்வேறு வார்த்தைகளில் திட்டுகிறார். துருக்கியின் இறையாண்மை காப்பாற்றப்படும் என்கிறார். சமூக வலைத்தளங்கள் ஒரு சாபம் என்றார். செவ்வாயன்று துணைப் பிரதமர், போராட்டக்காரர்களை தவறாக கையாண்டு விட்டதாகவும், அவர்கள் கடுமையாக தாக்கப்பட்டதற்கு மன்னிப்பு கேட்பதாகவும் சொன்னார். ஆனால் போலீசின் கடும் தாக்குதல் தொடர்ந்தபடியே தான் உள்ளது.

turkey-protests-3அரசு குர்து தேசிய இனமக்களை போராட்டங்களிலிருந்து பிரிக்க சூழ்ச்சி செய்கிறது. ஒடுக்கப்பட்ட தேசிய இனமான குர்துக்கள் துருக்கியிலிருந்து தனி நாடு கோரி போராடுபவர்கள். நீண்ட காலமாக கிடப்பில் போட்டிருந்த குர்து இனக் கட்சிகளுடனான அமைதி பேச்சு வார்த்தையை அரசு உடனடியாக துவங்கியுள்ளது. இதனால் குர்து இன மக்களின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைக்காக அரசை ஆதரிக்க வேண்டுமா அல்லது இந்த போராட்டத்தை ஆதரிக்க வேண்டுமா என குழப்பம் கொண்டுள்ளனர்.

மக்கள் எழுச்சியில் தன்னார்வ நிறுவனங்களும் புகுந்து விட்டன. உண்மையான மக்கள் எழுச்சியை மழுங்கடிக்கவே முதலாளிகள் பெற்று போட்ட கள்ளப் பிள்ளைகள் தான் இந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், அனார்கிஸ்ட் குழுக்களும். அவற்றின் மூலம் ஏதாவது ஒரு வடிவில் தமது ஆட்சியை தொடர்வதை ஆளும் வர்க்கம் உறுதி செய்து கொள்கிறது.

எர்டோகன் எனும் பொம்மை மாறிவிடுவதால் மக்களின் பிரச்சனைகள் தீர்ந்து விடப் போவதில்லை. நாட்டைச் சுரண்டும் பன்னாட்டு முதலாளிகளை விரட்ட வேண்டும் என்றால் அதை முதலாளிகளின் ஊழியர்களான தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அனார்கிஸ்டுகளின் உதவியுடன் சாதிக்க முடியுமா?

போராட்டத்தை வழி நடத்தவும் எதிரியை வீழ்த்தவும், தெளிவான திட்டம் கொண்ட ஒரு கம்யுனிஸ்ட் கட்சியினால் தான் இது சாத்தியம். இல்லையென்றால் மக்களின் எழுச்சி அதிபர் மாற்றம் என்று புதிய ஏகாதிபத்திய கைக்கூலி அரசின் கையில் அதிகாரத்தை ஒப்படைப்பதாக, விழலுக்கு இறைத்த நீராக வீணாகிப் போகும். எகிப்து மக்கள் எழுச்சியின் இன்றைய நிலை, துனிசிய மக்கள் எழுச்சியின் இன்றைய நிலை, அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு போரட்டங்களின் இன்றைய நிலை இவற்றுடன் ஒப்பிட்டு பார்த்து துருக்கி மக்கள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

குர்து இன மக்களின் வாழ்க்கைக்கும், உரிமைகளுக்கும் உழைக்கும் மக்களின் ஜனநாயக அரசுதான் தீர்வளிக்க முடியும். அந்த அடிப்படையில் குர்து இனமக்களையும் ஒருங்கிணைத்து போராட வேண்டும்.

முதலாளித்துவத்துக்கு எதிரான போர் பல தளங்களிலும், பல வடிவங்களிலும் வலுப்பெற்று வருகின்றது. போராட்டங்களை திசை திருப்பவும், மழுங்கடிக்கவும் ஆளும் வர்க்கங்கள் உறுதியான திட்டத்துடன் செயல்படுகின்றன. உழைக்கும் மக்கள் ஒன்றிணைந்து, பெரு முதலாளிகளுக்கும் ஆளும் வர்க்கங்களுக்கும் சேவை செய்யும் இன்றைய பொருளாதார அமைப்பை தூக்கி எறிந்து பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கான ஜனநாயகத்தை நிறுவுவதுதான் உலகம் எதிர் கொண்டுள்ள நெருக்கடிக்கான ஒரே தீர்வு.

– ஆதவன்

  1. துருக்கியை காயபடுதும் முதலாளிகள், இருக்கும் எல்லா கண்டத்தையும் காயபடுத்த துடிக்கின்றனர் .இதற்க்கு எதுரான போராட்டம் கண்டம் முழுதும் நடக்கிறது வாழ்த்துக்கள் போராடும் மக்களுக்கு. இந்த போராட்டம் கம்யூன் கட்சி இல்லாமல் வெற்றி பெறாது எனவே போராடும் மக்கள் கம்யூன் கொள்கையை பின்பற்றி முதலாளித்துவத்தை வீழ்த்த வேண்டும். அரசின் பதவிமாற்றம் மக்களை ஏயித்து ஒடுக்கவே எனவே சமுக மாற்றம் வேண்டும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க