privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

நினைவுகூர்தல் !

-

தோழர் சீனிவாசன்(மக்கள் கலை இலக்கியக் கழகத்தில் மாநில பொருளாளராக பணியாற்றி மறைந்த தோழர் சீனிவாசனது முதலாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் சென்னையில் கடந்த மே 5-ம் தேதி நடந்தது. அந்தக் கூட்டத்தில் ம.க.இ.க. மாநில பொதுச் செயலாளர் தோழர் மருதையன் ஆற்றிய உரையின் சுருக்கத்தை இங்கே வெளியிடுகிறோம்).

நினைவுகளை பின்னோக்கி ஓட்டிப் பார்க்கும் போது சம்பவங்கள் வரிசையாக நமக்கு நினைவுக்கு வருவதில்லை. நினைவு ஒரு நறுமணம் போன்றது. ஒரு மனிதனுடைய சாரமாக எது நிற்கிறதோ அதை நம்முடைய இதயம் பதிவு செய்துகொள்கிறது. தோழர் காளியப்பன் சொன்னதைப் போல ஒரு மகிழ்ச்சியான மனிதர் தோழர் சீனிவாசன். புரட்சிகர அரசியல் பணிகளை செய்வதில் அசாதாரணமான ஒரு ஈடுபாட்டையும் மகிழ்ச்சியையும் அவரிடம் யாரும் காணத் தவற முடியாது.

மனிதனை விலங்குகளிடம் இருந்து பிரிப்பது உழைப்பு. உழைப்பு என்ற மனிதனுடைய சிறப்பியல்பை மனிதனுக்குரியதாக இல்லாமல் செய்வதுதான் முதலாளித்துவ சமூகம். பல பேரை பார்க்கிறோம். வேலைக்கு போய் வருகிறார்கள். அது தொழிலாளியாக இருக்கட்டும், ஒரு எழுத்தராக இருக்கட்டும் உழைக்கின்ற அந்த காலத்தை நரக வேதனையாக உணர்கிறார்கள். வாழ்க்கை என்று அவர்கள் எதைக் கருதுகிறார்கள்? சாப்பிடுவதை, குடிப்பதை, உறங்குவதை, இன்பம் துய்ப்பதைத்தான் வாழ்வென்று கருதுகிறார்கள். இந்த வாழ்க்கையை வாழ்வதற்க்காக பொருள் ஈட்ட வேண்டி இருக்கிறது. அதற்கு தவிர்க்கவியலாமல் வேண்டா வெறுப்பாக உழைப்பில் ஈடுபடுகிறார்கள்.

இதை மார்க்ஸ் எப்படி சொல்கிறார்? மனிதனுக்கு உரிய உழைப்பை, மனிதனிடமிருந்து அந்நியப்படுத்தி விட்டு, எது விலங்குக்கு உரியதோ அதை, அதாவது உண்பது உறங்குவது போன்றவற்றை மனிதனுக்கு உரியதாக மாற்றி வைத்திருக்கிறது முதலாளித்துவம் என்பார். உழைப்பை துன்பமாக, தன்னிடமிருந்து அந்நியமாக்கப்பட்டதாக, தனக்கு எதிரானதாக மாற்றி இருக்கின்ற இந்த முதலாளித்துவ சமூகத்திலிருந்து மக்களை விடுவித்து, உழைப்பை மகிழ்ச்சிகரமானதாக ஆக்குவது எப்படி, மனித இயல்பாக மக்களுக்கு அதை மீட்டுத் தருவது எப்படி என்பது தான் நம்முடைய பணி.

சீனிவாசன் வேலையை ராஜினாமா செய்து விட்டு வந்தார். குடும்ப பராமரிப்பிற்காக எட்டு மணி, நேரம் பத்து மணி நேரம் அங்கே குப்பை கொட்டுவதை, அந்த வேண்டா வெறுப்பான உழைப்பை அவர் விரும்பவில்லை. விருப்ப ஓய்வு என்று அழைக்கப்பட்டாலும், ஓய்வு எடுப்பதற்காக அவர் விலகவில்லை. முன்னிலும் அதிகமாக உழைப்பதற்காகத் தான் வெளியே வந்தார். இது மகிழ்ச்சியை தருகின்ற உழைப்பு என்று அவர் விரும்பி எற்றுக் கொண்டிருந்ததனால் தன்னுடைய கடைசி நாள் வரையிலே, இந்த அமைப்பு பணிகளில் ஈடுபட்டார்; அதை தன்னுடைய சொந்தப் பணியாக விருப்பப்பூர்வமாக செய்கின்ற பணியாக அவர் கருதினார்

06-speech-2தோழர் சீனிவாசனுடைய நினைவு நாளும், கார்ல் மார்க்சினுடைய பிறந்த நாளும் ஒரே தேதியாக அமைந்திருப்பது ஒரு தற்செயல் நிகழ்வு. பல விபரீதமான தற்செயல் நிகழ்வுகள் சமூகத்தில நடக்குது. மே தினம் நடிகர் அஜித்தின் பிறந்த நாள். லெனின் என்றும் ஸ்டாலின் என்றும் பெயர் வைக்கப்பட்டவர்கள் கோழையாக, பொறுக்கிகளாக இருப்பதை பார்க்கிறோம். எனவே தற்செயல் நிகழ்வுகள் அல்ல, ஒருவர் எப்படி வாழ்ந்தார் என்பது தான் அவர்களுடய பிறப்பைப் பற்றியும் இறப்பைப் பற்றியும் அவர்களுடைய நினைவைப் பற்றியும் நம்மை பேச வைக்கிறது. அதனால்தான் தோழர் சீனிவாசனை நாம் நினைவு கூர்கிறோம்.

ஆங்கிலத்தில் ஒரு வழக்குண்டு. “ஈடு செய்ய முடியாத இழப்பு என்று கூறுகின்ற இந்த உலகம், மறுநாள் தன் சோற்றில் ஒரு கவளத்தைக் கூட குறைத்துக் கொள்வது இல்லை” என்று. இது ஒரு உண்மை. மரணம் இல்லாத வாழ்வை யாரும் எதிர்பார்த்து இங்கே இல்லை.

இன்று வாழ்நாள் நீண்டு விட்டது. இன்னும் 50 ஆண்டுகளில் மனிதனின் ஆயுளை 150 ஆண்டுகள் வரை நீட்டித்து விட முடியும் என்கிறார்கள். இன்றே பலர் நீண்ட நாள் உயிர் வாழ்கிறார்கள். வாழ்கிறார்கள் என்பதை விட உயிரோடு இருக்கிறார்கள் என்று சொல்லலாம். உயிரோடு இருத்தல் என்ற அளவிலே இந்த வாழ்க்கையை நீட்டித்து தருகிறேன் என்கிறது மருத்துவ அறிவியல். முதலாளித்துவ பொருளாதாரம் என்ன சொல்கிறது ?

பொருளாதாரம், தேவை இல்லாதவர்கள் அதிகமாகி விட்டார்கள் அவர்கள் எல்லாம் விடை பெற்றுக் கொண்டால் நல்லது என்று சொல்கிறது. கீரிசில், ஸ்பெயினில் தொழிலாளர்களுடைய ஓய்வூதியம் வெட்டப்பட்டுவிட்டது. ஒரு வீட்டில் முதியவர்களுக்கு சோறு போடவில்லை என்றால் அது ஒரு அறம் கொன்ற செயல், ஒரு நாட்டில் முதியவர் ஓய்வூதியத்தை வெட்டு என்று சர்வதேசிய நாணய நிதியம் சொன்னால், அது நல்ல பொருளாதாரக் கொள்கை எனப்படுகிறது. ஆக வாழ்வது என்பது உயிரோடு இருத்தல் என்பதாக சுருக்கப்பட்டு, அப்படி உயிரோடிருப்பவர்களில் எவ்வளவு பேர் உயிரோடிருக்கலாம் என்பதை உலக முதலாளி வர்க்கம் முடிவு செய்கின்ற ஒரு காலத்தில் நாம் இருக்கிறோம்.

இருப்பினும் எல்லோருக்குமே தாம் மற்றவர்களால் அங்கீகரிக்கப்படவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதனால் தான் திருமணத்தையாவது அமர்க்களமாக நடத்தி அங்கீகாரம் பெற விழைகிறார்கள். ரெளடி, பொறுக்கியா இருந்தாலும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டுகிறார்கள். சமூகத்தின் அங்கீகாரம் என்பது கேட்டுப் பெறுவது அல்ல, விலை கொடுத்து வாங்குவதும் அல்ல.

நம்முடைய சட்டமன்றத்தில் மந்திரிகள், ‘எதுக்கும் லாயக்கு இல்லாத என்னை அமைச்சராக்கிய அம்மா’ன்னு தான் ஆரம்பிக்கிறாங்க. தகுதியற்ற நபர்களை அமைச்சராக்கியதாக சொல்வதை ஜெயலலிதா ஒரு விமரிசனமாக பார்ப்பதில்லை. புகழுரையாகத்தான் எடுத்துக்கிறாங்க. ஏனென்றால் அவங்களை பொருத்தவரைக்கும் நாமெல்லாம் சாலையின் இடது புறம் போகிறோம் என்றால் அது கூட அம்மாவின் உத்தரவுக்கிணங்கத்தான். கருணாநிதி இதில் கரை கண்டவர். யாராவது மேடையில அவரைப் புகழ்ந்து பேசினால், புதுசா எதாவது சொல்கிறார்களான்னு கவனிப்பார். ஒரு வேளை புகழத் தவறினால், புதுசா இப்படி அயிட்டம் இருக்குன்னு அவரே எடுத்து கொடுத்து புகழச் சொல்லுவார். செத்த பிறகு புகழ்ந்தால் கேட்காது இல்லையா, அதனால உயிரோடு இருக்கும் போதே ஆள் வைத்து புகழ்ந்து கொள்கிறார்கள்.

சுந்தர ராமசாமி என்றொரு இலக்கியவாதியின் கவிதை இருக்கிறது. “நான் விடை பெற்றுக்கொண்டுவிட்ட செய்தி உன்னை வந்து எட்டியதும், நண்பா பதறாதே, ஒரு இலை உதிர்ந்ததற்கு மேல் அதில் எதுவும் இல்லை” என்று தொடங்குகிறது கவிதை. ரொம்ப தன்னடக்கமா இருக்குது இல்லையா ? அடுத்த வரி “இரங்கல் கூட்டம் போட ஆள் பிடிக்க அலையாதே, நம்முடைய கலாச்சாரத் தூண்களின் தடித்தனங்களை எண்ணி மனச்சோர்வில் ஆழ்ந்து கலங்காதே” அப்புறம் டிஜிட்டல் பானர் வைக்காதே, போஸ்டர் அடிக்காதே என்று போகிறது.

இருக்கும் போதே தன்னுடைய மரணத்தை அவர் நினைச்சு பார்க்கிறாரு. பல பேரு நினைக்கிறது தான் இது. இருந்தாலும், கவிதை தன்னடக்கம் போல தொடங்கி அங்கீகாரத்துக்கான வேட்கை ரொம்ப அருவெருப்பாக வெளியே வருகிறது.

காரல் மார்க்ஸ்
காரல் மார்க்ஸ்

தோழர்கள் மறைந்த பிறகு அவர்களுடைய சிறப்பை நாம கூட்டம் போட்டு பேசுறோம். அவர்கள் இருக்கும் போது, அதை நாம் பேசுவதில்லை. வேண்டியதில்லை என்று நினைக்கிறேன். ஏனென்றால், நாம் சீனிவாசனையோ வேறு எந்த தோழரையோ பற்றியோ பேசும்போது ஒரு சமூக உணர்வுள்ள மனிதன் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அப்படி நடந்து கொண்டார் என்பதற்காக நாம் பாராட்டுகிறோம். சமூகத்தில் பலர் அப்படி நடந்து கொள்ளவில்லை என்பதானால் இது தனியாக தெரிகிறது.

நமது தோழர்களுடைய புரட்சிகர திருமணங்களில் கூட, நாங்க காசு வாங்கிறது இல்லை, தாலி கட்டுறது இல்லை. பெண்ணை அடிமையாக கருதுவது இல்லை என்று, நாகரீகமாக நடந்து கொள்வதையே ஒரு அசாதாரணமான விசயம் போல விதந்து கூற வேண்டிய சூழல்! மற்றபடி இதையெல்லாம் நாம் பாராட்டிக் கொண்டிருப்பதில்லை.

கம்யூனிஸ்டுகள் மட்டுமல்ல சிறந்த அறிவியலாளர்களாக இருக்கட்டும். அல்லது எழுத்தாளர்களாக இருக்கட்டும் மனித சமூகத்திற்கு எதையேனும் பங்களிக்க வேண்டும் என்று கருதுகின்ற யாரும் தன்னுடைய மறைவிற்கு பின் அங்கீகாரம் இருக்குமா என்று கவலைப்படுவதில்லை. மாறாக, மறைவதற்கு முன் எதை செய்து முடிக்க வேண்டும் என்பது குறித்தே பெரிதும் கவலைப்படுகிறார்கள்.

மார்க்சினுடைய நண்பர் என்ன நீண்ட நாட்களாக நான் எழுதிய கடிதத்திற்கு உங்களிடமிருந்து பதிலே இல்லைன்னு கேட்டு எழுதுகிறார். இதற்கு மார்க்ஸ் பதில் எழுதுகிறார், “உங்கள் கடிதத்திற்கு ஏன் பதில் எழுத வில்லை, ஏனென்றால் நான் மரணத்தின் விளிம்பில் நின்று கொண்டு இருந்ததனால் தான். ஒவ்வொரு கணப்பொழுதையும் என்னுடைய புத்தகத்தை எழுதி முடிப்பதற்கு நான் பயன்படுத்த வேண்டி இருந்தது”. இத்தகையதொரு மனிதன் அங்கீகாரம் தேடுவது பற்றி சிந்திக்கவே முடியாது

மார்க்ஸ் மறைந்த பிறகு, அவருடைய அடக்கம் செய்யப்பட்டபோது உரையாற்றிய எங்கெல்ஸ், மார்க்ஸ் சிந்திப்பதை நிறுத்தி விட்டார் என்று அவர் கூறுவார். அப்போ மற்றவர்கள் எல்லாம் சிந்திக்கவில்லையா எல்லோரும் அவரவர் கோணத்தில் சிந்திக்கிறார்கள். மரணம் நெருங்கும்போது தன்னுடைய கடந்த காலத்தை எல்லோரும் மிக வேகமாக திரும்பிப்பார்க்கிறார்கள்.

06-speech-4

பழைய கம்யூனிஸ்ட் இயக்கத்தினர், பழைய திராவிடர் கழகத்தினரில், “கட்சி கட்சின்னு வாழ்கையையே வேஸ்ட் பண்ணிட்டேன் சார், குடும்பத்தை கவனிக்காம விட்டுட்டேன். அவனவன் பொழச்சுகிட்டான்” என்று பேசக்கூடிய நபர்களை நீங்கள் பார்த்திருக்கலாம். அப்படி கணக்கு கூட்டிப் பார்க்கும்போது பல பேர், துன்பங்கள் வரும் தருணங்களில், மரணம் நெருங்கும் தருணத்தில், இடையூறுகள் வரும்போது தடுமாறி விடுகிறார்கள்.

நம்முடைய தோழர்களில் இளைஞர்களாக இருப்பவர்களுக்கு, புரட்சி, அரசியல், போராட்டம், அரசு எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கெல்லாம் போகாதீர்கள் என்பதற்கு தந்தையோ, முதியோர்களோ சொல்லுகின்ற அறிவுரை என்ன? “நான் சொல்வது இப்பத் தெரியாது. அப்புறம் தெரியும்”. இளமையில் செய்கின்ற ஒரு முடிவு முதுமையிலே தவறு என்று தோன்றுவதற்கு என்ன காரணம?

இந்த தடுமாற்றம் ஏற்படுகிறவர்கள் எல்லாம் தவறானவர்களா ? அப்படி சொல்ல முடியாது. தடுமாற்றத்தை போராட்டமாக மாற்றுகிறோமா இல்லையா என்பதுதான் கேள்வி. இந்த சமூகத்தில் வாழ்கின்ற வரையில் இந்த தடுமாற்றத்தை நாம் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். இப்பொழுது இந்த பள்ளியினுடைய அரங்கத்துக்குள்ளே உட்கார்ந்து இருக்கிறோம், வெளியே போனால் பாண்டி பஜார், உஸ்மான் ரோடு ரங்கநாதன் தெரு, போத்தீஸ், ஜாய் ஆலுக்காஸ் எல்லாம் வரிசையா இருக்கிறது. அங்கே பணத்தை கொடுத்து ரசீது போட்டு மகிழ்ச்சியை வாங்கலாம் என்று லட்சக்கணக்கான பேர் போய் கொண்டிருகிறார்கள். நாம் இங்கே அமர்ந்திருக்கிறோம்

அவர்களுக்கும் நமக்கும் என்ன வேறுபாடு? நாம் உஸ்மான் ரோட்டுக்கு போகமாட்டோமா, ரங்கநாதன் தெருவுக்கு போகமட்டோமா, சரவணா ஸ்டோருக்கு போமாட்டோமா? போவோம். இந்த வாழ்க்கை இருக்கிறது, இந்த வாழ்க்கைக்கு வெளியே நம்மை ஆசைக்காட்டி இழுக்கின்ற அந்த வாழ்க்கையும் இருக்கிறது.

மே தினத்தன்று பார்த்தால் பேரணி, தோழர்கள், அவர்களுடைய ஆவேச முழக்கங்கள். அல்லது தடியடி, கைது, சிறை இவற்றையெல்லாம் எதிர் கொள்ளுகின்ற தருணங்கள் இருக்கின்றன. அவையெல்லாம் முடிவுக்கு வருகின்றன, அதற்கு பிறகு வழக்கமான வாழ்க்கை தொடங்குகிறது. அந்த வழக்கமான வாழ்க்கை தொடங்கும் போதெல்லாம் தடுமாற்றம் வருகிறது. இந்த தடுமாற்றத்திலிருந்து காப்பாற்றவும், விமர்சிக்கவும், மாற்றி அமைக்கவும், நெறிப்படுத்தவும் நமக்கு அமைப்பு இருக்கிறது.

பகத்சிங்
பகத்சிங்

தடுமாற்றம் என்பது எல்லா மனிதர்களுக்கும் உண்டு, தேவகுமாரனுக்கும் உண்டு, சிலுவையில் அறையப்படுவதற்காக அழைத்துச் செல்லப்படும்போதே தேவன் நம்மை காப்பாற்றப் போவதில்லையென்று ஏசுவுக்குத் தெரிகிறது. அந்த தருணத்தில் ஏற்படும் தடுமாற்றத்தை சித்தரிக்கிறது ஒரு இலக்கியம் – தி லாஸ்ட் டெம்ப்டேஷன் ஆஃப் ஜீசஸ் கிரைஸ்ட். திரைப்படமாகவும் வந்திருக்கிறது.

சிலுவையில் அறையப்பட்ட ஏசு, தன்னை தேவன் காப்பாற்றி விட்டதாகவும், காதலியை மணம் புரிந்து கொண்டு பிள்ளை குட்டிகளுடன் மகிழ்ச்சியாக வாழ்வதாகவும் ஒரு அரை மயக்க நிலையில், கனவு காண்கிறார். கனவில் அவரது சீடர்களே அவரை ஏசுகிறார்கள். தனது வீழ்ச்சியை எண்ணித் துணுக்குற்ற ஏசு திடுக்கிட்டு விழிக்கிறார். தான் கண்டது கனவு என்று அறிந்து மகிழ்கிறார். அந்த மகிழ்ச்சியுடனேயே சிலுவையில் உயிர் துறக்கிறார். ஏசுவின் மனதில் ஏற்படும் இந்த தடுமாற்றத்தை சாத்தானாக அந்த இலக்கியம் சித்தரிக்கிறது,

தடுமாற்றம் இல்லாதவர்கள் இல்லை. அந்த தடுமாற்றத்தின் போது எத்தகைய போராட்டத்தை கைக்கொள்கிறோம், அந்த போராட்டத்தில் தொடர்ந்து நிற்கிறோமா என்பது தான் மற்றவர்களையும் நம்மையும் வேறுபடுத்திக் காட்டுகிறது. “இருபது வயதுகளில் கம்யூனிஸ்டாக இல்லாதவனும் முட்டாள், நாற்பது வயதுக்கு மேல் கம்யூனிஸ்டாக இருப்பவனும் முட்டாள்” என்று ஒரு வழக்குமொழி சொல்வார்கள்.

புரட்சி என்பதே ஒரு இனிமையான இளம்பருவக் கோளாறு என்பதுதான் இதன் பொருள். கொஞ்ச காலம் நான் ம.க.இ.க வில் இருந்தேன் என்று சொல்லிக்கொள்ளலாம். வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துக்கொண்டவர் என்பதுதான் சீனிவாசன் போன்ற தோழர்களுடைய சிறப்பு. தோழர்கள் குறிப்பிட்டதைப் போல, எதிரிகள் தாக்குவதை தமது பணிகளுக்கு கிடைத்த அங்கீகாரமாக கருதினார்.

இந்தப் பக்குவம் வாய்க்கப்பெற்றவர்கள் மரணத்தைக் கண்டு அஞ்சுவதில்லை. மரணம் என்று ஒன்று தனியாக இல்லை. யார் வாழ்க்கையைக் கண்டு அஞ்சுகிறார்களோ, அநேகமாக அவர்கள்தான் மரணத்தைக் கண்டும் அஞ்சுகிறார்கள். மக்கள் நலனுக்காக மகிழ்ச்சியாக நிறைவாக முரணில்லாமல் உழைப்பவர்களுக்கு மரணம் ஒரு அச்சுறுத்தலாக இருப்பதில்லை.

நவம்பர் புரட்சி தொடர்பான கதைகளைப் பற்றி தோழர்கள் படித்திருக்க கூடும். போல்ஷ்விக் கட்சியின் மத்தியக்குழு ஸ்மோல்னி இன்ஸ்டிடியூட் என்கிற இடத்தில் இயங்கிக் கொண்டிருக்கும். பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த நாட்களில் லெனின் தலைமறைவாக இருப்பார். போல்ஷ்விக் கட்சிக்கு சோவியத்துகளில் பெரும்பான்மை இல்லாத காரணத்தினால் ஆயுதந்தாங்கிய எழுச்சியை தொடங்குவதா வேண்டாமா என்று ஒரு தடுமாற்றம் மத்தியக் குழு உறுப்பினர்களுக்கே இருக்கும். லெனினோ ஆயுத எழுச்சியை உடனே தொடங்க வேண்டும் என்ற வலியுறுத்தி மத்தியக் குழுவுக்கு கடிதம் அனுப்பிக் கொண்டே இருப்பார். இருப்பினும் மத்தியக் குழு பெரும்பான்மை அவர் கருத்தை ஏற்றுக்கொள்ளாது.

06-speech-6

தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் மதிப்பு மிக்கது. உடனே நான் மத்தியக் குழுவை நேரில் சந்தித்து விவாதித்தாக வேண்டும் என்று புறப்படுவார் லெனின். அவருடைய பாதுகாப்புக்கு பொறுப்பான தோழர் அதனை ஆட்சேபிப்பார். அதனை லெனின் நிராகரித்து வெளிக்கிளம்புவார். காரணம் புரட்சி எழுச்சியை உடனே தொடங்கவில்லை என்றால், இந்த வரலாற்றுத் தருணத்தை தவறவிட்டால், இன்னும் சில பத்தாண்டுகளுக்கு புரட்சி தள்ளி போய் விடும். அந்த இழப்பை ஒப்பிடும் போது என்னுடைய உயிர் பெரிது அல்ல. பாதுகாப்பு பணயம் வைக்கத் தக்கதே என்று அறிவு பூர்வமாக யோசித்து எடுக்கின்ற முடிவு அது. சாகச நடவடிக்கை அல்ல.

உலகிலேயே போற்றத்தக்க ஒரு முன்னுதாரணம் பகத்சிங். தூக்கு மேடையேறியதுதான் பகத்சிங்கின் சிறப்பு என்று பலரும் புரிந்து கொண்டிருக்கிறோம், அந்த முடிவின் பின்புலத்தில் அவருடைய குழுவில் நடைபெற்ற விவாதங்கள் ரொம்ப முக்கியமானவை. அவருடைய குழுவினர் மத்தியிலேயே அரசியல் ரீதியில் முன்னேறியவரும், அமைப்புத் துறையில் ஆற்றல் மிக்கவரும், தொலைநோக்கோடு சிந்திக்கக்கூடியவரும் சிறந்த கிளர்ச்சியாளனும் பகத்சிங் தான்.

மற்ற தோழர்கள் சொல்கிறார்கள், “நாடாளுமன்றத்தில் குண்டு வீசும் நடவடிக்கையில் நீங்கள் ஈடுபட வேண்டாம் நாங்கள் போகிறோம், நீங்கள் போகக்கூடாது, நீங்கள் சாகும் நிலைமை ஏற்படக் கூடாது. நீங்க கட்சிக்கு தேவை. அந்த வேலையை நாங்கள் செய்கிறோம்” என்று வாதாடுகிறார்கள்.

பகத்சிங் சொல்கிறார், “இது ஒரு அரசியல் நடவடிக்கை. நாம் யாரையும் கொல்லப் போவதில்லை. இது வெறும் வெடிச் சத்தத்தையும் புகையையும் உருவாக்கப் போகின்ற ஒரு குண்டு. இதில் கைதாகி நீதிமன்றத்தை, அந்த மேடையை நம்முடைய அரசியல் கிளர்ச்சிக்கு, புரட்சி பிரச்சாரத்திற்கு, தேச விடுதலைக்கு பயன்படுத்த வேண்டும். நீங்கள் சொல்வது போல அதற்கான ஆற்றல்கள் வாய்க்கப் பெற்றவனாக நான் தான் இருக்கிறேன், அதனால் நான் இதை செய்வதன் மூலம் தான் இந்த நோக்கம் நிறைவேறும். இது மரணதண்டனைக்கு வழிவகுக்கும் என்பது எனக்குத் தெரியும், எனினும் அது செய்யப்பட வேண்டும் என்று தான் நான் சொல்கிறேன். நான் இறப்பதன் மூலம் தான், இந்த அரசியல் கிளர்ச்சி பிரச்சாரத்தின் மூலம் தான், நம்முடைய புரட்சிகர அரசியல் என்பது இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் செல்லும்” என்று விளக்குகிறார்.

ஐன்ஸ்டீன்
ஐன்ஸ்டீன்

இதைவிட ஒரு அற்புதமான முறையில், தன்னை புறநிலையாக்கி பார்க்கின்ற, தான் உயிர் கொடுக்க வேண்டும் என்பதை அறிவியல் பூர்வமாக விளக்கிக்கூறி நிலைநாட்டுகின்ற ஒரு அதிசயத்தை எந்த இலக்கியத்திலும் பார்க்க முடியாது. இங்கே மரணம் என்பது ஒரு வாழ்க்கையாக இருக்கிறது. உயிர்த்துடிப்புள்ள நடவடிக்கையாக இருக்கிறது. பகத்சிங் சாவதற்கு முடிவெடுத்து விட்டார் என்று அதை நாம் இதைச் சொல்ல முடியுமா?

அது ஒரு மாபெரும் அரசியல் நடவடிக்கை. தூக்கில் தொங்குவது என்று முடிவு எடுத்துவிட்டாரே என்று எண்ணி நாம் வருந்தலாம், ஆனால் பகத்சிங்கைப் பொருத்தவரை, அங்கே மரணம் என்பது மேடைபேச்சைப் போன்றது. ஒரு கிளர்ச்சி நடவடிக்கை போன்றது. இந்த நடவடிக்கைக்கு தானே பொருத்தமானவர் என்று அவர் கருதுகிறார். மரணத்தைப் பற்றிய புரட்சியாளர்களின் பார்வை, நாம் கொள்ளவேண்டிய பார்வை இது,

நீங்கள் நினைத்துப்பாருங்கள். இந்த மாதிரியான சூழல்களில் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் போன்றவர்களோ, அவர் கூட இருந்த தோழர்களோ எவ்வளவு விவாதித்திருப்பார்கள். சிறையில் அடைக்கப்பட்ட பின்னரும் கூட எவ்வளவு விவாதங்கள் நடந்திருக்கும். இந்த முடிவு சரியென்றும் தவறென்றும் பல கருத்துப் போராட்டங்கள் நடைபெற்று இருக்கும். மற்ற தோழர்கள் பகத் சிங்கோடு உடன்படாமல் அவரை இழப்பது குறித்து துயருற்று இருக்கலாம். இந்த துயரங்கள் எல்லாம் இணைந்ததும் கலந்ததும்தான் ஒரு புரட்சிகர வாழ்க்கை.

அர்ப்பணிப்புணர்வுடன் இயங்குகின்ற எல்லாத் தோழர்களுடைய குடும்பங்களும் துண்பத்தை எதிர்கொண்டு தான் ஆகனும். பின்னால் நினைவு கூறும் போதோ அல்லது பொதுவாகப் போற்றி பேசும் போதோ அது ஒரு சாதனை போலத் தெரியலாம். ஆனால் அனுபவிக்கின்ற தருணங்களில் அது மிகவும் துயரமானது.

மார்க்ஸ் தன் நண்பருக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். “தானும் தன் குழந்தைகளும் செத்துவிட்டால் நல்லது என்று என் மனைவி தினமும் சொல்கிறாள், உண்மையில் நான் அவளை குறை சொல்ல முடியாது” என்று எழுதுகிறார். அவருடைய ரெண்டு குழந்தைகளை பட்டினிக்கும், நோய்க்கும் பறிகொடுக்கிறார் மார்க்ஸ். கடன்காரர்களுக்கு அஞ்சி ஒளிகிறார். அவருடைய மார்பிலும், முதுகிலும் ஏறி விளையாடிய குழந்தைகள், அந்தக் குழந்தைகளை சாகக் கொடுக்கிறார். இப்ப நாம் பார்க்கின்ற மாதிரி கட்சி, ஒரு அமைப்பு, பெருந்திரளான தோழர்கள், நம்பிக்கை இதெல்லாம் இருந்த காலம் அல்ல அது.

நாம் இன்றைக்கு பின்பற்றுகின்ற இந்த கோட்பாட்டை அவர் உருவாக்கிக் கொண்டிருக்கிறார். அதை அவரே சரி பார்த்துக்கொண்டிருக்கிறார். இந்தப் பணியில் ஈடுபட்டிருக்கும் போதுதான் தன்னுடைய குழந்தைகளை அவர் பறி கொடுக்க வேண்டியிருக்கிறது. அப்போது வரக்கூடிய தடுமாற்றத்தை யோசித்துப் பாருங்கள்.

குழந்தைகள் பட்டினியால் சாவது ஒரு நிஜம், நோய்க்கு மருத்துவம் இல்லாமல் அவர்கள் துடிப்பது ஒரு நிஜம். அவர் எழுதிக்கொண்டிருப்பது ஒரு கனவு, கம்யூனிசம் என்ற ஒரு பெருங்கனவு. இது அறிவியலா, இது நிரூபிக்கப்படுமா, தொழிலாளி வர்க்கம் இதை நிறைவேற்றுமா என்பதை எல்லாம் களத்திலே சோதித்து பார்க்க வேண்டியிருக்கிறது. அந்த சோதனையிலும் அவர் இருக்கிறார்.

06-speech-8-leninமனித குலத்தின் விடுதலைக்கான ஒரு கோட்பாட்டை உருவாக்குவதில், மனித குலத்தின் மீது எந்தளவு பற்று இருந்தால், அறிவியலின் மீது எந்த அளவு நம்பிக்கை இருந்தால், தான் கொண்ட கொள்கையில் எவ்வளவு பற்றுறுதி இருந்தால் தன் பிள்ளைகளை சாகக் கொடுத்து, அந்தத் துன்பத்தை அனுபவித்த வண்ணம் ஆய்வில் ஈடுபட முடியும் என்று யோசித்துப் பாருங்கள்.

மூட்டை தூக்கலாம், உடல் உழைப்பு செய்யலாம் ஆனால் சிந்திக்க வேண்டும், சிந்தித்து சமூகத்தை ஆராய்ந்து எழுத வேண்டும். சுற்றிலும் கதறல், பட்டினி, இது அவருடைய வீட்டின் சூழல். இதைப் பற்றி வேறொரு இடத்தில் மார்க்ஸ் எழுதுகிறார். “மெதுவாக எரிகின்ற நெருப்பில் வாட்டப்படுதல், அதில் தலையும் இதயமும் காயமடைகின்றன. மேலும் பொன்னான நேரமும் வீணாகிறது. முடிவடைய வேண்டும்”

– இது தான் அவர் எழுதியிருப்பது. எது முடிவடைய வேண்டும். அனுபவித்து வந்த துன்பமா, வாழ்க்கையா ? பெரும் துயரில் தோய்ந்த வரிகள் இவை. மெதுவாக எரியும் நெருப்பில் இதயம் வாட்டப்படுதல் என்றால் குழந்தைகள், மனைவி அவர்களுடைய துன்பம் ஏற்படுத்துகின்ற துயர், வலி. தலை வாட்டப்படுதல் என்று எழுதுகிறார். அவருடைய சிந்தனையை அது பாதிக்கிறது. அவரால் முடியவில்லை.

முடிவடைய வேண்டும் என்கிறார். இந்த கொடுந்துயரத்தை புரிந்துகொள்ள வேண்டும் என்றால் தோழர்களே, அந்த துயரத்தை நாம் அனுபவித்திருக்க வேண்டும், இல்லாதவரை இதை புரிந்துகொள்ளவே முடியாது. இந்த துயரத்தை யாரெல்லாம் அனுபவிக்கவில்லையோ, இந்த போராட்டத்தில் யாரெல்லாம் ஈடுபடவில்லையோ அவர்கள் யாரும் இந்த தியாகத்தின் மகத்துவத்தை புரிந்து கொள்ள முடியாது. இந்த துயரத்தின் வலியை புரிந்து கொள்ள முடியாது.

ஆகவே, “தோழர் போராடினார், உறுதியாக இருந்தார், மகிழ்ச்சியாக இருந்தார்” என்பதெல்லாம் பொதுவாக நமக்கு தெரிகின்ற சொற்கள். அதற்குப் பின்னால் ஒரு மனிதன் தன்னுடைய பலவீனங்களுக்கு எதிராக, தன்னுடைய குறைகளுக்கு எதிராக நடத்திய ஒரு போராட்டம் இருக்கிறது. அது அளித்த துயரம் இருக்கிறது. தோழர்களுடைய மேன்மைகள் எனப்படுபவையெல்லாம் தமது பலவீனங்களுக்கு எதிராக, தவறுகளுக்கு எதிராக அவர்கள் நடத்தும் போராட்டத்தின் ஊடாகத் தான் சாதிக்கப்படுகின்றன.

06-speech-9-berlinபகத்சிங். தூக்குதண்டனை விதிக்கப்பட்ட கைதியாக சிறையில் இருக்கும்போது எழுதுகிறார். “ஒருவேளை எண்பது வயது வரை நான் உயிர் வாழ்ந்து செயல்பட்டிருந்தால் என்னுடைய பலவீனங்களை தெரிந்துகொள்வதற்கான வாய்ப்பு இந்த உலகத்திற்கு கிட்டியிருக்கும். ஆனால் இருபத்தியோரு வயதிலேயே நான் தூக்குமேடை ஏறுவதால் பலவீனங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு மனிதனாக என்னை பலரும் கருதிக்கொள்ள வாய்ப்பிருக்கிறது” என்று எழுதுகிறார். எவ்வளவு நேர்மையான ஒரு சுயபரிசீலனை என்பதை நீங்கள் பார்க்க வேண்டும். ஆய்ந்தவிந்து அடங்கிய சான்றோர் என்றெல்லாம் சொல்றோமே அவர்களுக்குக் கூட இருபத்தியோரு வயது இளைஞனுடைய இந்த சான்றாண்மை வருமா?

“நான், எனது பங்களிப்பு அதை எல்லோரும் அங்கீகரிப்பார்களா, கூட்டம் போடுவார்களா, போஸ்டர் ஒட்டுவார்களா” என்று சிந்திக்கின்ற அற்பத்தனத்தால் நிறைந்திருப்பவர்கள் தங்களை அறிஞர்கள் என்று கருதிக்கொள்கிறார்கள். பல நேரங்களில் இந்த தனிநபர் வாதமும், அற்பத்தனமும்தான் அறிவாளிகளுடைய அங்கலட்சணம் என்று கூட பல பேர் நினைத்துக் கொள்கிறார்கள். அதனால்தானோ என்னவோ, அறிவு ஜீவியாகத் தம்மைக் கருதிக் கொள்ளும் பலருக்கு, அறிவு வருவதற்கு முன்னால் இந்த அற்பத்தனம் கைவந்துவிடுகிறது.

கம்யூனிஸ்டுகள் எல்லாம் தனித்தன்மை இல்லாத மந்தைகள். போஸ்டர் ஒட்றவனுக்கும், கோஷம் போடுபவனுக்கும் என்ன தனித்தன்மை ? ஆயிரம் பேரில் அவனும் ஒருத்தன். ஆனால் ஒரு இலக்கியவாதி, ஒரு பேச்சாளன் அப்படி இல்லையே என்று கருதிக்கொள்கிறார்கள்.

06-speech-10நினைவு கூறத்தக்க சிறந்த தோழர்களை அசாதாரணமானவர்களாக நாம் சித்தரிப்பதும் கருதிக்கொள்வதும் தவறு. ஏசு நம் பாவங்களுக்காக சிலுவை சுமந்தார், அவர் மாதிரி நம்மால் முடியுமா என்று தப்பித்துக் கொள்வதற்காக நாம் நினைவு கூரவில்லை. அவர்களுடைய வாழ்க்கையிலிருந்து நாம் எதைக் கற்றுக்கொள்கிறோம், எவ்வளவு முன்னேறுகிறோம் என்பதற்குத்தான் இந்த நினைவு கூர்தல்.

“நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமையுடத் திவ்வுலகு” என்ற திருக்குறள் உங்களுக்கு தெரிந்திருக்கும். நேற்று இருந்தவன் இன்று இல்லை என்பது இந்த உலகின் பெருமை என்று சொல்கிறார் வள்ளுவர். அது மட்டுமல்ல நேற்று இருந்த மனிதன் இன்று இல்லை. அவனை விட இன்று இருக்கும் மனிதன் மேம்பட்டவனாக ஆகிறான், வளர்கிறான்.

நேற்று இருந்த கருத்து, நேற்று இருந்த புரிதல் இன்று மேம்படுகிறது. சென்ற நூற்றாண்டின் துவக்கத்தில் மருத்துவ அறிவியலோ. வானவியலோ, வேதியியலோ எந்த அறிவியல் துறையை எடுத்துக்கொண்டாலும் அது இந்த உலகத்தைப் பற்றி பெற்றிருந்த புரிதல் இந்த நூற்றாண்டில் பெருமளவுக்கு மேம்பட்டிருக்கிறது. அது மொத்த அறிவியலின் முன்னேற்றமாகிறது,

06-speech-11-revolutionமனித விழுமியங்களில் கூட, அரசியலில் கூட இந்த முன்னேற்றத்தை நாம் வரித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது, முன்னேற்றத்தை. இதை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். சோசலிசம் என்பது மனிதகுலம் கண்டடைந்த ஒரு மேன்மையான சமூக அமைப்பு. அதனை எட்டுவதற்காக மனிதகுலம் போராடித்தான் தீரவேண்டும். ஒரு தோழரின் மரணமாகட்டும், சோசலிசத்தின் பின்னடைவாகட்டும், ஒரு வகையில் அனைத்துமே முன்னேறிச் செல்வதற்கான படிக்கட்டுதான்.

சுந்தரராமசாமி கவிதையை படித்த பிறகு வேறொரு சந்தர்ப்பதிலே ஐன்ஸ்டினுடைய ஒரு கூற்றைப் படிக்க நேர்ந்தது. அவர் மரணத்தைப் பற்றி எழுதியிருக்கிறார். “நம்முடைய இளம் தலைமுறைக்குள்ளும் மக்களுக்குள்ளும் நாம் வாழ முடியும் என்றால் நம்முடைய மரணம் என்பது ஒரு முடிவு அல்ல. ஏனென்றால் அவர்கள் தான் நாம்”. இதைவிட அவர் சொல்லியிருக்கும் அடுத்த வரி ரொம்ப முக்கியமானது. “நமது உடல்கள் எனப்படுபவை வாழ்க்கை எனும் மரத்திலிருந்து வாடி வீழ்ந்த இலைகள் மட்டுமே”.

உயிர் (Life) என்பது, வாழ்வு என்பது ஒரு மிகப்பெரிய மரம். நான் அந்த மரத்தினுடைய பிரிக்கவொண்ணாத ஒரு இலை. அது ஒரு குறிப்பிட்ட கட்டத்திலே பழுத்து உதிர்ந்து விடுகிறது. இந்த முழுமையில் இதனை அவர் பார்க்கச் சொல்லுகிறார். பழுத்து உதிர்ந்த அந்த இலையின் தனிப்பட்ட அனுபவங்களை அந்த மரம் பெற்றுக்கொள்கிறது. அப்படி பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற அர்த்தத்திலே அவர் அந்த விளக்கத்தை சொல்லுகிறார்.

அதாவது ஒரு மனிதன் தன்னை இந்த சமுதாயம் என்ற மரத்திலிருந்து உயிராற்றலையும், அறிவையும் பருகுகின்ற ஒரு இலையாக தன்னைக் கருதிக் கொள்ள வேண்டும் ஒரு மனிதன். அப்படி கருதிக்கொண்டால் நம்முடைய வாழ்க்கை என்பதும், நம்முடைய மரணம் என்பதும் மீண்டும் இந்த சமூகத்திற்குப் பயன்படுவதாக அமையும்.

சமூகம் என்பது பகத்சிங்கை போன்று, மார்க்சை போன்று, தோழர்களைப் போன்று பல பேரால் பட்டை தீட்டப்படுகிறது. எல்லா தலைசிறந்த குணங்களையும் ஒரே மனிதன் பெற்றுவிடுவதில்லை. ஒவ்வொருவரிடமும் ஒரு சிறப்பியல்பு. அதை நாம் பரிசீலனையோடு கற்றுக்கொள்வதுதான் ஒரு நினைவு நாள் கூட்டத்தினுடைய பொருளாக இருக்க முடியும்.

06-speech-12ஒரு தனிப்பட்ட தோழருக்கு தனிப்பட்ட நடைபெறுகின்ற நினைவேந்தல் கூட்டத்துக்கு மட்டுமல்ல, எல்லா நினைவு நாட்களுக்கும் இது பொருந்தும். மே நாள் நடத்தினோம். மேதின தியாகிகள் சிகாகோ சதுக்கத்தில் சுடப்பட்டு இறக்கும் போது எண்ணியிருப்பார்களா, இப்படி சென்னையில 2013-ல் நம்முடைய பெயரால், ஈழத் தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை கோரி ஒரு போராட்டம் நடக்கும் என்று. ஆனால் அந்த மேதின தியாகிகளுடைய கோரிக்கையின் சர்வதேசத் தன்மை காரணமாக, உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்களின், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்கு அதை பிரயோகிக்கின்றோம்

நினைவுகளை பகிர்ந்து கொள்ளுதல் என்கிற அர்த்தத்தில் நினைவு கூர்தல் என்பது வெகுவிரைவில் முடிந்துவிடுகிறது. வாழ்ந்து முடிந்த வாழ்க்கையின் சாரம் என்ன, அதன் சிறப்பியல்புகள் என்ன, சரி தவறுகள் என்ன என்பதை நாம் நினைவு கூற வேண்டியிருக்கிறது.

முன்னர் ஒரு முறை ஒரு வடமாநிலத்தில் ஒரு மாநாட்டுக்கு சென்றிருந்த போது, தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. கொல்லப்பட்ட ஒவ்வொரு தோழருடைய பெயராக குறிப்பிட்டு வீரவணக்கம் செலுத்துகிறார்கள். “ஒரு வேளை நாமும் இது போல சாக நேர்ந்தால், ஒன்றிரண்டு வருஷத்துக்கு நம்ம பேரச்சொல்லி முழக்கம் போடுவாங்க, அப்புறம் மொத்தமா தியாகிகளுக்கு வீரவணக்கம்னு போட்டு விடுவார்கள்” என்றார் அருகில் நின்ற ஒரு தோழர். நீங்க எதிர்பார்ப்பது போலவே அவர் இப்போது அமைப்பில் இல்லை. இப்படி சிந்திப்பவர் இருக்கவும் இயலாது.

என்ன விதமான அங்கீகாரத்தை எதிர்பார்த்து நாம் பணியாற்றுகிறோம். அமைப்பிலும், புரட்சியிலும், சமூகத்திலும் அங்கீகரிக்கப்படாத உழைப்பு, அங்கீகரிக்கப்படாத தியாகம் என்பதுதான் அதிகம். எத்தனை ஆயிரம் தோழர்கள் மடிந்திருக்கிறார்கள். மாவோயிஸ்ட் அமைப்பாக இருக்கட்டும், உலகம் முழுவதும் உள்ள தொழிலாளி வர்க்க இயக்கங்களாக இருக்கட்டும் எத்தனை ஆயிரம் தோழர்கள் மடிந்திருக்கிறார்கள், யாருடைய முகம் தெரியும் நமக்கு? யாருடைய நினைவு தெரியும் நமக்கு? அவர்கள் எல்லோரும் அங்கீகாரம் இல்லாமல் உழைப்பவர்கள்தான்.

கூட்டுத்துவத்தில் நிறைவு கொள்வதுதான் தொழிலாளி வர்க்கத்தின் சிறப்பியல்பு. ஒரு போராட்டத்தை நடத்தி முடிப்பதில், அதற்கு துண்டறிக்கை எழுதியவர் தொடங்கி கிளர்ச்சிக்கு தலைமை தாங்கியவர், சுவரொட்டி ஒட்டியவர், பேருந்தில் பிரச்சாரம் செய்தவர் என எல்லா தோழர்களுக்கும் அவரவர்க்குரிய பங்கு இருக்கிறது. ஆற்றலில் வேறுபாடு இருக்கலாம் உழைப்பின் அளவில் வேறுபாடு இருக்கலாம். கூட்டுத்துவ உழைப்பு தான் இதை சாதிக்கிறது.

தொழிலாளிகள் வேலை செய்யக்கூடிய இடங்களையே நீங்கள் பாருங்கள், யார் ஒருவரும் தன்னுடைய சாதனை என்று தனியாக கூறிக் கொள்ள அவர்களுக்குத் தோன்றுவது இல்லை. இதை ஒரு போர்க்களத்தில் நீங்கள் பார்க்கலாம். அல்லது சோசலிச நிர்மாணம் குறித்த பதிவுகளில் பார்க்கலாம்.

அமைப்பு என்ற இந்த கூட்டுத்துவத்தில் ஒவ்வொரு தனிநபருக்கும், ஒவ்வொரு தோழருக்கும் உள்ள சிறப்பியல்பை, பங்களிப்பை நாம் அங்கீகரிக்க வேண்டும். அந்த சிறப்பியல்பை நாம் ஒவ்வொருவரும் நம்முடையதாக்கிக் கொள்ள வேண்டும் என்பது தான் இந்த நினைவு கூறலின் பொருள் என்று கருதுகிறேன்.

வாழ்ந்து வாடி உதிர்ந்த இலைகளின் மரபணுக்கள் முளைத்து வருகின்ற புதிய தளிர்களில் இருக்கின்றன. தோழர் சீனிவாசனோ, தோழர் ரங்கனாதனோ (திருவெண்ணெய் நல்லூர் பகுதியில் செயல்பட்டு மறைந்த முதிய தோழர்) புரட்சிக்காக, அமைப்புக்காக, மக்களுக்காக வாழ்ந்து, போராடி, உழைத்து மறைந்த தோழர்கள் தங்களுடைய தடத்தை தங்களுடைய செயல்பாடுகளில், தாங்கள் பழகிய தோழர்களில் விட்டுச் சென்றிருக்கிறார்கள். அவர்களின் பதிவுகள் நம்மீதும் நம்மைச் சுற்றிலும் இருக்கின்றன. அவற்றை கவனமாக போற்றி பாதுகாத்து தன்வயப்படுத்திக் கொள்வோம். வேறு எந்த வகையிலும் இந்த நினைவு கூர்தலை நாம் பொருள் உள்ளதாக ஆக்க இயலாது.

– மருதையன்
________________________________________________________________________________
புதிய கலாச்சாரம் – மே 2013
________________________________________________________________________________

  1. பொருளாதாரம், தேவை இல்லாதவர்கள் அதிகமாகி விட்டார்கள் அவர்கள் எல்லாம் விடை பெற்றுக் கொண்டால் நல்லது என்று சொல்கிறது. கீரிசில், ஸ்பெயினில் தொழிலாளர்களுடைய ஓய்வூதியம் வெட்டப்பட்டுவிட்டது. ஒரு வீட்டில் முதியவர்களுக்கு சோறு போடவில்லை என்றால் அது ஒரு அறம் கொன்ற செயல், ஒரு நாட்டில் முதியவர் ஓய்வூதியத்தை வெட்டு என்று சர்வதேசிய நாணய நிதியம் சொன்னால், அது நல்ல பொருளாதாரக் கொள்கை எனப்படுகிறது. ஆக வாழ்வது என்பது உயிரோடு இருத்தல் என்பதாக சுருக்கப்பட்டு, அப்படி உயிரோடிருப்பவர்களில் எவ்வளவு பேர் உயிரோடிருக்கலாம் என்பதை உலக முதலாளி வர்க்கம் முடிவு செய்கின்ற ஒரு காலத்தில் நாம் இருக்கிறோம்.

    அப்பட்டமான இந்த உண்மையை புரிந்துகொள்ள மறுப்பவர்களை எப்படி அழைக்கலாம்?

    • தெரியாதா? பைபிளில் கூறப்படும் சாத்தான்கள் என்று நினைக்கிறேன்….விதிவிலக்குகள் உண்டு.பாபுபகத்.

  2. என்னே உணர்ச்சி! இந்த உணர்ச்சி வார்த்தைகளை எத்தனை கம்யூனிசவாதிகள் மனதில் அசை போடுவார்கள் என்று எனக்குத் தெரியாது,ஆனால் பகத்சிங்காக,மார்க்ஸாக,ஸ்டாலினாக,லெனினாக,ரோஜாலக்ஸம்பர்க்காக,ஆசாத்தாக,….வாழவிரும்பும் பாபுபகத்தும் இதைப்படித்துள்ளான்,அசைபோட்டுக் கொண்டிருக்கிறான் என்பதைத் தங்களுக்கு நம்பிக்கையுடன் தெரியப்படுத்திக்கொள்கிறேன்.பாபுபகத்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க